Monday, December 7, 2009

ரகசியம்

மத்தியானம் தூங்கி எழுந்த பின் ஏற்படும் கால குழப்பம் மிகவும் சிக்கலானது. அதுவும் அப்படி எழுந்த பொழுதுகளில் மழை பெய்து நின்றிருந்தால் முடிந்தது கதை. அது மாலை தான் என்று யார் வந்து சொன்னாலும் மனம் நம்ப மறுக்கிறது. பிடிவாதமாய், அது காலை வேளை என்றே தோன்றி கொண்டு இருக்கிறது. அதுவும் இல்லாமல் இந்த இரண்டாவது மாடியில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த தனி அறையில் யாரும் வந்து இது சாயங்காலந்தான் என்று என்னிடம் நிரூபிக்க போவதில்லை.

நான் மெல்ல இரண்டு மாடிகளில் ஒவ்வொரு படிக்கட்டுகளாய் எண்ணி கொண்டு கீழே வந்து சேர்ந்தேன். ஒவ்வொரு முறை எண்ணும் போதும் படிக்கட்டின் கணக்கு சரியாகவே வருவதில்லை. என் அப்பா வேலைக்காக நேர்முக தேர்விற்கு செல்கையில், அந்த அதிகாரி நீ ஏறி வந்த படிக்கட்டுகள் எத்தனை என்று கேட்டாராம், தான் சமயோசிதமாக அதை எண்ணி கொண்டு வந்ததால் தான் தனக்கு இந்த வேலை கிடைத்தது என ஆரமித்து அவரது ஆட்டோ பயோக்ராப்பியை துவங்கி விடுவார்.

அன்று மட்டும் அவர் தவறாக சொல்லி இருந்தால், நான் இப்படி படிக்கட்டுகளை எண்ணி கொண்டு இருந்திருக்கவே தேவை இல்லை. அவர் வேலையை பார்த்து தான் பெண் கொடுத்தார்களாம், அந்த வேலை கிடைக்காமல் போய் இருந்தால் என் அப்பா திருமணம் செய்து கொண்ட பெண் எனக்கு அம்மாவாக வர வாய்ப்பில்லாமல் போய் இருந்திருக்கும். அதாவது அசோக் என்ற ஒருவன் இந்த உலகத்தில் பிறப்பதற்கான சாத்திய கூறுகளே இல்லை. அனால் அவர் சரியாக எண்ணி விட்டார் நான் பிறந்து விட்டேன். சமீப காலமாக தான் இது போல சிந்தனைகள் வந்து சேர்க்கிறது. எல்லாம் இந்த பூரணனுடன் பழக ஆரமித்த பிறகு தான்.

உங்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இருந்திருந்தால் அவனுக்கு நூறு ஆயுசு என்றிருப்பீர்கள். நான் சென்று சேர்வதற்கு முன் அவன் குமார் கடையில் அமர்ந்து ஒரு கிங்க்ஸ் சிகரெட் புகைத்து கொண்டிருந்தான். அவன் எக்காரணம் கொண்டு வில்ஸ் வாங்க மாட்டான், கேட்டால் அது தன் அப்பா புகைக்கும் பிராண்ட் எனவும், அவருக்கு நான் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை அது எனவும் சொல்லுவான். இன்னும் நான்கு அடிகளில் நான் அவனை அடைந்து விடுவேன், அதற்கு முன் அவனை பற்றி….

வேலை வெட்டி எதுவும் இல்லாமல் (என்னை போலவே), கிடைக்கின்ற புத்தகங்களை எல்லாம் படித்து கொண்டு, வாய்ப்பு கிடைத்தால் உலகத்தின் போக்கையே மாற்றி விடுவேன் என என்னும் ஒரு சாதாரண டிப்ளோமோ ஹோல்டர். எப்போதும் ஒரு வெளிர் மஞ்சள் நிற சால்வையை கழுத்தை சுற்றி அணிந்திருந்தான்.. அந்த நிறத்திற்கு சற்றும் பொருத்தம் இல்லாத ஒரு பச்சை கட்டம் போட்ட சட்டையும், தண்ணியை தன் வாழ் நாளில் சந்திக்காத, சந்திக்க போகாத ஒரு ஜீனும் அணிந்திருந்தான்.

ஆனால் மேலே கூறிய வாக்கியங்களில் சற்று கிண்டல் தொனி இருப்பதாக நான் சந்தேகபடுகிறேன். நான் சொன்ன அளவுக்கு அவன் வெறும் லட்சியவாதி இல்லை. பல சமயங்களில் மிக யதார்த்தமாக பேசுவான், கன்னிமாரா நூலகத்தின் ஆயுட் கால உறுப்பினர். எப்போதாவது பெயரே புரியாத பத்திரிக்கையில் தான் எழுதிய கவிதை வந்திருப்பதாக வந்து படித்து காட்டுவான். நான் மூன்றாவது பத்தியில் சொன்னது கூட அவன் எனக்கு விளக்கிய வண்ணத்து பூச்சி விளைவுகள் என்னும் தத்துவத்தின் சாயலை தான்.

நான் வருவதை பார்த்த உடன் அவன் முகத்தில் ஒரு சொல்ல முடியாத சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. இப்போதே அது சற்று பீதியை கலப்ப தொடங்கியது. ஏதேனும் ஒரு புத்தகத்தை படித்தது விட்டு வந்து அதை விளக்குகிறேன் பேர்வழி என்று அவன் செய்யும் அட்டகாசங்கள் அளவிட முடியாதவை. மேலும் சமீபமாக அறிவியல் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு வேறு. போன வாரம் கூட ஆராய்ச்சிக்காக இந்தியா வந்த ஒரு ஜெர்மன் நாடு பேராசிரியர் உடன் மெரீனாவில் இரவு இரண்டு மணி வரை பேசி கொண்டிருந்தான்.

டேய், எப்ப வந்தே? என்றேன்.

இப்போதான் ரெண்டு நிமிஷம் ஆச்சு, ஒரு அற்புதமான விஷயத்தை உன்கிட்ட சொல்லத்தான் வந்தேன். அதுக்கு முன்ன என்ன நிதானபடுத்திக்க தான் இந்த கிங்க்ஸ் என்றான். நான் காப்பியும் பிஸ்கட்டும் சாப்பிடும் வரை ஒன்றும் பேசவில்லை. அமைதியாக இருந்துவிட்டு. முடிந்த உடன் என்னை இழுக்காத குறையாக என் அறைக்கு கொண்டு சென்றான்.

அறையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது, மழை பெய்து ஓய்ந்திருந்தமையால் எப்போதும் இருக்கும் அளவு புழுக்கம் இல்லை. ஒருவர் முகம் ஒருவருக்கு தெரியும் அளவு மெழுகு வத்தியை வெளிச்சம் சிந்த வைத்து விட்டு அவனை கூர்ந்து கவனிக்க தொடங்கினேன்.

அசோக், நான் சொல்ல போவது, நீ சாதரணமாக கவனித்தவையாக இருக்கலாம். ஆனால் அதன் உள்ளே இயங்கும் விஷயங்கள் நம்மை மீறியது என்றான்.

பீடிகை வேண்டாம் சொல்லு என்றேன்.

இளம் வயதிலேயே இறந்து விட்ட சிலரின் பெயர்களை சொல்லு பார்க்கலாம்.

ஏன், இது என்ன விளையாட்டா? அவங்கள உன் மூலமா பேச வைக்க போறியா?. என் வீட்டு பக்கத்துல….

முட்டாள் மாதிரி பேசாதே அசோக், இது ஆவி விஷயம் இல்ல. இளம் வயதில் இறந்து போன சில பிரபலங்களை பற்றி கேட்கிறேன். நானே சொல்கிறேன் பார் என்று சொல்ல தொடங்கினான்.

இயற்கையில் ஒரு தேர்ந்தெடுப்பு விதி இருக்கிறது.

டார்வின் தியரி சொல்லும், இயற்கையின் தேர்ந்தெடுப்பு என்னும் விதிதானே?. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் “Natural Selection“ . என்றேன்

ஒருவகையில் ஆமாம், ஆனால் அவை மட்டும் அல்ல, அது வெறுமே பௌதிக காரணங்கள் படி, வலியது வெல்லும் என்னும் வரையறைக்குள் அடங்கி விடுகிறது. நான் சொல்வது அதை விட ஆழமானது.

எனக்கு புரியவில்லை என்றேன்.

சரி, நான் சொல்வதை கேள். பூமியின் பூவி இருப்பு விசை என்பது பூமி உருவானதில் இருந்து இருக்கிறது அல்லவா?. அதே போல, மரத்தில் இருந்து ஆப்பிள் விழுவது என்பதும் அவை உருவான காலம் தொட்டே நிகழ்வது தானே. ஆனால் ந்யுட்டன் என்னும் மனிதனை இயற்கை தேர்ந்தெடுக்கும் வரை அந்த புவியீர்ப்பு விதி யாருக்கும் பிடிபடாமலே இருந்தது என்கிறேன்.

சற்று புரிவது போல் இருக்கிறது.

மேலும், இந்த இயற்கையின் தேர்ந்தெடுப்பு விதியும் அதன் தொடர்பான நிகழ்வுகளும் நமது மேலோட்டமான பார்வைக்கு மிக எளிதில் தப்பி விடுகிறது. உலகம் முழுக்க சராசரி மனிதர்களையே படைத்து விட்டு, தீடிரென்று அவர்கள் மத்தியில் ஒரு பிரபஞ்ச ரகசியத்தை வெளிக்கொணரும் ஒரு அறிவியலாளனோ இல்லை இலக்கியவாதியோ இல்லை வேறு துறையில் ஒருவனோ நிறுத்தபடுகின்றான். உலகும் முழுக்க அவனை கொண்டாடுகிறது, ஆனால் அவனின் தேர்ந்தெடுப்பு பற்றிய கேள்விகள் நமக்கு வருவதே இல்லை.

அவர்கள் வளர்ந்த விதம், அவர்களின் கல்வி ஆகியவற்றை சுலபமாக மறந்து விட்டு பேசுகிறாய் நீ என்றேன். சொல்லப்போனால் உன் விதிக்கு தகுந்தார் போல் நீ நிகழ்வுகளை வளைக்க பார்க்கிறாய்.

நான் சொல்வதை கவனிக்காமல் அவன் மேலும் தொடர்ந்தான். ஆனால் அசோக், இதில் உள்ள மிக பெரிய முரணை நினைத்தால் நீ மிகவும் ஆச்சரியப்படுவாய். இந்த தேர்ந்தெடுப்பையும் மீறி சில குரல்கள் ஒலித்து கொண்டே தான் இருந்திருக்கிறது வரலாறு தோறும். ஆனால் அவை எல்லாம் அப்பத்தமாக முடித்து வைக்க பட்டிருக்கிறது என்பதை நினைவு வைத்து கொள்.

தான் தேர்ந்தெடுத்த மனிதர்களையே தொடர்ந்து வரலாறு பேசுகிறது, தானாக உருவாகி வந்த ஆளுமைகள் ஓர் எல்லை வரை வந்த பின் அபத்தமாக முடித்து வைக்கப்பட்டிருகிறது. வேண்டுமானால் யோசித்து பார், இயற்கையை அறிய முயன்ற கீட்ஸ் என்னும் கவி தனது இருபத்தி ஆறாவது வயதில் மறித்து போனான். மானுட இரக்கத்தை நோக்கி கை நீட்டிய ஆனி பிரான்க் தனது பதின் வயதுக்குள்ளாகவே கொல்லப்பட்டாள். இசையின் மூலம் கடவுளை காட்டிய மொசார்ட் தனது முப்பதாறாவது வயதில் இறந்து போனான்.

நான் மெல்ல ஆர்வமாகி கவனிக்க துவங்கினேன்.

ஏன், நீ இங்கே நமது நாட்டிலேயே எடுத்து கொள்ளேன். கணித விதிகளின் சூத்திரங்களோடு விளையாடிய ராமனுஜன், துறவி விவேகானந்தர், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஆதவன் என்னும் நீளும் பட்டியல் இப்போது கோபி கிருஷ்ணன், ஆத்மா நாம் வரை வந்துள்ளது.

இவர்களை எல்லாம் தேர்ந்தெடுப்பு விதிகளின் எதிர் குரல்கள் என்கிறாயா? என்றேன்.

ஒரு விதத்தில் ஆமாம். ஒருவேளை அவர்கள் எதிர் குரல்களாக இருக்கலாம் இல்லை அவர்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டார்களோ அதில் இருந்து அவர்கள் விலகியதால் அவர்களுக்கு தரப்பட்ட தண்டனையாக கூட இருக்கலாம். அதாவது அவன் செய்ய வேண்டிய காரியங்களை மீறி அவன் செயல் பட துவங்கிய கணம், எங்கே தன் ரகசியங்கள் எல்லாம் உடனே வெளிப்பட்டு விடுமோ என இயற்கை நினைத்த கணம் அவர்கள் இருப்பு பூமியில் இருந்து மறைக்கப்பட்டது.

சரி, நீ சொல்வது படியே வைத்து கொண்டாலும் இதில் இருந்து என்ன நடந்து விடபோகிறது.

சராசரிகள் நோக்கி எனது கவனத்தை திருப்ப போகிறேன். இந்த தேர்ந்தெடுத்தல் விதியின் படி, வெற்றி பெற்றவர்களும் அதே சமயம் என் நோக்கில் தோல்வி அடைந்தவர்களும் கூட வரலாற்றில் எப்போதும் நினைக்க படுகின்றனர். ஐன்ஸ்டீன் புகழ் பெற்ற போதே, ராமானுஜனும் நிலை நிறுத்தப் பட்டது போல்.

என் ஆராய்ச்சி இப்படி புகழ் பெற்ற மனிதர்களின் வாழ்க்கையில் உள்ள ஒரு Pattern (வகைமாதிரி) உருவாக்குவது தான். அதற்காக நான் ஜெர்மன் செல்ல இருக்கிறேன், உனக்கு சொன்னேன் அல்லவே தாமஸ் அவர் அங்கே Date Mining துறையில் ஆராய்ச்சி செய்கிறார்.

இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றி பெற்றால், இதை வைத்து எந்த சராசரி மனிதனையும் ஒரு குறிப்பிட வகை மாதிரிக்குள் வாழ வைத்து இயற்கையின் தேர்ந்தெடுப்பு விதிக்குள் அவனை பொருத்தி விடுவேன். வரலாற்றில் இடம் பெற எத்தனை பெரும் பணக்கார்கள் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா?. கோவில் கட்டி, பொது நல சேவை செய்து…. பில்லியன் கணக்கில் பணம் புரள போகிறது. நான் சற்று அதிர்ச்சியாகி அவன் சொல்ல வந்ததை உள் வாங்கி கொள்ள முயன்று கொண்டிருந்தேன்.

நான் நாளை மாலை ஜெர்மன் கிளம்புகிறேன், இன்று இரவு தாமஸ் உடன் மெரினாவில் இது சமந்தமாக பேச வேண்டி உள்ளது என்று கிளம்பினான். கால குழப்பத்தோடு இவன் பேசி விட்டு போன குழப்பமும் சேர்ந்து கொள்ள இரவெல்லாம் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தேன்.

வழக்கம் போல காலை குமார் கடைக்கு சென்று காபி வாங்கி கொண்டு அமர்ந்தேன். எதிரில் இருப்பவர் வாய் விட்டு தந்தி படித்து கொண்டு இருந்தார்,

“நேற்று மெரீனா அருகே நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில், இருவர் உயிர் இழந்தனர். இதில் ஒருவர் ஜெர்மனை சார்ந்த தாமஸ் என அறியபடுகிறது. மற்றவரின் உடல் இன்னும் அடையாளம் காணபடவில்லை. அவருக்கு வயது இருபத்தைந்து இருக்கலாம் என கூறபடுகிறது. அவர் மஞ்சள் சால்வையும், பச்சை சட்டையும் அணிந்திருந்தார்…” என படித்து கொண்டே சென்றார். நான் அதிர்ச்சியில் முகம் எல்லாம் வேர்க்க அமர்ந்திருக்க, அவர் என் கையில் பேப்பரை கொடுத்து விட்டு,

‘எல்லாம் விதி தம்பி’ என சொல்லி சென்றார்.

முந்தைய சிறுகதைகள்  1 | 2 | 3 | 4 | 

Monday, November 30, 2009

செங்கம் (Alias) சென்னை

எனது அப்பா ஒரு சுகாதார ஆய்வாளர், பெரும்பாலும் சிறிய டவுன் அல்லது அதனை ஒட்டிய கிராமங்களில் தான் அவருக்கு வேலை. நான் பிறப்பதற்கு முன் அவினாசி, அந்தியூர் பகுதிகளில் இருந்திருக்கிறார். நான் பிறந்த சமயம், என் அம்மாவின் தந்தை ஊரை ஒட்டிய செங்கம் என்ற ஊருக்கு மாற்றல் வாங்கி கொண்டு வந்து விட்டார். இது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம்.

என் பள்ளி படிப்பு முழுதும் இங்கு தான். வாஜ்பாய்னு சொல்ற அளவுக்கு பெரிய ஆளும் இல்ல, ரூம் பாய் அளவுக்கு சின்ன ஆளும் இல்லை என்பது மாதிரி, இது ஒரு வகையில் ரெண்டுங்கெட்டான் ஊர்தான். சொந்த வீடு கட்டுவதற்கு முன்பு ஒரு ஐந்து ஆறு இடங்களில் வாடகை வீட்டில் இருந்தோம். எனது வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையில் உள்ள பாதைதான் என் மனதில் தங்கி விட்ட ஊர். எனது வீடு மாற மாற பாதைகள் மாறிய வண்ணமே இருக்கும். பெரும்பாலும் ஒரு பாதையை தேர்ந்தெடுத்து விட்டால், அடுத்த வீடு மாறும் வரை அதே பாதையில் தான் பள்ளிக்கு செல்வேன், வேறு பாதையில் சென்றால் யாரிடமாவது நான் திட்டு வாங்குவேன் என நினைத்து கொள்வேன், நினைத்த மாதிரியே அந்த சிடுமூஞ்சி மேக்ஸ் மிஸ் என்னை அன்று திட்டும்.

