Showing posts with label எண்ணங்கள். Show all posts
Showing posts with label எண்ணங்கள். Show all posts

Sunday, November 21, 2010

என் கவலை எல்லாம் என்னவென்றால்?


அமெரிக்கா வந்த இந்த பதினோரு மாதங்களில் என் அறை கதவு மூன்றே முறை தான் தட்டப்பட்டிருக்கிறது . அவசரமாக வெளியே கிளம்பி கொண்டிருக்கையில், எனக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியுமா என கேட்ட அந்த மக்கட்தொகை கணக்கெடுப்புக்கு வந்த பெண் ஒருமுறையும், மாடான் கூமார் இருக்கிறாரா என கேட்ட அந்த கூரியர் காரர் இரண்டாம் முறையும், கடைசியாக, வெளியே செல்ல அழைத்து போக வந்த நண்பனும் தட்டி இருக்கிறார்கள். லேசாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு வெள்ளி மாலை தீடிரென்று நான்காவது முறையாக கதவு தட்டப்பட்டது. ஒரு விதமான ஆனந்தமும் ஆச்சர்யமும் சூழ, கதவின் லென்ஸ் வழியாக பார்த்தேன், வெள்ளை தாளுடன் இருவர் நின்று கொண்டு இருந்தனர். கதவை திறந்த உடன், சடாரென்று ஒரு துப்பாக்கியை உருவி “Don’t Move” என சொல்லுவார்களோ என ஒரு விபரீத ஆசை தோன்றி மறைந்தது.

அந்த ராஜேஷ்குமார் பாணி கற்பனையை சற்றே ஓரம் கட்டி விட்டு கதவை திறந்தேன், மருத்துவ கல்லூரி மாணவர்கள் என்றனர், என்னை சந்தித்ததில் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி என்றார்கள், நான் பதில் சொல்ல வாயை திறப்பதற்குள், என் வாழ்க்கையின் பொன்னான ஐந்து மணித்துளிகளை  அவர்களுடன் பகிர்ந்து கொள்ள போவதற்காக ஒருமுறை நன்றி சொன்னார்கள். என் குடும்ப நலன் பற்றி ஏதேனும் விசாரிப்பார்களா என்று எதிர்பார்த்தேன், சற்றே ஏமாற்றம். பின், அவர்கள் உருவத்திற்கு சற்றும் பொருத்தமில்லாமல் ஒரு அட்டையை திறந்து, அதில் பல வண்ணங்களில் இருந்த மெழுகு வத்திகளின் படங்களை  காட்டி இதில் ஏதேனும் ஒன்றை வாங்கி கொள்கிறீர்களா என்றனர். பதிமூன்றே டாலர் மதிப்புள்ள அதை நான் வாங்கினால், அதன் மூலம் கிடைக்கும் ஏழு டாலர் லாபத்தை கொண்டு அவர்கள் ஒரு குழுவாக வியட்நாம் சென்று சேவை புரிய போவதாக சொன்னார்கள். இருபது டாலர் மதிப்புள்ளவையும் உண்டு என்ற உபரி தகவலும் கொடுத்தனர்.

மெழுக்கு வத்தியின் வண்ணத்தை நான் தேர்வு செய்தால், இரு வாரங்களில் வீட்டிற்கே வந்து தந்து விடுவதாக வாக்குறுதி அளித்தனர். இது வரை வாங்கியவர்கள் பற்றிய விவரம் அடங்கிய தாள், முதன் முதலின் என் பெயரை தாங்குவதற்காக காத்திருந்தது. எனக்கு மெழுகு வத்தி எதுவும் வேண்டாம், இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சங்கடமான புன்னகை ஒன்றை உதிர்த்தனர், ஆனால் நீங்கள் வியாட்நாம் செல்ல பணம் தருகிறேன் என்றேன். சற்றே அதிர்ச்சியுடன் பார்த்து, நிஜமாகத்தான் சொல்கிறீர்களா? என்றனர். உள்ளே வாருங்கள் என அழைத்து, பணமாகவா இல்லை காசோலையா என்றேன், “MSG Fund”என்ற பெயரில் காசோலையாக கொடுத்தால்  வரவு வைத்து கொள்ள வசதி என்றனர். காசோலையை வாங்கி கொண்டு மீண்டும் நலன் விசாரிப்பு, விடைபெறல்.

