Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Wednesday, February 2, 2011

எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி

மூன்று வருடங்களுக்கு முன்னால் துணையெழுத்து, கதாவிலாசம் எல்லாம் படித்தபின் இவர் வேறு என்னவெல்லாம் எழுதி இருக்கிறார் என நண்பரிடம் கேட்க அவர் பரிந்துரைத்த புத்தகம் உறுபசி. துணையெழுத்து, தேசாந்திரி ஆகிய நூல்களின் மொழியும், உறுபசியின் மொழியும் முற்றிலும் வேறுப்பட்டு இருந்தது. வெகுஜன பத்திரிக்கைகளில் தென்பட்ட அவரது எழுத்து நடையில் இருந்த நெகிழ்ச்சி தன்மை முற்றிலும் இல்லாமலாகி ஒரு உலர்ந்த நடைக்கு தயார் படுத்தி கொள்ள வேண்டியிருந்தது. மூன்றாண்டுகள் கழித்து, சமீபத்தில் உறுபசி மீண்டும் வாசித்தேன்.

கல்லூரி வாழ்கை என்பது நமது சுதந்திர வாழ்க்கைக்கான திறவுகோல். முற்றிலும் வித்யாசமான மனிதர்களுடான அறிமுகங்கள் கல்லூரிகளில் தான் நிகழ்கிறது. சிலருடன் நாமாக சென்று பழக விரும்புகிறோம், தாமாக நம்மை நோக்கி வரும் சிலரை தள்ளி விடுகிறோம். கூட படிக்கும் வேறு சில நண்பர்களை பார்த்து பொறாமை படுகிறோம், ச்சே, அவன மாதிரி நாம இல்லையே என்று நம்மை எங்க வைத்த சிலரையாவது கண்டிருப்போம். எத்தனையோ காரணங்களுக்காக நாம் அந்த நண்பர்களை பார்த்து பொருமி இருக்கலாம், அவன் பெண்களிடம் பேசுகின்ற முறை பார்த்து, கலை நிகழ்சிகளில் வெற்றி சூடுவதை எண்ணி என. அப்படி விஸ்வரூபம் எடுத்து நின்றவர்கள், நம் கண் முன்னாலேயே தீயிலிட்ட காகிதத்தில் இருந்த வார்த்தைகள் போல கரைந்து போய் விடுகையில் ஏற்படும் அதிர்ச்சி சாதாரணமானது அல்ல. உள்ளுக்குள் அவனை நாம் ஆதர்ஷித்து இருந்தாலும், மெல்ல அவன் நம் கண் முன் அழிவதை பார்ப்பதில் ஒரு வகையான குரூரம் கலந்த சந்தோசம் இருக்கிறது போலும்.

சம்பத் என்ற கல்லூரியில் தமிழ் இலக்கியம் ஒன்றாக படித்த நண்பனின் மரணத்தில் சந்திக்கும் மூன்று நண்பர்களின் பார்வையில் விரிகிறது இந்த நாவல். அழகர், மாரியப்பன்,ராமதுரை என்ற அந்த மூவருக்குமே சம்பத் மேல் ஒரு விதமான ஈர்ப்பு இருந்திருகிறது. அதே போல மூவருமே, சம்பத் மற்றவர்களுடன் தான் நெருக்கமாக இருக்கிறான் என நினைகிறார்கள். எல்லார் மேலும் ஓர் தீவிரமான பாதிப்பை செலுத்தி அதே சமயம் அவர்கள் மூவரிடமும் ஒட்டுதல் அதிகம் இல்லாமல் வாழ்ந்திருக்கிறான். நேரடியாக ஆசிரியரின் குரலில் வெளிபடாமல் சம்பத் பெரும்பாலும் அந்த மூவரின் பார்வையிலும், அவனது கல்லூரி தோழி யாழினி மூலமாகவும் வெளிபடுகிறான்.


