Saturday, April 25, 2009

நீங்களே சொல்லுங்கள்?

சூரிய ஒளியுடன் மோத பயந்து கண்ணாடிக்குள் ஒளிந்து இருந்த வாகன விளக்குகள் எல்லாம், மெர்குரி விளக்குகள் தந்த தைரியத்தில் உயிர் பெற தொடங்கியிருந்த ஒரு ஞாயிற்றுகிழமை மாலை வேளையில் நான் அந்த ரோட்டை கடப்பதற்க்காக நின்று கொண்டிருந்தேன். எதிர் பக்கம் கம்பத்தின் துணையில் நின்ற விளம்பர குடையின் கீழ் டிராபிக் போலீஸ் எழுந்திருக்க போகும் தோரணையில் உட்கார்ந்து இருந்தார். அவர் வெகு நேரமாக அப்படித்தான் உட்காந்திருப்பார் போல.


சரியாக வரிக்குதிரை பாதை வழி மறு முனைக்கு வந்து முன்னே நகர்ந்து சென்றேன்.மூன்று நிமிட நடையில் நான் ரயில் நிலைய வாசலை அடைந்து விட்டிருந்தேன். அங்கு இருந்த மெட்டல் டிடெக்டரிடம் என்னை ஒப்படைத்து வெளி வருகையில், “உன்னை எல்லாம் பார்த்தா குண்டு வைக்கிறவன் மாதிரியா இருக்கு போ”, என சொல்வது போல் ஒரு ஒலி அனுப்பி வைத்தது.


இன்னும் அரை மணி நேரத்திற்குள் நான் இரவு உணவை முடித்து கொண்டோ, இல்லை தேமே என கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து விட்டோ, பிளாட்பார்ம் எண் இரண்டிற்கு சென்றால் நாளை நான் கோவை சென்று விட முடியும் என மூன்று வெவ்வேறு மொழிகளில் ஒலிபெருக்கியில் ஒரு பெண் உறுதி அளித்து கொண்டிருந்தாள். என் கணிப்பு படி அவளுக்கு 30௦ வயது இருக்கலாம். முன் பல் சற்று எடுப்பாகவும் இருக்க கூடும்.

ஆனால் என் முன் வரிசையில் மூன்று சீட் தள்ளி அமர்ந்திருந்த இவள் என் ஊகத்திற்கு எல்லாம் இடம் அளிக்கவில்லை. தமிழ் நாட்டின் சராசரி நிறத்திற்க்கு சற்று கூடுதல். என்னோடு ஒட்டி நின்றால் நான் அவள் நெற்றியில் முத்தமிடும் அளவு உயரம். கன்னக் குழி, காதோரம் சுருண்ட முடி, உதட்டின் அலட்சியம் என அவள் மேல் இருந்த பார்வையை தவிர்க்க முடியாமல் போக இன்னும் பிற காரணங்கள்.

அவள் எழுந்து சென்ற உடன், அனிச்சையாக நானும் அவள் பின்னாலே சென்றேன். என்னை எந்த தர்மசங்கடத்திற்க்கும் ஆளாக்காமல் அவள் அங்கிருந்த புத்தக கடையை நோக்கித்தான் சென்றாள். நானும் அந்த சமயத்திற்கு எனக்கு தேவைப்பட்ட ஒரு இண்டலெக்சுவல் தோரணை அணிந்து கொண்டு அங்கில இதழ்களை புரட்டி கொண்டிருந்தேன். அந்த சமயம் அங்கில இதழ்களை புரட்டுவது ஒருவகையில் அவள் அழகுக்கு முன் எனக்கு ஏற்பட்ட சின்ன சறுக்கலை சரிப்படுத்தி கொள்ளவும், மேலும் அவள் என்னை பார்க்க நேர்ந்தால், நான் அவளை பார்க்காதது போல் முகத்தை புதைத்து கொள்ள ஏதுவாகவும் இருந்தது.

பின் என்ன நினைத்தாலோ தெரியவில்லை மீண்டும் சென்று அமர்ந்து விட்டாள். இதுவரை அணிந்திருந்த இண்டலெக்சுவல் தோரணைக்கு சாட்சியான அந்த கடைக்காரனிடம் 15 ருபாய் கொடுத்து ஒரு ஆங்கில இதழ் வாங்கி வந்தேன். இப்போது அவள் நான் இருந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தாள், நான் எந்த வித சலனமும் இல்லாமல் வாங்கி வந்த புத்தகத்தை புரட்ட தொடங்கினேன்.


