Wednesday, February 25, 2009

மீண்டும் பள்ளிக்கு…Airtel Super Singerல் நடுவர்கள் பேசும் Lower Registry, Higher Registry,சரணம் பல்லவி சமாச்சாரங்கள் புரியாதபோதும், இசையருவியும் (இப்போ சிரிப்பொலியும்), Sun Musicம் (இப்போ அதித்யாவும் -முதல்வர் பேரன்?!! ) மாத்தி மாத்தி மொக்கை போட்டு கழுத்தருக்கையில் என் அறைக்கு சென்று படுத்து விடுகிறேன். இந்த சமயங்களில் எல்லாம் சில எண்ணங்கள் Brownian Motion போல் மோதி கொள்கின்றன. பள்ளியில் நடந்த சில நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நினைவு வருகிறது,


அத்தனை நாள் என்னை திரும்பி கூட பார்க்காத அந்த 8 ஆம் வகுப்பு தோழி (;-)) , அந்த yellow பாவாடை அணிந்த அன்று மட்டும் ஏன் என்னை பார்த்து மெலிதாய் சிரிக்க வேண்டும்?.அத்தனை நாள் வண்ண வண்ண சேலை அணிந்து வந்து ஆசிரியைகள் எல்லாம் என் தீடீரென்று ஒருநாள் காவி நிறத்திற்கு மாறி போனார்கள்?.முக்கியமாக சில தமிழ் வகுப்பு சுவாரசியங்கள்…


8 ஆம் வகுப்பில் தமிழில் கடிதம் எழுதும் பயிற்சியில் மதிற்ப்புக்குரிய ஐயா(Iyya) என்பதை மதிற்ப்புக்குரிய ஜயா(Jeya) என என் நண்பன் எழுதியதை தி. மு. க விசுவாசியான தமிழ் அய்யா சிரித்து கொண்டே வகுப்பில் சொன்னார்.


“பிசிராந்தையார் தன் தலை முடி நரையாதிருக்க கூறிய காரணம் என்ன?” என்பதற்கு, “செம்பருத்தி தழையை எடுத்து வெயிலில் உலர வெய்து, நன்றாக அரைத்து தண்ணியோ, தயிரோ (மேலும் மினு மினுப்புக்கு பன்னீர் சேர்க்கலாம்!) போட்டு குழைத்து வாரம் மூன்று முறை வீதம் ஒரு மண்டலம் தடவி வந்ததால் தன் தலைமுடி” (மற்றதை அப்படியே கேள்வியில் இருந்து பொருத்தி கொள்ளவும்), என பதில் எழுதிய நண்பனை ஏண்டா இப்படி எழுதின? என்றேன், ” டேய் நேத்து படிக்கும் போது இந்த கேள்வி வந்ததாடா, பதில் பார்த்தா கோனார் Notesல ரொம்ப பெருசா இருந்ததா, பக்கத்துல அம்மா இருந்தாங்கால அவங்ககிட்ட கேட்டான், அவங்க அப்படியா தெளிவா சொன்னாங்க” என்று சிறுவர் மல்ர் முதல் பக்கத்து குழந்தையை போல் முகத்தை வெய்த்து கொண்டு சொன்னான். அவன் பெயர சொல்ல மறந்துடனே கரிகாலன்!!


அரிசந்திரன் தன் மனைவியை செல்வந்தாரிடம் விற்க முற்படுகையில் செல்வந்தன் அவனுக்கு இறுத்த பதில் யாது (பேரம்)? என்ற கேள்வி தமிழ் செய்யுள்ள இருக்கு (என்ன கொடுமை சார் இது?). ஏற்கனவே பிசிராந்தையார் பத்தி படிச்சு கடுப்பல இருந்த கரிகாலன், இந்த கேள்வியா பாத்துட்டு பொங்கி எழுந்தான், “பொன்னும் பொருளும் நிகராகாத என் மனைவியை” என அரிசந்திரன் சொல்வதாக ஆரம்பித்து, “இவளுக்கு ஒரு நயா பைசா கூட தர மாட்டேன், உன்னால முடிஞ்சதா பாத்துக்கடா” என்று சென்னை தமிழில் இறங்கி ஒரு சங்க கால பிரச்சனையை தீர்த்து வெய்த்து இருந்தான்.


இதன் உச்சகட்டமாக, “இந்தியா இயற்கை வளம் மிகுந்த நாடு என்பதை நிறுவு” என்னும் கேள்விக்கு, எங்கோ பட்டிமன்றத்தில் விளையாட்டாக பேசியதை நம்பி அவன் எழுதி இருந்த பதில் இது,


“இந்தியாவில் பல இயற்கை வளங்கள் நிறைந்துள்ளது, காடுகள், மலைகள், ஆறுகள் என இயற்கை வளம் மிகுந்த நாடு இந்தியா. அது மட்டும் அல்லாமல் செடிகள், கொடிகள், காய்கள், கனிகள் செழித்து வளரும் நாடு இந்தியா”….. இப்படி அவனுக்கு தெரிந்த காய் கனி வகைகளை பட்டியலிட்டு இரண்டு பக்கங்கள் எழுதிய கட்டுரையை இப்படி முடித்திருந்தான், “இவ்வாறு பல இயற்கை வளங்களை இயற்கையாகவே பெற்றுள்ள இந்தியாவை இயற்கை வளம் மிகுந்த நாடு என்று கூறுவது இயற்கைதானே?”.


சமீபத்தில் ஊருக்கு செல்கையில் அவனிடம் இந்த பிசிராந்தையார் விஷயத்தை கேட்டேன், மெல்ல சிரித்து விட்டு, “சுத்தி இருக்கவங்க நல்லவங்கனா எப்படிறா முடி நரைக்காம போகும், எனக்கு இன்னும் சந்தேகம்தான் அவர் கண்டிப்பா செம்பருத்தி தழைய தான் Use பண்ணி இருப்பாரு” என்றான், அவனுக்கு திருமணம் முடிந்து விட்டு இருந்தது!!.

ஒரு ஊர்ல ஒரு தமிழ் அய்யா

எங்கள் Matriculation பள்ளியில் ஆசிரியரை "அய்யா" என அழைக்கும் பழக்கம் பள்ளிக்கு தமிழ் அய்யா வரும் வரையில் கிடையாது. 40 ஆண்டு கால அரசு மேனிலை பள்ளியின் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்தார் தமிழ் அய்யா. சற்று மாநிறம், 5 1/2 அடி உயரம், Six Packs கொண்டதலை முடி( படிக்கட்டு போல் வாரி இருப்பார்), வெள்ளை வேட்டி, சட்டை,பேராசிரியர் அன்பழகன் போல் கண்ணாடி, பார்த்த உடன் வசீககரிக்கும் உதட்டோர ஜெமினி கணேசன் சிரிப்பு இவைதான் தமிழ் அய்யா. எங்கள் பள்ளிக்கு "நல்ல" தமிழ் ஆசிரியர் இல்லை என்னும் குற்றம் அவரால் தீர்ந்தது.


