Thursday, February 25, 2010

பாலுவின் மூன்றாம் பிறை- இழப்பின் வலி

எட்டாம் வகுப்பு படிக்கையில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லை, எதிர் வீட்டு மாடியில் குடி இருந்த என் நண்பன் ராஜேஷ் வீட்டில் தான் எப்போதும் இருப்பேன். வார இறுதி இரவுகளில் திரைப்படம் ஒளிபரப்பானால் இரவு அவர்கள் வீட்டில் தங்க எனக்கு அனுமதி உண்டு. ராஜேஷின் அப்பா எப்போதும் இரவு வெகு நேரம் கழித்து தான் வீடு வருவார், அப்படி ஒரு வார இறுதியில் தான் நான் "மூன்றாம் பிறை" பார்க்க நேரிட்டது. நான், ராஜேஷ் அவனது அம்மா மூவரும் அந்த படம் பார்த்து கொண்டு இருந்தோம், சரியாக இறுதி காட்சியில் ரயில் புறப்படும் சமயம் ராஜேஷ் அப்பா வந்தார். அவரை கவனிக்காமல் நாங்கள் மூவரும் A Film by Balu Mahendra என வந்த அந்த தொலைக்காட்சி பெட்டியை வெறித்து பார்த்த வண்ணம் இருந்தோம்.

பார்த்து கிட்டே இருந்தா வந்துடுவாளா? எழுந்திருங்க படம் முடிஞ்சுடுச்சு என்றார் அவன் அப்பா. உறுதியாக அந்த படத்திற்கு அடுத்த பாகம் இருக்கும் என நம்பினேன். கமல் வண்டியிலே ஏறி, தெளிவா அவளுக்கு விளக்கி இருக்கலாம் இல்ல? கமல போய் ஸ்ரீதேவி வேணாம்னு சொல்லிடுமா? ஏன் படம் முடியும் பொது தொடரும் போடல? என பல கேள்விகள் கேட்டேன் அவரிடம். சிரித்து கொண்டே இன்னும் கொஞ்சம் பெரிய பையன் ஆனா உடனே பாரு என்றார்.
சமீபத்தில் பாலுவின் பேட்டியை பார்த்தேன். அதில் மூன்றாம் பிறையை பற்றி அனு அவரிடம் கேட்கையில்,

"Moondram Pirai is an autobiography. It's nothing else me and Shoba. A very very innocent beautiful girl, a child women coming in to the life of a matured Man and stays with him for some days and then leaves. This is Moondram Pirai"
என்றார்.



மீண்டும் மூன்றாம் பிறை பார்க்க துவங்கினேன். கடந்த ஒருவாராத்தில் நான்கு முறை. சில காட்சிகள் பல முறை. ரசிகனை மதித்து படம் எடுக்கும் படைப்பாளியில் முக்கியமானவர் பாலு மகேந்திரா என்பது புதிய விஷயம் இல்லை. ஆனால் எத்தனை விஷயங்களை தவற விட்டு இருக்கிறோம் என நினைத்து என்னை நானே தலையில் தட்டி கொண்டேன் பல இடத்தில்.
பாலுவின் அந்த பேட்டியை கீழ்காணும் சுட்டி மூலம் பார்க்கலாம்.



சீனு விஜியை விஜயாக சந்தித்தல்:

ஒரு சிறந்த கதையோ இல்லை கவிதையோ படைக்கப்பட்ட பின் வாசகனின் பாரவைக்கே விட்டு விடுதல் போலவே, இந்த முறை எனக்கே உரிய முறையில் கற்பனை செய்து கொண்டு இந்த படத்தை பார்த்தேன். முதலில் சீனு விஜியை ஒரு விலைமகளிர் விடுதியில் சந்திக்கிறான். அந்த மாதிரி இடத்திற்கு அவன் புதுசு, மெல்ல விஜியை நெருங்கும் அவன் அவளால் தாக்கப்பட அப்படியே உடைந்து அழுகிறான். இங்க எல்லாம் நான் வரவே மாட்டேனு சொன்னேன் என. மருட்சியுடன் அவனை காணும் விஜி, "ரொம்ப வலிக்குதா" என்கையில் தொடங்குகிறது ராஜாவின் பின்னணி. சீனு அந்த இடத்திற்கு வந்தது முதல் பின்னணியில், "தும்பி வா" அல்லது "சங்கத்தில் பாடாத கவிதையை" பாடலின் பின்னணி தான் இருக்கிறது. சரியாக சீனு உடைந்து விஜியை அந்த True Innocentஐ உணரும் இடம் தொடங்குகிறது ராஜாவின் மூன்றாம் பிறை பின்னணி.