மறுநாள் செய்திகளை ஆராய்ந்து கொண்டிருந்தேன், வியாட்நாம் பற்றி ஒன்றும் செய்தி இல்லை, குறைந்தபட்சம் ஒரு வழிபறியாவது இருக்கும் என எதிர்பார்த்தேன், ம்ஹும்!. அப்படி என்றால் வியாட்நாமில் நல்ல மழை எல்லாம் பெய்து, மக்கள் சுபிட்சமாக இருப்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டி இருந்தது. பிலிபைன்சில் தான் எதோ சீரழிவு என செய்தி இருந்தது. அவர்கள் பிலிப்பைன்ஸ் என்றுதான் சொல்லி இருப்பார்கள் என்று சமாதான படுத்தி கொண்டேன். என் கவலை எல்லாம் என்ன வென்றால், அவர்கள் போகும் போது நான் என்ன படிக்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகள் இங்கு இருப்பேன் என கேட்டு விட்டு சென்றதுதான். அடுத்த முறை உலகில் எங்காவது சீரழிவு நடந்தால், நான் இருபது டாலர் கொடுத்து மெழுகு வத்தி வாங்க வேண்டி இருக்கும்.


                                                                     ***

இந்த ஊரில் அறிமுகமே இல்லாத ஒருவர், எதிரில் வருகையில் நம்மை பார்த்து சிரித்தால், நாம் தலை கலைந்திருக்கிறதோ இல்லை முகத்தில் பவுடர் திட்டு திட்டாய் படிந்திருக்கிராதோ என பதற்றபடாமல், பதில் புன்னகை கொடுத்தல் போதுமானது என்பதை வந்த ஒரு வாரத்திற்குள் புரிந்து கொண்டேன். அப்படி ஒருமுறை சிரித்து வைத்துவர், அடுத்த முறையும் சிரிக்க மட்டும் தான் செய்வார் என்றும் தப்பு கணக்கு போட்டு விட முடியாது. தூரத்தில் இருந்து சிரிக்காமல் வந்தவர் நம் அருகில் வந்ததும் தீடிரென்று " Hey, How’s it going?” என கேட்டால் நிலை குலையாமல் இருக்க வேண்டும். அதே சமயம் அந்த கேள்வியை நீங்கள் பரீட்சை கேள்வி போல் பீதியுடன் பார்த்து, நாணயஸ்தனாக சமீபத்திய பல் வலியையோ, வயுற்று வலியையோ  அவர்களிடம் விளக்குவது அவ்வளவு உசிதமான காரியம் இல்லை என்பதை புரிந்து கொள்ள மட்டும் சில மாதங்கள் தேவைப்பட்டது.

அமெரிக்கர்களிடம் பழகி, ஒரு பழக்க தோஷத்தில் எதிரில் வரும் நம்ம ஆட்களை பார்த்து சில காலம் சிரித்து வைத்தேன். அவர்கள் வானம், பூமி என ஏதோ தொலைந்ததை தேட, மெல்ல அவர்கள்  தொடங்குவதற்குள் இப்போதெல்லாம் நான் தேட துவங்கி விட்டேன்.

நாளொரு மேனியுமாய் பொழுதொரு வண்ணமுமாய் மாறி கொண்டிருந்த மேப்பில் மரங்களெல்லாம் இலைகளை உதிர்க்க தொடங்கிய ஒரு மாலையில், கல்லூரி நூலகம் வழியாக சென்று கொண்டு இருந்தேன். எப்போதும் செல்லும் வழியில் செல்லாமல், கல்லூரி மைதானத்தை ஒட்டிய ஒரு ஒற்றையடி பாதையில் சென்று கொண்டு இருந்தேன். ஸ்ட்ரா நீளம் சுண்டு விரல் அளவு இருந்தால், ஒரு கோப்பையை உதட்டுக்கு எவ்வளவு தூரம் வைப்போமோ, அந்த தொலைவில் இரு உதடுகளை வைத்தப்படி இருவர் வழியில் நின்று கொண்டு இருந்தனர். "இதெல்லாம் நான் கண்டுக்க மாட்டேன்"  என்ற பாவனையில் சற்றே அவர்கள் இருவர் முகத்தையும் பார்க்கும் தூரம் நெருங்கி விட்டேன். திரைகதையில் ஒரு சின்ன மாறுதல் என்னவென்றால், அந்த அமெரிக்க "அழகி"யுடன் நின்று கொண்டு இருந்தது நம்ம ஊரு பையன்.

