இன்னும் நான்கு மணி நேரத்தில் அலறப் போகும் தியேட்டரின் ஒலிபெருக்கி சத்தமோ, மூன்று மணி நேரத்தில் பள்ளிக்கு கிளம்பும் நந்துவின் பதற்றமோ இல்லாமல் அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீடு பனியில் உறைந்து இருந்தது. பனிசீலையை விலக்கி திறக்கப்பட்ட கதவின் கிரீச் மரக்கிளைகளில் இருந்த காக்கைகளை விரட்ட, கையில் ஒரு வாளி தண்ணீரோடு காயத்ரி தெருவில் இறங்கினாள். அரைகுறையாக கழுவப்பட்ட நெற்றியில் சாந்து திட்டு திட்டாய் பூசி இருந்தது. அடிக்கடி சரிந்து கொண்டு இருந்த நைட்டியின் தோளை, பந்து வீச போகும் பௌலர் போல சரி செய்தபடி தண்ணீரை வாசல் முழுதும் தெளித்தாள். தெருவில் யாரும் இல்லை என்பதை பார்த்துவிட்டு குனிந்து கோலம் போட்டு விட்டு உள்ளே செல்லவும்
காயத்ரி பால் வரலையா?
என்று தாமோதரன் கேட்கவும் சரியாய் இருந்தது, அந்த கேள்விக்கு அவன் பதில் எதிர்பார்க்க மாட்டான் என்பது அவளுக்கு தெரியும். அவனுக்கு தேவை காப்பி, அதுவும் பல் விலக்காமல் அப்படியே குடிக்கப் போகும் காப்பி. கதவில் மாட்டி இருந்த பிளாஸ்டிக் பையில் இருந்த பாலை எடுத்து கொண்டு சமையல் அறை நோக்கி சென்றாள். காப்பி போட்டு குடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர முயன்றாள். அவன் காப்பி குடிக்கையில் அங்கு இருக்க அவளுக்கு பிடிக்காது, அவன் காப்பி உறியும் சத்தம் அவளை என்னமோ செய்யும். அதை அவனிடம் இப்போது சொல்ல முடியாது.
காயத்ரி பசங்க எழுந்தாச்சா? என்றான்.
மணி ஆறுதான் ஆகுது 7க்கு எழுந்திடுவாங்க என்று சொல்லிக் கொண்டே சமையல் அறை நோக்கி சென்றாள்.
இன்று காலையிலையே ஒரு வெறுப்பு சூழ்ந்து கொண்டது, முடிந்தவரை தாமோதரனை வெறுக்காமல் இருக்கத்தான் முயற்சிக்கிறாள். ஆனால் முடிவதில்லை. அவன் இல்லை என்றால், அன்று வேறு யாரையாவது வெறுக்க வேண்டி இருக்கிறது. “பால் தண்ணியா இருந்தா பாக்கெட் பால் வாங்கிக்க, என்ற பால்காரியையோ, நேற்று கோலம் போடுகையில் தெருவை இரண்டு முறை கடந்த அந்த சைக்கிள்காரனையோ, சில சமயம் இவர்களிடம் எல்லாம் பட வேண்டி இருகிறதே என தன்னையோ. அந்த காட்சிகள் வெறுப்பை தூண்டுகிறதா இல்லை உள்ளிருக்கும் வெறுப்பு தனக்கான பிரத்யோக காட்சிகளை தேர்ந்தெடுத்து கொள்கிறதா என தெரியவில்லை.
ஆனால் எல்லா வெறுப்பையும் எல்லாராலும் வெளிப்படுத்திவிட முடிவதில்லை, நேற்று பிளஸ் டூ முடித்த தம்பி வீட்டிற்கு வந்தபோது, தாமோதரனாகத்தான் பேச்சை ஆரம்பித்து, “என்ன படிக்க போற?” என்றான். இன்ஜினியரிங் என்றவுடன், எத்தனை பேர் இன்ஜினியரிங் படிச்சிட்டு மாடு மேய்க்கிராங்க தெரியுமா, உலக பொருளாதாரமே பின்னடைஞ்சு கிடக்கு என்று அவரது உலக அறிவை அவன் மேல் தள்ளினான்.
“இல்லை அவனுக்கு அதான் பிடிக்குதாம்” என அவள் சொல்ல,
உனக்குதான் எல்லாம் தெரியுமா, அப்ப படிச்சிட்டு பேசறவன் எல்லாம் முட்டாளா? என்று அவளையும் திட்டி விட்டு சென்று விட்டான். அவளும் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை, சொல்ல முடியாது. அதன் பின் நேற்று முழுதும் அவன் சாதாரண அறிவுகூட இல்லாத மனிதர்களுக்கு எப்படி புரிய வைப்பது போன்ற பாவனையிலேயே இருந்தான். அது உள்ளே இருந்த எதையோ உமிழ்ந்து விட்டதின் சந்தோஷம் போலவும் அந்த குடும்பத்திலேயே அதிகம் படித்தவன் தான் தான் என நிருபித்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்ட மகிழ்ச்சி போலவும் இருந்தது.
