Tuesday, November 10, 2009

நீட்சி/நினைவூட்டப்படும் துக்கநாள்

நீட்சி

காற்றில் நீந்திய ஜன்னலை

இழுத்து சாத்திய கணத்தில்

தட்ட தொடங்குகிறது மழை




நினைவூட்டப்படும் துக்கநாள்

சொந்தம் கூடி, உணவு சமைத்து

கலைந்ததை சமன்படுத்தி

புது துணிகளை

மடிப்பு கலையாமல் எடுத்து வைத்து

சட்டமிட்ட புகைப்படத்துக்கு வத்தி கொளுத்தி

வட்டமாய் அமர்ந்து

ஒருவர் முகம் ஒருவர் பார்த்து

சங்கடப்படுவதற்கு முந்தைய கணம்

எப்படியோ தொடங்கிவிடுகிறது

ஒரு அழுகை

சுவடுகள்

அலைக்கு பயந்து

அம்மா புடவையையே

பற்றி கொண்டிருந்த குட்டி இளவரசி

அவசர அவசரமாய்

வந்து பதித்து செல்கிறாள்

சுவடை



தொலைந்துபோன கைப்பேசி

பேசிய வார்த்தைகள்

இழந்த நட்புகள்

எப்போதாவது பேசுவோம்

என நினைத்த எதிரிகள்

ரகிசியமாய் பதிவு செய்த பேச்சுகள்

அனைத்தையும் அழித்து செல்கிறது

கையில் ஒரு மச்சத்தை

மட்டும் விட்டு விட்டு

Photo Courtesy: Google Images and IStock Photo

Monday, November 9, 2009

உலக போர் - காமிரா வழியே

“Never in the field of human conflict was so much owed by so many to so few”. இரண்டாம் உலக போர் பற்றி அப்போதைய இங்கிலாந்து அதிபர் சர்ச்சில் சொன்ன வார்த்தைகள் இவை. மனித சரித்திரத்தில் அதிகமான உயிர் இழப்புகளை கொண்டது இரண்டாம் உலக போர். முதல் உலக போர் 1919 ஆம் ஆண்டு முடிவு அடைந்து Treaty of Versailles கையெழுத்து இடப்பட்டது. அந்த ஒப்பந்தம் மூலம் வஞ்சிக்கப்பட்டதாக எண்ணி வந்த ஜெர்மனி, ஒப்பந்தத்தை மீறி போலாந்தின் மேல் படை எடுத்து 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக போரை தொடங்கி வைத்தது. ஹிட்லர் வீழும் வரை ஆறு ஆண்டுகள் நீண்ட இந்த போர் மனித மனத்தின் குரூரத்தை வெளிச்சமிட்டு காட்டியது.

இரண்டாம் உலக போரை மையமாய் கொண்டு நூறு திரைப்படங்களுக்கு மேலாக வெளிவந்துள்ளது. போரின் நேரடி காட்சிகளின் சித்தரிப்பு, அது தனி மனித வாழ்க்கை மீது காட்டும் வன்முறை, மனித மனங்களின் ஆதார உணர்ச்சியினை சீண்டி பார்க்கும் நிகழ்வுகள் என பல கோணங்களில் சித்தரிக்கப்பட்டு படங்கள் வெளிவந்துள்ளது. அவற்றில் சில படங்கள் எனக்கு பல கோணங்களில் அந்த நிகழ்வுகளை புரிந்து கொள்ள உதவியது. உலக போர் பற்றி வந்த திரைப்படங்களில் நான் பார்த்தவற்றில் மிக முக்கியமான திரைப்படங்களின் தொகுப்பு இது. இந்த திரைப்படங்கள் மூலம் போரின் ஒரு ஒட்டு மொத்த ஒழுங்கு கிடைக்கலாம். இந்த குறிப்பில் இல்லாமல் நான் தவற விட்ட சில படங்கள் இருக்கலாம். இருந்தும் இவை முக்கியமான படங்கள்.

1.Schindler’s List (1993):

Direction: Steven Spielberg

Awards: Seven Academy Awards



Steven Spielberg இயக்கி வெளியிட்ட இந்த திரைப்படம், ஹிட்லரின் நாசிகள், யூத இனத்தவர் மீது வெறி கொண்டு, அவர்களை வதை முகாம்களில் அடைத்தது, அங்கு அவர்கள் பட்ட வேதனை ஆகியவை அப்பட்டமாய் காட்டப்பட்டுள்ளது. படம் பெரும் அளவில் கறுப்பு வெள்ளை காட்சிகள் மூலமே நகர்கிறது. மந்தைகள் போல் மக்கள் முகாம்களில் தங்க வைக்க படுகின்றனர். அப்போது ஷிண்ட்லெர் என்னும் தொழிலதிபர் போருக்கு தேவையான கருவிகள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவுகிறார். அதற்கு தேவையான வேலையாட்களை வதை முகாம்களில் இருந்து பெற்று பணக்காரர் ஆகிறார். அதற்காக ஜெர்மன் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்குகிறார்.

நாட்கள் செல்ல செல்ல தொழிற்சாலையில் வேலை செய்யும் யூதர்கள் மீது நேசம் கொள்கிறார். உயிர் பிழைத்தால் போதும் என வதை முகாம்களில் இருந்து இவரது தொழிற்சாலைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இறுதியில் தன கையில் உள்ள பணம் அத்தனையும் இழந்து தன்னால் முடிந்த அளவு யூத இனத்தை சேர்ந்தவர்களை காப்பாற்றி போர் முடிவடைந்த பின் அவர்களை பிரிந்து செல்கிறார். வதை முகாம்கள் ஒட்டிய காட்சிகள் மிகுந்த வலி தர கூடியவை.

வெட்ட வெளியில் அங்கங்கே சிறு சிறு குடிசை கொண்டு வேலை செய்யும் மக்களை ஓர் ஜெர்மன் உயர் அதிகாரி தன் வீட்டு மாடியில் இருந்தபடி கண்காணிக்கிறான். இரண்டு பேர் மைதானத்தில் கையில் பளுவை தூக்கிய வண்ணம் நடந்து கொண்டு இருக்கின்றனர். அதில் ஒருவன் பளு தாங்காமல் சற்று தடுமாற, எங்கிருந்தோ வந்த குண்டு அவன் தலையை துளைக்க அவன் அப்படியே சரிகிறான். மற்றவன் தன் கையில் உள்ள பளுவை தூக்கி கொண்டு வேக வேகமாக நடக்கிறான்.



மற்றொரு காட்சியில் முகாமில் மருத்தவ பரிசோதனை நடைப்பெறுகிறது. பெண்கள், முதியவர் என பாகுப்பாடு இல்லாமல் அனைவரும் நிர்வாணமாக அந்த மைதானத்தை சுற்றி வர பணிக்கபடுகின்றனர். இப்படியே இரண்டு மூன்று முறை சுற்றி வந்த பின் மெல்ல மூச்சு வாங்குபவர்களும், சற்று சோர்ந்து காணப்படுபவர்களும் சுடப்படுகின்றனர். அடுத்த சுற்றுக்கு மற்றவர்கள் ஆயத்தமாகின்றனர்.

படத்தின் இறுதி காட்சியில் 1993 ஆம் வருடம், போர் முடிந்த 48 ஆண்டுகளுக்கு பின் ஷிண்ட்லரின் கல்லறையில் சிறு கல்லை வைத்து யூத இன மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். போலந்தில் வாழும் யூதர்களின் எண்ணிக்கை 4000, ஷிண்ட்லரால் காப்பாற்றப்பட்டு உலகெங்கும் வாழும் ஷிண்ட்லர் யூதர்களின் எண்ணிக்கை 6000 என்ற வாக்கியம் மெல்ல திரையில் தோன்றி மறைகிறது.



