Tuesday, June 30, 2009

என் ஜன்னல் வழியே #3

தேர்தல் திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது. போய்டுவேன் போய்டுவேனு கம்யூனிஸ்ட் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டு இருந்ததாலோ இல்லை பொருளாதார பின்னடைவினால் பாதிக்கப்பட்டதாலோ என்னவோ ஒரு நிலையான ஆட்சிக்கு மக்கள் உத்தரவு கொடுத்து விட்டனர். காங்கிரஸ் மற்ற மாநிலங்களில் எப்படியோ, தமிழ்நாட்டில் அதன் முக்கிய தலைவர்கள் தோற்றது கண்டிபாக தற்செயல் அல்ல என தோன்றுகிறது. தொலைக்காட்சிகளில் மாற்றி மாற்றி பிரபலங்கள் வரிசையில் நின்று வக்களித்ததை தெரிவித்து கொண்டு இருந்தனர். எங்கள் ஊரில் பிரசித்தி பெற்ற டாக்டர் நான் வரிசையில் ஒரு மணி நேரம் நிற்கையில் நேராக உள்ளே சென்று வாக்களித்து விட்டு வந்து விட்டார். ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு வாக்களித்த பின் நடு விரலில் மையை இட்டு இருக்கிறார்கள். அவர்கள் வந்து டி.விக்கு போஸ் கொடுப்பார்கள் என யோசித்திருக்கலாம்.


ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நான் பல வருடமாய் கேள்விப் பட்ட நாவல். மிகுந்த எதிர்பார்ப்போடு படிக்கத் துவங்கி இருக்கிறேன். அவரது சில சிறுகதைகள் மிகவும் பிடித்திருந்தது, ஆனால் நாவல் இன்னும் என்னைக் கவரவில்லை. முழுதும் படித்து விட்டு, முடிந்தால் மீண்டும் ஒருமுறை படித்து விட்டு சொல்கிறேன்.


ஒரு இலக்கிய புத்தகத்தை படித்த பின் “இந்த புத்தகம் எனக்கு பிடிக்கவில்லை” என சொன்னால், சுந்தர ராமசாமி எத்தனை முறை படித்தாய் எனக் கேட்பாராம். எந்த புத்தகத்தையும் உடனே பிடிக்க வில்லை என சொல்லிவிடல் ஆகாது. இன்னும் சிறிது நாள் தள்ளி படித்து பார்க்கலாம். “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்னும் தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது, தேர்தல் சமயத்தில் இது இன்னும் பொருத்தமானதாக தோன்றுகிறது.


சமீபத்தில் பார்த்த ஹாலிவுட் படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது “Usual Suspects”. Pulp Fiction க்கு பின் வந்த நிழல் உலக திரைபடங்களில் இது மிக முக்கியமானது. ஒரு நகரத்தில் ஒரு திருட்டு நடக்கிறது, அதன் காரணமாக எப்போதும் போலிசின் சந்தேக லிஸ்டில் இருக்கும் ஐந்து பேர் கைது செய்யப் படுகிறார்கள். அதில் சிலர் திருட்டு தொழிலை விட்டு வேறு நல்ல நிலையில் இருப்பவர்கள். இருந்தாலும் இந்த குற்றம் அவர்களை ஒன்றிணைக்கிறது.
அதிலிருந்து விடுதலை ஆகும் அவர்கள், போலீசை பழிவாங்க இணைந்து ஒரு சின்ன திருட்டை போலிசிடமே நடத்தி கட்டுகின்றனர். பின் அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்ல, அங்கே அந்த ஐவரும் செய்ய வேண்டிய ஒரு மிக பெரிய, மிக அபாயகரமான Assignment காத்திருக்கிறது. அவர்கள் அதில் இருந்து தப்பிக்கவே முடியாதபடி வலை பின்னப் பட்டிருப்பதை உணர்கிறார்கள். கோபயாஷி என்னும் ஒரு வக்கீல் மூலம், கைசர் சூஸே என்னும் நிழல் உலக தாதா அவர்களை அந்த வேலையை செய்ய சொல்கிறான். அதன் பின் கதை மின்னல் வேகம் பிடிக்கிறது. மிக கட்சிதமான திரைகதை, யார் கைசர் சூஸே? என்பது வெளியில் தெரியாத வண்ணம் கதையை நகர்த்தி முடியும் அந்த இறுதி காட்சி கலக்கல். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.குட்டி கவிதை


வேகத்தடை


ரயில் நிலைய படிக்கட்டுகள்

எப்போதும் வேகமாகவே

கடந்து விடுகிறது…..