ஸ்ட்ராவே இல்லாத நிலைக்கு அவர்கள் சென்று திரும்புகையில், சடாரென்று அவன் என்னைத்தான் பார்க்க நேரிட்டது. அவன் என்னைப் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு சென்றான், அது தெரிந்த சிரிப்பு போலவும் இருந்தது, தெரியாதது போலவும் இருந்தது. என் கவலை எல்லாம் என்ன வென்றால், அடுத்த முறை அவனை பார்த்தால், “Hey How’s it going?” என கேட்காலாமா? ஒருவேளை நான் கேட்டால் அவன் பதில் சொல்வானா என்பது தான்.
                                                                          ***
 

Sunday, September 12, 2010

நினைவில் துளிர்க்கும் சருகுகள்


மரண செய்திகள் ஓர் துர்க்கனவை போல் திடுமென வந்து விடுகின்றன. கிள்ளிப் பார்த்தோ. கன்னத்தில் தட்டியோ அந்த செய்திகளை அவ்வளவு சீக்கிரம் கடந்து விட முடிவதில்லை. "நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமை கொண்டது இவ்வுலகு" என்னும் கவிஞனின் ஏளனத்திற்கு பின்னால் மௌனமாய் ஓர் ஆற்றாமை வெளிப்பட்ட வண்ணமே உள்ளது. உறங்குவது போல சாக்காடு என்று மனம் சில சமயம் சமாதான படுத்திகொள்கிறது, உறங்கி விழிக்கும் இடம் எதுவென தெரியாத அந்த நிச்சயமின்மையை மறைத்தப்படி.. நீண்ட நாட்களாய் நினைவின் அடுக்குகளில் இருந்து மெல்ல நழுவிய ஒருவர், நள்ளிரவில் போர்வையை கிழித்து காதுக்குள் ஏறும் குளிரை போல மர்மமாக அறிமுகமாகிறார் மரணத்தின் மூலம். அதன் பின் அவர்களை சுற்றிய ஒவ்வொரு நினைவுகளும் மெல்ல மேல் எழுந்து வருகின்றது, பின்பு ஒருபோதும் பிரிக்க முடியாத நமது நினைவின் அந்தரங்கங்களுக்குள் நின்று கொள்கின்றனர்.

நான் படித்த மெட்ரிகுலேஷன் பள்ளி இருக்கும் ஊரில் உள்ள பெண்கள் உயர் நிலை பள்ளியில் தான் அவளும் படித்தாள். அவள் நன்றாக படிப்பவள் என்ற ஒற்றை வரி தான் அவளை பற்றிய அறிமுகம் எனக்கு. பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த கோடை விடுமுறையில் வீட்டு வாசலில் பாய் போட்டு தெருவிளக்கின் வெளிச்சத்தில் நூலக புத்தகம் ஒன்றை புரட்டி கொண்டிருக்கும் சமயங்களில், எப்போதாவது அவளது பாட்டியுடன் அவள் வீட்டு வாசலில் காண நேரிடும். பால் வாங்க போகையில் தென்பட்டாலோ, இல்லை மளிகை கடையில் பார்க்க நேர்ந்தாலோ ஒரு பரஸ்பர புன்னகை சிந்தியது நினைவில் இருக்கிறது.

தேர்வு முடிவுகள் வெளியான அன்று, முதலில் அவள் மதிப்பெண் தான் தெரிந்தது, 455/500 எடுத்து எங்கள் ஊரில் அதுவரை இல்லாத சாதனையை செய்திருந்தாள், மாவட்ட அளவிலும் ஏதேனும் ரேங்க் இருக்கும் என பேசி கொண்டார்கள். எல்லார் வீட்டிற்கும் இனிப்பு வழங்கினாள், நானும் எடுத்து கொண்டு "தேங்க்ஸ்" என்றேன். ஓரிரு மணி நேரம் கழித்து, எனது மதிப்பெண்களும் வந்து விட்டிருந்தது. அப்போதைய பள்ளி மனம், உடனே அவள் மதிப்பெண்ணுடன் சரிபார்க்க சொன்னது, என்னை விட ஒன்றரை சதம் அதிகம் எடுத்திருந்தாள். என்ன இருந்தாலும் நான் எடுத்தது 1100க்கு  என்று சமாதான படுத்தி கொண்டேன். இனிப்பு வழங்க அவள் வீட்டிற்கு சென்றேன், எடுத்து கொண்டு "கங்க்ராட்ஸ்" என்றாள்.

