Wednesday, September 30, 2009

கோவேறு கழுதைகள் - இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்

விடுமுறை நாட்களை செலவில்லாமல் கழிக்க எப்போதும் கிராமத்து பாட்டி வீடே உகந்தது. இன்றும் மறக்க முடியாத சில நினைவுகள் கிராமம் சார்ந்தே உருவானது. கோடை கால விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்க்கு செல்கையில் எப்போதும் கூழ் ஆக்குவார்கள். இரவு உணவு ரசம், பொரியல் என்ற எந்த ஆடம்பரமும் இல்லாமல், வாணலியில் வதக்கிய கத்தரிக்காய் கார குழம்புடன் முடிந்த விட்ட நாட்கள் தான் அநேகம். அதுவும், எனக்கு விருப்பமென பாட்டி வாணலியிலேயே சிறிது சாதம் போட்டு பிசைந்து தந்தது இன்னும் நினைவிருக்கிறது.

இரவு ஏழு மணிக்கு இருட்ட தொடங்கிய பின் அன்றைய அலுப்பு தீர தூக்கம் தழுவுகையில், ” அம்மா வண்ணாத்தி வந்திருக்கேன்” என்ற குரல் கேட்கும். அந்த இருளில் பாட்டி மெல்ல அசைந்து அசைந்து கூழ் எடுத்து வீட்டு வாசல் நோக்கி செல்வது ஓவியம் போல் மனதில் தங்கி விட்டிருக்கிறது.

அதனால் தானோ என்னவோ, இமையம் அவர்களின் “கோவேறு கழுதைகள்” படிக்க ஆரமித்த இரண்டு பக்கங்களில் முழுக்க அந்த நாவலோடு கரைந்து விட முடிந்திருக்கிறது. ஆரோக்கியம் அந்த கிராமத்து துணிகளை எல்லாம் துவைக்கும் வண்ணாத்தி. கதை ஆரோக்கியம், அவளது கணவன் சவுரி, பிள்ளைகள் ஜோசப்,பீட்டர், மேரி மற்றும் மருமகள் சகயம் ஆகியோரை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மெல்ல மாற்றங்கள் காணும் ஒரு கிராமமும், வேர்களை விட்டு செல்ல துடிக்கும் புதிய தலைமுறையும் ஆரோக்கியத்தின் பார்வையில் விவரிக்கப்படுகிறது. நாவலில் முதல் பாகம் அவர்கள் தங்கள் தெய்வமான அந்தோனியாரை பார்க்க வெளி ஊருக்கு செல்வதுடன் தொடங்குகிறது. குடும்பத்துடன் ஊருக்கு செல்ல அவள் ஊரிலுள்ள மக்கள் அனைவரிடமும் சம்மதம் பெறும் காட்சிகள் தொட்டு செல்லப் பட்டுள்ளது. நேரடியாக எந்த அவலமும் சித்தரிக்கப் படாமலேயே, அந்த இடங்களில் இரந்து வாழ வேண்டிய ஆரோக்கியம் குடும்பத்தின் நிலை சொல்லப்பட்டு விடுகிறது.

இயல்பான சித்தரிப்புக்களும், யதார்த்தமான நிகழ்வுகளும் இணைந்து ஒரு அசல் வாழ்வு கண் முன் நிறுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, நாவலின் இரண்டாம் அத்தியாயத்தில், இறந்து போன ஒருவருக்கு சவுரி பாடை அமைக்கும் காட்சிகள் விளக்கப்படும் இடம். அதே போல் ஆரோக்கியம் மற்றும் மேரி இடையேயான உறவும், மேரி மேல் அவள் கொள்ளும் பாசமும் சொல்லப்படும் இடங்கள் அழகானவை. மேரி கோவித்து கொண்ட ஒரு கணத்தில் உவமை இப்படி வருகிறது, “நல்ல பாம்பாட்டம் மூஞ்சிய தூக்கி வக்சுக்கிறா?”

காலையில் வீடுகளுக்கு சென்று துணி எடுத்து வருதல், இரவு சட்டியை தூக்கி கொண்டு அங்கு சோறு வாங்க போதல் என நீள்கிறது அந்த வாழ்க்கை. முதன் முதலில் இந்த வாழ்க்கைக்கு உட்படுத்தபடுகையில், பீட்டர் ஆரோக்கியத்திடம்,

” ஏம்மா நாம்ப ராச்சோறு எடுக்காம இருக்கக் கூடாதா?” என்கிறான்.

