Sunday, November 21, 2010

என் கவலை எல்லாம் என்னவென்றால்?


அமெரிக்கா வந்த இந்த பதினோரு மாதங்களில் என் அறை கதவு மூன்றே முறை தான் தட்டப்பட்டிருக்கிறது . அவசரமாக வெளியே கிளம்பி கொண்டிருக்கையில், எனக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியுமா என கேட்ட அந்த மக்கட்தொகை கணக்கெடுப்புக்கு வந்த பெண் ஒருமுறையும், மாடான் கூமார் இருக்கிறாரா என கேட்ட அந்த கூரியர் காரர் இரண்டாம் முறையும், கடைசியாக, வெளியே செல்ல அழைத்து போக வந்த நண்பனும் தட்டி இருக்கிறார்கள். லேசாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு வெள்ளி மாலை தீடிரென்று நான்காவது முறையாக கதவு தட்டப்பட்டது. ஒரு விதமான ஆனந்தமும் ஆச்சர்யமும் சூழ, கதவின் லென்ஸ் வழியாக பார்த்தேன், வெள்ளை தாளுடன் இருவர் நின்று கொண்டு இருந்தனர். கதவை திறந்த உடன், சடாரென்று ஒரு துப்பாக்கியை உருவி “Don’t Move” என சொல்லுவார்களோ என ஒரு விபரீத ஆசை தோன்றி மறைந்தது.

அந்த ராஜேஷ்குமார் பாணி கற்பனையை சற்றே ஓரம் கட்டி விட்டு கதவை திறந்தேன், மருத்துவ கல்லூரி மாணவர்கள் என்றனர், என்னை சந்தித்ததில் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி என்றார்கள், நான் பதில் சொல்ல வாயை திறப்பதற்குள், என் வாழ்க்கையின் பொன்னான ஐந்து மணித்துளிகளை  அவர்களுடன் பகிர்ந்து கொள்ள போவதற்காக ஒருமுறை நன்றி சொன்னார்கள். என் குடும்ப நலன் பற்றி ஏதேனும் விசாரிப்பார்களா என்று எதிர்பார்த்தேன், சற்றே ஏமாற்றம். பின், அவர்கள் உருவத்திற்கு சற்றும் பொருத்தமில்லாமல் ஒரு அட்டையை திறந்து, அதில் பல வண்ணங்களில் இருந்த மெழுகு வத்திகளின் படங்களை  காட்டி இதில் ஏதேனும் ஒன்றை வாங்கி கொள்கிறீர்களா என்றனர். பதிமூன்றே டாலர் மதிப்புள்ள அதை நான் வாங்கினால், அதன் மூலம் கிடைக்கும் ஏழு டாலர் லாபத்தை கொண்டு அவர்கள் ஒரு குழுவாக வியட்நாம் சென்று சேவை புரிய போவதாக சொன்னார்கள். இருபது டாலர் மதிப்புள்ளவையும் உண்டு என்ற உபரி தகவலும் கொடுத்தனர்.

மெழுக்கு வத்தியின் வண்ணத்தை நான் தேர்வு செய்தால், இரு வாரங்களில் வீட்டிற்கே வந்து தந்து விடுவதாக வாக்குறுதி அளித்தனர். இது வரை வாங்கியவர்கள் பற்றிய விவரம் அடங்கிய தாள், முதன் முதலின் என் பெயரை தாங்குவதற்காக காத்திருந்தது. எனக்கு மெழுகு வத்தி எதுவும் வேண்டாம், இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சங்கடமான புன்னகை ஒன்றை உதிர்த்தனர், ஆனால் நீங்கள் வியாட்நாம் செல்ல பணம் தருகிறேன் என்றேன். சற்றே அதிர்ச்சியுடன் பார்த்து, நிஜமாகத்தான் சொல்கிறீர்களா? என்றனர். உள்ளே வாருங்கள் என அழைத்து, பணமாகவா இல்லை காசோலையா என்றேன், “MSG Fund”என்ற பெயரில் காசோலையாக கொடுத்தால்  வரவு வைத்து கொள்ள வசதி என்றனர். காசோலையை வாங்கி கொண்டு மீண்டும் நலன் விசாரிப்பு, விடைபெறல்.

