Monday, November 30, 2009

செங்கம் (Alias) சென்னை

எனது அப்பா ஒரு சுகாதார ஆய்வாளர், பெரும்பாலும் சிறிய டவுன் அல்லது அதனை ஒட்டிய கிராமங்களில் தான் அவருக்கு வேலை. நான் பிறப்பதற்கு முன் அவினாசி, அந்தியூர் பகுதிகளில் இருந்திருக்கிறார். நான் பிறந்த சமயம், என் அம்மாவின் தந்தை ஊரை ஒட்டிய செங்கம் என்ற ஊருக்கு மாற்றல் வாங்கி கொண்டு வந்து விட்டார். இது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம்.

என் பள்ளி படிப்பு முழுதும் இங்கு தான். வாஜ்பாய்னு சொல்ற அளவுக்கு பெரிய ஆளும் இல்ல, ரூம் பாய் அளவுக்கு சின்ன ஆளும் இல்லை என்பது மாதிரி, இது ஒரு வகையில் ரெண்டுங்கெட்டான் ஊர்தான். சொந்த வீடு கட்டுவதற்கு முன்பு ஒரு ஐந்து ஆறு இடங்களில் வாடகை வீட்டில் இருந்தோம். எனது வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையில் உள்ள பாதைதான் என் மனதில் தங்கி விட்ட ஊர். எனது வீடு மாற மாற பாதைகள் மாறிய வண்ணமே இருக்கும். பெரும்பாலும் ஒரு பாதையை தேர்ந்தெடுத்து விட்டால், அடுத்த வீடு மாறும் வரை அதே பாதையில் தான் பள்ளிக்கு செல்வேன், வேறு பாதையில் சென்றால் யாரிடமாவது நான் திட்டு வாங்குவேன் என நினைத்து கொள்வேன், நினைத்த மாதிரியே அந்த சிடுமூஞ்சி மேக்ஸ் மிஸ் என்னை அன்று திட்டும்.

எங்கள் பள்ளி செய்யாறு என்னும் ஆற்றை ஒட்டிய படி இருக்கும். நானும் என்றாவது அதில் எங்கள் பள்ளி மூழ்கி விடும் என நம்பி பார்த்து பார்த்து பூத்து போனேன், ஒரு முறை கூட எங்கள் காம்பவுண்டு சுவர் அருகே கூட வெள்ளம் வரவில்லை. ஒருமுறை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது ஆற்றை கடக்க முடியாததால் கணக்கு டீச்சர் வரவில்லை என்பது வரையில் மட்டுமே அந்த ஆற்றினால் எனக்கு ஆறுதல்.

ஆனால் முதல் முதலில் கூட்டாஞ்சோறு ஆகியது அந்த ஆற்றை ஒட்டிய மரத்திற்கு கீழ்தான், யாரவது வந்தால் குரல் கொடுக்க வேண்டியது தான் எனது பொறுப்பு, என்னை பார்வையாளனாகவே நிற்க வைத்து கொஞ்சுண்டு சோறு கொடுத்தனர். அப்போது ஆரம்பித்த இந்த பார்வையாளன் பொறுப்பு கல்லூரி வரை தொடர்ந்து, பசங்க தண்ணி அடிக்கையில் வார்டன் வந்தால் குரல் கொடுக்க நிறுத்தி வைத்து, இன்று தனியாக வீடு எடுத்து தங்கிய பிறகு கூட அறையில் நண்பர்கள் தண்ணி அடிக்கையில், ” டேய் மதன கூட்பிட்றா, அவனுக்கு ஒரு லேஸ் கொடுத்துட்டு ஆரமிப்போம், பிரச்சனை எதுவும் இல்லாம இருக்கும் பாரு” என்னும் அளவுக்கு ஒரு சடங்காகவே ஆகிவிட்டது.

எந்த படமும் முதல் ரீலீசுக்கு எங்கள் ஊருக்கு வராது, ஓர் ஊர் எந்த அளவுக்கு பெரியது என்பதை அந்த ஊரில் உள்ள தியேட்டர் எண்ணிக்கை மற்றும் அதில் திரையிடப்படும் படங்களின் ரீலீஸ் ஆகியவற்றை வைத்தே நான் கணக்கிட்டு வந்தேன். அண்ணாமலை திரைப்படத்திற்கு எங்கள் வீட்டு ஓனரின் மகன் இரவெல்லாம் அமர்ந்து, ஒரு பேனர் செய்தது நினைவு இருக்கிறது. தலைவர் - குஷ்பு, படம் கண்டிப்பா ஹிட் என்று என்னிடம் சொல்லி கொண்டே அந்த பேனர் செய்தார். அவர் சொன்னபடி படம் ஹிட், ஆனால் அவர் கட்டிய பேனர் எங்கள் வீட்டிற்கு எதிரில் உள்ள கரண்ட் கம்பியில் சில காலம் தொங்கி கொண்டு இருந்தது, பின் ஒரு நாள் மாடு குஷ்புவை ஆவலோடு மென்று கொண்டு இருந்தது. அதன் பின் அந்த வீடு மாறி விட்டோம், அவரை நான் பார்க்கவில்லை.

