Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, July 12, 2010

மாறுதல்

(போன பதிவில் சொல்லி இருந்த மாறுதல் சிறுகதை, இதுவரை பதிவிட மறந்திருந்தேன். இந்த கதை எங்கே என பல நூறு (ரமேஷ்!) கடிதங்கள் வந்து குவிந்தமையால், தூசு தட்டி மீண்டும்)

முன்னுரையே இல்லாமல் ஆரமிக்கப்பட்ட கதை போல, தீடீரென்று முன்னால் வந்து ப்ரேக் போகலாமாஎன்றாள் அர்ச்சனா. 

அவள் அலுவலகம் வந்து அரை மணி நேரம் ஆகி இருந்தது. அலுவலக பேருந்தில் என்னுடன் ஒன்பது மணிக்கு தினம் வருபவள் இன்று பத்து மணிக்கு தான் வந்தாள். எப்போதும் வந்த உடன் GMடா என்று ஒரு ஸ்மைலியுடன் கம்யூனிக்கெட்டரில் பிங் பண்ணுவாள். இன்று அப்படி எதுவும் இல்லாமல்,காலையில் அலுவலக பேருந்தில் என்னோடு வராத காரணத்தை பற்றியோ, எனது செல்லின் அழைப்பை ஏற்காததைப் பற்றியோ எதுவும் பேசாமல் வந்து ப்ரேக் போகலாமா என்கிறாள். ஒருவேளை அதை எல்லாம் சொல்வதற்கு கூட இருக்கலாம்.  

இல்லை, வேலை இருக்கு என்று கூட சொல்லி விடலாம். ஆனால் முணுக்கென்று கோபித்து கொண்டு விடுவாள். இந்த மென்பொருள் அலுவலகத்தில் நான் வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகின்றது,சேர்ந்த இரண்டாவது நாள், ஹாய் ஐம் அர்ச்சனா என கைகுலுக்கி கொண்டது  முதல் அவளைத் தெரியும்.  அவளது கோவத்தின் வெவ்வேறு வடிவங்களை பார்த்தாயிற்று ஆதலால் எதுவும் சொல்லாமல் எனது கணினியை லாக் செய்து விட்டு அவளுடன் கிளம்பினேன்.  

எப்போதும் ப்ரேக் வரும் நேரத்திற்கு சற்று முன்பே வந்ததால், தேநீர் வாங்கும் இடத்தில் சில புதிய முகங்கள் பளிச்சிட்டது. காலையில் பிள்ளைக்கு உடம்பு சரியில்லை அதனால் சமைக்க முடியவில்லை என சொல்லி கொண்டே ஒருவர் வெஜ் பப்ஸ் சாப்பிட்டு கொண்டு இருந்தாள். இரண்டு லைட் காப்பி  வாங்கி கொண்டு அலுவலகத்தின் வாசலுக்கு வரும் வரை அர்ச்சனா எதுவும் பேசவில்லை. எப்போதும் நாங்கள் அமரும் அந்த செயற்கை நீருற்றை ஒட்டிய கல்லில் அமர்ந்து கொண்டு காப்பி குடிக்க தொடங்கினோம். 

காப்பி உறியும் சத்தத்தை தவிர எந்த சத்தமும் உன்னிடம் இருந்து வரப் போவதில்லையா? என்றேன். 
முறைத்து பார்த்து விட்டு திரும்பி கொண்டாள்.  

நேத்து அவங்க வீட்ல இருந்து போன் வந்தது என்றாள். 

நான் அவளையே பார்த்தப்படி என்ன சொன்னாங்க? என்றேன். 

அந்த சொட்ட தலை மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்கலையாம். 

ஏன் என்னவாம்?. ஜாதகம் எல்லாம் பொருந்தி இருக்குனுதானே சொன்னாங்க முதல்ல 
ஆமாம், இப்போ வேற எதோ ஜாதககாருக்கிட்ட பார்த்தாங்கலாம், இந்த கல்யாணம் நடந்தா மாமியாருக்கு ஆகாதுன்னு சொல்லிட்டாராம். 

அதுக்கு ஏன் அவரு பிடிக்கலைனு சொன்னாருன்னு நினைச்சுக்கிற? 

அவங்க வீட்ல இருந்து வந்து ரெண்டு வாரத்துக்கு முன்ன பார்த்தப்ப எல்லாம் சரியாத்தான் இருந்தது. இவரு ரெண்டு நாளைக்கு முன்ன என்ன கோவில்ல பார்த்து பேசின பிறகு தான் இப்படி.  

அர்த்தம் பொதிந்த ஒரு மௌனத்துடன் நான் பார்த்து கொண்டே இருந்தேன். 

பொண்ணு கொஞ்சம் பூசினாப்ல இருக்குன்னு தரகர் அப்பாகிட்ட சொன்னத கேட்டேன் என்றாள். 

ஏன் உனக்கு என்ன, நல்லா  ஜோதிகா மாதிரி தான் இருக்க என்றேன். 

வெவ்வே என்று அழகு காட்டினாள். 

பாரு முகத்துல ரியாக்ஷன் கூட ஜோ மாதிரியே என்றேன். 

காலையில் இருந்து முதல் முறையாக சிரித்தாள்.  அமெரிக்காவில் இருந்து வர வேண்டியது, இங்க நாலு வாரத்துக்குள்ள நாலு ஐந்து பெண்களை பாக்க வேண்டியது, அதுல பெட்டறா ஒன்ன செலக்ட் பண்ணிக்கிட்டு  அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டும் போய்ட வேண்டியது என்றேன்.  
நீ ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி நடிக்காத, உனக்கு விசா இருக்கா என்றாள்.   

உனக்கு தெரியாதா, இந்த வருஷம் L1 விசா எதுவும் கிடைக்கல. 

அதான் வயத்து எரிச்சல்ல பேசற. 

சரி வா கிளம்பலாம், அடுத்த ப்ரேக் பசங்க கூப்பிடுவாங்க என்றேன். 

ஆமாம் ப்ரேக் வந்துட்டு, இருக்குற பொண்ணுங்களுக்கு செல்ல பேர் வைக்க வேண்டியது, இல்லை தரம் பிரிக்க வேண்டியது. 

ஏய் பின்ன, இத்தனை பேர் வேலை செய்ற இடத்துல எல்லா பெண்களுக்குமா பேர் தெரிஞ்சுக்க முடியும்.  அதான் நாங்களே ஒரு பேர் வச்சுக்கிறோம். அந்த பொண்ணு, இந்த பொண்ணுன்னு பேசனா புரியுமா? . 
அதற்குள் லிப்ட் வர,  மூன்றாவது மாடியை அழுத்தி விட்டு நின்றோம். அதற்குள் அவசர அவசரமாக ஒரு பெண் வந்து ஏறி இரண்டாவது மாடியில் இறங்கி போனாள். அவ பேரு தெரியுமா, ப்ரியாமணி என்றேன்.  
நிஜமான பேரா? 

இல்லை, ஆளு நல்லா இருப்பா பார்க்க ஆனா பேசுனா அச்சு அசல் ப்ரியாமணி மாதிரியே இருக்கும். 
போடா என்று என் தலையில் தட்ட லிப்ட் மூன்றாவது மாடியை தொட்டது.  

சூமூகமாகவே சென்ற இரண்டு நாள் கழித்து, மீண்டும் அதே நீருற்றின் அருகில் பேசி கொண்டிருந்தோம். ஒரே எரிச்சலா வருது என்றாள். ஆனா போன முறை போல இல்லை, இவன் ரெண்டு நாளிலேயே வேண்டாம்னு சொல்லிட்டான் என்றாள். எதுவும் பேசாமல் காப்பியை உதட்டருகே வைத்து கொண்டு அவள் பேசுவதையே கேட்டு கொண்டிருந்தேன்.  

பின்னால் கொட்டி கொண்டிருந்த நீரின் சலசலப்பின் தாளத்திற்கு ஏற்ப பேசி கொண்டே இருந்தாள். ஒவ்வொரு வாக்கியத்தையும் அவள் உதடுகள் ஆரமித்துவைக்க மெல்ல ஒரு சோகத்தோடு அவள் கண்கள் முடித்து வைத்தன. ஒண்ணு ரெண்டுனா பரவா இல்ல, இதோடு ஏழு ஆட்கள் தட்டி போய்டுச்சு என்று அவள் சொல்லி முடிக்கவும் அந்த நீருற்று நிறுத்தப்படவும் சரியாக இருந்தது.    
சடாரென்று அங்கு பரவிய மௌனம் ஒரு சங்கடத்தை அளித்தது, அவள் மெல்ல தன கண்களை துடைத்து கொண்டாள். 

உனக்கு என்ன பிடிச்சிருக்கா?  

என்ன?  

இல்லை என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? 

கண்கள் மேல் படர்ந்த நீர் திரையை மெல்ல விளக்கி என்னை பார்த்து, நிஜாமாவே சொல்றயா என்று மெல்ல ஒரு புன்னகை செய்து இது கற்பனையா என நான் கிள்ளி கொள்ள இருந்த என் கையைத் தொட்டாள். அவள் கையின் ஈரம் சில்லிட்டது.   

ஆமாம் என்று நான் எழ, அவளும் எழுந்தாள்.  

அவளது காலி கோப்பையை என் கையில் வாங்கி கொண்டு மேலே செல்ல லிப்ட் நோக்கி நடந்தோம்.

முந்தைய சிறுகதைகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 

Saturday, May 1, 2010

தயக்கம்

(வல்லினம் இணைய இலக்கிய இதழில் வெளியான எனது சிறுகதை.இந்த சுட்டியிலும்  காணலாம்)


ஓயாமல் கேட்டு கொண்டிருந்த இரைச்சல் நின்று, நீர் மெல்ல மெல்ல சொட்டும் ஒலி கேட்ட உடன் கிருஷ்ணன் எழுந்து கொண்டான். மாலை பயிற்சி வகுப்பில் இருந்து திரும்புகையில் வாங்கி வந்திருந்த ரொட்டியை சுற்றியிருந்த காகிதம் காற்றில் மெல்ல பட படத்து கொண்டு இருந்தது. இருட்டிலேயே துழாவி கண்டுபிடிக்கும் அளவிற்கு மின்விளக்கின் சுவிட்ச் இந்த மூன்று நாட்களில் பழக்கத்திற்கு வந்து விட்டு இருந்தது.