சீனுவிற்கு விஜியை நெருங்க நேர்மையான காரணங்கள் எதுவும் இல்லை, ஆனால் அந்த குழந்தைதனத்தை கண்ட அந்த கணம் அவன் அதிர்ச்சி அடைகிறான். பெண்களை வெறும் உடல்களாகவே காணும் இடத்தில் சீனு விஜியை சந்திக்க வைத்தது, பாலுவின் பேட்டியை ஒப்பு நோக்கையில் தற்செயல் என படவில்லை. ஷோபாவை சினிமாவில் கண்டு எடுத்த பாலு, விஜியை முதலில் சந்தித்த இடமாய் விலைமகளிர் விடுதியை தேர்ந்தெடுத்தது வேறு ஒரு தளத்தில் இந்த காட்சிகளை நகர்த்துகிறது. மறுநாள் அவளை சந்தித்து, கோவில் இருக்குமே, புறாலாம் பறக்குமே என்னும் அந்த விஜியுடனே அவன் நெருக்கமாகிறான். அம்மா அவளை லக்ஷ்மி லக்ஷ்மி என கூப்பிடுவாள் என்கிறாள் விஜி (இறுதி காட்சிகளில் அவள் அம்மா அப்படிதான் கூப்பிடுகிறாள்). வெறும் பெரிய பெரிய ஆட்களாக வரும் அந்த இடத்தில், முதல் முதலில் அவளிடம் அவள் அம்மாவை பற்றி கேட்கும் கணத்தில் விஜியின் உலகம் சீனுவை முழுமையாக ஏற்று கொள்கிறது. அதற்கு எந்த விதமான தர்க்க நியாங்களும் தேவை இருக்கவில்லை, ஒரு குழந்தை எப்படி ஏற்றுகொள்ளுமோ அப்படி.

தனியாகவே வளர்ந்த சீனு, அவனது தேவைகளை மட்டுமே பார்த்து கொண்டவன். முதல் முதலில் அவளை ரயிலில் கூட்டி கொண்டு போகையில் அவள் வாங்கிய ஐஸ் க்ரீமிற்கு கூட பணம் தான் தான் கொடுக்க வேண்டும் என தெரியாமல் நிற்கிறான். அவன் நண்பன் சொல்ல பணம் எடுத்து கொடுக்கையில் தொடங்குகிறது அவளின் பிரவேசம் அவன் உலகுக்குள்.



விஜி இல்லாமல்:
விஜியை காணாமல் சீனு அவளை தேடும் காட்சி தமிழ் சினிமாவின் மிக நேர்த்தியான காட்சிகளில் ஒன்று. ராஜாவின் பின்னணியுடன் இசைந்து அந்த காட்சிகள் உருவாக்கும் தாக்கம் நேர்த்தியானது. அந்த காட்சியை இந்த சுட்டியில் காணலாம்.


அந்த காட்சியினை பற்றிய ஒரு அழகான பார்வையை அறிய இங்கு செல்லவும்.
சீனு தினம் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ளது தான் அந்த பிள்ளையார், ஆனால் தனியாகவே வளர்ந்து வரும் அவனுக்கு அதை பற்றிய எந்த விதமான அக்கறையும் இருந்ததில்லை. தன்னிடம் இருந்த எதோ ஒன்றை இழக்க போகிறோம் என உணரும் கணத்தில், விஜியை தேடுகையில் அந்த மரத்தடி பிள்ளையாரை சந்திக்கிறான், அப்போது கூட அதனிடம் என்ன கேட்பது என்றோ, எப்படி அழைப்பது என்றோ தெரியாமல் வெறுமே பார்க்கிறான். அத்தனை வலிகளையும் ஒரு சேர முகத்தில் கொண்டு வரும் அந்த காட்சி Simply கமல்.