நிதானம்,

என்றாவது மழை நாளிலும்

இரும்பு கால்களை

மாட்டி கொண்டு

முன்னால்

ஏறிக் கொண்டிருந்த தோழியை

பார்த்த அன்று மட்டும்

கை கூடுகிறது

என் ஜன்னல் வழியே-4

எங்கள் அப்பார்ட்மென்ட்டில் எங்கள் வீட்டின் பக்கத்து வீட்டில் ஏற்கனவே தங்கி இருந்தவர் கல்கத்தாவில் இருந்த தன் குடும்பத்தை அழைத்து வந்துள்ளார். அவரது அப்பா அம்மா சகிதம் அவரது ஒரு வயது குட்டி தேவதையையும் சேர்த்து ஐந்து பேர் இருக்கிறார்கள். ஒரு நாள் வீட்டிற்க்கு வாங்கள் என அழைத்தார். வழக்கம் போல கூச்சப் பட்டுக் கொண்டு செல்லவில்லை.


அறையில் நண்பனுக்கு பிறந்தநாள் என்று போன வாரம், கேக் கொடுப்பதற்காக சென்றோம். அவரும் அவர் மனைவியும் வீட்டில் இல்லை, அவரது அப்பா அம்மாவிடம் கொடுத்தோம், ஒரு வயது இனோ விளையாடி கொண்டிருந்தாள், அது அவளது செல்லப் பெயராம். அவளை போலவே மென்மையாக இருக்கிறது, இனோ என்றால் திரும்பி “க்ளக்” என சிரிக்கிறாள். பிறந்த நாள் கேக்கை வாங்கிய உடன், அவர்கள் வீட்டின் கதவோரம் வைத்திருந்த DVD பிளேயர் காணாமல் போனதாக சொன்னார்கள். அந்த சூழ்நிலைக்கு சற்றும் சம்மந்தமில்லாமல் இருந்தது. பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்கலாம், எங்கே வேலை செய்கிறீர்கள் என கேட்டு இருக்கலாம், தட்டை கழுவி கொடுத்து விட்டனர்.


ஆனால் எதிர்ப்பார்ப்பது போல் இருப்பதில்லை வாழ்கையும், மனிதர்களும். இதுவரை இப்படி ஏதும் இங்க நடந்ததில்லை, Association Secretaryயிடம் சொல்லலாம் என்று சொல்லி அவர்களிடம் விடை பெற்று வந்தோம், அவர்கள் எங்களை ஒரு விரோதப் பார்வை பார்ப்பது போலவே இருந்தது. “பாய் இனோ என்றேன், “க்ளக் என சிரித்தாள்” இனோ. அறைக்கு வந்த உடன் என் நண்பன் ஏன்டா, அந்த DVD பிளேயர திருடி தான் நம்ம கேக் வாங்கி இருப்போம்னு நினைச்சு இருப்பாங்களோ? என்றான்.


தமிழில் நகைச்சுவை கதைகள் எந்த அளவிற்கு எழுதப்பட்டுள்ளது என தெரியவில்லை. சுஜாதா “குதிரை”, “நயாகரா” போன்ற அட்டகாசமான கதைகள் எழுதி உள்ளார், தேவனின் சில கதைகள் சிறப்பானவை என கேள்வி பட்டிருக்கிறேன். படித்ததில்லை, யாரேனும் படித்தவர்கள் சொல்லலாம். “குதிரை” கதை, மழைக்கு ஒதுங்கிய ஒருவனை குதிரை கடித்து விட அவன் அதற்க்காக படும் அவஸ்தைகளை விவரிக்கும் கதை. மும்பை எக்ஸ்ப்ரஸ் படத்தில் இந்த கதையை காட்சிப் படுத்தி இருந்தார் கமல், கதையின் தாக்கம் இல்லை காட்சியில்.


அதே போல நயாகரா, One of the Best!. நேற்று கதையை படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்து கொண்டு இருந்தேன், நயாகரா பார்க்க சொல்லும் ஒரு தமிழ் தம்பதியர், இரண்டு கல்கத்தா நபர்களுடன் சிக்கி கொண்டு படும் கதை. அவசியம் படித்து பாருங்கள். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை அல்லது தரத்தை அதன் நகைச்சுவைத் தரத்தை வைத்தே அறிந்து கொள்ளலாம் என படித்திருக்கிறேன். தமிழில் இன்னும் பல நகைச்சுவைகள் கதைகள் வர வேண்டும்.
சமீபத்தில் பார்த்த ஹாலிவுட் திரைப்படம், குவென்ட்டின் டொரான்டினோவின் Death Proof. ஒரு தொடர்க் கொலைகாரனைப் பற்றிய படம் இது. ஒரு நெடுஞ்சாலையோர உணவு விடுதியில் சந்திக்கிறார்கள் மூன்று தோழிகள். அதில் ஒருத்திக்கு அன்று பிறந்த நாள். அவர்கள் கொண்டாட்டத்தில் அவர்களை அறியாமால் அவர்களை பின் தொடர்கிறான் ஒருவன். பின் அவர்களைத் தொடர்ந்து தன்னுடைய Death Proof காரில் சென்று அவர்களைக் கொல்கிறான். அது விபத்து என லாவகமாக தப்பித்து விட்டு, பின் அதையே வேறு ஒரு இடத்தில, வேறு மூன்று தோழிகளைக் கொள்ள முற்பட நடப்பது மற்றவை, ஒரு த்ரில்லர். அந்த விபத்து, கடைசி நிமிட கார் Chasing காட்சி மிக அழகாக படமாக்க பட்டுள்ளது. Chasing படம் விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம்.