“மே மாதம், கேரளாவுக்கா? அதுவும் அலுவலக செலவிலேவா, ம்ம்ம் ஜமாய்” என்று அந்த கரு நாக்கு பையன் அறிவு எப்போ சொன்னானோ, வந்த மூன்று நாட்களாய் திருவனந்தபுர நகரமே இரவு மழையால் மிதந்து கொண்டு இருக்கிறது. ஜன்னலுக்கு வெளியே எட்டி பார்க்க, மழை நன்றாக மட்டு பட்டிருந்தது.

எட்டு மணியை கடந்து வினாடி முள் வேகமாக ஓடி கொண்டு இருக்க, என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். கடந்த மூன்று நாட்களாய் அவன் வைத்து கொண்டிருந்த அட்டவணை இன்று சற்று பிசகி விட்டு இருந்தது. ஐந்து மணிக்கு அலுவலகத்தில் பயிற்சி வகுப்பை முடித்து விட்டு, நாயர் கடையில் ஒரு தம்முடன் சாயா அருந்திவிட்டு (சொர்க்கம்) மான்சனுக்கு வர வர மழை வலுக்கும், மழையை சபித்து கொண்டே தெருமுனை பாக்கரியில் நான்கு ரொட்டி துண்டுகளை வாங்கி கொண்டு வந்துவிடுவான். தினம் பேச்சு கொடுத்து அந்த பாக்கரி முதலாளி கூட நல்ல பழக்கம் ஆகி இருந்தார். வந்த உடன் தூங்கி விட்டு, பத்து மணிக்கு மெல்ல எழுந்து ஜாமுடன் அந்த ரொட்டி துண்டுகளை விழுங்கி விட்டு பால்கனிக்கு போனால், மழை இப்போதுதான் கொட்ட தொடங்கியது போல கொட்டி கொண்டு இருக்கும். வாங்கி வந்திருந்த தம்மை ஆசை தீர இழுத்துவிட்டு வந்து படுத்து விடுவான்.

தினம் சபித்ததனாலோ என்னவோ இன்று எட்டு மணிக்கே எழ வேண்டியதாயிற்று. அவன் கண் முன்னால் பிரமாண்டமாய் விரிந்திருந்த இரவு சற்று அச்சமூட்ட தொடங்கியது. இடையில் களைந்து விட்டதனால் மீண்டும் தூங்கவும் வழி இல்லை. சடாரென கட்டிலில் இருந்து எழுந்து கைலியை நின்ற படியே கழட்டி விட்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் வெளிய செல்ல ஆயத்தமானான். மனிதர்களுடன் சகஜமாக பேசியே மூன்று நாட்கள் ஆகிறது. பயிற்சி வகுப்பிற்கு கூட வரும் அத்தனை பெரும் மலையாளிகள், அவர்கள் என்னமோ சகஜமாக பேச வருவது போலதான் உள்ளது. ஆனால், அவனுக்கு இந்த இடமும் ஊரும் மனதில் ஒட்டவில்லை. வாசலில் நின்றிருந்த விடுதி காப்பாளன் மெல்ல ஒரு புன்னகையை உதிர்த்தான்.

அவனையும் அந்த சாலகுழி தெருவின் அத்தனை குப்பைகளையும் அள்ளி சேர்த்து ஓடி கொண்டு இருந்த மழை நீரையும் பட்டும் படாமலும் கடந்து சாலையின் எதிர் புறம் அடைந்தான். இன்று இரவு உணவுக்கு அந்த காய்ந்து போன ரொட்டியை தின்ன வேண்டியதில்லை என நினைத்து கொண்டே பாக்கரியை நெருங்கி விட்டு இருந்தான். அந்த கடையும், அந்த முதாலளியையும் பார்த்து ஏனோ ஆத்திரமாக வந்தது, பழைய ரொட்டியை விக்கிறார்கள், இரவு பத்து மணிக்குள் "வரட்டி" போல ஆகிவிடுகிறது என எண்ணி கொள்ளவும், கடைக்காரர் "என்ன சாரே ஊனு கழிக்கவோ?" எனவும் சரியாக இருந்தது. ஹி ஹி ஆமாம் என சொல்லிவிட்டு, ச்சே அந்த கடைக்காரர் நல்லவர் தான், நாம் ஏன் திடீர் திடீர் என்று இப்படி கோவபடுகிறோம் என தலையில் தட்டி கொண்டான்.

தனியாக இப்படி சென்று, கடையில் காசு கொடுத்து சாப்பிட போகிறோம் என்ற உணர்வே அவனுக்கு சற்று உற்சாகம் தருவதாக இருந்தது. ஊரில் என்றால் அம்மா எப்படியும் சோறு கட்டி கொடுத்து விடுவாள், அதுவும் இல்லாமல் ஒரு பி.எஸ்.என்.எல் அலுவலக குமாஸ்தா ஓட்டலில் சென்று சாப்பிடுதல் தகாது. ஆனால் இப்போது அப்படி இல்லை, அலுவலகம் சேர்ந்த மூன்று மாதத்தில் பயிற்சி வகுப்பிற்கு சிபரசு செயப்படும் அளவிற்கு வளர்ந்தாகிவிட்டது, அதன் காரணமாய், நாள் ஒன்றுக்கு பேட்டவாக சுளையாக 140 ரூபாய். தனியாக இப்படி வீட்டை விட்டு வருவதும் நல்லதுதான் போல.

திருநெல்வேலி "அமுதா உணவகம்" என்ற பெயரை பார்த்து ஓட்டலுக்குள் சென்றான். சொகுசாக கை கழுவி கொண்டு வந்து, வைக்கப்பட்ட சுடுதண்ணியை மெல்ல உருஞ்சியவாறே விலையை பார்த்தான்.

"ஏன்னா சார் சாப்ட்றீங்க" என்ற சர்வரிடம், ஒரு நெய் தோசை என சொல்ல வாய் எடுத்தவன் ஒரு நொடி தயங்கி, இல்லை நண்பருக்காக காத்துட்டு இருக்கேன் என்றான். வைட்டார் சந்தேகத்துடன் பார்த்து விட்டு செல்ல, சிகரட் பத்த வைப்பது போல் வெளியே வந்து, அந்த சர்வர் பின்னால் தொடர்ந்து வருவது போலவே கற்பனை செய்து கொண்டு வெகு தூரம் வந்து விட்டிருந்தான்.

ராத்திரி கொள்ளையா இருக்கு, ஒரு தோசைக்கு 38 ரூபாயா. இதுக்கு பத்து ரூபாய்க்கு ஒரு முழு சாப்பாடே சாப்பிடலாமே என திருவனத்தபுரம் மருத்துவ கல்லூரியை ஒட்டி, அவன் பயிற்சி வகுப்பு நடக்கும் இடத்தில் இருந்த உணவு விடுதிக்கு சென்றான். பத்து ரூபாய்க்கு ஒரு முட்டை கறியும், முழு சாப்பாடும் சாப்பிட்டு விட்டு வந்தான். மணி ஒன்பதுதான் ஆகி இருந்தது, இன்னும் தூங்குவதற்கு எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அதுவரை நேரம் கழிக்க சிமன்ட் பெஞ்சில் அமர்ந்தான்.

மருத்துவமனையை ஒட்டிய இடம் என்பதால் மிக அமைதியாக இருந்தது. சிமின்ட் பெஞ்சை ஒட்டி நின்ற மரத்தின் இலைகள் ஊடே நிலவொளி வழிந்துகொண்டு இருந்தது. இலைகளின் அசைவுகளுக்கு ஏற்ப சாலையில் மாறி மாறி வரும் ஒளி சித்திரங்களை பார்த்தபடி அமர்ந்திருந்தான். “தம்பி தமிழா?” என பக்கத்துக்கு பெஞ்சில் இருந்து குரல் வந்தது. சற்று தடிமனான கண்ணாடியும், வெள்ளை வேட்டி சட்டையும் அணிந்து, நான் இந்த கட்சியோட மாவட்ட தலைவர் என்று சொன்னால் நம்பக்கூடிய அளவில் இருந்த அந்த மனிதர்தான் அப்படி கேட்டார்..

மெல்ல சிரித்து, "சார் தமிழா" என்றான்.

"இல்லை, நான் கன்யாகுமரியில ஆறு வருடம் வொர்க் செய்துட்டு உண்டு" என்றார். அந்த வொர்க்கை அவர் சொன்ன விதமே, அவர் தமிழ் இல்லை என அவனுக்கு புரிந்து
விட்டது.

"தம்பி மெடிக்கல் காலேஜா?"

"இல்லை சார், நான் இங்க அலுவலக பயிற்சி வகுப்புக்கு வந்திருக்கேன். இப்போதான் சேர்ந்தேன் மூணு மாசம் ஆச்சு, அப்பா வேலை எனக்கு வந்துடுச்சு அவர் இறந்துடதால" என்றான்.

"அது சரி, அதுதானே தம்பி ரொம்ப சின்ன பையனால இருக்கீங்க. இங்க எவட தாமசம்?"

லாட்ஜில் என்றான். சிகரட் என எழுந்து வந்து என் முன்னால் சிகரட் பெட்டியை நீட்டினார். இல்லை சார் வேண்டாம் பழக்கம் இல்லை என்றான்.

"உதடு கறுத்து இருக்கு, பழக்கம் இல்லைன்றீங்க?"

ஒரு அசட்டு சிரிப்பை வரவழைக்க முயல அதற்குள் அவர் மெல்ல அருகில் அமர்ந்து, அவன் தொடை மேல் கையை வைத்து, "தாழோட்ட வருதா" என்றார்.

அவன் உடம்பெல்லாம் சூடாக, ஒரு வித உதறலுடன் அவரை பார்க்க, அவர் உதடை குவித்து ஒரு செய்கை செய்து, "ம்ம்ம் வருதா?" என்றார்.

ஒரே ஒரு நிமிடம் தயங்கி, அவர் முகத்தை பார்த்து, கையைத் தூர தள்ளிவிட்டு திரும்பி பார்க்காமல் விறு விறுவென விடுதியை நோக்கி நடக்கத் துவங்கினான்.



முந்தைய சிறுகதைகள்  1 | 2 | 3 | 4 | 5 |

Monday, December 7, 2009

ரகசியம்

மத்தியானம் தூங்கி எழுந்த பின் ஏற்படும் கால குழப்பம் மிகவும் சிக்கலானது. அதுவும் அப்படி எழுந்த பொழுதுகளில் மழை பெய்து நின்றிருந்தால் முடிந்தது கதை. அது மாலை தான் என்று யார் வந்து சொன்னாலும் மனம் நம்ப மறுக்கிறது. பிடிவாதமாய், அது காலை வேளை என்றே தோன்றி கொண்டு இருக்கிறது. அதுவும் இல்லாமல் இந்த இரண்டாவது மாடியில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த தனி அறையில் யாரும் வந்து இது சாயங்காலந்தான் என்று என்னிடம் நிரூபிக்க போவதில்லை.