ஊரில் உள்ள பசங்க எல்லாம் ராச்சோறு என கிண்டல் செய்வதை அவன் கூறும் இடமும், ” மத்தவுங்க ஊடுமாரி நமூட்ட்லியும் சோறாக்கு” என கூறும் இடமும் அழுத்தமானவை.பல சமயங்களில் ஆரோக்கியம் படும் ஆற்றாமையும் சோகமும் எளிய வார்த்தைகள் கொண்ட பாடல்களாய் உருபெறுகிறது. தன் மகன் அவன் மனைவியின் சொல் கேட்டு நகரத்திற்கு சென்ற பின், தன்னை காப்பாற்றுவான் என நம்பிய அவன் விட்டு சென்ற துயரை

பச்சக் கிளி வளர்த்தன் - அது

பறக்கையிலே தப்பவிட்டன்,

குஞ்சுக் கிளி வளர்த்தன் - அது

கூவையிலே தப்பவிட்டான்

என புலம்புகிறாள்.

அதே போல் நாவலில் ஆரோக்கியம் அந்த ஊரிடம் கொண்ட பற்றும், ஊர் மக்கள் மீது கொண்ட பாசமும் அசலானவை. மாலை நேரத்தில் வீடுகளில் அமர்ந்திருக்கும் ஊரார்களை வார்த்தைகள் மூலம் இணைத்து போகிறாள். ஊரிலுள்ள எல்லார் மேலும் அவளுக்கு இணக்கம் இருக்கிறது. கடைக்கு சென்று வீடு திரும்புகையில் எதிர்படுபவர்களிடம்,

” அட அந்தோனியார, இம்பூட்டு எலப்பாயிருக்கீங்களே, சொவமில்லியா?

“இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமீ”

“ உங்க பற வண்ணாத்தி சாமீ” என சொல்லியபடியே செல்கிறாள்.

மெல்ல மெல்ல அந்த ஊர் தன் நிலை மாறும் இடமும், அந்த மக்கள் படும் மாற்றங்களும் ஆரோக்கியத்தின் பாடல் வழி வெளிபடுகிறது.

வாவுக்கும் அஞ்சவில்ல

சாவுக்கும் அஞ்சவில்ல

சமாதிக்கும் அஞ்சவில்ல

சமாதிக்கும் அஞ்சவில்ல - பாயிம்

சனங்களுக்கு அஞ்சனனே!

தலித் ஆக்கங்களில் மிக முக்கியமான நாவலாக கருதப்படும் இந்த நாவல் 1984ல் வெளியானது. ஆங்கிலத்தில் “Beasts of Burden ” என்ற பெயரில் வெளியாகி பரவலான வாசக கவனத்தை பெற்றது. க்ரியா பதிப்பக வெளியீடான இந்த நாவல் தமிழ் நாவல்களில் மிக முக்கியமான யதார்த்தவாத நாவல்.

Friday, September 25, 2009

என் பெயர் ராமசேஷன் - பிம்பங்களை களைந்தபடி

தூசு படாமல் வளர்ந்து முதன் முதலில் இளைஞனாக இந்த சமூக கட்டமைப்பில் நிறுத்தபடுகையில் தனது தனித்தன்மை பற்றிய கேள்வி வருகிறது. இந்த அமைப்பில் தன்னை பொருத்தி கொள்வது பற்றிய தன்னுணர்வு தலை தூக்க தொடங்குகிறது. தமது உயரத்திற்க்கோ, நடைக்கோ, பழக்கத்திற்கோ ஏற்றார் போல் இல்லாத இந்த அமைப்பைப் பற்றிய சலிப்பு உருவாகிறது. தனது பாதையை முடிவெடுப்பது பற்றிய கனவுகளும், அது தரும் நிச்சயமின்மையும் தொடர்ந்து பயமுறுத்த தொடங்குகிறது. இது வரை குழந்தை என சொல்லி வந்த வீட்டில், அவனை பற்றிய எதிர்ப்பார்ப்புகள் மாறுகின்றன.