ஒரு கவிதை:


அழுவாத..

அக்காவின் இரண்டு வயது சுகாஷினி

அழ ஆரம்பித்தாள்

அண்ணன் அடித்து விட்டான் என,

அக்கா ஒரு அடி போட்டப் பின்

முறைத்து பார்த்துவிட்டு

சுட்டி டி.வி பார்க்க திரும்பி கொண்டான்

எல்லோரும் அவரவர் வேலைக்கு திரும்ப,

ஐந்து நிமிடம் கடந்து

சுகாஷினி அண்ணன் பக்கத்தில் படுத்து கொண்டு,

“அடிக்காதனா பாப்பாக்கு வலிக்குது இல்ல,

அதான் அம்மா அடிச்சாங்க” என்று

அவன் கன்னத்தில்

முத்தமிட்டு கொண்டிருந்தாள்,

நான்

வெறுமனே பார்த்துகொண்டிருந்தேன்…

இந்த தொடரின் முந்தையப் பதிவுகள் 1 | 2 | 3 |

Tuesday, June 16, 2009

குறும்பாடல்கள்-2

தொடர்ந்து பதிவுகள் போட விஷயம் சிக்கலையே என்று நினைத்த படிய என் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கையில் கண நேரத்தில் உதயம் ஆனது இந்த யோசனை. ஏற்கனவே ஆரம்பித்து விடப்பட்டுள்ள பதிவுகளை தொடரலாமே என்று.


இந்த குறும்பாடல்களின் சிறப்பு இதை கதையோட ஒட்டியப்படிதான் சொல்லவேண்டும் என்பதே, மற்ற பாடல்களை போல இடை சொருகளாய் இவ்வகைப் பாடல்களை வைக்க முடிவதில்லை. பல நல்ல இயக்குனர்களின் அல்லது வெற்றி பெற்ற படங்களில் தான் இந்த குறும்படல்கள் அதிகம் காண படுகிறது, அது அந்த இயக்குனரின் திறனையும் பிரதிப்பளிப்பதாக உள்ளது. உதாரணமாக, மணிரத்னம் “நாயகனில்” ஆரம்பித்தார், அதன் பின் ஷங்கர் சில படங்களில் அனுமதித்தார், இப்போது செல்வராகவன் பயன்படுத்துகிறார்.


காதலனில் வரும் “கொல்லையில தென்னைக் கட்டி குருதோளில் பெட்டி செஞ்சு, சீனி போட்டு நீ திங்க செல்லமாய் பிறந்தவளோ” பாடலும், அதை ஒட்டிய காட்சிகளும் கவிதை. ஷங்கர் முதலில் ஒரு மென்மையான கதை வைத்து கொண்டு தான் படம் எடுக்க அலைந்து கொண்டிருந்தாராம். கடைசியில் ஜென்டில்மேன் எடுத்தார், அப்புறம் ஒன்னும் சொல்வதற்க்கில்லை.


இந்த சிறுபாடல்கள் வளர்ச்சி அடைந்த பிறகு, கதாநாயகன் நாயகியிடம் கவிதை சொல்வது குறைந்து போனதோ என்ற எண்ணம் உண்டு. இதயம் படத்தில் வரும் சில கவிதைகள் அழகானது, அதற்கு பின் வந்த பல படங்களில் இப்படி கவிதை சொல்வது ஒரு வகை Mockery போல் ஆகிவிட்டது, இதயம் படத்திற்கு பின் நீண்ட நாள் கழித்து டூயட் படத்தில், வரும் வைரமுத்துவின் “கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா, என் காலோடு கேட்கின்ற கால் சலங்கை நீயா?” கவிதை மிக சிறப்பாய் அமைந்தது.


ஆனால் அதே வைரமுத்துவின் “காதலித்து பார்” கவிதையை பிரசாந்த் ஒரு படத்தில் அவருக்கு வரவே வராத நடிப்பை கஷ்டப்பட்டு முகத்தில் வர வைக்க முயற்சி பண்ணி சொதப்பினார். அப்புறம் விவேக், “காதல் ஒரு கழட்டி போட்ட செருப்பு, சைஸ் சரியா இருந்த யார் வேணும் நாலும் மாட்டிக்கலாம்” போல எழுத ஆரம்பித்த உடன் தான், இயக்குனர்கள் முழு வேகமாய் குட்டி குட்டி பாடல்களுக்கே போகலாம் என இறங்கி இருப்பார்கள் போல.


