விஜய் டி.வியில் “விஜய் அவார்ட்ஸ் 2008” தொடங்கி இருகிறார்கள். நடுவர்களாக யூகி சேது, மதன், பிரதாப். கோபிநாத் தொகுத்து வழங்குகிறார். நேற்று தமிழ் சினிமா 2008ன் பொதுவான போக்கைப் பற்றி பேசி கொண்டிருந்தனர். வழக்கம் போல் யுகியின் பேச்சு ரசிக்கும் படி இருந்தது. சென்ற வருடம் 118 தமிழ் திரைப் படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் Hit Ratio எனப்படும் வெற்றி விகிதாச்சாரம் 6.5 சதவிகிதம் தான் என்றார். இது சென்ற வருடத்தை விட 4 சதம் குறைவு.
55 புதுமுக நடிகர்கள், 44 இயக்குனர்கள் வரவு என்ற குறிப்பையும் வெளியிட்டார். அதே போல் சென்ற வருடம் பெண்களை மையப் படுத்திய படங்கள் சற்று அதிக அளவில் வெளி வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் அபியும் நானும், பூ, தனம், சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகிய படங்களை எடுத்து காட்டினர். பிரதாப்பும், மதனும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ளதாக ஒரு பிரமை ஏற்படுத்தும் படங்கள் இவை, இன்னும் நல்ல படங்கள் வேண்டும் என்றனர்.
*************************************************************************************
பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நன்றாக நடிக்க தெரிந்த பெண்கள் இருப்பதும் அவசியம். ஒரு ஷோபா, ஸ்ரீதேவி இல்லை சிம்ரன் அளவு நடிக்க தெரிந்தவர்கள் குறைந்து விட்டனர். உங்களுக்கு ஷோபா நினைவு இருக்கும் என நினைக்கிறன். பிரதாப் கிட்டார் வைத்து கொண்டு “என் இனிய பொன் நிலாவே” என்று பாடுகையில் அவரையே பார்த்தப்படி அமர்ந்திருக்குமே அந்த பெண்தான் ஷோபா. எளிய பாசாங்கு இல்லாத கிராமத்து நடிப்பு அவருடையது, முள்ளும் மலரும், நிழல் நிஜமாகிறது, மூடுப் பனி, ஏணிப்படிகள், அழியாத கோலங்கள் ஆகியப் படங்களில் அவரது நடிப்பு அழகு. இருக்கும் வரை அழகான படங்கள் நடித்தார், இறந்த பின்னும் பாலு மகேந்த்ராவை ஒரு அழகான படம் எடுக்க வைத்தார்.
*************************************************************************************
மிகப் பெரிய திருப்பங்களோ, சுவாரசியப்படுத்தப்பட்ட கணங்களோ இல்லாமல், அலைகளை கடந்துவிட்டப் பின் தெரியும் சலனமற்ற கடலின் மேல் ஓடும் ஒரு சிறு படகை போல் ஓடுகிறது வண்ணநிலவனின் கடல்புரத்தில். மிகையாய் சொல்லக் கூடிய நிகழ்வுகளைக் கூட மெல்லிய மொழியில் பேசுகிறது இந்த நாவல். நாவலில் வரும் சில நிகழ்வுகள் இதற்கு முன் நாம் பார்த்தவை, ஆனால் அதை அந்த கடலோர மக்கள் எதிர்க் கொள்ளும் விதம், இது வரை நாம் படித்தவற்றில் இருந்து மாறுப்பட்டவை.
குரூஸ், மரிய்யமையின் மகன் ஸெபஸ்தி, மகள் பிலோமி ஆகிய நால்வரை சுற்றி பின்னப்பட்ட கதையில் அந்த நிலத்தின் விதவிதமான குணமும் அதன் தாக்கமும் அழகாக சொல்லப்பட்டுள்ளது. மரியம்மையை ஒருப்பக்கம் வெறுத்து ஒரு பக்கம் காரணமே இல்லாமல் அவள் மேல் பயந்து, அந்த கடல்புரத்தை விட்டு வெளியே எங்கும் செல்லத் துணியாத குரூஸ்.
எப்போதும் வசவு சொல் பொழியும், அந்த ஊர் வாத்தியுடன் இன்னது என்ற உறவு முறை சொல்ல முடியாமல் வாழும் மரியம்மை. சாமிதாசை காதலித்து விட்டு அவன் வேறு ஒருத்தியைக் திருமணம் செய்கையில் மௌனமாய் அதைப் பார்த்துகொண்டிருக்கும் பிலோமி என் அத்தணை மனிதர்களும் நிஜமாய் வாழ்கின்றனர் இந்த கடல்புரத்தில்.
மிக சிறிய விஷயங்களை கூட கூர்மை கவனித்து எழுதிஉள்ளார் வண்ணநிலவன்,
“மரியம்மைக்கு வேறு எந்த சத்தம் கேட்டலும் விழிப்பு தட்ட வாய்ப்பில்லை. கதவு திறக்கும் சத்தம் கேட்டல் மட்டும் விழிப்பு தட்டி விடுகிறது”
என்ற வரி போல. கடலை பற்றி பல வரிகள் நெகிழ்ச்சியானவை.
“அவர்களுடைய குடியிருப்புகள் அசிங்கமானவை, கடல் புனிதமானது”
“கடலுக்குப் போன அப்பசியைக் காணலையின்னு தேடி வந்த புள்ளக்கி வழிவிட்டு ஒதுங்கி போன கடலில்லா இது”
“கடல் தன் எழுச்சிமிக்க அலைகளால் ஆரவாரத்தை சொல்லுகிறது. அதில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை” என்பன போன்ற பல வரிகள்.
*************************************************************************************
போன வாரம் எனக்கும் என் நண்பனுக்கும் நடந்த உரையாடல்.
நான்: டேய், எங்க ப்ளாக்ல “என் ஜன்னல் வழியே” னு ஒரு கட்டுரை தொடர் எழுதுகிறேன்.
நண்பன்: எதப் பத்தி கம்பி எண்றத பத்தியா?
நான்: இல்லடா இது உலக சினிமா அப்புறம் இலக்கியம்.
நண்பன்: உலக சினிமானா?
நான்: வெளி மொழி திரைப்படங்கள்டா
நண்பன்: ஒ, தெரியும் தெரியும் “பாடி காட் மூனிஸ்வரன்” , “மாண்புமிகு மேஸ்திரி”…
நான்: அது இல்லடா, இலக்கியம் தெரியும் இல்ல
நண்பன்: இலக்கியம்னா?
நான்: நீ நாவல் படிச்சு இருக்கியா?
நண்பன்: உம், தேவிபாலா, ராஜேஷ்குமார்…
நான்: சரி அத விடு “ஜே.ஜே. சில குறிப்புகள்” தெரியுமா?
நண்பன்: அடப் பாவி இது தெரியாதா, நம்ம அமோகா எவ்வளவு தூரம் தேடுச்சு, அப்புறம் மாதவன் தானே அத தேடி கொடுப்பாரு. ஆமாம் அந்த பொண்ணுக்கும் ஏதோ இந்தி பட இயக்குனருக்கும்….
நான்: டேய், லைன் சரி இல்லன்னு நினைக்கிறன் அப்புறம் பேசுறேன்…
*************************************************************************************
No comments:
Post a Comment