“In memory of the more than six million Jews murdered” என்ற வரிகளுடன் படம் நிறைவடைகிறது.

2. The Pianist (2002)

Director: Roman Polanski

Awards: Palma d’Or at Cannes, 2 Academy awards

ஒரு இசைக் கலைஞன் மேல் போர் தன்னுடைய குரூரமான கைகளை விரிப்பதை சித்தரிக்கும் படம் இது. ஸ்பில்மான் என்னும் பியானோ இசை நிபுணர், போலாந்து நாட்டில் உள்ள வானொலியில் பணி புரிகிறார். அந்த சமயம் ஜெர்மன்யின் தாக்குதல் தொடங்குகிறது. பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஜெர்மனி எதிர்க்க போகிறது என்னும் செய்தி கேட்டு அவர்கள் மனம் சற்று சமாதானம் அடைகிறது. மிக விரைவில் இந்த போர் நின்று விடும் என்று.



மனித கனவுகளை விட அவனது குரூரம் வலிமையாக போர் தீவிரமடைகிறது. ஜெர்மன் போலாந்தை ஆக்ரமித்தப் பின் யூதர்கள் மீது அவர்கள் காழ்ப்புணர்ச்சி திரும்புகிறது. ஸ்பில்மானும் அவரது குடும்பத்தினரும் கெட்டோ என்னும் வதை முகாமிற்கு அழைத்து செல்ல படுகின்றனர். ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் திரைப்படம் நம்மை ஒரு பார்வையாளனாய் உணர செய்வதென்றால், பியானிஸ்ட் நம்மை அந்த கலைஞனோடு சேர்ந்து பதற்றம் கொள்ள செய்கிறது.

படம் முழுக்க ஒரு இசை கலைஞன் பார்வையில் நகர்வதினாலோ என்னவோ, அதிர்வுகள் மிக மென்மையாகவே உருவாக்கப் பட்டுள்ளது. முகாமிற்கு செல்லும் ஸ்பில்மான் அவரது குடும்பதினரிடம் இருந்து பிரிக்க படுகிறார். அவரை கொலை செல்ல அழைத்து செல்லப்படுகையில், வானொலியில் அவருடன் பணி புரிந்த யூதர் அல்லாத ஒருவரால் காப்பாற்றப்பட்டு ஒரு தனி வீட்டில் தங்க வைக்கப்படுகிறார்.



அங்கே தங்க முடியாத நிலை ஏற்பட்ட உடன், இடிந்த கட்டடங்களில் வசிக்க துவங்குகிறார். அங்கே போதிய உணவு இல்லாமல் சோகையுற்று மஞ்சள் காமாலையால் பாதிக்கப் படுகிறார். இதனூடே வதை முகாம்களில் மனித வேட்டை எந்த மனிதமும் இல்லாமல் நடை பெறுகிறது. இடிந்த வீடுகளை பார்வையிடும் ஒரு ஜெர்மன் அதிகாரி ஸ்பில்மானை கண்டுபிடிக்கிறார். இவர் ஒரு பியானிஸ்ட் என தெரிந்த பின், இவரை வாசிக்க பணிக்கிறான். பியானோவை தொட்டே ஒரு வருடம் ஆன நிலையில், அதை மீண்டும் தொட்ட பரவசத்தில் ஒரு இசைக் கோர்வையாய் வாசிக்கிறார். இந்த இடத்தில் ஆட்ரியான் ப்ரோடியின் நடிப்பு அற்புதமானது.



அதன் பின் அந்த ஜெர்மன் அதிகாரி, அவரை காப்பாற்றி தினம் உணவு தருகிறான். அதற்குள் ரஷ்ய படை அங்கே வர ஜெர்மன் அதிகாரிகள் சிறைபடுகின்றனர். ஸ்பில்மான் சோர்வுற்று பிணங்கள் சிதறி கிடக்கும் தெரு வழியாக தன் வீடு நோக்கி செல்கிறார். அவரை காப்பாற்றிய அந்த ஜெர்மன் அதிகாரி, ரஷ்ய படைகளால் பிடித்து செல்லப் பட, அவர் ஸ்பில்மானுக்கு தெரிந்த ஒருவர் மூலம் அவருக்கு செய்தி அனுப்புகிறார். ஆனால் ஸ்பில்மான் வருவதற்குள் அவர்கள் வேறு இடம் மாற்றப்படுகின்றனர்.

ஸ்பில்மான் அதன் பின் தன் அனுபவங்களை புத்தகமாய் எழுதி 2000 ஆம் ஆண்டு இறந்து போனார் என்னும் செய்தி திரையின் ஊடே நகர்கிறது. அவரை காப்பாற்றிய அந்த ஜெர்மன் அதிகாரி ரஷ்ய வதை முகாமில் 1952 ஆம் ஆண்டே கொல்லப்பட்டார் என்னும் செய்தியோடு.

மிகுந்த உக்கிரம் மிகுந்த ஜப்பான் தீவான இவோ ஜிமாவில் நடந்த போர், ஹிட்லரின் இறுதி நாட்கள், ஹிட்லருக்கு எதிராக நடந்த புரட்சிகள் ஆகியவை பின் வரும் பதிவுகளில்

தொடரும்….

Wednesday, November 4, 2009

திருவான்மியூர்

பலகை வாரவாதி சாலையிலிருந்து இடப்புறம் திரும்பி கரடு முரடாக இருந்த கச்சாப் பாதையில் சிறிது வயல் வெளியும் நிறையவே கட்டாந்தரையாக இருந்த பிரதேசத்தில் அரை மைலுக்கும் மேல் நடந்தால் திருவான்மியூர் கோயிலின் மேற்கு கோபுரம் வரும். சம்பந்தர் பாடி புகழ் பெற்ற தளம் இது. மருந்தீஸ்வரர் உடன் உறையும் திரிபுர சுந்தரி கோவில் கொண்ட இடம். திருவான்மியூருக்கு வழி 1950களில் இப்படிதான் சொல்லப்பட்டது.



பலகை வாராவதி என்பது இப்போது பாடாவதி ஆன பெயர், அது முத்துலட்சுமி சாலையாய் உருமாறி, கல்கி சாலை என அழைக்கப்பட்டு, எம். எஸ். சுப்புலக்ஷ்மி சாலை ஆகி பழைய மகாபலிபுரம் சாலை என அழைக்கப்பட்டது. எல்லா வளர்ச்சியும் அடைந்த பின் நம் வழக்கப்படி அதற்கு ராஜிவ் காந்தி சாலை என பெயிரடப்பட்டது.

“நம்ம காசுல போடுற ரோடுக்கு ஏன் தலைவர்கள் பேர வைக்கிறாங்க, இதுல சுங்க வரி வேற. இதுக்கு, கோயிலுக்கு லைட் வாங்கி போட்டுட்டு தன் பேர போட்டுகிறவங்க எவ்வளவோ மேல்” (உபயம்: என் ரூம் மேட்)

எல்லாரையும் போல எங்களுக்கும் முதலில் திருவான்மியூரில் தான் வீடு கிடைத்தது அல்லது நாங்கள் கடற்கரையை ஒட்டி தான் வீடு தேடினோம். எனக்கு முன்னாலேயே வந்து வீடு பிடித்து விட்ட என் நண்பன், நான் சென்னை வந்து இறங்கியபோது, OMRல டைடல் பார்க் வந்துடு, அப்படியே அங்க இருந்து ஜெயந்தி தியேட்டர் சிக்னலுக்கு வந்துட்டு ஒரு ஆட்டோ புடி, ஆட்டோகாரன் கிட்ட, Seaward Street அஜீத் வீட்டுக்கு போகனும்னு சொல்லு என்றான்.