இதோ பிடித்த சிறு பாடல்கள் வரிசையில் அடுத்து, ஜீன்ஸ் படத்தில் வரும் இந்த பாடல் ஹரிஹரன் குரலில் மிக அழகானது, பிரிவின் துயர் ததும்பும் இந்த பாடல் “திருடா திருடா” படத்தின் “ராசாத்தி என் உசுரு எனதில்லே” பாடல் அளவுக்கு பிரிவின் துயர் பாடியது.


பாடல்: புன்னகையில் தீ மூட்டி


இசை: ஏ.ஆர்.ரஹ்மான்


வரிகள்: வைரமுத்து


ஏலே……லே ஏலேலே ஏலே…..லே


புன்னகையில் தீ மூட்டி போனவளே,


கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே,


அன்பே என் பூமியே புல் ஆனதே


அய்யோ என் காற்றெல்லாம் நஞ்சானதே….


என் உயிரே என் தேகம் தின்னாதே


என் விழியே முகம் தாண்டி செல்லாதே


ஏலே……லே ஏலேலே ஏலே…..லே


அன்பே மெய் என்பதே பொய் ஆகினால்


அய்யோ பொய் என்பது என் ஆகுமோ


உயிர் காதல் உயிர் வாங்குமோ ….


இதே போல், பிரிவை கவிதைப்படுத்திய மற்றொரு பாடல், “காதல் கொண்டேன்‘ படத்தில் வரும் நா. முத்துகுமாரின் “நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பது ஏதுமில்லை”. இவரது வரிகளில் வரும் பல பாடல்கள் மிக அழகாக உள்ளது, பூ வாழ சொல்லியது, கனி பாட சொல்லியது போன்ற நைந்து போன வார்த்தைகளை வைத்து ஜல்லி அடிக்காமல் பல நல்ல வரிகளை தொடர்ந்து எழுதி வருகிறார். கல்லூரி படத்தின் “உன்னருகில் வருகையில்” மற்றும் “சரியா இது தவறா” பாடலிலும் அழகான வரிகளுடன் இசை கலந்து வருவது மென்மை.

Wednesday, June 10, 2009

சிறுகதை : வெறுப்பு (உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

இன்னும் நான்கு மணி நேரத்தில் அலறப் போகும் தியேட்டரின் ஒலிபெருக்கி சத்தமோ, மூன்று மணி நேரத்தில் பள்ளிக்கு கிளம்பும் நந்துவின் பதற்றமோ இல்லாமல் அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீடு பனியில் உறைந்து இருந்தது. பனிசீலையை விலக்கி திறக்கப்பட்ட கதவின் கிரீச் மரக்கிளைகளில் இருந்த காக்கைகளை விரட்ட, கையில் ஒரு வாளி தண்ணீரோடு காயத்ரி தெருவில் இறங்கினாள். அரைகுறையாக கழுவப்பட்ட நெற்றியில் சாந்து திட்டு திட்டாய் பூசி இருந்தது. அடிக்கடி சரிந்து கொண்டு இருந்த நைட்டியின் தோளை, பந்து வீச போகும் பௌலர் போல சரி செய்தபடி தண்ணீரை வாசல் முழுதும் தெளித்தாள். தெருவில் யாரும் இல்லை என்பதை பார்த்துவிட்டு குனிந்து கோலம் போட்டு விட்டு உள்ளே செல்லவும்


காயத்ரி பால் வரலையா?


என்று தாமோதரன் கேட்கவும் சரியாய் இருந்தது, அந்த கேள்விக்கு அவன் பதில் எதிர்பார்க்க மாட்டான் என்பது அவளுக்கு தெரியும். அவனுக்கு தேவை காப்பி, அதுவும் பல் விலக்காமல் அப்படியே குடிக்கப் போகும் காப்பி. கதவில் மாட்டி இருந்த பிளாஸ்டிக் பையில் இருந்த பாலை எடுத்து கொண்டு சமையல் அறை நோக்கி சென்றாள். காப்பி போட்டு குடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர முயன்றாள். அவன் காப்பி குடிக்கையில் அங்கு இருக்க அவளுக்கு பிடிக்காது, அவன் காப்பி உறியும் சத்தம் அவளை என்னமோ செய்யும். அதை அவனிடம் இப்போது சொல்ல முடியாது.


காயத்ரி பசங்க எழுந்தாச்சா? என்றான்.


மணி ஆறுதான் ஆகுது 7க்கு எழுந்திடுவாங்க என்று சொல்லிக் கொண்டே சமையல் அறை நோக்கி சென்றாள்.


