Wednesday, February 25, 2009

ஒரு ஊர்ல ஒரு தமிழ் அய்யா

எங்கள் Matriculation பள்ளியில் ஆசிரியரை "அய்யா" என அழைக்கும் பழக்கம் பள்ளிக்கு தமிழ் அய்யா வரும் வரையில் கிடையாது. 40 ஆண்டு கால அரசு மேனிலை பள்ளியின் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்தார் தமிழ் அய்யா. சற்று மாநிறம், 5 1/2 அடி உயரம், Six Packs கொண்டதலை முடி( படிக்கட்டு போல் வாரி இருப்பார்), வெள்ளை வேட்டி, சட்டை,பேராசிரியர் அன்பழகன் போல் கண்ணாடி, பார்த்த உடன் வசீககரிக்கும் உதட்டோர ஜெமினி கணேசன் சிரிப்பு இவைதான் தமிழ் அய்யா. எங்கள் பள்ளிக்கு "நல்ல" தமிழ் ஆசிரியர் இல்லை என்னும் குற்றம் அவரால் தீர்ந்தது.


9 ஆம் வகுப்புக்கு மேல் தான் அவர் தமிழ் சொல்லி குடுப்பார். ஆறாம் வகுப்பு படிக்கையில் அதுவரை "Good Morning Miss/Sir" சொல்லியே பழகிய எனக்கு அவரிடம் "வணக்கம் அய்யா" சொல்ல வேண்டும் என ஆவல் வந்ததும் அப்படி ஒரு நாள் சொல்கையில் அவர் சிரித்து எனக்கு திரும்ப வணக்கம் சொன்னதும் எனக்கு அவரை பிடித்து போனது.அது நடந்து மூணு வருசம் ஆகி இருந்தது இப்போது தமிழ் அய்யா எனக்கு இலக்கணம் நடத்தி கொண்டிருந்தார்.அவர் இலக்கணம் மற்றும் செய்யுள் நடத்தும் விதம் மிக புதுமையானது, இன்று வரை அவர் நடத்திய பல விதிகளும், பாடல்களும் நினைவில் உள்ளது.


ஒரு நாள் தமிழ் பெயர்கள் பற்றி பேசிகொண்டிருந்தவர் தீடீரென்று ரம்பா, நக்மா, சரோஜா, ராதிகா,பூமிகா, ஜோதிகா, கனகா அவங்க அம்மா தேவிகா என நடிகைகள் பெயரை பட்டியலிட ஆரம்பித்து "ஆ" கார ஒலியுடன் பெயர்கள் முடிவது தொல்காப்பிய இலக்கண படி தவறு என முடித்தார்.காரணப்பெயர் பற்றி பேசுகையில், "கான்" (காடு) சென்று "மான்" பிடித்து "சல்" என சாப்பிடடதால் அவன் "சல்மான்கான்" என்றார்.


தமிழ் அய்யாவுக்கு திருக்குறள் மீதும் கம்ப இராமாயணம் மீதும் மிகுந்த ஈடுபாடு உண்டு. "தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ" என கம்பன் தன் உச்சத்தை அடைந்த இடத்தை அவர் மூலமே அறிந்தேன்.


"கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள"


என்னும் குறல் மூலம் இன்பத்துபாலை அறிமுகபடுத்தியவரும் அவரே.


தன் 40 வருட கால அரசு பள்ளியின் வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர் விடுப்பு எடுக்கவில்லை. தன் மகனுக்கு திருமணம் நடந்த அன்றும் கூட 9.30 மணிக்கு பள்ளிக்கு வந்துள்ளார்.அவருக்கு விருதுகள் பாராடுக்கள் எதுவும் கடைசி வரை வழங்க படவில்லை. நான் பள்ளி படிப்பை முடித்து வருகையில் அவருக்கு 49 ஆண்டு ஆசிரியர் பணி நிறைந்திருந்தது. விடை பெருகையில் அவரது 50 ஆண்டு கால ஆசிரியர் பணியை பெருமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் எந்த வித சத்தமும் இல்லாமம் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றார்.


கல்லூரியில் சேர்ந்த பிறகு கடைக்கு செல்வதானால் அவர் வீடு இருக்கும் தெரு வழியாகவே செல்வேன், மீண்டும் அந்த "வணக்கம் அய்யா" சொல்வதற்காக ஓரிரு முறை தென்பபட்டார். கல்லூரியில் சேர்ந்து கவிதை போட்டியில் பரிசு பெற்ற உடன் அவரது வீட்டிற்கு சென்றேன். உடல் நலிவு அடைந்திருந்தார்.



"கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்று உள்ளேன், நீங்கள் தான் காரணம்" என்றேன்


"உன் திறமை" என்று சொல்லி மெலிதாய் சிரித்தார். உடலை பார்த்து கொள்ளுங்கள் என்றேன். மெல்ல என் கையை பிடித்து லேசாக கண் கலங்க, "இப்போது எல்லாம் முன்ன மாதிரி நடக்க முடியல , சரியா படிக்க முடியல" என்றார். கைகள் லேசாக நடுங்கியது. பின்பு அவரிடம் விடை பெற்று வந்தேன். பின்னர் ஓரிரு மாதங்களில் "எல்லாரையும் போல அவரும் இறந்து போனார்" என குறுஞ்செய்தி வந்தது. நான் போக வில்லை……

2 comments:

  1. Nowadays,Very rare to see this type of tamil teacher :)

    ReplyDelete
  2. Tamil Ayyas r slowly vanishing like dews.. hard to c few...

    ReplyDelete