சீனுவும் காமமும்

மிக மெல்லிய திரை போல படர்ந்திருக்கிறது சீனுவை காமம். ஆனால் எப்போதும் அதன் வசீகரத்துடன் ஆழத்தில்!. அவன் நண்பன் முதலில் விலை மகளிரை காண அழைக்கையில் அதிகம் எதிர்ப்பு காட்டாமல் கிளம்புகிறான். ஆனால் பின் வரும் காட்சிகளில் அவனது பள்ளி முதல்வரின் மனைவி அவன் மேலும் இச்சை கொள்கிறாள் எனத் தெரிந்தும் அவளை விட்டு விலகியே இருக்கிறான். அப்படி என்றால் அவன் நண்பனை சந்திபதற்கு முன்னும் ஊட்டியில் அவனுக்கு அந்த வழியில் செல்ல வாய்ப்பு இருந்திருக்கிறது. ஆனால் அவன் அதை விட்டு விலகியே இருக்கிறான், அப்படி என்றால் அவன் தேடியது என்ன?

விஜியை அழைத்து வந்து தன்னோடு வைத்திருப்பது அவன் வாழும் சமூகத்தின் பழிப்பிற்கு கொண்டு செல்லும் என அறிந்திருந்தும் அவன் அதை செய்கிறான். அதை பற்றி அந்த பாட்டி கேட்கையில், இவங்களா என் கூட வர போறாங்க? என்கிறான். அப்படி பயபடாதவன் தான், தன் முதலாளி அம்மாவிடம், "என் முதலாளிக்கு துரோகம் செய்ய முடியாது " என சொல்லி விலகுகிறான்.
உண்மையில் அவன் விரும்புவது வெறும் உடல்களை அல்ல, அவளிடம் இருந்து விலக அதுவே காரணம். ஒரு சமயம் விஜியை அந்த குழந்தைத்தனம் விலகியது போலவே கற்பனை செய்கிறான். அப்போது அவனுக்கு அதிர்ச்சியே வருகிறது. அந்த காட்சியினை இந்த இடத்தில் காணலாம்.


அந்த இறுதி காட்சி

வித விதமாக சிலாகிக்கப்பட்ட அந்த இறுதி காட்சி இங்கே.

எத்தனை விதமாக பாராட்டினாலும் தகும் காட்சி. நான் மீண்டும் மீண்டும் கேட்டு கொள்வது, அந்த சிறுவன் இறுதியில் சீனுவிடம் என்ன சார் அச்சு என்கிறான், என்ன சொல்வது என புரியாமல் " விஜி விஜி" என்கிறான். ஒரு கணம் அவளை வளர்ந்த பெண்ணாக கற்பனை செய்து பார்த்த அதிர்ச்சியை கண்ட அவன் மனம், இனி வாழ்நாள் முழுதும் அவனது விஜியை சந்திக்கவே முடியாது என்பதை எப்படி ஏற்றுகொள்ளும்?.


இதுவரை அவன் ஆழ்மனம் எந்த விதமான பாவனைகளும் இல்லமால் முழுமையாக சரணடைந்திருந்த ஒரு உயிர் அவனை விட்டு விலகுகையில், வளர வளர அவன் அடைந்த அத்தனை நாசுக்குகளையும், போலி பாவனைகளையும் அழித்துவிட்டு ஒரு குழந்தையை போல் அழவிட்டு செல்கிறது.

இனி சீனு அந்த மரத்தடி பிள்ளையாரிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை, ஒருவேளை அவன் அந்த பிள்ளையாரை சந்திக்க நேரிட்டாலும் அந்த சிறுவனிடம் அழுதது போல, "விஜி விஜி" என்று மட்டுமே சொல்வான் என நினைக்கிறன். அவன் பிரத்தனை அவ்வளவுதான்!


Monday, February 22, 2010

என் ஜன்னல் வழியே # 6

நீண்ட நாட்களுக்கு பிறகு, ச்சே! இந்த உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக போல, பதிவு எழுத ஆரமிக்கையிலேயே இந்த வரி நினைவு வந்து விடுகிறது. ஆதலால் மீண்டும் "என் ஜன்னல் வழியே". எழுத நினைத்து விஷயங்கள் தள்ளி போய் கொண்டே இருக்கையில், அவசரத்திற்கு கிண்டப்பட்ட உப்புமா போல இந்த மாதிரி ஒரு காக்டையில் பதிவு. சில சமயம் உப்புமாவும் நல்லா இருக்கும் (அழகன் தான்!). என்ன வேணா சொல்லலாம் என்பதற்கு இது போல ஒரு தலைப்பு இருப்பது சந்தோசம் தான்.

