Monday, November 30, 2009

செங்கம் (Alias) சென்னை

எனது அப்பா ஒரு சுகாதார ஆய்வாளர், பெரும்பாலும் சிறிய டவுன் அல்லது அதனை ஒட்டிய கிராமங்களில் தான் அவருக்கு வேலை. நான் பிறப்பதற்கு முன் அவினாசி, அந்தியூர் பகுதிகளில் இருந்திருக்கிறார். நான் பிறந்த சமயம், என் அம்மாவின் தந்தை ஊரை ஒட்டிய செங்கம் என்ற ஊருக்கு மாற்றல் வாங்கி கொண்டு வந்து விட்டார். இது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம்.

என் பள்ளி படிப்பு முழுதும் இங்கு தான். வாஜ்பாய்னு சொல்ற அளவுக்கு பெரிய ஆளும் இல்ல, ரூம் பாய் அளவுக்கு சின்ன ஆளும் இல்லை என்பது மாதிரி, இது ஒரு வகையில் ரெண்டுங்கெட்டான் ஊர்தான். சொந்த வீடு கட்டுவதற்கு முன்பு ஒரு ஐந்து ஆறு இடங்களில் வாடகை வீட்டில் இருந்தோம். எனது வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையில் உள்ள பாதைதான் என் மனதில் தங்கி விட்ட ஊர். எனது வீடு மாற மாற பாதைகள் மாறிய வண்ணமே இருக்கும். பெரும்பாலும் ஒரு பாதையை தேர்ந்தெடுத்து விட்டால், அடுத்த வீடு மாறும் வரை அதே பாதையில் தான் பள்ளிக்கு செல்வேன், வேறு பாதையில் சென்றால் யாரிடமாவது நான் திட்டு வாங்குவேன் என நினைத்து கொள்வேன், நினைத்த மாதிரியே அந்த சிடுமூஞ்சி மேக்ஸ் மிஸ் என்னை அன்று திட்டும்.

எங்கள் பள்ளி செய்யாறு என்னும் ஆற்றை ஒட்டிய படி இருக்கும். நானும் என்றாவது அதில் எங்கள் பள்ளி மூழ்கி விடும் என நம்பி பார்த்து பார்த்து பூத்து போனேன், ஒரு முறை கூட எங்கள் காம்பவுண்டு சுவர் அருகே கூட வெள்ளம் வரவில்லை. ஒருமுறை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது ஆற்றை கடக்க முடியாததால் கணக்கு டீச்சர் வரவில்லை என்பது வரையில் மட்டுமே அந்த ஆற்றினால் எனக்கு ஆறுதல்.

ஆனால் முதல் முதலில் கூட்டாஞ்சோறு ஆகியது அந்த ஆற்றை ஒட்டிய மரத்திற்கு கீழ்தான், யாரவது வந்தால் குரல் கொடுக்க வேண்டியது தான் எனது பொறுப்பு, என்னை பார்வையாளனாகவே நிற்க வைத்து கொஞ்சுண்டு சோறு கொடுத்தனர். அப்போது ஆரம்பித்த இந்த பார்வையாளன் பொறுப்பு கல்லூரி வரை தொடர்ந்து, பசங்க தண்ணி அடிக்கையில் வார்டன் வந்தால் குரல் கொடுக்க நிறுத்தி வைத்து, இன்று தனியாக வீடு எடுத்து தங்கிய பிறகு கூட அறையில் நண்பர்கள் தண்ணி அடிக்கையில், ” டேய் மதன கூட்பிட்றா, அவனுக்கு ஒரு லேஸ் கொடுத்துட்டு ஆரமிப்போம், பிரச்சனை எதுவும் இல்லாம இருக்கும் பாரு” என்னும் அளவுக்கு ஒரு சடங்காகவே ஆகிவிட்டது.