எங்கள் பள்ளி செய்யாறு என்னும் ஆற்றை ஒட்டிய படி இருக்கும். நானும் என்றாவது அதில் எங்கள் பள்ளி மூழ்கி விடும் என நம்பி பார்த்து பார்த்து பூத்து போனேன், ஒரு முறை கூட எங்கள் காம்பவுண்டு சுவர் அருகே கூட வெள்ளம் வரவில்லை. ஒருமுறை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது ஆற்றை கடக்க முடியாததால் கணக்கு டீச்சர் வரவில்லை என்பது வரையில் மட்டுமே அந்த ஆற்றினால் எனக்கு ஆறுதல்.

ஆனால் முதல் முதலில் கூட்டாஞ்சோறு ஆகியது அந்த ஆற்றை ஒட்டிய மரத்திற்கு கீழ்தான், யாரவது வந்தால் குரல் கொடுக்க வேண்டியது தான் எனது பொறுப்பு, என்னை பார்வையாளனாகவே நிற்க வைத்து கொஞ்சுண்டு சோறு கொடுத்தனர். அப்போது ஆரம்பித்த இந்த பார்வையாளன் பொறுப்பு கல்லூரி வரை தொடர்ந்து, பசங்க தண்ணி அடிக்கையில் வார்டன் வந்தால் குரல் கொடுக்க நிறுத்தி வைத்து, இன்று தனியாக வீடு எடுத்து தங்கிய பிறகு கூட அறையில் நண்பர்கள் தண்ணி அடிக்கையில், ” டேய் மதன கூட்பிட்றா, அவனுக்கு ஒரு லேஸ் கொடுத்துட்டு ஆரமிப்போம், பிரச்சனை எதுவும் இல்லாம இருக்கும் பாரு” என்னும் அளவுக்கு ஒரு சடங்காகவே ஆகிவிட்டது.

எந்த படமும் முதல் ரீலீசுக்கு எங்கள் ஊருக்கு வராது, ஓர் ஊர் எந்த அளவுக்கு பெரியது என்பதை அந்த ஊரில் உள்ள தியேட்டர் எண்ணிக்கை மற்றும் அதில் திரையிடப்படும் படங்களின் ரீலீஸ் ஆகியவற்றை வைத்தே நான் கணக்கிட்டு வந்தேன். அண்ணாமலை திரைப்படத்திற்கு எங்கள் வீட்டு ஓனரின் மகன் இரவெல்லாம் அமர்ந்து, ஒரு பேனர் செய்தது நினைவு இருக்கிறது. தலைவர் - குஷ்பு, படம் கண்டிப்பா ஹிட் என்று என்னிடம் சொல்லி கொண்டே அந்த பேனர் செய்தார். அவர் சொன்னபடி படம் ஹிட், ஆனால் அவர் கட்டிய பேனர் எங்கள் வீட்டிற்கு எதிரில் உள்ள கரண்ட் கம்பியில் சில காலம் தொங்கி கொண்டு இருந்தது, பின் ஒரு நாள் மாடு குஷ்புவை ஆவலோடு மென்று கொண்டு இருந்தது. அதன் பின் அந்த வீடு மாறி விட்டோம், அவரை நான் பார்க்கவில்லை.

எந்த வித பரபரப்பும் அற்ற வாழ்க்கை, அதில் சுவாரசியம் ஏற்படுத்தி கொள்ள எப்போதாவது +2 பள்ளி பிள்ளைகள் ஒன்றை ஒன்று இழுத்து கொண்டு ஓடிவிடும். அதை பற்றி சில நாட்கள் பேச்சு பரவும். பெரும்பாலும் ஓடியவர்கள் திரும்பி வருவார்கள், வீட்டின் சம்மதத்தோடு மீண்டும் திருமணம் நடக்கும், இல்லை ஊரிலேயே தனி வீடு எடுத்து வாழ தொடங்கி விடுவார்கள். ஜாதி சண்டை எங்கள் ஊரில் அதிகம் வந்தது போல் தெரியவில்லை.

எப்போதும் எங்கள் பள்ளியில் காலை சுடும் வெயிலில் நிற்க வைத்து பிரேயர் பாட சொல்வார்கள், பெரும்பாலும் ஒன்றும் புரியாது. நீராரும் கடலுடுத்த மட்டும் சற்று உரக்க பாடியது நினைவு இருக்கிறது (பின்னால் நிற்கும் தமிழ் அய்யாவை தாஜா செய்ய). மீசையும் காதலும் முளைக்க தொடங்கிய பின்பு, என் பக்கத்தில் பாடி கொண்டிருந்த கணேஷ், உறுதிமொழி எடுத்து கொள்கையில் “ All Indians are my Brothers and Sisters” என்ற வரியை மட்டும் விட்டு விட்டு சொல்ல தொடங்கினான்.

பள்ளி இறுதி வரை என் ஊரை விட்டு எங்கும் வெளியே செல்லாததால் என் இருப்பு பற்றிய விவரணைகள் எதற்கும் பங்கம் இல்லை. எங்கள் கிராமத்திற்கு சென்றால் கூட, “செங்கதிலயா படிக்கிறே” என்று பெருமை பொங்கதான் பார்ப்பார்கள். ஆனால் கல்லூரி வந்த பின், உன் ஊர் எது என்றால் திருவண்ணாமலை என சொல்லத் தொடங்கினேன், பின் அது எங்கே என கேட்டதற்கு வேலூர் பக்கம் என்றேன். ஒரு ப்ராஜெக்ட் காரணமாக திருவனந்தபுரம் சென்றபோது, அதுவும் கைக் கொடுக்காமல் போக சென்னைக்கு பக்கத்துலே என்றேன். (எங்கள் ஊர் சென்னையில் இருந்து 180 கிமீ).

ஓ, சென்னையோ? பீச்சுக்கு போகுமோ என்றனர். ஆஹ்ன், Daily என்னும் அளவுக்கு பீலா விட வேண்டி இருந்தது. தூரம் செல்ல செல்ல கிராமங்களில் சாயல் அழிந்து பெருநகரங்கள் அதை விழுங்கி விட தொடங்குகிறதா. இல்லை நகரம் பூசும் சாயத்தில் நமது கிராமத்தின் பேர்களை சொல்ல கூச்சப்பட்டு போகிறோமா என தெரியவில்லை.

ஊருடன் தினம் தினம் இருந்த தொடர்பு அற்று போய், ஒவ்வொரு முறை ஊருக்கு போகையிலும் சிற்சில சித்திரங்களே ஊரை பற்றி மனதில் தங்கி விட்டிருக்கிறது. ஊரை விட்டு ஒதுங்கிய ஓர் இடத்தில் தான் எங்கள் வீடு, பேருந்து நிலையத்தில் இருந்து குறுக்கு வழியாக ப்லாட்டாக மாறி கொண்டு இருக்கும் விளைநிலங்கள் ஊடாகவே என் வீட்டிற்கு சென்று விடுவேன். பெரும்பாலும் நான் ஊருக்கு வந்து செல்வது என் அப்பா-அம்மாவிற்கு மட்டுமே தெரியும். நான் வளர வளர இவர்களுடனான எனது நெருக்கம் அதிகரித்த வண்ணமே வந்திருக்கிறது.

வீட்டிற்குள் தாழப் பறக்கும் பறவை நான் என்னும் வரி எனக்கு மிக பிடித்தமானது. கடந்த சில வருடங்களான எனது ஊரின் சித்திரத்தை உருவாக்க முயன்று தோற்று போகிறேன், அம்மா முகம் மட்டுமே நினைவு வருகிறது. கிராமத்து வீடை நினைக்கும் போது எல்லாம், பாட்டி முகமே நினைவு வருவது போல். வீடு மட்டும் அல்ல, ஊரோடும் பெண்கள் தங்கள் முகங்களை ஒட்டி விடுகிறார்கள் போல.

Saturday, November 28, 2009

உலக போர் - காமிரா வழியே II

இரண்டாம் உலக போரில் உலக நாடுகள் இரண்டு பெரும் பிரிவுகளாக இணைந்திருந்தது. “Axis power” கூட்டணியில் முக்கிய நாடுகளாக ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகியவை விளங்கின. அவர்களை எதிர்த்த “Allied Power” கூட்டணியில் பிரிட்டன், ருஷ்யா, அமெரிக்க ஆகிய மூன்று நாடுகள் வலுவாக இருந்தன. Axis Power கூட்டணியின் நாயகனான ஹிட்லரை அழிக்க பல முயற்சிகளின் நடந்தன. அவருக்கு எதிராக நடந்த புரட்சிகளை பற்றிய படங்களில் நான் பார்த்தவரையில் சிறந்த படம் Valkyrie மற்றும் Inglourious Basterds. முந்தையது அவரது சொந்த நாட்டினை சேர்ந்தவர்களே ஹிட்லருக்கு எதிராக நடத்திய சூழ்ச்சி. பிந்தையது அமெரிக்காவில் வாழும் யூத இனத்தை சேர்ந்த ஒரு குழுவினர் செய்யும் முயற்சி.

Valkyrie (2008)

Direction: Bryan Singer

Starring: Tom Cruise



Operation Valkyrie என்பது. அன்னிய படை எடுப்பின் மூலமாகவோ, இல்லை ஜெர்மனியில் வந்து தங்கி இருக்கும் பிற நாட்டை சேர்ந்தவர்களாலோ ஏதேனும் புரட்சி ஏற்பட்டால் அதை அடக்க ஹிட்லரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அவசர கால அடக்குமுறை திட்டம். இதன் மூலம் எவரையும் எந்த காரணமும் இன்றி சுடவோ, கைது செய்யவோ அதிகாரம் வழங்கபடுகிறது. இந்த சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் ஹிட்லருக்கும், ஒருவேளை அவர் இறக்கும் பட்சத்தில் அவரது ஜெனரல் ப்ரோமுக்கும் உள்ளது.

ஹிட்லரை கொல்ல தொடர்ந்து முயற்சித்து வரும் குழுவின் முக்கிய உறுப்பினர் பிடிபடுவதை சொல்லி நகர்கிறது முதல் சில காட்சிகள். அவருக்கு மாற்றாக புதிய உறுபினரை தேடும் பணியில் தீவிரமாக இருக்க அவர்கள் கண்ணில் படுகிறார் ஸ்டாப்பன். ஹிட்லரை அழிப்பதே ஜெர்மனிக்கு தான் செய்யும் சேவை என்ன என்னும் இவர், இங்கிலாந்தின் தாக்குதலினால் ஒரு கையும், ஒரு கண்ணும் இழந்தவர்.

ஹிட்லரை தந்திரமாக அழிக்க முயற்சிக்கும் இவர்கள், ஜெனரல் ப்ரோமை தங்கள் பக்கம் சாய்த்து கொள்கின்றனர். ஹிட்லர் இறந்த உடன், Operation Valkyrie திட்டத்தை அமுல் செய்யும்படி ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் மூலம், ஹிட்லரின் SS கட்சியினை சேர்ந்த அத்தனை பெருந்தலைகளையும் ஒரே நேரத்தில் கைது செய்து ஜெர்மனி மேல் படிந்திருக்கும் கறையை துடைப்பது என முடிவு செய்யப்படுகிறது. ஹிட்லர் கொல்லப்பட்டுவிட்டார் என உறுதியான செய்தி வந்தால், தான் அந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவதாக சொல்லும் ஜெனரல். அதற்கு பிரதிபலனாக, ஹிட்லர் அழிந்தபின் உருவாகும் ஜெர்மனியின் புதிய அரசின் பொறுப்பை தானே முன் நின்று நடத்துவேன் என்றும் ஒப்புதல் வாங்கி கொள்கிறார்.

அதன்பின் ஸ்டாப்பன் திட்டப்படி, ஹிட்லரது மாளிகையில் நடக்கும் ரகசிய கூட்டத்திற்கு சென்று அங்கு குண்டு வைத்து திரும்புகிறார். அதன் பின் நடக்கும் குழப்பங்களும், ஹிட்லர் மீண்டு வந்து வானொலியில் உரையாற்றிய உடன், ஜெர்மன் மக்களும் அவரது படையும் கொள்ளும் உணர்ச்சியும் மிக அழகாக படமாக்கப்பட்டது. இறுதி காட்சியில் தன் திட்டம் தோல்வி அடைந்த உடன் மனம் உடையும் இடத்திலும், நேர் நின்று தனது முடிவை எதிர் கொள்ளும் கணத்திலும் ஆர்ப்பாட்டமில்லாத கம்பீரமான நடிப்பு Tom Cruise உடையது.

Inglorious Basterds (2009)

Direction: Quentin Tarantino

Awards: Best Actor award for Chirstoph Waltz at Cannes



உலக அளவில் பிரபலமான சமகால இயக்குனர்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பெறக்கூடிய பெயர் குவென்டின் டொரான்டினோ. நான் லீனியர் உத்தி மூலம் கதை சொல்லலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர் இவர். நாவல்களை போல பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு, அதன் உட்சிக்கல்களை காட்சிபடுத்துவதில் பெயர் பெற்றவர். இவரது Pulp Fiction (1994) அந்த வரிசையில் மிக சிறப்பான திரைப்படம். அயல் சினிமா பற்றிய தனது கட்டுரைகளில் எஸ். ரா இவரை பின் நவீனத்துவ இயக்குனர் என குறிப்பிடுகின்றார். பின் நவீனத்துவ போக்கின் பல அம்சங்கள் இவரது படங்களில் ஊடாடுகின்றது.

கௌவ் பாய் படங்களை இயக்கி புகழ்பெற்ற சர்ஜியோ லியோனின் தீவிர ரசிகரான இவர், அந்த படங்களில் பின்னணி இசையின் மூலம் உலகப் புகழ்ப் பெற்ற எனியோ மோரிக்கொன் மீது பெரும் மதிப்பு கொண்டவர். அவரது பின்னணி இசையினைப் பற்றிய பதிவினை இங்கே காணலாம். அவர் மற்றொரு படத்தில் ஈடுபட்டு இருந்ததால், அவரது இசைக் கோர்வையில் இருந்து சிலவற்றை மட்டும் இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளார் குவென்டின் டொரான்டினோ. ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் இந்த வருடத்திய சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்றது. லாண்டா என்னும் ஜெர்மன் அதிகாரி பாத்திரத்தில் வரும் வால்ட்ஸ் இந்த விருதை பெற்றார்.

அமெரிக்க படையில் உள்ள யூத இனத்தை சேர்ந்த எட்டு பேரை ஒன்று சேர்க்கிறார் ரைய்ன் (Brad Pit). புகழ் பெற்ற நார்மண்டி படையெடுப்புக்கு முன் இவர்கள் ஜெர்மனிய படைகள் கட்டுப்பாட்டில் உள்ள பிரான்ஸ் வந்து சேர்கின்றனர். Inglorious Basterds என பெயர் கொண்ட இந்த கூட்டணியின் நோக்கம்,

பிரான்சில் அகப்படும் ஜெர்மன் ராணுவ படையினரை பிடிப்பது, அதில் ஒருவனை மட்டும் விட்டு விட்டு மற்ற அனைவரையும் கொன்று அவர்கள் தலையை சிரைப்பது என உலா வருகின்றனர். உயிர் பிழைத்த அந்த ஒருவனது நெற்றியில் நாசிகளின் ஸ்வாஸ்த்திக் சின்னத்தை பதித்து அனுப்பி விடுகின்றனர். அதன் மூலம் ஜெர்மன் படைகளுக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணுவதே இதன் நோக்கம்.

யூத மக்களை அழிப்பதில் புகழ் பெற்றவரான லாண்டா ஒரு விவசாயிடம் பேசுவதாக தொடங்குகிறது இந்த படம். முதல் இருபது நிமிட காட்சிகள் வெறும் உரையாடல்களாகவே நகர்கிறது. மிக சாதுர்யமான அந்த காட்சிகள் அழகாக படமாக்கப்பட்டது. ஒரு கொலை நிகழ போகிறது என தெரிந்தும் அந்த காட்சிகள் ஊடே நாம் சில இடங்களில் சிரித்து கொள்கிறோம். ” எவ்வளவு கொடுரமான விஷயத்தின் உள்ளும் நம் மனம் சிரிக்க பழகி இருக்கிறது” என ஒரு பேட்டியில் இயக்குனர் குறிப்பிட்டது நினைவு வருகிறது.

அந்த இருபத்து நிமிட காட்சியினை போலவே, இரவு விடுதியில் நடக்கும் காட்சியும் சுவாரசியமானது. படத்தின் மிக பெரிய பலம், பின்னணி இசையும் வால்ட்சின் நடிப்பும். சுவாரசியமாக செல்லும் இப்படம் ஒரு மிக பெரிய திருப்பத்தில் வழக்கம் போல ஒரு சிரிப்பை மூட்டியப்படி முடிகிறது.

இவோ ஜிமா போரும், புகழ்பெற்ற நுரம்பெர்க் விசாரணையும், ஹிட்லரின் இறுதி நாட்களும் அடுத்த பதிவில் நிறைவுறும்.

இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |13 | 14 | 15 |

Tuesday, November 10, 2009

நீட்சி/நினைவூட்டப்படும் துக்கநாள்

நீட்சி

காற்றில் நீந்திய ஜன்னலை

இழுத்து சாத்திய கணத்தில்

தட்ட தொடங்குகிறது மழை




நினைவூட்டப்படும் துக்கநாள்

சொந்தம் கூடி, உணவு சமைத்து

கலைந்ததை சமன்படுத்தி

புது துணிகளை

மடிப்பு கலையாமல் எடுத்து வைத்து

சட்டமிட்ட புகைப்படத்துக்கு வத்தி கொளுத்தி

வட்டமாய் அமர்ந்து

ஒருவர் முகம் ஒருவர் பார்த்து

சங்கடப்படுவதற்கு முந்தைய கணம்

எப்படியோ தொடங்கிவிடுகிறது

ஒரு அழுகை

சுவடுகள்

அலைக்கு பயந்து

அம்மா புடவையையே

பற்றி கொண்டிருந்த குட்டி இளவரசி

அவசர அவசரமாய்

வந்து பதித்து செல்கிறாள்

சுவடை



தொலைந்துபோன கைப்பேசி

பேசிய வார்த்தைகள்

இழந்த நட்புகள்

எப்போதாவது பேசுவோம்

என நினைத்த எதிரிகள்

ரகிசியமாய் பதிவு செய்த பேச்சுகள்

அனைத்தையும் அழித்து செல்கிறது

கையில் ஒரு மச்சத்தை

மட்டும் விட்டு விட்டு

Photo Courtesy: Google Images and IStock Photo

Monday, November 9, 2009

உலக போர் - காமிரா வழியே

“Never in the field of human conflict was so much owed by so many to so few”. இரண்டாம் உலக போர் பற்றி அப்போதைய இங்கிலாந்து அதிபர் சர்ச்சில் சொன்ன வார்த்தைகள் இவை. மனித சரித்திரத்தில் அதிகமான உயிர் இழப்புகளை கொண்டது இரண்டாம் உலக போர். முதல் உலக போர் 1919 ஆம் ஆண்டு முடிவு அடைந்து Treaty of Versailles கையெழுத்து இடப்பட்டது. அந்த ஒப்பந்தம் மூலம் வஞ்சிக்கப்பட்டதாக எண்ணி வந்த ஜெர்மனி, ஒப்பந்தத்தை மீறி போலாந்தின் மேல் படை எடுத்து 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக போரை தொடங்கி வைத்தது. ஹிட்லர் வீழும் வரை ஆறு ஆண்டுகள் நீண்ட இந்த போர் மனித மனத்தின் குரூரத்தை வெளிச்சமிட்டு காட்டியது.

இரண்டாம் உலக போரை மையமாய் கொண்டு நூறு திரைப்படங்களுக்கு மேலாக வெளிவந்துள்ளது. போரின் நேரடி காட்சிகளின் சித்தரிப்பு, அது தனி மனித வாழ்க்கை மீது காட்டும் வன்முறை, மனித மனங்களின் ஆதார உணர்ச்சியினை சீண்டி பார்க்கும் நிகழ்வுகள் என பல கோணங்களில் சித்தரிக்கப்பட்டு படங்கள் வெளிவந்துள்ளது. அவற்றில் சில படங்கள் எனக்கு பல கோணங்களில் அந்த நிகழ்வுகளை புரிந்து கொள்ள உதவியது. உலக போர் பற்றி வந்த திரைப்படங்களில் நான் பார்த்தவற்றில் மிக முக்கியமான திரைப்படங்களின் தொகுப்பு இது. இந்த திரைப்படங்கள் மூலம் போரின் ஒரு ஒட்டு மொத்த ஒழுங்கு கிடைக்கலாம். இந்த குறிப்பில் இல்லாமல் நான் தவற விட்ட சில படங்கள் இருக்கலாம். இருந்தும் இவை முக்கியமான படங்கள்.

1.Schindler’s List (1993):

Direction: Steven Spielberg

Awards: Seven Academy Awards



Steven Spielberg இயக்கி வெளியிட்ட இந்த திரைப்படம், ஹிட்லரின் நாசிகள், யூத இனத்தவர் மீது வெறி கொண்டு, அவர்களை வதை முகாம்களில் அடைத்தது, அங்கு அவர்கள் பட்ட வேதனை ஆகியவை அப்பட்டமாய் காட்டப்பட்டுள்ளது. படம் பெரும் அளவில் கறுப்பு வெள்ளை காட்சிகள் மூலமே நகர்கிறது. மந்தைகள் போல் மக்கள் முகாம்களில் தங்க வைக்க படுகின்றனர். அப்போது ஷிண்ட்லெர் என்னும் தொழிலதிபர் போருக்கு தேவையான கருவிகள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவுகிறார். அதற்கு தேவையான வேலையாட்களை வதை முகாம்களில் இருந்து பெற்று பணக்காரர் ஆகிறார். அதற்காக ஜெர்மன் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்குகிறார்.

நாட்கள் செல்ல செல்ல தொழிற்சாலையில் வேலை செய்யும் யூதர்கள் மீது நேசம் கொள்கிறார். உயிர் பிழைத்தால் போதும் என வதை முகாம்களில் இருந்து இவரது தொழிற்சாலைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இறுதியில் தன கையில் உள்ள பணம் அத்தனையும் இழந்து தன்னால் முடிந்த அளவு யூத இனத்தை சேர்ந்தவர்களை காப்பாற்றி போர் முடிவடைந்த பின் அவர்களை பிரிந்து செல்கிறார். வதை முகாம்கள் ஒட்டிய காட்சிகள் மிகுந்த வலி தர கூடியவை.

வெட்ட வெளியில் அங்கங்கே சிறு சிறு குடிசை கொண்டு வேலை செய்யும் மக்களை ஓர் ஜெர்மன் உயர் அதிகாரி தன் வீட்டு மாடியில் இருந்தபடி கண்காணிக்கிறான். இரண்டு பேர் மைதானத்தில் கையில் பளுவை தூக்கிய வண்ணம் நடந்து கொண்டு இருக்கின்றனர். அதில் ஒருவன் பளு தாங்காமல் சற்று தடுமாற, எங்கிருந்தோ வந்த குண்டு அவன் தலையை துளைக்க அவன் அப்படியே சரிகிறான். மற்றவன் தன் கையில் உள்ள பளுவை தூக்கி கொண்டு வேக வேகமாக நடக்கிறான்.



மற்றொரு காட்சியில் முகாமில் மருத்தவ பரிசோதனை நடைப்பெறுகிறது. பெண்கள், முதியவர் என பாகுப்பாடு இல்லாமல் அனைவரும் நிர்வாணமாக அந்த மைதானத்தை சுற்றி வர பணிக்கபடுகின்றனர். இப்படியே இரண்டு மூன்று முறை சுற்றி வந்த பின் மெல்ல மூச்சு வாங்குபவர்களும், சற்று சோர்ந்து காணப்படுபவர்களும் சுடப்படுகின்றனர். அடுத்த சுற்றுக்கு மற்றவர்கள் ஆயத்தமாகின்றனர்.

படத்தின் இறுதி காட்சியில் 1993 ஆம் வருடம், போர் முடிந்த 48 ஆண்டுகளுக்கு பின் ஷிண்ட்லரின் கல்லறையில் சிறு கல்லை வைத்து யூத இன மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். போலந்தில் வாழும் யூதர்களின் எண்ணிக்கை 4000, ஷிண்ட்லரால் காப்பாற்றப்பட்டு உலகெங்கும் வாழும் ஷிண்ட்லர் யூதர்களின் எண்ணிக்கை 6000 என்ற வாக்கியம் மெல்ல திரையில் தோன்றி மறைகிறது.



“In memory of the more than six million Jews murdered” என்ற வரிகளுடன் படம் நிறைவடைகிறது.

2. The Pianist (2002)

Director: Roman Polanski

Awards: Palma d’Or at Cannes, 2 Academy awards

ஒரு இசைக் கலைஞன் மேல் போர் தன்னுடைய குரூரமான கைகளை விரிப்பதை சித்தரிக்கும் படம் இது. ஸ்பில்மான் என்னும் பியானோ இசை நிபுணர், போலாந்து நாட்டில் உள்ள வானொலியில் பணி புரிகிறார். அந்த சமயம் ஜெர்மன்யின் தாக்குதல் தொடங்குகிறது. பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஜெர்மனி எதிர்க்க போகிறது என்னும் செய்தி கேட்டு அவர்கள் மனம் சற்று சமாதானம் அடைகிறது. மிக விரைவில் இந்த போர் நின்று விடும் என்று.



மனித கனவுகளை விட அவனது குரூரம் வலிமையாக போர் தீவிரமடைகிறது. ஜெர்மன் போலாந்தை ஆக்ரமித்தப் பின் யூதர்கள் மீது அவர்கள் காழ்ப்புணர்ச்சி திரும்புகிறது. ஸ்பில்மானும் அவரது குடும்பத்தினரும் கெட்டோ என்னும் வதை முகாமிற்கு அழைத்து செல்ல படுகின்றனர். ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் திரைப்படம் நம்மை ஒரு பார்வையாளனாய் உணர செய்வதென்றால், பியானிஸ்ட் நம்மை அந்த கலைஞனோடு சேர்ந்து பதற்றம் கொள்ள செய்கிறது.

படம் முழுக்க ஒரு இசை கலைஞன் பார்வையில் நகர்வதினாலோ என்னவோ, அதிர்வுகள் மிக மென்மையாகவே உருவாக்கப் பட்டுள்ளது. முகாமிற்கு செல்லும் ஸ்பில்மான் அவரது குடும்பதினரிடம் இருந்து பிரிக்க படுகிறார். அவரை கொலை செல்ல அழைத்து செல்லப்படுகையில், வானொலியில் அவருடன் பணி புரிந்த யூதர் அல்லாத ஒருவரால் காப்பாற்றப்பட்டு ஒரு தனி வீட்டில் தங்க வைக்கப்படுகிறார்.



அங்கே தங்க முடியாத நிலை ஏற்பட்ட உடன், இடிந்த கட்டடங்களில் வசிக்க துவங்குகிறார். அங்கே போதிய உணவு இல்லாமல் சோகையுற்று மஞ்சள் காமாலையால் பாதிக்கப் படுகிறார். இதனூடே வதை முகாம்களில் மனித வேட்டை எந்த மனிதமும் இல்லாமல் நடை பெறுகிறது. இடிந்த வீடுகளை பார்வையிடும் ஒரு ஜெர்மன் அதிகாரி ஸ்பில்மானை கண்டுபிடிக்கிறார். இவர் ஒரு பியானிஸ்ட் என தெரிந்த பின், இவரை வாசிக்க பணிக்கிறான். பியானோவை தொட்டே ஒரு வருடம் ஆன நிலையில், அதை மீண்டும் தொட்ட பரவசத்தில் ஒரு இசைக் கோர்வையாய் வாசிக்கிறார். இந்த இடத்தில் ஆட்ரியான் ப்ரோடியின் நடிப்பு அற்புதமானது.



அதன் பின் அந்த ஜெர்மன் அதிகாரி, அவரை காப்பாற்றி தினம் உணவு தருகிறான். அதற்குள் ரஷ்ய படை அங்கே வர ஜெர்மன் அதிகாரிகள் சிறைபடுகின்றனர். ஸ்பில்மான் சோர்வுற்று பிணங்கள் சிதறி கிடக்கும் தெரு வழியாக தன் வீடு நோக்கி செல்கிறார். அவரை காப்பாற்றிய அந்த ஜெர்மன் அதிகாரி, ரஷ்ய படைகளால் பிடித்து செல்லப் பட, அவர் ஸ்பில்மானுக்கு தெரிந்த ஒருவர் மூலம் அவருக்கு செய்தி அனுப்புகிறார். ஆனால் ஸ்பில்மான் வருவதற்குள் அவர்கள் வேறு இடம் மாற்றப்படுகின்றனர்.

ஸ்பில்மான் அதன் பின் தன் அனுபவங்களை புத்தகமாய் எழுதி 2000 ஆம் ஆண்டு இறந்து போனார் என்னும் செய்தி திரையின் ஊடே நகர்கிறது. அவரை காப்பாற்றிய அந்த ஜெர்மன் அதிகாரி ரஷ்ய வதை முகாமில் 1952 ஆம் ஆண்டே கொல்லப்பட்டார் என்னும் செய்தியோடு.

மிகுந்த உக்கிரம் மிகுந்த ஜப்பான் தீவான இவோ ஜிமாவில் நடந்த போர், ஹிட்லரின் இறுதி நாட்கள், ஹிட்லருக்கு எதிராக நடந்த புரட்சிகள் ஆகியவை பின் வரும் பதிவுகளில்

தொடரும்….

இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |13 | 14 |

Wednesday, November 4, 2009

திருவான்மியூர்

பலகை வாரவாதி சாலையிலிருந்து இடப்புறம் திரும்பி கரடு முரடாக இருந்த கச்சாப் பாதையில் சிறிது வயல் வெளியும் நிறையவே கட்டாந்தரையாக இருந்த பிரதேசத்தில் அரை மைலுக்கும் மேல் நடந்தால் திருவான்மியூர் கோயிலின் மேற்கு கோபுரம் வரும். சம்பந்தர் பாடி புகழ் பெற்ற தளம் இது. மருந்தீஸ்வரர் உடன் உறையும் திரிபுர சுந்தரி கோவில் கொண்ட இடம். திருவான்மியூருக்கு வழி 1950களில் இப்படிதான் சொல்லப்பட்டது.



பலகை வாராவதி என்பது இப்போது பாடாவதி ஆன பெயர், அது முத்துலட்சுமி சாலையாய் உருமாறி, கல்கி சாலை என அழைக்கப்பட்டு, எம். எஸ். சுப்புலக்ஷ்மி சாலை ஆகி பழைய மகாபலிபுரம் சாலை என அழைக்கப்பட்டது. எல்லா வளர்ச்சியும் அடைந்த பின் நம் வழக்கப்படி அதற்கு ராஜிவ் காந்தி சாலை என பெயிரடப்பட்டது.

“நம்ம காசுல போடுற ரோடுக்கு ஏன் தலைவர்கள் பேர வைக்கிறாங்க, இதுல சுங்க வரி வேற. இதுக்கு, கோயிலுக்கு லைட் வாங்கி போட்டுட்டு தன் பேர போட்டுகிறவங்க எவ்வளவோ மேல்” (உபயம்: என் ரூம் மேட்)

எல்லாரையும் போல எங்களுக்கும் முதலில் திருவான்மியூரில் தான் வீடு கிடைத்தது அல்லது நாங்கள் கடற்கரையை ஒட்டி தான் வீடு தேடினோம். எனக்கு முன்னாலேயே வந்து வீடு பிடித்து விட்ட என் நண்பன், நான் சென்னை வந்து இறங்கியபோது, OMRல டைடல் பார்க் வந்துடு, அப்படியே அங்க இருந்து ஜெயந்தி தியேட்டர் சிக்னலுக்கு வந்துட்டு ஒரு ஆட்டோ புடி, ஆட்டோகாரன் கிட்ட, Seaward Street அஜீத் வீட்டுக்கு போகனும்னு சொல்லு என்றான்.

ஆட்டோகாரனிடம் இதை அப்படியே ஒப்பித்தேன், “அஜீத் வீடா, எனக்கு சரத் குமார் வீடு தானே தெரியும் என்றான்” (கிட்டத்தட்ட பாலவாக்கம்). கண்டிப்பா அதற்காக சரத் குமார் வீட்டிற்கு பக்கத்தில் வீடு எடுக்க முடியாது. ஒருவாறு என் நண்பனிடம் தொலைபேசி, சுச்சி வீட்டை கடந்து, அஜீத் வீடு வழியாக, யேசுதாசின் சென்னை வீட்டை ஒட்டிய ஒரு சந்தில் இரண்டாவது மாடியில் ஒரு ஆச்பெஸ்டாஸ் கூரை போட்ட வீட்டில் தஞ்சம் புகுந்தேன். அந்த வீட்டை பற்றிய மேல் விபரம் வேண்டுபவர்கள் பார்வை சிறுகதையின் வர்ணனைகளை பார்க்கவும்.

அலுவலகத்தில் சேர்ந்த முதல் ஒரு வருடம் எனது வாசம் திருவான்மியூரில் தான். ஆனால் அங்கே ஒன்றும் வாசம் நன்றாக இருந்ததில்லை, எப்போதும் உப்பும் மீனும் கலந்த காற்று. கையில் முதன் முதலில் காசு சேர்ந்த சந்தோஷத்தில் அலைந்த நாட்கள் அவை. வந்த புதிது என்பதினால் வண்டி வாங்கி இருக்கவில்லை. திருவான்மியூர் கடற்கரையிலே பல மாலை கழிந்தது. ஐந்து நிமிடத்தில் எட்டி விட கூடிய தூரத்தில் கடல். தூக்கம் வராமல் புரளும் இரவுகளில் வெளியே வந்தால் கடல் அலைகள் ஓயாமல் புரளும் இசை கேட்கும்.

பல வீடுகளில் மொட்டை மாடிகளிலேயே எல்லோரும் படுத்திருந்தனர். கடல் காற்றினாலோ என்னவோ, கொசு அதிகம் இருக்கவில்லை. அந்த சிறிய அறையில் தூங்க இடம் இல்லாமல், வெளியே படுத்து கொண்டு தூங்கிய இரவுகளில் நீண்ட நாட்களுக்கு பின் நிலவை பார்த்து கொண்டே தூங்கியது நினைவு இருக்கிறது. கடலில் இருந்து நேரடி தொடர்பு என்பதால், நிலத்தடி தண்ணீருக்கு எப்போது ரோஷம் அதிகம். அவ்வளவு உப்பு ஆகாது, திருமணம் வரை தலை முடியை காக்கும் பொருட்டு இரண்டு மாடி கீழே இறங்கி அடி பம்பில் தண்ணீர் அடித்து கொண்டு வருவோம்.

நீண்ட நாட்களாக என்னிடம் எதையோ பேச துடிப்பது போல் பார்த்து கொண்டிருந்த அந்த பக்கத்து வீட்டு குட்டி பெண், ஒரு முறை நான் தண்ணீர் பிடிக்கையில் தான் வந்து என்னிடம் பேசியது. “அண்ணா, அந்த டாங்க்ள தண்ணீ இருக்கு, மாசம் இருபத்து ரூபா கொடுத்த அதுல இருந்த பிடிச்சுக்கலாம்” என்றாள்.

எதிர்கால கனவுகள் சுமந்த பேச்சுக்களை பல நாட்கள் அந்த மொட்டை மாடி சுவர்கள் தான் கேட்டு கொண்டிருந்தது. ஒரு வருடத்தில் வெளிநாடு, இரண்டு வருடத்தில் பதவி உயர்வு, ஊர்ல அப்பாவுக்கு ஒரு புது வண்டி என. அதற்கு முன்பு அந்த வீட்டில் இருந்தவர் அலுவலகம் மூலம் வெளிநாடு சென்று இருக்கிறார் என்பது கூடுதல் சந்தோஷம் அளித்தது. ஆனால் அதையே காரணம் காட்டி வீட்டு ஓனர், “ராசியான வீடு தம்பி என்று ஒரு வருடத்தில் இரண்டு முறை வாடகை உயர்த்தி விட்டார்”. இத்தனைக்கும் எனது அறை நண்பனின் மாமா முறை அவர்.