சற்று தள்ளி இருக்கையில் அவளை பார்த்ததில் ஒரு சுவாரசியம் இருந்தது, ஒருவேளை அவள் வேறு யாரையோ பார்த்து சிரித்தாலோ கை அசைத்தாலோ நம்மை பார்ப்பதாக ஒரு கற்பனை பண்ணி கொள்ளலாம். அருகில் அமர்ந்த பின் பார்ப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது, ஆனால் இப்போதும் எங்களை கடந்து போவோர் எங்களை பார்க்கையில் என்னை அவளது தோழனாகவோ இல்லை காதலனாகவோ நினைத்து பார்க்கும் விரோத பார்வையும், “கொடுத்த வச்சவன்டா நீ” என்ற ரீதியில் கடந்து போவதும் மெல்ல ஒரு குறுகுறுப்பை உணரத்தான் செய்தது.


“எஸ்க்யூஸ் மீ” என அவள் தான் பேச்சை தொடங்கினாள்


“எஸ்” என்றேன்


“ஐ அம் நீரஜா”


“ஐ அம் ராஜேஷ்” என பரஸ்பரம் அறிமுக படுத்தி கொண்டோம்.


என்ன படிக்கறீங்க? என்றாள்,


“தி வீக் இதழ்” என்றேன்,


ஒ!, நான் அதை கேட்கவில்லை, எந்த காலேஜ்” என்றாள்,


“ஐ அம் என் எம்ப்லாயி”, என நான் வேலை செய்யும் அலுவலக பெயர் சொன்னேன், நம்பாமல் , டிக்கெட் கொடுங்க, உங்க வயசு என்ன? என்றாள்,


பர்சிலிருந்த டிக்கெட் ஐ கொடுத்த உடன் பார்த்து விட்டு, யு லுக் சோ எங்!! என்றாள். டிக்கெட் ஐ வாங்கி என் மேல் பாக்கெட்டில் வைத்து கொண்டேன்.


அதன் பின் எங்களின் ஐந்து நிமிட உரையாடலை நீங்கள் கேட்டிருந்தால் , நாங்கள் இருவரும் கோவை போவதும், அந்த புத்தக கடையில் அவள் கேட்ட புத்தகம் இல்லாததும், “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என அவளிடம் சொன்ன 16வது ஆள் நான் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.


படிக்க எதாவது நல்ல சுவாரசியமான புத்தகம் இருகிறதா என்றாள், குனிந்து என்னுடைய பையில் புத்தகத்தை துழாவி கொண்டு இருந்தேன், அப்போதும் ஓர பார்வையில் அவள் என்னை பார்க்கிராளா என்பதை பார்க்க தவறவில்லை.


கடைசியில் ஒரு புத்தகம் எடுத்து கொடுத்த உடன்,


“தேங்க்ஸ், நானே வச்சுகிட்டமா? என சிரித்து கொண்டே கேட்டாள், அந்த சிரிப்புடன் அவள் கேட்டால் சொத்தையே எழுதி தந்து இருப்பேன். புத்தகம் தானே என “அன்புடன் ராஜேஷ்” என கை எழுத்து இட்டு போன் நம்பர் எழுதி கொடுத்தேன்.


நேரம் ஆகி விட பிளாட்பார்ம் நோக்கி நடக்க தொடங்கினோம், நீங்கள் எந்த கோச் என்றாள் S2 என்றேன், நான் S11 என்றாள்.


“பார்க்கலாம்” என்று சொல்லி சென்று விட்டாள்,


எப்போ? என கேக்க நினைத்து நிறுத்தி கொண்டேன்.


வண்டி நகர துவங்கியது, பரிசோதகரிடம் டிக்கெட் ஐ கொடுத்து பரிசோதனை முடித்து படுக்க போகும் முன், என் பேண்ட் பாக்கெட் ஐ தொட்டு பார்த்தேன். ”என் பர்சை காணவில்லை”.