9 ஆம் வகுப்புக்கு மேல் தான் அவர் தமிழ் சொல்லி குடுப்பார். ஆறாம் வகுப்பு படிக்கையில் அதுவரை "Good Morning Miss/Sir" சொல்லியே பழகிய எனக்கு அவரிடம் "வணக்கம் அய்யா" சொல்ல வேண்டும் என ஆவல் வந்ததும் அப்படி ஒரு நாள் சொல்கையில் அவர் சிரித்து எனக்கு திரும்ப வணக்கம் சொன்னதும் எனக்கு அவரை பிடித்து போனது.அது நடந்து மூணு வருசம் ஆகி இருந்தது இப்போது தமிழ் அய்யா எனக்கு இலக்கணம் நடத்தி கொண்டிருந்தார்.அவர் இலக்கணம் மற்றும் செய்யுள் நடத்தும் விதம் மிக புதுமையானது, இன்று வரை அவர் நடத்திய பல விதிகளும், பாடல்களும் நினைவில் உள்ளது.


ஒரு நாள் தமிழ் பெயர்கள் பற்றி பேசிகொண்டிருந்தவர் தீடீரென்று ரம்பா, நக்மா, சரோஜா, ராதிகா,பூமிகா, ஜோதிகா, கனகா அவங்க அம்மா தேவிகா என நடிகைகள் பெயரை பட்டியலிட ஆரம்பித்து "ஆ" கார ஒலியுடன் பெயர்கள் முடிவது தொல்காப்பிய இலக்கண படி தவறு என முடித்தார்.காரணப்பெயர் பற்றி பேசுகையில், "கான்" (காடு) சென்று "மான்" பிடித்து "சல்" என சாப்பிடடதால் அவன் "சல்மான்கான்" என்றார்.


தமிழ் அய்யாவுக்கு திருக்குறள் மீதும் கம்ப இராமாயணம் மீதும் மிகுந்த ஈடுபாடு உண்டு. "தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ" என கம்பன் தன் உச்சத்தை அடைந்த இடத்தை அவர் மூலமே அறிந்தேன்.


"கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள"


என்னும் குறல் மூலம் இன்பத்துபாலை அறிமுகபடுத்தியவரும் அவரே.


தன் 40 வருட கால அரசு பள்ளியின் வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர் விடுப்பு எடுக்கவில்லை. தன் மகனுக்கு திருமணம் நடந்த அன்றும் கூட 9.30 மணிக்கு பள்ளிக்கு வந்துள்ளார்.அவருக்கு விருதுகள் பாராடுக்கள் எதுவும் கடைசி வரை வழங்க படவில்லை. நான் பள்ளி படிப்பை முடித்து வருகையில் அவருக்கு 49 ஆண்டு ஆசிரியர் பணி நிறைந்திருந்தது. விடை பெருகையில் அவரது 50 ஆண்டு கால ஆசிரியர் பணியை பெருமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் எந்த வித சத்தமும் இல்லாமம் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றார்.


கல்லூரியில் சேர்ந்த பிறகு கடைக்கு செல்வதானால் அவர் வீடு இருக்கும் தெரு வழியாகவே செல்வேன், மீண்டும் அந்த "வணக்கம் அய்யா" சொல்வதற்காக ஓரிரு முறை தென்பபட்டார். கல்லூரியில் சேர்ந்து கவிதை போட்டியில் பரிசு பெற்ற உடன் அவரது வீட்டிற்கு சென்றேன். உடல் நலிவு அடைந்திருந்தார்."கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்று உள்ளேன், நீங்கள் தான் காரணம்" என்றேன்


"உன் திறமை" என்று சொல்லி மெலிதாய் சிரித்தார். உடலை பார்த்து கொள்ளுங்கள் என்றேன். மெல்ல என் கையை பிடித்து லேசாக கண் கலங்க, "இப்போது எல்லாம் முன்ன மாதிரி நடக்க முடியல , சரியா படிக்க முடியல" என்றார். கைகள் லேசாக நடுங்கியது. பின்பு அவரிடம் விடை பெற்று வந்தேன். பின்னர் ஓரிரு மாதங்களில் "எல்லாரையும் போல அவரும் இறந்து போனார்" என குறுஞ்செய்தி வந்தது. நான் போக வில்லை……

Friday, February 20, 2009

விக்ரமாதித்யன் - அலைந்து திரியும் கவிஞன்“விக்ரமாதித்யன் எனும் பெருநகரப் பாணன்” என்னும் எஸ். ரா வின் கட்டுரையை உயிர்மையில் வாசித்தது மூலமாகவே கவிஞர் விக்ரமாதித்யன் எனக்கு அறிமுகமனார். அதன் பின் அவரது சில கவிதைகளை படிக்க நேர்ந்தது. நவீன கவிதையின் ஒரு சிறந்த ஆளுமையாக அறியப்படும் விக்ரமாதித்யன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகள், கவிதைகளை பற்றிய கட்டுரைகள் எழுதி வருபவர். அவரை பற்றி அறிய விரும்புவர்களுக்கு எஸ். ரா வின் கட்டுரை மிக உதவியாய் இருக்கும். நான் இவரது கவிதைகளின் முதல் நிலை வாசகனே, இவரது புத்தகங்களை இன்னும் படிக்க வேண்டி உள்ளது.

இனி அவரது சில கவிதைகள்…


கூண்டுப் புலிகள்
__________________
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்துக்கு இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்
—————————————————————————————————————————–


குடும்பத்தை பிரிந்து வேலை தேடி வெளியூர் செல்லும் ஒரு மனிதனின் பார்வையில் விரியும் “பொருள்வயின் பிரிவு” என்னும் கவிதை எளிய சொற்களால் மிக ஆழமான சலனங்களை உருவாக்கியது..