எந்த படமும் முதல் ரீலீசுக்கு எங்கள் ஊருக்கு வராது, ஓர் ஊர் எந்த அளவுக்கு பெரியது என்பதை அந்த ஊரில் உள்ள தியேட்டர் எண்ணிக்கை மற்றும் அதில் திரையிடப்படும் படங்களின் ரீலீஸ் ஆகியவற்றை வைத்தே நான் கணக்கிட்டு வந்தேன். அண்ணாமலை திரைப்படத்திற்கு எங்கள் வீட்டு ஓனரின் மகன் இரவெல்லாம் அமர்ந்து, ஒரு பேனர் செய்தது நினைவு இருக்கிறது. தலைவர் - குஷ்பு, படம் கண்டிப்பா ஹிட் என்று என்னிடம் சொல்லி கொண்டே அந்த பேனர் செய்தார். அவர் சொன்னபடி படம் ஹிட், ஆனால் அவர் கட்டிய பேனர் எங்கள் வீட்டிற்கு எதிரில் உள்ள கரண்ட் கம்பியில் சில காலம் தொங்கி கொண்டு இருந்தது, பின் ஒரு நாள் மாடு குஷ்புவை ஆவலோடு மென்று கொண்டு இருந்தது. அதன் பின் அந்த வீடு மாறி விட்டோம், அவரை நான் பார்க்கவில்லை.

எந்த வித பரபரப்பும் அற்ற வாழ்க்கை, அதில் சுவாரசியம் ஏற்படுத்தி கொள்ள எப்போதாவது +2 பள்ளி பிள்ளைகள் ஒன்றை ஒன்று இழுத்து கொண்டு ஓடிவிடும். அதை பற்றி சில நாட்கள் பேச்சு பரவும். பெரும்பாலும் ஓடியவர்கள் திரும்பி வருவார்கள், வீட்டின் சம்மதத்தோடு மீண்டும் திருமணம் நடக்கும், இல்லை ஊரிலேயே தனி வீடு எடுத்து வாழ தொடங்கி விடுவார்கள். ஜாதி சண்டை எங்கள் ஊரில் அதிகம் வந்தது போல் தெரியவில்லை.

எப்போதும் எங்கள் பள்ளியில் காலை சுடும் வெயிலில் நிற்க வைத்து பிரேயர் பாட சொல்வார்கள், பெரும்பாலும் ஒன்றும் புரியாது. நீராரும் கடலுடுத்த மட்டும் சற்று உரக்க பாடியது நினைவு இருக்கிறது (பின்னால் நிற்கும் தமிழ் அய்யாவை தாஜா செய்ய). மீசையும் காதலும் முளைக்க தொடங்கிய பின்பு, என் பக்கத்தில் பாடி கொண்டிருந்த கணேஷ், உறுதிமொழி எடுத்து கொள்கையில் “ All Indians are my Brothers and Sisters” என்ற வரியை மட்டும் விட்டு விட்டு சொல்ல தொடங்கினான்.

பள்ளி இறுதி வரை என் ஊரை விட்டு எங்கும் வெளியே செல்லாததால் என் இருப்பு பற்றிய விவரணைகள் எதற்கும் பங்கம் இல்லை. எங்கள் கிராமத்திற்கு சென்றால் கூட, “செங்கதிலயா படிக்கிறே” என்று பெருமை பொங்கதான் பார்ப்பார்கள். ஆனால் கல்லூரி வந்த பின், உன் ஊர் எது என்றால் திருவண்ணாமலை என சொல்லத் தொடங்கினேன், பின் அது எங்கே என கேட்டதற்கு வேலூர் பக்கம் என்றேன். ஒரு ப்ராஜெக்ட் காரணமாக திருவனந்தபுரம் சென்றபோது, அதுவும் கைக் கொடுக்காமல் போக சென்னைக்கு பக்கத்துலே என்றேன். (எங்கள் ஊர் சென்னையில் இருந்து 180 கிமீ).

ஓ, சென்னையோ? பீச்சுக்கு போகுமோ என்றனர். ஆஹ்ன், Daily என்னும் அளவுக்கு பீலா விட வேண்டி இருந்தது. தூரம் செல்ல செல்ல கிராமங்களில் சாயல் அழிந்து பெருநகரங்கள் அதை விழுங்கி விட தொடங்குகிறதா. இல்லை நகரம் பூசும் சாயத்தில் நமது கிராமத்தின் பேர்களை சொல்ல கூச்சப்பட்டு போகிறோமா என தெரியவில்லை.