இன்று காலையிலையே ஒரு வெறுப்பு சூழ்ந்து கொண்டது, முடிந்தவரை தாமோதரனை வெறுக்காமல் இருக்கத்தான் முயற்சிக்கிறாள். ஆனால் முடிவதில்லை. அவன் இல்லை என்றால், அன்று வேறு யாரையாவது வெறுக்க வேண்டி இருக்கிறது. “பால் தண்ணியா இருந்தா பாக்கெட் பால் வாங்கிக்க, என்ற பால்காரியையோ, நேற்று கோலம் போடுகையில் தெருவை இரண்டு முறை கடந்த அந்த சைக்கிள்காரனையோ, சில சமயம் இவர்களிடம் எல்லாம் பட வேண்டி இருகிறதே என தன்னையோ. அந்த காட்சிகள் வெறுப்பை தூண்டுகிறதா இல்லை உள்ளிருக்கும் வெறுப்பு தனக்கான பிரத்யோக காட்சிகளை தேர்ந்தெடுத்து கொள்கிறதா என தெரியவில்லை.


ஆனால் எல்லா வெறுப்பையும் எல்லாராலும் வெளிப்படுத்திவிட முடிவதில்லை, நேற்று பிளஸ் டூ முடித்த தம்பி வீட்டிற்கு வந்தபோது, தாமோதரனாகத்தான் பேச்சை ஆரம்பித்து, “என்ன படிக்க போற?” என்றான். இன்ஜினியரிங் என்றவுடன், எத்தனை பேர் இன்ஜினியரிங் படிச்சிட்டு மாடு மேய்க்கிராங்க தெரியுமா, உலக பொருளாதாரமே பின்னடைஞ்சு கிடக்கு என்று அவரது உலக அறிவை அவன் மேல் தள்ளினான்.


“இல்லை அவனுக்கு அதான் பிடிக்குதாம்” என அவள் சொல்ல,


உனக்குதான் எல்லாம் தெரியுமா, அப்ப படிச்சிட்டு பேசறவன் எல்லாம் முட்டாளா? என்று அவளையும் திட்டி விட்டு சென்று விட்டான். அவளும் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை, சொல்ல முடியாது. அதன் பின் நேற்று முழுதும் அவன் சாதாரண அறிவுகூட இல்லாத மனிதர்களுக்கு எப்படி புரிய வைப்பது போன்ற பாவனையிலேயே இருந்தான். அது உள்ளே இருந்த எதையோ உமிழ்ந்து விட்டதின் சந்தோஷம் போலவும் அந்த குடும்பத்திலேயே அதிகம் படித்தவன் தான் தான் என நிருபித்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்ட மகிழ்ச்சி போலவும் இருந்தது.


மூன்று மாதத்திற்கு முன் இந்த வீட்டிற்க்கு வருகையில் இந்த வீடு பிடிக்கவில்லை, திரை அரங்கை ஒட்டிய வீடு என்று சொல்லும் ஜன்னல் வழி யூரியா வாசம், இந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை. முதலில் பிடிக்காமல் இருந்து வீடு தான், இப்போது பழக பழக பிடித்துவிட்டது. சில விஷயங்கள் பழக பழக பிடித்து விடுகிறது இல்லை பிடிப்பதாய் நினைத்து கொள்வது சந்தோஷமாக இருக்கிறது. இல்லை என்றால் இத்தனை பேர் இந்த தெருவில் வாழவில்லையா, உலகத்தில் கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லையா, இல்லை குழந்தை பெத்துக்க வில்லையா?. பிடித்தாய் நினைத்து கொள்வது ஒருவகையில் சமரசம் செய்து கொள்வது போல் தானே?.


சமரசங்கள் எப்போதும் இருபக்கமும் கொஞ்சம் சந்தோஷம் கொஞ்சம் கசப்பை விதைத்து விட்டுத்தான போகிறது. கொஞ்சம் கூட சந்தோஷம் தராத சமரசத்தை யார் ஏற்றுக் கொள்ள போகிறார்கள். காயத்ரி சிறு வயது முதலே நன்றாக பாடக் கூடியவள் தான், உள்ளூர் பாட்டு போட்டியில் பாடி வெற்றி பெற்று இருக்கிறாள், கல்யாணத்திற்கு பின் கூட நீ பாடலாம் என்று தான் முதலில் தாமோதரன் சொன்னான், ஆனால் ஒரு குழந்தை பிறந்த பின், நீ குழந்தைய பாத்துக்குவியா இல்லை பாடின்டு இருப்பியா என்று சொல்லிவிட்டான். அந்த சமரசத்தில் காயத்திரிக்கு கிடைத்த சந்தோஷம் நந்து, எப்போதாவது தொலைக்காட்சியில் பாட்டு போட்டி நடக்கையில் தாமோதரன் மீது வெறுப்பு.