நான் மெல்ல இரண்டு மாடிகளில் ஒவ்வொரு படிக்கட்டுகளாய் எண்ணி கொண்டு கீழே வந்து சேர்ந்தேன். ஒவ்வொரு முறை எண்ணும் போதும் படிக்கட்டின் கணக்கு சரியாகவே வருவதில்லை. என் அப்பா வேலைக்காக நேர்முக தேர்விற்கு செல்கையில், அந்த அதிகாரி நீ ஏறி வந்த படிக்கட்டுகள் எத்தனை என்று கேட்டாராம், தான் சமயோசிதமாக அதை எண்ணி கொண்டு வந்ததால் தான் தனக்கு இந்த வேலை கிடைத்தது என ஆரமித்து அவரது ஆட்டோ பயோக்ராப்பியை துவங்கி விடுவார்.

அன்று மட்டும் அவர் தவறாக சொல்லி இருந்தால், நான் இப்படி படிக்கட்டுகளை எண்ணி கொண்டு இருந்திருக்கவே தேவை இல்லை. அவர் வேலையை பார்த்து தான் பெண் கொடுத்தார்களாம், அந்த வேலை கிடைக்காமல் போய் இருந்தால் என் அப்பா திருமணம் செய்து கொண்ட பெண் எனக்கு அம்மாவாக வர வாய்ப்பில்லாமல் போய் இருந்திருக்கும். அதாவது அசோக் என்ற ஒருவன் இந்த உலகத்தில் பிறப்பதற்கான சாத்திய கூறுகளே இல்லை. அனால் அவர் சரியாக எண்ணி விட்டார் நான் பிறந்து விட்டேன். சமீப காலமாக தான் இது போல சிந்தனைகள் வந்து சேர்க்கிறது. எல்லாம் இந்த பூரணனுடன் பழக ஆரமித்த பிறகு தான்.

உங்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இருந்திருந்தால் அவனுக்கு நூறு ஆயுசு என்றிருப்பீர்கள். நான் சென்று சேர்வதற்கு முன் அவன் குமார் கடையில் அமர்ந்து ஒரு கிங்க்ஸ் சிகரெட் புகைத்து கொண்டிருந்தான். அவன் எக்காரணம் கொண்டு வில்ஸ் வாங்க மாட்டான், கேட்டால் அது தன் அப்பா புகைக்கும் பிராண்ட் எனவும், அவருக்கு நான் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை அது எனவும் சொல்லுவான். இன்னும் நான்கு அடிகளில் நான் அவனை அடைந்து விடுவேன், அதற்கு முன் அவனை பற்றி….

வேலை வெட்டி எதுவும் இல்லாமல் (என்னை போலவே), கிடைக்கின்ற புத்தகங்களை எல்லாம் படித்து கொண்டு, வாய்ப்பு கிடைத்தால் உலகத்தின் போக்கையே மாற்றி விடுவேன் என என்னும் ஒரு சாதாரண டிப்ளோமோ ஹோல்டர். எப்போதும் ஒரு வெளிர் மஞ்சள் நிற சால்வையை கழுத்தை சுற்றி அணிந்திருந்தான்.. அந்த நிறத்திற்கு சற்றும் பொருத்தம் இல்லாத ஒரு பச்சை கட்டம் போட்ட சட்டையும், தண்ணியை தன் வாழ் நாளில் சந்திக்காத, சந்திக்க போகாத ஒரு ஜீனும் அணிந்திருந்தான்.

ஆனால் மேலே கூறிய வாக்கியங்களில் சற்று கிண்டல் தொனி இருப்பதாக நான் சந்தேகபடுகிறேன். நான் சொன்ன அளவுக்கு அவன் வெறும் லட்சியவாதி இல்லை. பல சமயங்களில் மிக யதார்த்தமாக பேசுவான், கன்னிமாரா நூலகத்தின் ஆயுட் கால உறுப்பினர். எப்போதாவது பெயரே புரியாத பத்திரிக்கையில் தான் எழுதிய கவிதை வந்திருப்பதாக வந்து படித்து காட்டுவான். நான் மூன்றாவது பத்தியில் சொன்னது கூட அவன் எனக்கு விளக்கிய வண்ணத்து பூச்சி விளைவுகள் என்னும் தத்துவத்தின் சாயலை தான்.

நான் வருவதை பார்த்த உடன் அவன் முகத்தில் ஒரு சொல்ல முடியாத சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. இப்போதே அது சற்று பீதியை கலப்ப தொடங்கியது. ஏதேனும் ஒரு புத்தகத்தை படித்தது விட்டு வந்து அதை விளக்குகிறேன் பேர்வழி என்று அவன் செய்யும் அட்டகாசங்கள் அளவிட முடியாதவை. மேலும் சமீபமாக அறிவியல் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு வேறு. போன வாரம் கூட ஆராய்ச்சிக்காக இந்தியா வந்த ஒரு ஜெர்மன் நாடு பேராசிரியர் உடன் மெரீனாவில் இரவு இரண்டு மணி வரை பேசி கொண்டிருந்தான்.

டேய், எப்ப வந்தே? என்றேன்.

இப்போதான் ரெண்டு நிமிஷம் ஆச்சு, ஒரு அற்புதமான விஷயத்தை உன்கிட்ட சொல்லத்தான் வந்தேன். அதுக்கு முன்ன என்ன நிதானபடுத்திக்க தான் இந்த கிங்க்ஸ் என்றான். நான் காப்பியும் பிஸ்கட்டும் சாப்பிடும் வரை ஒன்றும் பேசவில்லை. அமைதியாக இருந்துவிட்டு. முடிந்த உடன் என்னை இழுக்காத குறையாக என் அறைக்கு கொண்டு சென்றான்.

அறையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது, மழை பெய்து ஓய்ந்திருந்தமையால் எப்போதும் இருக்கும் அளவு புழுக்கம் இல்லை. ஒருவர் முகம் ஒருவருக்கு தெரியும் அளவு மெழுகு வத்தியை வெளிச்சம் சிந்த வைத்து விட்டு அவனை கூர்ந்து கவனிக்க தொடங்கினேன்.

அசோக், நான் சொல்ல போவது, நீ சாதரணமாக கவனித்தவையாக இருக்கலாம். ஆனால் அதன் உள்ளே இயங்கும் விஷயங்கள் நம்மை மீறியது என்றான்.

பீடிகை வேண்டாம் சொல்லு என்றேன்.

இளம் வயதிலேயே இறந்து விட்ட சிலரின் பெயர்களை சொல்லு பார்க்கலாம்.

ஏன், இது என்ன விளையாட்டா? அவங்கள உன் மூலமா பேச வைக்க போறியா?. என் வீட்டு பக்கத்துல….

முட்டாள் மாதிரி பேசாதே அசோக், இது ஆவி விஷயம் இல்ல. இளம் வயதில் இறந்து போன சில பிரபலங்களை பற்றி கேட்கிறேன். நானே சொல்கிறேன் பார் என்று சொல்ல தொடங்கினான்.

இயற்கையில் ஒரு தேர்ந்தெடுப்பு விதி இருக்கிறது.

டார்வின் தியரி சொல்லும், இயற்கையின் தேர்ந்தெடுப்பு என்னும் விதிதானே?. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் “Natural Selection“ . என்றேன்

ஒருவகையில் ஆமாம், ஆனால் அவை மட்டும் அல்ல, அது வெறுமே பௌதிக காரணங்கள் படி, வலியது வெல்லும் என்னும் வரையறைக்குள் அடங்கி விடுகிறது. நான் சொல்வது அதை விட ஆழமானது.

எனக்கு புரியவில்லை என்றேன்.

சரி, நான் சொல்வதை கேள். பூமியின் பூவி இருப்பு விசை என்பது பூமி உருவானதில் இருந்து இருக்கிறது அல்லவா?. அதே போல, மரத்தில் இருந்து ஆப்பிள் விழுவது என்பதும் அவை உருவான காலம் தொட்டே நிகழ்வது தானே. ஆனால் ந்யுட்டன் என்னும் மனிதனை இயற்கை தேர்ந்தெடுக்கும் வரை அந்த புவியீர்ப்பு விதி யாருக்கும் பிடிபடாமலே இருந்தது என்கிறேன்.

சற்று புரிவது போல் இருக்கிறது.

மேலும், இந்த இயற்கையின் தேர்ந்தெடுப்பு விதியும் அதன் தொடர்பான நிகழ்வுகளும் நமது மேலோட்டமான பார்வைக்கு மிக எளிதில் தப்பி விடுகிறது. உலகம் முழுக்க சராசரி மனிதர்களையே படைத்து விட்டு, தீடிரென்று அவர்கள் மத்தியில் ஒரு பிரபஞ்ச ரகசியத்தை வெளிக்கொணரும் ஒரு அறிவியலாளனோ இல்லை இலக்கியவாதியோ இல்லை வேறு துறையில் ஒருவனோ நிறுத்தபடுகின்றான். உலகும் முழுக்க அவனை கொண்டாடுகிறது, ஆனால் அவனின் தேர்ந்தெடுப்பு பற்றிய கேள்விகள் நமக்கு வருவதே இல்லை.

அவர்கள் வளர்ந்த விதம், அவர்களின் கல்வி ஆகியவற்றை சுலபமாக மறந்து விட்டு பேசுகிறாய் நீ என்றேன். சொல்லப்போனால் உன் விதிக்கு தகுந்தார் போல் நீ நிகழ்வுகளை வளைக்க பார்க்கிறாய்.

நான் சொல்வதை கவனிக்காமல் அவன் மேலும் தொடர்ந்தான். ஆனால் அசோக், இதில் உள்ள மிக பெரிய முரணை நினைத்தால் நீ மிகவும் ஆச்சரியப்படுவாய். இந்த தேர்ந்தெடுப்பையும் மீறி சில குரல்கள் ஒலித்து கொண்டே தான் இருந்திருக்கிறது வரலாறு தோறும். ஆனால் அவை எல்லாம் அப்பத்தமாக முடித்து வைக்க பட்டிருக்கிறது என்பதை நினைவு வைத்து கொள்.

