Wednesday, July 14, 2010

இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா


இந்த நாவலை எழுதியது பக்தியினால் அல்ல, ‘ஆசையினால் அறையலுற்றே’ என முன்னுரையிலேயே சொல்லி விடுகிறார் இந்திரா பார்த்தசாரதி (.பா). அதற்கேற்ப நாவல் முழுதும் கிருஷ்ணன் மீது காதல் பொங்கிய வண்ணமே இருக்கிறது. புராதான கிருஷ்ணனை, பாரத போரின் சூத்ரதாரியை நவீன உலகிற்கு ஏற்றார் போல வார்த்து எடுத்து இருக்கிறார் .பா. நாம் கேட்டு வளர்ந்த அதே கிருஷ்ணன் கதையை, சிற்சில குறிப்புகளை சேர்த்து முற்றிலும் நாம் தவறவிட்ட கோணங்களை எடுத்து காட்டும் புத்தகம் இது.சம்பவாமி யுகே யுகே “ என்பதற்கு நான் மீண்டும் மீண்டும் பிறந்து வருவேன் என பொருள் கொள்ள தேவையில்லை, காலத்திற்கேற்ப என்னை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொள்ளுங்கள் என்கிறான் கிருஷ்ணன். இ.பா கட்சிதமாய் செய்து முடித்து இருக்கும் வேலை இது. பிருந்தாவனத்தில் கிருஷ்ணனின் லீலைகளுடன் தொடங்கும் நாவல் கீதையில் முடிவுறுகிறது. சம்ப்ரதாயமான நடையில் இல்லாமல் தேவையான நேரத்தில் நீண்டும், குறுகியும், முன் பின் நகர்ந்தும் கிருஷ்ணனின் வாழ்க்கை விவரிக்கபடுகிறது.


பாகவதம் என்பது கிருஷ்ணனின் வரலாறை கூறும் நூல் என வைத்து கொள்கிறேன், அது வியாசரால் சுகருக்கும், பின் சுகரால் பரிசீத்துக்கும் சொல்லபடுகிறது. .பா அதை சற்றே மாற்றி, கண்ணன் கதையை அவனே ஜரா என்ற வேடனுக்கும், அவன் நாரதருக்கும் சொல்ல, நாரதர் வாசகர்களுக்கு சொல்வதாக அமைத்திருக்கிறார். நாரதரை தேர்ந்தெடுத்ததற்கு ஒரே வரியில் பதில் சொல்லி மேலே செல்கிறார். He is the first ever Journalist.


எனது தமிழ் அய்யா, திராவிட இயக்க ஆதரவாளர், வகுப்பில் எப்போதும் அவர்  நக்கல் அடிப்பதற்கு எடுத்து கொள்ளும் கருப்பொருள் கிருஷ்ணன் தான். நினைத்து பார்கையில் வீடு கடிகாரத்தில் குழல் சுமந்து மோன நிலையில் இருக்கும் கிருஷ்ணனை விட, சட்டமிட்ட புகைபடத்தில் புன்னகை செய்யும் கிருஷ்ணனை விட, தமிழ் அய்யா எடுத்து காட்டியவன் மிகுந்த நெருக்கமாக தோன்றுகிறான். வீட்டில் பானை பானையாய் வெண்ணை இருக்க, ஏழை வீட்டில் திருடி தின்று அவர்களை செல்லமாய் கடிந்து கொள்ள வைத்த கிருஷ்ணன், இளம் பெண்ணின் வளவியை கழற்றி தானமாக கொடுத்துவிட்டு இல்லையே என அழகு காட்டியவன் எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களின் ஆடையை களவாடி ரசித்திருந்தவன். அதை என் தமிழ் அய்யா, “Eve Teasing” என்றார், நாரதர் இப்படி சொல்கிறார்," நம் உடலை கண்டு நாமே வெட்கப்பட வேண்டியதில்லை. நம் உடலை கண்டு நாமே வெட்கப்படும் போதுதான், மனத்தடைகளும் மனக் களகங்களும் ஏற்படுகின்றன, Strip Teasing Industryயின் மூலதனமே இதுதான் தெரியுமா ?” என்கிறார்.



கண்ணனை பற்றி விவரித்து கொண்டே வரும் .பா சட்டென்று தாவி ஒரு ஆங்கில ப்ரோயகத்தில் பல இடங்களை முடித்து வைக்கிறார். உலக இலக்கியங்களில் காண முடியாத பன்முக தன்மை கொண்டவன், Unpredictable , நாயகன் நாயகி பாவத்திற்கு ஊற்றுக்கண் (bridal Mysticism) , Corporate CEO, Most flexible Character. சற்று பிசகினாலும் மேஜர் சுந்தராஜனை நினைவுபடுதிவிடும் பகுதிகள், ஆனால் தேவையான இடத்தில மட்டும் உபயோகபடுத்தி அனாயசமாக நகர்ந்து செல்கிறார்.