திருவான்மியூர் கடற்கரையில் இருந்து தெரிந்த பெசன்ட் நகர் கடற்கரையை ஒருமுறை நடந்தே கடந்தோம். சூரிய உதயம் பார்க்க அலாரம் வைத்து எழுந்தோம். டீ.வீ தொடர் நடிகர்கள் நடிகைகள், தொலைகாட்சியில் செய்தி வாசிபவர்கள், பயில்வான் ரங்கசாமி, காதல் சந்த்யா என பார்த்த அத்தனை விஷயங்களையும் பெருமையாய் ஊரில் சொல்லி கொண்டு திரிந்தோம். கையில் காசு பார்த்த சந்தோஷத்தில் புதிது புதிதாய் புத்தகம் வாங்க தொடங்கினேன்.

இப்படி எல்லாம் எழுதுவாங்களா என வியந்தது அந்த சிறிய வீட்டில் தான் தொடங்கியது, பிடித்த அத்தனை எழுத்துகளின் சொந்தகாரர்களையும் பார்த்து விடுவது என முடிவு எடுத்தும் அங்கேதான். சுஜாதா படித்து விட்டு அவரை சந்திக்கும் முன் அவரது எல்லா எழுத்துக்களையும் படிக்க வேண்டும் என அவரது புத்தகங்களை படித்து தள்ளினேன்.

மீண்டும் ஒருமுறை வாடகை ஏற்றப்பட்ட போது, மனம் தாங்காமல் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. இப்போதும் விருப்பமான அந்த கோவில், பெரும்பாலும் யாருமற்ற அந்த கடற்கரை தெருக்கள், கடைசி வரை சிரித்த படியே பரிமாறிய அந்த வேப்பமரத்தை ஒட்டிய பாட்டி மெஸ், RTO Bus Stop எல்லாம் அவ்வபோது நினைவு வருகிறது.

இப்போது யாரவது முதல்ல சென்னைல எங்கே இருந்தீங்க என்றால், திருவான்மியூர்!, தி.ஜா தெரியுமா அவர் அங்கதான் கடைசியா வாழ்ந்தாராம். அப்புறம் அந்த கோவில் 1500 வருஷம் பழைமையான கோவிலாம். சம்பந்தர் இந்த கோவில பத்தி பாடி இருக்கிறார். ரொம்ப நல்ல இடம் பார்த்துக்கோ என்றுதான் பேச துவங்குகிறேன்.

எப்போதாவது அந்த கடற்கரைக்கு செல்கையில், கனவுகளோடு திரியும் முகங்களை பார்க்க முடிகிறது. ELT Tag போட்டு கொண்டு சந்தோஷமாய் வருபவர்களோடு நான் பார்த்த எல்லா முகங்களும் வந்து வந்து போகிறது. அதனோடு ஓரமாக சுஜாதாவை கடைசி வரை சந்திக்கவே இல்லை என்ற எண்ணமும்.

Thursday, October 29, 2009

என் ஜன்னல் வழியே # 5

சமீப காலமாய் காந்தியைப் பற்றிய பல செய்திகளைக் கேள்விப் பட்ட வண்ணமே இருக்கிறேன். மிட்டாய், காலை கொடியேற்றம், பேச்சு போட்டி, மாறுவேட போட்டிகளை கடந்த பின் தான் காந்தியைப் பற்றிய சில புரிதல்கள் எனக்கு உருவாக தொடங்கியது. பள்ளி இறுதி வகுப்பில் ஒருநாள், எங்கள் ஊர் நூலகத்துக்கு சென்று சத்யசோதனை படித்தது நினைவு இருக்கிறது. அவருக்கு அசைவ உணவு சாப்பிட்ட அன்று இரவில் ஆடு கத்துவது போல் கனவு வந்திருக்கிறது என்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன். அதே போல் எனக்கும் நேர்ந்திருக்கிறது. மீண்டும் இதே வரிகளை சுஜாதா க.பெ வில் குறிப்பிட்ட அன்று ஒரு மெல்லிய சிரிப்பு வந்தது.

நம்மில் பலரை போலவே அவரும் அப்பாவிடம் இருந்து காசு திருடி இருக்கிறார். மிக எளிய வார்த்தைகள் கொண்ட அந்த புத்தகம் எனக்கு மிகவும் பிடித்து போனது. அப்போதைக்கு என்னால் உள்வாங்கி கொள்ள முடியாத விஷயங்களுக்காக இப்போது மீண்டும் அவற்றை படித்து கொண்டு இருக்கிறேன். சமீபத்தில் அமெரிக்க அதிபரிடம், நீங்கள் யாருடன் உணவு அருந்த அசைப்படுகிறீர்கள் என்பதற்கு, “காந்தி” என பதில் அளித்தார். அதைப் பற்றிய எழுத்தாளர் வாஸந்தி அவர்களின் கட்டுரையை இங்கே காணலாம். அதே போல், அம்பேத்காரையும், காந்தியையும் ஒப்பு நோக்கி, ஜெயமோகனின் ஒரு நீண்ட கட்டுரை அவரது வலைத்தளத்தில் வந்துள்ளது. மிக நேர்த்தியான கட்டுரை, ரசித்து படித்து கொண்டு இருக்கிறேன்.

Indian Born American wins Nobel படிக்க சந்தோஷமாய் இருந்தாலும், அதன் நிதர்சனம் உறுத்துகிறது. திரு. வெங்கடராமன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நோபெல் பரிசு, நமது உடம்பில் உள்ள செல்லில் ஒரு முக்கிய பங்கு ஆற்றும் Ribosomeன் வடிவத்தை கண்டுபிடித்ததற்கு கொடுக்கபட்டுள்ளது. உண்மையில் மிக சிக்கலான காரியம் அது செய்வது.

எளிதில் புரிந்து கொள்ள இப்படி வைத்து கொள்வோம், முதலில் ஒரு கதையோ, கட்டுரையோ ஒரு ரஷ்ய எழுத்தாளருக்கு அவர் மனதில் எண்ணங்களாக உருவாகிறது. அதை அவர் பதிவு செய்கிறார் என வைத்து கொள்வோம். இப்போது அதை நாம் படிக்க வேண்டுமானால், ரஷ்ய மொழியும் ஆங்கிலம் (அ) தமிழ் தெரிந்த ஒருவர் மொழி பெயர்த்தால் தான் நம்மால் படிக்க முடியும் அல்லவா. அந்த மொழி பெயர்ப்பை கண்காணிக்கும் வேலையைத்தான் செய்கிறது Ribosome. இப்போது மேற்சொன்ன விஷயத்தில் இரு நிகழ்வுகள் உள்ளன என்பதை நீங்கள் ஊகித்து இருப்பீர்கள், ஒன்று பிரதிஎடுத்தல், மற்றொன்று மொழிபெயர்த்தல்.




(மேலே உள்ள படம், நமது செல்லின் குறுக்கு வெட்டு தோற்றம், படத்தில் உள்ள அளவு நேர்த்தியாக ஈஸ்ட்மன் கலர் எல்லாம் இருக்காது. படத்துக்காக சில எடிட்டிங் வேலை செய்யப்பட்டுள்ளது. அதில் strawberry பழ நிறத்தில் உள்ளதே அவை ER எனப்படும் Endoplasmic Reticulum , அதில் உள்ள சிறு சிறு கரிய புள்ளிகள் தான் நோபெல் பரிசு வாங்கி தந்தது )

நமது செல்லின் கருவுக்குள் இருக்கும் செய்திகளை அப்படியே பிரதியெடுத்து வருவது mRNA (Messenger RNA) எனப்படுகிறது. இந்த mRNA என்பது, ஒரு ரஷ்யரின் எண்ணங்களை பிரதி எடுத்ததை போன்ற புரியாத லிபி . இந்த mRNA வில் செய்திகள் மூன்று மூன்று எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளின் கோர்வையாய் உள்ளது. ஒவ்வொரு மூன்று எழுத்து வார்த்தைக்கும் நிகரான ஒரு பொருள், அதாவது அந்த ரஷ்ய வார்த்தைக்கு நிகரான தமிழ் சொல் எனக் கொள்வோம், உள்ளது.

அந்த சொற்களை தாங்கி நிற்பது தான் tRNA (Transfer RNA). இப்போது mRNAவில் உள்ள அத்தனை வார்த்தைகளும் மிக சரியாக tRNA வார்த்தைகளாக Ribosomeன் கண்காணிப்பில் மொழி பெயர்க்கப்பட்டு பல சொற்றோடர்கள் கொண்ட ஒரு கதை நமக்கு கிடைக்கிறது . அதுதான் ப்ரோடீன், நம் நிற்க, நடக்க, கதை எழுத, கவிதை எழுத, சைட் அடிக்க தேவைப்படும் அத்தனை சக்தியை தட்டும் ப்ரோடீன். நமது தமிழ் மெட்டில் சொல்ல வேண்டும் என்றால், “ஒரு mRNA ஒரு tRNA சரியாக மொழி பெயர்ந்தால் ப்ரோடீன்”.



சுஜாதாட்ஸ்:

என் கல்லூரி படிப்பு, திருச்சி புனித வளனார் கல்லூரியில், கல்லூரியில் அப்படி ஒன்றும் பிரபலமாகவோ, மற்றவர் கவனத்தை கவர்ந்தவனாகவோ இல்லை. அப்துல் கலாம் எனது வகுப்பு தோழர், அவரும் அப்போது கல்லூரியின் அத்தனை பரிசுகளையும் கவர்ந்து சென்றதாக நினைவில்லை. இதில் எதோ ஒரு நீதி இருக்கிறது

இந்த தொடரின் முந்தையப் பதிவுகள் 1 | 2 | 3 | 4 |

வலி

இன்று ஊருக்கு வருவதாய் நான் யாரிடமும் சொல்லவில்லை, இருந்தால் அம்மா நான் வரும் வரை தூங்காமல் விழித்து கொண்டு இருப்பாள். நான் கோவையில் இருந்து பேருந்து ஏறியது முதல் சரியாக நடத்துனர் ஊர் பெயர் சொல்வதற்கு முன்பு தொலைபேசிவிடுவாள். அவினாசி தாண்டியாச்சா? இன்னுமா பெருந்துறை வரலை?. சரி சங்ககிரி வந்துட்டு கூப்பிடு என ஒரு ஐந்து முறையாவது பேசிவிடுவாள். அதுவும் பேருந்து சிறிது தாமதம் என்றால், அவள் குரலே மாறி விடும், அதனாலேயே நான் அவளிடம் சொல்லவில்லை. இன்று கல்லூரியில் இருந்து கிளம்ப நேரமாகி விட்டது, அந்த தெர்மோடைனமிக்ஸ் ப்ரொபசர் கடைசி வகுப்பில் கழுத்து அறுத்து விட்டார்.

காந்திபுரம் சென்று அங்கிருந்து கிளம்பவே மணி 8 ஆகி விட்டது, எப்படியும் சேலம் போக மணி 12 என்றாலும், ஊத்தங்கரையில் வீடு போய் சேர 2 மணி ஆகிவிடும். அம்மா எத்தனை மணிக்கு படுத்தாலும் காலை ஆறு மணிக்கு எழுந்து விடுவாள். எப்படியும் நான் வந்த பின் ஒரு இரண்டு மணி நேரம் அவள் தூக்கம் கெடத்தான் போகிறது. கல்லூரியில் நடந்த ஒவ்வொன்றையும் அவளிடம் சொல்லாமல் எனக்கோ, வீட்டில் நடந்ததை என்னிடம் சொல்லாமல் அவளுக்கோ அந்த இரவு தூக்கம் கொள்ளாது. நான் நினைத்ததை போலவே, பேருந்து சற்று தாமதமாக தான் வந்து சேர்ந்தது.

ஊரில் லேசாக மழை பெய்து வடிந்து இருந்தது. எப்போதும் பேருந்து நிலையத்தை ஒட்டிய ஓலை கொட்டகையில் தூங்குபவர்கள், பேருந்து நிலைய கட்டிடத்திற்குள் ஒடுங்கி நின்றனர். இரவு ரோந்து வரும் காவலர்களும் அவர்களை ஒன்றும் சொல்லவில்லை. வீடு வந்து சேர்ந்த போது மணி மூன்று, அம்மாதான் கதவு திறந்தாள். கண்ணு என்று அணைத்து ஒரு முத்தமிட்டாள். நான் சற்று குனிய வேண்டி இருந்தது. ஏண்டா குட்டி ஒரு போன் பண்ண கூடாதா? என்றாள். நான் ஏன் பண்ணவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டிருப்பாள்.

நான் முகம் கழுவி வருவதற்குள், என் லுங்கியும் துண்டும் எடுத்து வைத்து விட்டு, தோசை வார்த்துக் கொண்டிருந்தாள்.

எதுவும் சாப்பிடலதானே?

இல்லை மா.

என்னா வயிறோடா உனக்கு?, பஸ்ல போறதுக்கு முன்ன சாப்டா கூட ஒத்துக்க மாட்டனுதே.

விடுமா பழகிடுச்சு.

ரூம்ல பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா? குமார் எப்படி இருக்கான்?

ம்ம்ம்… தோசை செம மா… எல்லாம் நல்லா இருக்காங்க.

அம்மா சற்று திரும்பையில்,

ஏம்மா இந்த கன்னம் கொஞ்சம் வீங்கின மாதிரி இருக்கு?

மெல்ல தொட்டு பார்த்து கொண்டு,

அதுவா இந்த கடவா பல்லுல இரண்டு நாளாவே வலி.

அப்பாட்ட சொன்னயா, எதாவது டாக்டரா பார்த்தாயா?.

இல்லை என்றாள். அப்பா எங்கள் யாரையும் டாக்டரிடம் அழைத்து சென்றதாய் நினைவு இல்லை, முக்கியமாய் அம்மாவை. ஆனால் எப்போது சொன்னாலும், உடனே காசு கொடுத்து விடுவார். எப்போதும் அதற்கு கணக்கு கேட்க மாட்டார். அவருக்கு ஏற்றார் போல், அம்மா உடம்பு சரி இல்லாமல் இருந்து நான் பார்த்ததே கிடையாது. இல்லை ஒருவேளை அப்படி இருந்த சமயங்களை நாசுக்காய் எனக்கு தெரியாமல் மறைத்து விட்டாலோ என்னவோ. ஆனால் அப்பாவிற்கு காய்ச்சலோ, இல்லை அந்த ஒற்றை தலை வலியோ வந்து விட்டால், வீடே ஒரு விதமான சோகத்தில் மூழ்கி விடும். வீட்டில் எல்லாருக்குமே சீக்கோ என்னும் அளவு.

எப்போதும் போல் அந்த சமயங்களில் என்னால் பேச முடிந்ததில்லை. அப்பா அந்த காவி நிற கம்பளியை சுற்றிய வண்ணமே இருப்பார். அப்போதும் அவருடைய வழக்கமான புகை பிடிக்கும் நேரம் தவறுவதே இல்லை. அவரிடம் எப்போதும் வரும் புகை நாற்றம் போல் இல்லாமல் அந்த நாளில் சற்று வேறு மாதிரி இருக்கும். அந்த சமயங்களில், அம்மா அவருக்கு கொடுக்க சொல்லும் சுடு தண்ணீரை கூட, வைத்த உடன் ஓடி வந்திருக்கிறேன். ஒருமுறை அவருக்கு வந்த சளி மூன்று வாரம் நீடித்தது, அப்போதெல்லாம் அப்பா வெளியே செல்வதே இல்லை. முடிந்தால் மாடியில் ஒரு 10 நிமிடம் நடந்து விட்டு வருவார்.

வருத்த வறுத்த கடலையும் கொஞ்சம் வெள்ளமும் வெல்லமும் சாப்பிடுவார். அப்பாவுக்கு என்னமா என்றதற்கு, டாக்டர் தம் அடிக்க கூடாதுன்னு சொல்லிட்டார், அதான் இப்படி சுத்தி சுத்தி வரார் என்றாள். அவள் சொன்னது போலவே, அப்பாவிடம் வரும் அந்த நாற்றம் வர வில்லை. அந்த நாளில் ஒரு முறை நானே அவருக்கு நெஞ்சில் தைலம் தேய்த்தது நினைவிருக்கிறது. ஆனால் அது மூன்று வாரம் தான்.

இப்போது கூட அம்மாவை நானே பார்த்து கேட்டிருக்காவிட்டால், பல் வலி பற்றி என்னிடம் சொல்லி இருக்க மாட்டாள். காலை எழுந்து குளித்து உடன், முதல் வேலையாய் அம்மாவை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றேன். பல்லில் ஒரு குழி இருக்கிறது என்று பரிசோதித்து விட்டு, சிமன்ட் பூச்சு ஒன்றை வைத்து அடைத்து விட்டார்கள். அம்மா வீடு வரும் வரை பல்லை நிரடி கொண்டே இருந்தாள்.

என்னமா?

இல்லை, ஏதோ பாக்கு பல் இடுக்குல மாட்டின மாதிரி இருக்கு என சொல்லி ஒரு பலவீனமான புன்னகை உதிர்த்தாள். வந்த உடன் வலி சற்று குறைந்திருந்தது. ஆனால் பல்லை நாவல் துழாவி கொண்டே இருந்தாள். என்ன என்றதற்கு ஒன்றும் சொல்லவில்லை. மதியம் சாப்பிடும் போதும் சரியாக சாப்பிடவில்லை. அடைக்க பட்ட அந்த சிமன்ட் பல்லின் அளவை விட சற்று அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தது. அதனால் மேல் பல்லோடு சேராமல், இடையில் ஒரு பாறை போல் மாட்டிகொண்டிருப்பதாக சொன்னாள்.