அதன் பின் அவளது தாத்தா வெளி ஊரில் உள்ள 'நல்ல' பள்ளியில் சேர்த்து விட்டார். எப்போதாவது அவளது படிப்பை பற்றி அவளது தாத்தா என் அப்பாவுடன் பேசுவதை கேட்டு இருக்கிறேன். பின் ஒருநாள், விடுதியில் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறாள் என சொல்லி கொண்டு இருந்ததையும் கேட்டு கொண்டு இருந்தேன். அவருக்கு துணையாய் அப்பா மருத்தவமனைக்கு அலைந்த நாட்கள் நினைவிருக்கிறது. ஒருநாள் வந்து உடல் சற்று தேறி வருகிறது என்றார். அதன் பின், அவள் உடல் நலம் பற்றி அவ்வப்போது யார் மூலமாவது தெரிந்து கொள்வேன். ஆறு மாதம் கழித்து  ஒருநாள், "கிழவனுக்கு அறிவே இல்லை, அந்த பிள்ளைய இங்கேயே படிக்க வச்சு இருக்கலாம்" என்றார் அப்பா.

வழக்கம் போல் பாலிற்கு நின்று கொண்டிருந்த ஒரு அந்தி சாயும் நேரம் தான், அந்த மருத்துவமனை வாகனம் அவள் வீட்டின் முன் வந்து நின்றது. வாகனத்தை பார்த்த உடன் மனதிற்கு புரிந்த விட்ட அந்த விஷயத்தை நம்ப மறுத்து அங்கேயே சில கணம் நிலைத்திருந்தேன். முகம் மலர சிரித்து கொண்டே எனது வெற்றிக்கு "கங்க்ராட்ஸ்" சொன்னவளை கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் களங்கப்படுத்துவதை காண சகியாமல் வீட்டிற்குள்ளே கிடந்தேன். அதன் பின் என்றென்றும் தங்கிவிட்டாள் ஆழ்மனதில் ஒரு படிமமாய்.

தீயிலிட்ட காகிதத்தின் எழுத்துக்கள் கரைவது போல, மெல்ல மெல்ல கண் முன்னே வாழ்வு கரைந்து போய் விடுகிறது. எந்த வாக்கியம் எப்படி முடியும் என்றே அறியமுடிவதில்லை. "அண்டை மனிதரை அணுக பயம், அணுகிய மனிதரை இழக்க பயம்" என்னும் திரைப்பட வசனத்தை நான் அடிக்கடி நினைத்து கொள்வதுண்டு. மரணம் நிஜம் என அறிந்தும், வாழ்வின் சாரம் என்ன என்று குழம்பிய நாட்களில் எல்லாம் சட்டென என்னை மீட்டு தந்த ஸ்பரிசங்களையோ, புன்னகைகளையோ நினைத்து கொள்கிறேன். மரணத்தின் வாசலில் நின்று திரும்பிய தஸ்தோயவஸ்கி, மீண்டும் மீண்டும் எழுதியது மானுட பெருங்காதலையும் அதன் மகத்துவத்தையும் தானே!.





Sunday, July 11, 2010

இது கல்யாண காலமடி சகியே!

கடந்து ஒரு மாதத்திற்குள் மூன்று கல்யாண செய்திகளை கேட்டு விட்டேன் எனது நெருக்கமான நண்பர்களிடம் இருந்து. இன்னும் ஒருவனுக்கு இப்பவோ அப்பவோ என இழுத்து கொண்டு இருக்கிறது. போன மாதம் வரை, "நான் அவன மாதிரி எல்லாம் தோலுக்கு ஆசை படல, எனக்குன்னு ஒரு ஆளுக்குதான் ஆசைபடறேன்" என வசனம் பேசி கொண்டு இருந்தவன் தான் மிக உற்சாகமாக தொலைபேசி ஆகஸ்ட்லயே கல்யாணம் டா என்றான். காதலை சொல்லிவிட்டேன் என உற்சாகமாக வந்து சொல்லிய நண்பர்கள் கல்யாண செய்தியும் (அதே பெண்ணுடன்தான்!) சொல்வது உற்சாகம் அளிப்பதாக உள்ளது. கல்யாண செய்தி கேட்பது இது ஒன்றும் புதுசு இல்லை, பள்ளி, கல்லூரி காலம் தொட்டே கேட்டு கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் அவை எல்லாம், பின்னணி இசையால் சொத்தப்பபட்ட நல்ல காட்சி போல பொலிவு இழந்து தான் நெஞ்சில் நிற்கிறது. இப்போதுதான் ராஜாவின் பின்னணியோடு கனகட்சிதமாய் பொருந்தி வருகிறது.