மறுநாள் செய்திகளை ஆராய்ந்து கொண்டிருந்தேன், வியாட்நாம் பற்றி ஒன்றும் செய்தி இல்லை, குறைந்தபட்சம் ஒரு வழிபறியாவது இருக்கும் என எதிர்பார்த்தேன், ம்ஹும்!. அப்படி என்றால் வியாட்நாமில் நல்ல மழை எல்லாம் பெய்து, மக்கள் சுபிட்சமாக இருப்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டி இருந்தது. பிலிபைன்சில் தான் எதோ சீரழிவு என செய்தி இருந்தது. அவர்கள் பிலிப்பைன்ஸ் என்றுதான் சொல்லி இருப்பார்கள் என்று சமாதான படுத்தி கொண்டேன். என் கவலை எல்லாம் என்ன வென்றால், அவர்கள் போகும் போது நான் என்ன படிக்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகள் இங்கு இருப்பேன் என கேட்டு விட்டு சென்றதுதான். அடுத்த முறை உலகில் எங்காவது சீரழிவு நடந்தால், நான் இருபது டாலர் கொடுத்து மெழுகு வத்தி வாங்க வேண்டி இருக்கும்.


                                                                     ***

இந்த ஊரில் அறிமுகமே இல்லாத ஒருவர், எதிரில் வருகையில் நம்மை பார்த்து சிரித்தால், நாம் தலை கலைந்திருக்கிறதோ இல்லை முகத்தில் பவுடர் திட்டு திட்டாய் படிந்திருக்கிராதோ என பதற்றபடாமல், பதில் புன்னகை கொடுத்தல் போதுமானது என்பதை வந்த ஒரு வாரத்திற்குள் புரிந்து கொண்டேன். அப்படி ஒருமுறை சிரித்து வைத்துவர், அடுத்த முறையும் சிரிக்க மட்டும் தான் செய்வார் என்றும் தப்பு கணக்கு போட்டு விட முடியாது. தூரத்தில் இருந்து சிரிக்காமல் வந்தவர் நம் அருகில் வந்ததும் தீடிரென்று " Hey, How’s it going?” என கேட்டால் நிலை குலையாமல் இருக்க வேண்டும். அதே சமயம் அந்த கேள்வியை நீங்கள் பரீட்சை கேள்வி போல் பீதியுடன் பார்த்து, நாணயஸ்தனாக சமீபத்திய பல் வலியையோ, வயுற்று வலியையோ  அவர்களிடம் விளக்குவது அவ்வளவு உசிதமான காரியம் இல்லை என்பதை புரிந்து கொள்ள மட்டும் சில மாதங்கள் தேவைப்பட்டது.

அமெரிக்கர்களிடம் பழகி, ஒரு பழக்க தோஷத்தில் எதிரில் வரும் நம்ம ஆட்களை பார்த்து சில காலம் சிரித்து வைத்தேன். அவர்கள் வானம், பூமி என ஏதோ தொலைந்ததை தேட, மெல்ல அவர்கள்  தொடங்குவதற்குள் இப்போதெல்லாம் நான் தேட துவங்கி விட்டேன்.

நாளொரு மேனியுமாய் பொழுதொரு வண்ணமுமாய் மாறி கொண்டிருந்த மேப்பில் மரங்களெல்லாம் இலைகளை உதிர்க்க தொடங்கிய ஒரு மாலையில், கல்லூரி நூலகம் வழியாக சென்று கொண்டு இருந்தேன். எப்போதும் செல்லும் வழியில் செல்லாமல், கல்லூரி மைதானத்தை ஒட்டிய ஒரு ஒற்றையடி பாதையில் சென்று கொண்டு இருந்தேன். ஸ்ட்ரா நீளம் சுண்டு விரல் அளவு இருந்தால், ஒரு கோப்பையை உதட்டுக்கு எவ்வளவு தூரம் வைப்போமோ, அந்த தொலைவில் இரு உதடுகளை வைத்தப்படி இருவர் வழியில் நின்று கொண்டு இருந்தனர். "இதெல்லாம் நான் கண்டுக்க மாட்டேன்"  என்ற பாவனையில் சற்றே அவர்கள் இருவர் முகத்தையும் பார்க்கும் தூரம் நெருங்கி விட்டேன். திரைகதையில் ஒரு சின்ன மாறுதல் என்னவென்றால், அந்த அமெரிக்க "அழகி"யுடன் நின்று கொண்டு இருந்தது நம்ம ஊரு பையன்.

