Thursday, March 25, 2010

அகிரா - இன்னும் நூறாண்டிரும்!

இந்த மாதம் 23 ஆம் தேதி, அகிரா குரசோவாவின் நூற்றாண்டு தினம். அதனை ஒட்டி எழுதப்பட்ட பதிவு.

“இந்த ஜோல்னா பையர்கள் அதிகம் புகழ்வதாலேயே நான் அகிராவை விட்டு விலகி இருந்தேன்” என சுஜாதா முதன் முதலில் கணையாழியின் கடைசி பக்கங்களில் குறிப்பிட்டிருந்தது முதல் எனக்கு அகிரா குரசோவாவின் பெயர் பரிச்சியம். பின்பு அவரது "ட்ரீம்ஸ்" படத்தை சிலாகித்து எழுதி இருந்தார். அதன் பின் அந்த பெயரை நான் அதிகம் நினைவில் வைத்து இருக்கவில்லை. மீண்டும் "பாய்ஸ்" திரைபடத்தில் " குரசோவா, கோடார்ட் படங்களாம் பார்த்து இருக்கீங்களா?"  என பரத் ஜெனிலியா முன் சீன் போட, கடைசியா நான் பார்த்த இங்க்லீஷ் படம் "ஷோலே" ங்க என அவரது மூக்கு உடைபடுகையில் மீண்டும் சுஜாதாவின் வசனம் மூலமாகவே கேள்விபட்டேன். எப்போதும் மிக சீரியசான விஷயங்களை கூட வசந்த் மூலமாகவோ, இல்லை மெல்லிய ஒரு நக்கல் கலந்து சொல்வது அவரது பாணி என்பதால் அப்படியே அந்த பெயரை குறித்து வைத்து கொண்டேன்.


அகிராவின் சிறந்த படங்கள் அனைத்தையும் நான் இன்னும் பார்த்து விட வில்லை, ஆனால் நான் பார்த்த அவரது படங்கள் எல்லாமே சிறப்பாக இருந்தது. வழக்கமாக மிகவும் பாராட்டப்படும் அவரது " செவென் சாமுராய்", " ரோஷோமான்", "ட்ரீம்ஸ்" படங்களை தவிர்த்து சில படங்களை பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறன். தான் வளர்ந்து வந்த மண்ணின் கலாச்சாரத்தையும், மாற்றங்களையும் தொடர்ந்து தம் ஆக்கங்கள் மூலம் பதிவு செய்தவர் குரசோவா. உதாரணமாக சாமுராய், அவரகளது வாழ்கை முறை, போர் முடிந்த வறட்சியான காலகட்டத்தில் அவர்கள் எதிகொள்ளும் சவால்கள், அத்தனையும் மீறி இறுதி வரை சாமுராய் யாகவே வாழ்ந்த அவர்களது வாழ்கை.

பின்னர் அதுவே, அமெரிக்க மண்ணில் வேர்கொண்ட கௌ பாய்ஸ் பற்றிய படங்களை எடுக்க தனக்கு ஊக்கம் அளித்தது என செர்ஜியோ லியோன் கூறியுள்ளார் (The Good, the Bad and the Ugly, Once upon a time in west, A fistful of dollars). குரசோவாவின் ஆரம்ப கால படங்களில் ஒன்றான "Stray Dogs" எனக்கு மிக விருப்பமான திரைப்படம். இரண்டாம் உலக போருக்கு பிந்தைய டோக்யோ நகரை மையமாய் வைத்து அமைக்கப்பட்ட ஒரு த்ரில்லர் இந்த திரைப்படம். "தன் இலக்கு மட்டுமே கண்ணில் படும் வேட்டை நாய்க்கு "என்னும் வரி மிக சரியாக பொருந்தும் திரைப்படம்.