மதியம் அவளிடம் அதிகம் நான் பேச்சு கொடுக்கவில்லை, ஒவ்வொரு முறை வாய் அசைகையிலும் முகத்தில் வலி தெரிய ஆரமித்தது. மதியம் சாப்பிட வந்த அப்பாவிற்கு நானே உணவு எடுத்து வைத்தேன். மருத்துவமனை போய் வந்ததை சொன்னேன்.

எவ்வளவு ஆச்சு? என்றார்.

மாலை மீண்டும் அம்மாவை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றேன், அந்த டாக்டர் இல்லை, மற்றவர் பரிசோதித்து விட்டு, கொஞ்சம் அதிகமா வச்சுட்டாங்க கரைஞ்சா சரி ஆகிடும் என்றார். அம்மா வலி பொறுக்க முடியவில்லை, அதை கொஞ்சம் குறைச்சுடுங்க என்றார். அம்மாவின் வாய் நோக்கி வெளிச்சம் பாய்ச்சி, ஐந்து நிமிடத்தில் குறைத்து விட்ட பின் காலையில் இருந்து முதல் முறையாய் அம்மா சிரித்தாள்.

பல் வலி மட்டும் தாங்கவே முடியருது இல்லை சார், உயிரே போய்டுது. பத்து வருஷத்துக்கு முன்ன ஒரு முறை இப்படிதான், ஆனா இதை விட பயங்கர பல் வலி, தூக்கு போட்டுக்கவே போய்டேன்.

இப்போதான் உயிரே வந்த மாதிரி இருக்கு என்றாள்.

மருத்துவமனையில் பணம் செலுத்தி விட்டு வரையில்,

என்னமா தீடிர்னு இப்படி சொல்லிட்ட, தூக்கு போடுற அளவுக்கு, நீ போய் இருந்தா எங்க நிலைமை என்ன? என்றேன்.

அதனால தாண்டா குட்டி போட்டுக்கல என்றபடி நடக்க தொடங்கினாள். அன்று அப்பாவிடம் வலியைப் பற்றி சொன்னயாமா என கேட்க நினைத்து நிறுத்தி கொண்டேன்.

முந்தைய சிறுகதைகள்  1 | 2 | 3 |

Wednesday, September 30, 2009

கோவேறு கழுதைகள் - இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்

விடுமுறை நாட்களை செலவில்லாமல் கழிக்க எப்போதும் கிராமத்து பாட்டி வீடே உகந்தது. இன்றும் மறக்க முடியாத சில நினைவுகள் கிராமம் சார்ந்தே உருவானது. கோடை கால விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்க்கு செல்கையில் எப்போதும் கூழ் ஆக்குவார்கள். இரவு உணவு ரசம், பொரியல் என்ற எந்த ஆடம்பரமும் இல்லாமல், வாணலியில் வதக்கிய கத்தரிக்காய் கார குழம்புடன் முடிந்த விட்ட நாட்கள் தான் அநேகம். அதுவும், எனக்கு விருப்பமென பாட்டி வாணலியிலேயே சிறிது சாதம் போட்டு பிசைந்து தந்தது இன்னும் நினைவிருக்கிறது.

இரவு ஏழு மணிக்கு இருட்ட தொடங்கிய பின் அன்றைய அலுப்பு தீர தூக்கம் தழுவுகையில், ” அம்மா வண்ணாத்தி வந்திருக்கேன்” என்ற குரல் கேட்கும். அந்த இருளில் பாட்டி மெல்ல அசைந்து அசைந்து கூழ் எடுத்து வீட்டு வாசல் நோக்கி செல்வது ஓவியம் போல் மனதில் தங்கி விட்டிருக்கிறது.

அதனால் தானோ என்னவோ, இமையம் அவர்களின் “கோவேறு கழுதைகள்” படிக்க ஆரமித்த இரண்டு பக்கங்களில் முழுக்க அந்த நாவலோடு கரைந்து விட முடிந்திருக்கிறது. ஆரோக்கியம் அந்த கிராமத்து துணிகளை எல்லாம் துவைக்கும் வண்ணாத்தி. கதை ஆரோக்கியம், அவளது கணவன் சவுரி, பிள்ளைகள் ஜோசப்,பீட்டர், மேரி மற்றும் மருமகள் சகயம் ஆகியோரை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மெல்ல மாற்றங்கள் காணும் ஒரு கிராமமும், வேர்களை விட்டு செல்ல துடிக்கும் புதிய தலைமுறையும் ஆரோக்கியத்தின் பார்வையில் விவரிக்கப்படுகிறது. நாவலில் முதல் பாகம் அவர்கள் தங்கள் தெய்வமான அந்தோனியாரை பார்க்க வெளி ஊருக்கு செல்வதுடன் தொடங்குகிறது. குடும்பத்துடன் ஊருக்கு செல்ல அவள் ஊரிலுள்ள மக்கள் அனைவரிடமும் சம்மதம் பெறும் காட்சிகள் தொட்டு செல்லப் பட்டுள்ளது. நேரடியாக எந்த அவலமும் சித்தரிக்கப் படாமலேயே, அந்த இடங்களில் இரந்து வாழ வேண்டிய ஆரோக்கியம் குடும்பத்தின் நிலை சொல்லப்பட்டு விடுகிறது.

இயல்பான சித்தரிப்புக்களும், யதார்த்தமான நிகழ்வுகளும் இணைந்து ஒரு அசல் வாழ்வு கண் முன் நிறுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, நாவலின் இரண்டாம் அத்தியாயத்தில், இறந்து போன ஒருவருக்கு சவுரி பாடை அமைக்கும் காட்சிகள் விளக்கப்படும் இடம். அதே போல் ஆரோக்கியம் மற்றும் மேரி இடையேயான உறவும், மேரி மேல் அவள் கொள்ளும் பாசமும் சொல்லப்படும் இடங்கள் அழகானவை. மேரி கோவித்து கொண்ட ஒரு கணத்தில் உவமை இப்படி வருகிறது, “நல்ல பாம்பாட்டம் மூஞ்சிய தூக்கி வக்சுக்கிறா?”

காலையில் வீடுகளுக்கு சென்று துணி எடுத்து வருதல், இரவு சட்டியை தூக்கி கொண்டு அங்கு சோறு வாங்க போதல் என நீள்கிறது அந்த வாழ்க்கை. முதன் முதலில் இந்த வாழ்க்கைக்கு உட்படுத்தபடுகையில், பீட்டர் ஆரோக்கியத்திடம்,

” ஏம்மா நாம்ப ராச்சோறு எடுக்காம இருக்கக் கூடாதா?” என்கிறான்.

ஊரில் உள்ள பசங்க எல்லாம் ராச்சோறு என கிண்டல் செய்வதை அவன் கூறும் இடமும், ” மத்தவுங்க ஊடுமாரி நமூட்ட்லியும் சோறாக்கு” என கூறும் இடமும் அழுத்தமானவை.



பல சமயங்களில் ஆரோக்கியம் படும் ஆற்றாமையும் சோகமும் எளிய வார்த்தைகள் கொண்ட பாடல்களாய் உருபெறுகிறது. தன் மகன் அவன் மனைவியின் சொல் கேட்டு நகரத்திற்கு சென்ற பின், தன்னை காப்பாற்றுவான் என நம்பிய அவன் விட்டு சென்ற துயரை

பச்சக் கிளி வளர்த்தன் - அது

பறக்கையிலே தப்பவிட்டன்,

குஞ்சுக் கிளி வளர்த்தன் - அது

கூவையிலே தப்பவிட்டான்

என புலம்புகிறாள்.

அதே போல் நாவலில் ஆரோக்கியம் அந்த ஊரிடம் கொண்ட பற்றும், ஊர் மக்கள் மீது கொண்ட பாசமும் அசலானவை. மாலை நேரத்தில் வீடுகளில் அமர்ந்திருக்கும் ஊரார்களை வார்த்தைகள் மூலம் இணைத்து போகிறாள். ஊரிலுள்ள எல்லார் மேலும் அவளுக்கு இணக்கம் இருக்கிறது. கடைக்கு சென்று வீடு திரும்புகையில் எதிர்படுபவர்களிடம்,

” அட அந்தோனியார, இம்பூட்டு எலப்பாயிருக்கீங்களே, சொவமில்லியா?

“இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமீ”

“ உங்க பற வண்ணாத்தி சாமீ” என சொல்லியபடியே செல்கிறாள்.

மெல்ல மெல்ல அந்த ஊர் தன் நிலை மாறும் இடமும், அந்த மக்கள் படும் மாற்றங்களும் ஆரோக்கியத்தின் பாடல் வழி வெளிபடுகிறது.

வாவுக்கும் அஞ்சவில்ல

சாவுக்கும் அஞ்சவில்ல

சமாதிக்கும் அஞ்சவில்ல

சமாதிக்கும் அஞ்சவில்ல - பாயிம்

சனங்களுக்கு அஞ்சனனே!

தலித் ஆக்கங்களில் மிக முக்கியமான நாவலாக கருதப்படும் இந்த நாவல் 1984ல் வெளியானது. ஆங்கிலத்தில் “Beasts of Burden ” என்ற பெயரில் வெளியாகி பரவலான வாசக கவனத்தை பெற்றது. க்ரியா பதிப்பக வெளியீடான இந்த நாவல் தமிழ் நாவல்களில் மிக முக்கியமான யதார்த்தவாத நாவல்.

Friday, September 25, 2009

என் பெயர் ராமசேஷன் - பிம்பங்களை களைந்தபடி

தூசு படாமல் வளர்ந்து முதன் முதலில் இளைஞனாக இந்த சமூக கட்டமைப்பில் நிறுத்தபடுகையில் தனது தனித்தன்மை பற்றிய கேள்வி வருகிறது. இந்த அமைப்பில் தன்னை பொருத்தி கொள்வது பற்றிய தன்னுணர்வு தலை தூக்க தொடங்குகிறது. தமது உயரத்திற்க்கோ, நடைக்கோ, பழக்கத்திற்கோ ஏற்றார் போல் இல்லாத இந்த அமைப்பைப் பற்றிய சலிப்பு உருவாகிறது. தனது பாதையை முடிவெடுப்பது பற்றிய கனவுகளும், அது தரும் நிச்சயமின்மையும் தொடர்ந்து பயமுறுத்த தொடங்குகிறது. இது வரை குழந்தை என சொல்லி வந்த வீட்டில், அவனை பற்றிய எதிர்ப்பார்ப்புகள் மாறுகின்றன.

இந்த நிச்சயமின்மை தரும் பதற்றம் சமூகத்தை பற்றிய கோபமாகவும், மேலான ஒரு நாட்டை பற்றிய கனவாகவும், ஒரு வகையில் காதலாகவும், சில சமயம் காமமாகவும் வெளிப்படுகிறது. ஏதோ ஒரு அலுவலகத்தில் தன்னை பொருத்தி கொண்டு திருமணம் செய்து கொள்ளுதல், வேறு தளத்திற்கு நகர்த்தி ஒரு தப்பித்தலை உருவாக்குகிறது. கழிந்து விட்ட அந்த இளமையும், அது தந்த வடுக்களும், அந்த போராட்டமும் மெல்ல மெல்ல தண்ணீரில் இறங்கும் கல்லை போல் மனதின் அடி ஆழத்திற்கு செல்கின்றன. தவிர்க்கப்பட்ட காதலும் அதன் நினைவுகளும் அடி நாக்கில் ஒட்டி கொள்ளும் காபியின் சுவை போல நம்மோடு ஒட்டி கொள்கிறது.

1980 களில் முதலில் உருவாக தொடங்கிய ஒரு விஷயம் Prolonged Adolescence . தமது முந்தைய தலைமுறையை விட ஒரு நீண்ட இளமை பருவத்தை கழிக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது. 18 வயதிலேயே திருமணம் என்ற நிலை மாறி, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் அதை 22-24 வரை உயர்த்தி இன்று 27-30 வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது . அப்படி எண்பதுகளில் வாழ நேர்ந்த இளைஞர்களை ராமசேஷன் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் சித்தரிக்கும் நாவல், ஆதவனின் “என் பெயர் ராமசேஷன்”.

1980 களில் வெளி வந்த காலம் முதல் தீவிரமான வாசிப்புக்கு உள்ளாகி வருகிறது “என் பெயர் ராமசேஷன்”. இந்த நாவல் இரண்டு பாகமாக பிரிக்கப் பட்டுள்ளது.. முதல் பாதியில் ராம்சேஷ் அவனுடைய அப்பா, அம்மா மற்றும் தங்கையின் அறிமுகம். அவன் கல்லூரியில் சேர்வது, அங்கு அவனுக்கு கிடைக்கும் இரண்டு நண்பர்கள் ராவ் மற்றும் மூர்த்தி. ராம்சேஷ்க்கும் ராவின் தங்கை மாலவிற்குமான காதல். நீண்ட நாள் பார்க்காதிருந்த பெரியாப்பவை சந்திப்பது ஆகியவை விவரிக்கப்படுகிறது. என்னளவில் மிகவும் கவர்ந்த இரண்டாம் பாதி, கலை, சினிமா, காதல் அதை ஒட்டி அணியப்படும் பிம்பங்கள் ஆகியவை ராமசேஷின் பார்வை மூலம் விளக்கப்படுகிறது.



காதலைப் பற்றிய பார்வைகள் மூன்று வெவ்வேறு காதல்கள் மூலம் முன் வைக்கப்படுகிறது. ஒன்று ராம்சேஷ் மற்றும் அவனது வசதி படைத்த நண்பனான ராவின் தங்கை மாலாவிற்குமானது. இரண்டு வெவ்வேறு பொருளாதார பின்னணிகள் கொண்ட அவர்களது எண்ணங்களும், அது அவர்களுக்கு இடையேயான சம்பாஷனைகளுடே பிரதிபலிப்பதும் மிக நேர்த்தியாக விவரிக்கப்படுகிறது. ராம்சேஷின் தேவைகள் முடிந்த பின் அவளை பற்றி அவள் மேல் ஒரு சலிப்பு வருகையில், அவளை பற்றி சொல்கையில்,

“அவளுடைய கேள்விகள் பலவற்றில் ‘என்னுடைய கீழ்மட்டத்துச் சூழலை‘ நாசூக்காகச் சீண்டுகிற பாவம் தொனிப்பதாக எனக்குத் தோன்றும் . அதாவது என் எல்லைகள் ராகம், தாளம், பல்லவிக்குள்ளும் சட்னி சாம்பாருக்குள்ளும் அடங்கிவிடுகிறவை. அவள் தொட்டிலில் கிடந்தபோதே சாச்சாச்சாவுக்குக் காலை உதைத்தவள், ஃப்ரூட் ஜெல்லியை நக்கினவள்… நான் இதேபோல, வேறு துறைகளில் அவளைவிட அதிகமாக எனக்கிருந்த பொது அறிவைப் பயன்படுத்தி அவளை மடக்க முயன்றால், அவள் உடனே தளுக்காக சம்பாஷணைத் தொனியை மாற்றி என்னை ஒரு dry professional type ஆக உணரச் செய்வாள். அப்பாவுடன் வெளியே போய்விட்டு வந்த குழந்தை தான் கண்ட அதிசயங்களை விவரிக்கும்போது அம்மா அதனிடம் காட்டுவது போன்ற ஒர் பாசாங்கு ஆர்வத்தையும் பரபரப்பையும் காட்டி, ‘என் கண்ணு!‘ என்று தட்டிக் கொடுப்பாள். குழந்தைத்தனமானவள், பக்குவம் பெறாதவள் என்று நான் அவளைச் சொன்னால் உடனே தாத்தா, ஹாஸ்ய உணர்ச்சியில்லாத ஜடம், என்று அவள் என்னைச் சொல்லுவாள். இதெல்லாம் எனக்குச் சலித்துப் போகத் தொடங்கியிருந்தது.”

மற்றொன்று மாலா உடனான காதல் முறிந்த பின், கல்லூரி தோழி பிரேமாவுடனான காதல். சற்று Intellectual ஆன அவளுடனான காதலில், அவர்கள் இருவரது Complex ம் மோதி கொள்ளும் இடங்களும், அவளை பற்றிய அவனது புரிதல்கள் உருவாக்கும் பிரச்சனைகளும் மிக விரிவாக பேசப்படுகிறது.

அடுத்து மிக முக்கியமான, மேலும் பேரு வாரியான காதல்களை பற்றிய கேலி ஆகியவை மூர்த்தி காதல் மூலம் விவரிக்கப்படுகிறது. மூர்த்தியின் காதலை பற்றி கூறுகையில்,

மூர்த்தி பாணி காதலுக்கு ரசிகர்கள் மிகவும் தேவைப்பட்டார்கள். நான் இன்று அவளை அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன், அவள் என்னைப் பார்த்து சிரித்தாள் அல்லது சிரிக்காமலிருந்தாள், நான் பார்த்த சினிமா போஸ்ட்டரையே அவளும் பார்த்தாள். இன்று அவள் மாட்சிங்காக ட்ரஸ் பண்ணிக்கொண்டிருந்தாள் என்கிற ரீதியில் அவன் பேசுவதை பிறரை கேட்க்கச் செய்வதன் மூலமாகவே அவன் ஒரு கதாநாயகனாக உணர்ந்தான்.

அதே போல, ராம்சேஷும் ராவும் தன் அப்பாக்களை மனதில் வைத்து உரையாடும் இடமும், ராம்சேஷ் அவனது பெரியப்பாவை சந்திப்பது மற்றும் இவன் முன் அவன் பெரியப்பா தான் ஒரு நவநாகரீகமானவன் என காட்டி கொள்ள முயலும் இடங்களும் மிக முக்கியமானவை. ராம்சேஷுக்கு தனது அப்பாவை பற்றிய புரிதல் உருவாகும் இடம் மிக மென்மையாக விவரிக்கப்பட்டுள்ளது. நாவலின் ஆரம்பத்தில் அவரை பற்றிய ஒரு மெல்லிய வெறுப்பும், ஏளனமும் கொண்ட அவனது பார்வை, அவரை அவன் விடுதியில் சந்திக்கையிலும், பின் பூங்காவில் சந்திக்கையிலும் மெல்ல உரு மாறுகிறது. ஒரு வகையில் எதிர் காலத்தில் அவனது வாழ்க்கை முறைக்கான Templateஒ அவரது வாழ்க்கை என என்னும் படி படைக்கப்பட்டுள்ளது.