ஸ்ட்ராவே இல்லாத நிலைக்கு அவர்கள் சென்று திரும்புகையில், சடாரென்று அவன் என்னைத்தான் பார்க்க நேரிட்டது. அவன் என்னைப் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு சென்றான், அது தெரிந்த சிரிப்பு போலவும் இருந்தது, தெரியாதது போலவும் இருந்தது. என் கவலை எல்லாம் என்ன வென்றால், அடுத்த முறை அவனை பார்த்தால், “Hey How’s it going?” என கேட்காலாமா? ஒருவேளை நான் கேட்டால் அவன் பதில் சொல்வானா என்பது தான்.
                                                                          ***
 

Sunday, September 12, 2010

நினைவில் துளிர்க்கும் சருகுகள்


மரண செய்திகள் ஓர் துர்க்கனவை போல் திடுமென வந்து விடுகின்றன. கிள்ளிப் பார்த்தோ. கன்னத்தில் தட்டியோ அந்த செய்திகளை அவ்வளவு சீக்கிரம் கடந்து விட முடிவதில்லை. "நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமை கொண்டது இவ்வுலகு" என்னும் கவிஞனின் ஏளனத்திற்கு பின்னால் மௌனமாய் ஓர் ஆற்றாமை வெளிப்பட்ட வண்ணமே உள்ளது. உறங்குவது போல சாக்காடு என்று மனம் சில சமயம் சமாதான படுத்திகொள்கிறது, உறங்கி விழிக்கும் இடம் எதுவென தெரியாத அந்த நிச்சயமின்மையை மறைத்தப்படி.. நீண்ட நாட்களாய் நினைவின் அடுக்குகளில் இருந்து மெல்ல நழுவிய ஒருவர், நள்ளிரவில் போர்வையை கிழித்து காதுக்குள் ஏறும் குளிரை போல மர்மமாக அறிமுகமாகிறார் மரணத்தின் மூலம். அதன் பின் அவர்களை சுற்றிய ஒவ்வொரு நினைவுகளும் மெல்ல மேல் எழுந்து வருகின்றது, பின்பு ஒருபோதும் பிரிக்க முடியாத நமது நினைவின் அந்தரங்கங்களுக்குள் நின்று கொள்கின்றனர்.

நான் படித்த மெட்ரிகுலேஷன் பள்ளி இருக்கும் ஊரில் உள்ள பெண்கள் உயர் நிலை பள்ளியில் தான் அவளும் படித்தாள். அவள் நன்றாக படிப்பவள் என்ற ஒற்றை வரி தான் அவளை பற்றிய அறிமுகம் எனக்கு. பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த கோடை விடுமுறையில் வீட்டு வாசலில் பாய் போட்டு தெருவிளக்கின் வெளிச்சத்தில் நூலக புத்தகம் ஒன்றை புரட்டி கொண்டிருக்கும் சமயங்களில், எப்போதாவது அவளது பாட்டியுடன் அவள் வீட்டு வாசலில் காண நேரிடும். பால் வாங்க போகையில் தென்பட்டாலோ, இல்லை மளிகை கடையில் பார்க்க நேர்ந்தாலோ ஒரு பரஸ்பர புன்னகை சிந்தியது நினைவில் இருக்கிறது.