மென்பொருள் அலுவலகத்தில் வேலைக்கு சேர்வதின் ஒரு மிகபெரிய உபாயம் சம வயதினருடன் பழகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பது. அப்படி சேர்ந்துதான் ஐந்து பேர் கொண்ட குழு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நமது மூதாதையாரை மதித்து நாங்களும் ஒரு சங்கம் அமைத்தோம், FKSS – Figure Kidaikaamal Samaalipor Sangam என.அப்படி சேர்ந்த ஐந்து விரலில் இருந்து தான் ஒரு மூன்று விரல் மோதிரம் மாட்டி கொண்டது. பல நட்புகள் தி.மு தி.பி என வகை பிரிக்கும் அளவுக்கு மாறி விட வாய்ப்பிருந்தாலும் இப்போதைக்கு சந்தோஷமாய் வாழ்த்தத்தான் முடிகிறது.

நான் நல்லா பாடுவேன் மிஸ், என்னையும் ஆண்டு விழாவில் சேர்த்துகோங்க என கேட்ட அமுதா மூன்று மாதத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகூட எழுதாமல் போனதற்கு காரணம் கல்யாணம்தான் என்ற போதோ, என் கூட எல்லாத்துக்கும் சண்டை போட்டு கொண்டு இருந்த அக்காவை வீட்டிலிருந்து பிரித்து வீட்டையே வெறிசோட செய்தது திருமணம் தான் என்ற போதோ எனக்கு வெறுப்பு தான் வந்தது. மாமாவோடு சினிமாவிற்கு போனதோ, இல்லை ஐந்து வருடத்தில் அக்கா பெண் ஆசையோடு மடியில் ஏறி விளையடியபோதோ அந்த வெறுப்பு மறைந்திருக்க வேண்டும். அமுதாவும் வீட்டில் பசங்களுக்கு பாட்டு சொல்லி கொடுப்பாள் என நினைத்து சமாதானம் செய்து கொள்கிறேன்.

காதலில் உள்ள நிச்சயமின்மை தரும் அச்சம் கலந்த சந்தோஷம் ஒரு விதம் என்றால், நிச்சயமான கல்யாணம் வேறு விதமான துள்ளல். கல்லூரியில் ஒரு வருடம் யாருடன் அறையை பகிர்ந்து கொள்ள போகிறோம் என்ற எதிர்ப்பார்பே மிகுந்த அச்சம் ஊட்டுவதாக இருந்ததை நினைத்து பார்கிறேன். கல்யாணம் வார நாட்களில் வந்தால் பள்ளிக்கு "கட்", சென்னையில் உள்ள மாமா பையன் கல்யாணத்துக்கு வருவான், பொங்கல் வடை கிடைக்கும் என சின்ன சின்ன விஷயத்திற்கு சந்தோஷபட்டு கொள்ளும் பிள்ளை குணம் இருக்கும் வரையில் இருந்த மகிழ்ச்சி வேறுவகை. அக்கா திருமணதிற்கு வந்துவிட்டு, தங்கும் அறையில் ஏ.சி இல்லை என்ற சண்டை வாங்கிய அந்த மனிதரின் முகம், ஓடி ஓடி கலைத்து வராண்டாவில் தலையணை கூட இல்லாமல் படித்திருந்த ஏன் நெஞ்சில் ஆழ பதிந்திருக்கிறது.

நிறம் சற்று கருப்பு என திருமணம் தள்ளி போய் கொண்டிருந்த தோழிக்கு, அவர் குணத்திற்கு ஏற்றார் போல நடந்த கல்யாணமும் எப்போதும் மறக்க முடியாதது. அதற்கு முன் அவர் அனுபவித்த வலிகளையெல்லாம் அடித்து கொண்டு போன அந்த சிரிப்பை அன்றுதான் அவர் முகத்தில் கண்டேன். அப்படி கல்யாணம் நிச்சயமான எனது நண்பனது தோழியை பற்றிதான் மாறுதல் கதையில் எழுதி இருந்தேன். எல்லா கல்யாணத்திற்கு பின்னும் ஏதேனும் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. அலுவலகத்தில் என்னை விட இரண்டு வருட ஜூனியர் ஒருவன் புதிதாய் சேர்ந்திருந்தான், மிகவும் அமைதியானவன்.. பழக ஆரமித்த கொஞ்ச நாளைக்குள்ளாகவே நெருக்கமானான். எங்கள் சங்கத்தில் சேர்ந்து கொள்ள அவன் அவசரம் காட்டினாலும் அவனை நிலுவையிலேயே வைத்து கொண்டு இருந்தோம். எப்போதும் போல ஒரு தேனீர் இடைவெளியில் அமைதியாக நாங்கள் பேசுவதையே கேட்டு கொண்டு இருந்தான்.