பொருள்வயின் பிரிவு
_______________________

அன்றைக்கு

அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை

நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது

சாரல் மழை பெய்து

சுகமான குளிர் வியாபித்திருந்தது

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்

அரவம் கேட்டு விழித்த சின்னவன்

சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது

சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்

வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்

வாசல்வரை வந்து

வழியனுப்பி வைத்தாள் தாய்போல

முதல் பேருந்து

ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்

பிழைப்புக்காக

பிரிந்தது வந்து கொண்டிருந்தேன்

மனசுகிடந்து அடித்துக்கொள்ள..
———————————————————————————————————————————
மறதியில்,

இன்று

போதையில்

செருப்பு தொலைவது மட்டும்

மாறவே இல்லை
—————————————————————————————————————————

சமீபத்தில் பா. ராகவனும் Blogல் இவரை பற்றி எழுதி இருந்தார்.
http://www.writerpara.com/paper/?p=499

விக்ரமாதித்யன் கவிதைகள், முழு தொகுப்பு, சந்தியா Rs.80
தற்போது அமிருதா பதிப்பகத்திலும் இவரது முழு கவிதை தொகுதி வந்திருக்கிறது.

Tuesday, February 17, 2009

Bicycle Theives - Vittorio De Sicaஒரு நல்ல திரைப்படம் எப்போதும் நம்முள் ஒரு அனுபவமாகவே உறைந்து விடுகிறது. சிறந்த திரைப்படங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்ந்து நம்முன் சில கேள்விகளை முன் வைக்கின்றது.அவ்வகையில் இரண்டாம் உலக போர் முடிவுற்ற சமயத்தில் 1948 ஆம் ஆண்டு வெளியாகி உலக போருக்கு பிந்தைய இத்தாலியை யதார்த்தமாக படம் பிடித்து, சில சமூக மற்றும் தனி மனித ஒழுக்கங்களை பற்றிய கேள்வியை எழுப்பியது Vittorio De Sica வின் “The Bicycle Theives”.


உள்ளது உள்ளபடி என்னும் Neo Realistic வகையை சார்ந்த இப்படம் பல சர்வதேச விருதுகளை பெற்றது. இப்படத்தில் நடித்த நடிகர்களும் சாதாரனர்களே, உதாரணமாக படத்தின் கதாநாயகன் Lamberto Maggiorani உண்மையில் ஒரு தொழிற்சாலையின் அடி மட்ட தொழிலாலியே.

படத்தின் கதை மிக எளிமையானது.Antonio Ricci என்னும் வேலை இல்லா தொழிலாளியை பற்றிய படம் இது. வேலை தேடி அலையும் Antonio Ricciக்கு ஓரிடத்தில் வேலை கிடைக்கிறது, ஆனால் அதற்க்கு அவனிடம் சைக்கிள் இருக்க வேண்டும் என்கிறார்கள்.தங்கள் திருமணத்தின் நினைவாய் உள்ள துணியை அடகு வைத்து அவன் மனைவி, அடகில் உள்ள சைக்கிளை மீட்கிறாள்.


வேலை கிடைத்த உடன் தன் கணவனுக்கு வேலை கிடைக்கும் என முன் கூட்டியே சொன்ன ஜோசியாக்காரியிடம் அவனை கூடி செல்கிறாள் அவன் மனைவி.ஆனால் நாம் நினைத்தது போல் சைக்கிள் அங்கே தொலைய வில்லை. முதல் நாள் தன் சினிமா போஸ்டர் ஒட்டும் வேலைக்கு செல்லும் அவன் அங்கு Rita Hayworthன் (Ironical!!)போஸ்டரை ஒட்டி கொண்டு இருக்கிறான். அப்போது நாம் எதிர் பார்த்த அந்த சைக்கிள் திருடு நடை பெறுகிறது.


தன் மகன் Bruno உடன் சைக்கிளை தேடி புறப்படுகிறான். அவன் தேடுதல் வழியாக அன்றைய இத்தாலியின் நிலைமை இயல்பாக பதிவு செய்யபட்டுள்ளது. திருட்டு சைக்கிளின் பாகங்களை விற்கும் இடத்தினில், அந்த சிறுவன் தங்கள் சைக்கிளின் பாகங்கள் எங்காவது தென்படுகிறதா என பார்க்கும் காட்சி அற்புதம்.
கடைசியில் எங்கு தேடியும் கிடைக்காததால் Antonio Ricci, ஒரு சைக்கிளை திருடி செல்ல முயற்சித்து மாட்டி கொள்கிறான். தன் மகன் முன்னால் தான் செய்த குற்றத்தோடு குறுகி நிற்க, அந்த சைக்கிளின் உரிமையாளன் அவனை போலீசில் ஒப்படைக்காமல், இந்த தண்டனையே அவனுக்கு போதும் என விட்டு செல்கிறான். தன் சைக்கிளை திருடியவனுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அவன் தன் மகன் உடன் செல்வதாய் படம் நிறைகிறது.Stupendous!!!


இத்திரைப்படத்தை பார்த்த Satyajit Ray வாழ்நாளில் தன்னால் இப்படி ஒரு படம் எடுக்க முடிந்தால் அதுவே தன் பெருமை என்று கூறுப்பிட்டுள்ளார். இதன் தாக்கத்திலேயே தான் “Pather Panchali” எடுத்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 |

City Lights - காதல் கணங்கள்உலகின் தலை சிறந்த இயக்குநர்களின் விருப்ப பட்டியலில் தவறாமல் இடம் பெரும் திரைப்படம் சார்லீ சாப்பிளினின் “சிட்டி லைட்ஸ்”. சார்லீயின் படங்களிலே மிக சிறந்ததென கருதப்படும் இப்படம் பேசும் படங்கள் வெளியாகி மிக பெரிய மாற்றத்தை திரை உலகில் கொண்டு வந்திருந்த 1931 ஆம் ஆண்டு மௌன படமாக வெளியாகி வெற்றி அடைந்தது. காதல், கருணை, அன்பு, சிரிப்பு என அத்தனை அம்சங்களையும் கொண்ட City Lights, காதலின் உன்னத கணங்களை உணர்த்திய படங்களில் முதன்மையானது.