புத்தக கடையில் இருந்தது, அவளிடம் டிக்கெட் எடுத்த காட்டும் போது இருந்தது. ஒருவேளை அவள்???,


புத்தக கடையில் பார்த்து, லாவகமாக பேசி பர்சை எடுக்க வைத்து, டிக்கெட் ஐ நான் மேல் பாக்கெட்டில் வைத்து. குனிந்து புத்தகம் எடுக்கையில் .


ச்சே ச்சே இருக்காது!!


அதற்குள் வண்டி அடுத்த ஸ்டேஷனில் நின்றது - நிற்க!!


நான் S11 கோச்சிற்கு போய் பார்க்கவா வேண்டாமா?

Thursday, April 16, 2009

சித்திரை திங்கள் அல்லது தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

இந்த வருடத்தில் இருந்து தை முதல் நாள் தான் தமிழ் வருட பிறப்பு என கலைஞர் அறிவித்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். இப்படி எல்லாம் சட்டுன்னு மாத்திடலாமா என்று தெரியவில்லை. முன்பு ஒரு முறை க்ரிகாரியன் நாட்காட்டி (Gregorian calendar) முறையில் ஒரு குழப்பம் வந்தபோது வாட்டிகனில் இருந்து போப் 14 நாட்களை தள்ளி வைத்தார் என படித்து உள்ளேன்.


எது எப்படியோ நம்ம டி.வி சேனல்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சி போட்டே ஆகனும்னு தீர்மானிச்சிட்ட பிறகு ஒவ்வொரு டி.வி யும் அவங்க அவங்க ஒரு பேர் வச்சு போட்டுடாங்க. சன் பிறந்த நாள் கொண்டாட்டம் என, ஜெயா தமிழ் வருட பிறப்பு என, மற்றவை (கலைஞர் உட்பட) சித்திரை திங்கள் முதல் நாள் என. வருஷம் எப்படி மாறுனா என்ன, எங்கள என்ன பண்ணுவீங்க? என அதே சாலமன் பாப்பையா, நடிக நடிகைகள் பேட்டி என வாரி இறைத்து விட்டனர்.


எங்க அக்கா பையன் (5 வயசு) என்னோடு உட்கார்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா மேட்ச் பார்த்துட்டு, மேட்ச் முடிஞ்ச உடனே சொன்னான், ”மாமா, என் வாழ்க்கைய்ல இந்த மாதிரி மாட்சே பார்த்ததில்லைனு” அந்த மாதிரி ஒரு படம் இரண்டு படம் நடிச்சவங்கலாம் வந்து தன் திரை உலக அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகிட்டாங்க. ஆசை ஆசையாய் உட்கார்ந்து பார்த்தது ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி, விவேக் சில நல்ல கேள்விகள் கேட்டார். ரஹ்மான் சொன்ன சில விஷயங்கள் அழகாக இருந்தது.


1. ஏ.ஆர்.ரஹ்மானின் சிறு வயதில் அவர் தந்தை இறந்த பின், அவரது வாத்திய கருவிகளை எல்லாம் வித்தா நல்ல காசு வரும் என்று உறவினர்கள் சொல்கையில், ரஹ்மானின் அம்மா, “வேண்டாம் வேண்டாம் அது எல்லாம் இவன் பெரியவனாகி வாசிப்பான்” என்றாராம்.


2.எம்.எஸ். வியை சங்கமம் படத்தில் பாட வைத்ததை பற்றி கூறுகையில் “அவர் குரலில் ஆன்மா இருக்கிறது என்றார்.


3.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “வசீகரா” பாடலும், தேவா இசையில் “கொஞ்ச நாள் பொறு தலைவா” பாடலும் பிடிக்கும் என்றார்.


4.வைரமுத்து நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்றார்.


மாலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வைரமுத்துவின் பாடல்களை எஸ். பி. பி யும் சித்ராவும் பாடினார்கள். ஒவ்வொரு பாடலுக்கும் முன்பும் அந்த பாடலினை அறிமுகப்படுத்தி உணர்ச்சி பொங்க பேசினார் வைரமுத்து. ஒரு பாடலை பற்றி சொல்கையில், இந்த பாடலுக்கு இசை அமைத்து விட்டு இளையராஜா அழுதார், வரிகளுடன் பாடலை கேட்ட பாரதிராஜா அழுதார், பாடலை பாடி முடித்த பின் எஸ். பி. பி அழுதார், உதவி இசை கலைஞர்கள் எல்லாம் அழுதனர். படம் வெளி வந்தது படத்தை வாங்கிய Distributor எல்லாம் அழுதனர், படம் ப்ளாப் என்றார்!!.