இரண்டாம் உலக போருக்கு பின், கடத்தல், கொள்ளை, கொலை என நிழல் உலகம் வலுவாக வேருன்றி காவல்துறை மெல்ல மெல்ல செயலிழந்து போகும் நிலையில் தொடங்குகிறது இத்திரைப்படம். முராகாமி என்னும் துப்பறிவாளன் வெக்கை மிகுந்த ஒரு மதிய வேளையில், நெரிசல் மிக்க ஒரு பேருந்தில் செல்கையில் தன்னுடைய கைத்துப்பாக்கியை தொலைத்து விடுகிறான். அவனது அதிகாரி, ஒரு குறிப்பிட்ட கால கெடுவுக்குள் அதை கொண்டு வந்தால் நீ வேலைக்கு வரலாம் என அனுப்பி விடுகிறார்


தன் துப்பாக்கியை தேடி தொடங்குகிறது அவன் பயணம், துணைக்கு சற்று வயதான ஒரு காவலருடன். வழக்கமாக அந்த படுதியில் திருட்டு தொழில் செய்வோரிடம் (அப்பவேவா?) விசராணை தொடுங்குகிறது. எந்த வழியிலும் கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் சோர்ந்து இருக்கும் நேரத்தில், ஊரில் ஒரு கொலை நடக்கிறது. அதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தன்னுடையது என உணர்ந்து மிகுந்த துயரும் கோபமும் கொள்கிறான் அந்த துப்பறிவாளன். தொடர்ந்தாற்போல் இன்னும் சில கொலைகள் நிகழ்கின்றன. அந்த துப்பாக்கி மூலம் நிகழும் அனைத்து குற்றங்களுக்கும் தான்தான் காரணம் என எண்ணி மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறான்.அதன் பின் அந்த நண்பரின் துணையுடன் அந்த கொலைகாரனை கண்டு பிடிப்பது என நீள்கிறது கதை.


இந்த படத்தில் கவனத்திற்குரிய பல விஷயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. உதாரணமாக அந்த துப்பறிவாளனின் கதாபாத்திரம், முதல் காட்சியில் தன் துப்பாக்கி தொலைந்த உடன் அவன் முகத்தில் ஒரு இறுக்கம், ஒரு கூர்மை குடி ஏறிவிடுகிறது. அதன் பின் அவனை சுற்றி நடக்குமே எதையுமே அவன் மிகுந்த கூர்மையுடன் காண்கிறான். நேரம் செல்ல செல்ல, இரை தேடி அலையும் வேட்டை நாய் எனவே அலைகிறான். அவனது உடல் அசைவுகள் , அவனது மொழி அத்தனையும் நேர்த்தியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.


அதே போல அவனது நண்பராக வருபவரின் முதிர்ச்சியான நோக்கும், அவர் தனது வீட்டிற்கு அவனை அழைத்து சென்று உரையாடும் இடமும் ஆழமானவை. துப்பாக்கி தேடி கிடைக்காமல் மனம் உடைந்து ஒரு சேரிக்குள் இரவு வானத்தை பார்த்து அமர்ந்திருக்கிறான், அருகே அவனால் அன்று காலை விசாரணை செய்யப்பட்டவள் செல்கிறாள். அவனை கண்டதும் தன் கையில் வைத்திருக்கும் பழத்தை அவனிடம் தந்து சாப்பிட சொல்கிறாள். சிறு சிறு விஷங்களில் கூட கவனம் கொண்டு அழுத்தம் ஏற்படுத்தும் படம் இது. அதே போல, படம் முழுதும் வெயில் மிக முக்கியமான விஷயமாக கையாளபட்டிருகிறது. அது படத்தில் அத்தனை பேர் முகத்திலும் ஒரு கடுமையை, எரிச்சலை ஏற்படுத்தியே உள்ளது படம் முழுதும். பார்ப்பவரையும் பற்றிகொள்ளும் ஒரு மூர்க்கம்!


இதே போல,  அகிராவின் High and Low என்னும் படமும் எனக்கு விருப்பமான ஒன்று. குழந்தை கடத்தல் என தொடங்கி, அதன் மூலம் இரு வேறு வர்கங்களுக்கான போராட்டம், சுயநலம், நெருக்கடிகள் ஏற்படத்தும் சங்கடங்கள் என பல விஷயங்களை உள்ளடக்கிய திரைப்படம். வெறும் கருத்துகளாய் இல்லாமல் கதை போகும் போக்கில் சுவாரசியமாய் எடுத்து சென்ற விதத்தில் அகிராவின் சிறந்த படங்களில் ஒன்று இது என தயங்காமல் சொல்லலாம்



அகிரா குராசொவா என்றவுடன்  வன்முறை தொனிக்கும் பட காட்சிகளே எப்போதும் நம் நினைவில் எழும், ஆனால் அவரது . Stray dogs முதல் Seven Samurai, High and Low, Roshomon என எந்த படமும் முடிந்த பின் நம் மனதில் வன்முறையை விட்டு சென்றதில்லை. சக மனிதனை நேசித்த ஒரு மாபெரும் திரை சிற்பியின் நூற்றாண்டு விழா இந்த மார்ச் 23. எப்போதும் மனதின் உன்னதத்தை பேசிய படைப்புகள் காலம் தாண்டி நிற்கும் என்பதற்கு மீண்டும் மீண்டும் அகிரா நினைக்கபடுவதே சாட்சி.