எந்த வித பரபரப்பும் அற்ற வாழ்க்கை, அதில் சுவாரசியம் ஏற்படுத்தி கொள்ள எப்போதாவது +2 பள்ளி பிள்ளைகள் ஒன்றை ஒன்று இழுத்து கொண்டு ஓடிவிடும். அதை பற்றி சில நாட்கள் பேச்சு பரவும். பெரும்பாலும் ஓடியவர்கள் திரும்பி வருவார்கள், வீட்டின் சம்மதத்தோடு மீண்டும் திருமணம் நடக்கும், இல்லை ஊரிலேயே தனி வீடு எடுத்து வாழ தொடங்கி விடுவார்கள். ஜாதி சண்டை எங்கள் ஊரில் அதிகம் வந்தது போல் தெரியவில்லை.

எப்போதும் எங்கள் பள்ளியில் காலை சுடும் வெயிலில் நிற்க வைத்து பிரேயர் பாட சொல்வார்கள், பெரும்பாலும் ஒன்றும் புரியாது. நீராரும் கடலுடுத்த மட்டும் சற்று உரக்க பாடியது நினைவு இருக்கிறது (பின்னால் நிற்கும் தமிழ் அய்யாவை தாஜா செய்ய). மீசையும் காதலும் முளைக்க தொடங்கிய பின்பு, என் பக்கத்தில் பாடி கொண்டிருந்த கணேஷ், உறுதிமொழி எடுத்து கொள்கையில் “ All Indians are my Brothers and Sisters” என்ற வரியை மட்டும் விட்டு விட்டு சொல்ல தொடங்கினான்.

பள்ளி இறுதி வரை என் ஊரை விட்டு எங்கும் வெளியே செல்லாததால் என் இருப்பு பற்றிய விவரணைகள் எதற்கும் பங்கம் இல்லை. எங்கள் கிராமத்திற்கு சென்றால் கூட, “செங்கதிலயா படிக்கிறே” என்று பெருமை பொங்கதான் பார்ப்பார்கள். ஆனால் கல்லூரி வந்த பின், உன் ஊர் எது என்றால் திருவண்ணாமலை என சொல்லத் தொடங்கினேன், பின் அது எங்கே என கேட்டதற்கு வேலூர் பக்கம் என்றேன். ஒரு ப்ராஜெக்ட் காரணமாக திருவனந்தபுரம் சென்றபோது, அதுவும் கைக் கொடுக்காமல் போக சென்னைக்கு பக்கத்துலே என்றேன். (எங்கள் ஊர் சென்னையில் இருந்து 180 கிமீ).

ஓ, சென்னையோ? பீச்சுக்கு போகுமோ என்றனர். ஆஹ்ன், Daily என்னும் அளவுக்கு பீலா விட வேண்டி இருந்தது. தூரம் செல்ல செல்ல கிராமங்களில் சாயல் அழிந்து பெருநகரங்கள் அதை விழுங்கி விட தொடங்குகிறதா. இல்லை நகரம் பூசும் சாயத்தில் நமது கிராமத்தின் பேர்களை சொல்ல கூச்சப்பட்டு போகிறோமா என தெரியவில்லை.

ஊருடன் தினம் தினம் இருந்த தொடர்பு அற்று போய், ஒவ்வொரு முறை ஊருக்கு போகையிலும் சிற்சில சித்திரங்களே ஊரை பற்றி மனதில் தங்கி விட்டிருக்கிறது. ஊரை விட்டு ஒதுங்கிய ஓர் இடத்தில் தான் எங்கள் வீடு, பேருந்து நிலையத்தில் இருந்து குறுக்கு வழியாக ப்லாட்டாக மாறி கொண்டு இருக்கும் விளைநிலங்கள் ஊடாகவே என் வீட்டிற்கு சென்று விடுவேன். பெரும்பாலும் நான் ஊருக்கு வந்து செல்வது என் அப்பா-அம்மாவிற்கு மட்டுமே தெரியும். நான் வளர வளர இவர்களுடனான எனது நெருக்கம் அதிகரித்த வண்ணமே வந்திருக்கிறது.

வீட்டிற்குள் தாழப் பறக்கும் பறவை நான் என்னும் வரி எனக்கு மிக பிடித்தமானது. கடந்த சில வருடங்களான எனது ஊரின் சித்திரத்தை உருவாக்க முயன்று தோற்று போகிறேன், அம்மா முகம் மட்டுமே நினைவு வருகிறது. கிராமத்து வீடை நினைக்கும் போது எல்லாம், பாட்டி முகமே நினைவு வருவது போல். வீடு மட்டும் அல்ல, ஊரோடும் பெண்கள் தங்கள் முகங்களை ஒட்டி விடுகிறார்கள் போல.

No comments:

Post a Comment