ஊருடன் தினம் தினம் இருந்த தொடர்பு அற்று போய், ஒவ்வொரு முறை ஊருக்கு போகையிலும் சிற்சில சித்திரங்களே ஊரை பற்றி மனதில் தங்கி விட்டிருக்கிறது. ஊரை விட்டு ஒதுங்கிய ஓர் இடத்தில் தான் எங்கள் வீடு, பேருந்து நிலையத்தில் இருந்து குறுக்கு வழியாக ப்லாட்டாக மாறி கொண்டு இருக்கும் விளைநிலங்கள் ஊடாகவே என் வீட்டிற்கு சென்று விடுவேன். பெரும்பாலும் நான் ஊருக்கு வந்து செல்வது என் அப்பா-அம்மாவிற்கு மட்டுமே தெரியும். நான் வளர வளர இவர்களுடனான எனது நெருக்கம் அதிகரித்த வண்ணமே வந்திருக்கிறது.

வீட்டிற்குள் தாழப் பறக்கும் பறவை நான் என்னும் வரி எனக்கு மிக பிடித்தமானது. கடந்த சில வருடங்களான எனது ஊரின் சித்திரத்தை உருவாக்க முயன்று தோற்று போகிறேன், அம்மா முகம் மட்டுமே நினைவு வருகிறது. கிராமத்து வீடை நினைக்கும் போது எல்லாம், பாட்டி முகமே நினைவு வருவது போல். வீடு மட்டும் அல்ல, ஊரோடும் பெண்கள் தங்கள் முகங்களை ஒட்டி விடுகிறார்கள் போல.

Saturday, November 28, 2009

உலக போர் - காமிரா வழியே II

இரண்டாம் உலக போரில் உலக நாடுகள் இரண்டு பெரும் பிரிவுகளாக இணைந்திருந்தது. “Axis power” கூட்டணியில் முக்கிய நாடுகளாக ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகியவை விளங்கின. அவர்களை எதிர்த்த “Allied Power” கூட்டணியில் பிரிட்டன், ருஷ்யா, அமெரிக்க ஆகிய மூன்று நாடுகள் வலுவாக இருந்தன. Axis Power கூட்டணியின் நாயகனான ஹிட்லரை அழிக்க பல முயற்சிகளின் நடந்தன. அவருக்கு எதிராக நடந்த புரட்சிகளை பற்றிய படங்களில் நான் பார்த்தவரையில் சிறந்த படம் Valkyrie மற்றும் Inglourious Basterds. முந்தையது அவரது சொந்த நாட்டினை சேர்ந்தவர்களே ஹிட்லருக்கு எதிராக நடத்திய சூழ்ச்சி. பிந்தையது அமெரிக்காவில் வாழும் யூத இனத்தை சேர்ந்த ஒரு குழுவினர் செய்யும் முயற்சி.

Valkyrie (2008)

Direction: Bryan Singer

Starring: Tom CruiseOperation Valkyrie என்பது. அன்னிய படை எடுப்பின் மூலமாகவோ, இல்லை ஜெர்மனியில் வந்து தங்கி இருக்கும் பிற நாட்டை சேர்ந்தவர்களாலோ ஏதேனும் புரட்சி ஏற்பட்டால் அதை அடக்க ஹிட்லரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அவசர கால அடக்குமுறை திட்டம். இதன் மூலம் எவரையும் எந்த காரணமும் இன்றி சுடவோ, கைது செய்யவோ அதிகாரம் வழங்கபடுகிறது. இந்த சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் ஹிட்லருக்கும், ஒருவேளை அவர் இறக்கும் பட்சத்தில் அவரது ஜெனரல் ப்ரோமுக்கும் உள்ளது.