தாமோதரனுக்கும் இப்படி இருக்குமோ என தெரியவில்லை, ஆனால் அவனுக்கு ஒன்றும் அவள் மேல் அப்படி ஒரு பெரிய ஒட்டுதல் இல்லை என்று அவளுக்கு தெரியும், எப்போதாவது குழந்தைகளை கொஞ்சுவான். அடிக்கடி அலுவலக சங்கத்தில் ஒரு கூட்டம் என்று சென்று விடுவான், பல நாட்கள் அந்த வீட்டில் கை குழந்தையை வைத்து கொண்டு தனியே தான் தூங்கி இருக்கிறாள்.


ஆனால் புகைப்பதை தவிர அப்படி ஒன்றும் பெரிய கெட்ட பழக்கம் இல்லை, சம்பள தேதி அன்று மட்டும் சீட்டு ஆடுவான், கல்யாணம் ஆன புதிதில், இப்போது அதுவும் இல்லை. இன்னும் கூட அவனுடைய சம்பளம் என்ன என்று அவளுக்கு தெரியாது, அது அவனது ஈகோவை தீண்டும் விஷயம் என நினைத்தானோ என்னவோ அவள் கேட்ட போது எல்லாம் உனக்கு வீட்டு நிர்வாகத்துக்கு மாசம் எவ்வளவு தேவையோ அதை மட்டும் கேள் என்று சொல்லிவிட்டான். ஆம் ப்ளடி ஈகோ, வெளியே போனால் நாலு பேர் மரியாதையை கொடுத்ததும் தலை மேல் ஏறிக் கொள்ளும் ஈகோ, வீட்டில் மனைவியின் மனசை நோகப் படுத்துவதைப் பற்றி யோசிக்காத ஈகோ.


மணி இப்போதே ஏழு ஆகிவிட்டது, நந்துவை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கடமை சூழ, “டேய் குட்டி எழுடா” என்று சொல்லி கொண்டே படுக்கையறைக்கு சென்றாள், ஏற்கனவே காவ்யா எழுந்து உட்காந்து கொண்டு இருந்தாள். காவ்யா எப்போது படுக்கையில் இருந்து எழுந்தாலும் அழுவது கிடையாது, எதையோ சொல்லி விடுவது போன்ற முகத்தை வைத்த வண்ணமே அமர்ந்திருப்பாள், இந்த 3 வயசுக்குள்ளே அவளுக்கு அப்படி ஒரு அறிவு, மனிதர்களை புரிந்து கொள்ளும் திறன். அவள் தன்னை போலவே உள்ளதாய் அடிக்கடி காயத்ரி நினைத்து கொள்வாள். முகத்தை சற்று கடு கடு என்று வைத்து கொண்டு ஒரு வார்த்தை சொல்லி விட்டாலே அழுது விடுவாள், நந்து அப்படி இல்லை, ஸ்கேலை கையில் எடுக்கும் வரை பார்த்து கொண்டு இருப்பான், கண்டிப்பாக நாம் அடிக்க போகிறோம் என்று உறுதியான பின் முழு மூச்சை பிடித்து கொண்டு அழ தொடங்குவான்.


அண்ணன் இன்னும் எழலயாடா என கேட்டு கொண்ட அவளிடம் வந்தாள், “ஆமாம் மா, இன்னும் தூங்குறான், கக்கா பையன்” என்றாள். இது அவள் சமீபத்தில் கற்று கொண்ட வார்த்தை, நேற்று பக்கத்துக்கு வீட்டு பையன் வந்து விளையாடி கொண்டு இருக்கையில் தான் முதலில் சொன்னாள். அவன் ஒவ்வொரு பேராக அவளிடம் சொல்லி கொண்டிருந்தான், முதலில் “அண்ணா” என்றான் அவள் “கக்கா பையன்” என்றாள், நான் என்றான் அதற்கும் “கக்கா பையன்“ என்றாள், ம்ம்ம், பாப்பா என்றதற்கு யோசித்து “நல்ல பொண்ணு” என்றாள்.


அவள் மீண்டும் அந்த வார்த்தையை சொன்னது, காலையில் இருந்து வந்த வெறுப்பை சற்று தனித்தது போல் இருந்தது. சமரசத்தின் சந்தோஷம்!. மெல்ல நந்துவையும் எழுப்பி பாத்ரூமிற்கு அனுப்பி விட்டு அவளை வராண்டாவில் விட்டு விட்டு சமையல் அறை சென்றாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் கையில் நிக்கரை தூக்கி கொண்டு வந்து அம்மா கழுவி விடு என்பான் நந்து, அதற்குள் அவள் காலை சமையலுக்கு காய் எல்லாம் எடுத்து வைத்து விட்டு போக வேண்டும். அவள்தான் இந்த குழந்தைகள் வேலை எல்லாம் செய்ய வேண்டும் தாமோதரன் அங்கேயே இருந்தாலும் செய்ய மாட்டான்.