எப்போதும் போல, எங்கள் சங்கம் எப்படி வளர்ச்சி பாதையில் போய் கொண்டு இருக்கிறது. அதன் அடுத்த கட்ட வளர்ச்சி நிலை என்ன என்பது போன்ற திட்டக்குழு விவாதங்கள் அரங்கேறி கொண்டு இருந்தன.

அரை மணி நேரம் ஆனா பின், எல்லாரும் அவரவர் மீசையை துடைத்து கொண்டு கிளம்ப ஆயத்தமானோம். அவன்,

"சார், உங்க எல்லார்டையும் ஒரு விஷயம் சொல்லணும் ?"

"என்னடா?"

"எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்"

"ஏண்டா, எதாவது காதல் விவகாராமா, வீட்டுக்கு தெரியாமையா?"

"இல்லை சார், வீட்ல பார்த்ததுதான்"

"அப்புறம் ஏன், உனக்கு 23 தானே ஆகுது?. ஏன் அவசரப்ற நல்ல பொண்ணா கிடைக்கும்டா" என்றேன்.

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "எங்க அம்மா பார்த்ததே ரொம்ப நல்ல Figure சார்"
என சொன்னதோடு நிற்காமல். இப்போ விட்டுட்டு, அப்புறம் சங்கம்லாம் வச்சு போராட முடியாது என்றான். மீசையை சற்று அழுத்தி துடைத்து கொண்டு கிளம்பினோம்.

Wednesday, May 12, 2010

நூறு நாட்களை தாண்டி...

ஒரு கவிதைக்கான கணத்தை அனுபவித்து அதை அப்படியே வார்த்தைகளில் வடிக்க போகையில் சரியான சொற்கள் கிடைக்காமல் வெறும் வானம், நிலா, காற்று, பூ, பட்டாம்பூச்சி, அடியே பெண்ணே! என வந்து கொண்டிருந்தால் இது போல கட்டுரை எழுத ஆரமித்து விடுவேன். எனக்கு தகுந்தாற்போல எதாவது விஷயம் கிடைத்துவிடுகிறது. இன்றோடு இந்த நாட்டிற்கு வந்து நான்கு மாதங்கள் ஆகிறது. நூறு நாட்களை தாண்டி வெற்றிகரமாய் ஓடிக்கொண்டு இருக்கிறேன். இளவேனிர்காலைத்தை கடந்து மெல்ல இப்போது தான் வெயிலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது அமெரிக்கா.

எம்.ஜி.ஆரின் அறிமுகம் போல "நான் வருகையில் என்னை வரவேற்க பனி மழை பொழிந்து" கொண்டு தான் இருந்தது. ஆனால் அடுத்த காட்சியில் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தால் அடுத்த பருவம் மாற இரண்டு மாதம் பிடித்தது. வழக்கம் போல விமான நிலைய பரிசோதனை அமோகமாக நடைபெற்றது. விமான நிலைய அதிகாரிகளிடம் நான் வைத்து இருப்பது சாம்பல் எனப்படும் திருநீறுதான் என்பதை நிரூபிக்க பத்து நிமிடம் போராடினேன். என் சட்டை மற்றும் கார்சறாய் பையை சுத்தமாய் காலி செய்து பின்பும் கொஞ்சம் கூட கூச்ச படாமல் அந்த பரிசோதனை கருவி என்னை பார்த்து ஒலி எழுப்பி கொண்டே இருந்தது. எனக்கு பின்னால் வரிசையில் வந்து கொண்டு இருந்தவர்கள் சற்று பயந்து பின்வாங்கினார்கள். அந்த ஒரு நிமிடம் சற்று மிதப்பாக இருந்தது. இரண்டு மூன்று அதிகாரிகள் என்னை சூழ்ந்து கொண்டு ஒரு குற்ற்றவாளி பார்வை வீசினார்கள். இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் குருதிபுனல் இறுதிகாட்சி கமல் அளவிற்கு மூஞ்சியை மாற்றி விடுவார்களோ என ஒரு சின்ன பதற்றம் தொற்றிகொண்டது. எனது தாயத்தை  கழற்றிய பிறகுதான் சத்தத்தை குறைத்தது.