தேர்வு முடிவுகள் வெளியான அன்று, முதலில் அவள் மதிப்பெண் தான் தெரிந்தது, 455/500 எடுத்து எங்கள் ஊரில் அதுவரை இல்லாத சாதனையை செய்திருந்தாள், மாவட்ட அளவிலும் ஏதேனும் ரேங்க் இருக்கும் என பேசி கொண்டார்கள். எல்லார் வீட்டிற்கும் இனிப்பு வழங்கினாள், நானும் எடுத்து கொண்டு "தேங்க்ஸ்" என்றேன். ஓரிரு மணி நேரம் கழித்து, எனது மதிப்பெண்களும் வந்து விட்டிருந்தது. அப்போதைய பள்ளி மனம், உடனே அவள் மதிப்பெண்ணுடன் சரிபார்க்க சொன்னது, என்னை விட ஒன்றரை சதம் அதிகம் எடுத்திருந்தாள். என்ன இருந்தாலும் நான் எடுத்தது 1100க்கு  என்று சமாதான படுத்தி கொண்டேன். இனிப்பு வழங்க அவள் வீட்டிற்கு சென்றேன், எடுத்து கொண்டு "கங்க்ராட்ஸ்" என்றாள்.

அதன் பின் அவளது தாத்தா வெளி ஊரில் உள்ள 'நல்ல' பள்ளியில் சேர்த்து விட்டார். எப்போதாவது அவளது படிப்பை பற்றி அவளது தாத்தா என் அப்பாவுடன் பேசுவதை கேட்டு இருக்கிறேன். பின் ஒருநாள், விடுதியில் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறாள் என சொல்லி கொண்டு இருந்ததையும் கேட்டு கொண்டு இருந்தேன். அவருக்கு துணையாய் அப்பா மருத்தவமனைக்கு அலைந்த நாட்கள் நினைவிருக்கிறது. ஒருநாள் வந்து உடல் சற்று தேறி வருகிறது என்றார். அதன் பின், அவள் உடல் நலம் பற்றி அவ்வப்போது யார் மூலமாவது தெரிந்து கொள்வேன். ஆறு மாதம் கழித்து  ஒருநாள், "கிழவனுக்கு அறிவே இல்லை, அந்த பிள்ளைய இங்கேயே படிக்க வச்சு இருக்கலாம்" என்றார் அப்பா.

வழக்கம் போல் பாலிற்கு நின்று கொண்டிருந்த ஒரு அந்தி சாயும் நேரம் தான், அந்த மருத்துவமனை வாகனம் அவள் வீட்டின் முன் வந்து நின்றது. வாகனத்தை பார்த்த உடன் மனதிற்கு புரிந்த விட்ட அந்த விஷயத்தை நம்ப மறுத்து அங்கேயே சில கணம் நிலைத்திருந்தேன். முகம் மலர சிரித்து கொண்டே எனது வெற்றிக்கு "கங்க்ராட்ஸ்" சொன்னவளை கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் களங்கப்படுத்துவதை காண சகியாமல் வீட்டிற்குள்ளே கிடந்தேன். அதன் பின் என்றென்றும் தங்கிவிட்டாள் ஆழ்மனதில் ஒரு படிமமாய்.

தீயிலிட்ட காகிதத்தின் எழுத்துக்கள் கரைவது போல, மெல்ல மெல்ல கண் முன்னே வாழ்வு கரைந்து போய் விடுகிறது. எந்த வாக்கியம் எப்படி முடியும் என்றே அறியமுடிவதில்லை. "அண்டை மனிதரை அணுக பயம், அணுகிய மனிதரை இழக்க பயம்" என்னும் திரைப்பட வசனத்தை நான் அடிக்கடி நினைத்து கொள்வதுண்டு. மரணம் நிஜம் என அறிந்தும், வாழ்வின் சாரம் என்ன என்று குழம்பிய நாட்களில் எல்லாம் சட்டென என்னை மீட்டு தந்த ஸ்பரிசங்களையோ, புன்னகைகளையோ நினைத்து கொள்கிறேன். மரணத்தின் வாசலில் நின்று திரும்பிய தஸ்தோயவஸ்கி, மீண்டும் மீண்டும் எழுதியது மானுட பெருங்காதலையும் அதன் மகத்துவத்தையும் தானே!.