ஹிட்லரை கொல்ல தொடர்ந்து முயற்சித்து வரும் குழுவின் முக்கிய உறுப்பினர் பிடிபடுவதை சொல்லி நகர்கிறது முதல் சில காட்சிகள். அவருக்கு மாற்றாக புதிய உறுபினரை தேடும் பணியில் தீவிரமாக இருக்க அவர்கள் கண்ணில் படுகிறார் ஸ்டாப்பன். ஹிட்லரை அழிப்பதே ஜெர்மனிக்கு தான் செய்யும் சேவை என்ன என்னும் இவர், இங்கிலாந்தின் தாக்குதலினால் ஒரு கையும், ஒரு கண்ணும் இழந்தவர்.

ஹிட்லரை தந்திரமாக அழிக்க முயற்சிக்கும் இவர்கள், ஜெனரல் ப்ரோமை தங்கள் பக்கம் சாய்த்து கொள்கின்றனர். ஹிட்லர் இறந்த உடன், Operation Valkyrie திட்டத்தை அமுல் செய்யும்படி ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் மூலம், ஹிட்லரின் SS கட்சியினை சேர்ந்த அத்தனை பெருந்தலைகளையும் ஒரே நேரத்தில் கைது செய்து ஜெர்மனி மேல் படிந்திருக்கும் கறையை துடைப்பது என முடிவு செய்யப்படுகிறது. ஹிட்லர் கொல்லப்பட்டுவிட்டார் என உறுதியான செய்தி வந்தால், தான் அந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவதாக சொல்லும் ஜெனரல். அதற்கு பிரதிபலனாக, ஹிட்லர் அழிந்தபின் உருவாகும் ஜெர்மனியின் புதிய அரசின் பொறுப்பை தானே முன் நின்று நடத்துவேன் என்றும் ஒப்புதல் வாங்கி கொள்கிறார்.

அதன்பின் ஸ்டாப்பன் திட்டப்படி, ஹிட்லரது மாளிகையில் நடக்கும் ரகசிய கூட்டத்திற்கு சென்று அங்கு குண்டு வைத்து திரும்புகிறார். அதன் பின் நடக்கும் குழப்பங்களும், ஹிட்லர் மீண்டு வந்து வானொலியில் உரையாற்றிய உடன், ஜெர்மன் மக்களும் அவரது படையும் கொள்ளும் உணர்ச்சியும் மிக அழகாக படமாக்கப்பட்டது. இறுதி காட்சியில் தன் திட்டம் தோல்வி அடைந்த உடன் மனம் உடையும் இடத்திலும், நேர் நின்று தனது முடிவை எதிர் கொள்ளும் கணத்திலும் ஆர்ப்பாட்டமில்லாத கம்பீரமான நடிப்பு Tom Cruise உடையது.

Inglorious Basterds (2009)

Direction: Quentin Tarantino

Awards: Best Actor award for Chirstoph Waltz at Cannesஉலக அளவில் பிரபலமான சமகால இயக்குனர்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பெறக்கூடிய பெயர் குவென்டின் டொரான்டினோ. நான் லீனியர் உத்தி மூலம் கதை சொல்லலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர் இவர். நாவல்களை போல பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு, அதன் உட்சிக்கல்களை காட்சிபடுத்துவதில் பெயர் பெற்றவர். இவரது Pulp Fiction (1994) அந்த வரிசையில் மிக சிறப்பான திரைப்படம். அயல் சினிமா பற்றிய தனது கட்டுரைகளில் எஸ். ரா இவரை பின் நவீனத்துவ இயக்குனர் என குறிப்பிடுகின்றார். பின் நவீனத்துவ போக்கின் பல அம்சங்கள் இவரது படங்களில் ஊடாடுகின்றது.