படத்தின் துவக்க காட்சியில் நகரத்தின் மேயர் தலைமையில் அமைதியையும், வளத்தையும் விரும்பும் வகையில் ஒரு சிலை திறப்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது. வழக்கமான “பெரியோர்களே தாய்மார்களே”வுக்கு பிறகு சிலை திறக்க பட, அந்த சிலையில் உள்ள பெண்ணின் மடியில் தூங்கி கொண்டு இருக்கிறார் சார்லி. அதில் இருந்து இறங்க அவர் செய்யும் அட்டகாசங்கள் அழகானவை.நகரத்தின் வீதிகளில் நாடோடியாய் திரியும் Chaplin தெரு ஓரத்தில் பூக்கள் விற்கும் பார்வையற்ற பெண் (Virginia Cherill) மீது காதல் கொள்கிறார். அந்த பார்வை அற்ற பெண் அவரை செல்வந்தர் என நினைத்து கொள்ள, அவள் ஆசை படியே தன்னை செல்வந்தராக காட்டி கொள்கிறார்.
குடித்து விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஒரு செல்வந்தரை சார்லீ காப்பாற்ற அவர் மிக நெருங்கிய நண்பர் ஆகிறார் (போதை தெளியும் வரை!!!). தெளிந்தவுடன் வீட்டை விட்டு விரட்டி விடுகிறார். அவருடன் இணைந்து சார்லீ செய்யும் அட்டகாசங்கள் தொடர்ந்து சிரிப்பை வரவழைத்த வண்ணம் உள்ளது.


பின் Virginia Cherillவிற்கு வீட்டு வாடகை தர அவசரமாக பணம் தேவைப்பட அதற்கான பணத்தை புரட்ட முற்படுகையில் போலிசாரால் கைது செய்ய படுகிறார். கைது செய்யும் முன் அவளை சந்தித்து அவளின் வீட்டு வாடகைக்கும் அவள் கண் சிகிச்சைக்கும் பணத்தை அவளிடம் தந்து விட்டு வெளியூர் போவதாக சொல்லி செல்கிறார். சிறையில் இருந்து வெளி வந்த உடன் அவள் பூ விற்ற இடத்தில் அவள் இல்லாததை கண்டு வீதியில் சுற்றி திரிக்கிறார் சார்லீ.


கண் பார்வை பெற்ற அவர் காதலி அந்த வீதியின் முனையில் ஒரு பூ கடை வெய்த்து அங்கு வரும் செல்வந்தர்களில் சார்லீ இருப்பாரா என தேடி கொண்டு இருக்க, அந்த வழியில் செல்லும் சார்லீ அவளை சந்தித்து சில கணங்கள் தன்னை மறந்து நிற்கிறார். அவள் தன் பாட்டியிடம் அவன் மனத்தை நான் கொள்ளை அடித்து விட்டேன் போல் இருக்கிறது என சொல்லி சிரித்து அவரிடம் ஒரு ரோஜாவை தருகிறாள். சார்லீ அதை வாங்க மறுத்து அந்த இடத்தை விட்டு செல்கையில் அவரை தடுக்க கையை பிடிக்கையில் சார்லீ தான் தன் காதலன் என உணர்ந்து, “நீங்கள்தானா?” என்கிறாள். அதற்கு சார்லீ “உனக்கு என்னை தெரிகிறதா?” என கேட்க, இருவரின் கண்ணீர் மிகுந்த சிரிப்புடன் படம் நிறைவடைகிறது.

உன்னதத்தை தொட்ட அந்த இறுதி காட்சி திரை உலக நடிப்பில் ஒரு மைல்கள். தன்னுடைய சுய சரிதையில் தனக்கு மிகவும் விருப்பமான காட்சியாக சார்லீ இந்த காட்சியை குறுப்பிட்டு உள்ளார்.


இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 |

Saturday, February 14, 2009

The Road Home - ஒரு காதல் பயணம்
காதலில் தோற்றவர்கள் காதலிக்காதவர்கள் மட்டுமே என்னும் வைரமுத்துவின் வாக்கியத்தோடு பார்த்தால் நம்மில் காதலில் தோற்றவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கும்.Biochemical Reaction, ஹார்மோன்களின் அலைவரிசை என அறிவியல் காதலை பிரித்து போட்டாலும் அதன் புதிர் இன்னும் நமக்கு வசீகரமாகவே உள்ளது. ஆதி மனிதனிடம் இருந்த பல ஆதார உணர்ச்சிகள் இன்றைய நோக்கில் வழக்கொழிந்து இருக்கிறது. ஆனால் காதல் மட்டும் ஒவ்வொரு காலத்திலும் வார்த்து எடுக்க பட்ட வண்ணமே உள்ளது. காதலை முடிந்த வரையில் அறிவியல் நோக்கில் பார்க்க முற்பட்டத்தையும் மீறி பல கணங்களில் சிலிர்பில் ஆழ்த்தியது "தி ரோட் ஹோம்" என்னும் சீன மொழி திரைப்படம். படம் பார்த்து முடித்த சில தினங்கள் வரை காதல் என்னை சுற்றி நுரைத்து பொங்கிய வண்ணமே இருந்தது. இதற்கு முன் "Roman Holiday" படம் பார்த்த போது இப்படி ஒரு சந்தோஷத்தை உணர்ந்து உள்ளேன்.


தன் தந்தை இறந்த செய்தி கேட்டு ஒரு மலை கிராமத்தில் வசிக்கும் தன் தாயை (Zhang Ziyi) சந்திக்க வரும் மகனின் பார்வையில் விரிகிறது இந்த படம். நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனையில் இறந்திருக்கும் தன் தந்தையை தங்கள் பழங்குடி பழகத்தின் படி நடந்தே தங்கள் கிராமத்திற்க்கு கொண்டு வர வேண்டும் என்னும் ஆசையில் அவருடைய தாய் பிடிவாதமாக இருக்கிறார்.இங்கிருந்து கதை அவரின் தாயும் தந்தையும் சந்தித்து கொண்ட 1958 ஆம் ஆண்டினை நோக்கி செல்கிறது.

தன் கிராமத்திற்க்கு ஆசிரியர் வேலைக்கு வரும் Zheng Hao வை பார்த்த உடன் காதல் கொள்கிறார் Zhang Ziyi. அந்த மலை கிராமத்தில் உள்ள அந்த சிறிய பள்ளிக்கு ஒரே ஒரு ஆசிரியரான அவர் பள்ளியை சீரமைக்க கிராம மக்களின் உதவியை நாடுகிறார். அதன் படி பள்ளியை கட்டி தர ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் உதவுவது எனவும். பெண்கள் அவர்களுக்கு தேவையான உணவினை வழங்குவது என்னவும் முடிவு செய்ய படுகிறது. அதன் படி Zhang Ziyi ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவினை செய்து கொண்டு செல்கிறார் தினமும் தான் செய்யும் உணவினை அவர் சாப்பிடுவார் என்ற நம்பிக்கையில் (இது ஏப்ரல் மாதத்தில் என்னும் தமிழ் படத்தில் சுடப்பட்டிருக்கும்).


