Friday, February 20, 2009
விக்ரமாதித்யன் - அலைந்து திரியும் கவிஞன்
“விக்ரமாதித்யன் எனும் பெருநகரப் பாணன்” என்னும் எஸ். ரா வின் கட்டுரையை உயிர்மையில் வாசித்தது மூலமாகவே கவிஞர் விக்ரமாதித்யன் எனக்கு அறிமுகமனார். அதன் பின் அவரது சில கவிதைகளை படிக்க நேர்ந்தது. நவீன கவிதையின் ஒரு சிறந்த ஆளுமையாக அறியப்படும் விக்ரமாதித்யன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகள், கவிதைகளை பற்றிய கட்டுரைகள் எழுதி வருபவர். அவரை பற்றி அறிய விரும்புவர்களுக்கு எஸ். ரா வின் கட்டுரை மிக உதவியாய் இருக்கும். நான் இவரது கவிதைகளின் முதல் நிலை வாசகனே, இவரது புத்தகங்களை இன்னும் படிக்க வேண்டி உள்ளது.
இனி அவரது சில கவிதைகள்…
கூண்டுப் புலிகள்
__________________
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்துக்கு இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்
—————————————————————————————————————————–
குடும்பத்தை பிரிந்து வேலை தேடி வெளியூர் செல்லும் ஒரு மனிதனின் பார்வையில் விரியும் “பொருள்வயின் பிரிவு” என்னும் கவிதை எளிய சொற்களால் மிக ஆழமான சலனங்களை உருவாக்கியது..
பொருள்வயின் பிரிவு
_______________________
அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்தது வந்து கொண்டிருந்தேன்
மனசுகிடந்து அடித்துக்கொள்ள..
———————————————————————————————————————————
மறதியில்,
இன்று
போதையில்
செருப்பு தொலைவது மட்டும்
மாறவே இல்லை
—————————————————————————————————————————
சமீபத்தில் பா. ராகவனும் Blogல் இவரை பற்றி எழுதி இருந்தார்.
http://www.writerpara.com/paper/?p=499
விக்ரமாதித்யன் கவிதைகள், முழு தொகுப்பு, சந்தியா Rs.80
தற்போது அமிருதா பதிப்பகத்திலும் இவரது முழு கவிதை தொகுதி வந்திருக்கிறது.
பகுப்புகள்
கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment