Wednesday, April 14, 2010

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ?கண் பார்வையற்றவர்கள் உலகை கற்பனை செய்வது சற்று கடினமானது. நாம் சர்வ சாதரணமாக கடந்து விட கூடிய சாலை, பழக்கத்தினால் குதித்து குதித்து இறங்கும் படிக்கட்டுகள் அவர்கள் உலகில் மிகுந்த முக்கியத்துவம் கொள்கின்றன. அவர்கள் கையில் துணைக்கு இருக்கும் குச்சி அவர்களின் விரல்கள் எனவே மாறிவிட்டு இருக்கின்றது. அந்த குச்சிகளை தட்டி கொண்டு அவர்கள் நடக்கும் போது கீழே விழுந்த எதையோ தன் விரல்களால்  தேடுபவர்கள் போலவே தெரிகின்றனர். நாம் பார்வையால் தவற விட்டு கொண்டே இருப்பவற்றை அவர்கள் நுண்ணர்வால் உணர்ந்து கொண்டே இருக்கின்றனர்.


நம்மை போல கண்ணாடி முன் நின்று நமது வெவ்வேறு முக அசைவுகளை அவர்கள் குறிப்பு எடுத்து கொள்வதில்லை. கோபமோ வெறுப்போ அழுகையோ வருகையில் நம் மனம் எப்படி கோணலாகுமோ அப்படியே அவர்களின் முகங்களில் பிரதிபலிக்கிறது. நமது திரைப்படங்களில் அவர்கள் மேல் உருவாக்கப்படும் "அச்ச்சோ பாவம்" வகையறா போலி மனிதாபிமான உணர்சிகளை தூண்டும் காட்சிகளை மீறி அவர்களின் அகத்தை பதிவு செய்ய முயற்சித்த படங்கள் ஏதும் இல்லை என்றே நினைக்கிறன். அதே போல குழந்தைகளின் உலகை பதிவு செய்த படங்களும் தமிழில் அரிது, சுஜாதாவின் நாவல் ஒன்று "நிலாக்காலம்" என்ற பெயரில் படமானது என நினைக்கிறேன். நான் பார்த்த வரையில் தமிழில் குழந்தைகள் உலகை நெருக்கமாக காட்டிய படங்களில் அது குறிப்பிடத்தக்கது. சத்யஜித் ரேவின் "பதேர் பாஞ்சாலி" அந்த வரிசையில் தலை சிறந்த படங்களில் ஒன்றாக சொல்லலாம். அகிரா குராசோவாவின் "மடாடாய" நான் இன்னும் பார்க்கவில்லை.


உலக அரங்கில் குழந்தைகள் உலகை தெளிவாக படம் பிடித்து காட்டியவர் மஜீத் மஜீதி. அவரது "The Color Of Paradise (சொர்கத்தின் வண்ணம்)" என்னும் திரைப்படம், பார்வை இழந்த சிறுவனின் அக உலகை மிக நெருக்கத்தில் பதிவு செய்த திரைப்படம். பார்வையற்றவர்களை நாம் தான் கவனித்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவர்களை பாரமாக உணர செய்துவிடுகிறது. பெரும்பாலான உடல் நலம் குன்றியவர்கள் அந்த குறைபாடுகளுக்காக அவர்கள் மேல் மற்றவர்கள் பாச்சதாபம் கொள்ள வேண்டும் என எதிர் பார்ப்பதில்லை. முகமது என்னும் பார்வை இழந்த சிறுவனின் ஏக்கங்களையும், அவனது தேடலையும் மிக நெருக்கமாக படம் பிடித்த படம் சொர்கத்தின் வண்ணங்கள்.
முகமது பார்வையற்றோர் பள்ளியில் படிக்கின்றான், கோடை விடுமுறைக்கு அந்த பள்ளியில் உள்ள அனைவரையும் அழைத்து செல்ல அவர்களது பெற்றோர்கள் வருகின்றனர். முகமது தன் தந்தைக்காக காதிருத்தலில் தொடங்குகிறது இந்த திரைப்படம். தந்தைக்காக காத்திருக்கும் நேரத்தில் கூட்டில் இருந்த கீழே விழுந்த ஒரு பறவையை மீண்டும் கூடு சேர்க்கும் காட்சி கவிதை

.
தந்தையுடன் தனது கிராமத்திற்கு சென்றவுடன் தனது சகோதரிகள் மற்றும் பாட்டியை காண வயலுக்கு செல்கிறான். நகரத்தில் இருந்து வரும் அவன் அங்கு கிடைக்கும் சிறு சிறு பொருட்களை பத்திரமாக சேகரித்து அவர்களுக்காக எடுத்து வருகிறான். உடைந்த கிளிப்புகள், ஸ்டிக்கர் என. மிகுந்த உற்சாகத்தோடு அவர்களோடு விளையாடுகிறான். அவர்களுடன் பள்ளிக்கு சென்று அவர்களுடைய பாடத்தை அழகாக ஒப்பிக்கிறான், தான் படிக்கும் பாடமும் அது தான் என தனது ப்ரைலி எழுத்துருக்களை அவர்களது ஆசிரயருக்கு சொல்கிறான்.