முதலில் அழகர் பார்வையில் நாவலில் சம்பத் அறிமுகமாகும் இடமே கொஞ்சம் கவித்துவமானது. அழகரும் அவனும் டெல்லியில் ஓரிடத்தில் தீப்பெட்டி வாங்குகையில், அதில் அவனது ஊர் பெயர் இருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டு கொள்கிறான். அழகரிடம், லைட்டரில் உள்ள தீ எனக்கு பிடிப்பது இல்லை, அது நேர்கோடாக எரிகிறது, இதோ இந்த தீ குச்சி போல ஒரு நடுக்கமோ அலைதலோ இல்லை என்கிறான். அழகர் தமிழ் இலக்கியம் படித்தாலும், முடித்த பின்பு ஒரு கொரியன் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து தற்போது சற்று வசதியாக வாழ்கிறான். தன் மனைவியுடன் திரையரங்கிற்கு வரும் அழகர், சம்பத்தை ஒரு விபசாரம் செய்யும் பெண்ணுடன் பார்கிறான். சம்பத் அது பற்றிய எந்த சங்கடமும் இல்லாமல், அவளை அழகருக்கு அறிமுக படுத்துகிறான். மேலும், உன் மனைவி கர்ப்ப தடை சிகிச்சை செய்து கொண்டாளா? இடுப்பு சற்று பெருத்து இருகிறதே என சீண்டி விட்டு செல்கிறான்.

அந்த சீண்டலால் கோவப்பட்டு சம்பத்தை பற்றி ராமதுரையுடன் புலம்பும் அழகரை மீண்டும் சந்திக்க வரும் சம்பத், "உன்னிடம் பேச வேண்டும்" என சொல்லி கடற்கரைக்கு அழைத்து சென்று அவனிடம் ஏதும் பேசாமலே திரும்பி வருகிறான். நீண்ட நாள் கழித்து மீண்டும் பார்கையில், ஒரு பெண்ணை தன் மனைவி என அறிமுகம் செய்து வைத்து, கரும்பு ஜூஸ் குடிக்கலாமா என கேட்கிறான். அந்த கடைக்காரனிடம், இந்த கரும்பு பிழியும் இயந்திரம் எவ்வளவு விலை, ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாரிக்கலாம் என தெரிந்து வைத்து கொள்கிறான். வீட்டில் தண்ணீர் பிடித்து வைக்க பெரிய பிளாஸ்டிக் வாலிகளை வாங்கி கொண்டு, தன் மனைவி ஜெயந்தியுடன் செல்கிறான்.

அடுத்த காட்சியில், அழகரை தன் சொந்த ஊருக்கு அழைத்து செல்லும் இடத்தில், சிறு வயதில் கோவிலுக்கு பொங்கல் வைக்க போன இடத்தில் தன் உடையை அணிந்திருந்த தோழியிடம் வம்பு செய்து அந்த உடைகளை பிடுங்கியதை பற்றியும், அதனால் அவள் இறந்து போனதை பற்றியும் ஒரு ஆழ்ந்த குற்ற உணர்ச்சியுடன் விவரிக்கிறான். வீட்டில் அவனுக்கும் அவனது தந்தைக்கும் கைகலப்பு ஏற்பட்டு விறகு கட்டை கொண்டு அவரை மூர்கமாய் தாக்கி விட்டு ஓடி வருகிறான்.

லாட்டரி டிக்கட் வாங்குவதில் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு குறிப்பிட்ட கடையில் சீட்டு வாங்கினால் கொள்ளை லாபம் என, அந்த ஊரிற்கு  வந்து ஒரு அறை எடுத்து தங்கி, அங்கு டெலிபோன் பூத்தில் வேலை செய்யும் ஜெயந்தி மேல் விருப்பபட்டு அவளை திருமணம் செய்து கொள்கிறான். சென்னையில் ஒரு சிறிய அறையில் குடி ஏறி, புலனாய்வு இதழில் வேலைக்கு சேர்கிறான். பின் ஒருநாள், நாட்டில் நடக்கும் கொலை, கற்பழிப்பு ஆகிய செய்திகளை தயாரித்து தயாரித்து அவை எல்லாம் நானே செய்வது போல ஆகி விடுகிறது என சொல்லி வேலையை விட்டு விடுகிறான். நாவலில், சம்பத்தின் சித்திரம் உத்வேகத்துடன் உருவாகி வரும் இடங்கள் இரண்டு. தன் மனைவியுடன் சேர்ந்து பூந்தொட்டிகள் செய்து விற்கலாம் என முடிவு செய்யும் இடமும், கல்லூரி காதலி யாழினி மூலமும், அழகர் மூலமும் வெளிப்படும் அவனது கல்லூரி வாழ்க்கை பற்றிய காட்சிகளும்.