தான் தேர்ந்தெடுத்த மனிதர்களையே தொடர்ந்து வரலாறு பேசுகிறது, தானாக உருவாகி வந்த ஆளுமைகள் ஓர் எல்லை வரை வந்த பின் அபத்தமாக முடித்து வைக்கப்பட்டிருகிறது. வேண்டுமானால் யோசித்து பார், இயற்கையை அறிய முயன்ற கீட்ஸ் என்னும் கவி தனது இருபத்தி ஆறாவது வயதில் மறித்து போனான். மானுட இரக்கத்தை நோக்கி கை நீட்டிய ஆனி பிரான்க் தனது பதின் வயதுக்குள்ளாகவே கொல்லப்பட்டாள். இசையின் மூலம் கடவுளை காட்டிய மொசார்ட் தனது முப்பதாறாவது வயதில் இறந்து போனான்.

நான் மெல்ல ஆர்வமாகி கவனிக்க துவங்கினேன்.

ஏன், நீ இங்கே நமது நாட்டிலேயே எடுத்து கொள்ளேன். கணித விதிகளின் சூத்திரங்களோடு விளையாடிய ராமனுஜன், துறவி விவேகானந்தர், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஆதவன் என்னும் நீளும் பட்டியல் இப்போது கோபி கிருஷ்ணன், ஆத்மா நாம் வரை வந்துள்ளது.

இவர்களை எல்லாம் தேர்ந்தெடுப்பு விதிகளின் எதிர் குரல்கள் என்கிறாயா? என்றேன்.

ஒரு விதத்தில் ஆமாம். ஒருவேளை அவர்கள் எதிர் குரல்களாக இருக்கலாம் இல்லை அவர்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டார்களோ அதில் இருந்து அவர்கள் விலகியதால் அவர்களுக்கு தரப்பட்ட தண்டனையாக கூட இருக்கலாம். அதாவது அவன் செய்ய வேண்டிய காரியங்களை மீறி அவன் செயல் பட துவங்கிய கணம், எங்கே தன் ரகசியங்கள் எல்லாம் உடனே வெளிப்பட்டு விடுமோ என இயற்கை நினைத்த கணம் அவர்கள் இருப்பு பூமியில் இருந்து மறைக்கப்பட்டது.

சரி, நீ சொல்வது படியே வைத்து கொண்டாலும் இதில் இருந்து என்ன நடந்து விடபோகிறது.

சராசரிகள் நோக்கி எனது கவனத்தை திருப்ப போகிறேன். இந்த தேர்ந்தெடுத்தல் விதியின் படி, வெற்றி பெற்றவர்களும் அதே சமயம் என் நோக்கில் தோல்வி அடைந்தவர்களும் கூட வரலாற்றில் எப்போதும் நினைக்க படுகின்றனர். ஐன்ஸ்டீன் புகழ் பெற்ற போதே, ராமானுஜனும் நிலை நிறுத்தப் பட்டது போல்.

என் ஆராய்ச்சி இப்படி புகழ் பெற்ற மனிதர்களின் வாழ்க்கையில் உள்ள ஒரு Pattern (வகைமாதிரி) உருவாக்குவது தான். அதற்காக நான் ஜெர்மன் செல்ல இருக்கிறேன், உனக்கு சொன்னேன் அல்லவே தாமஸ் அவர் அங்கே Date Mining துறையில் ஆராய்ச்சி செய்கிறார்.

இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றி பெற்றால், இதை வைத்து எந்த சராசரி மனிதனையும் ஒரு குறிப்பிட வகை மாதிரிக்குள் வாழ வைத்து இயற்கையின் தேர்ந்தெடுப்பு விதிக்குள் அவனை பொருத்தி விடுவேன். வரலாற்றில் இடம் பெற எத்தனை பெரும் பணக்கார்கள் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா?. கோவில் கட்டி, பொது நல சேவை செய்து…. பில்லியன் கணக்கில் பணம் புரள போகிறது. நான் சற்று அதிர்ச்சியாகி அவன் சொல்ல வந்ததை உள் வாங்கி கொள்ள முயன்று கொண்டிருந்தேன்.

நான் நாளை மாலை ஜெர்மன் கிளம்புகிறேன், இன்று இரவு தாமஸ் உடன் மெரினாவில் இது சமந்தமாக பேச வேண்டி உள்ளது என்று கிளம்பினான். கால குழப்பத்தோடு இவன் பேசி விட்டு போன குழப்பமும் சேர்ந்து கொள்ள இரவெல்லாம் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தேன்.

வழக்கம் போல காலை குமார் கடைக்கு சென்று காபி வாங்கி கொண்டு அமர்ந்தேன். எதிரில் இருப்பவர் வாய் விட்டு தந்தி படித்து கொண்டு இருந்தார்,

“நேற்று மெரீனா அருகே நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில், இருவர் உயிர் இழந்தனர். இதில் ஒருவர் ஜெர்மனை சார்ந்த தாமஸ் என அறியபடுகிறது. மற்றவரின் உடல் இன்னும் அடையாளம் காணபடவில்லை. அவருக்கு வயது இருபத்தைந்து இருக்கலாம் என கூறபடுகிறது. அவர் மஞ்சள் சால்வையும், பச்சை சட்டையும் அணிந்திருந்தார்…” என படித்து கொண்டே சென்றார். நான் அதிர்ச்சியில் முகம் எல்லாம் வேர்க்க அமர்ந்திருக்க, அவர் என் கையில் பேப்பரை கொடுத்து விட்டு,

‘எல்லாம் விதி தம்பி’ என சொல்லி சென்றார்.

முந்தைய சிறுகதைகள்  1 | 2 | 3 | 4 | 

Thursday, October 29, 2009

வலி

இன்று ஊருக்கு வருவதாய் நான் யாரிடமும் சொல்லவில்லை, இருந்தால் அம்மா நான் வரும் வரை தூங்காமல் விழித்து கொண்டு இருப்பாள். நான் கோவையில் இருந்து பேருந்து ஏறியது முதல் சரியாக நடத்துனர் ஊர் பெயர் சொல்வதற்கு முன்பு தொலைபேசிவிடுவாள். அவினாசி தாண்டியாச்சா? இன்னுமா பெருந்துறை வரலை?. சரி சங்ககிரி வந்துட்டு கூப்பிடு என ஒரு ஐந்து முறையாவது பேசிவிடுவாள். அதுவும் பேருந்து சிறிது தாமதம் என்றால், அவள் குரலே மாறி விடும், அதனாலேயே நான் அவளிடம் சொல்லவில்லை. இன்று கல்லூரியில் இருந்து கிளம்ப நேரமாகி விட்டது, அந்த தெர்மோடைனமிக்ஸ் ப்ரொபசர் கடைசி வகுப்பில் கழுத்து அறுத்து விட்டார்.

காந்திபுரம் சென்று அங்கிருந்து கிளம்பவே மணி 8 ஆகி விட்டது, எப்படியும் சேலம் போக மணி 12 என்றாலும், ஊத்தங்கரையில் வீடு போய் சேர 2 மணி ஆகிவிடும். அம்மா எத்தனை மணிக்கு படுத்தாலும் காலை ஆறு மணிக்கு எழுந்து விடுவாள். எப்படியும் நான் வந்த பின் ஒரு இரண்டு மணி நேரம் அவள் தூக்கம் கெடத்தான் போகிறது. கல்லூரியில் நடந்த ஒவ்வொன்றையும் அவளிடம் சொல்லாமல் எனக்கோ, வீட்டில் நடந்ததை என்னிடம் சொல்லாமல் அவளுக்கோ அந்த இரவு தூக்கம் கொள்ளாது. நான் நினைத்ததை போலவே, பேருந்து சற்று தாமதமாக தான் வந்து சேர்ந்தது.

ஊரில் லேசாக மழை பெய்து வடிந்து இருந்தது. எப்போதும் பேருந்து நிலையத்தை ஒட்டிய ஓலை கொட்டகையில் தூங்குபவர்கள், பேருந்து நிலைய கட்டிடத்திற்குள் ஒடுங்கி நின்றனர். இரவு ரோந்து வரும் காவலர்களும் அவர்களை ஒன்றும் சொல்லவில்லை. வீடு வந்து சேர்ந்த போது மணி மூன்று, அம்மாதான் கதவு திறந்தாள். கண்ணு என்று அணைத்து ஒரு முத்தமிட்டாள். நான் சற்று குனிய வேண்டி இருந்தது. ஏண்டா குட்டி ஒரு போன் பண்ண கூடாதா? என்றாள். நான் ஏன் பண்ணவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டிருப்பாள்.

நான் முகம் கழுவி வருவதற்குள், என் லுங்கியும் துண்டும் எடுத்து வைத்து விட்டு, தோசை வார்த்துக் கொண்டிருந்தாள்.

எதுவும் சாப்பிடலதானே?

இல்லை மா.

என்னா வயிறோடா உனக்கு?, பஸ்ல போறதுக்கு முன்ன சாப்டா கூட ஒத்துக்க மாட்டனுதே.

விடுமா பழகிடுச்சு.

ரூம்ல பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா? குமார் எப்படி இருக்கான்?

ம்ம்ம்… தோசை செம மா… எல்லாம் நல்லா இருக்காங்க.

அம்மா சற்று திரும்பையில்,

ஏம்மா இந்த கன்னம் கொஞ்சம் வீங்கின மாதிரி இருக்கு?

மெல்ல தொட்டு பார்த்து கொண்டு,

அதுவா இந்த கடவா பல்லுல இரண்டு நாளாவே வலி.

அப்பாட்ட சொன்னயா, எதாவது டாக்டரா பார்த்தாயா?.

இல்லை என்றாள். அப்பா எங்கள் யாரையும் டாக்டரிடம் அழைத்து சென்றதாய் நினைவு இல்லை, முக்கியமாய் அம்மாவை. ஆனால் எப்போது சொன்னாலும், உடனே காசு கொடுத்து விடுவார். எப்போதும் அதற்கு கணக்கு கேட்க மாட்டார். அவருக்கு ஏற்றார் போல், அம்மா உடம்பு சரி இல்லாமல் இருந்து நான் பார்த்ததே கிடையாது. இல்லை ஒருவேளை அப்படி இருந்த சமயங்களை நாசுக்காய் எனக்கு தெரியாமல் மறைத்து விட்டாலோ என்னவோ. ஆனால் அப்பாவிற்கு காய்ச்சலோ, இல்லை அந்த ஒற்றை தலை வலியோ வந்து விட்டால், வீடே ஒரு விதமான சோகத்தில் மூழ்கி விடும். வீட்டில் எல்லாருக்குமே சீக்கோ என்னும் அளவு.