ஆட்டோகாரனிடம் இதை அப்படியே ஒப்பித்தேன், “அஜீத் வீடா, எனக்கு சரத் குமார் வீடு தானே தெரியும் என்றான்” (கிட்டத்தட்ட பாலவாக்கம்). கண்டிப்பா அதற்காக சரத் குமார் வீட்டிற்கு பக்கத்தில் வீடு எடுக்க முடியாது. ஒருவாறு என் நண்பனிடம் தொலைபேசி, சுச்சி வீட்டை கடந்து, அஜீத் வீடு வழியாக, யேசுதாசின் சென்னை வீட்டை ஒட்டிய ஒரு சந்தில் இரண்டாவது மாடியில் ஒரு ஆச்பெஸ்டாஸ் கூரை போட்ட வீட்டில் தஞ்சம் புகுந்தேன். அந்த வீட்டை பற்றிய மேல் விபரம் வேண்டுபவர்கள் பார்வை சிறுகதையின் வர்ணனைகளை பார்க்கவும்.

அலுவலகத்தில் சேர்ந்த முதல் ஒரு வருடம் எனது வாசம் திருவான்மியூரில் தான். ஆனால் அங்கே ஒன்றும் வாசம் நன்றாக இருந்ததில்லை, எப்போதும் உப்பும் மீனும் கலந்த காற்று. கையில் முதன் முதலில் காசு சேர்ந்த சந்தோஷத்தில் அலைந்த நாட்கள் அவை. வந்த புதிது என்பதினால் வண்டி வாங்கி இருக்கவில்லை. திருவான்மியூர் கடற்கரையிலே பல மாலை கழிந்தது. ஐந்து நிமிடத்தில் எட்டி விட கூடிய தூரத்தில் கடல். தூக்கம் வராமல் புரளும் இரவுகளில் வெளியே வந்தால் கடல் அலைகள் ஓயாமல் புரளும் இசை கேட்கும்.

பல வீடுகளில் மொட்டை மாடிகளிலேயே எல்லோரும் படுத்திருந்தனர். கடல் காற்றினாலோ என்னவோ, கொசு அதிகம் இருக்கவில்லை. அந்த சிறிய அறையில் தூங்க இடம் இல்லாமல், வெளியே படுத்து கொண்டு தூங்கிய இரவுகளில் நீண்ட நாட்களுக்கு பின் நிலவை பார்த்து கொண்டே தூங்கியது நினைவு இருக்கிறது. கடலில் இருந்து நேரடி தொடர்பு என்பதால், நிலத்தடி தண்ணீருக்கு எப்போது ரோஷம் அதிகம். அவ்வளவு உப்பு ஆகாது, திருமணம் வரை தலை முடியை காக்கும் பொருட்டு இரண்டு மாடி கீழே இறங்கி அடி பம்பில் தண்ணீர் அடித்து கொண்டு வருவோம்.

நீண்ட நாட்களாக என்னிடம் எதையோ பேச துடிப்பது போல் பார்த்து கொண்டிருந்த அந்த பக்கத்து வீட்டு குட்டி பெண், ஒரு முறை நான் தண்ணீர் பிடிக்கையில் தான் வந்து என்னிடம் பேசியது. “அண்ணா, அந்த டாங்க்ள தண்ணீ இருக்கு, மாசம் இருபத்து ரூபா கொடுத்த அதுல இருந்த பிடிச்சுக்கலாம்” என்றாள்.

எதிர்கால கனவுகள் சுமந்த பேச்சுக்களை பல நாட்கள் அந்த மொட்டை மாடி சுவர்கள் தான் கேட்டு கொண்டிருந்தது. ஒரு வருடத்தில் வெளிநாடு, இரண்டு வருடத்தில் பதவி உயர்வு, ஊர்ல அப்பாவுக்கு ஒரு புது வண்டி என. அதற்கு முன்பு அந்த வீட்டில் இருந்தவர் அலுவலகம் மூலம் வெளிநாடு சென்று இருக்கிறார் என்பது கூடுதல் சந்தோஷம் அளித்தது. ஆனால் அதையே காரணம் காட்டி வீட்டு ஓனர், “ராசியான வீடு தம்பி என்று ஒரு வருடத்தில் இரண்டு முறை வாடகை உயர்த்தி விட்டார்”. இத்தனைக்கும் எனது அறை நண்பனின் மாமா முறை அவர்.

திருவான்மியூர் கடற்கரையில் இருந்து தெரிந்த பெசன்ட் நகர் கடற்கரையை ஒருமுறை நடந்தே கடந்தோம். சூரிய உதயம் பார்க்க அலாரம் வைத்து எழுந்தோம். டீ.வீ தொடர் நடிகர்கள் நடிகைகள், தொலைகாட்சியில் செய்தி வாசிபவர்கள், பயில்வான் ரங்கசாமி, காதல் சந்த்யா என பார்த்த அத்தனை விஷயங்களையும் பெருமையாய் ஊரில் சொல்லி கொண்டு திரிந்தோம். கையில் காசு பார்த்த சந்தோஷத்தில் புதிது புதிதாய் புத்தகம் வாங்க தொடங்கினேன்.

இப்படி எல்லாம் எழுதுவாங்களா என வியந்தது அந்த சிறிய வீட்டில் தான் தொடங்கியது, பிடித்த அத்தனை எழுத்துகளின் சொந்தகாரர்களையும் பார்த்து விடுவது என முடிவு எடுத்தும் அங்கேதான். சுஜாதா படித்து விட்டு அவரை சந்திக்கும் முன் அவரது எல்லா எழுத்துக்களையும் படிக்க வேண்டும் என அவரது புத்தகங்களை படித்து தள்ளினேன்.

மீண்டும் ஒருமுறை வாடகை ஏற்றப்பட்ட போது, மனம் தாங்காமல் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. இப்போதும் விருப்பமான அந்த கோவில், பெரும்பாலும் யாருமற்ற அந்த கடற்கரை தெருக்கள், கடைசி வரை சிரித்த படியே பரிமாறிய அந்த வேப்பமரத்தை ஒட்டிய பாட்டி மெஸ், RTO Bus Stop எல்லாம் அவ்வபோது நினைவு வருகிறது.

இப்போது யாரவது முதல்ல சென்னைல எங்கே இருந்தீங்க என்றால், திருவான்மியூர்!, தி.ஜா தெரியுமா அவர் அங்கதான் கடைசியா வாழ்ந்தாராம். அப்புறம் அந்த கோவில் 1500 வருஷம் பழைமையான கோவிலாம். சம்பந்தர் இந்த கோவில பத்தி பாடி இருக்கிறார். ரொம்ப நல்ல இடம் பார்த்துக்கோ என்றுதான் பேச துவங்குகிறேன்.

எப்போதாவது அந்த கடற்கரைக்கு செல்கையில், கனவுகளோடு திரியும் முகங்களை பார்க்க முடிகிறது. ELT Tag போட்டு கொண்டு சந்தோஷமாய் வருபவர்களோடு நான் பார்த்த எல்லா முகங்களும் வந்து வந்து போகிறது. அதனோடு ஓரமாக சுஜாதாவை கடைசி வரை சந்திக்கவே இல்லை என்ற எண்ணமும்.