பள்ளி கட்டி முடித்த பின் ஒரு நாள் அவரை தன் வீட்டிற்கு சாப்பிட அழைக்கிறாள் Zhang Ziyi, அவரும் சம்மதித்து நாளை வருவதாய் சொல்லி செல்ல அந்த சமையத்தில் எதிர்பாரதவிதமாய் அவர் வலது சாரி இயக்கத்தினை சார்ந்தவன் என்னும் முத்திரை குத்தப்பட்டு சீன அரசாங்கத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட, அவர் வீட்டிற்கு வராமலே செல்கிறார்.


அவருக்காக செய்த உணவினை கட்டி கொண்டு அவர் போகும் வழியில் அவரை தொடர்ந்து ஓடும் Zhang Ziyi , தான் போகும் வழி எல்லாம் கண்ணீரையும் காதலையும் உதிர்த்து கொண்டே செல்கிறார். அவரை காணாமல் மனம் உடைந்து உடல் நலிவு அடைகிறாள். அவள் நிலைமை மோசம் அடைவத்தை கண்டு அந்த கிராம மக்கள் மீண்டும் அவரை தங்கள் கிராமத்திற்கு அழைத்து வர அவர் இறுதி வரை அங்கிருந்து விலகாமல் அந்த கிராம மக்களுக்கு கல்வி கற்று கொடுத்து கொண்டு இருக்கிறார்.
கதை மீண்டும் நிகழ் உலகிற்கு வர, அவரது இறுதி ஊர்வலத்தில் பனியையும் பொருட்படுத்தாது அவரிடம் கல்வி கற்றவர்கள், ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள. அவர்கள் காதலை வளர்த்த அந்த மலை பாதையின் வழியாகவே அவரது இறுதி பயணம் நடை பெறுகிறது.


எந்த ஆர்ப்பாட்டமும் அழுகையும் இன்றி மிக நேர்த்தியாக சொல்லப்பட்ட இததிரைப்படத்தில் அவருக்காக தினம் அவர் பள்ளி செல்லும் வழியில் காத்திருக்கும் இடமும், அவரை முதல் முதலில் பார்த்த உடன் அவள் கொள்ளும் அழகும், அவர் இல்லாத போது பள்ளியை அவள் அழகு படுத்தும் இடமும், இறுதி காட்சியில் அவர் நிரந்தரமாய் இல்லை என உணர்ந்து அந்த பள்ளியில் அமர்ந்து அவரின் குரலை நினைத்து பார்க்கும் இடமும் கவித்துவ எழுச்சி கொண்டவை.


ஒரு நிறைவான வாழ்வை பார்த்த அனுபவம்!!


பின் குறிப்பு:
இந்த வாரம் சனி கிழமை மாலை 6 மணிக்கு மக்கள் தொலைகாட்சியில் ஈரானிய இயக்குநர் Majid Majidன் "Baran" திரைப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது.


இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 |

Thursday, February 12, 2009

நெஞ்சம் எல்லாம் சுஜாதா - இசையின் புன்னகைகண்டிப்பாக பெயர் ராசி மட்டும் அல்ல, நான் ஒரு தீவிரமான சுஜாதா ரசிகன். பெயர் தெரிந்து சுஜாதாவின் பாடல்களை நான் ரசிக்க வில்லை. ஆனால் பல சமயம் என்னுடன் அந்தரங்கமாய் பேசிய குரல் சுஜாதா மோகனுடையது. மிக அமைதியான ஆர்ப்பபடமில்லாத குரல் அவருடையது. இரவு நேரங்களில் காதருகில் மென்மையாய் பாடும் தோழியாகவே இதுவரை நான் அவரை அறிந்துள்ளேன்.


சுமார் 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் பாடி வரும் சுஜாதா தமிழில் முதன் முதலில் இளையராஜா இசையில் காயத்ரி படத்தில் “காலை பனியில்” என்னும் பாடல் மூலம் அறிமுகம் ஆனார்.இளையராஜா அவர்களின் இசையில் சில நல்ல பாடல்கள் மூலம் அறியப்படாலும் 1992 ஆம் ஆண்டு வெளி வந்த மணி ரத்னத்தின் ரோஜா திரைப்படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் “புது வெள்ளை மழை” மூலம் மீண்டும் தன் திரை இசை வாழ்வை துவங்கினார்.


“புது வெள்ளை மழை” ரஹ்மானின் இசையையும் தாண்டி, வைரமுத்துவின் வரிகளோடு சுஜாதாவின் குரல் இணையும் இடம் அழகானது. “இது கம்பன் பாடாத சிந்தனை உன் காதோடு யார் சொன்னது” என்னும் போது ஒவ்வொரு முறையும் சிரித்து கொள்வேன். இவரது மிகவும் கவனிக்க பட்ட பாடல் ஆன “நேற்று இல்லாத மாற்றம்” இன்றும் காதலை விளக்க முயன்ற சில நல்ல பாடல்களில் ஒன்றாகவே இருகிரது. யுவன், ஹார்ரிஸ், விதயாசாகர் என பல இசை அமைப்பாளர்களிடம் பாடி இருந்தாலும் ரஹ்மானிடமே இவரது திறமை மிக அழகாக வெளிப்பட்ட வண்ணம் உள்ளது.


யுவனின் இசையில் “பூவெல்லாம் கேட்டுப்பார்” படத்தில் இவர் பாடிய “இரவா. பகலா” பாடல் மிக தனித்துவமானது. “அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு புரிந்தது புரிந்தது இன்று எனக்கு” என்று இவர் பாட ஆரம்பிக்கும் இடம் மிக அழகு.


இதுவரை இவர் பாடியததில் அதிகம் கவனிக்க படாமல் போனதும் எனது மிக விருப்பமான ஒன்றும் ஆயுத எழுத்தில் வரும் “நெஞ்சம் எல்லாம் காதல்” பாடலே. ” உன் குறைகள் நான் அறியவில்லை நான் அறிந்தால் சூரியனில் சுத்தம் இல்லை” என இவர் பாடும் வரிகளுக்காகவே அந்த பாடலை நூறு முறைக்கும் மேல் கேட்டிருப்பேன்.


கொஞ்சமாய்ட்டு சுருதி விலகுநுது என மலையாள தமிழில் வளர்ந்து வரும் பாடகர்களை Airtel Super Singeril திருத்தும் சுஜாதா சேச்சியின் சுருதி என்றும் நம் நினைவில் இருந்து விலகாதது!!