Wednesday, July 14, 2010

இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா


இந்த நாவலை எழுதியது பக்தியினால் அல்ல, ‘ஆசையினால் அறையலுற்றே’ என முன்னுரையிலேயே சொல்லி விடுகிறார் இந்திரா பார்த்தசாரதி (.பா). அதற்கேற்ப நாவல் முழுதும் கிருஷ்ணன் மீது காதல் பொங்கிய வண்ணமே இருக்கிறது. புராதான கிருஷ்ணனை, பாரத போரின் சூத்ரதாரியை நவீன உலகிற்கு ஏற்றார் போல வார்த்து எடுத்து இருக்கிறார் .பா. நாம் கேட்டு வளர்ந்த அதே கிருஷ்ணன் கதையை, சிற்சில குறிப்புகளை சேர்த்து முற்றிலும் நாம் தவறவிட்ட கோணங்களை எடுத்து காட்டும் புத்தகம் இது.சம்பவாமி யுகே யுகே “ என்பதற்கு நான் மீண்டும் மீண்டும் பிறந்து வருவேன் என பொருள் கொள்ள தேவையில்லை, காலத்திற்கேற்ப என்னை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொள்ளுங்கள் என்கிறான் கிருஷ்ணன். இ.பா கட்சிதமாய் செய்து முடித்து இருக்கும் வேலை இது. பிருந்தாவனத்தில் கிருஷ்ணனின் லீலைகளுடன் தொடங்கும் நாவல் கீதையில் முடிவுறுகிறது. சம்ப்ரதாயமான நடையில் இல்லாமல் தேவையான நேரத்தில் நீண்டும், குறுகியும், முன் பின் நகர்ந்தும் கிருஷ்ணனின் வாழ்க்கை விவரிக்கபடுகிறது.


பாகவதம் என்பது கிருஷ்ணனின் வரலாறை கூறும் நூல் என வைத்து கொள்கிறேன், அது வியாசரால் சுகருக்கும், பின் சுகரால் பரிசீத்துக்கும் சொல்லபடுகிறது. .பா அதை சற்றே மாற்றி, கண்ணன் கதையை அவனே ஜரா என்ற வேடனுக்கும், அவன் நாரதருக்கும் சொல்ல, நாரதர் வாசகர்களுக்கு சொல்வதாக அமைத்திருக்கிறார். நாரதரை தேர்ந்தெடுத்ததற்கு ஒரே வரியில் பதில் சொல்லி மேலே செல்கிறார். He is the first ever Journalist.


எனது தமிழ் அய்யா, திராவிட இயக்க ஆதரவாளர், வகுப்பில் எப்போதும் அவர்  நக்கல் அடிப்பதற்கு எடுத்து கொள்ளும் கருப்பொருள் கிருஷ்ணன் தான். நினைத்து பார்கையில் வீடு கடிகாரத்தில் குழல் சுமந்து மோன நிலையில் இருக்கும் கிருஷ்ணனை விட, சட்டமிட்ட புகைபடத்தில் புன்னகை செய்யும் கிருஷ்ணனை விட, தமிழ் அய்யா எடுத்து காட்டியவன் மிகுந்த நெருக்கமாக தோன்றுகிறான். வீட்டில் பானை பானையாய் வெண்ணை இருக்க, ஏழை வீட்டில் திருடி தின்று அவர்களை செல்லமாய் கடிந்து கொள்ள வைத்த கிருஷ்ணன், இளம் பெண்ணின் வளவியை கழற்றி தானமாக கொடுத்துவிட்டு இல்லையே என அழகு காட்டியவன் எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களின் ஆடையை களவாடி ரசித்திருந்தவன். அதை என் தமிழ் அய்யா, “Eve Teasing” என்றார், நாரதர் இப்படி சொல்கிறார்," நம் உடலை கண்டு நாமே வெட்கப்பட வேண்டியதில்லை. நம் உடலை கண்டு நாமே வெட்கப்படும் போதுதான், மனத்தடைகளும் மனக் களகங்களும் ஏற்படுகின்றன, Strip Teasing Industryயின் மூலதனமே இதுதான் தெரியுமா ?” என்கிறார்.கண்ணனை பற்றி விவரித்து கொண்டே வரும் .பா சட்டென்று தாவி ஒரு ஆங்கில ப்ரோயகத்தில் பல இடங்களை முடித்து வைக்கிறார். உலக இலக்கியங்களில் காண முடியாத பன்முக தன்மை கொண்டவன், Unpredictable , நாயகன் நாயகி பாவத்திற்கு ஊற்றுக்கண் (bridal Mysticism) , Corporate CEO, Most flexible Character. சற்று பிசகினாலும் மேஜர் சுந்தராஜனை நினைவுபடுதிவிடும் பகுதிகள், ஆனால் தேவையான இடத்தில மட்டும் உபயோகபடுத்தி அனாயசமாக நகர்ந்து செல்கிறார்.


பிருந்தாவனத்தில் ஆரமித்து குருஷேச்த்ரதிரம் வரை நீளும் கிருஷ்ணனின் வாழ்வில், அவன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியபடியே வருகிறான். எதிராளிகளின் சூழ்ச்சிக்கு தகுந்தாற்போல் அவன் பாதையை மாற்றி போரிடும் போதும், தூதுவனாக செல்லும் போதும், இல்லை துரியோதனன் - பீமன் மல் யுத்தம் போதும் அவனுக்கு தர்மம் என தோன்றியதே செய்கிறான். அவன் மேல் வெறுப்பை அள்ளி வீசும், பலரை நாவல் நெடுகிலும் காண முடிகிறது. ஆனால் எந்த பெண்ணும் அவன் மேல் கடைசி வரை வெறுப்புடன் இருக்க முடிந்ததில்லை என்பதையே பார்க்க முடிகிறது. ஒவ்வொருவரின் ஆழ்மனதில் அடையபடாத இலட்சியங்களோ கனவுகளோ இருக்கும் அவற்றின் ஒட்டு மொத்த உருவகம் தான் கிருஷ்ணன். குறிப்பாக சொல்ல போனால், அடக்கி ஆளப்பட்ட ஆயர்குல பெண்களாகட்டும் இல்லை சத்ரியகுல பெண்கள் ஆகட்டும், எல்லோருக்கும் அவர்களது கனவின் காதலன் தான் கிருஷ்ணன்.


நாவலில் மைய சரடாக ஊடாடும் விஷயம் கிருஷ்ணனுக்கு பெண்கள் மேல் உள்ள காதலும், அவர்கள் அவன் மேல் கொள்ளும் நம்பிக்கைகளும். க்ருஷ்ணனைவிட எட்டு வயது மூத்தவளான ராதா அவன் குழலில் இசையாய் நுழைகிறாள், பிராமணர்கள் செய்யும் தவத்தை குறுக்கிட்ட போதும் அந்த குல பெண்கள் அவனுக்கு உணவு படைகின்றனர், அவன் மேல் உள்ள காதலால் அவன் சொல் கேட்டு பாண்டவர்களை மணக்கிறாள் பாஞ்சாலி, துரியோதனின் மனைவி "போர் வராமல் பார்த்து கொள் கிருஷ்ணா" என்கிறாள். எல்லா வற்றிற்கும் மேலாக ராதேயன் காலத்தில் மாண்டு வீழ்ந்த பின், அவன் மனைவி முதல் கேள்வி கிருஷ்ணனை பார்த்துதான் கேட்கிறாள், "என் கணவன் யார் என்று தெரிந்து இருந்தும், நீ என் என்னிடம் சொல்லவில்லை?" என்று உரிமையோடு.