Thursday, October 29, 2009

என் ஜன்னல் வழியே # 5

சமீப காலமாய் காந்தியைப் பற்றிய பல செய்திகளைக் கேள்விப் பட்ட வண்ணமே இருக்கிறேன். மிட்டாய், காலை கொடியேற்றம், பேச்சு போட்டி, மாறுவேட போட்டிகளை கடந்த பின் தான் காந்தியைப் பற்றிய சில புரிதல்கள் எனக்கு உருவாக தொடங்கியது. பள்ளி இறுதி வகுப்பில் ஒருநாள், எங்கள் ஊர் நூலகத்துக்கு சென்று சத்யசோதனை படித்தது நினைவு இருக்கிறது. அவருக்கு அசைவ உணவு சாப்பிட்ட அன்று இரவில் ஆடு கத்துவது போல் கனவு வந்திருக்கிறது என்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன். அதே போல் எனக்கும் நேர்ந்திருக்கிறது. மீண்டும் இதே வரிகளை சுஜாதா க.பெ வில் குறிப்பிட்ட அன்று ஒரு மெல்லிய சிரிப்பு வந்தது.

நம்மில் பலரை போலவே அவரும் அப்பாவிடம் இருந்து காசு திருடி இருக்கிறார். மிக எளிய வார்த்தைகள் கொண்ட அந்த புத்தகம் எனக்கு மிகவும் பிடித்து போனது. அப்போதைக்கு என்னால் உள்வாங்கி கொள்ள முடியாத விஷயங்களுக்காக இப்போது மீண்டும் அவற்றை படித்து கொண்டு இருக்கிறேன். சமீபத்தில் அமெரிக்க அதிபரிடம், நீங்கள் யாருடன் உணவு அருந்த அசைப்படுகிறீர்கள் என்பதற்கு, “காந்தி” என பதில் அளித்தார். அதைப் பற்றிய எழுத்தாளர் வாஸந்தி அவர்களின் கட்டுரையை இங்கே காணலாம். அதே போல், அம்பேத்காரையும், காந்தியையும் ஒப்பு நோக்கி, ஜெயமோகனின் ஒரு நீண்ட கட்டுரை அவரது வலைத்தளத்தில் வந்துள்ளது. மிக நேர்த்தியான கட்டுரை, ரசித்து படித்து கொண்டு இருக்கிறேன்.

Indian Born American wins Nobel படிக்க சந்தோஷமாய் இருந்தாலும், அதன் நிதர்சனம் உறுத்துகிறது. திரு. வெங்கடராமன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நோபெல் பரிசு, நமது உடம்பில் உள்ள செல்லில் ஒரு முக்கிய பங்கு ஆற்றும் Ribosomeன் வடிவத்தை கண்டுபிடித்ததற்கு கொடுக்கபட்டுள்ளது. உண்மையில் மிக சிக்கலான காரியம் அது செய்வது.

எளிதில் புரிந்து கொள்ள இப்படி வைத்து கொள்வோம், முதலில் ஒரு கதையோ, கட்டுரையோ ஒரு ரஷ்ய எழுத்தாளருக்கு அவர் மனதில் எண்ணங்களாக உருவாகிறது. அதை அவர் பதிவு செய்கிறார் என வைத்து கொள்வோம். இப்போது அதை நாம் படிக்க வேண்டுமானால், ரஷ்ய மொழியும் ஆங்கிலம் (அ) தமிழ் தெரிந்த ஒருவர் மொழி பெயர்த்தால் தான் நம்மால் படிக்க முடியும் அல்லவா. அந்த மொழி பெயர்ப்பை கண்காணிக்கும் வேலையைத்தான் செய்கிறது Ribosome. இப்போது மேற்சொன்ன விஷயத்தில் இரு நிகழ்வுகள் உள்ளன என்பதை நீங்கள் ஊகித்து இருப்பீர்கள், ஒன்று பிரதிஎடுத்தல், மற்றொன்று மொழிபெயர்த்தல்.




(மேலே உள்ள படம், நமது செல்லின் குறுக்கு வெட்டு தோற்றம், படத்தில் உள்ள அளவு நேர்த்தியாக ஈஸ்ட்மன் கலர் எல்லாம் இருக்காது. படத்துக்காக சில எடிட்டிங் வேலை செய்யப்பட்டுள்ளது. அதில் strawberry பழ நிறத்தில் உள்ளதே அவை ER எனப்படும் Endoplasmic Reticulum , அதில் உள்ள சிறு சிறு கரிய புள்ளிகள் தான் நோபெல் பரிசு வாங்கி தந்தது )

நமது செல்லின் கருவுக்குள் இருக்கும் செய்திகளை அப்படியே பிரதியெடுத்து வருவது mRNA (Messenger RNA) எனப்படுகிறது. இந்த mRNA என்பது, ஒரு ரஷ்யரின் எண்ணங்களை பிரதி எடுத்ததை போன்ற புரியாத லிபி . இந்த mRNA வில் செய்திகள் மூன்று மூன்று எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளின் கோர்வையாய் உள்ளது. ஒவ்வொரு மூன்று எழுத்து வார்த்தைக்கும் நிகரான ஒரு பொருள், அதாவது அந்த ரஷ்ய வார்த்தைக்கு நிகரான தமிழ் சொல் எனக் கொள்வோம், உள்ளது.

அந்த சொற்களை தாங்கி நிற்பது தான் tRNA (Transfer RNA). இப்போது mRNAவில் உள்ள அத்தனை வார்த்தைகளும் மிக சரியாக tRNA வார்த்தைகளாக Ribosomeன் கண்காணிப்பில் மொழி பெயர்க்கப்பட்டு பல சொற்றோடர்கள் கொண்ட ஒரு கதை நமக்கு கிடைக்கிறது . அதுதான் ப்ரோடீன், நம் நிற்க, நடக்க, கதை எழுத, கவிதை எழுத, சைட் அடிக்க தேவைப்படும் அத்தனை சக்தியை தட்டும் ப்ரோடீன். நமது தமிழ் மெட்டில் சொல்ல வேண்டும் என்றால், “ஒரு mRNA ஒரு tRNA சரியாக மொழி பெயர்ந்தால் ப்ரோடீன்”.



சுஜாதாட்ஸ்:

என் கல்லூரி படிப்பு, திருச்சி புனித வளனார் கல்லூரியில், கல்லூரியில் அப்படி ஒன்றும் பிரபலமாகவோ, மற்றவர் கவனத்தை கவர்ந்தவனாகவோ இல்லை. அப்துல் கலாம் எனது வகுப்பு தோழர், அவரும் அப்போது கல்லூரியின் அத்தனை பரிசுகளையும் கவர்ந்து சென்றதாக நினைவில்லை. இதில் எதோ ஒரு நீதி இருக்கிறது

இந்த தொடரின் முந்தையப் பதிவுகள் 1 | 2 | 3 | 4 |

வலி

இன்று ஊருக்கு வருவதாய் நான் யாரிடமும் சொல்லவில்லை, இருந்தால் அம்மா நான் வரும் வரை தூங்காமல் விழித்து கொண்டு இருப்பாள். நான் கோவையில் இருந்து பேருந்து ஏறியது முதல் சரியாக நடத்துனர் ஊர் பெயர் சொல்வதற்கு முன்பு தொலைபேசிவிடுவாள். அவினாசி தாண்டியாச்சா? இன்னுமா பெருந்துறை வரலை?. சரி சங்ககிரி வந்துட்டு கூப்பிடு என ஒரு ஐந்து முறையாவது பேசிவிடுவாள். அதுவும் பேருந்து சிறிது தாமதம் என்றால், அவள் குரலே மாறி விடும், அதனாலேயே நான் அவளிடம் சொல்லவில்லை. இன்று கல்லூரியில் இருந்து கிளம்ப நேரமாகி விட்டது, அந்த தெர்மோடைனமிக்ஸ் ப்ரொபசர் கடைசி வகுப்பில் கழுத்து அறுத்து விட்டார்.