இந்த நிச்சயமின்மை தரும் பதற்றம் சமூகத்தை பற்றிய கோபமாகவும், மேலான ஒரு நாட்டை பற்றிய கனவாகவும், ஒரு வகையில் காதலாகவும், சில சமயம் காமமாகவும் வெளிப்படுகிறது. ஏதோ ஒரு அலுவலகத்தில் தன்னை பொருத்தி கொண்டு திருமணம் செய்து கொள்ளுதல், வேறு தளத்திற்கு நகர்த்தி ஒரு தப்பித்தலை உருவாக்குகிறது. கழிந்து விட்ட அந்த இளமையும், அது தந்த வடுக்களும், அந்த போராட்டமும் மெல்ல மெல்ல தண்ணீரில் இறங்கும் கல்லை போல் மனதின் அடி ஆழத்திற்கு செல்கின்றன. தவிர்க்கப்பட்ட காதலும் அதன் நினைவுகளும் அடி நாக்கில் ஒட்டி கொள்ளும் காபியின் சுவை போல நம்மோடு ஒட்டி கொள்கிறது.

1980 களில் முதலில் உருவாக தொடங்கிய ஒரு விஷயம் Prolonged Adolescence . தமது முந்தைய தலைமுறையை விட ஒரு நீண்ட இளமை பருவத்தை கழிக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது. 18 வயதிலேயே திருமணம் என்ற நிலை மாறி, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் அதை 22-24 வரை உயர்த்தி இன்று 27-30 வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது . அப்படி எண்பதுகளில் வாழ நேர்ந்த இளைஞர்களை ராமசேஷன் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் சித்தரிக்கும் நாவல், ஆதவனின் “என் பெயர் ராமசேஷன்”.

1980 களில் வெளி வந்த காலம் முதல் தீவிரமான வாசிப்புக்கு உள்ளாகி வருகிறது “என் பெயர் ராமசேஷன்”. இந்த நாவல் இரண்டு பாகமாக பிரிக்கப் பட்டுள்ளது.. முதல் பாதியில் ராம்சேஷ் அவனுடைய அப்பா, அம்மா மற்றும் தங்கையின் அறிமுகம். அவன் கல்லூரியில் சேர்வது, அங்கு அவனுக்கு கிடைக்கும் இரண்டு நண்பர்கள் ராவ் மற்றும் மூர்த்தி. ராம்சேஷ்க்கும் ராவின் தங்கை மாலவிற்குமான காதல். நீண்ட நாள் பார்க்காதிருந்த பெரியாப்பவை சந்திப்பது ஆகியவை விவரிக்கப்படுகிறது. என்னளவில் மிகவும் கவர்ந்த இரண்டாம் பாதி, கலை, சினிமா, காதல் அதை ஒட்டி அணியப்படும் பிம்பங்கள் ஆகியவை ராமசேஷின் பார்வை மூலம் விளக்கப்படுகிறது.காதலைப் பற்றிய பார்வைகள் மூன்று வெவ்வேறு காதல்கள் மூலம் முன் வைக்கப்படுகிறது. ஒன்று ராம்சேஷ் மற்றும் அவனது வசதி படைத்த நண்பனான ராவின் தங்கை மாலாவிற்குமானது. இரண்டு வெவ்வேறு பொருளாதார பின்னணிகள் கொண்ட அவர்களது எண்ணங்களும், அது அவர்களுக்கு இடையேயான சம்பாஷனைகளுடே பிரதிபலிப்பதும் மிக நேர்த்தியாக விவரிக்கப்படுகிறது. ராம்சேஷின் தேவைகள் முடிந்த பின் அவளை பற்றி அவள் மேல் ஒரு சலிப்பு வருகையில், அவளை பற்றி சொல்கையில்,

“அவளுடைய கேள்விகள் பலவற்றில் ‘என்னுடைய கீழ்மட்டத்துச் சூழலை‘ நாசூக்காகச் சீண்டுகிற பாவம் தொனிப்பதாக எனக்குத் தோன்றும் . அதாவது என் எல்லைகள் ராகம், தாளம், பல்லவிக்குள்ளும் சட்னி சாம்பாருக்குள்ளும் அடங்கிவிடுகிறவை. அவள் தொட்டிலில் கிடந்தபோதே சாச்சாச்சாவுக்குக் காலை உதைத்தவள், ஃப்ரூட் ஜெல்லியை நக்கினவள்… நான் இதேபோல, வேறு துறைகளில் அவளைவிட அதிகமாக எனக்கிருந்த பொது அறிவைப் பயன்படுத்தி அவளை மடக்க முயன்றால், அவள் உடனே தளுக்காக சம்பாஷணைத் தொனியை மாற்றி என்னை ஒரு dry professional type ஆக உணரச் செய்வாள். அப்பாவுடன் வெளியே போய்விட்டு வந்த குழந்தை தான் கண்ட அதிசயங்களை விவரிக்கும்போது அம்மா அதனிடம் காட்டுவது போன்ற ஒர் பாசாங்கு ஆர்வத்தையும் பரபரப்பையும் காட்டி, ‘என் கண்ணு!‘ என்று தட்டிக் கொடுப்பாள். குழந்தைத்தனமானவள், பக்குவம் பெறாதவள் என்று நான் அவளைச் சொன்னால் உடனே தாத்தா, ஹாஸ்ய உணர்ச்சியில்லாத ஜடம், என்று அவள் என்னைச் சொல்லுவாள். இதெல்லாம் எனக்குச் சலித்துப் போகத் தொடங்கியிருந்தது.”