முள் படுக்கையில் வீழ்ந்திருந்த பீஷ்மர், சிகண்டியை தன் முன் நிறுத்தியது போர் தர்மமா? என வினவுகையில். பிரம்மச்சரியம் மற்றும் ராஜ விசுவாசம் தந்த மமதையில், அரச குல பெண்களை அவர்கள் விருப்பம் இல்லாமல் கவர்ந்து வந்து அரசனுக்கு மனம் முடித்து வைத்தது எந்த வகையில் தர்மம் என்கிறான். அதே போல அவனது “Political Moves “அனைத்தையும் உணர்ந்தவர்கள் பெண்களாகவே இருகிறார்கள். உதாரணத்திற்கு, துரியோதனின் மனைவி பானுமதி, கிருஷ்ணன் மேல் மிகுந்த பாசம் உள்ளவள். நாட்டை எப்படியாவது தன் கணவனுக்கே வாங்கி தந்து விடு என அவனிடம் ஏற்கனவே கேட்டு இருக்கிறாள். இந்த நிலையில், வனவாசம் முடித்து வந்த பாண்டவர்களின் அராசாட்சியை திரும்ப பெற தூது செல்ல கிருஷ்ணன் பணிக்க படுகிறான். அவன் மனதை சரியாக உணர்ந்த  பாஞ்சாலி மட்டும் தான் முன் வந்து, "அவர்களுடன் பேசுகையில் பானுமதியை நினைக்காமல் இரு, என் கூந்தல் என்னும் முடியபடவில்லை" என்பதை நினைவூட்டி செல்கிறாள்.


அதே போல பிதமாகர் பீஷ்மரின் பெருமையையும், கர்ணனின் (ராதேயன்) உயர்வையும் அவன் எடுத்து சொல்லும் விதம் அழகாக புனையப்பட்டுள்ளது. போர் முடிந்து, கர்ணன் தங்கள் அண்ணன் என்பதை தெரிந்த பாண்டவர்கள், கிருஷ்ணன் துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்ட,

"உலக சரித்திரத்தில் மகோன்னதமான மகாபுருஷர்களின் கதைகளை பார்க்கும் பொது அவர்கைளை சுற்றிக் கண்ணுக்கு புலப்படாத ஒரு துன்பியல் வலை சூந்திருப்பதை உணரலாம். அவர்கள் விதியின் குழந்தைகள். கர்ணன் அத்தகையவன், அவன் பாண்டவர் பக்கம் நின்றிருந்தால் என்னையே குற்ற உணர்வுக்கு ஆளாக்கிய ராதேயனாக ஆகியிருக்க முடியாது. இதை உணர்த்தவே அவனை பற்றிய உண்மையை மறைத்தேன். இந்த பாரத போரில் இருவர் தாம் விஸ்வரூபம் எடுத்து என் முன் நிற்கின்றனர். பீஷ்மர்! ராதேயன்!. இவர்களில் பீஷ்மரை விட உயர்ந்தவன் ராதேயன்என்கிறான்.


மேலும் நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான வரலாறும் கூறபடுகிறது, ஆதலால் மகாபாரத அல்லது கிருஷ்ணன் கதை அதிகம் தெரியாமல் நாவலை படித்தாலும் புரியும் விதத்தில் எழுத்தப்பட்டுள்ளது. நான் படித்த நல்ல தமிழ் நாவல்களில் "கிருஷ்ணா கிருஷ்ணா" ஒரு சிறப்பான இடத்தை பெரும். சரளம், ஆழம் இரண்டும் அரிதாக கை கூடி வரும் படைப்புகளில் இது ஒன்று. ஏற்கனவே, .பாவின் "ஹெலிக்காப்டர்கள் தரை இறங்கி விட்டன" படித்திருக்கிறேன். டெல்லியை கதைகளனாய் வைத்து புனையப்பட்ட ஒரு நல்ல நாவல். ஆனால் இது அவரது ஒரு சிறந்த ஆக்கம் எனலாம்.


கிருஷ்ணன் கதையை ஜரா என்ற வேடன் நாரதரிடம் சொன்னதை, நான் உங்களிடம் சொல்லி விட்டேன். நீங்களும் படித்து பார்த்து உங்களுக்கான கிருஷ்ணனை உருவாக்கி கொள்ளலாம். சம்பவாமி யுகே யுகே!கிழக்கு பதிப்பகம் 
விலை. ரூ. 90

Udumalai.Com: http://tinyurl.com/2fppbqq