காந்திபுரம் சென்று அங்கிருந்து கிளம்பவே மணி 8 ஆகி விட்டது, எப்படியும் சேலம் போக மணி 12 என்றாலும், ஊத்தங்கரையில் வீடு போய் சேர 2 மணி ஆகிவிடும். அம்மா எத்தனை மணிக்கு படுத்தாலும் காலை ஆறு மணிக்கு எழுந்து விடுவாள். எப்படியும் நான் வந்த பின் ஒரு இரண்டு மணி நேரம் அவள் தூக்கம் கெடத்தான் போகிறது. கல்லூரியில் நடந்த ஒவ்வொன்றையும் அவளிடம் சொல்லாமல் எனக்கோ, வீட்டில் நடந்ததை என்னிடம் சொல்லாமல் அவளுக்கோ அந்த இரவு தூக்கம் கொள்ளாது. நான் நினைத்ததை போலவே, பேருந்து சற்று தாமதமாக தான் வந்து சேர்ந்தது.

ஊரில் லேசாக மழை பெய்து வடிந்து இருந்தது. எப்போதும் பேருந்து நிலையத்தை ஒட்டிய ஓலை கொட்டகையில் தூங்குபவர்கள், பேருந்து நிலைய கட்டிடத்திற்குள் ஒடுங்கி நின்றனர். இரவு ரோந்து வரும் காவலர்களும் அவர்களை ஒன்றும் சொல்லவில்லை. வீடு வந்து சேர்ந்த போது மணி மூன்று, அம்மாதான் கதவு திறந்தாள். கண்ணு என்று அணைத்து ஒரு முத்தமிட்டாள். நான் சற்று குனிய வேண்டி இருந்தது. ஏண்டா குட்டி ஒரு போன் பண்ண கூடாதா? என்றாள். நான் ஏன் பண்ணவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டிருப்பாள்.

நான் முகம் கழுவி வருவதற்குள், என் லுங்கியும் துண்டும் எடுத்து வைத்து விட்டு, தோசை வார்த்துக் கொண்டிருந்தாள்.

எதுவும் சாப்பிடலதானே?

இல்லை மா.

என்னா வயிறோடா உனக்கு?, பஸ்ல போறதுக்கு முன்ன சாப்டா கூட ஒத்துக்க மாட்டனுதே.

விடுமா பழகிடுச்சு.

ரூம்ல பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா? குமார் எப்படி இருக்கான்?

ம்ம்ம்… தோசை செம மா… எல்லாம் நல்லா இருக்காங்க.

அம்மா சற்று திரும்பையில்,

ஏம்மா இந்த கன்னம் கொஞ்சம் வீங்கின மாதிரி இருக்கு?

மெல்ல தொட்டு பார்த்து கொண்டு,

அதுவா இந்த கடவா பல்லுல இரண்டு நாளாவே வலி.

அப்பாட்ட சொன்னயா, எதாவது டாக்டரா பார்த்தாயா?.

இல்லை என்றாள். அப்பா எங்கள் யாரையும் டாக்டரிடம் அழைத்து சென்றதாய் நினைவு இல்லை, முக்கியமாய் அம்மாவை. ஆனால் எப்போது சொன்னாலும், உடனே காசு கொடுத்து விடுவார். எப்போதும் அதற்கு கணக்கு கேட்க மாட்டார். அவருக்கு ஏற்றார் போல், அம்மா உடம்பு சரி இல்லாமல் இருந்து நான் பார்த்ததே கிடையாது. இல்லை ஒருவேளை அப்படி இருந்த சமயங்களை நாசுக்காய் எனக்கு தெரியாமல் மறைத்து விட்டாலோ என்னவோ. ஆனால் அப்பாவிற்கு காய்ச்சலோ, இல்லை அந்த ஒற்றை தலை வலியோ வந்து விட்டால், வீடே ஒரு விதமான சோகத்தில் மூழ்கி விடும். வீட்டில் எல்லாருக்குமே சீக்கோ என்னும் அளவு.

எப்போதும் போல் அந்த சமயங்களில் என்னால் பேச முடிந்ததில்லை. அப்பா அந்த காவி நிற கம்பளியை சுற்றிய வண்ணமே இருப்பார். அப்போதும் அவருடைய வழக்கமான புகை பிடிக்கும் நேரம் தவறுவதே இல்லை. அவரிடம் எப்போதும் வரும் புகை நாற்றம் போல் இல்லாமல் அந்த நாளில் சற்று வேறு மாதிரி இருக்கும். அந்த சமயங்களில், அம்மா அவருக்கு கொடுக்க சொல்லும் சுடு தண்ணீரை கூட, வைத்த உடன் ஓடி வந்திருக்கிறேன். ஒருமுறை அவருக்கு வந்த சளி மூன்று வாரம் நீடித்தது, அப்போதெல்லாம் அப்பா வெளியே செல்வதே இல்லை. முடிந்தால் மாடியில் ஒரு 10 நிமிடம் நடந்து விட்டு வருவார்.

வருத்த வறுத்த கடலையும் கொஞ்சம் வெள்ளமும் வெல்லமும் சாப்பிடுவார். அப்பாவுக்கு என்னமா என்றதற்கு, டாக்டர் தம் அடிக்க கூடாதுன்னு சொல்லிட்டார், அதான் இப்படி சுத்தி சுத்தி வரார் என்றாள். அவள் சொன்னது போலவே, அப்பாவிடம் வரும் அந்த நாற்றம் வர வில்லை. அந்த நாளில் ஒரு முறை நானே அவருக்கு நெஞ்சில் தைலம் தேய்த்தது நினைவிருக்கிறது. ஆனால் அது மூன்று வாரம் தான்.

இப்போது கூட அம்மாவை நானே பார்த்து கேட்டிருக்காவிட்டால், பல் வலி பற்றி என்னிடம் சொல்லி இருக்க மாட்டாள். காலை எழுந்து குளித்து உடன், முதல் வேலையாய் அம்மாவை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றேன். பல்லில் ஒரு குழி இருக்கிறது என்று பரிசோதித்து விட்டு, சிமன்ட் பூச்சு ஒன்றை வைத்து அடைத்து விட்டார்கள். அம்மா வீடு வரும் வரை பல்லை நிரடி கொண்டே இருந்தாள்.

என்னமா?

இல்லை, ஏதோ பாக்கு பல் இடுக்குல மாட்டின மாதிரி இருக்கு என சொல்லி ஒரு பலவீனமான புன்னகை உதிர்த்தாள். வந்த உடன் வலி சற்று குறைந்திருந்தது. ஆனால் பல்லை நாவல் துழாவி கொண்டே இருந்தாள். என்ன என்றதற்கு ஒன்றும் சொல்லவில்லை. மதியம் சாப்பிடும் போதும் சரியாக சாப்பிடவில்லை. அடைக்க பட்ட அந்த சிமன்ட் பல்லின் அளவை விட சற்று அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தது. அதனால் மேல் பல்லோடு சேராமல், இடையில் ஒரு பாறை போல் மாட்டிகொண்டிருப்பதாக சொன்னாள்.

மதியம் அவளிடம் அதிகம் நான் பேச்சு கொடுக்கவில்லை, ஒவ்வொரு முறை வாய் அசைகையிலும் முகத்தில் வலி தெரிய ஆரமித்தது. மதியம் சாப்பிட வந்த அப்பாவிற்கு நானே உணவு எடுத்து வைத்தேன். மருத்துவமனை போய் வந்ததை சொன்னேன்.

எவ்வளவு ஆச்சு? என்றார்.

மாலை மீண்டும் அம்மாவை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றேன், அந்த டாக்டர் இல்லை, மற்றவர் பரிசோதித்து விட்டு, கொஞ்சம் அதிகமா வச்சுட்டாங்க கரைஞ்சா சரி ஆகிடும் என்றார். அம்மா வலி பொறுக்க முடியவில்லை, அதை கொஞ்சம் குறைச்சுடுங்க என்றார். அம்மாவின் வாய் நோக்கி வெளிச்சம் பாய்ச்சி, ஐந்து நிமிடத்தில் குறைத்து விட்ட பின் காலையில் இருந்து முதல் முறையாய் அம்மா சிரித்தாள்.

பல் வலி மட்டும் தாங்கவே முடியருது இல்லை சார், உயிரே போய்டுது. பத்து வருஷத்துக்கு முன்ன ஒரு முறை இப்படிதான், ஆனா இதை விட பயங்கர பல் வலி, தூக்கு போட்டுக்கவே போய்டேன்.

இப்போதான் உயிரே வந்த மாதிரி இருக்கு என்றாள்.

மருத்துவமனையில் பணம் செலுத்தி விட்டு வரையில்,

என்னமா தீடிர்னு இப்படி சொல்லிட்ட, தூக்கு போடுற அளவுக்கு, நீ போய் இருந்தா எங்க நிலைமை என்ன? என்றேன்.

அதனால தாண்டா குட்டி போட்டுக்கல என்றபடி நடக்க தொடங்கினாள். அன்று அப்பாவிடம் வலியைப் பற்றி சொன்னயாமா என கேட்க நினைத்து நிறுத்தி கொண்டேன்.

Wednesday, September 30, 2009

கோவேறு கழுதைகள் - இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்

விடுமுறை நாட்களை செலவில்லாமல் கழிக்க எப்போதும் கிராமத்து பாட்டி வீடே உகந்தது. இன்றும் மறக்க முடியாத சில நினைவுகள் கிராமம் சார்ந்தே உருவானது. கோடை கால விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்க்கு செல்கையில் எப்போதும் கூழ் ஆக்குவார்கள். இரவு உணவு ரசம், பொரியல் என்ற எந்த ஆடம்பரமும் இல்லாமல், வாணலியில் வதக்கிய கத்தரிக்காய் கார குழம்புடன் முடிந்த விட்ட நாட்கள் தான் அநேகம். அதுவும், எனக்கு விருப்பமென பாட்டி வாணலியிலேயே சிறிது சாதம் போட்டு பிசைந்து தந்தது இன்னும் நினைவிருக்கிறது.

இரவு ஏழு மணிக்கு இருட்ட தொடங்கிய பின் அன்றைய அலுப்பு தீர தூக்கம் தழுவுகையில், ” அம்மா வண்ணாத்தி வந்திருக்கேன்” என்ற குரல் கேட்கும். அந்த இருளில் பாட்டி மெல்ல அசைந்து அசைந்து கூழ் எடுத்து வீட்டு வாசல் நோக்கி செல்வது ஓவியம் போல் மனதில் தங்கி விட்டிருக்கிறது.

அதனால் தானோ என்னவோ, இமையம் அவர்களின் “கோவேறு கழுதைகள்” படிக்க ஆரமித்த இரண்டு பக்கங்களில் முழுக்க அந்த நாவலோடு கரைந்து விட முடிந்திருக்கிறது. ஆரோக்கியம் அந்த கிராமத்து துணிகளை எல்லாம் துவைக்கும் வண்ணாத்தி. கதை ஆரோக்கியம், அவளது கணவன் சவுரி, பிள்ளைகள் ஜோசப்,பீட்டர், மேரி மற்றும் மருமகள் சகயம் ஆகியோரை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மெல்ல மாற்றங்கள் காணும் ஒரு கிராமமும், வேர்களை விட்டு செல்ல துடிக்கும் புதிய தலைமுறையும் ஆரோக்கியத்தின் பார்வையில் விவரிக்கப்படுகிறது. நாவலில் முதல் பாகம் அவர்கள் தங்கள் தெய்வமான அந்தோனியாரை பார்க்க வெளி ஊருக்கு செல்வதுடன் தொடங்குகிறது. குடும்பத்துடன் ஊருக்கு செல்ல அவள் ஊரிலுள்ள மக்கள் அனைவரிடமும் சம்மதம் பெறும் காட்சிகள் தொட்டு செல்லப் பட்டுள்ளது. நேரடியாக எந்த அவலமும் சித்தரிக்கப் படாமலேயே, அந்த இடங்களில் இரந்து வாழ வேண்டிய ஆரோக்கியம் குடும்பத்தின் நிலை சொல்லப்பட்டு விடுகிறது.

இயல்பான சித்தரிப்புக்களும், யதார்த்தமான நிகழ்வுகளும் இணைந்து ஒரு அசல் வாழ்வு கண் முன் நிறுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, நாவலின் இரண்டாம் அத்தியாயத்தில், இறந்து போன ஒருவருக்கு சவுரி பாடை அமைக்கும் காட்சிகள் விளக்கப்படும் இடம். அதே போல் ஆரோக்கியம் மற்றும் மேரி இடையேயான உறவும், மேரி மேல் அவள் கொள்ளும் பாசமும் சொல்லப்படும் இடங்கள் அழகானவை. மேரி கோவித்து கொண்ட ஒரு கணத்தில் உவமை இப்படி வருகிறது, “நல்ல பாம்பாட்டம் மூஞ்சிய தூக்கி வக்சுக்கிறா?”

காலையில் வீடுகளுக்கு சென்று துணி எடுத்து வருதல், இரவு சட்டியை தூக்கி கொண்டு அங்கு சோறு வாங்க போதல் என நீள்கிறது அந்த வாழ்க்கை. முதன் முதலில் இந்த வாழ்க்கைக்கு உட்படுத்தபடுகையில், பீட்டர் ஆரோக்கியத்திடம்,

” ஏம்மா நாம்ப ராச்சோறு எடுக்காம இருக்கக் கூடாதா?” என்கிறான்.

ஊரில் உள்ள பசங்க எல்லாம் ராச்சோறு என கிண்டல் செய்வதை அவன் கூறும் இடமும், ” மத்தவுங்க ஊடுமாரி நமூட்ட்லியும் சோறாக்கு” என கூறும் இடமும் அழுத்தமானவை.



பல சமயங்களில் ஆரோக்கியம் படும் ஆற்றாமையும் சோகமும் எளிய வார்த்தைகள் கொண்ட பாடல்களாய் உருபெறுகிறது. தன் மகன் அவன் மனைவியின் சொல் கேட்டு நகரத்திற்கு சென்ற பின், தன்னை காப்பாற்றுவான் என நம்பிய அவன் விட்டு சென்ற துயரை

பச்சக் கிளி வளர்த்தன் - அது

பறக்கையிலே தப்பவிட்டன்,

குஞ்சுக் கிளி வளர்த்தன் - அது

கூவையிலே தப்பவிட்டான்

என புலம்புகிறாள்.