பிருந்தாவனத்தில் ஆரமித்து குருஷேச்த்ரதிரம் வரை நீளும் கிருஷ்ணனின் வாழ்வில், அவன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியபடியே வருகிறான். எதிராளிகளின் சூழ்ச்சிக்கு தகுந்தாற்போல் அவன் பாதையை மாற்றி போரிடும் போதும், தூதுவனாக செல்லும் போதும், இல்லை துரியோதனன் - பீமன் மல் யுத்தம் போதும் அவனுக்கு தர்மம் என தோன்றியதே செய்கிறான். அவன் மேல் வெறுப்பை அள்ளி வீசும், பலரை நாவல் நெடுகிலும் காண முடிகிறது. ஆனால் எந்த பெண்ணும் அவன் மேல் கடைசி வரை வெறுப்புடன் இருக்க முடிந்ததில்லை என்பதையே பார்க்க முடிகிறது. ஒவ்வொருவரின் ஆழ்மனதில் அடையபடாத இலட்சியங்களோ கனவுகளோ இருக்கும் அவற்றின் ஒட்டு மொத்த உருவகம் தான் கிருஷ்ணன். குறிப்பாக சொல்ல போனால், அடக்கி ஆளப்பட்ட ஆயர்குல பெண்களாகட்டும் இல்லை சத்ரியகுல பெண்கள் ஆகட்டும், எல்லோருக்கும் அவர்களது கனவின் காதலன் தான் கிருஷ்ணன்.


நாவலில் மைய சரடாக ஊடாடும் விஷயம் கிருஷ்ணனுக்கு பெண்கள் மேல் உள்ள காதலும், அவர்கள் அவன் மேல் கொள்ளும் நம்பிக்கைகளும். க்ருஷ்ணனைவிட எட்டு வயது மூத்தவளான ராதா அவன் குழலில் இசையாய் நுழைகிறாள், பிராமணர்கள் செய்யும் தவத்தை குறுக்கிட்ட போதும் அந்த குல பெண்கள் அவனுக்கு உணவு படைகின்றனர், அவன் மேல் உள்ள காதலால் அவன் சொல் கேட்டு பாண்டவர்களை மணக்கிறாள் பாஞ்சாலி, துரியோதனின் மனைவி "போர் வராமல் பார்த்து கொள் கிருஷ்ணா" என்கிறாள். எல்லா வற்றிற்கும் மேலாக ராதேயன் காலத்தில் மாண்டு வீழ்ந்த பின், அவன் மனைவி முதல் கேள்வி கிருஷ்ணனை பார்த்துதான் கேட்கிறாள், "என் கணவன் யார் என்று தெரிந்து இருந்தும், நீ என் என்னிடம் சொல்லவில்லை?" என்று உரிமையோடு.


முள் படுக்கையில் வீழ்ந்திருந்த பீஷ்மர், சிகண்டியை தன் முன் நிறுத்தியது போர் தர்மமா? என வினவுகையில். பிரம்மச்சரியம் மற்றும் ராஜ விசுவாசம் தந்த மமதையில், அரச குல பெண்களை அவர்கள் விருப்பம் இல்லாமல் கவர்ந்து வந்து அரசனுக்கு மனம் முடித்து வைத்தது எந்த வகையில் தர்மம் என்கிறான். அதே போல அவனது “Political Moves “அனைத்தையும் உணர்ந்தவர்கள் பெண்களாகவே இருகிறார்கள். உதாரணத்திற்கு, துரியோதனின் மனைவி பானுமதி, கிருஷ்ணன் மேல் மிகுந்த பாசம் உள்ளவள். நாட்டை எப்படியாவது தன் கணவனுக்கே வாங்கி தந்து விடு என அவனிடம் ஏற்கனவே கேட்டு இருக்கிறாள். இந்த நிலையில், வனவாசம் முடித்து வந்த பாண்டவர்களின் அராசாட்சியை திரும்ப பெற தூது செல்ல கிருஷ்ணன் பணிக்க படுகிறான். அவன் மனதை சரியாக உணர்ந்த  பாஞ்சாலி மட்டும் தான் முன் வந்து, "அவர்களுடன் பேசுகையில் பானுமதியை நினைக்காமல் இரு, என் கூந்தல் என்னும் முடியபடவில்லை" என்பதை நினைவூட்டி செல்கிறாள்.