மற்றொன்று மாலா உடனான காதல் முறிந்த பின், கல்லூரி தோழி பிரேமாவுடனான காதல். சற்று Intellectual ஆன அவளுடனான காதலில், அவர்கள் இருவரது Complex ம் மோதி கொள்ளும் இடங்களும், அவளை பற்றிய அவனது புரிதல்கள் உருவாக்கும் பிரச்சனைகளும் மிக விரிவாக பேசப்படுகிறது.

அடுத்து மிக முக்கியமான, மேலும் பேரு வாரியான காதல்களை பற்றிய கேலி ஆகியவை மூர்த்தி காதல் மூலம் விவரிக்கப்படுகிறது. மூர்த்தியின் காதலை பற்றி கூறுகையில்,

மூர்த்தி பாணி காதலுக்கு ரசிகர்கள் மிகவும் தேவைப்பட்டார்கள். நான் இன்று அவளை அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன், அவள் என்னைப் பார்த்து சிரித்தாள் அல்லது சிரிக்காமலிருந்தாள், நான் பார்த்த சினிமா போஸ்ட்டரையே அவளும் பார்த்தாள். இன்று அவள் மாட்சிங்காக ட்ரஸ் பண்ணிக்கொண்டிருந்தாள் என்கிற ரீதியில் அவன் பேசுவதை பிறரை கேட்க்கச் செய்வதன் மூலமாகவே அவன் ஒரு கதாநாயகனாக உணர்ந்தான்.

அதே போல, ராம்சேஷும் ராவும் தன் அப்பாக்களை மனதில் வைத்து உரையாடும் இடமும், ராம்சேஷ் அவனது பெரியப்பாவை சந்திப்பது மற்றும் இவன் முன் அவன் பெரியப்பா தான் ஒரு நவநாகரீகமானவன் என காட்டி கொள்ள முயலும் இடங்களும் மிக முக்கியமானவை. ராம்சேஷுக்கு தனது அப்பாவை பற்றிய புரிதல் உருவாகும் இடம் மிக மென்மையாக விவரிக்கப்பட்டுள்ளது. நாவலின் ஆரம்பத்தில் அவரை பற்றிய ஒரு மெல்லிய வெறுப்பும், ஏளனமும் கொண்ட அவனது பார்வை, அவரை அவன் விடுதியில் சந்திக்கையிலும், பின் பூங்காவில் சந்திக்கையிலும் மெல்ல உரு மாறுகிறது. ஒரு வகையில் எதிர் காலத்தில் அவனது வாழ்க்கை முறைக்கான Templateஒ அவரது வாழ்க்கை என என்னும் படி படைக்கப்பட்டுள்ளது.

இந்த நாவலை போலவே, இளைஞன் என்று உணர்ந்திருந்தவன் மெல்ல ஒரு முதிர்ச்சிக்கு வந்து தன் நிலையினை உணர்ந்து கொள்ளுதல் பற்றிய சுஜாதாவின் “நிலா நிழல்” என்னும் நாவல் எனது விருப்பத்திற்கு உரியது. திருச்சியில் இருந்து கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு அப்பாவிடம் பொய் சொல்லி திரும்பும் ஒரு இளைஞனைப் பற்றியது “நிலா நிழல்”.

அலைக்கழிக்கப்படும் இளமையின் வண்ணங்களை ஒரு சேர சொல்லும் இந்த நாவல் ஒரு அழகிய சித்திரத்தை போன்றது.

நூல்: என் பெயர் ராமசேஷன்

பதிப்பகம்: உயிர்மை

விலை: ரூ 120