அதே போல் நாவலில் ஆரோக்கியம் அந்த ஊரிடம் கொண்ட பற்றும், ஊர் மக்கள் மீது கொண்ட பாசமும் அசலானவை. மாலை நேரத்தில் வீடுகளில் அமர்ந்திருக்கும் ஊரார்களை வார்த்தைகள் மூலம் இணைத்து போகிறாள். ஊரிலுள்ள எல்லார் மேலும் அவளுக்கு இணக்கம் இருக்கிறது. கடைக்கு சென்று வீடு திரும்புகையில் எதிர்படுபவர்களிடம்,

” அட அந்தோனியார, இம்பூட்டு எலப்பாயிருக்கீங்களே, சொவமில்லியா?

“இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமீ”

“ உங்க பற வண்ணாத்தி சாமீ” என சொல்லியபடியே செல்கிறாள்.

மெல்ல மெல்ல அந்த ஊர் தன் நிலை மாறும் இடமும், அந்த மக்கள் படும் மாற்றங்களும் ஆரோக்கியத்தின் பாடல் வழி வெளிபடுகிறது.

வாவுக்கும் அஞ்சவில்ல

சாவுக்கும் அஞ்சவில்ல

சமாதிக்கும் அஞ்சவில்ல

சமாதிக்கும் அஞ்சவில்ல - பாயிம்

சனங்களுக்கு அஞ்சனனே!

தலித் ஆக்கங்களில் மிக முக்கியமான நாவலாக கருதப்படும் இந்த நாவல் 1984ல் வெளியானது. ஆங்கிலத்தில் “Beasts of Burden ” என்ற பெயரில் வெளியாகி பரவலான வாசக கவனத்தை பெற்றது. க்ரியா பதிப்பக வெளியீடான இந்த நாவல் தமிழ் நாவல்களில் மிக முக்கியமான யதார்த்தவாத நாவல்.

Friday, September 25, 2009

என் பெயர் ராமசேஷன் - பிம்பங்களை களைந்தபடி

தூசு படாமல் வளர்ந்து முதன் முதலில் இளைஞனாக இந்த சமூக கட்டமைப்பில் நிறுத்தபடுகையில் தனது தனித்தன்மை பற்றிய கேள்வி வருகிறது. இந்த அமைப்பில் தன்னை பொருத்தி கொள்வது பற்றிய தன்னுணர்வு தலை தூக்க தொடங்குகிறது. தமது உயரத்திற்க்கோ, நடைக்கோ, பழக்கத்திற்கோ ஏற்றார் போல் இல்லாத இந்த அமைப்பைப் பற்றிய சலிப்பு உருவாகிறது. தனது பாதையை முடிவெடுப்பது பற்றிய கனவுகளும், அது தரும் நிச்சயமின்மையும் தொடர்ந்து பயமுறுத்த தொடங்குகிறது. இது வரை குழந்தை என சொல்லி வந்த வீட்டில், அவனை பற்றிய எதிர்ப்பார்ப்புகள் மாறுகின்றன.

இந்த நிச்சயமின்மை தரும் பதற்றம் சமூகத்தை பற்றிய கோபமாகவும், மேலான ஒரு நாட்டை பற்றிய கனவாகவும், ஒரு வகையில் காதலாகவும், சில சமயம் காமமாகவும் வெளிப்படுகிறது. ஏதோ ஒரு அலுவலகத்தில் தன்னை பொருத்தி கொண்டு திருமணம் செய்து கொள்ளுதல், வேறு தளத்திற்கு நகர்த்தி ஒரு தப்பித்தலை உருவாக்குகிறது. கழிந்து விட்ட அந்த இளமையும், அது தந்த வடுக்களும், அந்த போராட்டமும் மெல்ல மெல்ல தண்ணீரில் இறங்கும் கல்லை போல் மனதின் அடி ஆழத்திற்கு செல்கின்றன. தவிர்க்கப்பட்ட காதலும் அதன் நினைவுகளும் அடி நாக்கில் ஒட்டி கொள்ளும் காபியின் சுவை போல நம்மோடு ஒட்டி கொள்கிறது.

1980 களில் முதலில் உருவாக தொடங்கிய ஒரு விஷயம் Prolonged Adolescence . தமது முந்தைய தலைமுறையை விட ஒரு நீண்ட இளமை பருவத்தை கழிக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது. 18 வயதிலேயே திருமணம் என்ற நிலை மாறி, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் அதை 22-24 வரை உயர்த்தி இன்று 27-30 வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது . அப்படி எண்பதுகளில் வாழ நேர்ந்த இளைஞர்களை ராமசேஷன் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் சித்தரிக்கும் நாவல், ஆதவனின் “என் பெயர் ராமசேஷன்”.

1980 களில் வெளி வந்த காலம் முதல் தீவிரமான வாசிப்புக்கு உள்ளாகி வருகிறது “என் பெயர் ராமசேஷன்”. இந்த நாவல் இரண்டு பாகமாக பிரிக்கப் பட்டுள்ளது.. முதல் பாதியில் ராம்சேஷ் அவனுடைய அப்பா, அம்மா மற்றும் தங்கையின் அறிமுகம். அவன் கல்லூரியில் சேர்வது, அங்கு அவனுக்கு கிடைக்கும் இரண்டு நண்பர்கள் ராவ் மற்றும் மூர்த்தி. ராம்சேஷ்க்கும் ராவின் தங்கை மாலவிற்குமான காதல். நீண்ட நாள் பார்க்காதிருந்த பெரியாப்பவை சந்திப்பது ஆகியவை விவரிக்கப்படுகிறது. என்னளவில் மிகவும் கவர்ந்த இரண்டாம் பாதி, கலை, சினிமா, காதல் அதை ஒட்டி அணியப்படும் பிம்பங்கள் ஆகியவை ராமசேஷின் பார்வை மூலம் விளக்கப்படுகிறது.



காதலைப் பற்றிய பார்வைகள் மூன்று வெவ்வேறு காதல்கள் மூலம் முன் வைக்கப்படுகிறது. ஒன்று ராம்சேஷ் மற்றும் அவனது வசதி படைத்த நண்பனான ராவின் தங்கை மாலாவிற்குமானது. இரண்டு வெவ்வேறு பொருளாதார பின்னணிகள் கொண்ட அவர்களது எண்ணங்களும், அது அவர்களுக்கு இடையேயான சம்பாஷனைகளுடே பிரதிபலிப்பதும் மிக நேர்த்தியாக விவரிக்கப்படுகிறது. ராம்சேஷின் தேவைகள் முடிந்த பின் அவளை பற்றி அவள் மேல் ஒரு சலிப்பு வருகையில், அவளை பற்றி சொல்கையில்,