இந்த கல்லூரி சம்மந்தமான காட்சிகள் மட்டும், பாலகுமாரனின் நாவல் ஒன்றுடன் ஒப்பு நோக்க சாத்தியமானது. சிநேகமுள்ள சிங்கம் என்ற அந்த நாவல்,  சென்னை கடற்கரையை ஒட்டி உள்ள "ஒரு" கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவன் ஒருவனை பற்றியது. தமிழ் பிரிவுகள் மட்டும் மற்ற பிரிவுகளை விட மட்டம் என என்னும் போக்கு கல்லூரியில் உள்ளது என என்னும் அவன் அதை மாற்ற சில முயற்சிகள் செய்கிறான். அவளுக்கு உறுதுணையாக அவனது வகுப்பு தோழி ஒருத்தி நிற்கிறாள். அவளது தந்தை "தமிழினம்", "தமிழ்பற்று" என பேசும் அரசியல்வாதியாக அறிமுகமாகிறார். இவனை பயன்படுத்தி கல்லூரிக்குள் அரசியல் செல்வாக்கை நுழைக்கிறார். அவருடன் இணைந்து, நாத்திக பிரசாரம், மேடை முழக்கங்கள் என செல்கிறான். கடைசியில் ஒரு கொலையில் சிக்கும் அவனை சர்வ சாதரணமாக கடந்து செல்கிறார் அவர்.

சம்பத்தின் கல்லூரி கால வாழ்கையும் இதேதான். சற்றே குறைய ஒரு பத்து வருட வயது இடைவெளி உள்ள எஸ்.ரா, பாலகுமாரன் இருவர் நாவல்களிலும் உருவாகி வரும் இந்த சமூக சித்திரம் ஒரு வகையில் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்க வல்லது. ஒரு அரசியல் அதன் ராட்சச கரங்களால் நசுக்கி எறியும் உணர்ச்சி மிகுந்த சாமானியர்களின் சித்திரம் இது.

மேலும், எஸ்.ரா சில விஷயங்களை மிகவும் நுட்பமாக தொட்டு சென்றுள்ளார். உதாரணமாக, அழகர் ராமதுரையையும் ஜெயந்தியையும் இணைத்து பேசும் பகுதி. சம்பத் மரணத்திற்கு பின் ஒரு காட்டிற்கு பயணம் செய்யும் இடத்தில், ஜெயந்தியை முன்னிறுத்தி நண்பர்கள் இருவருக்கும் சின்ன சண்டை வருகிறது. படிக்கும் நமக்கும், அழகர் அப்படிதான் கேட்பான்  என்றே தோன்றுகிறது. நாவல் முழுதும் அழகருடைய மனதை நுட்பமாய் விவரிக்கும் ஆசிரியர், இந்த சந்தேகத்திற்கான காரணத்தை மெல்ல, சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருக்கும் இடத்திலேயே அடிகோடிடுகிறார். சம்பத்தை காண வந்த அழகர், ஜெயந்தி பசியோடு இருக்கிறாள் என எண்ணி அவளுக்கு உணவு வாங்க இரண்டு மூன்று கடை ஏறி நல்ல சாப்பாடு வாங்கி வருகையில், அவள் ராமதுரை கொண்டு வந்த உணவை சாப்பிட்டு கொண்டு இருக்கிறாள். அங்கேயே அவர்கள் இருவரையும் இணைத்து ஒரு விதமான எண்ணம் அவனுக்குள் உருவாகிவிடுகிறது.

இறுதியாக சம்பத் இறந்து விட அவனை அவனது வீட்டு வாசலில் கிடத்தி வைத்திருக்கும் அந்த அவல சித்திரம் நாவலில் எந்த அவசரமும் இல்லாமல், நிதானமாக விவரிக்கபடுகிறது. நாவலின், நெகிழ்ச்சி தன்மையற்ற உலர்ந்த நடை அபாரமாக கைகொடுக்கும் பகுதி இது. வாசலில் சம்பத் கிடைத்த பட்டிருக்க, ஜெயந்தி வரிசையில் நின்று குடத்தில் தண்ணீர் பிடித்து வருகிறாள். தண்ணீர் அவள் உடலை நனைக்க, உடை மாற்ற வேறு அறை இல்லாததால் தயங்கி தயங்கி பிணத்தின் அருகில் அமர்ந்திருக்கிறாள். ஓர் எறும்பு அவன் சட்டை காலரை மெல்ல கடந்து செல்கிறது, அதை தட்டி விட கூட தோன்றாமல் அப்படியே பார்த்தபடியே அமர்ந்திருக்கிறாள்.