இந்த நாவலை போலவே, இளைஞன் என்று உணர்ந்திருந்தவன் மெல்ல ஒரு முதிர்ச்சிக்கு வந்து தன் நிலையினை உணர்ந்து கொள்ளுதல் பற்றிய சுஜாதாவின் “நிலா நிழல்” என்னும் நாவல் எனது விருப்பத்திற்கு உரியது. திருச்சியில் இருந்து கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு அப்பாவிடம் பொய் சொல்லி திரும்பும் ஒரு இளைஞனைப் பற்றியது “நிலா நிழல்”.

அலைக்கழிக்கப்படும் இளமையின் வண்ணங்களை ஒரு சேர சொல்லும் இந்த நாவல் ஒரு அழகிய சித்திரத்தை போன்றது.

நூல்: என் பெயர் ராமசேஷன்

பதிப்பகம்: உயிர்மை

விலை: ரூ 120

Friday, August 21, 2009

அக்கா பெரியவளானப் பின் / நினைவழித்தல்

அக்கா பெரியவளானப் பின்


தூக்கம் கலைந்த நடுநிசிகளில்

அக்கா அருகில் தொலைந்து போக

துவங்கி இருந்தாள்..


கதவை திறந்த நேரங்களிலெளாம்

ரகசிய பேச்சுக்கள் நின்று போயின,


கிணற்றடிக்கு வந்து பேசும் நண்பர்களுக்கு கூட

தேனீர் வாசலுக்கே வந்தது,


எப்போதாவது பேசும்

கிராமத்து வசுவுகளைக் கூட

நிறுத்தி விட்டிருந்தாள்!


அப்புறம் ஒருநாள்,

அக்கா கல்யாணமாகி சென்று விட்டாள்.


எனக்கும் அம்மவுக்குமான

இடைவெளியை அப்படியே விட்டு விட்டு…

******************************************************************************

நினைவழித்தல்


நேற்று இரவு வடிந்து கொண்டிருந்த

கண்ணீரின் சுவடுகள்

தெரியவில்லை கண்ணாடியில்,


என் நிர்வாணம் பார்த்த மின்விசிறி

எப்போதும் போல சுழல்கிறது,


யாருக்கும் தெரியாதபடி

நனைந்து போன கைக்குட்டை

உலர்ந்து கிடக்கிறது,


சிரித்து கொண்டே அலுவலகம் நுழைகிறேன்,

ஒரு புன்னகையை ஏந்தி கொண்டு காத்திருக்கிறாய் நீ,

நேற்று கலைந்து விட்டிருந்த இடத்தை நினைவூட்டியபடி.

******************************************************************************

பிரிவு உபசாரம்


எப்போதும் கல்லூரியில் இருந்து

ஊருக்கு கிளம்புகையில்

கைப் பிடித்து பேசி கொண்டு

சேலம் வரை ஒன்றாகத்தான் வருவாய்,

மூன்று வருடம் கழித்து பார்க்கிறேன்

கைக்குழந்தையுடன்,

இப்போதும் சிரித்து கொண்டே விடை பெறுகிறாய்

உன் ஸ்பரிச தொடுகையின் சிலிர்ப்பை

உன் குழந்தையிடம் கொடுத்து

மாமாவுக்கு டாடா சொல்லு என்று….


******************************************************************************

புண்ணியம் சேர்த்து கொள்ளல்


அலுவலக நண்பர்களின்

தந்தைக்கோ தாய்க்கோ ரத்தம் தேவை

என வரும் மெயில்களை

உடனக்கு உடன் பார்வார்ட் செய்து

புண்ணியம் சேர்த்து கொள்கிறேன்,

கடைசி வரை ரத்தத்தின் க்ரூப் என்ன வென்று பாராமலேயே
******************************************************************************

Wednesday, August 5, 2009

ஆதவன் - கண்ணாடியில் பிரதிபலிக்கும் முகம்

சாதரண சந்திப்புகளில் உரையாடல்களில், நம்மை முழுதும் வெளிப்படுத்தி கொள்ள முடிவதில்லை. நம்முடைய இருப்பையும் மீறி, எதிரே பேசுபவரின் சிரிப்பு, முக அசைவு, போலித்தனங்கள் நம்மை பதற்றம் செய்ய வைக்கின்றது. நடந்து முடிந்த பின் இதை இப்படி பேசியிருக்கலாமோ என்று எண்ண ஆரமிக்கிறோம். ஒருவரை பார்த்த உடன் பிடித்து போவதோ, இல்லை பிடிக்காமல் போவதோ நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. பிடித்தமான ஒருவர் பேசும் பேச்சுகளே கூட சில சமயம் ஓர் வெறுப்பை உருவாக்கி விடுகிறது.

நாம் தினசரி பழகும் மனிதர்களுடன் சூமூகமாகவே இருக்க ஆசைப் படுகிறோம். அதை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள அவர்களுக்கு தகுந்தார் போல் நாம் வளைந்தோ நமக்கு தகுந்தார் போல் அவர்களை வளைத்தோ அதன் மூலம் ஒரு சின்ன அடிமைத்தனத்தையோ இல்லை ஒரு அதிகாரத்தையோ உருவாக்கிகொள்கிறோம். நாம் தனித்து விடப்படும் சில பொழுதுகளில் பரஸ்பர சுயநலதிற்க்காக நாம் அணிந்திருந்த வேஷங்களை களைகையில் உருவாகும் வெறுமையை மறைக்க நம்மை பற்றிய ஒரு சுய பச்சாதாபத்தை உருவாக்கி கொண்டு மீண்டும் நம்மை சிறைப் படுத்தி கொள்கிறோம். இந்த பிம்பங்களை சுற்றியே பின்னப்பட்ட வாழ்வில் தன்னை பொருத்தி கொள்ள முடியாதவர்கள் தொடர்ந்து ஒரு நிச்சயமின்மையை உணரத் தொடங்குகிறார்கள். இவை யாவும் தொடர்ந்த நமது நடிப்பாலும் நாம் அணியும் பிம்பங்களாலும் விளைபவை.

அதனால் தானோ என்னவோ, என் எழுத்துக்கள் யாவுமே நுட்பமான, நேர்மையான சம்பாஷணை முயற்சிகளென்றுதான் சொல்லவேண்டும் என்னும் ஆதவனை மனதுக்கு மிக நெருக்கமானவராய் உணர முடிகிறது. தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான பங்களிப்பு ஆதவனுடையது, நகர்ப்புற மதியத்தர இளைஞர்களின் வாழ்வை இவர் அளவிற்கு பதிவு செய்தவர்கள் குறைவே. “காகித மலர்கள்”, ‘என் பெயர் ராமசேஷன்‘ ஆகிய இரு நாவல்களையும் (உயிர்மை பதிப்பகம்) ‘இரவுக்கு முன்பு வருவது மாலை” என்னும் சாகித்திய அகாடமி பரிசு பெற்ற குறுநாவல் தொகுப்பையும் எழுதி உள்ளார். இவரது மொத்த சிறுகதைகள் “ஆதவன் சிறுகதைகள்” என்னும் பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.



சென்னை புத்தக கண்காட்சி உயிர்மை அரங்கில் புத்தகங்களை பார்த்து கொண்டிருக்கையில் உள்ளிருந்து ஒரு பட்சி சொல்ல (Sub-Conscious?) “காகித மலர்கள்” நாவலை வாங்கினேன். பின் பக்க அட்டையில் இருந்த தடிமனான கண்ணாடி அணிந்த ஆதவனின் முகமும், நாவலைப் பற்றிய சிறு அறிமுகமும் பார்த்தவுடன் பிடித்து போனது. ஆதவனின் அந்த மெல்லிய சிரிப்பைப் போலவே அவர் எழுத்தும் வசீகரமானது.

நாவலில் விரிவாக பேசப்படும் விஷயங்களைப் பற்றி ஆதவன் சொல்கையில், “

வெவ்வேறு ‘வேடங்களின் கைதிகள். அரசியல் தலைவர்கள், mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள் ‘நடக்கிறபடி நடக்கட்டும், நமக்கேன் வம்பு?’ என்கிற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவுஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமாக, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு, சில ‘தியரி’ களை உச்சாடனம் செய்துகொண்டு, ‘உஞ்ச விருத்தி’ செய்கிற ஒரு பிராமண பிம்பத்தின் கைதிகள் பெண்கள், ஆணின் ‘அடிமை’, ‘மகிழ்வூட்டும் கருவி’ – அல்லது இந்தப் பிம்பங்களுக்கெதிராகப் ‘புரட்சி’ செய்கிறவள் – என்கிற பிம்பங்களின் கைதிகள். இளைஞர்கள், வயதையும், ‘வேடங்கள்’ அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurityன், ஒரு alienationன் கைதிகள். இத்தகைய பல கைதிகளையே காகித மலர்கள் அறிமுகம் செய்கிறது”.



டெல்லியை கதைகளமாய் கொண்ட நாவல் இது. பசுபதி டெல்லியில் மந்திரிக்கு நெருக்கமானவர், அவர் துறையில் ஒரு மிக பெரிய பொறுப்பில் இருக்கும் அரசாங்க அதிகாரி. அவரது மனைவி மிசஸ் பசுபதி, டெல்லியில் தமிழ் நாடகங்கள் நடித்து கொண்டு மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தன்னை நாகரீகமாய் காட்டி கொள்பவர். இவர்களது பிள்ளைகள், விசுவம், பத்ரி மற்றும் செல்லப்பா.


ஆதவன் சொல்வது போலவே, காகித மலர்கள், இந்த வெவ்வேறு பிம்பங்களை அறிமுகம் மட்டுமே செய்கிறது, அதை களைந்து எழுந்து வாருங்கள் போன்ற அறைகூவல் இல்லை, எதையும் உடைத்தெறியும் ஆவேசம் இல்லை, ஆனால் இந்நாவல் மெல்ல ஒரு மனமாற்றத்தை எதிர் பார்க்கிறது, நமது பிம்பங்களை பற்றிய உணர்வை உருவாக்கி செல்கிறது.

நாம் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பில் நாமே சிக்கி கொண்டிருக்கும் அவலத்தை முன் வைக்க, பல விதமான முரணான கதாபாத்திரங்கள் நாவல் முழுதும் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. உதாரணத்திற்கு, பசுபதி மிக வேகமாக மேல் மட்டத்திற்கு முன்னேறி விட்டவர், ஆனால் அவருடன் வேலைக்கு சேர்ந்து அவர் துறை தலைவராய் இருக்கும் அதே இடத்தில் ஒரு குமாஸ்தாவாக வேலை செய்பவர் ஒருவர். பசுபதியின் மகன் செல்லப்பா அந்த குமாஸ்தாவின் மகன் கணேசன், அவர்கள் இருவரும் நண்பர்கள், படிப்பது ஒரே கல்லூரியில்.

பசுபதியின் மனைவி தன் அம்மா, பாட்டி கடைப்பிடித்து வந்த ஒழுக்க நெறிகளை விடவும் முடியாமல், தன்னை நவநாகரீகமாய் காட்டி கொள்ளவும் பிரயத்தனப்படும் ஒரு பெண் பிம்பம். அவருக்கு முரணாக, அவரது மருமகள் விஸ்வத்தின் மனைவி பத்மினி. வயதையும், ‘வேடங்கள்’ அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurityயையும், ஒரு alienation யும் உணரும் இளைஞர்களாக விசுவமும் செல்லப்பாவும்.

ஆனால் ஒருவகையில் இரு எதிர் துருவங்களில் நிறுத்தி வைக்க படுகின்றனர். விசுவம் நன்றாக படித்து, அமெரிக்கா சென்று தனது சுற்று சூழல் சார்ந்த ஆய்விற்காக டெல்லி வருகிறான். செல்லப்பா மிக சாதரணமாணவன், அவனுடைய சின்ன சந்தோஷங்களில் வாழ்கிறான். அவர்கள் இருவரையும் நெருக்கமானவர்களாய் உணர செய்யும் பல இடங்களும் நாவலில் இழையோடுகிறது.

நேர்மையான சம்பாஷனைகள் என்று சொன்னதற்கு ஏற்ப, கதாபாத்திரங்களின் மன ஓட்டங்கள் மிக நுண்ணிப்போடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நனவோடை உத்தி மூலமே நாவலின் மிக அழகான திருப்பங்கள் விளக்கப்படுகிறது. விஸ்வத்திடமும் செல்லப்பாவிடமும் எளிதில் நம்மை அடையாளப்படுத்தி கொள்ள முடிகிறது. 1970 களில் வாழ்ந்த இளைஞர்களை பற்றிய சம்பாஷனைகள் யாவும் இன்றைய காலத்திற்கும் பொருந்தி வருகிறது. சூழ்நிலையியல் பற்றி விஸ்வம் சிந்திக்கும் விஷயங்களும் அதை முன் வைத்த அவனது உரையாடலும் ஆழ்ந்த வாசிப்புக்கு உரியவை. அதே போல விசுவம் - பத்மினிக்கு இடையே உருவாகி வரும் காதலும், திருமணமான பின் அவர்கள் ஒருவரை ஒருவர் தக்க வைத்து கொள்ள செய்யும் தவிப்புகளும் விளக்கப்படும் இடங்கள் நாவலில் மிக முக்கியமானவை.

விஸ்வம் பத்மினியிடம் மிக மென்மையான உணர்வுகளை வார்த்தைகள் சிதைப்பதை பற்றி சொல்கையில்,

இந்த வார்த்தைப்படுத்துதல் என் இயல்புகளையும் சரி அவை உன்மேல் நிகழ்த்தும் பாதிப்புகளையும் சரி, கொச்சைப்படுத்துவதாகும். அரூபமானவற்றுக்கு ரூபம் கொடுக்க என் இவ்வளவு அவசரப்படுகிறாய். என்கிறான்.

மேலும் பிம்பங்களை பற்றி சொல்கையில் நாம் வார்த்தை படுத்துதலை,

எதுவும் யாரும் தன்னுடைய ஆழங்களைத் தொட்டு விட அனுமதிக்க கூடாது. சொற்களை எண்ணங்களை வெளிப்படுத்தும் சாதனங்களாக அல்ல, எண்ணங்களை மறைக்கும் போர்வைகளாய் பயன்ப்படுத்தும் கலை

என்கிறான்.

செல்லப்பாவின் சித்திரம் புனையப்பட்ட விதம் நாவலில் முக்கியமானது, ஆதவனின் இயல்புகளை பெரிதும் சார்ந்து உருவாக்கப்பட்டவன் செல்லப்பா என்று அவரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சூழ்நிலையின் மென்மையான மாறுதல்களையும், அது தன் மேல் நிகழ்த்தும் மாற்றங்களை கூர்ந்து கவனித்த வண்ணமே இருக்கிறான் செல்லப்பா. மேலும் எப்போதும் எந்த முடிவும் எடுக்க தயங்கும் ஒரு ஸ்திரமில்லாதவனாகவே உள்ளான். ஒரு சாலையை கடப்பது, ரெஸ்ட்டாரன்டில் காப்பி அருந்துவது, திரைப்படம் காண செல்வது முதல் அத்தனை விஷயங்களிலும் அவனின் நிச்சயமின்மை வெளிப்பட்ட வண்ணம் உள்ளது. எழுதப்பட்ட காலம் தொட்டு இன்று வரை பரவலான வாசிப்புக்கு உட்பட்டு வரும் இந்த நாவல் தமிழின் சிறந்த இலக்கிய ஆக்கங்களில் ஒன்று. இந்த நாவலை படித்த பின்னே அவரது அத்தனை எழுத்துகளையும் படிக்கும் ஆர்வம் தோன்றியது.

அவர் சொல்வது போலவே,

ஒருவிதத்தில், இந்த நூல் ஒரு பிரஜையின் குரல். அந்தப் பிரஜை ஓர் எழுத்தாளன் என்பதால் அவனுடைய எண்ணங்கள் நாவல் வடிவம் பெற்றன. அவன் ஓர் இளைஞன் என்பதால் இந்நாவல் தனித்த ஒரு தொனியும் லயமும் கொண்டமைந்துள்ளது.

அந்த இளைஞன் நம் உள் இருக்கும் தன்னை அதிகம் வெளிக்காட்ட தயங்கும், தனக்கான தனித்தன்மையை தேடும் ஒருவன். தொடர்ந்து சூழும் போலிதனங்களில் சிக்காமல் ஒரு முழுமையின் தேடல் நோக்கி செல்லும் ஒருவன். அத்தகைய இளைஞர்கள் வாழும் தோறும் இந்த நாவல் நிலைத்து நிற்கும்.

Saturday, July 18, 2009

Travellers and Magicians - ஒரு நெடுஞ்சாலை கனவு பயணம்

மலை முகடுகள் மேகங்களை உரசிய படியே இருக்கிறது. உடைந்து போன மேக துண்டுகள் முயல்களை போல பள்ளத்தாக்குகளில் விழுந்து கிடக்கின்றது. சுருட்டி படுத்து கொண்ட மலை பாம்பின் முதுகை சுற்றிய கோடுகளாய் மலை பாதைகள் நீள்கின்றன. பாதைகளில் எப்போதாவது சிறு எறும்பென தோன்றிய வாகனங்கள் மெல்ல ஊர்ந்து நம்மை கடந்து செல்கின்றது. இவ்வளவு அழகான தேசமா என மனம் வியந்த வண்ணமே உள்ளது, பூட்டான், நமது சிக்கிம் மற்றும் கல்கத்தா மாநிலங்களை இரு புற எல்லையாகவும் இமயமலையின் அடிவாரத்தை இருப்பிடமாகவும் கொண்ட தேசம். அந்த தேசத்தின் நிலத்தை அழகாய் பதிவு செய்ததோடு ஒரு மிக அழகான கதையை கொண்ட திரைப்படம் Travellers and Magicians. Khyentse Norbu என்று புத்த பிட்சு இயக்கிய படம் இது. புத்த மடாலயத்தில் வாழும் சிறுவர்களின் கால் பந்தாட்டம் பார்க்கும் ஆசையை நுட்பமாய் வெளிப்படுத்தி பல விருதுகளை பெற்ற The Cup படத்திற்கு பின்னான இரண்டாவது படம் இது.