கௌவ் பாய் படங்களை இயக்கி புகழ்பெற்ற சர்ஜியோ லியோனின் தீவிர ரசிகரான இவர், அந்த படங்களில் பின்னணி இசையின் மூலம் உலகப் புகழ்ப் பெற்ற எனியோ மோரிக்கொன் மீது பெரும் மதிப்பு கொண்டவர். அவரது பின்னணி இசையினைப் பற்றிய பதிவினை இங்கே காணலாம். அவர் மற்றொரு படத்தில் ஈடுபட்டு இருந்ததால், அவரது இசைக் கோர்வையில் இருந்து சிலவற்றை மட்டும் இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளார் குவென்டின் டொரான்டினோ. ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் இந்த வருடத்திய சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்றது. லாண்டா என்னும் ஜெர்மன் அதிகாரி பாத்திரத்தில் வரும் வால்ட்ஸ் இந்த விருதை பெற்றார்.

அமெரிக்க படையில் உள்ள யூத இனத்தை சேர்ந்த எட்டு பேரை ஒன்று சேர்க்கிறார் ரைய்ன் (Brad Pit). புகழ் பெற்ற நார்மண்டி படையெடுப்புக்கு முன் இவர்கள் ஜெர்மனிய படைகள் கட்டுப்பாட்டில் உள்ள பிரான்ஸ் வந்து சேர்கின்றனர். Inglorious Basterds என பெயர் கொண்ட இந்த கூட்டணியின் நோக்கம்,

பிரான்சில் அகப்படும் ஜெர்மன் ராணுவ படையினரை பிடிப்பது, அதில் ஒருவனை மட்டும் விட்டு விட்டு மற்ற அனைவரையும் கொன்று அவர்கள் தலையை சிரைப்பது என உலா வருகின்றனர். உயிர் பிழைத்த அந்த ஒருவனது நெற்றியில் நாசிகளின் ஸ்வாஸ்த்திக் சின்னத்தை பதித்து அனுப்பி விடுகின்றனர். அதன் மூலம் ஜெர்மன் படைகளுக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணுவதே இதன் நோக்கம்.

யூத மக்களை அழிப்பதில் புகழ் பெற்றவரான லாண்டா ஒரு விவசாயிடம் பேசுவதாக தொடங்குகிறது இந்த படம். முதல் இருபது நிமிட காட்சிகள் வெறும் உரையாடல்களாகவே நகர்கிறது. மிக சாதுர்யமான அந்த காட்சிகள் அழகாக படமாக்கப்பட்டது. ஒரு கொலை நிகழ போகிறது என தெரிந்தும் அந்த காட்சிகள் ஊடே நாம் சில இடங்களில் சிரித்து கொள்கிறோம். ” எவ்வளவு கொடுரமான விஷயத்தின் உள்ளும் நம் மனம் சிரிக்க பழகி இருக்கிறது” என ஒரு பேட்டியில் இயக்குனர் குறிப்பிட்டது நினைவு வருகிறது.

அந்த இருபத்து நிமிட காட்சியினை போலவே, இரவு விடுதியில் நடக்கும் காட்சியும் சுவாரசியமானது. படத்தின் மிக பெரிய பலம், பின்னணி இசையும் வால்ட்சின் நடிப்பும். சுவாரசியமாக செல்லும் இப்படம் ஒரு மிக பெரிய திருப்பத்தில் வழக்கம் போல ஒரு சிரிப்பை மூட்டியப்படி முடிகிறது.

இவோ ஜிமா போரும், புகழ்பெற்ற நுரம்பெர்க் விசாரணையும், ஹிட்லரின் இறுதி நாட்களும் அடுத்த பதிவில் நிறைவுறும்.

இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |13 | 14 | 15 |

Tuesday, November 10, 2009

நீட்சி/நினைவூட்டப்படும் துக்கநாள்

நீட்சி

காற்றில் நீந்திய ஜன்னலை

இழுத்து சாத்திய கணத்தில்

தட்ட தொடங்குகிறது மழை
நினைவூட்டப்படும் துக்கநாள்

சொந்தம் கூடி, உணவு சமைத்து

கலைந்ததை சமன்படுத்தி

புது துணிகளை

மடிப்பு கலையாமல் எடுத்து வைத்து

சட்டமிட்ட புகைப்படத்துக்கு வத்தி கொளுத்தி

வட்டமாய் அமர்ந்து

ஒருவர் முகம் ஒருவர் பார்த்து

சங்கடப்படுவதற்கு முந்தைய கணம்

எப்படியோ தொடங்கிவிடுகிறது

ஒரு அழுகை

சுவடுகள்

அலைக்கு பயந்து

அம்மா புடவையையே

பற்றி கொண்டிருந்த குட்டி இளவரசி

அவசர அவசரமாய்

வந்து பதித்து செல்கிறாள்

சுவடைதொலைந்துபோன கைப்பேசி

பேசிய வார்த்தைகள்

இழந்த நட்புகள்

எப்போதாவது பேசுவோம்

என நினைத்த எதிரிகள்

ரகிசியமாய் பதிவு செய்த பேச்சுகள்

அனைத்தையும் அழித்து செல்கிறது

கையில் ஒரு மச்சத்தை

மட்டும் விட்டு விட்டு

Photo Courtesy: Google Images and IStock Photo

Monday, November 9, 2009

உலக போர் - காமிரா வழியே

“Never in the field of human conflict was so much owed by so many to so few”. இரண்டாம் உலக போர் பற்றி அப்போதைய இங்கிலாந்து அதிபர் சர்ச்சில் சொன்ன வார்த்தைகள் இவை. மனித சரித்திரத்தில் அதிகமான உயிர் இழப்புகளை கொண்டது இரண்டாம் உலக போர். முதல் உலக போர் 1919 ஆம் ஆண்டு முடிவு அடைந்து Treaty of Versailles கையெழுத்து இடப்பட்டது. அந்த ஒப்பந்தம் மூலம் வஞ்சிக்கப்பட்டதாக எண்ணி வந்த ஜெர்மனி, ஒப்பந்தத்தை மீறி போலாந்தின் மேல் படை எடுத்து 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக போரை தொடங்கி வைத்தது. ஹிட்லர் வீழும் வரை ஆறு ஆண்டுகள் நீண்ட இந்த போர் மனித மனத்தின் குரூரத்தை வெளிச்சமிட்டு காட்டியது.

இரண்டாம் உலக போரை மையமாய் கொண்டு நூறு திரைப்படங்களுக்கு மேலாக வெளிவந்துள்ளது. போரின் நேரடி காட்சிகளின் சித்தரிப்பு, அது தனி மனித வாழ்க்கை மீது காட்டும் வன்முறை, மனித மனங்களின் ஆதார உணர்ச்சியினை சீண்டி பார்க்கும் நிகழ்வுகள் என பல கோணங்களில் சித்தரிக்கப்பட்டு படங்கள் வெளிவந்துள்ளது. அவற்றில் சில படங்கள் எனக்கு பல கோணங்களில் அந்த நிகழ்வுகளை புரிந்து கொள்ள உதவியது. உலக போர் பற்றி வந்த திரைப்படங்களில் நான் பார்த்தவற்றில் மிக முக்கியமான திரைப்படங்களின் தொகுப்பு இது. இந்த திரைப்படங்கள் மூலம் போரின் ஒரு ஒட்டு மொத்த ஒழுங்கு கிடைக்கலாம். இந்த குறிப்பில் இல்லாமல் நான் தவற விட்ட சில படங்கள் இருக்கலாம். இருந்தும் இவை முக்கியமான படங்கள்.

1.Schindler’s List (1993):

Direction: Steven Spielberg

Awards: Seven Academy AwardsSteven Spielberg இயக்கி வெளியிட்ட இந்த திரைப்படம், ஹிட்லரின் நாசிகள், யூத இனத்தவர் மீது வெறி கொண்டு, அவர்களை வதை முகாம்களில் அடைத்தது, அங்கு அவர்கள் பட்ட வேதனை ஆகியவை அப்பட்டமாய் காட்டப்பட்டுள்ளது. படம் பெரும் அளவில் கறுப்பு வெள்ளை காட்சிகள் மூலமே நகர்கிறது. மந்தைகள் போல் மக்கள் முகாம்களில் தங்க வைக்க படுகின்றனர். அப்போது ஷிண்ட்லெர் என்னும் தொழிலதிபர் போருக்கு தேவையான கருவிகள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவுகிறார். அதற்கு தேவையான வேலையாட்களை வதை முகாம்களில் இருந்து பெற்று பணக்காரர் ஆகிறார். அதற்காக ஜெர்மன் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்குகிறார்.