கைபேசி உபயோகிக்க ஆரமித்ததிலிருந்து கைகடிகாரம் அணியும் பழக்கம் இல்லை. இது பற்றி யாரேனும் தனியாக ஆராய்ச்சி செய்யலாம். இது போல “பேரரசுவுக்கும் நல்ல சினிமாவிற்கும்” முடிச்சு போடும் வகையறா நியுயார்க் டைம்ஸ் கட்டுரைகள் தொகுப்பு ஒன்றை படித்து கொண்டு இருக்கிறேன். அதை பற்றி தனியே எழுதுகிறேன். நவார்க் விமான நிலையத்தில் ஆறு மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. வீட்டிற்கு தொலைபேச ஒரு டாலர் சில்லறைக்காக மூன்று டாலருக்கு  ஜூஸ் வாங்கினேன். அது என்ன பசியோ தெரியவில்லை, நான் கொடுத்த நான்கு இருப்பத்தைந்து சென்ட் நாணயங்களையும் முழுங்கி ஏப்பம் விட்டது அந்த தொலைபேசி. போதாகுறைக்கு கடைசியாக ஸ்பானிஷில் வேறு திட்டியது. கடைசியாக ஒரு வழியாக இந்தியானபோலிஸ் வந்து சேர்ந்தேன்.

நான் தங்கபோகும் அறையில் வசிக்கும் நண்பன் வெளியூர் சென்று இருந்தான். அவன் வர எப்படியும் மூன்று மணி நேரம் ஆகும் என தெரிந்தது. என்ன செய்வது என முழித்து கொண்டு இருந்தேன். நைஜீரியா நாட்டை சேர்ந்த சாம் என்பவர் என்னை அழைத்து சென்று ஒரு தேநீர் வாங்கி தந்தார். தான் முதல் முதலில் இந்த நாட்டிற்கு வந்தபோது இப்படிதான் நின்று கொண்டு இருதேன் என்றார். அறிவினான் ஆகுவதுண்டோ என்ற குறள் நினைவில் வந்து போனது.

சென்னையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி கொண்டு இருந்து விட்டு வந்தேன், இங்கு ஏழை வீட்டு பாயசத்தில் அகப்படும் முந்திரி போல (உபயம்: வைரமுத்து) மனிதர்களை பல சமயம் காண்பதே அரிது. இந்தியானாபொலிஸ், இந்தியானா மாகாணத்தின் தலைநகரம், அமெரிக்கர்களின் வரலாற்றுக்கு சற்றும் பங்கம் விளைவிக்காதவகையில் இங்கேயும் தங்கியிருந்த நேட்டிவ் அமெரிகன்ஸ் எனப்படும் பழங்குடி மக்களை விரட்டி அடித்து விட்டு குடியேறிகள் அபகரித்ததாக வரலாறு கூறுகிறது (பா. ராகவனின் டாலர் தேசம், தமிழில் அமெரிக்கா வரலாறினை படிக்க மிகவும் உகந்த புத்தகம்.) . சுமார் எழுப்பதைந்து சதம் வெள்ளை இன அமெரிக்கர்களும் இருபத்து மூன்று சதம் கறுப்பின மக்களும் வாழ்கின்றனர். மிச்சம் மீதியை நாமும் சீனர்களும் ஆக்கிரமித்து கொண்டோம். ஆனால் பெரும்பாலும் சாலையில் சீனர்களையோ இந்தியர்களையோ தான் பார்க்க முடிகிறது. முடிந்தவரை பேராசிரியர்கள் அவர்கள் சொந்த நாட்டை சேர்ந்தவர்களையே பெரும்பாலும் பணியில் அமர்த்தி கொள்கின்றனர், மற்றவர்களுக்கும் வாய்ப்பு உண்டு. நமது நாட்டு பேராசிரியகளிடம் அதிகம் மொழி சார்ந்து வேறுபாடுகள் காண முடியவில்லை.



சீனர்கள் தங்களுக்குள்ளாக முடிந்தவரை சீன மொழியிலேயே பேசிகொள்கின்றனர். நான் பணிபுரியும் இடத்தில் ஒரு மலையாள பேராசிரியர் அவரது மாணவர்களிடம் முடிந்தவரை மலையாளத்திலேயே பேசி கொள்கிறார். நம்ம ஊரு ஆளிடம் எவ்வளவு முயற்சி செய்து பார்த்தும் ஆங்கிலத்தை விட்டு வரவில்லை. தமிழர்கள் தெலுங்கு பேசும் மக்களிடம் பழகுவதை விட மலையாளிகளிடம் நெருக்கமாகி விடுவதை பார்க்க முடிந்தது. இந்தியானா தமிழ் சங்க விழாவில் மலையாளிகள் உற்சாகமாக பங்கெடுத்ததை காண முடிந்தது. தெலுகு சங்கம் தனியாக இருப்பதாக சொன்னார்கள். "என்ன தமிழ், தெலுகு செப்பு" என என் உடன் பணிபுரியும் ஆந்திர மக்கள் கோரிக்கை எழுப்பினர், "எனக்கு புரியும், தமிழில பரா" என்றாள் மலையாளம் பேசும் ஒரு பெண்.