முதல் முதலில் விமானத்தில் வந்ததோ, இல்லை அமெரிக்கா வந்து இறங்கிய உடன் வரும் ஆரம்ப கால ஆச்சர்யங்களோ எதுவும் இருக்கவில்லை. ஒரே ஒரு முறை பொழியும் பனியை கிழித்து கொண்டு விமானம் பறக்கையில், துணி துவைத்த சோப்பு நுரைகள் போல மேகங்கள் கீழே மிதந்தன. என்னையும் மீறி கடவுளே என சொல்லி கொண்டேன்.அதிகமான ஆங்கில படங்கள் பார்த்து நான் கற்பனை பண்ணி கொண்டதை விட இந்த இந்தியானாபோலிஸ் நகரம் சராசரி தான். இங்கேயும் ரோட்டில் குண்டு குழிகள் இருக்கிறது. வந்த ஒரு வாரத்திலேயே இங்கு உள்ள கோவிலுக்கு சென்று வந்தோம். எல்லா தெய்வங்களுக்கும் சேர்த்து ஒரே கோவில் தான்.



தமிழ் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது, பத்து டாலர் செலவு ஆனாலும் பரவாயில்லை என சென்று வந்தோம். பொங்கல் நன்றாகவே இருந்தது, பூரியும் கூட. சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது விழா, குழந்தைகள் நடனம் பார்க்க அழகாய் இருந்தது. அர்த்தமே புரியாமல், இங்கும் கந்தசாமி படத்தின் பாடல்களுக்கு தான் நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர். பாப் கட்டிங் வெட்டி கொண்டு, சற்றும் பொருந்தாத தாவணி அணிதிருந்த ஒரு சின்ன பெண், மிக அழகாக காற்றினிலே வரும் கீதம் பாடியது. இந்த பாட்டு ஏன் பிடிக்கும் என கேட்டதற்கு,"It has something in it, I don’t like cine songs of nowadays” என்ற ரீதியில் பத்து நிமிடம் ஆங்கிலத்திலேயே உரை ஆற்றியது. மூன்று முதல் ஆறு வரையான குழந்தைகள் உற்சாகமாக நிகழ்சிகளில் கலந்து கொண்டு இருக்க, அதன் பெற்றோர்கள் விடாமல் கை தட்டிய வண்ணமே இருந்தனர். இதில் எதுவுமே சம்மந்தபடாமல் பத்தில் இருந்து 15 வயது உள்ள சிறுவர்கள் ஒரு அறையில் அமர்ந்து அமெரிக்கன் புட்பால் பார்த்து கொண்டு இருந்தனர்.(It’s taking more time than they said dude, Common it’s getting late, finish your programs soon)


மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய கவிதைகள் அடங்கிய "அதீதத்தின் ருசி" இந்த புத்தக திருவிழாவில் வெளிவந்துள்ளது. அவரின் மிக சிறந்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. சிநேகிதிகளின் கணவர்கள், வரலாறு என்னும் பைத்தியகார விடுதி, உன்னிடம் அதை சொல்வதற்கு, உணர்ச்சிவசப்படும் ஒரு சிறய கணம் ஆகிய உன்னதமான கவிதைகள் அடங்கிய தொகுப்பு.



உணர்ச்சிவசப்படும் ஒரு சிறய கணம்
அன்போ
வெறுப்போ
உணர்ச்சி வசப்படும்
ஒரு சிறிய கணத்தில்
நீ மீட்சியடைகிறாய்

நீ யாராக இருக்க விரும்பினாய்
என்பதையோ
அல்லது
இனி யாராக இருக்க
முடியாதேன்பதையோ
தெரிவிக்கும் சிறிய கணத்தை
உணர்ச்சி வசப்படும்போது
மட்டுமே உருவாக்குகிறாய்
-------------------------------------------
-------------------------------------------
-------------------------------------------
என செல்லும் கவிதை
-------------------------------------------

பிறகு
உணர்ச்சி வசப்படாமல்
நீ சிந்திக்க தொடங்குகிறாய்
உணர்ச்சியற்ற
சிறந்த
உறுதியான
முடிவுகளை எடுக்க தொடுங்குகிறாய்

அதுதான் எதிர்கொள்ளமுடியாதது
எல்லாப் பாதுகாப்பின்மையும்
அங்கிருந்தான் தொடங்குகிறது

என முடிகிறது. புத்தகத்தில் சிறந்த கவிதைகளில் ஒன்று இது.