எப்போதும் போல் அந்த சமயங்களில் என்னால் பேச முடிந்ததில்லை. அப்பா அந்த காவி நிற கம்பளியை சுற்றிய வண்ணமே இருப்பார். அப்போதும் அவருடைய வழக்கமான புகை பிடிக்கும் நேரம் தவறுவதே இல்லை. அவரிடம் எப்போதும் வரும் புகை நாற்றம் போல் இல்லாமல் அந்த நாளில் சற்று வேறு மாதிரி இருக்கும். அந்த சமயங்களில், அம்மா அவருக்கு கொடுக்க சொல்லும் சுடு தண்ணீரை கூட, வைத்த உடன் ஓடி வந்திருக்கிறேன். ஒருமுறை அவருக்கு வந்த சளி மூன்று வாரம் நீடித்தது, அப்போதெல்லாம் அப்பா வெளியே செல்வதே இல்லை. முடிந்தால் மாடியில் ஒரு 10 நிமிடம் நடந்து விட்டு வருவார்.

வருத்த வறுத்த கடலையும் கொஞ்சம் வெள்ளமும் வெல்லமும் சாப்பிடுவார். அப்பாவுக்கு என்னமா என்றதற்கு, டாக்டர் தம் அடிக்க கூடாதுன்னு சொல்லிட்டார், அதான் இப்படி சுத்தி சுத்தி வரார் என்றாள். அவள் சொன்னது போலவே, அப்பாவிடம் வரும் அந்த நாற்றம் வர வில்லை. அந்த நாளில் ஒரு முறை நானே அவருக்கு நெஞ்சில் தைலம் தேய்த்தது நினைவிருக்கிறது. ஆனால் அது மூன்று வாரம் தான்.

இப்போது கூட அம்மாவை நானே பார்த்து கேட்டிருக்காவிட்டால், பல் வலி பற்றி என்னிடம் சொல்லி இருக்க மாட்டாள். காலை எழுந்து குளித்து உடன், முதல் வேலையாய் அம்மாவை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றேன். பல்லில் ஒரு குழி இருக்கிறது என்று பரிசோதித்து விட்டு, சிமன்ட் பூச்சு ஒன்றை வைத்து அடைத்து விட்டார்கள். அம்மா வீடு வரும் வரை பல்லை நிரடி கொண்டே இருந்தாள்.

என்னமா?

இல்லை, ஏதோ பாக்கு பல் இடுக்குல மாட்டின மாதிரி இருக்கு என சொல்லி ஒரு பலவீனமான புன்னகை உதிர்த்தாள். வந்த உடன் வலி சற்று குறைந்திருந்தது. ஆனால் பல்லை நாவல் துழாவி கொண்டே இருந்தாள். என்ன என்றதற்கு ஒன்றும் சொல்லவில்லை. மதியம் சாப்பிடும் போதும் சரியாக சாப்பிடவில்லை. அடைக்க பட்ட அந்த சிமன்ட் பல்லின் அளவை விட சற்று அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தது. அதனால் மேல் பல்லோடு சேராமல், இடையில் ஒரு பாறை போல் மாட்டிகொண்டிருப்பதாக சொன்னாள்.

மதியம் அவளிடம் அதிகம் நான் பேச்சு கொடுக்கவில்லை, ஒவ்வொரு முறை வாய் அசைகையிலும் முகத்தில் வலி தெரிய ஆரமித்தது. மதியம் சாப்பிட வந்த அப்பாவிற்கு நானே உணவு எடுத்து வைத்தேன். மருத்துவமனை போய் வந்ததை சொன்னேன்.

எவ்வளவு ஆச்சு? என்றார்.

மாலை மீண்டும் அம்மாவை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றேன், அந்த டாக்டர் இல்லை, மற்றவர் பரிசோதித்து விட்டு, கொஞ்சம் அதிகமா வச்சுட்டாங்க கரைஞ்சா சரி ஆகிடும் என்றார். அம்மா வலி பொறுக்க முடியவில்லை, அதை கொஞ்சம் குறைச்சுடுங்க என்றார். அம்மாவின் வாய் நோக்கி வெளிச்சம் பாய்ச்சி, ஐந்து நிமிடத்தில் குறைத்து விட்ட பின் காலையில் இருந்து முதல் முறையாய் அம்மா சிரித்தாள்.

பல் வலி மட்டும் தாங்கவே முடியருது இல்லை சார், உயிரே போய்டுது. பத்து வருஷத்துக்கு முன்ன ஒரு முறை இப்படிதான், ஆனா இதை விட பயங்கர பல் வலி, தூக்கு போட்டுக்கவே போய்டேன்.

இப்போதான் உயிரே வந்த மாதிரி இருக்கு என்றாள்.

மருத்துவமனையில் பணம் செலுத்தி விட்டு வரையில்,

என்னமா தீடிர்னு இப்படி சொல்லிட்ட, தூக்கு போடுற அளவுக்கு, நீ போய் இருந்தா எங்க நிலைமை என்ன? என்றேன்.

அதனால தாண்டா குட்டி போட்டுக்கல என்றபடி நடக்க தொடங்கினாள். அன்று அப்பாவிடம் வலியைப் பற்றி சொன்னயாமா என கேட்க நினைத்து நிறுத்தி கொண்டேன்.

முந்தைய சிறுகதைகள்  1 | 2 | 3 |

Thursday, July 9, 2009

தண்ணீர் விழுதுகள்

சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு

அதிகாரம்: 83, கூடா நட்பு

குறள்: 821


காற்று அந்த புங்கை மரத்தின் தலைக்குள் கையை விட்டு எதையோ ஆரவாரமாய் தேடிகொண்டிருந்தது. தலையின் அசைப்புக்கு ஏற்றவாறு விழுந்து கொண்டிருந்த இலைகள் கல்லூரியையும் விடுதியையும் இணைக்கும் சாலையை மெல்ல மூடி கொண்டு இருந்தது. அந்த நீண்ட சாலையில் நானும் அவளும் மட்டும் நடந்து கொண்டிருந்தோம். நானும் அவளும் என்றால் ஒன்றாக இல்லை, ஒரு பத்து மீட்டர் இடைவெளி விட்டு. காற்றின் வேகம் அந்த இடைவெளியை குறைத்த வண்ணம் இருந்தது. நெஞ்ஜோடு அணைத்து கொண்டிருந்த அவளது புத்தகங்களின் ஒன்று கீழே விழுந்து என் கால் தடுக்கியது, பக்கங்களும், இமையும் ஒரு சேர அடித்து கொள்ள என்னை பார்த்தாள். அந்த கண்களின் மருட்சி அவளும் என்னைப் போல முதலாமாண்டு தான் என்றது. ஆனால் என் முகத்தின் மீசை அவளுக்கு அந்த நம்பிக்கையை அளிக்க வில்லை போலும். சாரி, தேங்க்ஸ் என ஏதோ சொல்லிவிட்டு ஒரு அவசர கணத்தில் மறைந்து போனாள்.

மறுநாள் அவளும் நானும் ஒரே வகுப்பில் தான் அமர்ந்திருந்தோம். நேற்றைய நிகழ்ச்சி எங்களுக்குள் பரஸ்பரம் எந்த சிநேகத்தையும் விதைத்து விடவில்லை. எனது சராசரி சிறுநகரத்து பின்னணியை மறந்து சகஜமாக நான் பழக ஆரமித்த ஒரு வாரத்திற்கு பின், காற்றின் அழுத்தத்தை பதிவு செய்யும் செய்முறை வகுப்பில் தான் அவள் என்னிடம் பேச துவங்கினாள். செய்முறை வகுப்பின் நான்கு பேர் கொண்ட குழுவில் மற்ற மூவரும் பெண்கள் . பெண்களிடம் பேசுவதோ, இல்லை பேசாமல் இருப்பதோ பற்றி எந்த வித முன் வரையறைகளும் இல்லாமல் இருந்த என்னிடம் இந்த கல்லூரி வாசம் ஏற்படுத்தியிருந்த ஓர் அனாவசிய கூச்சத்தை தொட்டு காட்டியபடி

நீ ஏன் அதிகம் பேசவே மாட்டேன்ற? என்றாள்.

“ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லை, ஹாஸ்டல எல்லாம் நல்லாத்தான் பேசுவேன்”

அப்ப எங்ககிட்ட எல்லாம் பேச மாட்டயா?

அப்படி இல்லை, இங்க வாய்ப்பு கம்மி இல்ல. இப்போதான் பிராக்ட்டிக்கல் க்ளாஸ் வர ஆரமிச்சி இருக்கு. இனிதான் பழக முடியும் அததான் சொல்றேன்.

அதற்குள் ஆவலுடன் மற்ற இருவர் சேர்ந்து விட்டனர்.

“இல்ல நம்ம க்ளாஸ் பசங்க பேசறதே இல்லை” என்றனர்.

“சரி நான் பசங்ககிட்ட சொல்றேன்” என்றேன்.

ஆனால் நான் விடுதியில் இதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. என் நண்பன் ஒருவன் “க்ரிஸ்” விளையாடலாம் என்றான். வகுப்பில் எல்லாருடைய பெயர்களையும் சீட்டுகளில் எழுதி போட்டு அவர் அவர் ஒரு சீட் எடுக்க வேண்டும். அதில் யார் பெயர் உள்ளதோ அவர்களை ஏதேனும் செய்ய சொல்லி மறைமுகமாய் சொல்ல வேண்டும். ஒரு வார காலம் நடக்கும் இந்த போட்டி முடிந்த உடன், அந்த க்ரிஸ் தோழனுக்கோ தோழிக்கோ ஏதேனும் பரிசு குடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டது.

எனது பெயர் என் நண்பன் அருணிடமும் அவளது பெயர் என்னிடமும் வந்தது.

“டேய் உனக்கு போய் நான் என்னடா அனுப்ப, அதான் அமுதா பேர் உனக்கு வந்து இருக்கு இல்ல, அவளுக்கு அனுப்புவோம் “

என அவளுக்கு நான் அனுப்புவது போல் ஒரு குறிப்பை அருண் அனுப்பி விட்டான்.