வகுப்புகள் தொடங்கி, நாளொரு அசைன்மன்ட் பொழுதொரு ப்ராஜக்ட் என நாட்கள் நகர துவங்கியது. எனது வீட்டில் இருந்து வகுப்பிற்கு செல்லும் நீண்ட உறைபனி மூடிய சாலைகளும், இலைகளை இழந்து உறைந்த புகைப்படமாய் நிற்கும் மரங்களும் வெறுமையை கூட்டிய வண்ணமே இருந்தது. சென்னையில் தனிமையில் தெருக்களில் நடந்த நாட்கள் மிக குறைவு, உடன் நண்பர்களோ அல்லது யுனிகார்னோ வரும். சில சமயம் இரண்டையும் இழந்தது பற்றி யோசிக்க தோன்றும். ஆனால் வெள்ளை திரை கொண்டு மூடபட்ட தெருக்களும், அந்த பளீர் வெள்ளை திரையில் பச்சை நிற சாந்து தீற்றல் போல ஆங்காங்கே முளைதெழுந்த புற்களும் நாளடைவில் பழகி போனது.

சரியாக மூன்று நிமிடம் மட்டும் நிறுத்தத்தில் நிற்கும் பேருந்துகளும், எப்போதும் முகத்தில் ஓட்ட வைக்கப்பட்ட உதிரி புன்னகைகளும் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்தியானாபோலிஸ் நூலகத்தில் உறுப்பினர் ஆனேன், மிக பெரிய நூலகம், ஒருவர் அதிகப்பட்சமாக எழுபத்திரண்டு புத்தகங்கள் எடுக்கலாமாம். கால் சாகன் எழுதிய "காண்டக்ட்" என்னும் நூலை எடுத்து வந்து வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருக்கிறேன். நூலகத்திற்கு சென்ற ஒரு நாள், இந்தியானா "உலக போர் நினைவிடம்" காண நேரிட்டது.



போர் முனையில் இருந்து எழுதிய கடிதங்களின் வரிகளை செதுக்கி ஒரு ஸ்தூபி எழுப்பி இருக்கின்றனர். சிறிது நேரம் நின்று அந்த கடிதங்களை படித்து கொண்டு இருந்தேன், ஒரு வரி விடாமல் அத்தனையும் திரைப்படங்களில் பயன்படுத்தி விட்டிருந்தனர். இரட்டை கோபுரங்கள் தாக்கபட்டதை தவிர எந்த நேரடியான யுத்தமும் நடக்காத நாடு. ஆனால் ஆண்டுதோறும் அதிக பட்ச போர் பற்றிய படங்களை எடுக்கும் நாடு அமெரிக்கா என எங்கோ படித்து நினைவில் வந்தது.

நான் நினைத்தது போல அல்லாமல் மாறுதலுக்கு சீக்கிரமே பழகிவிட்டேன். அதீதத்தின் ருசி என்னும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை புரட்டி கொண்டிருந்தேன், ஆச்சர்யமாக "மாறுதல்களுக்கு பழகுதல்" என்ற ஒரு அழகான கவிதை இருந்தது.

"நாம் பயந்தது போல
அது
அவ்வளவு மோசமாக இல்லை
என்றபோதும்
எல்லாவற்றிலும்
அது ஒரு திடுகிடலை உருவாக்குகிறது


நாம் விரும்பியது போல
அது
அவ்வளவு மகத்தானதாக
இல்லை என்றபோதும்
நமது உறைந்த நினைவுகளிலிருந்து
அது ஒரு சிறிய மறைவிடத்தை தருகிறது


நாம் பற்றிக் கொள்ள விரும்பியதுபோல
அது ஒரு மீட்பரின் கைகளே என்றபோதும்
சில சமயம் அதன் குளிர்ந்த தன்மை
நம்மை நிம்மதியிழக்க வைக்கிறது ………………….."


குளிர்ந்த தன்மை நிம்மதி இழக்க செய்யும் பொழுதுகளில் இப்படி ஒரு கவிதையையோ ஒரு இளையராஜாவின் பாடலையோ பற்றி கொள்ள முடிகிறது.