பாடல் - சங்கீத ஜாதி முல்லை

படம் - காதல் ஓவியம்


“ராமன் தேடிய சீதை” படம் பாத்தேன். இந்த படம் ஓடி இருக்கலாமோ என தோன்றியது. தெளிவான கதை, தடையில்லா திரைகதை. சில நாடக பாணி வசனங்களையும், கட்சிகளையும் தவிர்த்திருக்கலாமோ எனப்பட்டது. மேலும் சேரன் எல்லா காட்சியிலும் அழுவது போலவே பேசுகிறார். இறுதி காட்சிகளில், “பாவம் யாராவது இவருக்கு பொண்ணு குடுங்கப்பா” என சொல்லும் அளவு பரிதாபமாய் இருக்கிறார். கடைசியில் “மாயக்கண்ணாடி” நவ்யா நாயர் வருகிறார், விட்டால் “ஆட்டோகிராப்” மல்லிகா, இல்லை “பொற்காலம்” மீனா வரை சென்று விடுவாரா என நினைக்கையில் படம் சுபம்.

Wednesday, April 15, 2009

கோபி கிருஷ்ணன் - வலி தரும் சிரிப்பு


தொடர்ந்து நம்மிடம் கேள்விகளை முன் வைக்கும் படைப்புகள் நிலைத்து விடுகின்றன. அந்த வரிசையில் நான் படித்ததில் கோபி கிருஷ்ணனின் நாவல்களான “உள்ளே இருந்து சில குரல்களும்” “இடாகினி பேய்களும், நடைபிணமும் சில உதிரி இடை தரகர்களும்” மிக தனித்துவமானது. இந்த இரு நாவல்கலுமே மன நல காப்பகத்தை மையமாக கொண்டது.


கோபியின் எழுத்து மிக மென்மையான குரலில் பேசுகிறது, அவரது உச்ச கட்ட சமூக சாடல் கூட, ” நான் சொல்லியா நீங்க திருந்த போரீங்க” என்ற ரீதியிலேயே முன் வைக்க படுகிறது. அவரது உலகம், முழுக்க முழுக்க மன நலம் பிரழ்ந்தவர்களுடனே கழிந்திருக்கிறது. அவர்களின் வாழ்வையே அவர் பெரும்பாலும் தன் நாவல்களிலும் சிறு கதைகளிலும் பிரதி படுத்தி உள்ளார். அதே சமயம், அவரது இரு நாவலும் வடிவ ரீதியாகவும் ஓர் வித்யாசமான படிப்பனுபவத்தை தர வல்லது.


“உள்ளே இருந்து சில குரல்கள்” நாவல் மன நல மையத்தில் உள்ளவர்களை பேட்டி எடுக்க வரும் ஒருவர் எதிர் கொள்ளும் நிகழ்வுகளை பற்றியது. இந்த நாவல் முழுதும் காட்சி மற்றும் நிலை என பகுத்து கூறப்பட்டுள்ளது. ஒரு காட்சி முதலில் விளக்க படுகிறது, பெரும் பாலும் நமது வீடுகளில் நடக்கும் சிறு நிகழ்வுகள் போல் உள்ள காட்சிகள் தான், அந்த காட்சியின் முடிவில் ஒருவர் மன நலம் பாதிக்க பட்டவர் என முடிவு செய்ய படுகிறார், பின் அவரது நிலை விவரிக்க படுகிறது. பெரும்பாலும் அந்த நிலை என்பது தற்போது அந்த மன நல மையத்தில் அவரது நிலையே.