சமீபத்தில் கிம் கி டக்கின் " 3 iron " திரைப்படத்தை காண நேர்ந்தது. அழகான காதல் கவிதை, இருவரும் கடைசி வரை ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. பேசாமலே காதலா? என நம்ம ஊர் பார்முலா இல்லை. காட்சிபடுத்துவதில் மிக தனித்துவமாய் மிளிர்கிறது இப்படம்.



இறுதி காட்சிகளில் நாம் தான் பின்னாடி நின்று கொண்டு பார்க்கிறோம் என நினைக்க வைத்து விடுகிறார். படத்தில் அதிகபட்சமாக ஒரு முப்பது வரிகள் தான் பேசுகிறார்கள், ஆனால் சொல்ல வந்த விஷயத்தை அழுத்தமாய் பதிவு செய்கிறார் இயக்குனர். மேலும் படத்தில் அவர் உபயோக படுத்தி உள்ள பாடல் Natasha Atlasன் பாடல். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இவர் அரபிக் இசையை பாடலில் கலந்து புகழ் பெற்றவர் என தெரிகிறது. மயக்கும் அந்த குரலும் நேர்த்தியாக படத்தில் சேர்க்க பட்டுள்ளது. அவசியம் பார்க்க வேண்டிய படம், படத்தின் இறுதி காட்சியினை அந்த உடன் கேட்க கீழ் உள்ள சுட்டியினை காணவும்.


இந்த தொடரின் முந்தையப் பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 |

Wednesday, February 17, 2010

அறைகளில் பூட்டப்பட்ட உலகம்



(Image: www.traceyfoster.com)

அறைகளில் பூட்டப்பட்ட உலகம்
எப்போதும் ஒன்றுபோலவே
இருக்கிறது

எப்போதேனும் மாற்றப்படும் திரைசீலைகள்
அளிக்கும் ஆசுவாசங்கள்
கறை படிந்த கண்ணாடிகள் வழியே கரைகிறது

இறுக்கி சாத்தப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள்
அணில்களின் க்ரீச்யையோ
இரவில் மரங்கள் முணுமுணுக்கும்
மூச்சினையோ தெரியப்படுத்துவதே இல்லை

பின்னிரவில் தீடிரென்று கேட்கும்
ஆம்புலன்ஸ் ஒலிகளுக்கும்
நாளடைவில் பழக்கி விட்டுவிடுகிறது
பூட்டப்பட்ட அறைகள்



கண்ணாடி வழியே தெரியும்
ஊமை நாடகம் தாங்காமல்
ஜன்னல் ஓரத்தில் கசியும்
வானத்தை கண்டு
நீ கத்த தொடங்கும் ஒருநாள்,

இந்த பூட்டப்பட்ட அறைகள்
உனக்கு அளித்தது போலவே
அளிக்கிறது உன் ஒலிகளுக்கும்
பாதுகாப்பை

- மதன். எஸ்

Friday, February 12, 2010

சொல்லாமல் விட்டவை - சில காதல் கவிதைகள்

பதிவுகள் எழுதி நீண்ட நாட்களான பிறகு, காதலர் தினத்தை ஒட்டி விருந்தினர் பதிவு கேட்டு நண்பர்கள் அரவிந்தனும், அய்யப்பராஜும் கேட்டிருந்தார்கள். ஆதலினாலை தொடர்ந்து சில குட்டி காதல் கவிதைகள், எப்போதோ கோர்த்த கணங்களை சேர்த்து...

அவ்வளவுதானா?