அவள் காய் கூடையைத் திறந்து பார்க்கவும், நந்து வெளியே குரல் கொடுக்கவும் சரியாய் இருந்தது. இரண்டு முறை அம்மா அம்மா என்று கத்தினான், காய் கூடையில் எதுவும் இல்லை, காலை சமையலுக்கே காய் வேண்டும். அடுத்த தெருவிற்க்கு போய் தான் வாங்க வேண்டும், எப்படியும் இந்த நைட்டியோடே போக முடியாது. அதற்குள் மீண்டும் இரு முறை கத்திவிட்டான், அங்கேயே உட்கார்ந்து இருந்த தாமோதரன் தலையை கூட அசைக்கவில்லை, சமையல் அறையிலிருந்து வெளியே வந்து எதோ முணுமுணுத்து கொண்டே சென்று அவனுக்கு கால் கழுவி விட்டாள். அவள் சொல்லியது அவனுக்கும் கேட்டு இருக்கும் ஆனால் அவன் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. அதற்குள் சட்டையை மாட்டி கொண்டு எங்கோ கிளம்பினான் தாமோதரன்,


வழியில் விளையாடி கொண்டிருந்த காவ்யாவை தாண்டி வந்த காயத்ரி,


“வெளிய தானே போறீங்க, ஒரு கா கிலோ தக்காளியும், உருளையும் வாங்கிட்டு வந்துடுங்க” என்றாள்.


“வெளியே போகும் போது வேலை சொல்லாதேனு சொல்லி இருக்கேன் இல்ல?” என்றான்


“நைட்டியோட இருக்கும் நான் எப்படி போக முடியும், அவன் ஸ்கூலுக்கு நேரம் வேற ஆகுது” என்றாள்.


“வீட்லயும் எதையும் செய்யாதீங்க, இப்ப சொன்னாலும் திட்டுங்க” என்றாள்,


“சொல்லி கிட்டே இருக்கேன் கூட கூட பேசற” என சொல்லி கொண்டே அவன் ஒரு எட்டு வைத்து வந்தது தான் தெரியும், நிலை குலைந்து கதவில் இடித்து கொண்ட பின் தான் அவன் அடித்ததை உணர்ந்தாள்.


அவன் எதுவும் சொல்லாமல் விறு விறு வென செல்ல, அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த காவ்யா மெல்ல சிணுங்கி கொண்டே வந்து, அவள் கண்ணீரை துடைத்து விட்டு, “அப்பா கக்கா பையன் மா” என்றாள்.

-------------------------------------------------------------------------------------
உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை

http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html

முந்தைய சிறுகதைகள்  1 | 2 | 3 | 4 |

Tuesday, June 2, 2009

சுஜாதாவின் பாலமும், ஹிட்ச்க்காக்கின் கயிரும்

மரணம் என்பது ஒரு கலை, கவிதை போல், இசை போல் அதையும் அழகியலோடு செய்யலாம் என்ற கருத்து பல காலமாக இருந்து வருகிறது. இந்த கருத்து 1930ல் அமெரிக்காவில் பாபி ப்ராங்கின் என்பவரின் மரணத்திற்கு வழிவகுத்தது. அதை செய்தவர்கள் அவனது இரண்டு நண்பர்கள், அவர்கள் பிடிப்பட்ட போது அவர்கள் சொன்ன காரணம் இதுதான். கொலை செய்ய ஒரு காரணம் தேவை இல்லை. கொலையும் ஒரு கலை.


1950 களில் அமெரிக்காவில் வாழ்ந்த கவிதாயினி “சில்வியா பிலாத்தின்” புகழ்ப் பெற்ற கவிதை வரிகள் இவை,

“ Dying is an art, like everything else.

I do it exceptionally well.

I do it so it feels like hell.

I do it so it feels real.

I guess you could say I’ve a call “மரித்தல் என்பதும் ஒரு கலையே, அதை நான் மிக திறம்பட செய்வேன் என்ற சில்வியா 1963 ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டு தான் இறந்து போனார். வாழ்ந்துப் பார்க்கும் வாழ்கையையே எந்த கோட்ப்பாட்டிற்க்குள்ளும் அடைக்க முடியாதபோது, யாரும் அறியாத மரணத்தை எப்படி அடைப்பது என தெரியவில்லை. இரண்டு வெவ்வேறு கொலைகள் அதன் காரணங்கள் ஆகியவற்றை எடுத்து காட்டியது சுஜாதாவின் பாலமும் ஹிட்ச்க்காக்கின் கயிரும்.


சுஜாதாவின், “பாலம்” என்ற சிறுகதை உள்ளது. அதன் சுருக்கம் இதுதான். ஒரு ரயில்ப் பயணம் தொடங்குகிறது, முதல் வகுப்பில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பேராசிரியரும், ஒரு இளைஞனும் பயணம் செய்கிறார்கள். ஆரம்பம் முதலே பேராசிரியர் சற்று பதட்டம் கொண்டவராகவே காணப்படுகிறார். பயணம் செல்ல செல்ல அந்த இளைஞனிடம் உரையாடத் துவங்கும் பேராசிரியர், இதுநாள் வரை தான் மறைத்து வைத்திருந்த ஒரு விஷயத்தை அவனிடம் சொல்லப் ப்ரியப்படுவதாக சொல்கிறார். அவனும் ஆர்வமுடன் கேட்க, அவர் சொல்ல துவங்குகிறார்.