இதே போல் சுமார் 40 காட்சிகளும் நிலைகளும் விவரிக்க படுகிறது. சில காட்சிகள் ஏறக்குறைய நமக்கும் நடந்தவை ஆனால் அவர்கள் மன நலம் பிறழ்ந்தவர்கள் என இனம் காணபட்டார்கள் நம்மை இன்னும் யாரும் கண்டு பிடிக்க வில்லையோ? என எண்ணம் எழுகிறது, நாவலின் இறுதியில் மன நலம் பாதிக்க பட்டவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சிகிச்சை முறைகள் விளக்க பட்டு ஓர் ஆவண பதிவு போல் முடிகிறது. நாவலின் ஊடே வரும் ஓர் கதா பாத்திரம், ” நீங்க ஆதவன் கதைகள் படிசிருக்கீங்களா?” என்கிறார். ஆதவனின் பார்வை போலவே, ஓர் கேலியும் எள்ளலும் கொண்ட கோபியின் பார்வை நாவல் முழுதும் விரவி உள்ளது. எந்த ஓர் இடத்திலும் துருத்தி தெரியாமல் மிக மௌனத்துடன் எழுதபட்டிருக்கும் இந்த நாவல் தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று.“இடாகினி பேய்களும்” சற்றே குறைய இவர் 1988 முதல் 1996 வரை வேலை செய்த மன நல மையத்தின் நிகழ்வுகளின் பதிவே. கதையின் நாயகன் கோபியே, இவரது பார்வையில் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை சில சிறுகதையாகவும் ஒரு குறு நாவலாகவும் எழுதி உள்ளார். இந்த நாவலின் ஊடே இவர் அடிக்கடி ” கேள், வாசகா வாசகி” என்ற கூறிய வண்ணம் இருக்கிறார். அது ஒரு வேளை, நாவலை படிக்கும் வாசகர்களை நக்கல் செய்கிறாரோ என்று எண்ண வைக்கிறது.ஏழைகளுக்கு வரும் உதவியை பறிக்கும் மன நல மையத்தின் இடாகினி பேய்களுக்கும் , அவர்கள் தரும் சொச்ச பணத்தையும் பிடுங்க காத்திருக்கும் இடை தரகர்களுக்கும் இடையில் நடை பிணமாய் தாம் வாழ்ந்து வந்ததை பதிவு செய்து உள்ளார். நாவல் முடிகையில், ” எதற்கும் வாசக வாசகி, நீ இந்த கதையை கற்பனை என்றே வைத்து கொள் என்கிறார்”. மீண்டும் அவர் நம்ம கண்டிபா கேலி தான் செய்கிறார் என்ற எண்ணம் வருகிறது.இந்த வகையான கேலி கூட, நம் இதுவரை மன நலம் பாதிக்க பட்டவர்களின் வாழ்வை கதை போல் தான் படித்து வந்திருக்கிறோம் இல்லையா? என்ற எண்ணம் வரவே காரணமாய் உள்ளது.உள்ளே இருந்து சில குரல்கள் வம்சி புக்ஸ் விலை: 70

இடாகினி பேய்களும் தமிழினி விலை: 40௦

Saturday, April 4, 2009

சிறு சிறு கதைகள் - ஒரு புது முயற்சி

தமிழ் சிறு கதை உலகில் பல மாற்றங்களை கொண்டு வந்த சுஜாதா முயன்று பார்த்த வித்யாசமான சிறு கதை முயற்சி இது. இரு வரி கதை. அதிலும் விஞ்ஞான சிறு சிறு கதைகளில் தமிழ் உலகின் முன்னோடி முயற்சி அவருடையது. இதில் அவர் மொழிபெயர்த்த சில கதைகளை கொடுத்து உள்ளேன். முதல் முயற்சியாக நானே சில கதைகளை மொழி பெயர்த்து உள்ளேன்.


1. தலைப்பு : கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்

கதை : “ஐயோ சுட்டுடாதே!”


2. தலைப்பு : ஆராய்ச்சி சாலையில் இருந்து ரோபோ வெளியே வந்தது

கதை : “டாக்டர் க்ளோஸ்”


3. தலைப்பு : மகன் தந்தைகாற்றும்…..

கதை : “இ.மெயில்”


4. தலைப்பு : என்னை யாரோ பார்க்கிறார்கள்

கதை : கண்ணாடி

இனி எனது மொழிபெயர்ப்பு முயற்சிகள்…..


5. தலைப்பு : விண்வெளியின் கருந்துளையை (Black Hole) அடைய போகையில்

கதை : நான் கருந்துளையை அடைந்து விட்……….


6. தலைப்பு : கனவுகளின் ஆரம்பம்

கதை: கடவுளே!! என் எல்லா கனவுகளும் பலிக்க வேண்டும்!!!