நிச்சயம் படிக்க வேண்டிய தமிழ் நாவலில் இதுவும் ஒன்று.
நாவல்:உறுபசி
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை 
ஆன்லைனில் வாங்க : http://www.udumalai.com/?prd=&page=products&id=679

Wednesday, July 14, 2010

இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா


இந்த நாவலை எழுதியது பக்தியினால் அல்ல, ‘ஆசையினால் அறையலுற்றே’ என முன்னுரையிலேயே சொல்லி விடுகிறார் இந்திரா பார்த்தசாரதி (இ.பா). அதற்கேற்ப நாவல் முழுதும் கிருஷ்ணன் மீது காதல் பொங்கிய வண்ணமே இருக்கிறது. புராதான கிருஷ்ணனை, பாரத போரின் சூத்ரதாரியை நவீன உலகிற்கு ஏற்றார் போல வார்த்து எடுத்து இருக்கிறார் இ.பா. நாம் கேட்டு வளர்ந்த அதே கிருஷ்ணன் கதையை, சிற்சில குறிப்புகளை சேர்த்து முற்றிலும் நாம் தவறவிட்ட கோணங்களை எடுத்து காட்டும் புத்தகம் இது. “சம்பவாமி யுகே யுகே “ என்பதற்கு நான் மீண்டும் மீண்டும் பிறந்து வருவேன் என பொருள் கொள்ள தேவையில்லை, காலத்திற்கேற்ப என்னை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொள்ளுங்கள் என்கிறான் கிருஷ்ணன். இ.பா கட்சிதமாய் செய்து முடித்து இருக்கும் வேலை இது. பிருந்தாவனத்தில் கிருஷ்ணனின் லீலைகளுடன் தொடங்கும் நாவல் கீதையில் முடிவுறுகிறது. சம்ப்ரதாயமான நடையில் இல்லாமல் தேவையான நேரத்தில் நீண்டும், குறுகியும், முன் பின் நகர்ந்தும் கிருஷ்ணனின் வாழ்க்கை விவரிக்கபடுகிறது.


பாகவதம் என்பது கிருஷ்ணனின் வரலாறை கூறும் நூல் என வைத்து கொள்கிறேன், அது வியாசரால் சுகருக்கும், பின் சுகரால் பரிசீத்துக்கும் சொல்லபடுகிறது. இ.பா அதை சற்றே மாற்றி, கண்ணன் கதையை அவனே ஜரா என்ற வேடனுக்கும், அவன் நாரதருக்கும் சொல்ல, நாரதர் வாசகர்களுக்கு சொல்வதாக அமைத்திருக்கிறார். நாரதரை தேர்ந்தெடுத்ததற்கு ஒரே வரியில் பதில் சொல்லி மேலே செல்கிறார். He is the first ever Journalist.


எனது தமிழ் அய்யா, திராவிட இயக்க ஆதரவாளர், வகுப்பில் எப்போதும் அவர்  நக்கல் அடிப்பதற்கு எடுத்து கொள்ளும் கருப்பொருள் கிருஷ்ணன் தான். நினைத்து பார்கையில் வீடு கடிகாரத்தில் குழல் சுமந்து மோன நிலையில் இருக்கும் கிருஷ்ணனை விட, சட்டமிட்ட புகைபடத்தில் புன்னகை செய்யும் கிருஷ்ணனை விட, தமிழ் அய்யா எடுத்து காட்டியவன் மிகுந்த நெருக்கமாக தோன்றுகிறான். வீட்டில் பானை பானையாய் வெண்ணை இருக்க, ஏழை வீட்டில் திருடி தின்று அவர்களை செல்லமாய் கடிந்து கொள்ள வைத்த கிருஷ்ணன், இளம் பெண்ணின் வளவியை கழற்றி தானமாக கொடுத்துவிட்டு இல்லையே என அழகு காட்டியவன் எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களின் ஆடையை களவாடி ரசித்திருந்தவன். அதை என் தமிழ் அய்யா, “Eve Teasing” என்றார், நாரதர் இப்படி சொல்கிறார்," நம் உடலை கண்டு நாமே வெட்கப்பட வேண்டியதில்லை. நம் உடலை கண்டு நாமே வெட்கப்படும் போதுதான், மனத்தடைகளும் மனக் களகங்களும் ஏற்படுகின்றன, Strip Teasing Industryயின் மூலதனமே இதுதான் தெரியுமா ?” என்கிறார்.