எல்லாக் கொலைகளுக்குப் பின்னாலும் அவசியம் ஒரு காரணம் இருக்க வேண்டியது இல்லை, அந்த இளைஞன் உன்னிப்பாக கவனிக்க துவங்க, அவர் தொடர்கிறார், இதே போல ஒரு ரயில் பயணத்தில் முன்னொரு நாள் அவர் செல்கையில் வண்டி ஓர் ரயில் நிலையத்தில் நிற்கிறது, அவர் எதோ ஓர் உந்துதலால் அங்கே இறங்க, ஒரு ரிக்ஷாக்காரன் அவரிடம் சைகை செய்து அவரை ஒரு சந்திற்கு கூட்டி செல்கிறான், விலை மாது இருக்கும் இடம் அது. அங்கு உள்ள ஒரு பெண் தன் குழந்தையை தூங்க வைத்து விட்டு அவரிடம் அறைக்குள் வர, அவளை தலையணை வைத்து கொன்று விட்டு, விறு விறுவென நடந்தே ரயில் நிலையம் வந்து வேறு ஒரு ரயிலில் ஏறி சென்று விடுகிறார்.

இதை அவனிடம் சொல்லிவிட்டு அது தவறு அல்ல, ஏன் என்றால் எனக்கு அந்த பெண் மீது எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லாத பட்சத்தில் நான் குற்றவாளி அல்ல என்கிறார். அந்த இளைஞ்ன் மேலும் சில கேள்விகள் கேட்க அவர் இப்படியே பதில் சொல்கிறார். அதற்கு அவன் எனக்கு கடைசி சமயத்தில் தான் வண்டியில் இடம் கிடைத்து ஏறினேன், அதுவும் வேறு ஒரு நபரின் பெயரில் உள்ள டிக்கட் இது. அதனால் நான் இந்த வண்டியில் பயணம் செய்வது யாருக்கும் தெரியாது, எனக்கு இப்போது ஒன்று தோன்றுகிறது என அவரை நோக்கி வர, ரயில் ஒரு பாலத்தின் மேல் தடக் தடக் என்ற சத்தத்துடன் செல்கிறது. இந்த கதையைப் படித்து விட்டு, உங்க வீட்டிற்கு வரட்டுமா என ஒருவர் சுஜாதாவிற்கு விகடன் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினாராம்.


ஹிட்ச்க்காக்கின் “Rope” திரைப்படம் மேலே குறிப்பிட்ட அந்த அமெரிக்க கொலை வழக்கை மையமாய் கொண்டது. பிராண்டன் மற்றும் அவனது நண்பன் பிலிப், அவர்களது நண்பனான டேவிடை கொல்வதுடன் தொடங்குகிறது இந்தப் படம். அவனை கொன்று ஒரு பெட்டியில் அடைத்து விட்டு, ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். விருந்திற்கு அவர்கள் அழைத்திருப்பது டேவிடின் அப்பா, சித்தி, அவனது காதலி மற்றும் அவர்கள் அனைவருக்கும் பள்ளியில் வகுப்பு எடுத்த ஆசிரியர். அவர்களை ஏன் அழைத்தாய் என பிலிப் கேட்க, அந்த சுவாரசியத்தையும் பதட்டத்தையும் அனுபவிக்க என்கிறான்.
அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வர துவங்குகிறார்கள், வந்தவர்கள் டேவிட் எங்கே என் கேட்க, வருவதாகத்தான் கூறினான் என் சொல்லி விருந்தை தொடங்குகிறார்கள். அப்போது பேச்சு மரணம் பற்றி திரும்புகிறது. ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வேண்டுமானால், அதற்கு எந்த விதத்திலும் வலு சேர்க்காத Inferior மனிதர்கள் கொள்ளப்படலாம் கொல்லப்படலாம் என்று பேசுகிறான் பிராண்டன். மிகுந்த கூர்மையானவறான அவனது ஆசிரியர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த அறையில் உள்ள மாற்றங்களை கவனிக்கிறார். அதன் பின் அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது முற்றிலும் ஹிட்ச்காகி பாணி.


படம் முழுதும் ஒரே அறையில் எடுக்கப் பட்டு உள்ளது. மேலும் படத்தில் Editing எதுவும் செய்யப் படவில்லை (சில இடங்களில் பிலிம் சுருள் தீர்ந்த போது மட்டும்). டெக்னிக்கலாக மிக சவாலான படமான இது ஹிட்ச்க்காக்கின் மேதமைக்கு சான்று.