எனது இரு வரி முயற்சிகள்


7. தலைப்பு : பொருளாதார பின்னகர்வு (நன்றி Meenaks!!)

கதை: நாளைக்கு சரியாகிடும்…… நாளைக்கு……..நாளைக்கு


8. தலைப்பு : பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்

கதை: 49 O


9. தலைப்பு : அக்காவிற்கு வந்த மாப்பிள்ளை புகைப்படத்தை பார்த்த தங்கை

கதை: அவருக்கு தம்பி இருகாறா?


பொதுவாக இரு வரி கதைகள் போல, இரு வார்த்தை கதைகளும் உள்ளது. ஆனால் முதல் முயற்சி என்பதால் நாம் இரு வரிகளையே முயன்று பார்போம். இரு வரி தானே என்பதற்க்காக, டவுசர் தைய்ங்க ஆனா நீளம் கால் வரைக்கும் என வடிவேலு ரேஞ்சுக்கு நீட்டாமல், சிறிய வாக்கியங்களை உபயோகபடுத்தி இப்பதிவிற்கு பின்னூட்டமாக அளிக்கலாம்.

Thursday, April 2, 2009

திரைப்படமும் அதன் பின்னணி இசையும்-2 (இளையராஜா Spl)

மென்மையாய் காதருகே பேசி கொண்டு நம்மை உறக்கத்திற்கு இட்டு செல்ல இளையராஜாவால் மட்டுமே முடியும். தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத ஆளுமை இளையராஜா. இளையராஜாவின் பாடல்கள் எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவிற்கு அவரது பின்னணி இசையும். எனியோ மோரிகோனுக்கு நிகராக பின்னணி இசையில் புதுமையும் நவீனமும் கொண்டு வந்தவர் ராஜா.இந்த பண்னையபுறத்து ஞானியின் கைகளில் தான் தமிழ் சினிமாவின் இசை 25 வருடம் கட்டுண்டு கிடந்தது.
பெயர் தெரியாத படங்களில் கூட இவரது இசை சோடை போனதில்லை. "ஆட்டோ ராஜா" என்ற படத்தை யாராவது கேள்வி பட்டிருக்கிறீர்களா. அதில் தான் "சங்கத்தில் பாடாத கவிதையை உன் அங்கத்தில் யார் தந்தது" என்ற ராஜாவின் பாடல் வருகிறது. இந்த பாடலின் Instrument தான் சமீபத்தில் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் ஸ்ரேயா ஆட வெளி வந்தது. அதே போல் வந்த மற்றொரு Instrument கோழி கூவுது படத்தில் வந்த, "ஏதோ மோகம் ஏதோ தாகம்" பாடல்.பல ஆண்டுகளுக்கு பிறகு மீள்கண்டுபிடிப்பு செய்யபட்ட அப்பாடல்கள் இன்றும் மிக சிறப்பானவை.இதில் "ஏதோ மோகம்" பாடல், அந்த படத்தில் சுரேஷ்-விஜி சந்திக்கும் காட்சிகளில் பின்னணி இசையாக பயன்படுத்த பட்டிருக்கும்.


மகேந்திரன், மணிரத்தினம், பாலு மகேந்திரா, பாரதிராஜா முதலிய இயக்குனர்களின் படங்களில் இளையராஜாவின் பின்னணி இசை மிக அழகானவை. மௌன ராகம், புன்னகை மன்னன் மற்றும் நாயகனின் பின்னணி இசை நாம் அறிந்ததே.தமிழ் சினிமாவின் பின்னணி இசைக்கான களம் இளையராஜாவின் வரவிற்கு பின்னே துவங்கியது எனலாம். மேல் சொன்ன இயக்குனர்களின் வரவும், இளையராஜாவின் பின்னணி இசையும் தமிழ் திரைப்படங்களின் காட்சி அமைப்பை புது பரிணாமத்தி்ற்க்கு இட்டு சென்றது. பின்னணி இசை மற்றும் காட்சி நேர்த்தியால், மிக கட்சிதமாய் வெளிவந்த சில காட்சிகள்.