கண்ணனை பற்றி விவரித்து கொண்டே வரும் இ.பா சட்டென்று தாவி ஒரு ஆங்கில ப்ரோயகத்தில் பல இடங்களை முடித்து வைக்கிறார். உலக இலக்கியங்களில் காண முடியாத பன்முக தன்மை கொண்டவன், Unpredictable , நாயகன் நாயகி பாவத்திற்கு ஊற்றுக்கண் (bridal Mysticism) , Corporate CEO, Most flexible Character. சற்று பிசகினாலும் மேஜர் சுந்தராஜனை நினைவுபடுதிவிடும் பகுதிகள், ஆனால் தேவையான இடத்தில மட்டும் உபயோகபடுத்தி அனாயசமாக நகர்ந்து செல்கிறார்.


பிருந்தாவனத்தில் ஆரமித்து குருஷேச்த்ரதிரம் வரை நீளும் கிருஷ்ணனின் வாழ்வில், அவன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியபடியே வருகிறான். எதிராளிகளின் சூழ்ச்சிக்கு தகுந்தாற்போல் அவன் பாதையை மாற்றி போரிடும் போதும், தூதுவனாக செல்லும் போதும், இல்லை துரியோதனன் - பீமன் மல் யுத்தம் போதும் அவனுக்கு தர்மம் என தோன்றியதே செய்கிறான். அவன் மேல் வெறுப்பை அள்ளி வீசும், பலரை நாவல் நெடுகிலும் காண முடிகிறது. ஆனால் எந்த பெண்ணும் அவன் மேல் கடைசி வரை வெறுப்புடன் இருக்க முடிந்ததில்லை என்பதையே பார்க்க முடிகிறது. ஒவ்வொருவரின் ஆழ்மனதில் அடையபடாத இலட்சியங்களோ கனவுகளோ இருக்கும் அவற்றின் ஒட்டு மொத்த உருவகம் தான் கிருஷ்ணன். குறிப்பாக சொல்ல போனால், அடக்கி ஆளப்பட்ட ஆயர்குல பெண்களாகட்டும் இல்லை சத்ரியகுல பெண்கள் ஆகட்டும், எல்லோருக்கும் அவர்களது கனவின் காதலன் தான் கிருஷ்ணன்.


நாவலில் மைய சரடாக ஊடாடும் விஷயம் கிருஷ்ணனுக்கு பெண்கள் மேல் உள்ள காதலும், அவர்கள் அவன் மேல் கொள்ளும் நம்பிக்கைகளும். க்ருஷ்ணனைவிட எட்டு வயது மூத்தவளான ராதா அவன் குழலில் இசையாய் நுழைகிறாள், பிராமணர்கள் செய்யும் தவத்தை குறுக்கிட்ட போதும் அந்த குல பெண்கள் அவனுக்கு உணவு படைகின்றனர், அவன் மேல் உள்ள காதலால் அவன் சொல் கேட்டு பாண்டவர்களை மணக்கிறாள் பாஞ்சாலி, துரியோதனின் மனைவி "போர் வராமல் பார்த்து கொள் கிருஷ்ணா" என்கிறாள். எல்லா வற்றிற்கும் மேலாக ராதேயன் காலத்தில் மாண்டு வீழ்ந்த பின், அவன் மனைவி முதல் கேள்வி கிருஷ்ணனை பார்த்துதான் கேட்கிறாள், "என் கணவன் யார் என்று தெரிந்து இருந்தும், நீ என் என்னிடம் சொல்லவில்லை?" என்று உரிமையோடு.


