
அனந்தன் நாயர் அதிகாலை 3 மணிக்கே எழுந்து குளித்து விட்டு பத்மநாபசாமியை தரிசிக்க வருவதாக நாவல் தொடங்குகிறது. மிகவும் பலவீனமான, சாதரண குமாஸ்தாவான அனந்தன் நாயருக்கு அழகான மனைவியாக கார்த்தியாயினி வாய்த்து இருக்கிறாள், அவள் விக்கிரமன் நாயர் என்னும் தாசில்தாரால் கைப்பற்றப்படுகிறாள். அவள் பரிதவிக்க விட்டு சென்றாலும் இரு குழந்தைகளையும் வளர்த்து ஆள் ஆக்குவதையே தன் லட்சியமாக கொண்டு பதினைந்து வருடமாய் மறுமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார் அனந்தன் நாயர். இந்த விஷயங்கள் முழுதும் அவரது நினைவு மூலம் நாவலில் சொல்ல படுகிறது.
திருவனந்தபுரமும் கோவிலும் ஒரு குறியீடாகவே பயன்படுத்தபட்டுள்ளது, அந்த நகரின் ஒவ்வொரு இடமும், கோவில் பிரகாரத்தில் அவர் சுற்றி வருகையில் அவர் எதிர்கொள்ளும் சிலையும் என அதனை விஷயங்களும் அவருக்கு சில எண்ணங்களை நினைவு படுத்திய வண்ணமே உள்ளது. அந்த எண்ணம் மற்றொரு எண்ணத்தை தூண்டுகிறது, இப்படி உட்சிக்கல் நிறைந்த இடத்தினையும் பத்மநாபன் மிக சாதரண வரிகளில் சொல்லி செல்கிறார். மேலும் கதை நடக்கும் காலகட்டம், இந்திய சுதந்திரத்தி்க்கு பின், கேரளாவில் தாய் வழி சமூகம் முடிவுற்று, சில புரட்சி கோஷங்கள் வெடித்த சமயமாக உள்ளது.
அதுவரை பல பாரம்பரிய பெருமை கொண்ட, வருடத்தின் எல்லா நாட்களும் திருவிழா கோலம் கொண்ட பூமி மெல்ல மெல்ல தன் தனித்தன்மையை இழந்து முற்றிகும் புதிய மனிதர்களின் வருகையால் சூழ பட்டுள்ளதை மென்மையாய் விவரிக்கிறது இந்நாவல். முதல் 180 பக்கங்களுக்கு மிக மிக சாதரண தன்மையுடன் எந்த வித விமர்சனமோ, அழ் மன தூண்டுதலோ இல்லாமல், “உம் … முன்பெல்லாம், உம் …. அப்போ என்ற” அந்த கால வசனங்கள் போல் (மெல்ல ஓர் சலிப்பயே உருவாக்கும் வண்ணம் பல இடங்களில் இந்த “உம்” வருகிறது ) சொல்லி செல்கிறது.
அதன் பின் வரும் பக்கங்கள் மீண்டும் படிக்க தூண்டும் வகையில் சில விஷயங்களை விட்டு செல்கிறது. முன்னுரையில் நீல. பத்மநாபன் கூறுவது போல், அனந்தன் நாயரின் உலசிக்கல்களை மிக தெளிவாய் படம் பிடித்து காட்டுகிறது. அவர் மனம் ஒரு சுய இரக்கத்தை தேடியும் , மெல்ல ஓர் வன்முறையும் காழ்புனர்ச்சியும் காழ்புணர்ச்சியும் கொண்டும் நகர்கிறது.
இறுதி பாகங்களில் அனந்தன் நாயர் முன் அவரது மகன் முன் வைக்கும் கேள்விகள் மிக முக்கியமானவை, மேலும் அது நம்மை மீண்டும் அவரது மனதை புரிந்து கொள்ள நாவலை படிக்க வைக்க கூடியவை. எளிய வரிகள் மூலம் மிக அழகாய் சித்தரிக்கபட்டிருக்கும் இந்நாவல் சமீபத்தில் படித்ததில் மிக பிடித்திருந்தது.
படித்ததில்லை, படிக்கத் தூண்டுகிறது பதிவு.
ReplyDeleteamas32
நன்றி :)
ReplyDelete