மறு நாள் அவள் வகுப்பின் முன் வந்து, “வகுப்பில் யார் அழகானவர்களோ அவர்களிடம் வந்து டைம் கேட்க வேண்டும்” என எழுதி இருப்பதை சொல்லி விட்டு சங்கோஜமாக நின்றாள். அரை மணி நேரம் கண்ணாடி முன் நின்று, Fair and Lovely போட்டு கொண்டு இருப்பதிலேயே புதிய சட்டையை அணிந்து கொண்டு வந்த அருணின் இருப்பு இப்போது சற்று ஞாயப்படுத்தப்பட்டதாக தோன்றியது. ஒருத்தரை விட்டுட்டு ஒருத்தரை எப்படி சொல்றது, எல்லார் கிட்டயும் கேட்டதாக வச்சுகங்க என சொல்லி சென்று விட்டாள். மரியாதை நிமித்தமாக அவளுக்கு பரிசு கொடுக்கும் பொறுப்பை மட்டும் எனக்கு வழங்கினான் அருண். ஒரு புத்தகம் வாங்கி பரிசளித்து விட்டு, அந்த குறிப்பை நான் எழுதலை என்றேன். தெரியும் என என்னை புரிந்த கொண்ட புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

பேசி கொண்டே இருப்பது எனது இயல்பு அல்ல. ஆனால் அதன் பின் ஏற்பட்ட சிற்சில சந்தர்ப்பங்களில் நான் தான் பேச துவங்கினேன். ஒரு சின்ன அசைவு மூலமோ, இல்லை மெல்லிய சீண்டல் மூலமோ, ஒரு குழந்தைத்தனம் கொஞ்சும் சிரிப்பு மூலமோ ஈர்க்கப்பட்டு அவளிடம் பேச துவங்கிவிடுவேன். வெறும் வார்த்தைகளை ஒன்று சேர்த்து. தேவைகேற்ப வாக்கியங்களை அமைத்து, பேசவேண்டுமே என்ற உந்துதலால் மட்டுமே பேசப்படும் பேச்சு. மெல்ல மெல்ல எந்த விதமான விஷயங்களுக்கு ஆதரவு கிடைக்கிறதோ, அதே விஷயங்களை வேறு வேறு வாக்கியங்கள் கொண்டு பேசினேன். பேச ஆரமித்த பின் அவள் கேட்பவளாக மட்டும் தான் இருந்தாள். நான் ஹைக்கூவைப் பற்றி பேசியது, பாஷோவை பற்றி பேசியது என அனைத்தையும் புதுமையாக கேட்டு கொண்டிருந்தாள்.

நான் அதிர்ந்து பேசும் விஷயங்களுக்கு, அவள் எப்போதும் மென்மையான பதில்களையே கொண்டிருந்தாள். தொடர்ந்த அவளது மென்மையான பதில்கள் ஒருவகையில் எரிச்சலைத் தந்தது, ஆனால் மீண்டும் அவளை நோக்கி வர அதுவே காரணமானது. பல சமயம் அவளிடம் பேசுகையில் அவளது செயல்கள் என்னை ஓர் கேலி சித்திரமாகவே உணர செய்தது. முக்கியமாக இது எல்லாம் ஒரு விஷயமா என்பது போல் அவள் பார்க்கும் பார்வை. ஆனால் அதை உணர்ந்து கொள்வதற்குள் என் பேச்சு வேறு பக்கம் திசை திரும்பி இருக்கும்.

மீண்டும் மீண்டும் அவளிடம் பேசுவதை தவிர்க்கவே முயன்றேன். மற்ற எல்லா சமயங்களிலும் அவளை புறக்கணிப்பது அவ்வளவு சிரமமாக இல்லை செய்முறை வகுப்புகளை தவிர. மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டு, ரீடிங் எடுத்து விட்டு வெட்டியாய் நிற்கும் பொழுதுகளில் பேசியே ஆக வேண்டிய கட்டாயம். நான் பேசாமல் இருந்த நாட்களில் அவளே கேட்பாள்,

“நீ ஏன் ஒரு மாதிரியா இருக்கே ?

ஒன்னும் இல்ல,

அன்னைக்கு இன்டெர்னல் பேப்பர் கொடுத்ததில இருந்தே நீ இப்படி தான் இருக்க!

இப்போது எனக்கு காரணம் கிடைத்துவிட்டது, அது பரவா இல்ல, நான் நல்லாத்தான் பண்ணேன் என்று அவளிடம் சால்ஜாப்பு சொல்லிகொள்ளலாம். அப்போதைக்கு அவள் மேல் இருந்த கோவம் வேறு பக்கம் திசை திருப்ப பட்டிருக்கும். நன்றாக படிக்க முயற்சி செய்து, ஆனால் சரியாக அது கை கூடாமல் மனம் வருந்தி நிற்பவனாக காட்டி கொள்வது சூழ்நிலையை சாதாரணமாக்கும். மீண்டும் அதே பேச்சு, தலை அசைப்பு வெற்று வார்த்தைகள். அவளிடம் பேசி கொண்டு இருக்கையில் ஏதோ ஓர் கணம் மீண்டும் என்னை கேலி சித்திரமாக உணர தொடங்கி விடுகிறேன். முக்கியமாக நான் அந்தரங்கமாக மதிக்கும் சில விஷயங்களை அவளிடம் சொல்லத் தொடங்குகையில்.

அதற்கு காரணம், சிரத்தை இல்லாமல் கவனிப்பது போன்ற முகபாவனையாக இருக்கலாம். இல்லை அவளிடம் இருந்து ஏதேனும் அந்தரங்கமான அல்லது அவளது மனதுக்கு நெருக்கமான விஷயங்களை சொல்வாள் என எதிர்பார்த்து பொய்த்து போன என் ஏமாற்றமாகவும் இருக்கலாம். ஏதோ ஓர் கணத்தில் அவளை என் தோழி என நம்பிவிட்டேன். வகுப்பில் முதல் முதலில் சந்தித்த பெண் அவள்தான் என்பதாலோ இல்லை என்னை பேச சொல்லி கேட்டவள் என்பதாலோ. வகுப்பிலேயே ஓரளவு அழகான பெண்ணுடன் தோழமையுடன் பழகுவது, என்னை சற்று நாகரிகமானவனாக காட்டும் என்று எண்ணியதாக கூட இருக்கலாம்.

கல்லூரி படிப்பின் இறுதியாண்டில் ஒருநாள் அமெரிக்காவில் மேற்படிப்பு முழு உதவித்தொகையுடன் கிடைத்துள்ளது என்றாள். கலக்குற ட்ரீட் எப்போ என்றேன், இது நான் அவளிடம் கேட்க்கும் மூன்றாவது ட்ரீட், அவள் பிறந்த நாளுக்கு ஒருமுறை, அவளது தம்பி மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்ததற்கு ஒருமுறை என. எப்போதும் போல, இப்போதும் சிரித்து விட்டு, தரேன் என்றாள்.

கடைசி இரண்டாண்டுகள் அருண் விடுதியில் தங்கவில்லை, வெளியில் ஓர் சிறிய அறை எடுத்து தங்கி இருந்தான். அவன் அறைக்கு எப்போதும் என்னை மட்டும்தான் அழைப்பான். அவன் அறைக்கு சென்று கொண்டிருந்த அந்த வெள்ளி இரவு, ஓர் இரு சக்கர வாகனம் வேகமாய் என்னை கடந்து சென்று சற்று தூரத்தில் நின்றது. வண்டியில் இருந்து இறங்கிய அருண்,

டேய் ரூம்கா வர, வா போகலாம், என்று கிளம்பிய சற்று நேரத்தில் மழை பெய்ய ஓர் ரோட்டோர டீ கடையில் ஒதுங்கினோம். ரெண்டு டீ என்றான். நான் அருகிலிருந்த ஆலமரத்தையே பார்த்துகொண்டிருந்தேன். மழை வலுவாக பெய்ய அராமித்தது.

எங்க போயிட்டு வர என்றேன்.

ஒரு ட்ரீட் போயிட்டு வந்தேன் டா,

என்ன ட்ரீட் ?

அதாண்டா நம்ம அமுதா யு.எஸ் போக போறா இல்ல, ஒரு வாரமா கூப்டுக்கிட்டு இருந்தா அதாண்.

எங்க ட்ரீட்?

காயத்ரி பவன்ல டா. அங்கதான் அவ தம்பி ஸ்டேட் பஸ்டுக்கும் ட்ரீட் தந்தா என்றான்.

ஆலமரத்தின் கிளைகளில் ஊர்ந்த மழை, தண்ணீர் விழுதுகளாக இறங்கி கொண்டிருந்தது.

முந்தைய சிறுகதைகள்  1 |

Wednesday, June 10, 2009

சிறுகதை : வெறுப்பு (உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

இன்னும் நான்கு மணி நேரத்தில் அலறப் போகும் தியேட்டரின் ஒலிபெருக்கி சத்தமோ, மூன்று மணி நேரத்தில் பள்ளிக்கு கிளம்பும் நந்துவின் பதற்றமோ இல்லாமல் அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீடு பனியில் உறைந்து இருந்தது. பனிசீலையை விலக்கி திறக்கப்பட்ட கதவின் கிரீச் மரக்கிளைகளில் இருந்த காக்கைகளை விரட்ட, கையில் ஒரு வாளி தண்ணீரோடு காயத்ரி தெருவில் இறங்கினாள். அரைகுறையாக கழுவப்பட்ட நெற்றியில் சாந்து திட்டு திட்டாய் பூசி இருந்தது. அடிக்கடி சரிந்து கொண்டு இருந்த நைட்டியின் தோளை, பந்து வீச போகும் பௌலர் போல சரி செய்தபடி தண்ணீரை வாசல் முழுதும் தெளித்தாள். தெருவில் யாரும் இல்லை என்பதை பார்த்துவிட்டு குனிந்து கோலம் போட்டு விட்டு உள்ளே செல்லவும்


காயத்ரி பால் வரலையா?


என்று தாமோதரன் கேட்கவும் சரியாய் இருந்தது, அந்த கேள்விக்கு அவன் பதில் எதிர்பார்க்க மாட்டான் என்பது அவளுக்கு தெரியும். அவனுக்கு தேவை காப்பி, அதுவும் பல் விலக்காமல் அப்படியே குடிக்கப் போகும் காப்பி. கதவில் மாட்டி இருந்த பிளாஸ்டிக் பையில் இருந்த பாலை எடுத்து கொண்டு சமையல் அறை நோக்கி சென்றாள். காப்பி போட்டு குடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர முயன்றாள். அவன் காப்பி குடிக்கையில் அங்கு இருக்க அவளுக்கு பிடிக்காது, அவன் காப்பி உறியும் சத்தம் அவளை என்னமோ செய்யும். அதை அவனிடம் இப்போது சொல்ல முடியாது.


காயத்ரி பசங்க எழுந்தாச்சா? என்றான்.


மணி ஆறுதான் ஆகுது 7க்கு எழுந்திடுவாங்க என்று சொல்லிக் கொண்டே சமையல் அறை நோக்கி சென்றாள்.