முழுக்க முழுக்க பூட்டானிலேயே படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் இது, பூட்டானை உலக மக்களுக்கு அறிமுக படுத்துவதே எனது நோக்கம் என குறிப்பிடும் இயக்குனர், கனவு உலகத்திற்கு செல்ல வேண்டும் என எண்ணும் இரு வேறு மனிதர்களின் கதையை ஒரு பின்னலை போல் கொடுத்துள்ளார். டான்டுப் ஒரு தனித்த மலை கிராமத்தின் அரசாங்க அதிகாரி, அமெரிக்கா செல்லும் கனவோடு வாழ்பவன். அதற்கான ஏற்பாடுகளை செயதுவிட்டதாய் நண்பனிடம் இருந்து கடிதம் வர, திருவிழாவிற்கு செல்வதாய் பொய் சொல்லி தன் அதிகாரியிடம் விடுமுறை கேட்டு கொண்டு புறப்படுகிறான். திம்பு என்னும் பெருநகருக்கு செல்லும் ஒரே பேருந்தை பிடிக்க வருகையில், ஒரு கிராமத்து மூதாட்டி அவனிடம் சாப்பிட தந்த பாலாடை கட்டிகளை ஆற்றில் எறிந்துவிட்டு ஓடுகிறான். நமது ஊர்களைப் போலவே அந்த ஊரிலும் கிராமத்தின் அப்பட்டமான அன்பு தொனிக்கிறது. கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அவன் அரசாங்க அதிகாரி ஆதலால் அவனை தெரிந்திருக்கிறது.அவன் அங்கு வந்து பணி புரிவதை பெருமையோடு நினைத்து கொள்கின்றனர்.

பேருந்தை பிடிக்கமுடியாமல் தவற விட்டு காத்திருக்கிறான். அப்போது அவனை போலவே பெருநகருக்கும், திருவிழாவிற்கும் செல்ல விரும்பும் ஒரு முதியவர், ஒரு புத்த பிட்சு, ஒரு வயதானவர் அவரின் மகள் ஆகியோர் சேருகின்றனர். பேருந்தை தவற விட்டால் மீண்டும் அது மறுநாள் வரும் வரை வேறு வழி இல்லை, மெல்ல நடை பயணம் அல்லது ஏதேனும் வாகனங்களில் உதவி கேட்டு செல்லவேண்டிய நிலை. மெல்ல அவர்கள் நடக்க துவங்குகிறார்கள்.



புத்த பிட்சு டான்டுபை நீ எங்கு செல்கிறாய் என கேட்கிறான், அதற்கு அவன் “என் கனவு தேசத்துக்கு” என்கிறான், அங்கு என்ன கிடைக்கும்? என்பதற்கு எல்லாம் கிடைக்கும் என்கிறான். ஆப்பிள் விற்கும் வயதான முதியவர் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அங்கு என்ன செய்வாய் என்று புத்த பிட்சுவின் கேள்விக்கு, தோட்டங்களில் ஆப்பிள் பறிப்பேன், உணவு விடுதியில் வேலை செய்வேன் என்கிறான். மகளோடு வந்த முதியவர், இங்கு அரசாங்க வேலையை விட்டு விட்டு அங்கு போய் ஆப்பிள் பறிக்க போகறீர்களா என்கிறார்.

அவர்கள் ஒரு லாரியில் இடம் கிடைத்து செல்ல துவங்க, புத்த பிட்சு இது போல கனவு உலகத்துக்கு செல்ல வேண்டும் என நினைத்த ஒருவனின் கதையை சொல்கிறார். அந்த கதை பூட்டான் நாட்டார் கதை மரபில் மிக பிரசித்தமானது, அதில் வரும் இரு சகோதரர்களில் மூத்தவன் எப்போதும் தன்னுடைய கனவு உலகம் என்ற ஒன்றை அவன் தம்பியிடம் சொல்லி கொண்டே இருக்கிறான். அவனை மந்திரங்கள் கற்று கொள்ளும் வகுப்பிற்கு அவன் தந்தை அனுப்பி வைக்க, அவன் அதில் கவனம் இல்லாமல், அழகான பெண்கள் கொண்ட தன் கனவு உலகத்தை கற்பனை செய்த வண்ணமே இருக்கிறான். அவனுக்கு எப்போதும் மதிய உணவு எடுத்து வரும் தம்பி அன்று ஒரு குதிரையில் வர, இவன் அதை முயன்று பார்த்து காட்டில் தொலைந்து போகிறான். அங்கே நடு காட்டில் ஒரு குடிசையில் ஒரு கிழவனும் அவனது அழகான இளம் மனைவியும் வாழ்கின்றனர். அவள் மேல் காதல் கொள்ளும் அவன், அவளுடன் இணைந்து அந்த கிழவனை கொள்ள முயற்சித்து, பின் மனம் உடைந்து காட்டில் எங்கோ ஓடுகிறான். பின்னால் அவளின் கூக்குரல் கேட்பதாக ஒரு மர்மத்துடன் கதையை முடிக்கிறார் புத்த பிட்சு.

பிட்சு சொல்லும் அந்த கதை ஒரு கனவு உலகத்தில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி அமைப்பும், ஒளிப்பதிவும் இதுவரை நான் பார்த்த சிறந்த ஒன்று. சில இடங்களில் Illusionist படத்தை நினைவூட்டியது. பிட்சு சொல்லும் இந்த கதையில் வரும் காதல், கனவு உலகம், பொறாமை, காமம் ஆகியவை டான்டுவின் வாழ்க்கையோடு மெல்ல பிணைக்கப்பட்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி இசையும் உரையாடல்களும் மிக கட்சிதமானவை. படத்தின் இயக்குனர் ஒரு புத்த துறவி என்பதால் படம் பார்ப்பதும் ஒரு த்யானம் போலவே உள்ளது. இந்தியாவின் பாலிவுட்டின் தாகம் அதிகம் உள்ள பூட்டானில் இந்த படம் எப்படி உள்வாங்கி கொள்ளப் பட்டது என இயக்குனரிடம் கேட்டதற்கு,படத்தில் பாடல்களே இல்லையா என சிலர் கேட்டனராம்.



படத்தின் காட்சிகளும் அதன் பின்னணி இசையும் மெல்ல இதை எழுதும் போதும் நினைவு வந்து கொண்டும் , காதில் ஒலித்து கொண்டும் இருக்கிறது. படத்தில் ஓரிடத்தில் ஒரு பெண்ணின் புன்னகையை பார்க்கிறான் டான்டு , அதற்க்கு புத்த பிட்சு, “அழகாக இருக்கிறது அல்லவா அவள் புன்னகை, தற்காலிகமாக இருப்பதனால் தான் அது அவ்வளவு அழகாக இருக்காதா என்ன? என்கிறார். ஆனால் படத்தின் காட்சிகள் நிரந்தரமாய் நம்முள் உறைந்து விடுகிறது.



இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |13 |

Thursday, July 16, 2009

ஐந்து திரைப்படங்கள்

சில திரைப்படங்கள் பார்ப்பதற்கான மனநிலை எப்போதாவது வாய்க்கிறது, சில எப்போதும் தள்ளி செல்கிறது. சேகரிப்பில் இருக்கும் திரைப்படங்களை அவ்வப்போது எடுத்து பார்ப்பதும் பின் அதை வேறு வேறு விதமாக அடுக்கி வைப்பதும், அந்த திரைப்பட டி.வீ.டி யின் உரையை பிரிக்கும் சத்தமும் எப்போதும் சந்தோஷம் தருவதாக உள்ளது, புதியதாய் வாங்கப்பட்ட புத்தகத்தின் வாசனை தரும் பரவசம் போல. சென்ற வாரம் ஒரு சோர்வான மனநிலை இருந்தது.

ஊரிலிருந்து வந்திருந்த என் நண்பனின் தம்பி ஏதேனும் நல்ல படம் பார்ப்போமா என்றான். அவன் கேட்டவுடன் எனக்கு தோன்றியது, Shawshank Redemption மற்றும் 12 Angry Men. இறுதியாக , Shawshank Redemption சரியாக வரும் என எண்ணி இரவு 10 மணிக்கு பார்க்க ஆரமித்தோம், இந்த படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என நினைவில்லை. எல்லா சிறந்த படங்களைப் போலவே படம் தொடங்கிய 10 நிமிடத்திற்குள் எங்களை உள்ளிழுத்து கொண்டது. அந்த படத்தில் வரும் ரெட்டின் வரி போல, படம் முடிந்த பின்

“We came out clean on the other side”

சமீபமாய் வான் கார் வாயின் “In the Mood for Love” படமும் அடிக்கடி பார்த்து கொண்டு இருக்கிறேன். They Shoot Pictures இணையதளத்தில் 21 ஆம் நூற்றாண்டில் கலை நேர்த்தியோடும் பரவலான பாராட்டும் பெற்ற திரைப்படங்களின் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது இந்த திரைப்படம். இந்த படத்தை பற்றிய பதிவு விரைவிலேயே CH1ல் வரும் ஆகையால் இப்போதைக்கு விட்டு வைப்போம். சத்யஜித் ரேவின் பதேர் பாஞ்சாலி பல நாட்களாக பார்க்க வேண்டும் என் எண்ணிய படம், ஆனால் இன்னும் கிடப்பில் கிடக்கிறது. முடிந்தால் இந்த வாரம் பார்க்கலாம். இதை தவிரவும் சென்ற இரண்டு வாரங்களில் பார்த்த சில படங்களின் ஒரு குட்டி தொகுப்பே இது.

The Apple by Samirah Makhmalbaf




இரான் தேசத்தை சேர்ந்த புகழ்ப்பெற்ற இயக்குனரான Mohsen Makhmalbafன் பெண் Samirah Makhmalbaf தனது 17 வது வயதில் 1998 ஆம் ஆண்டு இயக்கிய படம் இது. 11 வருடங்கள் வெளி உலக தொடர்பே இல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைக்கப்பட்டு வாழ்ந்த இரு பெண்களை பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படம் இது. அந்த வீட்டின் அருகில் வசிப்பவர்கள் சமூக நல அதிகாரிகளிடம் சொல்லி அவர்கள் அந்த குழந்தைகளை மீட்பதை பற்றிய அழகிய படம். முதல் முதலில் அந்த இரு குழந்தைகள் வெளி உலகிற்கு வருவதும், அவை எதிர்கொள்ளும் மற்ற குழந்தைகளும் மிக கவித்துவமான காட்சிகள். மேலும் அந்த குழந்தைகளை அவரின் தந்தை கொடுமை படுத்தினார் என்ற நாடக ரீதியில் செல்லாமல் படம் அவரின் இயலாமையை, அறியாமையை எடுத்து காட்டிய விதம் மிக அழகு.

Offside by Jafar Panahi



உலகின் தலை சிறந்த இயக்குனர்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பெற தகுதியான இயக்குனர் Jafar Panahiன் படம் Offside. உலக கோப்பை கால்பந்துக்கான தேர்வு போட்டி இரான் மற்றும் பெஹ்ரைனுக்கு இடையே நடக்கிறது. பெண்கள் மைதானத்திற்கு சென்று போட்டியைப் பார்க்க தடை விதிக்கபட்டிருக்கும் இரானில் அந்த தடையை மீறி சென்று பார்க்கும் பெண்களை பற்றிய படம் இது. இயக்குனரது பெண் போட்டியைக் காண சென்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு எடுக்க பட்ட படம். இந்த படம் இரானில் திரையிட தடை வித்திக்கபட்டுள்ளது. இரானை தவிர திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் பலத்த வரவேற்ப்பை பெற்ற படம்.

Alfred Hitchcock’s Wrong Man



எப்போது தொடர்ந்து படங்கள் பார்த்தாலும், ஒரு ஹிட்ச்க்காக் படம் பார்க்கும் என் வழக்கப்படி இப்படம். மேலும் படத்தின் கதாநாயகன், 12 Angry Men நாயகன் Henry Fonda. இந்த படமும் மேற்கூறிய படங்களை போல உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது, படத்தின் ஆரம்ப காட்சிகளில், ஹிட்ச்க்காக் தான் எடுத்த புனைவு கதைகளை விட அதிகம் விசித்திரங்கள் நிறைந்த கதை இது என்கிறார். ஒரு சாதரண மதிய தர குடும்பத்தை சேர்ந்த கதாநாயகன், வேலை முடித்து வீட்டிற்க்கு வருகையில் ஒரு நாள் கைது செய்யப்படுகிறான். அவன் தொடர் கொள்ளைக்காரன் என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்க சாட்சியங்கள் அனைத்தும் அவனுக்கு எதிராகவே உள்ளது. அதில் அவன் மீண்டான் என்பது தான் கதை. கடைசி வரை சுவாரசியம் குன்றாத படம்.

Christopher Nolan’s Following



Memento, Batman Begins, Prestige மற்றும் Dark Knight படங்களின் இயக்குனரது படம் இது. அவரது மற்றைய படங்களை போலவே இந்த படமும் திரைகதையில் புதுமைகளை கொண்டது. ஒரு மணி நேரம் மட்டுமே ஓடக் கூடிய இந்த திரைப்படம், எழுத்தாளனாக முயன்று கொண்டிருக்கும் ஒருவனை பற்றியது. வாழ்வின் தொடர்ந்த வெறுமையைப் போக்க அவன் தெருவில் பார்க்கும் யாரையாவது தொடர்ந்து செல்கிறான். அவர்களின் தினசரி நடவடிக்கைகளை பார்ப்பது மூலம் ஒரு சுவாரசியம் கொள்கிறான். அப்படி நண்பான ஒருவனுடன் சேர்ந்து அவன் செய்யும் விஷயங்கள் அழகாக தொகுக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதி காட்சி க்ளாசிகல்.

Windstruck by Kwak Jae-yong



சமீப காலமாக கொரியன் படங்கள் உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன, குறிப்பாக நமது கோலிவுட்டில். கொரியா ரொமான்டிக் திரைப்படங்களின் பல காட்சிகள் தமிழ் சினிமாவில் சமீபமாய் பார்க்க முடிகிறது. நான் பார்த்த The Classic, My Saasy Girl, Someone Special ஆகிய Feel Good படங்கள் வரிசையில் இதுவும் ஒரு அழகான திரைப்படம். போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஒரு அழகான முரட்டு பெண்ணிற்கும் ஒரு அப்பாவி இளைஞனுக்கும் இடையேயான நட்பும் அது காதலாகும் தருணமும் ஒரு கவிதையை போலே சொல்லி செல்கிறது இந்த படம்.

இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |

Friday, July 10, 2009

எழுதுவதே எழுத்தின் ரகசியம்

தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை என்னும் அழகான வாக்கியம் உண்டு. நம்மை வெளிப்படுத்திக்கொள்ள தொடர்ந்து முயற்சித்த படியே இருக்கிறோம், சொற்களால், அசைவுகளால், இல்லை காதலர்கள் இடையே இருப்பது போன்ற பொருள் பொதிந்த மௌனங்களால். நம் மனம் அரவணைப்புக்கு ஏங்கியே வண்ணமே படைக்கபட்டிருக்கிறது போலும். பிறந்த உடன் கைக்கு பிடிபடாத காற்றை அணைக்க முற்படுவது முதல்!. கலை இலக்கியம் ஆகியவையும் யாரோ தனக்கு நேர்ந்ததை அல்லது தான் கற்பனையில் கண்டத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி தான்.

I shot an arrow into the air,

It fell to earth, I knew not where;

For, so swiftly it flew, the sight

Could not follow it in its flight.


I found the arrow, still unbroke;

And the song, from beginning to end,

I found again in the heart of a friend.

என்ற Henry Longfellow வின் கவிதை போல, நாம் எழுதுவது எங்கோ ஒரு நண்பன் மனத்தில் தைக்கிறது.

எழுத்தாளர்கள் எழுதுவதை பற்றியும், எழுத்தை பற்றியும் சொல்லியதின் சிறு தொகுப்பு இது.

இதில் ப்ளாக் எழுதுவது பற்றி சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதும் தொடரில் சொல்லியவையும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய அரவிந்தனுக்கு நன்றி.

சுஜாதா ப்ளாக் எழுதுவது பற்றி க. பெ வில்,



நன்றி: ஆனந்த விகடன்

எழுதுவதின் இழப்புகள் என்னும் தலைப்பில் சுஜாதா தன்னுடைய “எழுத்தும் வாழ்கையும்“ புத்தகத்தில்,

“உள்மனத்தில் ஓர் எண்ணத் தொடர் எழுத்தாளனுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். எந்த சம்பவத்தைப் பார்த்தாலும், எந்தச் சம்பாஷணையைக் கேட்டாலும், இதில் ஒரு கதை இருக்கலாம் போல ஒரு தனிப்பட்ட யோசனை. சில சமயம் இந்த உப எண்ணங்கள்… உப கவனம் இழப்பாகக் கூட இருக்கும். எதையும் வைத்து கதை பண்ண முடியும் என்கிற தன்னம்பிக்கை சில சம்பவங்களின் தாக்கத்தை மழுப்பிவிடும் அபாயம் உள்ளது. ”

புதியதாய் எழுத ஆரமிப்பவர்கள் எதிர் கொள்ளும் தடுமாற்றங்கள் குறித்து ஜெயமோகன் தன்னுடைய வலைப்பதிவில்,

“எழுதித்தான் எழுத்தில் உள்ள சிக்கல்களையும் தடைகளையும் தெரிந்துகொள்ள் முடியும். எழுதும்போது எழுத்தில் நம் மனம் ஒன்ற வேண்டும். நாம் முழுமையாக அதில் ஈடுபடவேண்டும். ஒரு கனவு போல கதை நம்மில் நிகழ வேண்டும். கதைமாந்தர்களையும் சூழலையும் நாம் கண்ணெதிரே காண வேண்டும். அதற்கான பயிற்சி என்பது தொடர்ச்சியாக எழுதுவதே.

