Showing posts with label எஸ். ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label எஸ். ராமகிருஷ்ணன். Show all posts

Wednesday, February 2, 2011

எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி

மூன்று வருடங்களுக்கு முன்னால் துணையெழுத்து, கதாவிலாசம் எல்லாம் படித்தபின் இவர் வேறு என்னவெல்லாம் எழுதி இருக்கிறார் என நண்பரிடம் கேட்க அவர் பரிந்துரைத்த புத்தகம் உறுபசி. துணையெழுத்து, தேசாந்திரி ஆகிய நூல்களின் மொழியும், உறுபசியின் மொழியும் முற்றிலும் வேறுப்பட்டு இருந்தது. வெகுஜன பத்திரிக்கைகளில் தென்பட்ட அவரது எழுத்து நடையில் இருந்த நெகிழ்ச்சி தன்மை முற்றிலும் இல்லாமலாகி ஒரு உலர்ந்த நடைக்கு தயார் படுத்தி கொள்ள வேண்டியிருந்தது. மூன்றாண்டுகள் கழித்து, சமீபத்தில் உறுபசி மீண்டும் வாசித்தேன்.

கல்லூரி வாழ்கை என்பது நமது சுதந்திர வாழ்க்கைக்கான திறவுகோல். முற்றிலும் வித்யாசமான மனிதர்களுடான அறிமுகங்கள் கல்லூரிகளில் தான் நிகழ்கிறது. சிலருடன் நாமாக சென்று பழக விரும்புகிறோம், தாமாக நம்மை நோக்கி வரும் சிலரை தள்ளி விடுகிறோம். கூட படிக்கும் வேறு சில நண்பர்களை பார்த்து பொறாமை படுகிறோம், ச்சே, அவன மாதிரி நாம இல்லையே என்று நம்மை எங்க வைத்த சிலரையாவது கண்டிருப்போம். எத்தனையோ காரணங்களுக்காக நாம் அந்த நண்பர்களை பார்த்து பொருமி இருக்கலாம், அவன் பெண்களிடம் பேசுகின்ற முறை பார்த்து, கலை நிகழ்சிகளில் வெற்றி சூடுவதை எண்ணி என. அப்படி விஸ்வரூபம் எடுத்து நின்றவர்கள், நம் கண் முன்னாலேயே தீயிலிட்ட காகிதத்தில் இருந்த வார்த்தைகள் போல கரைந்து போய் விடுகையில் ஏற்படும் அதிர்ச்சி சாதாரணமானது அல்ல. உள்ளுக்குள் அவனை நாம் ஆதர்ஷித்து இருந்தாலும், மெல்ல அவன் நம் கண் முன் அழிவதை பார்ப்பதில் ஒரு வகையான குரூரம் கலந்த சந்தோசம் இருக்கிறது போலும்.

சம்பத் என்ற கல்லூரியில் தமிழ் இலக்கியம் ஒன்றாக படித்த நண்பனின் மரணத்தில் சந்திக்கும் மூன்று நண்பர்களின் பார்வையில் விரிகிறது இந்த நாவல். அழகர், மாரியப்பன்,ராமதுரை என்ற அந்த மூவருக்குமே சம்பத் மேல் ஒரு விதமான ஈர்ப்பு இருந்திருகிறது. அதே போல மூவருமே, சம்பத் மற்றவர்களுடன் தான் நெருக்கமாக இருக்கிறான் என நினைகிறார்கள். எல்லார் மேலும் ஓர் தீவிரமான பாதிப்பை செலுத்தி அதே சமயம் அவர்கள் மூவரிடமும் ஒட்டுதல் அதிகம் இல்லாமல் வாழ்ந்திருக்கிறான். நேரடியாக ஆசிரியரின் குரலில் வெளிபடாமல் சம்பத் பெரும்பாலும் அந்த மூவரின் பார்வையிலும், அவனது கல்லூரி தோழி யாழினி மூலமாகவும் வெளிபடுகிறான்.