இன்று காலையிலையே ஒரு வெறுப்பு சூழ்ந்து கொண்டது, முடிந்தவரை தாமோதரனை வெறுக்காமல் இருக்கத்தான் முயற்சிக்கிறாள். ஆனால் முடிவதில்லை. அவன் இல்லை என்றால், அன்று வேறு யாரையாவது வெறுக்க வேண்டி இருக்கிறது. “பால் தண்ணியா இருந்தா பாக்கெட் பால் வாங்கிக்க, என்ற பால்காரியையோ, நேற்று கோலம் போடுகையில் தெருவை இரண்டு முறை கடந்த அந்த சைக்கிள்காரனையோ, சில சமயம் இவர்களிடம் எல்லாம் பட வேண்டி இருகிறதே என தன்னையோ. அந்த காட்சிகள் வெறுப்பை தூண்டுகிறதா இல்லை உள்ளிருக்கும் வெறுப்பு தனக்கான பிரத்யோக காட்சிகளை தேர்ந்தெடுத்து கொள்கிறதா என தெரியவில்லை.


ஆனால் எல்லா வெறுப்பையும் எல்லாராலும் வெளிப்படுத்திவிட முடிவதில்லை, நேற்று பிளஸ் டூ முடித்த தம்பி வீட்டிற்கு வந்தபோது, தாமோதரனாகத்தான் பேச்சை ஆரம்பித்து, “என்ன படிக்க போற?” என்றான். இன்ஜினியரிங் என்றவுடன், எத்தனை பேர் இன்ஜினியரிங் படிச்சிட்டு மாடு மேய்க்கிராங்க தெரியுமா, உலக பொருளாதாரமே பின்னடைஞ்சு கிடக்கு என்று அவரது உலக அறிவை அவன் மேல் தள்ளினான்.


“இல்லை அவனுக்கு அதான் பிடிக்குதாம்” என அவள் சொல்ல,


உனக்குதான் எல்லாம் தெரியுமா, அப்ப படிச்சிட்டு பேசறவன் எல்லாம் முட்டாளா? என்று அவளையும் திட்டி விட்டு சென்று விட்டான். அவளும் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை, சொல்ல முடியாது. அதன் பின் நேற்று முழுதும் அவன் சாதாரண அறிவுகூட இல்லாத மனிதர்களுக்கு எப்படி புரிய வைப்பது போன்ற பாவனையிலேயே இருந்தான். அது உள்ளே இருந்த எதையோ உமிழ்ந்து விட்டதின் சந்தோஷம் போலவும் அந்த குடும்பத்திலேயே அதிகம் படித்தவன் தான் தான் என நிருபித்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்ட மகிழ்ச்சி போலவும் இருந்தது.


மூன்று மாதத்திற்கு முன் இந்த வீட்டிற்க்கு வருகையில் இந்த வீடு பிடிக்கவில்லை, திரை அரங்கை ஒட்டிய வீடு என்று சொல்லும் ஜன்னல் வழி யூரியா வாசம், இந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை. முதலில் பிடிக்காமல் இருந்து வீடு தான், இப்போது பழக பழக பிடித்துவிட்டது. சில விஷயங்கள் பழக பழக பிடித்து விடுகிறது இல்லை பிடிப்பதாய் நினைத்து கொள்வது சந்தோஷமாக இருக்கிறது. இல்லை என்றால் இத்தனை பேர் இந்த தெருவில் வாழவில்லையா, உலகத்தில் கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லையா, இல்லை குழந்தை பெத்துக்க வில்லையா?. பிடித்தாய் நினைத்து கொள்வது ஒருவகையில் சமரசம் செய்து கொள்வது போல் தானே?.


சமரசங்கள் எப்போதும் இருபக்கமும் கொஞ்சம் சந்தோஷம் கொஞ்சம் கசப்பை விதைத்து விட்டுத்தான போகிறது. கொஞ்சம் கூட சந்தோஷம் தராத சமரசத்தை யார் ஏற்றுக் கொள்ள போகிறார்கள். காயத்ரி சிறு வயது முதலே நன்றாக பாடக் கூடியவள் தான், உள்ளூர் பாட்டு போட்டியில் பாடி வெற்றி பெற்று இருக்கிறாள், கல்யாணத்திற்கு பின் கூட நீ பாடலாம் என்று தான் முதலில் தாமோதரன் சொன்னான், ஆனால் ஒரு குழந்தை பிறந்த பின், நீ குழந்தைய பாத்துக்குவியா இல்லை பாடின்டு இருப்பியா என்று சொல்லிவிட்டான். அந்த சமரசத்தில் காயத்திரிக்கு கிடைத்த சந்தோஷம் நந்து, எப்போதாவது தொலைக்காட்சியில் பாட்டு போட்டி நடக்கையில் தாமோதரன் மீது வெறுப்பு.


தாமோதரனுக்கும் இப்படி இருக்குமோ என தெரியவில்லை, ஆனால் அவனுக்கு ஒன்றும் அவள் மேல் அப்படி ஒரு பெரிய ஒட்டுதல் இல்லை என்று அவளுக்கு தெரியும், எப்போதாவது குழந்தைகளை கொஞ்சுவான். அடிக்கடி அலுவலக சங்கத்தில் ஒரு கூட்டம் என்று சென்று விடுவான், பல நாட்கள் அந்த வீட்டில் கை குழந்தையை வைத்து கொண்டு தனியே தான் தூங்கி இருக்கிறாள்.


ஆனால் புகைப்பதை தவிர அப்படி ஒன்றும் பெரிய கெட்ட பழக்கம் இல்லை, சம்பள தேதி அன்று மட்டும் சீட்டு ஆடுவான், கல்யாணம் ஆன புதிதில், இப்போது அதுவும் இல்லை. இன்னும் கூட அவனுடைய சம்பளம் என்ன என்று அவளுக்கு தெரியாது, அது அவனது ஈகோவை தீண்டும் விஷயம் என நினைத்தானோ என்னவோ அவள் கேட்ட போது எல்லாம் உனக்கு வீட்டு நிர்வாகத்துக்கு மாசம் எவ்வளவு தேவையோ அதை மட்டும் கேள் என்று சொல்லிவிட்டான். ஆம் ப்ளடி ஈகோ, வெளியே போனால் நாலு பேர் மரியாதையை கொடுத்ததும் தலை மேல் ஏறிக் கொள்ளும் ஈகோ, வீட்டில் மனைவியின் மனசை நோகப் படுத்துவதைப் பற்றி யோசிக்காத ஈகோ.


மணி இப்போதே ஏழு ஆகிவிட்டது, நந்துவை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கடமை சூழ, “டேய் குட்டி எழுடா” என்று சொல்லி கொண்டே படுக்கையறைக்கு சென்றாள், ஏற்கனவே காவ்யா எழுந்து உட்காந்து கொண்டு இருந்தாள். காவ்யா எப்போது படுக்கையில் இருந்து எழுந்தாலும் அழுவது கிடையாது, எதையோ சொல்லி விடுவது போன்ற முகத்தை வைத்த வண்ணமே அமர்ந்திருப்பாள், இந்த 3 வயசுக்குள்ளே அவளுக்கு அப்படி ஒரு அறிவு, மனிதர்களை புரிந்து கொள்ளும் திறன். அவள் தன்னை போலவே உள்ளதாய் அடிக்கடி காயத்ரி நினைத்து கொள்வாள். முகத்தை சற்று கடு கடு என்று வைத்து கொண்டு ஒரு வார்த்தை சொல்லி விட்டாலே அழுது விடுவாள், நந்து அப்படி இல்லை, ஸ்கேலை கையில் எடுக்கும் வரை பார்த்து கொண்டு இருப்பான், கண்டிப்பாக நாம் அடிக்க போகிறோம் என்று உறுதியான பின் முழு மூச்சை பிடித்து கொண்டு அழ தொடங்குவான்.


அண்ணன் இன்னும் எழலயாடா என கேட்டு கொண்ட அவளிடம் வந்தாள், “ஆமாம் மா, இன்னும் தூங்குறான், கக்கா பையன்” என்றாள். இது அவள் சமீபத்தில் கற்று கொண்ட வார்த்தை, நேற்று பக்கத்துக்கு வீட்டு பையன் வந்து விளையாடி கொண்டு இருக்கையில் தான் முதலில் சொன்னாள். அவன் ஒவ்வொரு பேராக அவளிடம் சொல்லி கொண்டிருந்தான், முதலில் “அண்ணா” என்றான் அவள் “கக்கா பையன்” என்றாள், நான் என்றான் அதற்கும் “கக்கா பையன்“ என்றாள், ம்ம்ம், பாப்பா என்றதற்கு யோசித்து “நல்ல பொண்ணு” என்றாள்.


அவள் மீண்டும் அந்த வார்த்தையை சொன்னது, காலையில் இருந்து வந்த வெறுப்பை சற்று தனித்தது போல் இருந்தது. சமரசத்தின் சந்தோஷம்!. மெல்ல நந்துவையும் எழுப்பி பாத்ரூமிற்கு அனுப்பி விட்டு அவளை வராண்டாவில் விட்டு விட்டு சமையல் அறை சென்றாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் கையில் நிக்கரை தூக்கி கொண்டு வந்து அம்மா கழுவி விடு என்பான் நந்து, அதற்குள் அவள் காலை சமையலுக்கு காய் எல்லாம் எடுத்து வைத்து விட்டு போக வேண்டும். அவள்தான் இந்த குழந்தைகள் வேலை எல்லாம் செய்ய வேண்டும் தாமோதரன் அங்கேயே இருந்தாலும் செய்ய மாட்டான்.


அவள் காய் கூடையைத் திறந்து பார்க்கவும், நந்து வெளியே குரல் கொடுக்கவும் சரியாய் இருந்தது. இரண்டு முறை அம்மா அம்மா என்று கத்தினான், காய் கூடையில் எதுவும் இல்லை, காலை சமையலுக்கே காய் வேண்டும். அடுத்த தெருவிற்க்கு போய் தான் வாங்க வேண்டும், எப்படியும் இந்த நைட்டியோடே போக முடியாது. அதற்குள் மீண்டும் இரு முறை கத்திவிட்டான், அங்கேயே உட்கார்ந்து இருந்த தாமோதரன் தலையை கூட அசைக்கவில்லை, சமையல் அறையிலிருந்து வெளியே வந்து எதோ முணுமுணுத்து கொண்டே சென்று அவனுக்கு கால் கழுவி விட்டாள். அவள் சொல்லியது அவனுக்கும் கேட்டு இருக்கும் ஆனால் அவன் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. அதற்குள் சட்டையை மாட்டி கொண்டு எங்கோ கிளம்பினான் தாமோதரன்,


வழியில் விளையாடி கொண்டிருந்த காவ்யாவை தாண்டி வந்த காயத்ரி,


“வெளிய தானே போறீங்க, ஒரு கா கிலோ தக்காளியும், உருளையும் வாங்கிட்டு வந்துடுங்க” என்றாள்.