Wednesday, February 11, 2009

The Day I Became a Women - Marzieh Meshkini


Kandhahar மற்றும் Cyclist திரைப்படங்களின் இயக்குநர் Mohsen Makhmalbaf வின் மனைவி Marzieh Meshkini யின் முதல் திரைப்படம் The Day I became a Women. 2000 ஆம் ஆண்டு வெளியாகி பல சர்வதேச விருதுகளை பெற்ற இந்த ஈரானிய தேச படம் தென் ஈரானின் கிஷ் தீவில் படடமாக்க பட்டுள்ளது.அந்த தேசத்தில் வாழும் வெவ்வேறு வயதை சேர்ந்த மூன்று பெண்களை பற்றிய படம் இது.ஒரே நாளில் மூன்று பெண்களின் வாழ்வில் நடைபெறும் மூன்று வெவ்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து ஒரு மைய புள்ளியில் இணைத்து ஈரானில் பெண்களின் வாழ்வை நம் கண் முன் நிறுத்துகிறது இப்படம்.

இயக்குநரின் முதல் படம் என சொல்ல முடியாதவாறு மிக கச்சிதமாய் எடுக்கபட்டுள்ளது. மூன்று சிறு கதைகள் போல் உள்ள அந்த மூன்று பெண்களின் வாழ்வில் முதலில் வருவது ஹவா என்னும் சிறுமியை பற்றியது.இன்றோடு ஹவா தன் 10 வயதை நிறைவு செய்வதால் இன்று முதல் அவள் பெண் ஆகிறாள், அதனால் அவள் தான் நண்பனுடன் விளையாட அனுமதி மறுக்கப்படுகிறாள். தான் மதியம் 12 மணிக்கு பிறந்ததினால் அது வரை விளையாட அனுமதி கேட்டு விளையாட செல்கிறாள். தான் கொண்டு வந்திருந்த குச்சியின் நிழல் குறைந்து கொண்டு வருவதை கொண்டு நண்பகல் நெருங்கியத்தை உணர்ந்து ஹவா வீடு திரும்ப முற்படுவதாய் அவள் கதை நிறைவடைகிறது.
அடுத்த கதை ஆஹூ என்னும் ஒரு மணமான நடுத்தர வயதுடைய பெண்ணை பற்றியது. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஒரு நீண்ட தூர சைக்கிள் பயணத்தில் அவள் சைக்கிள் ஓட்டுவதுடன் ஆரம்பமாகிறது.குதிரையில் வரும் அவள் கணவன் சாத்தானின் வாகனமான சைக்கிளில் இருந்து அவளை இறங்க சொல்கிறான். அவள் மறுகவே ஊர் பெரிய மனிதர் (அவரும் குதிரையில்) வந்து அங்கேய விவாகரத்து செய்கிறான் (வக்கீல் இல்ல!!வாய் தா இல்ல!!), அப்போதும் அவள் சைக்கிளில் இருந்து இறங்காமல் தன் பயணத்தை தொடர்ந்த படியே இருக்கிறாள். பின் அவளின் அண்ணன்கள் வந்து அவளின் சைக்கிளை பிடிங்கிகொண்டு அவளை விட்டு விட்டு செல்கின்றனர்.
கடைசியாக ஹூரா என்னும் ஒரு முதிய பெண்மணியை பற்றிய கதை விமான நிலையத்தில் இருந்து தொடுங்குகிறது.விமான நிலையத்தின் வெளியே நடை வண்டி போல் ஒன்றை சிறுவர்கள் வாடகை வாகனம் என பயன்படுத்துகிறார்கள். அதில் ஏறிய ஹூரா தான் பத்து விரல்களிலும் முடிச்சு மூலம் நினைவு வெய்த்து கொண்திரந்த பொருட்களை ஓவ்வொன்றாக வாங்குகிறாள்.Refrigerator, Iron Box, AC, Microwave Owen,Make up kit,Dining Table என அந்த பட்டியால் நீல்கிறது. இதை எல்லாம் நீ உபயோக படுத்தபோகிறாயா என அந்த சிறுவன் கேட்டதற்கு, ஆமாம் சிறு வயதில் இருந்து வாங்க வேண்டும் என ஆசை பட்டது இப்போதுதான் பணம் வந்தது என்கிறாள்.


கப்பலில் அவற்றை ஏற்ற அவள் காத்திருக்கும் போது சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட இருவர் அங்கே வருகிறார்கள், பாட்டி அவர்களை உபசரிக்கையில் சைக்கிள் பயணத்தின் போது தன் தோழி ஒருத்தியை அவள் கணவன் விவாகரத்து செய்து விட்டான் என்கிறாள். பாட்டி சிரித்து கொண்டு விடை பெறுகிறது. அப்போது அந்த பாட்டி கப்பலில் செல்ல போவதை பார்த்தபடி ஹாவாவும் அவள் தாயும் கரையில் நிற்பதாய் படம் நிறைகிறது.


ஹவாவின் கை நழுவி போகும் ( பறிக்கப்படும்) குழந்தைத்தனம் மற்றும் பொம்மை மீனுக்காய் தான் முக மறைப்பை குடுத்து விட்டு அது நீந்துவதை பார்த்து ரசிக்கும் இடங்கள், ஹூரா வின் சைக்கிள் பயணத்தின் போது பின்னால் காட்டப்படும் காட்சிகள் சிறப்பாக எடுக்கபட்டுள்ளது. பல காட்சிகள் Metaphor போல் பயன் படுத்தப்பட்டுள்ளது.


ஈரான் தேசத்து பெண்களின் சுதந்திரம் பறிக்க படுவதும், அவர்களின் தீராத ஏக்கமும், அதை அந்தந்த வயதில் அவர்கள் அதை எதிர்க்கும் விதமும் படத்தில் மிக அழகாய் பதிவு செய்யப்பட்டுள்ளது!!

It’s a Wonderful Life - சிரிப்பு இல்லை சந்தோஷம்நீ இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால நெனச்சு கூட பார்க்க முடியாது என்ற வசனத்தை நாம் பல திரைப்படங்களின் காதல் காட்சிகளில் கேட்டிருப்போம், ஆனா நாம இல்லாத ஒரு வாழ்க்கைய நாமே பார்க்க நேர்ந்தால்?.அப்படி பார்க்க நேரும் போது நம் மீது தழுவுவது ஒரு மரண பயமாகவே இருக்க முடியும். “மரணம் என்பது இல்லாத ஒரு உலகத்துக்கு போக போவதினால் ஏற்படும் பயம் அல்ல இருக்கின்ற உலகத்தை இழக்க போவதினால் வரும் பதற்றமே” என்னும் வாக்கியம் மிக சரியனவே தோன்றுகிறது. “இன்று புதிதாய் பிறந்தோம்” என்னும் பாரதியின் வரியை உணர செய்தது சமீபத்தில் நான் பார்த்த ”It’s a Wonderful Life” திரைப்படம்.