முதல் மனைவியை இழந்து, தன் பிள்ளைகளை வளர்க்கும் முகமதுவின் அப்பா, வீட்டில் இவன் இருந்தால் அது தனது இரண்டாம் கல்யாணத்திற்கு தடையாக இருக்க கூடும் என ஒரு பார்வையற்ற தச்சரிடம் முகமதுவை விட்டுவிடுகிறார். படத்தின் முதல் காட்சியில் இருந்தே, அவனது தந்தையின் செயல்கள் யாவும் அவனை தன் குடும்பத்தை விட்டு விலக்கி வைப்பதிலேயே இருக்கிறது. காட்டில் அவன் எங்கேனும் தொலைந்து போய் விட மாட்டானா என்னும் அளவு அவருள் ஒரு வன்மம் குடி கொள்கிறது. அதே சமயம், அவன் வளர்ந்தால் அவனை அவன் பார்த்த கொள்ள வேண்டாமா என சமாதானம் சொல்லி அவனை வீட்டில் இருந்து பிரித்து விடுகிறார்.  
படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு, விடுமுறைக்கு சகோதிரிகளுடனும் பாட்டியுடனும் சந்தோஷமாய் நேரம் கழிக்கும் முகமது எந்த நிலையில் தனது குறையை பற்றி பெரிதும் கவனம் கொள்ளவில்லை. படத்தின் ஆரம்ப காட்சி முதலே அவனது விரல்கள் எதையோ துழாவிய வண்ணமா உள்ளது, சோலையில் வளர்ந்திருக்கும் பூக்களில், தன் சகோதிரிகளின் சிரிப்பில், பாட்டியின் முக சுருக்கங்களில் என. அவனை காண்கையில் எல்லாம் அவனது தந்தையின் முகத்தில் தோன்றும் வெறுப்பை அவன் பார்க்க முடியாததனால் தானோ என்னவோ அவனை சுற்றி உள்ள அனைவரையும் அவன் நேசித்த வண்ணம் இருக்கிறான்.
அவனது தந்தை தச்சரிடம் அவனை விட்டு சென்ற உடன் அவன் தனிமையில் அழுது கொண்டு இருக்க, அவனை போலவே பார்வை இழந்த அவர் அவனிடம்  ன் என கேட்கிறார். முதன் முதலில் அவனுக்கு மனிதர்கள் மேல் நம்பிக்கை இழந்து வார்த்தைகள் வந்து விழுகின்றது. "தன் தந்தை, பாட்டி என யாரும் என்னை நேசிக்கவில்லைஎன்கிறான்.
அவர் அவனை சமாதான படுத்த முயல, “கண்பார்வை அற்றவர்களுடன் தான் கடவுள் மிகுந்த நெருக்கமாக இருப்பார் என என் ஆசிரியர் சொன்னார். நான் அவரிடம் கேட்டேன், அப்படி என்றால் அவர் நம்மை கண்களோடு படைத்திருந்தால் அவரை பார்த்து இருக்கலாம் தானே என. அதற்கு அவர் கடவுளை  
உணரத்தான் முடியும் என  சொன்னதால் தான், நான் விரல்களால் அவரை தேடி கொண்டு இருக்கிறேன்" என்கிறான். அந்த தச்சர், "உன் ஆசிரியர் சொன்னது சரிதான்" என சொல்லி செல்கிறார். படத்தின் நேர்த்தியான காட்சிகளில் ஒன்று இது. கச்சிதமான சொற்றொடர்கள் மூலம் ஆழ்ந்த வலி உருவாக்கும் இடம்


அதன் பின் அவனது தந்தையும் மன மாற்றத்தை பதிவு செய்த இடமும், வசீகரமான ஒரு மரமதுடன் முடிக்கப்பட்ட அந்த இறுதி காட்சியும் கவித்துவமானவை. எந்த விதமான போலி மனிதநேயத்தையும் தூண்டாமால் நேர்த்தியாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பல விருதுகளை வென்றது.
வருகிற ஏப்ரல் பதினேழாம் நாள், இயக்குனர் மஜீத் மஜீதி அவர்களின் பிறந்த தினம். முழு திரைப்படமும் Youtube ல் சிறு சிறு பாகங்களாய் உள்ளது (ஆங்கில Subtitleகள் உடன்).

Part 1 |  Part 2 |  Part 3  |  Part 4 |   Part 5  |  Part 6  | Part 7  |  Part 8  | Part 9