முதலில் அழகர் பார்வையில் நாவலில் சம்பத் அறிமுகமாகும் இடமே கொஞ்சம் கவித்துவமானது. அழகரும் அவனும் டெல்லியில் ஓரிடத்தில் தீப்பெட்டி வாங்குகையில், அதில் அவனது ஊர் பெயர் இருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டு கொள்கிறான். அழகரிடம், லைட்டரில் உள்ள தீ எனக்கு பிடிப்பது இல்லை, அது நேர்கோடாக எரிகிறது, இதோ இந்த தீ குச்சி போல ஒரு நடுக்கமோ அலைதலோ இல்லை என்கிறான். அழகர் தமிழ் இலக்கியம் படித்தாலும், முடித்த பின்பு ஒரு கொரியன் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து தற்போது சற்று வசதியாக வாழ்கிறான். தன் மனைவியுடன் திரையரங்கிற்கு வரும் அழகர், சம்பத்தை ஒரு விபசாரம் செய்யும் பெண்ணுடன் பார்கிறான். சம்பத் அது பற்றிய எந்த சங்கடமும் இல்லாமல், அவளை அழகருக்கு அறிமுக படுத்துகிறான். மேலும், உன் மனைவி கர்ப்ப தடை சிகிச்சை செய்து கொண்டாளா? இடுப்பு சற்று பெருத்து இருகிறதே என சீண்டி விட்டு செல்கிறான்.

அந்த சீண்டலால் கோவப்பட்டு சம்பத்தை பற்றி ராமதுரையுடன் புலம்பும் அழகரை மீண்டும் சந்திக்க வரும் சம்பத், "உன்னிடம் பேச வேண்டும்" என சொல்லி கடற்கரைக்கு அழைத்து சென்று அவனிடம் ஏதும் பேசாமலே திரும்பி வருகிறான். நீண்ட நாள் கழித்து மீண்டும் பார்கையில், ஒரு பெண்ணை தன் மனைவி என அறிமுகம் செய்து வைத்து, கரும்பு ஜூஸ் குடிக்கலாமா என கேட்கிறான். அந்த கடைக்காரனிடம், இந்த கரும்பு பிழியும் இயந்திரம் எவ்வளவு விலை, ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாரிக்கலாம் என தெரிந்து வைத்து கொள்கிறான். வீட்டில் தண்ணீர் பிடித்து வைக்க பெரிய பிளாஸ்டிக் வாலிகளை வாங்கி கொண்டு, தன் மனைவி ஜெயந்தியுடன் செல்கிறான்.

அடுத்த காட்சியில், அழகரை தன் சொந்த ஊருக்கு அழைத்து செல்லும் இடத்தில், சிறு வயதில் கோவிலுக்கு பொங்கல் வைக்க போன இடத்தில் தன் உடையை அணிந்திருந்த தோழியிடம் வம்பு செய்து அந்த உடைகளை பிடுங்கியதை பற்றியும், அதனால் அவள் இறந்து போனதை பற்றியும் ஒரு ஆழ்ந்த குற்ற உணர்ச்சியுடன் விவரிக்கிறான். வீட்டில் அவனுக்கும் அவனது தந்தைக்கும் கைகலப்பு ஏற்பட்டு விறகு கட்டை கொண்டு அவரை மூர்கமாய் தாக்கி விட்டு ஓடி வருகிறான்.

லாட்டரி டிக்கட் வாங்குவதில் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு குறிப்பிட்ட கடையில் சீட்டு வாங்கினால் கொள்ளை லாபம் என, அந்த ஊரிற்கு  வந்து ஒரு அறை எடுத்து தங்கி, அங்கு டெலிபோன் பூத்தில் வேலை செய்யும் ஜெயந்தி மேல் விருப்பபட்டு அவளை திருமணம் செய்து கொள்கிறான். சென்னையில் ஒரு சிறிய அறையில் குடி ஏறி, புலனாய்வு இதழில் வேலைக்கு சேர்கிறான். பின் ஒருநாள், நாட்டில் நடக்கும் கொலை, கற்பழிப்பு ஆகிய செய்திகளை தயாரித்து தயாரித்து அவை எல்லாம் நானே செய்வது போல ஆகி விடுகிறது என சொல்லி வேலையை விட்டு விடுகிறான். நாவலில், சம்பத்தின் சித்திரம் உத்வேகத்துடன் உருவாகி வரும் இடங்கள் இரண்டு. தன் மனைவியுடன் சேர்ந்து பூந்தொட்டிகள் செய்து விற்கலாம் என முடிவு செய்யும் இடமும், கல்லூரி காதலி யாழினி மூலமும், அழகர் மூலமும் வெளிப்படும் அவனது கல்லூரி வாழ்க்கை பற்றிய காட்சிகளும்.