“அவளுடைய கேள்விகள் பலவற்றில் ‘என்னுடைய கீழ்மட்டத்துச் சூழலை‘ நாசூக்காகச் சீண்டுகிற பாவம் தொனிப்பதாக எனக்குத் தோன்றும் . அதாவது என் எல்லைகள் ராகம், தாளம், பல்லவிக்குள்ளும் சட்னி சாம்பாருக்குள்ளும் அடங்கிவிடுகிறவை. அவள் தொட்டிலில் கிடந்தபோதே சாச்சாச்சாவுக்குக் காலை உதைத்தவள், ஃப்ரூட் ஜெல்லியை நக்கினவள்… நான் இதேபோல, வேறு துறைகளில் அவளைவிட அதிகமாக எனக்கிருந்த பொது அறிவைப் பயன்படுத்தி அவளை மடக்க முயன்றால், அவள் உடனே தளுக்காக சம்பாஷணைத் தொனியை மாற்றி என்னை ஒரு dry professional type ஆக உணரச் செய்வாள். அப்பாவுடன் வெளியே போய்விட்டு வந்த குழந்தை தான் கண்ட அதிசயங்களை விவரிக்கும்போது அம்மா அதனிடம் காட்டுவது போன்ற ஒர் பாசாங்கு ஆர்வத்தையும் பரபரப்பையும் காட்டி, ‘என் கண்ணு!‘ என்று தட்டிக் கொடுப்பாள். குழந்தைத்தனமானவள், பக்குவம் பெறாதவள் என்று நான் அவளைச் சொன்னால் உடனே தாத்தா, ஹாஸ்ய உணர்ச்சியில்லாத ஜடம், என்று அவள் என்னைச் சொல்லுவாள். இதெல்லாம் எனக்குச் சலித்துப் போகத் தொடங்கியிருந்தது.”

மற்றொன்று மாலா உடனான காதல் முறிந்த பின், கல்லூரி தோழி பிரேமாவுடனான காதல். சற்று Intellectual ஆன அவளுடனான காதலில், அவர்கள் இருவரது Complex ம் மோதி கொள்ளும் இடங்களும், அவளை பற்றிய அவனது புரிதல்கள் உருவாக்கும் பிரச்சனைகளும் மிக விரிவாக பேசப்படுகிறது.

அடுத்து மிக முக்கியமான, மேலும் பேரு வாரியான காதல்களை பற்றிய கேலி ஆகியவை மூர்த்தி காதல் மூலம் விவரிக்கப்படுகிறது. மூர்த்தியின் காதலை பற்றி கூறுகையில்,

மூர்த்தி பாணி காதலுக்கு ரசிகர்கள் மிகவும் தேவைப்பட்டார்கள். நான் இன்று அவளை அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன், அவள் என்னைப் பார்த்து சிரித்தாள் அல்லது சிரிக்காமலிருந்தாள், நான் பார்த்த சினிமா போஸ்ட்டரையே அவளும் பார்த்தாள். இன்று அவள் மாட்சிங்காக ட்ரஸ் பண்ணிக்கொண்டிருந்தாள் என்கிற ரீதியில் அவன் பேசுவதை பிறரை கேட்க்கச் செய்வதன் மூலமாகவே அவன் ஒரு கதாநாயகனாக உணர்ந்தான்.

அதே போல, ராம்சேஷும் ராவும் தன் அப்பாக்களை மனதில் வைத்து உரையாடும் இடமும், ராம்சேஷ் அவனது பெரியப்பாவை சந்திப்பது மற்றும் இவன் முன் அவன் பெரியப்பா தான் ஒரு நவநாகரீகமானவன் என காட்டி கொள்ள முயலும் இடங்களும் மிக முக்கியமானவை. ராம்சேஷுக்கு தனது அப்பாவை பற்றிய புரிதல் உருவாகும் இடம் மிக மென்மையாக விவரிக்கப்பட்டுள்ளது. நாவலின் ஆரம்பத்தில் அவரை பற்றிய ஒரு மெல்லிய வெறுப்பும், ஏளனமும் கொண்ட அவனது பார்வை, அவரை அவன் விடுதியில் சந்திக்கையிலும், பின் பூங்காவில் சந்திக்கையிலும் மெல்ல உரு மாறுகிறது. ஒரு வகையில் எதிர் காலத்தில் அவனது வாழ்க்கை முறைக்கான Templateஒ அவரது வாழ்க்கை என என்னும் படி படைக்கப்பட்டுள்ளது.

இந்த நாவலை போலவே, இளைஞன் என்று உணர்ந்திருந்தவன் மெல்ல ஒரு முதிர்ச்சிக்கு வந்து தன் நிலையினை உணர்ந்து கொள்ளுதல் பற்றிய சுஜாதாவின் “நிலா நிழல்” என்னும் நாவல் எனது விருப்பத்திற்கு உரியது. திருச்சியில் இருந்து கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு அப்பாவிடம் பொய் சொல்லி திரும்பும் ஒரு இளைஞனைப் பற்றியது “நிலா நிழல்”.

அலைக்கழிக்கப்படும் இளமையின் வண்ணங்களை ஒரு சேர சொல்லும் இந்த நாவல் ஒரு அழகிய சித்திரத்தை போன்றது.

நூல்: என் பெயர் ராமசேஷன்

பதிப்பகம்: உயிர்மை

விலை: ரூ 120

Friday, August 21, 2009

அக்கா பெரியவளானப் பின் / நினைவழித்தல்

அக்கா பெரியவளானப் பின்


தூக்கம் கலைந்த நடுநிசிகளில்

அக்கா அருகில் தொலைந்து போக

துவங்கி இருந்தாள்..


கதவை திறந்த நேரங்களிலெளாம்

ரகசிய பேச்சுக்கள் நின்று போயின,


கிணற்றடிக்கு வந்து பேசும் நண்பர்களுக்கு கூட

தேனீர் வாசலுக்கே வந்தது,


எப்போதாவது பேசும்

கிராமத்து வசுவுகளைக் கூட

நிறுத்தி விட்டிருந்தாள்!


அப்புறம் ஒருநாள்,

அக்கா கல்யாணமாகி சென்று விட்டாள்.


எனக்கும் அம்மவுக்குமான

இடைவெளியை அப்படியே விட்டு விட்டு…

******************************************************************************

நினைவழித்தல்


நேற்று இரவு வடிந்து கொண்டிருந்த

கண்ணீரின் சுவடுகள்

தெரியவில்லை கண்ணாடியில்,


என் நிர்வாணம் பார்த்த மின்விசிறி

எப்போதும் போல சுழல்கிறது,


யாருக்கும் தெரியாதபடி

நனைந்து போன கைக்குட்டை

உலர்ந்து கிடக்கிறது,


சிரித்து கொண்டே அலுவலகம் நுழைகிறேன்,

ஒரு புன்னகையை ஏந்தி கொண்டு காத்திருக்கிறாய் நீ,

நேற்று கலைந்து விட்டிருந்த இடத்தை நினைவூட்டியபடி.

******************************************************************************

பிரிவு உபசாரம்


எப்போதும் கல்லூரியில் இருந்து

ஊருக்கு கிளம்புகையில்

கைப் பிடித்து பேசி கொண்டு

சேலம் வரை ஒன்றாகத்தான் வருவாய்,

மூன்று வருடம் கழித்து பார்க்கிறேன்

கைக்குழந்தையுடன்,

இப்போதும் சிரித்து கொண்டே விடை பெறுகிறாய்

உன் ஸ்பரிச தொடுகையின் சிலிர்ப்பை

உன் குழந்தையிடம் கொடுத்து

மாமாவுக்கு டாடா சொல்லு என்று….


******************************************************************************

புண்ணியம் சேர்த்து கொள்ளல்


அலுவலக நண்பர்களின்

தந்தைக்கோ தாய்க்கோ ரத்தம் தேவை

என வரும் மெயில்களை

உடனக்கு உடன் பார்வார்ட் செய்து

புண்ணியம் சேர்த்து கொள்கிறேன்,

கடைசி வரை ரத்தத்தின் க்ரூப் என்ன வென்று பாராமலேயே
******************************************************************************