1. முதல் மரியாதை - வடிவுக்கரசி அறிமுக காட்சி

வடிவுக்கரசி ஓர் தூண் அருகே நிற்க, சிவாஜி உணவு அருந்த வருகிறார்.காட்சி முழுக்க மௌனம். ஒரு கையால் மூக்கை சிந்தி விட்டு வடிவுக்கரசி மறு கையால் சிவாஜிக்கு தட்டை எடுத்து வைக்கிறார். வயலின் இசை ஆரம்பமாகிறது, மீட்ட துடிக்கும் வயலின்களின் தந்தியை மூர்க்கமான விரல்கள் பிடித்து கொண்டதும், அது கனத்த ஒலியை எழுப்புவது போன்ற இசை. சிவாஜி சாப்பிடாமல் சென்று சட்டை மாட்டி கொல்கிறார், அவர் மனைவி அவரை முறைத்து பார்த்த படி இருக்க, வயலின் சடாலென்று நிற்கிறது. மீண்டும் காட்சி முழுக்க மௌனம். அவர் வாசல் செல்லும் வழியில் , கழுவிய தட்டில் இருந்து தண்ணியை அவர் மனைவி ஊற்ற அது அவர் மேல் தெறிக்கிறது, வயலினின் தந்தி மீண்டும்!! வெக்கை நிரம்பிய அந்த இசையின் கனத்தை நம்மை போலவே தாங்க முடியாமல் அவரும் வெளிய வர, விரல்களின் பிடி தளருகிறது. சிவாஜி வானத்தை நோக்கி பார்க்கிறார், காற்றின் அசைவு, பறவையின் சிறகின் ஒலி!!. நான்கு வருடம் கல்லூரியில் காதலித்த பெண்ணிடம், கல்லூரியின் இறுதி நாள், தன் காதலை சொன்ன உடன் அவள், "இதை சொல்ல உனக்கு நான்கு வருடம் ஆச்சா? என்ற உடன் வரும் ஓர் சந்தோசம்,


2. ஜானி - வித்யாசாகர் (ரஜினி) ஜானி ஆக (மற்றொரு ரஜினி) அர்ச்சனாவை (ஸ்ரீதேவி) சந்திக்கும் காட்சி

மிகுந்த கவித்துவம் கொண்ட காதல் காட்சிகளில் ஒன்று இது. அர்ச்சனாவை சந்திக்கும் வித்யாசாகர் இரவு தூங்கி கொண்டு இருக்கிறான். எங்கோ ஓர் தேவாலய மணி அடிக்கிறது.புரண்டு படுக்கும் வித்யாசாகர், அர்ச்சனா அவனையே பார்த்த படி அமர்ந்திருப்பதை பார்க்கிறான். (பின்னணியில் மணி பனிரண்டு முறை அடிக்கிறது!).

வித்யாசாகர் : இன்னும் தூங்கலையா?

(இல்லை என தலை அசைக்கிறாள் அர்ச்சனா )

வித்யாசாகர் : என்ன பாக்கிற?

(மெல்ல பியானோ ஒலியுடன் இசை தொடங்குகிறது )

அர்ச்சனா : இன்னும் எவ்வளவு நேரம் நான் உங்களை பார்க்க போறேனோ?, ஒவ்வொரு சத்தமும் எனக்கு பயத்தை கொடுத்துட்டு இருக்கு, யார் வரு வாங்கலோனு ….. நீங்க போற வரைக்கும் நான் பாத்துட்டு இருக்கேன்

(அர்ச்சனாவின் கேள்வி குறிப்பு போலவே இசை ஒலிக்க)

அர்ச்சனா: பேசுங்க, இன்னும் எவ்வளவு நேரம் பேச போறீன்ங்க,

பேச மாட்டீங்களா?

இந்த இடத்தில ரஜினியின் நடிப்பும் பின்னணி இசையின் நெகிழ்வும் மிக மிக கவித்துவமானது.
இதை தவிர ஆண்பாவம் படத்தில் பாண்டியன் பெண் பார்க்கும் காட்சி, நாயகனில் கமல் சரண்யாவை இரவு சந்திக்கும் காட்சி ஆகியவை இசைஞானியின் முத்திரைகள். கண்டிபாக ஒரு சின்ன பத்தியில் அவரது பின்னணி இசையின் சிறப்பை அடைத்து விட முடியாது எனினும், ஒரு சிறு துளியனவே!!