இந்த கல்லூரி சம்மந்தமான காட்சிகள் மட்டும், பாலகுமாரனின் நாவல் ஒன்றுடன் ஒப்பு நோக்க சாத்தியமானது. சிநேகமுள்ள சிங்கம் என்ற அந்த நாவல்,  சென்னை கடற்கரையை ஒட்டி உள்ள "ஒரு" கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவன் ஒருவனை பற்றியது. தமிழ் பிரிவுகள் மட்டும் மற்ற பிரிவுகளை விட மட்டம் என என்னும் போக்கு கல்லூரியில் உள்ளது என என்னும் அவன் அதை மாற்ற சில முயற்சிகள் செய்கிறான். அவளுக்கு உறுதுணையாக அவனது வகுப்பு தோழி ஒருத்தி நிற்கிறாள். அவளது தந்தை "தமிழினம்", "தமிழ்பற்று" என பேசும் அரசியல்வாதியாக அறிமுகமாகிறார். இவனை பயன்படுத்தி கல்லூரிக்குள் அரசியல் செல்வாக்கை நுழைக்கிறார். அவருடன் இணைந்து, நாத்திக பிரசாரம், மேடை முழக்கங்கள் என செல்கிறான். கடைசியில் ஒரு கொலையில் சிக்கும் அவனை சர்வ சாதரணமாக கடந்து செல்கிறார் அவர்.

சம்பத்தின் கல்லூரி கால வாழ்கையும் இதேதான். சற்றே குறைய ஒரு பத்து வருட வயது இடைவெளி உள்ள எஸ்.ரா, பாலகுமாரன் இருவர் நாவல்களிலும் உருவாகி வரும் இந்த சமூக சித்திரம் ஒரு வகையில் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்க வல்லது. ஒரு அரசியல் அதன் ராட்சச கரங்களால் நசுக்கி எறியும் உணர்ச்சி மிகுந்த சாமானியர்களின் சித்திரம் இது.

மேலும், எஸ்.ரா சில விஷயங்களை மிகவும் நுட்பமாக தொட்டு சென்றுள்ளார். உதாரணமாக, அழகர் ராமதுரையையும் ஜெயந்தியையும் இணைத்து பேசும் பகுதி. சம்பத் மரணத்திற்கு பின் ஒரு காட்டிற்கு பயணம் செய்யும் இடத்தில், ஜெயந்தியை முன்னிறுத்தி நண்பர்கள் இருவருக்கும் சின்ன சண்டை வருகிறது. படிக்கும் நமக்கும், அழகர் அப்படிதான் கேட்பான்  என்றே தோன்றுகிறது. நாவல் முழுதும் அழகருடைய மனதை நுட்பமாய் விவரிக்கும் ஆசிரியர், இந்த சந்தேகத்திற்கான காரணத்தை மெல்ல, சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருக்கும் இடத்திலேயே அடிகோடிடுகிறார். சம்பத்தை காண வந்த அழகர், ஜெயந்தி பசியோடு இருக்கிறாள் என எண்ணி அவளுக்கு உணவு வாங்க இரண்டு மூன்று கடை ஏறி நல்ல சாப்பாடு வாங்கி வருகையில், அவள் ராமதுரை கொண்டு வந்த உணவை சாப்பிட்டு கொண்டு இருக்கிறாள். அங்கேயே அவர்கள் இருவரையும் இணைத்து ஒரு விதமான எண்ணம் அவனுக்குள் உருவாகிவிடுகிறது.

இறுதியாக சம்பத் இறந்து விட அவனை அவனது வீட்டு வாசலில் கிடத்தி வைத்திருக்கும் அந்த அவல சித்திரம் நாவலில் எந்த அவசரமும் இல்லாமல், நிதானமாக விவரிக்கபடுகிறது. நாவலின், நெகிழ்ச்சி தன்மையற்ற உலர்ந்த நடை அபாரமாக கைகொடுக்கும் பகுதி இது. வாசலில் சம்பத் கிடைத்த பட்டிருக்க, ஜெயந்தி வரிசையில் நின்று குடத்தில் தண்ணீர் பிடித்து வருகிறாள். தண்ணீர் அவள் உடலை நனைக்க, உடை மாற்ற வேறு அறை இல்லாததால் தயங்கி தயங்கி பிணத்தின் அருகில் அமர்ந்திருக்கிறாள். ஓர் எறும்பு அவன் சட்டை காலரை மெல்ல கடந்து செல்கிறது, அதை தட்டி விட கூட தோன்றாமல் அப்படியே பார்த்தபடியே அமர்ந்திருக்கிறாள்.