“வெளியே போகும் போது வேலை சொல்லாதேனு சொல்லி இருக்கேன் இல்ல?” என்றான்


“நைட்டியோட இருக்கும் நான் எப்படி போக முடியும், அவன் ஸ்கூலுக்கு நேரம் வேற ஆகுது” என்றாள்.


“வீட்லயும் எதையும் செய்யாதீங்க, இப்ப சொன்னாலும் திட்டுங்க” என்றாள்,


“சொல்லி கிட்டே இருக்கேன் கூட கூட பேசற” என சொல்லி கொண்டே அவன் ஒரு எட்டு வைத்து வந்தது தான் தெரியும், நிலை குலைந்து கதவில் இடித்து கொண்ட பின் தான் அவன் அடித்ததை உணர்ந்தாள்.


அவன் எதுவும் சொல்லாமல் விறு விறு வென செல்ல, அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த காவ்யா மெல்ல சிணுங்கி கொண்டே வந்து, அவள் கண்ணீரை துடைத்து விட்டு, “அப்பா கக்கா பையன் மா” என்றாள்.

-------------------------------------------------------------------------------------
உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை

http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html

முந்தைய சிறுகதைகள்  1 | 2 | 3 | 4 |

Saturday, April 25, 2009

நீங்களே சொல்லுங்கள்?

சூரிய ஒளியுடன் மோத பயந்து கண்ணாடிக்குள் ஒளிந்து இருந்த வாகன விளக்குகள் எல்லாம், மெர்குரி விளக்குகள் தந்த தைரியத்தில் உயிர் பெற தொடங்கியிருந்த ஒரு ஞாயிற்றுகிழமை மாலை வேளையில் நான் அந்த ரோட்டை கடப்பதற்க்காக நின்று கொண்டிருந்தேன். எதிர் பக்கம் கம்பத்தின் துணையில் நின்ற விளம்பர குடையின் கீழ் டிராபிக் போலீஸ் எழுந்திருக்க போகும் தோரணையில் உட்கார்ந்து இருந்தார். அவர் வெகு நேரமாக அப்படித்தான் உட்காந்திருப்பார் போல.


சரியாக வரிக்குதிரை பாதை வழி மறு முனைக்கு வந்து முன்னே நகர்ந்து சென்றேன்.மூன்று நிமிட நடையில் நான் ரயில் நிலைய வாசலை அடைந்து விட்டிருந்தேன். அங்கு இருந்த மெட்டல் டிடெக்டரிடம் என்னை ஒப்படைத்து வெளி வருகையில், “உன்னை எல்லாம் பார்த்தா குண்டு வைக்கிறவன் மாதிரியா இருக்கு போ”, என சொல்வது போல் ஒரு ஒலி அனுப்பி வைத்தது.


இன்னும் அரை மணி நேரத்திற்குள் நான் இரவு உணவை முடித்து கொண்டோ, இல்லை தேமே என கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து விட்டோ, பிளாட்பார்ம் எண் இரண்டிற்கு சென்றால் நாளை நான் கோவை சென்று விட முடியும் என மூன்று வெவ்வேறு மொழிகளில் ஒலிபெருக்கியில் ஒரு பெண் உறுதி அளித்து கொண்டிருந்தாள். என் கணிப்பு படி அவளுக்கு 30௦ வயது இருக்கலாம். முன் பல் சற்று எடுப்பாகவும் இருக்க கூடும்.

ஆனால் என் முன் வரிசையில் மூன்று சீட் தள்ளி அமர்ந்திருந்த இவள் என் ஊகத்திற்கு எல்லாம் இடம் அளிக்கவில்லை. தமிழ் நாட்டின் சராசரி நிறத்திற்க்கு சற்று கூடுதல். என்னோடு ஒட்டி நின்றால் நான் அவள் நெற்றியில் முத்தமிடும் அளவு உயரம். கன்னக் குழி, காதோரம் சுருண்ட முடி, உதட்டின் அலட்சியம் என அவள் மேல் இருந்த பார்வையை தவிர்க்க முடியாமல் போக இன்னும் பிற காரணங்கள்.

அவள் எழுந்து சென்ற உடன், அனிச்சையாக நானும் அவள் பின்னாலே சென்றேன். என்னை எந்த தர்மசங்கடத்திற்க்கும் ஆளாக்காமல் அவள் அங்கிருந்த புத்தக கடையை நோக்கித்தான் சென்றாள். நானும் அந்த சமயத்திற்கு எனக்கு தேவைப்பட்ட ஒரு இண்டலெக்சுவல் தோரணை அணிந்து கொண்டு அங்கில இதழ்களை புரட்டி கொண்டிருந்தேன். அந்த சமயம் அங்கில இதழ்களை புரட்டுவது ஒருவகையில் அவள் அழகுக்கு முன் எனக்கு ஏற்பட்ட சின்ன சறுக்கலை சரிப்படுத்தி கொள்ளவும், மேலும் அவள் என்னை பார்க்க நேர்ந்தால், நான் அவளை பார்க்காதது போல் முகத்தை புதைத்து கொள்ள ஏதுவாகவும் இருந்தது.

பின் என்ன நினைத்தாலோ தெரியவில்லை மீண்டும் சென்று அமர்ந்து விட்டாள். இதுவரை அணிந்திருந்த இண்டலெக்சுவல் தோரணைக்கு சாட்சியான அந்த கடைக்காரனிடம் 15 ருபாய் கொடுத்து ஒரு ஆங்கில இதழ் வாங்கி வந்தேன். இப்போது அவள் நான் இருந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தாள், நான் எந்த வித சலனமும் இல்லாமல் வாங்கி வந்த புத்தகத்தை புரட்ட தொடங்கினேன்.


சற்று தள்ளி இருக்கையில் அவளை பார்த்ததில் ஒரு சுவாரசியம் இருந்தது, ஒருவேளை அவள் வேறு யாரையோ பார்த்து சிரித்தாலோ கை அசைத்தாலோ நம்மை பார்ப்பதாக ஒரு கற்பனை பண்ணி கொள்ளலாம். அருகில் அமர்ந்த பின் பார்ப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது, ஆனால் இப்போதும் எங்களை கடந்து போவோர் எங்களை பார்க்கையில் என்னை அவளது தோழனாகவோ இல்லை காதலனாகவோ நினைத்து பார்க்கும் விரோத பார்வையும், “கொடுத்த வச்சவன்டா நீ” என்ற ரீதியில் கடந்து போவதும் மெல்ல ஒரு குறுகுறுப்பை உணரத்தான் செய்தது.


“எஸ்க்யூஸ் மீ” என அவள் தான் பேச்சை தொடங்கினாள்


“எஸ்” என்றேன்


“ஐ அம் நீரஜா”


“ஐ அம் ராஜேஷ்” என பரஸ்பரம் அறிமுக படுத்தி கொண்டோம்.


என்ன படிக்கறீங்க? என்றாள்,


“தி வீக் இதழ்” என்றேன்,


ஒ!, நான் அதை கேட்கவில்லை, எந்த காலேஜ்” என்றாள்,


“ஐ அம் என் எம்ப்லாயி”, என நான் வேலை செய்யும் அலுவலக பெயர் சொன்னேன், நம்பாமல் , டிக்கெட் கொடுங்க, உங்க வயசு என்ன? என்றாள்,


பர்சிலிருந்த டிக்கெட் ஐ கொடுத்த உடன் பார்த்து விட்டு, யு லுக் சோ எங்!! என்றாள். டிக்கெட் ஐ வாங்கி என் மேல் பாக்கெட்டில் வைத்து கொண்டேன்.


அதன் பின் எங்களின் ஐந்து நிமிட உரையாடலை நீங்கள் கேட்டிருந்தால் , நாங்கள் இருவரும் கோவை போவதும், அந்த புத்தக கடையில் அவள் கேட்ட புத்தகம் இல்லாததும், “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என அவளிடம் சொன்ன 16வது ஆள் நான் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.


படிக்க எதாவது நல்ல சுவாரசியமான புத்தகம் இருகிறதா என்றாள், குனிந்து என்னுடைய பையில் புத்தகத்தை துழாவி கொண்டு இருந்தேன், அப்போதும் ஓர பார்வையில் அவள் என்னை பார்க்கிராளா என்பதை பார்க்க தவறவில்லை.


கடைசியில் ஒரு புத்தகம் எடுத்து கொடுத்த உடன்,


“தேங்க்ஸ், நானே வச்சுகிட்டமா? என சிரித்து கொண்டே கேட்டாள், அந்த சிரிப்புடன் அவள் கேட்டால் சொத்தையே எழுதி தந்து இருப்பேன். புத்தகம் தானே என “அன்புடன் ராஜேஷ்” என கை எழுத்து இட்டு போன் நம்பர் எழுதி கொடுத்தேன்.


நேரம் ஆகி விட பிளாட்பார்ம் நோக்கி நடக்க தொடங்கினோம், நீங்கள் எந்த கோச் என்றாள் S2 என்றேன், நான் S11 என்றாள்.


“பார்க்கலாம்” என்று சொல்லி சென்று விட்டாள்,


எப்போ? என கேக்க நினைத்து நிறுத்தி கொண்டேன்.


வண்டி நகர துவங்கியது, பரிசோதகரிடம் டிக்கெட் ஐ கொடுத்து பரிசோதனை முடித்து படுக்க போகும் முன், என் பேண்ட் பாக்கெட் ஐ தொட்டு பார்த்தேன். ”என் பர்சை காணவில்லை”.


புத்தக கடையில் இருந்தது, அவளிடம் டிக்கெட் எடுத்த காட்டும் போது இருந்தது. ஒருவேளை அவள்???,


புத்தக கடையில் பார்த்து, லாவகமாக பேசி பர்சை எடுக்க வைத்து, டிக்கெட் ஐ நான் மேல் பாக்கெட்டில் வைத்து. குனிந்து புத்தகம் எடுக்கையில் .


ச்சே ச்சே இருக்காது!!


அதற்குள் வண்டி அடுத்த ஸ்டேஷனில் நின்றது - நிற்க!!


நான் S11 கோச்சிற்கு போய் பார்க்கவா வேண்டாமா?