Saturday, April 25, 2009

நீங்களே சொல்லுங்கள்?

சூரிய ஒளியுடன் மோத பயந்து கண்ணாடிக்குள் ஒளிந்து இருந்த வாகன விளக்குகள் எல்லாம், மெர்குரி விளக்குகள் தந்த தைரியத்தில் உயிர் பெற தொடங்கியிருந்த ஒரு ஞாயிற்றுகிழமை மாலை வேளையில் நான் அந்த ரோட்டை கடப்பதற்க்காக நின்று கொண்டிருந்தேன். எதிர் பக்கம் கம்பத்தின் துணையில் நின்ற விளம்பர குடையின் கீழ் டிராபிக் போலீஸ் எழுந்திருக்க போகும் தோரணையில் உட்கார்ந்து இருந்தார். அவர் வெகு நேரமாக அப்படித்தான் உட்காந்திருப்பார் போல.


சரியாக வரிக்குதிரை பாதை வழி மறு முனைக்கு வந்து முன்னே நகர்ந்து சென்றேன்.மூன்று நிமிட நடையில் நான் ரயில் நிலைய வாசலை அடைந்து விட்டிருந்தேன். அங்கு இருந்த மெட்டல் டிடெக்டரிடம் என்னை ஒப்படைத்து வெளி வருகையில், “உன்னை எல்லாம் பார்த்தா குண்டு வைக்கிறவன் மாதிரியா இருக்கு போ”, என சொல்வது போல் ஒரு ஒலி அனுப்பி வைத்தது.


இன்னும் அரை மணி நேரத்திற்குள் நான் இரவு உணவை முடித்து கொண்டோ, இல்லை தேமே என கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து விட்டோ, பிளாட்பார்ம் எண் இரண்டிற்கு சென்றால் நாளை நான் கோவை சென்று விட முடியும் என மூன்று வெவ்வேறு மொழிகளில் ஒலிபெருக்கியில் ஒரு பெண் உறுதி அளித்து கொண்டிருந்தாள். என் கணிப்பு படி அவளுக்கு 30௦ வயது இருக்கலாம். முன் பல் சற்று எடுப்பாகவும் இருக்க கூடும்.

ஆனால் என் முன் வரிசையில் மூன்று சீட் தள்ளி அமர்ந்திருந்த இவள் என் ஊகத்திற்கு எல்லாம் இடம் அளிக்கவில்லை. தமிழ் நாட்டின் சராசரி நிறத்திற்க்கு சற்று கூடுதல். என்னோடு ஒட்டி நின்றால் நான் அவள் நெற்றியில் முத்தமிடும் அளவு உயரம். கன்னக் குழி, காதோரம் சுருண்ட முடி, உதட்டின் அலட்சியம் என அவள் மேல் இருந்த பார்வையை தவிர்க்க முடியாமல் போக இன்னும் பிற காரணங்கள்.

அவள் எழுந்து சென்ற உடன், அனிச்சையாக நானும் அவள் பின்னாலே சென்றேன். என்னை எந்த தர்மசங்கடத்திற்க்கும் ஆளாக்காமல் அவள் அங்கிருந்த புத்தக கடையை நோக்கித்தான் சென்றாள். நானும் அந்த சமயத்திற்கு எனக்கு தேவைப்பட்ட ஒரு இண்டலெக்சுவல் தோரணை அணிந்து கொண்டு அங்கில இதழ்களை புரட்டி கொண்டிருந்தேன். அந்த சமயம் அங்கில இதழ்களை புரட்டுவது ஒருவகையில் அவள் அழகுக்கு முன் எனக்கு ஏற்பட்ட சின்ன சறுக்கலை சரிப்படுத்தி கொள்ளவும், மேலும் அவள் என்னை பார்க்க நேர்ந்தால், நான் அவளை பார்க்காதது போல் முகத்தை புதைத்து கொள்ள ஏதுவாகவும் இருந்தது.

பின் என்ன நினைத்தாலோ தெரியவில்லை மீண்டும் சென்று அமர்ந்து விட்டாள். இதுவரை அணிந்திருந்த இண்டலெக்சுவல் தோரணைக்கு சாட்சியான அந்த கடைக்காரனிடம் 15 ருபாய் கொடுத்து ஒரு ஆங்கில இதழ் வாங்கி வந்தேன். இப்போது அவள் நான் இருந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தாள், நான் எந்த வித சலனமும் இல்லாமல் வாங்கி வந்த புத்தகத்தை புரட்ட தொடங்கினேன்.


சற்று தள்ளி இருக்கையில் அவளை பார்த்ததில் ஒரு சுவாரசியம் இருந்தது, ஒருவேளை அவள் வேறு யாரையோ பார்த்து சிரித்தாலோ கை அசைத்தாலோ நம்மை பார்ப்பதாக ஒரு கற்பனை பண்ணி கொள்ளலாம். அருகில் அமர்ந்த பின் பார்ப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது, ஆனால் இப்போதும் எங்களை கடந்து போவோர் எங்களை பார்க்கையில் என்னை அவளது தோழனாகவோ இல்லை காதலனாகவோ நினைத்து பார்க்கும் விரோத பார்வையும், “கொடுத்த வச்சவன்டா நீ” என்ற ரீதியில் கடந்து போவதும் மெல்ல ஒரு குறுகுறுப்பை உணரத்தான் செய்தது.


“எஸ்க்யூஸ் மீ” என அவள் தான் பேச்சை தொடங்கினாள்


“எஸ்” என்றேன்


“ஐ அம் நீரஜா”


“ஐ அம் ராஜேஷ்” என பரஸ்பரம் அறிமுக படுத்தி கொண்டோம்.


என்ன படிக்கறீங்க? என்றாள்,


“தி வீக் இதழ்” என்றேன்,


ஒ!, நான் அதை கேட்கவில்லை, எந்த காலேஜ்” என்றாள்,


“ஐ அம் என் எம்ப்லாயி”, என நான் வேலை செய்யும் அலுவலக பெயர் சொன்னேன், நம்பாமல் , டிக்கெட் கொடுங்க, உங்க வயசு என்ன? என்றாள்,


பர்சிலிருந்த டிக்கெட் ஐ கொடுத்த உடன் பார்த்து விட்டு, யு லுக் சோ எங்!! என்றாள். டிக்கெட் ஐ வாங்கி என் மேல் பாக்கெட்டில் வைத்து கொண்டேன்.


அதன் பின் எங்களின் ஐந்து நிமிட உரையாடலை நீங்கள் கேட்டிருந்தால் , நாங்கள் இருவரும் கோவை போவதும், அந்த புத்தக கடையில் அவள் கேட்ட புத்தகம் இல்லாததும், “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என அவளிடம் சொன்ன 16வது ஆள் நான் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.


படிக்க எதாவது நல்ல சுவாரசியமான புத்தகம் இருகிறதா என்றாள், குனிந்து என்னுடைய பையில் புத்தகத்தை துழாவி கொண்டு இருந்தேன், அப்போதும் ஓர பார்வையில் அவள் என்னை பார்க்கிராளா என்பதை பார்க்க தவறவில்லை.


கடைசியில் ஒரு புத்தகம் எடுத்து கொடுத்த உடன்,


“தேங்க்ஸ், நானே வச்சுகிட்டமா? என சிரித்து கொண்டே கேட்டாள், அந்த சிரிப்புடன் அவள் கேட்டால் சொத்தையே எழுதி தந்து இருப்பேன். புத்தகம் தானே என “அன்புடன் ராஜேஷ்” என கை எழுத்து இட்டு போன் நம்பர் எழுதி கொடுத்தேன்.


நேரம் ஆகி விட பிளாட்பார்ம் நோக்கி நடக்க தொடங்கினோம், நீங்கள் எந்த கோச் என்றாள் S2 என்றேன், நான் S11 என்றாள்.


“பார்க்கலாம்” என்று சொல்லி சென்று விட்டாள்,


எப்போ? என கேக்க நினைத்து நிறுத்தி கொண்டேன்.


வண்டி நகர துவங்கியது, பரிசோதகரிடம் டிக்கெட் ஐ கொடுத்து பரிசோதனை முடித்து படுக்க போகும் முன், என் பேண்ட் பாக்கெட் ஐ தொட்டு பார்த்தேன். ”என் பர்சை காணவில்லை”.


புத்தக கடையில் இருந்தது, அவளிடம் டிக்கெட் எடுத்த காட்டும் போது இருந்தது. ஒருவேளை அவள்???,


புத்தக கடையில் பார்த்து, லாவகமாக பேசி பர்சை எடுக்க வைத்து, டிக்கெட் ஐ நான் மேல் பாக்கெட்டில் வைத்து. குனிந்து புத்தகம் எடுக்கையில் .


ச்சே ச்சே இருக்காது!!


அதற்குள் வண்டி அடுத்த ஸ்டேஷனில் நின்றது - நிற்க!!


நான் S11 கோச்சிற்கு போய் பார்க்கவா வேண்டாமா?

No comments:

Post a Comment