Wednesday, March 10, 2010

விசா வாங்கியாச்சா விசா?

எக்கச்சக்க முன் எச்சரிக்கைகளுடன் ஆவணங்களை எடுத்து கொண்டு விசா நேர்முகத்திற்கு சென்றேன். எப்போதும் போல வழக்கப்படி நேரம் தாழ்த்தி செல்லாமல் சீக்கிரமே சென்றுவிட்டேன். முழுக்கை சட்டைக்குள் என்னை பொருத்தி கொள்வது மிகவும் சங்கடமாய் இருந்தது. எப்போதும் சற்று மடித்து விட்டு தான் பழக்கம். வெளியே வரிசையில் நின்று இருக்க ஜெமினி மேம்பாலத்தில் செல்லும் பேருந்துகளில் இருந்து சில முகங்கள் எட்டி பார்த்த வண்ணமே இருந்தது. ஆயுத எழுத்தில் வருவது போல எதாவது பெண் நமக்கு பின்னல் வருகிறதா என பார்த்து கொண்டே வந்தேன். அதற்கு எல்லாம் கொஞ்சம் குடுப்பினை வேணும். ஒருவழியாக அத்தனையும் சரிபார்த்து. உள்ளே சென்றேன். ஒரு மணி நேரம் முன்னதாக வந்து இருந்தேன். ஒவ்வொருவராய் நேர்முகத்திற்கு சென்று கொண்டு இருந்தனர்.




சில சந்தோஷங்கள், சில ஏமாற்றங்கள், சில குழப்பங்கள் என பல வகையான முகங்கள். என் பக்கத்தில் இருந்த வயதான தம்பதி தெலுங்கில் ஒருவருக்கு ஒருவர் சந்தேகம் கேட்டு கொண்டு இருந்தனர். மொழி சார்ந்து தனி தனி நேர்முகங்கள் இருக்கிறது என்பது சற்று சந்தோசம் அளிப்பதாய் இருந்தது. அம்மாவை அப்போது தமிழிலேயே பேச சொல்லி விசா வாங்கிகொள்ளலாம் என நினைத்தேன். சடாரென்று சிரித்து கொண்டேன், முதலில் நம்ம போகணும், படிக்கணும், வேலை வாங்கணும்...

எங்கேயோ பார்த்து கொண்டிருந்த என்னை தீடிரென்று சார் இந்த லைன்ல நில்லுங்க என்றனர். அவர்கள் சொன்னதை புரிந்து கொள்ள சில நிமிடங்கள் பிடித்தது, இன்னும் சற்று நேரத்தில் எனக்கு கிடைக்கும் ஒரு சில வினாடிகளில் என் எதிரில் இருக்கும் அந்த தேர்வாளனை கவர்ந்து ஆக வேண்டும். மூன்று வருடமாக புது புது காண்ணாடி எல்லாம் வாங்கி, பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் எட்டு எல்லாம் போட்டு காண்பித்தும் ஒரு பெண்ணை கூட கவர முடியாத ஒரு இந்திய பிரஜை இன்னும் சில மணித்துளிகளில் அந்த அமெரிக்கனை கவர வேண்டும்.
வரிசை போக போக மெல்ல இரண்டாக பிரிந்தது. ஒரு பக்கம் சற்று பெருத்த பெண்மணி, யார் போனாலும் சிரித்து பேசி கொண்டு இருந்தாள். என் ராசிப்படி நான் அவளிடம் போக மாட்டேன் என நன்றாகவே தெரியும். எனக்கு முன்னால் சென்ற நான்கு பேரிடமும் சுமார் 5 நிமிடம் பேசிவிட்டு ப்ளூ ஸ்லிப் எனப்படும் விசா நிராகரிப்பை செய்து கொண்டு இருந்தவரிடம் தான் போனேன்.    