உன் கோவம், உன் சிணுங்கல்
உன் வெட்கம், உன் புன்னகை
உன் உதட்டு சுழிப்பு
அத்தனையும் உள்ளங்கையில் சேர்த்து
கொடுத்தேன்

பிரித்து பார்த்து
சீ, போ! என்கிறாயே
0

அவகாசம் இல்லை

அச்சம், தன்மானம்
இன்னபிற ஆகியவற்றை
ஒதுக்கிவிட்டு சற்றே செவிகொடு

மௌனத்தையே இவ்வளவு நேரம்
பேசி கொண்டு இருந்தால்
காதலை எப்போது பேசுவது?
0

கடவுச்சொல்

உனது பெயரை மட்டும்
கைபேசியில் செல்லப் பெயர்
வைத்து மாற்றி கொண்ட அன்றோ,

உனது மின்னஞ்சல்களை மட்டும்
தனியான அறையில் சேமிக்க
தொடங்கிய அன்றோ ,

உன்னை காதலிக்க
தொடங்கி இருக்க வேண்டும்!

வேறு ஒருவனை மணந்து எனது
மின்னஞ்சல் முகவரியின் பாஸ்வார்டாய்
மாறும் முன் சொல்லிவிட வேண்டும் என் பிரியத்தை…
0

நீயே சொல்

அடித்து, திருத்தி
கணினியை பார்த்தவாரே அமர்ந்து
ச்சே…

நீ என்னை
இப்படியே பார்த்து கொண்டே இருந்தால்
நான் எப்படி கவிதை எழுதுவது?

------------------------------------------------------------------------------------

கவிதைகளை படித்து விட்டு நண்பர் கொடுத்த பின்னூடமும் சுவையாய் இருந்ததால், அதுவும் இங்கே..

இந்த கவிதைலாம் படிச்ச அப்புறம் எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் மனசுல தோனுச்சு.
யார் சார் அந்த ஃபிகரு?


Wednesday, February 10, 2010

ஆதலினால்!

நீண்ட நாட்களுக்கு பின் எழுதும் பதிவு காதலர் தினத்தை ஒட்டி அமைந்ததை எண்ணி சந்தோசம். ஆறாம் வகுப்பு படிக்கையில் பக்கத்து பென்ச் பெண் எனக்கு மிட்டாய் கொடுத்ததில் இருந்து எனக்கும் காதலுக்கும் பழக்கம் இருக்கிறது. யாருக்கும் தராமல் எனக்கு மட்டும் அவள் தந்ததை எனது அதிர்ஷ்டம் என எண்ணினேன். என் நண்பன் பரணி, விருமாண்டி மாதிரி வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொண்டு அந்த மிட்டாய் கொடுக்கும் காட்சியை காதல் என எனக்கு விளக்கினான். ஆறாம் வயது அசட்டு குழந்தையை போல அவளிடம் போய் " நீ என்னை காதலிக்கிறாயா" என கேட்கவில்லை. சில பல மிட்டாய்கள் நஷ்டம் ஆனாலும் பரவா இல்லை என அவளிடம் பேசுவதை குறைத்து கொண்டேன். முப்பது வருஷத்துக்கு முன்ன கல்யாணம் ஆக வேண்டியவன் எல்லாம் இன்னும் கோலம் போடறான் ரேஞ்சுக்கு இப்போது தான் படிக்க வந்து உள்ளேன். ஒருவேளை அவளிடம் அப்போதே கேட்டு இருக்கலாமோ என இப்போது தோன்றுகிறது.

என்னுடைய ஊர் பற்றிய கட்டுரையை படித்தவர்களுக்கு எங்கள் ஊரின் காதல் நிலவரங்கள் பற்றி தெரிந்திருக்கும் ஆகையால் மேற்படி சமாசாரங்களில் ஈடுபடாமல் படிப்பே கதி என கழிந்தது பள்ளி வாழ்க்கை. எங்கள் வகுப்புக்கும் பக்கத்து வகுப்பிற்கும் இருந்த தடுப்பு அட்டையை எல்லோரும் பள்ளி விட்டு போன பின் தன காதலியை காணும் பொருட்டு ஒரு பெரிய ஓட்டை போட்ட சாகசங்களிலோ, இல்லை காதலி பிறந்த நாளைக்கு அவளுக்கு தெரியாமல் அவள் புத்தக பையில் புது பேனா, ரப்பர், ஸ்கெட்ச் ஆகியவற்றை வாங்கி போட்ட தாரள விஷயங்களிலோ சேராமல் வெறும் பார்வையாளனாகவே இருந்துள்ளேன்.

