Friday, May 8, 2009

என் ஜன்னல் வழியே

கருத்தம்மா படத்தில் வரும் “காடு பொட்ட காடு” பாடல் பாரதிராஜாவும் மலேசியா வாசுதேவனும் பாடியது என போன வாரம் பிரகாஷ் சொல்லி இருந்தார். இத்தனை நாள் அது சாகுல் அமீத் என நினைத்திருந்தேன். எனக்கு விருப்பமான பாடலில் அந்த பாடலும் ஒன்று. வைரமுத்துவிடம் இருந்து பளிச்சிடும் பல வரிகள் எனக்கு மிக பிடித்தவை, இந்த பாடலில் வரும்


“பட்ட மரத்து மேலே

எட்டி பார்க்கும் ஓனான் போல

வாழ வந்தோம்

பூமி மேல”



என்னும் வரிகள் அதில் சேர்த்தி. அதே போல் கிழக்கு சீமையிலேவில் வரும் “அத்தைக்கு பிறந்தவளே” பாடலில்,



“அன்னமே உன்னையும் என்னையும்

தூக்கி வளர்த்த திண்ணையும்

சுகம்தானா?”



என்னும் வரி. காதல் பாடலில் கூட கிராமத்தின் ஏக்கத்தை நெகிழ்சியாய் வெளிப்படுத்தவது வைரமுத்துவின் சிறப்பு.


————————————————————————-


ஆதவனின் நாவல்கள் மற்றும் குறு நாவல்களை படித்து விட்டு தற்போது அவரது சிறுகதை தொகுப்பை படித்து வருகிறேன்.Brilliant!. “அப்பர் பெர்த், ஒரு அறையில் இரண்டு நாற்காலி, உயரமா சிகப்பா மீசை வச்சுக்காமல்” என பல கதைகள் பளிச். மனநிலையின் மாறுதல்களையும், நேரத்திற்கு தகுந்த வேடங்களையும் அத்தனை அழகாக சித்தரித்துள்ளார். கிழக்கு பதிபகம் வெளியிட்டு உள்ள அந்த புத்தகத்தை முடிந்தால் படித்து பாருங்கள். தமிழ் சிறுகதையின் வீச்சுக்கு ஒரு உதாரணம் அவர். காதலியை விடுதியில் விட்டுவிட்டு காதலன் வீட்டிற்க்கு திரும்பிகிறான், அதற்கு முன் அவளிடம் ஒரு முத்தம் கேட்கிறான், அதுதான் கதை. இதை சுமார் 8 பக்கங்களுக்கு எழுதியுள்ளார். பிரமிப்பாக இருக்கிறது.



அதே போல், சென்ற வாரம் படித்ததில் மிக அழமான பாதிப்பை உருவாக்கி சென்ற இரண்டு கதை. தி. ஜானகிராமனின் “சிலிர்ப்பு” மற்றும் “பரதேசி வந்தான்“. “சிலிர்ப்பு” தமிழின் மிக சிறந்த கதைகளில் ஒன்று என தயங்காமல் சொல்லலாம். ஒரு இடத்தில கூட ஆசிரியரின் குரல் ஒலிக்கவில்லை. ஒரு ரயில் பயணத்தில் ஒரு சிறுமி அவ்வளவுதான். அதன் தாக்கம் வெகு நேரம் இருக்க கூடியது. “மல்லி” என்ற பூமணியின் திரைப்படம் என நினைக்கிறன். அந்த படத்தின் இறுதி காட்சி ஏற்டுத்தும் அதிர்வுக்கு சமமானது.

—————————————————————————


ஜெய்க்க வேண்டிய மாட்சை கோட்டை விடுவது Mumbai Indiansக்கு பழக்கமாகி விட்டது. Punjab உடனான அந்த மாட்சை ஜெய்த்திருந்தால் இப்படி கண்ணை கசக்கி கொண்டு அமர்ந்திருக்க தேவை இல்லை. ஜெயசூரியா நாளை Deccan உடனாவது ஆடுவாரா என எதிர்பார்க்கலாம். 40 பந்துகளில் 50 என்பது எல்லாம் இப்போது உத்தப்பா போன்றவர்களே அடிக்கிறார்கள். 15 பந்துகளில் அல்லது குறைந்த பட்சம் 20 பந்துகளில் என்றால் தான் அவரக்கு மரியாதை.


—————————————————————————


தாம்பரத்தில் பேருந்து நிலையம் 5 கி.மீ நீளம் உடையது. ரயில்வே ஸ்டேஷன் வாசலில் இருந்து க்ரோம்பெட் வரை நீள்கிறது. நான் சொல்வது வெளியூர் பேருந்துகளுக்கு மட்டும். நடுவில் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி ஏற்றி கொள்வார்கள். அது அந்த அந்த பேருந்தின் ஓட்டுனர், நடதுனரின் மனதை பொருத்து. ஏதேனும் பொதுவான பேருந்து நிறுத்தம் இருந்தால் பரவா இல்லை. தாம்பரத்திலேயே சிதம்பரம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் போக வேண்டிய கூட்டம் அதிகம் இருப்பதால். இப்போது இருப்பதை விட கூடுதல் பேருந்துகளை தாம்பரத்தில் இருந்தே துவக்கலாம். ஆனால் செய்ய மாட்டர்கள்.தாம்பரம் நகராட்சி ஆனால் ஒருவேளை செய்யக் கூடும். இல்லை என்றால் டிக்கெட் விலை குறைக்க ஒரு பாராளுமன்ற தேர்தல் தேவை பட்டது போல் இதற்கு ஒரு சட்டமன்ற தேர்தல் தேவைப் படலாம்.


—————————————————————————


சும்மாதான் எழுத ஆரம்பித்தேன். இந்த பதிவுக்கும் நீங்கள் அதரவு அளித்தால், உங்கள் ஆதரவோடு எனது 50வது பதிவை நிறைவு செய்கிறேன். புத்தக மதிப்புரை, உலக சினிமா, கட்டுரைகள், சிறுகதைகள், ஒரே ஒரு போட்டி என முயன்று பார்த்த அத்தனை விஷயங்களுக்கும் அதரவு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. “எழுத்தின் ரகசியம் எழுதுவதே” என்றாராம் சுந்தர ராமசாமி. எழுத எழுதத்தான் வருகிறது எழுத்தும் அப்புறம் மறக்க முடியாத சில நண்பர்களும்.

No comments:

Post a Comment