அதே போல பிதமாகர் பீஷ்மரின் பெருமையையும், கர்ணனின் (ராதேயன்) உயர்வையும் அவன் எடுத்து சொல்லும் விதம் அழகாக புனையப்பட்டுள்ளது. போர் முடிந்து, கர்ணன் தங்கள் அண்ணன் என்பதை தெரிந்த பாண்டவர்கள், கிருஷ்ணன் துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்ட,

"உலக சரித்திரத்தில் மகோன்னதமான மகாபுருஷர்களின் கதைகளை பார்க்கும் பொது அவர்கைளை சுற்றிக் கண்ணுக்கு புலப்படாத ஒரு துன்பியல் வலை சூந்திருப்பதை உணரலாம். அவர்கள் விதியின் குழந்தைகள். கர்ணன் அத்தகையவன், அவன் பாண்டவர் பக்கம் நின்றிருந்தால் என்னையே குற்ற உணர்வுக்கு ஆளாக்கிய ராதேயனாக ஆகியிருக்க முடியாது. இதை உணர்த்தவே அவனை பற்றிய உண்மையை மறைத்தேன். இந்த பாரத போரில் இருவர் தாம் விஸ்வரூபம் எடுத்து என் முன் நிற்கின்றனர். பீஷ்மர்! ராதேயன்!. இவர்களில் பீஷ்மரை விட உயர்ந்தவன் ராதேயன்என்கிறான்.


மேலும் நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான வரலாறும் கூறபடுகிறது, ஆதலால் மகாபாரத அல்லது கிருஷ்ணன் கதை அதிகம் தெரியாமல் நாவலை படித்தாலும் புரியும் விதத்தில் எழுத்தப்பட்டுள்ளது. நான் படித்த நல்ல தமிழ் நாவல்களில் "கிருஷ்ணா கிருஷ்ணா" ஒரு சிறப்பான இடத்தை பெரும். சரளம், ஆழம் இரண்டும் அரிதாக கை கூடி வரும் படைப்புகளில் இது ஒன்று. ஏற்கனவே, .பாவின் "ஹெலிக்காப்டர்கள் தரை இறங்கி விட்டன" படித்திருக்கிறேன். டெல்லியை கதைகளனாய் வைத்து புனையப்பட்ட ஒரு நல்ல நாவல். ஆனால் இது அவரது ஒரு சிறந்த ஆக்கம் எனலாம்.


கிருஷ்ணன் கதையை ஜரா என்ற வேடன் நாரதரிடம் சொன்னதை, நான் உங்களிடம் சொல்லி விட்டேன். நீங்களும் படித்து பார்த்து உங்களுக்கான கிருஷ்ணனை உருவாக்கி கொள்ளலாம். சம்பவாமி யுகே யுகே!



கிழக்கு பதிப்பகம் 
விலை. ரூ. 90

Udumalai.Com: http://tinyurl.com/2fppbqq

7 comments:

  1. இந்திரா பார்த்தசாரதி அவர்களின் பிறந்தநாளில் ,இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் என்று வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. thanks for sharing. Read Osho's books on Krishna.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்று விஜயன்..
    அவரது மற்ற எழுத்துக்களையும் வாசிக்க தூண்டும் புத்தகம். அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ராம்ஜி..

    ஓஷோவின், "தந்த்ரா" படித்து உள்ளேன். கிருஷ்ணரை பற்றிய புத்தகத்திற்கு பெயர் என்ன? கிருஷ்ணாவேவா?

    ReplyDelete
  5. அன்பின் நண்பரே...



    வலைச்சரத்தில் இன்றைய எனது பகிர்வில் உங்களது சிறுகதை குறித்து பகிர்ந்துள்ளேன்.

    வலைச்சரம் பார்க்க : http://blogintamil.blogspot.com/

    நன்றி.

    நட்புடன்,
    சே.குமார்.

    http://vayalaan.blogspot.com

    ReplyDelete
  6. மிகவும் நன்றி குமார்.

    Blogintamil பயனுள்ள வலைசரமாக தோன்றுகிறது. அறிமுகத்திற்கு நன்றி. :)

    ReplyDelete
  7. "எந்த பெண்ணும் அவன் மேல் கடைசி வரை வெறுப்புடன் இருக்க முடிந்ததில்லை "

    I smiled ear to ear , reading this.:)

    Have you ever come across Indira parthasarathy's 'Sivam' ?
    tat one came in a weekly long before..

    ReplyDelete