நிச்சயம் படிக்க வேண்டிய தமிழ் நாவலில் இதுவும் ஒன்று.
நாவல்:உறுபசி
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை 
ஆன்லைனில் வாங்க : http://www.udumalai.com/?prd=&page=products&id=679

Saturday, March 7, 2009

எஸ். ராமகிருஷ்ணனின் நடந்து செல்லும் நீரூற்று



(நன்றி Anyindian வலைத்தலம்)

கதைகள் உலகை பிரதிபலிப்பதில்லை மாறாக கதைகள் தனக்கென ஓர் உலகத்தை கொண்டுள்ளது என்கிறார் எஸ். ரா தன் முன்னுரையில்.12 சிறுகதைகளை கொண்ட இந்த தொகுதியில் உள்ள அத்தனை கதைகளும் சம்பிரதாயமான கதைகளில் இருந்து பல வகையில் மாறுபட்டு உள்ளது. கதைகளில் மைய கதாபாத்திரத்தை சுற்றி நிகழ்ச்சிகளை அமைக்காமல், அந்தரங்கத்தில் அறியாமல் மண்டி கிடக்கும் சில ரகசியங்களை ஒட்டி கதை நகர்கிறது. சில கதைகளில் வரும் காட்சிகளும் சம்பவங்களும் கொண்டு எஸ். ரா முன் வைக்கும் கேள்விகள் மிக அந்தரங்கமானவை.


பிழைத்திருத்துபவரின் மனைவி
அச்சகத்தில் பிழை திருத்தம் செய்யும் மந்திரமூர்த்தியின் மனைவிக்கு காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகிறது என தொடகுகிறது இந்த கதை. அதிகம் பேசாத, நண்பர்கள் அதிகம் அற்ற, பிழை திருத்தம் செய்வதை மட்டுமே அறிந்த, நகைச்சுவை என்பது கூட பிழைகளில் வருவதை மட்டுமே ரசிக்க தெரிந்த ஒரு மனிதராய் மந்திரமூர்த்தி அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் மனைவியோ பாடல் கேட்பதில் ஆர்வம் உள்ள, பேசுவதில் ஆர்வம் உள்ள ஒரு சாதாரண கிராமத்து பெண்.அந்த பெண் மனத்தின் மீது காகிதமும், மந்திரமூர்த்தியின்யின் நடவடிக்கைகளும் செலுத்தும் வன்முறை மிக அழகாய் இந்த கதையில் சித்தரிக்கபட்டுள்ளது.
http://sramakrishnan.com/deep_story.asp?id=118&page=3


பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள்
அதிகம் பாராட்ட பெற்ற எஸ். ரா வின் இந்த கதை, குடும்பம் என்னும் அமைப்பு பெண் மீது தொடர்ந்து நிகழ்த்தி வரும் ஆதிகத்தையும் அதன் மூலம் சிதிலப்படும் அவள் ஆளுமையும் பி.விஜயலெட்சுமி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் மிக அழகாக விவரிக்க பட்டுள்ளது.
http://sramakrishnan.com/deep_story.asp?id=133&page=3


மூன்று குடும்பக் கதைகள்
மூன்று சிறுகதைகள் இந்த தலைப்பின் கீழ் வருகிறது. முதல் கதை, திருமணமான புதிதில் ஒரு பீங்கான் கோப்பையை தவறவிட்டதற்காக, தன் கணவன் தன்னை அடித்து விட 42 வருடம் அவரிடம் பேசாமல் தலையை கவிழ்ந்த வண்ணமே இருந்து அவர் மரணம் அடைந்த அன்று பிணத்தின் முன் வந்து தலையை நிமிர்த்தி பார்த்து “நான் வேணும்னு பீங்கான் கோப்பையை உடைக்கலைங்க” என்று சொல்லும் பெண்ணை பற்றியது.”ஙப் போல் வளை” மற்றும் ”இல்லறம்” என்னும் மற்ற இருகதைகள் முன் வைக்கும் கேள்விகள் மிகுந்த வலி தர கூடியவை.
http://sramakrishnan.com/kathai_1.asp


பணாரஸ்
பணாரஸ் படித்துறையில் தொடங்கும் இந்த கதை, அந்த நகரத்தின் மர்மத்தையும் வசீகரத்தையும் மிக அழகாய் படம் பிடித்துள்ளது. கதை முடிந்த உடன் ஓர் மர்ம உலகல் சூழ்ந்திருப்பது போன்ற பிரமை!!!