1946 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சகர்காளால் மட்டும் பாராட்ட பெற்று வசூலில் தோல்வி அடைந்து பின் மீண்டும் 1980 களில் கண்டு எடுக்கப்பட்ட படம் “It’s a wonderful Life”. Philip Van Doren Stern னின் “The Greatest Gift” என்னும் கதையை திரைப்படம் ஆக்கினார் Frank Capra. James Stewart ன் மிகை இல்லா நடிப்பும், நல்ல திரைகதையும் இப்படத்தின் சிறப்பம்சம்.


1946 ஆம் ஆண்டு Christmas க்கு முந்தைய இரவு தன் தந்தையை காப்பாற்றும் படி பிராத்தனை செய்யும் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு தேவதைகள் (ஆண் தேவதைகள்!!- சின்ன ஏமாற்றம்) ஒன்று கூடுகின்றன. தேவதைகளின் தலைவன் குழந்தைகளின் தந்தையான ஜார்ஜ் பேலீயின் (James Stewart) வாழ்க்கையை சொல்ல துவங்குகிறது.


ஜார்ஜ் பேலீ ஆறு வயதில் நீரில் விழுந்த தன் தம்பியை காப்பாற்ற போகையில் தன் ஒரு காதின் கேட்கும் சக்தியினை இழக்கிறான். மருந்து கடையில் வேலை செய்கையில் தன் முதலாளி தவறுதலாக தரும் மருந்தை கண்டுபிடித்து தடுத்து ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றுகிறான்.எதிர்பாராதவிதமாக தன் தந்தை இறந்ததினால் பள்ளி படிப்பு முடித்த பின் Architect ஆக வேண்டும் என நினைத்த தன் லட்சியத்தை விடுத்து தான் தந்தையின் Building and Loan Association Company யை பொறுப்பேற்று நடுத்துகிறான்.ஊரை எய்த்து பிழைக்கும் பாட்டரின் கையில் தன் Company சிக்காமல் ஏழை களுக்காக “பேலீ பார்க்” என்னும் சிறு வீடு மனைகளை குறைந்த விலையில் கட்டி தருகிறான். தவறுதலாய் Companyயின் 8000 டாலர் தொலைந்து விட, அந்த சமயத்தில் Auditing வர என்ன செய்வது என தெரியாமல் தற்கொலை செய்து கொள்ள செல்கிறான்.


இப்போது அவன் தற்கொலையை தடுக்கும் பொருட்டு தலைமை தேவதை Clarence என்னும் ஒரு இரண்டாம் தர (இறக்கை இல்லா தேவதை!!) தேவதையை பூமிக்கு அனுப்புகிறது.இதுவரை சாதாரண வழியில் செல்லும் திரைக்கதை ஒரு Fantasy கதையாக உறு மாற்றம் கொள்கிறது.தன்னை தற்கொலையில் இருந்து காப்பாற்றிய Clarenசிடம் “நான் பிறக்காமல் இருந்திருக்கலாம்” என்கிறான் Clarance சிரித்து கொண்டு அவனை அவன் ஊருக்குள் கூட்டி செல்கிறது.இப்போது அந்த ஊரில் ஜார்ஜ் பேலீ பிறந்ததற்கு அடையாளமே இல்லை.அவன் தம்பி ஆறு வயதில் இறந்திருக்கிறான், அவன் சிறு வயதில் வேலை பார்த்த கடை முதலாளி மருந்தை தவறுதலாய் தந்தற்காக 18 வருடம் சிறையில் இருந்து விட்டு வந்திருக்கிறான். பாடர் ஊரின் மிக முக்கியமான ஆளாக உள்ளான். அவன் மனைவி திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்கிறாள்.


தன் தாய் மற்றும் தன் மனைவிக்கே தன்னை அடையாளம் தெரியாதத்தை கண்டு மனம் உடைந்து, எத்துன்னை பேர் வாழ்க்கையில் தாம் நல்ல மாறுதல்களை உருவாகியுள்ளோம் என உணர்ந்து தன் வாழ்வை வாழ விரும்புகிறான். நண்பர்கள் உதவியால் 8000 டாலர் பணத்தை ஜார்ஜின் மனைவி சேர்த்து வைய்த்திருக்கிறாள்.மீண்டு வந்து தன் குடும்பத்துடன் இணைகிறான். அவனை தற்கொலையில் இருந்து காப்பாற்றியதற்காக தேவதைக்கு இறக்கை கிடைப்தை Christmas மணி உணர்த்துவதாய் படம் நிறைவடைகிறது.
சந்தோஷமான திரைப்படம்!!!!

If I can stop one heart from breaking,
I shall not live in vain:
If I can ease one life the aching,
Or cool one pain,
Or help one fainting robin
Unto his nest again,
I shall not live in vain.

என்னும் Emily Dickinson னின் வரிகளை நினைவூட்டியது கடைசி 15 நிமிட திரைப்படம்..

Wednesday, February 4, 2009

சில காதல் கவிதைகள்

கவிதைகளில் காதல் எப்போதும் பாடு பொருளாக இருந்து வந்துள்ளது. இரு கண்கள் சந்தித்து கொள்ளும் சில நெருப்பு நிமஷங்களையும், நினைவில் தங்கிவிட்ட சில அற்புத கணங்களையும் கவிதைகள் எப்போதும் பதிவு செய்து வந்துள்ளது. ஒரு வேளை காதலும் கண்ணீரும் இல்லையென்றால் கண்களே மதிப்பு இழந்திருக்குமோ என்னும் அளவு பாடப்பட்டுள்ளது. அவற்றில் எனக்கு பிடித்த சில….

நீ முதல் முறை என்னை
தலைசாய்த்துக்
கடைக்கண்ணால் பார்த்தபோது
என் உள்ளத்தில்
முள் பாய்ந்தது
அதை இன்னும் எடுக்கவில்லை
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்
எங்கே
இன்னொருமுறை பார் (மீ.ரா)

—————————————————————————————————————-

அன்று கவிதைப் போட்டி
எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள்
ஆனால் நீ மட்டும்
உன் கண்களோடு

———————————————————————————————————————

கண்ணே தயவு செய்து
இனி தொலைபேசியில் முத்தமிடாதே
உன் முத்ததை எல்லாம்
அது வாங்கி கொண்டு
வெறும் சத்தத்தை தான் எனக்கு தருகிறது…

————————————————

உன்னை கேலிபேசுவோரைக்கூட
முறைத்துப்பார்க்கிறாய்..
விரும்பிப்பார்க்கும் என்னையோ
திரும்பிப்பார்க்கவும் மறுக்கிறாய்!!