முள் படுக்கையில் வீழ்ந்திருந்த பீஷ்மர், சிகண்டியை தன் முன் நிறுத்தியது போர் தர்மமா? என வினவுகையில். பிரம்மச்சரியம் மற்றும் ராஜ விசுவாசம் தந்த மமதையில், அரச குல பெண்களை அவர்கள் விருப்பம் இல்லாமல் கவர்ந்து வந்து அரசனுக்கு மனம் முடித்து வைத்தது எந்த வகையில் தர்மம் என்கிறான். அதே போல அவனது “Political Moves “அனைத்தையும் உணர்ந்தவர்கள் பெண்களாகவே இருகிறார்கள். உதாரணத்திற்கு, துரியோதனின் மனைவி பானுமதி, கிருஷ்ணன் மேல் மிகுந்த பாசம் உள்ளவள். நாட்டை எப்படியாவது தன் கணவனுக்கே வாங்கி தந்து விடு என அவனிடம் ஏற்கனவே கேட்டு இருக்கிறாள். இந்த நிலையில், வனவாசம் முடித்து வந்த பாண்டவர்களின் அராசாட்சியை திரும்ப பெற தூது செல்ல கிருஷ்ணன் பணிக்க படுகிறான். அவன் மனதை சரியாக உணர்ந்த  பாஞ்சாலி மட்டும் தான் முன் வந்து, "அவர்களுடன் பேசுகையில் பானுமதியை நினைக்காமல் இரு, என் கூந்தல் என்னும் முடியபடவில்லை" என்பதை நினைவூட்டி செல்கிறாள்.


அதே போல பிதமாகர் பீஷ்மரின் பெருமையையும், கர்ணனின் (ராதேயன்) உயர்வையும் அவன் எடுத்து சொல்லும் விதம் அழகாக புனையப்பட்டுள்ளது. போர் முடிந்து, கர்ணன் தங்கள் அண்ணன் என்பதை தெரிந்த பாண்டவர்கள், கிருஷ்ணன் துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்ட,

"உலக சரித்திரத்தில் மகோன்னதமான மகாபுருஷர்களின் கதைகளை பார்க்கும் பொது அவர்கைளை சுற்றிக் கண்ணுக்கு புலப்படாத ஒரு துன்பியல் வலை சூந்திருப்பதை உணரலாம். அவர்கள் விதியின் குழந்தைகள். கர்ணன் அத்தகையவன், அவன் பாண்டவர் பக்கம் நின்றிருந்தால் என்னையே குற்ற உணர்வுக்கு ஆளாக்கிய ராதேயனாக ஆகியிருக்க முடியாது. இதை உணர்த்தவே அவனை பற்றிய உண்மையை மறைத்தேன். இந்த பாரத போரில் இருவர் தாம் விஸ்வரூபம் எடுத்து என் முன் நிற்கின்றனர். பீஷ்மர்! ராதேயன்!. இவர்களில் பீஷ்மரை விட உயர்ந்தவன் ராதேயன்” என்கிறான்.


மேலும் நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான வரலாறும் கூறபடுகிறது, ஆதலால் மகாபாரத அல்லது கிருஷ்ணன் கதை அதிகம் தெரியாமல் நாவலை படித்தாலும் புரியும் விதத்தில் எழுத்தப்பட்டுள்ளது. நான் படித்த நல்ல தமிழ் நாவல்களில் "கிருஷ்ணா கிருஷ்ணா" ஒரு சிறப்பான இடத்தை பெரும். சரளம், ஆழம் இரண்டும் அரிதாக கை கூடி வரும் படைப்புகளில் இது ஒன்று. ஏற்கனவே, இ.பாவின் "ஹெலிக்காப்டர்கள் தரை இறங்கி விட்டன" படித்திருக்கிறேன். டெல்லியை கதைகளனாய் வைத்து புனையப்பட்ட ஒரு நல்ல நாவல். ஆனால் இது அவரது ஒரு சிறந்த ஆக்கம் எனலாம்.


கிருஷ்ணன் கதையை ஜரா என்ற வேடன் நாரதரிடம் சொன்னதை, நான் உங்களிடம் சொல்லி விட்டேன். நீங்களும் படித்து பார்த்து உங்களுக்கான கிருஷ்ணனை உருவாக்கி கொள்ளலாம். சம்பவாமி யுகே யுகே!



கிழக்கு பதிப்பகம் 
விலை. ரூ. 90

Udumalai.Com: http://tinyurl.com/2fppbqq