பதினைந்து வயதில் ஒருவன்
பதினைந்து வயது என்னும் முதிரா பருவத்தின் ஒரு நாளில் ஒருவன் எதிர் கொள்ளும், பின் நாளில் அவனின் ஆழ் மனத்தில் நிரந்திரமாய் தங்கி விட போகும் “ஒரு” நாளை பற்றியது.


நடந்து செல்லும் நீரூற்று
வியாபாரத்தில் நொடிந்து மகள் வீட்டில் தங்கி வசிக்கும் ஒருவர், மற்ற யாருக்கும் தெரியாமல் வீதியில் தான் நடக்கும் போது தனக்கு மட்டும் தெரியும்படி தன் கால்களுக்கு அடியில் இருந்து வரும் ஓர் நீரூற்றை தேடும் கதை.


சம்பிரதாயமான கதைகளில் இருந்து மாறுபட்டு வேறு வகையான கதைகளை படிக்க விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய தொகுப்பு.

Friday, January 9, 2009

எஸ்.ரா - நூல்கள் வெளியீட்டு விழா

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் எட்டு நூல்கள் வெளியீட்டு விழா சென்னை “South Indian Film Chamber” அரங்கில் கடந்த திங்கள் மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மனுஷ்யபுத்திரன், பிரபஞ்சன், ஜெயமோகன், பாரதிமணி, வெ.இறையன்பு, சாரு, தோட்டாதரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பேராசிரியர் மணி அவர்கள் எஸ்.ரா துணையெழுத்தில் தன்னை பற்றி எழுதியதால் (Andy Whorhol ன் தத்துவப்படி!!) தான் பதினைந்து நிமிட உலக புகழ் அடைந்ததை குறுப்பிட்டார். பின் எஸ்.ரா வின் பழகும் இயல்பை சிலாகித்து பேசினார்.
Script இல்லாமல் தன்னை பேச அழைத்ததை நகைச்சுவயோடு குறிப்பிட்டு பேச ஆரம்பித்த திரு.பாரதிமணி, Money இல்லாத பாரதியாருக்கு “பாரதி” படத்தில் தந்தையாக நடித்தவர் (காரண பெயராக இருக்குமொ?), கலகலப்பாக பேசினார். இறுதியில் தமிழின் சிறந்த ஆளுமைககளான நாஞ்சில் நாடன், எஸ்.ரா, ஜெயமோகன் அவர்களுக்கு சாகித்ய ஆகாதெமி விருது வழங்க சிபாரிசு செய்தார்.
வெ.இறையன்பு தனக்கே உரிய பாணியில் பேசினார். “சித்திரங்கள் விசித்திரங்கள்” புத்தகத்தை பற்றி பேசியவரின் நீண்ட உரையினால் தோட்டாதரணி பேச நேரம் கிடைக்க வில்லை.தொகுபாளர்கள் கடைசி நேரத்தில் வர இயாலாத காரணத்தால் Sun Music ஆனந்த கண்ணனும், நிஷாவும் தொகுத்து வழங்கினர். அவசரத்தில் வந்தாலும் ஆனந்த கண்ணன் நன்றாகவே பேசினார். நிஷா “நூல்” வெளியீடுக்கு பதில் “நூலக” வெளியீடு என்றார். அதுவும் பொருத்தமாகவே பட்டது. (எட்டு நூல்கள் அல்லவா?). எஸ்.ரா வின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
நிகழ்ச்சி தொடங்க 5 நிமிடத்திற்க்கு முன், நானும் நண்பர் கார்ததியும் ஜெயமோகனை சந்தித்தோம், அவருடைய “காடு” நாவலை பற்றியும், Blog யை பற்றியும் 5 நிமிடம் பேசினோம். நிகழ்ச்சி முடிந்த பின், “அதே இரவு அதே வரிகள்” புத்தகத்தில் ஜெயமோகனிடமும் “உலக சினிமா” வில் எஸ்.ரா விடமும் Autograph வாங்கி கொண்டோம். பின் மனுஷ்யபுத்திரனுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து விட்டு விடை பெற்றோம். எஸ்.ரா “குலுங்க” சிரித்து விடை தந்தார். நிறைவான விழா.