பள்ளி இறுதி ஆண்டுக்கு பின் வந்த விடுமுறையில், விகடன் பிரசுரத்தின் "காதல் படிக்கட்டுகள்" மற்றும் பாலகுமாரனின் "இனிது இனிது காதல் இனிது" ஆகியவற்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்ய வேண்டும் என கொள்கையோடு கல்லூரிக்கு போனேன். (அடடா இதுவல்லவா இலட்சியம்!). ஒரு ஜோதிகா ரேஞ்சுக்கு கிடைக்கும் என ஆரமித்த கற்பனை மெல்ல சிநேகா, த்ரிஷா அல்லது எதாவது சைடு ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்கு இறங்கி கடைசியில் வத்தலோ, தொத்தலோ, ஈயமோ பித்தாலையோக்கு வந்து நின்றது. அது முத்தி போய் முடிவாக " Why some guys stay as bachelors?" என்ற pdf யை ஊருக்கு எல்லாம் forward செய்யும் அளவுக்கு நிற்கிறது.

என் உயிரின் பாதி, my better half என ஏகப்பட்ட வசனங்களுடன் தங்கள் காதலியைப் பற்றி புலம்பிய அனேக நண்பர்கள் எனக்கு வாய்த்தது உண்டு. என்னை பற்றிய விவரங்களை என் நண்பர்களிடம் கேட்டு சரி பார்த்து கொள்ளவும். உணர்சிகளை புறம் தள்ளி, அது என்னப்பா காதல்? என்ற கேள்வி கல்லூரி வாழ்வில் தான் தொடங்கியது. சுஜாதாவும் எனது உயிரியல் சார்ந்த படிப்பும் துணை நின்றன. அதன் ஆரம்ப கணம் முதல் இறுதி வரை நடக்கும் பௌதிக காரணங்களை கண்டு கொள்ள முடிந்தது. மேல் விவரம் வேண்டுவோர் இந்த சுட்டியை காணவும்

காதலில் ஊறி திளைத்து கொண்டு இருந்த காதலர்களை வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. அவர்கள் முன் திரையில் பல் வேறு பெண்களின் புகைப்படங்கள் காட்டப்பட்டன, சரியாக அவர்களின் காதலி புகைப்படம் வந்த உடன் அவர்களின் உடலில் ஏற்பட்ட ரசாயன மாற்றங்களை பதிவு செய்து முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் என் சில கணங்களில் மட்டும், குறிப்பாக ஒருவரிடம் (சிலரிடம்?!) மட்டும் அப்படி தோன்றுகிறது என்பதை இன்னும் விளக்கவில்லை. அதற்கு தான் இரண்டாயிரம் வருடமாய் கவிதை, கதை எழுதி கொண்டு இருக்கிறோம். பாஸ், "எனக்கு எந்த பெண்ணை பார்த்தாலும் அந்த ரசாயன மாற்றம் வருதுன்னு நான் சந்தேக படறேன்" என்பவர்கள் தனியாக எனக்கு மெயில் அனுப்பவும். உங்களை எல்லாம் வேறு ஆராய்சிக்காக தேடி கொண்டு இருக்கிறார்கள்.

இத்தனையும் மீறி நான் போட்ட சட்டை கலரிலேயே அவளும் சுடிதார் அணிந்திருந்தாள், நான் தண்ணி குடித்து வைத்து விட்ட போன தம்லரிலேயே அவளும் தண்ணீர் குடித்தாள் என்று எத்தனை சல்லிசான விஷயம் கிடைத்தாலும் மொக்கை போட முடிந்தது காதலால் தான். காதலிக்காக படித்து ஐஐம் போக ஆசைப்பட்டவன், காதலனுக்கு பிடிக்காது என நண்பர்களுடன் பேசியதை நிறுத்தியவள், நான் சொல்லலைனா அவ அழுதிருப்பாடா என வித விதமான காதல்களை பார்த்து இருக்கிறேன்.