—————————————————–

எதற்காக கஷ்டப்பட்டு
கோலம் போடுகிறாய்..
சிறிது நேரம்
வாசலில் அமர்ந்துவிட்டு போ..போதும்!! (வேறு யார் தபு சங்கர் தான்)

——————————————————————————————————————————

உன் ஊர் என் ஊர்
வாசுதேவநல்லூர்
நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலி சைவ பிள்ளைமார்
வகுப்பு கூட ஒன்று
உன் தந்தையும்
என் தந்தையும்
சொந்தக்காரர்கள் மைத்துநர்கள்
ஆதலால்
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே.. (மீ.ரா)

மேலும் சில கவிதைகள்

சிறந்த கவிதைகள் எதையும் விவரிப்பது இல்லை, குறிப்பால் உணர்த்தவே முற்படுகிறது. கவிதையில் சொல்லப்பட்டவைகளை விட சொல்லப்படாத்தாவைகளே முக்கியம், அதன் மறைப்பிரதி (subtext) நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் அனுபவத்தின் ஊடாகவே கவிதை ஜீவித்திருக்கிறது என்பது என் எண்ணம்.. நாம் சாதாரணமாய் காணூம் நிகழ்வுகளை மொழி ஆளுமைக் கொண்டு பதிவு செய்கிறது இன்றைய நவீன கவிதை. அவற்றில் என்னை கவர்ந்த சில வரிகள்….

இந்த மழையில்
குளிர குளிர நனைகிறேன்
வராமல் போகலாம்
இன்னொரு மழை (மகுடேஸ்வரன்)
—————————————————————————————————————

பறவை
சிறகை மீறிய ஆகாசத்தை
அளந்து ஓய்ந்து
அலகை மீறிய வனத்தை
உண்ண அமர்ந்தது (எம். யுவன்)

—————————————————————————————————————

எந்த பறவை எதநிடம் சொல்கிறது
பறந்தததை, பார்த்ததை, கூட்டை, நிழலை, சிறக்கொடிந்ததை (ப.கல்பனா)

—————————————————————————————————————-

பருவம் தப்பிய மழைக்கும்
மண் விடுவிக்கிறது
தன் வாசத்தை (சல்மா)

——————————————————————————————————————

பார்த்துக்கொண்டிருந்த கண்ணாடி
கை தவறி விழுந்து உடைந்து
நொறுங்கினபோது
பார்த்துக் கொண்டிருந்தேன்
கை தவறி
விழுந்து
உடைந்த
கண்ணாடியை (நீட்சி என தலைபிடபபட்ட இக்கவிதையும் எம். யுவனுடையது)

—————————————————————————————————————–

என்னதான் நடந்து பார்த்தாலும்
என் ஆக்கிரமிப்பு சின்ன மூலைதான்
ஒரேயொரு சிறகு சிமிட்டலில்
மாடிப் பரப்பின் அகலத்தை
அழித்து போகிறது அந்த சிட்டுக்குருவி (உமா மகேஷ்வரி)

—————————————————————————————————————–

குழந்தைகளின் ஜன்னல்
இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்
உடனே இறங்க சொல்கிறாள் அம்மா
வீடு இங்கேதான் இருக்கிறதாம்
இதெல்லாம் ஒரு காரணமா? (முகுந்த் நாகராஜன்)

——————————————————————————————————————–
அடுத்த முறை சில நல்ல காதல் கவிதைகள் தர உத்தேசம்……பார்க்கலாம்

Monday, February 2, 2009

சில கவிதைகள்

என் கவிதை ரசனை தொடர்ந்து மாறுதல் (வளர்ச்சி?) அடைந்து கொண்டே வந்துள்ளது. கல்லூரியில் ஒரு புத்தகம் நிறைய எழுதியவற்றை இன்று என் ரசனையில் பார்க்கையில் ஒன்று மட்டுமே தேரும் என தோன்றுகிறது. என் கவிதை வாசிப்பில் நல்ல மாற்றங்களை நிகழ்த்தியதற்கு சுஜாதா மிக முக்கியமான காரணம். வைரமுத்து, மு. மேத்தா என ஆரம்பித்த ரசனை அறிவுமதி,பழனிபாரதி,தபு சங்கர் என நீண்டு இப்போது பிரமிள், தேவதேவன், தேவதச்சன், விக்ரமாதித்யன்,கல்யாண்ஜி,மனுஷ்யபுத்திரன் என நிற்கிறது.நல்ல கவிதையில் சொல்ல பட்டவைகளை விட சொல்ல படாதாவைகள் அதிகம் இருக்கும்,பிரச்சாரம் கவிதை அல்ல, போலி பாசாங்குகள் நல்ல கவிதைக்கு தேவை இல்லை என்பது நான் உணர்ந்தது.
இனி என்னை கவர்ந்த சில கவிதைகள்….

இடமற்று நிற்கும்
கர்பிணி பெண் பார்க்கையில்
பேருந்துக்கு வெளிய பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம் எதை எதிர்பார்க்கிறாய் காதலையா? (சுகிர்தராணி)

-----------------------------------------------------------------------------------

ஒரு மூடிய இரவை திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய விரல்கள்,
ஒரு மூடிய விரலை திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய இரவுகள் (ஸ்ரீநேசன்)

-----------------------------------------------------------------------------------

பெண்களிடம் பேசுகையில்
முகத்தில் அறைவதாய் படும்
மாரப்பு சரி செய்தல்கள் (இரவி)

-----------------------------------------------------------------------------------

செவிட்டு ஊமையின்
பிச்சை பாத்திரத்தை
தட்டுகிறது மழை (Kobayashi - Japan Haiku)

-----------------------------------------------------------------------------------

தண்டவாளத்தில் தலை சாய்த்து
காத்திருக்கும் ஒற்றை பூ என் காதல்
நீ நடந்து வருகிறாயா இல்லை
ரயிலில் வருகிறாயா? (பழநிபாரதி)

-----------------------------------------------------------------------------------

பறவையின் சிறகிலிருந்து
விழுந்த இறகு
காற்றின் தீராத பக்கங்களில்
அதன் வாழ்வை எழுதி செல்கிறது (தருமு சிவராம்)

-----------------------------------------------------------------------------------

பிரமிள், தேவதேவன்,கல்யாண்ஜி ஆகியோரை முழுமையாய் படித்து விட்டு அவர்களின் சிறந்த கவிதைகளை எழுதுகிறேன்…..