நீங்கள் நினைப்பது போல அவர் என்னை மேலும் கீழும் எல்லாம் பார்க்கவில்லை, நேராக முகம் பார்த்து 
முகமன் கூறி Certificates என்றார். என்ன படிக்க போகிறாய், பணம் எப்படி கட்ட போகிறாய் போன்ற கேள்விகளுக்கு நான் தயாரித்து வைத்து இருந்த எந்த விடையும் உபயோடகபடுத்த வாய்ப்பு தரவில்லை. சிரித்து கொண்டே என்னுடைய Certificates திரும்ப தந்து, இன்னும் ஐந்து நாட்களில் உங்கள் பாஸ்போர்ட் வீட்டிற்கு வரும் என்றார். ஒரு கணம் அதிர்ச்சிக்கு பின் சிரித்து விடை பெற்று வெளியில் வந்தேன். கைபேசி எதுவும் எடுத்த வரவில்லை, பையில் சற்று பணத்துடன் ஆட்டோவில் வந்து இருந்தேன் மீண்டும் வீட்டிற்கு சென்று தான் விசா கிடைத்த விஷயத்தை எல்லாருக்கும் சொல்ல வேண்டும்.

மதியான வெயில் நேர்கோட்டில் இறங்கி உடம்பிற்குள் ஊடுருவ ஆரமித்திருந்தது. அதர்ச்சி, சந்தோசம், 
பிரிவு என பல வித உணர்சிகள் ஆட்கொள்ள வெளியில் வந்தேன். MLA சீட் ஜெயித்து வெளியில் வரும் வேட்பாளரை சூழ்ந்து கொள்ளும் தொண்டர் போல, ஆட்டோ ஓட்டுனர் அருகில் வந்தனர். 

எங்கே போகணும் சார்? என எவரும் கேட்கவில்லை. விசா கிடைச்சிடுச்சா சார் விசா? என்றனர். கிடைச்சுடுச்சு என்ற உடன், கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். எனக்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி முன் பின் பழக்கம் இல்லாத ஒரு சக சிட்டிசன் கொள்ளும் உவகை மகிழ்ச்சி அளித்தது. பின் அவர்களில் சற்று தடிமனாக இருந்தவர் தன வண்டிக்கு அழைத்து சென்றார்.
நான் அவர் வண்டியில் அமர்ந்ததில் இருந்து சந்தோஷமாகவே காணப்பட்டார்.



“Good Sir, I Happy, You visa got” என்றார்.

மெல்ல சிரித்து வைத்தேன்.

“ 12 years Auto sir, Only Visa office, I know all formalities, photo, certificates, bank statement, Flight ticket all”.

சந்தோசம் அண்ணே என்றேன். When Going என்று அவர் அரமிப்பதை புரிந்து கொண்டு, இன்னும் ஒரு வாரத்துலே கிளம்பிடுவேன், இங்க தான் வேளச்சேரி பக்கம் வீடு. விசா கண்டிப்பா கிடைச்சிடும்னு தெரியும்ணா. Flight Ticket எல்லாம் ஏற்கனவே முன்பதிவு பண்ணி ஆச்சு என்றேன்.

சென்னையில் ஆட்டோ ஏறுகையில் செய்ய கூடாத ஒரே தவறை நான் செய்து விட்டு இருப்பதை உணர்ந்தேன். உடனே நினைவு வந்தவனாக ஷென்னாய் நகர் போகணும், ஆட்டோ சார்ஜ் எவ்வலோனு சொல்லவே இல்லையே என்றேன்.

“Today Happy day You sir, Give me” என்றார்.

அவரது ஆங்கிலம் வயுற்றுக்குள் சில பல பட்டாம்பூச்சிகளை பறக்க விட ஆரமித்தது. அண்ணே, அது கிடக்கட்டும், எவ்வலோனு சொல்லுங்க என்றேன்.

500 Rs!

நான் வரும்போது 80 ருபாய் கொடுத்து வந்ததை கேட்காமல், "யு ஹாப்பி சார்" . ஒரு நாள் தானே, எனக்கு மட்டும் இல்லை சார் அங்கு இருக்குற வாட்ச்மேன், போலிஸ் எல்லாருக்கும் போகணும், இல்லைனா ஆட்டோ நிறுத்த விடுவாங்களா என்றார்.

இறங்கும் வரை அவர் குழந்தை குட்டிகளை பற்றி பேசிவிட்டு, 300 ரூபாய் வாங்கி கொண்டு
யு ஹாப்பி, மீ ஹாப்பி சார் என சொல்லிவிட்டு போனார்.