காதலிக்க ஒரு நெகிழ்ச்சி தன்மை தேவையாய் இருக்கிறது, எதிரே இருப்பவரின் ஆழ்மனதில் நாம் இருக்கிறோம் என ஊர்ஜிதமாக நம்ப வேண்டி இருக்கிறது. எல்லாரிடமும் எப்போதும் நம்மை வெளிகாட்டி விட முடிவதில்லை, தொடர்ந்து நமது பிம்பம் எதிர் இருப்பவரின் மனதில் ஏற்படுத்தும் சலனங்களை நாம் கவனித்த வண்ணமே இருக்கிறோம். ஒரு பலவீனமான கணத்தில் நம்மை வெளிபடுத்திவிட எதிரே இருப்பவரின் பிரதிபலிப்பு மிக முக்கியமாக போய் விடுகிறது. நமது வெளிபடுத்தலுக்கு தகுந்த அல்லது நமக்கு விருப்பமான பதில் கிடைக்க அது தொடர்ந்து வளர்ந்த வண்ணமே உள்ளது. அப்போதும் அந்த பதில்கள் நம்மை சாந்தபடுத்த சொல்லப்பட்டதா, உண்மையிலேயே அவள் அப்படித்தானா என எண்ண தொடங்குகிறோம். இந்த இரு புள்ளிகளும் இணையும் ஒரு கோட்டில் யாரேனும் முதலில் தங்கள் காதலை சொல்ல வேண்டி இருக்கிறது.

தம்மை வெளிப்படுத்தி அது நிராகரிக்கப்பட்ட வலி எப்போதும் நெஞ்சில் தங்கி விடுகிறது, பல நாள் கழித்து யாருடனாவது பேசுகையில் தீடிரென்று அது நினைவு வந்து தாழ்வுணர்ச்சி கொள்ள செய்கிறது.எம். எஸ் அவர்களின் வாழ்கையை பற்றி வெளியான நூலினை அறிமுகம் செய்யும் ஜெயமோகன், பெண்கள் தங்களின் சுயகவுரவத்தை விட்டு மன்றாடியபின் மறுக்கப்படும் நிலை குறித்து கூறுகையில்

"வெளிப்படையாக மன்றாடும் நிலை அவர்களின் சுயகௌரவத்தை குறைக்கிறது. கிட்டத்தட்ட வீம்புக்கு நிகரான சுயகௌரவம் பெண்களின் வலிமை. அதை இழந்துவிட்ட பெண் தன்னுடைய ஆளுமையே அவமானப்படுத்தப்பட்டதாகவே உணர்வாள். அவள் மனதின் மெல்லிய பகுதி ஒன்று அடிவாங்கி கன்றிவிடுகிறது. எம்.எஸ், கெ.பி.சுந்தராம்பாள் இருவரின் வாழ்க்கையிலும் இந்த கன்றிப்போதலை நாம் காணலாம் என்று இப்போது படுகிறது."

என்கிறார்.ஏற்கப்பட்டிருந்தால் அவை கொள்ளும் மாற்றம் என்ன என புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆனால் இத்தனையும் மீறி காதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் அடிப்படை பௌதிக காரணங்களை மீறி, மாபெரும் உணர்வெழுச்சிகளை அடக்கியபடி.

எத்தனையோ மனிதர்களை சந்திக்கையில் சிலரின் தனித்தன்மை மட்டும் நம்மை கவர்ந்து விடுதல் விந்தை தான் இல்லையா?. நம்மை பிடிக்கிறது என்று சொன்னவர்களும் நமக்கு பிடித்தவர்களும் ஒன்றாகவே தோன்றுகின்றனர். “Love means never having to say you're sorry” ‘என்று Love Story படத்தில் ஒரு வசனம் வரும், “Love means never having to say you’re in love” என சொல்வது பொருத்தமாய் படுகிறது. நமது காதலயே நம்மால் புரியவைக்க முடியாதவர்களிடம் நாம் வார்த்தைகள் மூலம் என்ன சொல்லிவிட முடியும்? நமது தனித்தன்மை பற்றி நாமே சந்தேகிக்கும் சமயங்களில் நம்மிடம் காதலை சொன்னவர்களையோ இல்லை நமக்கு பிடித்தவர்களையோ நினைத்து கொள்வோம். காதலர் தினங்கள் ஒவ்வொன்றும் கடக்கையில் ஒவ்வொரு காதலியின் முகமும் மறந்து போக, கடைசியில் ஒருவேளை காதல் மட்டும் நமது மனதில் மிச்சம் இருக்க கூடும்.