ஆரம்பத்தில் நமக்கு அப்படி எழுத முடியாமைக்குக் காரணம் நாம் எழுத்துக்குப் பழகவில்லை என்பதே. நம் மனம் கற்பனைசெய்யும்போது எழுத முடிவதில்லை. எழுதுவதில் உள்ள கவனம் நம் கற்பனையை தடுக்கிறது. ஆகவே இரண்டையும் சமன்செய்யும்பொருட்டு நாம் மாற்றி மாற்றி எழுதிப்பார்க்கிறோம். கிழித்துப்போடுகிறோம். எரிச்சல் கொள்கிறோம் தொடர்ந்து எழுதிக்கோண்டே இருந்தால் எழுத்து கைக்கும் மனதுக்கும் பழகி விடும் . அது தானாகவே நிகழும்.

நீங்கள் கற்பனைமட்டும் செய்தால் போதும். சிலம்பாட்டம் கற்றுக்கொள்ளச் சென்றால் முதலில் சிலம்பைச் சுழற்றவே கற்றுக்கொடுப்பார்கள். சுழற்றிச் சுழற்றி சிலம்பு கையிலிருப்பதே தெரியாமல் ஆகும். அப்போது வித்தையில் மட்டுமே கவனம் இருந்தால் போதும். மனம்செல்லும் இடத்துக்கு கம்பு போகும். அதைப்போல எழுத்து வசமாகவேண்டுமென்றால் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். ஆரம்பகட்டத்தில் இது அவசியம்.“

எழுத்தாளனாக தன்னுடைய இயல்பு பற்றி லா. சா. ராமாமிர்தம் தன்னுடைய சிறுகதை தொகுதியில்,

“நான் எழுத்தை பயில்பவன்; வாழ்க்கையின் கீதத்தை பாடிக்கொண்டு, நடுநிலவில் தெருவழியே நடந்து செல்கிறேன், வாசல் கதவுகள், ஜன்னல் கதவுகள் திறக்கின்றன, சில மூடுகின்றன. சிலர் திண்ணைக்கு வந்து நிற்கின்றனர். சிலர் அன்பில் என்னை வழியனுப்புவது போலும், ஒரு தூரம் வந்து அங்கு நின்று விடுகின்றனர். நான் கண்ட இன்பம், பாடி கொண்டே போகிறேன். நான் என் இயல்பில் உணர்சிபூர்வமானவன். பாடுவது அன்றி வேறு அறியேன்.”

எளிய, கிராமம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அறியப்படும் நாஞ்சில் நாடன் எழுத்துக்காக அவர் வரித்து கொண்ட இலக்கணங்கள் பற்றி,

“சிறுகதையின் இலக்கணம் அழகு, சீர்மை, செறிவு, கலை, வெளிப்பாடு, அக்கறை, தொனி… எத்தனை சொற்கள் இல்லை தமிழில். எல்லாம் காலத்துக்குக் காலம், கோணத்துக்கு கோணம், இடத்துக்கு இடம் மாறும் தன்மைத்தன. மாறாத சில உண்டு. மனித நேயம், சொல்வதில் நேர்மை… நான் வரித்துக்கொண்ட இலக்கணங்கள் அவை. அதில் சோர்வில்லை, தளரவில்லை இன்றும் எனக்கு.

கதைகளில் நான் இன்னும் வாழ்வது புலனாகிறது. மனம் புதிய படைப்பு வேகம் கொள்கிறது. தமிழ்ச் சிறுகதை இலக்கியம் என்னும் தடகளத் தொடர் ஓட்டத்தில் என்னாலும் சில தூரம் ஓட முடிந்திருக்கிறது என்பது ஆசுவாசம் தருவதாக இருக்கிறது. கோப்பையை யார் முத்தமிடுகிறார்கள் என்பதிலல்ல எனது ஆர்வம், ஓட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதிலும் ஜீவன் வறண்டு போகவில்லை என்பதிலும் எனக்கு சமாதானம் உண்டு. ”

எழுதுவது பற்றி, தன்னுடைய கதைகள் பற்றி ஆதவன் சொன்னவை,

"என் போக்கில் என்னுடைய சொந்த வேகத்தில் இயங்குகிற விருப்பமுள்ள எனக்கு சொற்கள் வழங்குகிற வாய்ப்புகள் கவர்ச்சியாக இருக்கின்றன. நழுவிப் போய்விட்ட பல கணங்களை நிதானமாக சொற்களில் உருவாக்கப் பார்கிறேன், புரிந்து கொள்ள முயல்கிறேன். என் கதைகளில் இருப்பது நானும்தான், நீங்களும்தான். உங்களுடன் என்னுடைய பாணியில் அல்லது வேகத்தில்? உறவு கொள்கிற முயல்கிற முயற்சிகளே எனது கதைகள்"

Thursday, July 9, 2009

தண்ணீர் விழுதுகள்

சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு

அதிகாரம்: 83, கூடா நட்பு

குறள்: 821


காற்று அந்த புங்கை மரத்தின் தலைக்குள் கையை விட்டு எதையோ ஆரவாரமாய் தேடிகொண்டிருந்தது. தலையின் அசைப்புக்கு ஏற்றவாறு விழுந்து கொண்டிருந்த இலைகள் கல்லூரியையும் விடுதியையும் இணைக்கும் சாலையை மெல்ல மூடி கொண்டு இருந்தது. அந்த நீண்ட சாலையில் நானும் அவளும் மட்டும் நடந்து கொண்டிருந்தோம். நானும் அவளும் என்றால் ஒன்றாக இல்லை, ஒரு பத்து மீட்டர் இடைவெளி விட்டு. காற்றின் வேகம் அந்த இடைவெளியை குறைத்த வண்ணம் இருந்தது. நெஞ்ஜோடு அணைத்து கொண்டிருந்த அவளது புத்தகங்களின் ஒன்று கீழே விழுந்து என் கால் தடுக்கியது, பக்கங்களும், இமையும் ஒரு சேர அடித்து கொள்ள என்னை பார்த்தாள். அந்த கண்களின் மருட்சி அவளும் என்னைப் போல முதலாமாண்டு தான் என்றது. ஆனால் என் முகத்தின் மீசை அவளுக்கு அந்த நம்பிக்கையை அளிக்க வில்லை போலும். சாரி, தேங்க்ஸ் என ஏதோ சொல்லிவிட்டு ஒரு அவசர கணத்தில் மறைந்து போனாள்.

மறுநாள் அவளும் நானும் ஒரே வகுப்பில் தான் அமர்ந்திருந்தோம். நேற்றைய நிகழ்ச்சி எங்களுக்குள் பரஸ்பரம் எந்த சிநேகத்தையும் விதைத்து விடவில்லை. எனது சராசரி சிறுநகரத்து பின்னணியை மறந்து சகஜமாக நான் பழக ஆரமித்த ஒரு வாரத்திற்கு பின், காற்றின் அழுத்தத்தை பதிவு செய்யும் செய்முறை வகுப்பில் தான் அவள் என்னிடம் பேச துவங்கினாள். செய்முறை வகுப்பின் நான்கு பேர் கொண்ட குழுவில் மற்ற மூவரும் பெண்கள் . பெண்களிடம் பேசுவதோ, இல்லை பேசாமல் இருப்பதோ பற்றி எந்த வித முன் வரையறைகளும் இல்லாமல் இருந்த என்னிடம் இந்த கல்லூரி வாசம் ஏற்படுத்தியிருந்த ஓர் அனாவசிய கூச்சத்தை தொட்டு காட்டியபடி

நீ ஏன் அதிகம் பேசவே மாட்டேன்ற? என்றாள்.

“ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லை, ஹாஸ்டல எல்லாம் நல்லாத்தான் பேசுவேன்”

அப்ப எங்ககிட்ட எல்லாம் பேச மாட்டயா?

அப்படி இல்லை, இங்க வாய்ப்பு கம்மி இல்ல. இப்போதான் பிராக்ட்டிக்கல் க்ளாஸ் வர ஆரமிச்சி இருக்கு. இனிதான் பழக முடியும் அததான் சொல்றேன்.

அதற்குள் ஆவலுடன் மற்ற இருவர் சேர்ந்து விட்டனர்.

“இல்ல நம்ம க்ளாஸ் பசங்க பேசறதே இல்லை” என்றனர்.

“சரி நான் பசங்ககிட்ட சொல்றேன்” என்றேன்.

ஆனால் நான் விடுதியில் இதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. என் நண்பன் ஒருவன் “க்ரிஸ்” விளையாடலாம் என்றான். வகுப்பில் எல்லாருடைய பெயர்களையும் சீட்டுகளில் எழுதி போட்டு அவர் அவர் ஒரு சீட் எடுக்க வேண்டும். அதில் யார் பெயர் உள்ளதோ அவர்களை ஏதேனும் செய்ய சொல்லி மறைமுகமாய் சொல்ல வேண்டும். ஒரு வார காலம் நடக்கும் இந்த போட்டி முடிந்த உடன், அந்த க்ரிஸ் தோழனுக்கோ தோழிக்கோ ஏதேனும் பரிசு குடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டது.

எனது பெயர் என் நண்பன் அருணிடமும் அவளது பெயர் என்னிடமும் வந்தது.

“டேய் உனக்கு போய் நான் என்னடா அனுப்ப, அதான் அமுதா பேர் உனக்கு வந்து இருக்கு இல்ல, அவளுக்கு அனுப்புவோம் “

என அவளுக்கு நான் அனுப்புவது போல் ஒரு குறிப்பை அருண் அனுப்பி விட்டான்.

மறு நாள் அவள் வகுப்பின் முன் வந்து, “வகுப்பில் யார் அழகானவர்களோ அவர்களிடம் வந்து டைம் கேட்க வேண்டும்” என எழுதி இருப்பதை சொல்லி விட்டு சங்கோஜமாக நின்றாள். அரை மணி நேரம் கண்ணாடி முன் நின்று, Fair and Lovely போட்டு கொண்டு இருப்பதிலேயே புதிய சட்டையை அணிந்து கொண்டு வந்த அருணின் இருப்பு இப்போது சற்று ஞாயப்படுத்தப்பட்டதாக தோன்றியது. ஒருத்தரை விட்டுட்டு ஒருத்தரை எப்படி சொல்றது, எல்லார் கிட்டயும் கேட்டதாக வச்சுகங்க என சொல்லி சென்று விட்டாள். மரியாதை நிமித்தமாக அவளுக்கு பரிசு கொடுக்கும் பொறுப்பை மட்டும் எனக்கு வழங்கினான் அருண். ஒரு புத்தகம் வாங்கி பரிசளித்து விட்டு, அந்த குறிப்பை நான் எழுதலை என்றேன். தெரியும் என என்னை புரிந்த கொண்ட புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

பேசி கொண்டே இருப்பது எனது இயல்பு அல்ல. ஆனால் அதன் பின் ஏற்பட்ட சிற்சில சந்தர்ப்பங்களில் நான் தான் பேச துவங்கினேன். ஒரு சின்ன அசைவு மூலமோ, இல்லை மெல்லிய சீண்டல் மூலமோ, ஒரு குழந்தைத்தனம் கொஞ்சும் சிரிப்பு மூலமோ ஈர்க்கப்பட்டு அவளிடம் பேச துவங்கிவிடுவேன். வெறும் வார்த்தைகளை ஒன்று சேர்த்து. தேவைகேற்ப வாக்கியங்களை அமைத்து, பேசவேண்டுமே என்ற உந்துதலால் மட்டுமே பேசப்படும் பேச்சு. மெல்ல மெல்ல எந்த விதமான விஷயங்களுக்கு ஆதரவு கிடைக்கிறதோ, அதே விஷயங்களை வேறு வேறு வாக்கியங்கள் கொண்டு பேசினேன். பேச ஆரமித்த பின் அவள் கேட்பவளாக மட்டும் தான் இருந்தாள். நான் ஹைக்கூவைப் பற்றி பேசியது, பாஷோவை பற்றி பேசியது என அனைத்தையும் புதுமையாக கேட்டு கொண்டிருந்தாள்.

நான் அதிர்ந்து பேசும் விஷயங்களுக்கு, அவள் எப்போதும் மென்மையான பதில்களையே கொண்டிருந்தாள். தொடர்ந்த அவளது மென்மையான பதில்கள் ஒருவகையில் எரிச்சலைத் தந்தது, ஆனால் மீண்டும் அவளை நோக்கி வர அதுவே காரணமானது. பல சமயம் அவளிடம் பேசுகையில் அவளது செயல்கள் என்னை ஓர் கேலி சித்திரமாகவே உணர செய்தது. முக்கியமாக இது எல்லாம் ஒரு விஷயமா என்பது போல் அவள் பார்க்கும் பார்வை. ஆனால் அதை உணர்ந்து கொள்வதற்குள் என் பேச்சு வேறு பக்கம் திசை திரும்பி இருக்கும்.

மீண்டும் மீண்டும் அவளிடம் பேசுவதை தவிர்க்கவே முயன்றேன். மற்ற எல்லா சமயங்களிலும் அவளை புறக்கணிப்பது அவ்வளவு சிரமமாக இல்லை செய்முறை வகுப்புகளை தவிர. மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டு, ரீடிங் எடுத்து விட்டு வெட்டியாய் நிற்கும் பொழுதுகளில் பேசியே ஆக வேண்டிய கட்டாயம். நான் பேசாமல் இருந்த நாட்களில் அவளே கேட்பாள்,

“நீ ஏன் ஒரு மாதிரியா இருக்கே ?

ஒன்னும் இல்ல,

அன்னைக்கு இன்டெர்னல் பேப்பர் கொடுத்ததில இருந்தே நீ இப்படி தான் இருக்க!

இப்போது எனக்கு காரணம் கிடைத்துவிட்டது, அது பரவா இல்ல, நான் நல்லாத்தான் பண்ணேன் என்று அவளிடம் சால்ஜாப்பு சொல்லிகொள்ளலாம். அப்போதைக்கு அவள் மேல் இருந்த கோவம் வேறு பக்கம் திசை திருப்ப பட்டிருக்கும். நன்றாக படிக்க முயற்சி செய்து, ஆனால் சரியாக அது கை கூடாமல் மனம் வருந்தி நிற்பவனாக காட்டி கொள்வது சூழ்நிலையை சாதாரணமாக்கும். மீண்டும் அதே பேச்சு, தலை அசைப்பு வெற்று வார்த்தைகள். அவளிடம் பேசி கொண்டு இருக்கையில் ஏதோ ஓர் கணம் மீண்டும் என்னை கேலி சித்திரமாக உணர தொடங்கி விடுகிறேன். முக்கியமாக நான் அந்தரங்கமாக மதிக்கும் சில விஷயங்களை அவளிடம் சொல்லத் தொடங்குகையில்.

அதற்கு காரணம், சிரத்தை இல்லாமல் கவனிப்பது போன்ற முகபாவனையாக இருக்கலாம். இல்லை அவளிடம் இருந்து ஏதேனும் அந்தரங்கமான அல்லது அவளது மனதுக்கு நெருக்கமான விஷயங்களை சொல்வாள் என எதிர்பார்த்து பொய்த்து போன என் ஏமாற்றமாகவும் இருக்கலாம். ஏதோ ஓர் கணத்தில் அவளை என் தோழி என நம்பிவிட்டேன். வகுப்பில் முதல் முதலில் சந்தித்த பெண் அவள்தான் என்பதாலோ இல்லை என்னை பேச சொல்லி கேட்டவள் என்பதாலோ. வகுப்பிலேயே ஓரளவு அழகான பெண்ணுடன் தோழமையுடன் பழகுவது, என்னை சற்று நாகரிகமானவனாக காட்டும் என்று எண்ணியதாக கூட இருக்கலாம்.

கல்லூரி படிப்பின் இறுதியாண்டில் ஒருநாள் அமெரிக்காவில் மேற்படிப்பு முழு உதவித்தொகையுடன் கிடைத்துள்ளது என்றாள். கலக்குற ட்ரீட் எப்போ என்றேன், இது நான் அவளிடம் கேட்க்கும் மூன்றாவது ட்ரீட், அவள் பிறந்த நாளுக்கு ஒருமுறை, அவளது தம்பி மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்ததற்கு ஒருமுறை என. எப்போதும் போல, இப்போதும் சிரித்து விட்டு, தரேன் என்றாள்.

கடைசி இரண்டாண்டுகள் அருண் விடுதியில் தங்கவில்லை, வெளியில் ஓர் சிறிய அறை எடுத்து தங்கி இருந்தான். அவன் அறைக்கு எப்போதும் என்னை மட்டும்தான் அழைப்பான். அவன் அறைக்கு சென்று கொண்டிருந்த அந்த வெள்ளி இரவு, ஓர் இரு சக்கர வாகனம் வேகமாய் என்னை கடந்து சென்று சற்று தூரத்தில் நின்றது. வண்டியில் இருந்து இறங்கிய அருண்,

டேய் ரூம்கா வர, வா போகலாம், என்று கிளம்பிய சற்று நேரத்தில் மழை பெய்ய ஓர் ரோட்டோர டீ கடையில் ஒதுங்கினோம். ரெண்டு டீ என்றான். நான் அருகிலிருந்த ஆலமரத்தையே பார்த்துகொண்டிருந்தேன். மழை வலுவாக பெய்ய அராமித்தது.

எங்க போயிட்டு வர என்றேன்.

ஒரு ட்ரீட் போயிட்டு வந்தேன் டா,

என்ன ட்ரீட் ?

அதாண்டா நம்ம அமுதா யு.எஸ் போக போறா இல்ல, ஒரு வாரமா கூப்டுக்கிட்டு இருந்தா அதாண்.

எங்க ட்ரீட்?

காயத்ரி பவன்ல டா. அங்கதான் அவ தம்பி ஸ்டேட் பஸ்டுக்கும் ட்ரீட் தந்தா என்றான்.

ஆலமரத்தின் கிளைகளில் ஊர்ந்த மழை, தண்ணீர் விழுதுகளாக இறங்கி கொண்டிருந்தது.

முந்தைய சிறுகதைகள்  1 |