மூன்று மாதத்திற்கு முன் இந்த வீட்டிற்க்கு வருகையில் இந்த வீடு பிடிக்கவில்லை, திரை அரங்கை ஒட்டிய வீடு என்று சொல்லும் ஜன்னல் வழி யூரியா வாசம், இந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை. முதலில் பிடிக்காமல் இருந்து வீடு தான், இப்போது பழக பழக பிடித்துவிட்டது. சில விஷயங்கள் பழக பழக பிடித்து விடுகிறது இல்லை பிடிப்பதாய் நினைத்து கொள்வது சந்தோஷமாக இருக்கிறது. இல்லை என்றால் இத்தனை பேர் இந்த தெருவில் வாழவில்லையா, உலகத்தில் கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லையா, இல்லை குழந்தை பெத்துக்க வில்லையா?. பிடித்தாய் நினைத்து கொள்வது ஒருவகையில் சமரசம் செய்து கொள்வது போல் தானே?.
சமரசங்கள் எப்போதும் இருபக்கமும் கொஞ்சம் சந்தோஷம் கொஞ்சம் கசப்பை விதைத்து விட்டுத்தான போகிறது. கொஞ்சம் கூட சந்தோஷம் தராத சமரசத்தை யார் ஏற்றுக் கொள்ள போகிறார்கள். காயத்ரி சிறு வயது முதலே நன்றாக பாடக் கூடியவள் தான், உள்ளூர் பாட்டு போட்டியில் பாடி வெற்றி பெற்று இருக்கிறாள், கல்யாணத்திற்கு பின் கூட நீ பாடலாம் என்று தான் முதலில் தாமோதரன் சொன்னான், ஆனால் ஒரு குழந்தை பிறந்த பின், நீ குழந்தைய பாத்துக்குவியா இல்லை பாடின்டு இருப்பியா என்று சொல்லிவிட்டான். அந்த சமரசத்தில் காயத்திரிக்கு கிடைத்த சந்தோஷம் நந்து, எப்போதாவது தொலைக்காட்சியில் பாட்டு போட்டி நடக்கையில் தாமோதரன் மீது வெறுப்பு.
தாமோதரனுக்கும் இப்படி இருக்குமோ என தெரியவில்லை, ஆனால் அவனுக்கு ஒன்றும் அவள் மேல் அப்படி ஒரு பெரிய ஒட்டுதல் இல்லை என்று அவளுக்கு தெரியும், எப்போதாவது குழந்தைகளை கொஞ்சுவான். அடிக்கடி அலுவலக சங்கத்தில் ஒரு கூட்டம் என்று சென்று விடுவான், பல நாட்கள் அந்த வீட்டில் கை குழந்தையை வைத்து கொண்டு தனியே தான் தூங்கி இருக்கிறாள்.
ஆனால் புகைப்பதை தவிர அப்படி ஒன்றும் பெரிய கெட்ட பழக்கம் இல்லை, சம்பள தேதி அன்று மட்டும் சீட்டு ஆடுவான், கல்யாணம் ஆன புதிதில், இப்போது அதுவும் இல்லை. இன்னும் கூட அவனுடைய சம்பளம் என்ன என்று அவளுக்கு தெரியாது, அது அவனது ஈகோவை தீண்டும் விஷயம் என நினைத்தானோ என்னவோ அவள் கேட்ட போது எல்லாம் உனக்கு வீட்டு நிர்வாகத்துக்கு மாசம் எவ்வளவு தேவையோ அதை மட்டும் கேள் என்று சொல்லிவிட்டான். ஆம் ப்ளடி ஈகோ, வெளியே போனால் நாலு பேர் மரியாதையை கொடுத்ததும் தலை மேல் ஏறிக் கொள்ளும் ஈகோ, வீட்டில் மனைவியின் மனசை நோகப் படுத்துவதைப் பற்றி யோசிக்காத ஈகோ.
மணி இப்போதே ஏழு ஆகிவிட்டது, நந்துவை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கடமை சூழ, “டேய் குட்டி எழுடா” என்று சொல்லி கொண்டே படுக்கையறைக்கு சென்றாள், ஏற்கனவே காவ்யா எழுந்து உட்காந்து கொண்டு இருந்தாள். காவ்யா எப்போது படுக்கையில் இருந்து எழுந்தாலும் அழுவது கிடையாது, எதையோ சொல்லி விடுவது போன்ற முகத்தை வைத்த வண்ணமே அமர்ந்திருப்பாள், இந்த 3 வயசுக்குள்ளே அவளுக்கு அப்படி ஒரு அறிவு, மனிதர்களை புரிந்து கொள்ளும் திறன். அவள் தன்னை போலவே உள்ளதாய் அடிக்கடி காயத்ரி நினைத்து கொள்வாள். முகத்தை சற்று கடு கடு என்று வைத்து கொண்டு ஒரு வார்த்தை சொல்லி விட்டாலே அழுது விடுவாள், நந்து அப்படி இல்லை, ஸ்கேலை கையில் எடுக்கும் வரை பார்த்து கொண்டு இருப்பான், கண்டிப்பாக நாம் அடிக்க போகிறோம் என்று உறுதியான பின் முழு மூச்சை பிடித்து கொண்டு அழ தொடங்குவான்.
அண்ணன் இன்னும் எழலயாடா என கேட்டு கொண்ட அவளிடம் வந்தாள், “ஆமாம் மா, இன்னும் தூங்குறான், கக்கா பையன்” என்றாள். இது அவள் சமீபத்தில் கற்று கொண்ட வார்த்தை, நேற்று பக்கத்துக்கு வீட்டு பையன் வந்து விளையாடி கொண்டு இருக்கையில் தான் முதலில் சொன்னாள். அவன் ஒவ்வொரு பேராக அவளிடம் சொல்லி கொண்டிருந்தான், முதலில் “அண்ணா” என்றான் அவள் “கக்கா பையன்” என்றாள், நான் என்றான் அதற்கும் “கக்கா பையன்“ என்றாள், ம்ம்ம், பாப்பா என்றதற்கு யோசித்து “நல்ல பொண்ணு” என்றாள்.
அவள் மீண்டும் அந்த வார்த்தையை சொன்னது, காலையில் இருந்து வந்த வெறுப்பை சற்று தனித்தது போல் இருந்தது. சமரசத்தின் சந்தோஷம்!. மெல்ல நந்துவையும் எழுப்பி பாத்ரூமிற்கு அனுப்பி விட்டு அவளை வராண்டாவில் விட்டு விட்டு சமையல் அறை சென்றாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் கையில் நிக்கரை தூக்கி கொண்டு வந்து அம்மா கழுவி விடு என்பான் நந்து, அதற்குள் அவள் காலை சமையலுக்கு காய் எல்லாம் எடுத்து வைத்து விட்டு போக வேண்டும். அவள்தான் இந்த குழந்தைகள் வேலை எல்லாம் செய்ய வேண்டும் தாமோதரன் அங்கேயே இருந்தாலும் செய்ய மாட்டான்.
அவள் காய் கூடையைத் திறந்து பார்க்கவும், நந்து வெளியே குரல் கொடுக்கவும் சரியாய் இருந்தது. இரண்டு முறை அம்மா அம்மா என்று கத்தினான், காய் கூடையில் எதுவும் இல்லை, காலை சமையலுக்கே காய் வேண்டும். அடுத்த தெருவிற்க்கு போய் தான் வாங்க வேண்டும், எப்படியும் இந்த நைட்டியோடே போக முடியாது. அதற்குள் மீண்டும் இரு முறை கத்திவிட்டான், அங்கேயே உட்கார்ந்து இருந்த தாமோதரன் தலையை கூட அசைக்கவில்லை, சமையல் அறையிலிருந்து வெளியே வந்து எதோ முணுமுணுத்து கொண்டே சென்று அவனுக்கு கால் கழுவி விட்டாள். அவள் சொல்லியது அவனுக்கும் கேட்டு இருக்கும் ஆனால் அவன் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. அதற்குள் சட்டையை மாட்டி கொண்டு எங்கோ கிளம்பினான் தாமோதரன்,
வழியில் விளையாடி கொண்டிருந்த காவ்யாவை தாண்டி வந்த காயத்ரி,
“வெளிய தானே போறீங்க, ஒரு கா கிலோ தக்காளியும், உருளையும் வாங்கிட்டு வந்துடுங்க” என்றாள்.
“வெளியே போகும் போது வேலை சொல்லாதேனு சொல்லி இருக்கேன் இல்ல?” என்றான்
“நைட்டியோட இருக்கும் நான் எப்படி போக முடியும், அவன் ஸ்கூலுக்கு நேரம் வேற ஆகுது” என்றாள்.
“வீட்லயும் எதையும் செய்யாதீங்க, இப்ப சொன்னாலும் திட்டுங்க” என்றாள்,
“சொல்லி கிட்டே இருக்கேன் கூட கூட பேசற” என சொல்லி கொண்டே அவன் ஒரு எட்டு வைத்து வந்தது தான் தெரியும், நிலை குலைந்து கதவில் இடித்து கொண்ட பின் தான் அவன் அடித்ததை உணர்ந்தாள்.
அவன் எதுவும் சொல்லாமல் விறு விறு வென செல்ல, அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த காவ்யா மெல்ல சிணுங்கி கொண்டே வந்து, அவள் கண்ணீரை துடைத்து விட்டு, “அப்பா கக்கா பையன் மா” என்றாள்.
-------------------------------------------------------------------------------------
உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை
http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html
முந்தைய சிறுகதைகள் 1 | 2 | 3 | 4 |
No comments:
Post a Comment