நாட்கள் செல்ல செல்ல தொழிற்சாலையில் வேலை செய்யும் யூதர்கள் மீது நேசம் கொள்கிறார். உயிர் பிழைத்தால் போதும் என வதை முகாம்களில் இருந்து இவரது தொழிற்சாலைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இறுதியில் தன கையில் உள்ள பணம் அத்தனையும் இழந்து தன்னால் முடிந்த அளவு யூத இனத்தை சேர்ந்தவர்களை காப்பாற்றி போர் முடிவடைந்த பின் அவர்களை பிரிந்து செல்கிறார். வதை முகாம்கள் ஒட்டிய காட்சிகள் மிகுந்த வலி தர கூடியவை.

வெட்ட வெளியில் அங்கங்கே சிறு சிறு குடிசை கொண்டு வேலை செய்யும் மக்களை ஓர் ஜெர்மன் உயர் அதிகாரி தன் வீட்டு மாடியில் இருந்தபடி கண்காணிக்கிறான். இரண்டு பேர் மைதானத்தில் கையில் பளுவை தூக்கிய வண்ணம் நடந்து கொண்டு இருக்கின்றனர். அதில் ஒருவன் பளு தாங்காமல் சற்று தடுமாற, எங்கிருந்தோ வந்த குண்டு அவன் தலையை துளைக்க அவன் அப்படியே சரிகிறான். மற்றவன் தன் கையில் உள்ள பளுவை தூக்கி கொண்டு வேக வேகமாக நடக்கிறான்.மற்றொரு காட்சியில் முகாமில் மருத்தவ பரிசோதனை நடைப்பெறுகிறது. பெண்கள், முதியவர் என பாகுப்பாடு இல்லாமல் அனைவரும் நிர்வாணமாக அந்த மைதானத்தை சுற்றி வர பணிக்கபடுகின்றனர். இப்படியே இரண்டு மூன்று முறை சுற்றி வந்த பின் மெல்ல மூச்சு வாங்குபவர்களும், சற்று சோர்ந்து காணப்படுபவர்களும் சுடப்படுகின்றனர். அடுத்த சுற்றுக்கு மற்றவர்கள் ஆயத்தமாகின்றனர்.

படத்தின் இறுதி காட்சியில் 1993 ஆம் வருடம், போர் முடிந்த 48 ஆண்டுகளுக்கு பின் ஷிண்ட்லரின் கல்லறையில் சிறு கல்லை வைத்து யூத இன மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். போலந்தில் வாழும் யூதர்களின் எண்ணிக்கை 4000, ஷிண்ட்லரால் காப்பாற்றப்பட்டு உலகெங்கும் வாழும் ஷிண்ட்லர் யூதர்களின் எண்ணிக்கை 6000 என்ற வாக்கியம் மெல்ல திரையில் தோன்றி மறைகிறது.“In memory of the more than six million Jews murdered” என்ற வரிகளுடன் படம் நிறைவடைகிறது.

2. The Pianist (2002)

Director: Roman Polanski

Awards: Palma d’Or at Cannes, 2 Academy awards

ஒரு இசைக் கலைஞன் மேல் போர் தன்னுடைய குரூரமான கைகளை விரிப்பதை சித்தரிக்கும் படம் இது. ஸ்பில்மான் என்னும் பியானோ இசை நிபுணர், போலாந்து நாட்டில் உள்ள வானொலியில் பணி புரிகிறார். அந்த சமயம் ஜெர்மன்யின் தாக்குதல் தொடங்குகிறது. பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஜெர்மனி எதிர்க்க போகிறது என்னும் செய்தி கேட்டு அவர்கள் மனம் சற்று சமாதானம் அடைகிறது. மிக விரைவில் இந்த போர் நின்று விடும் என்று.மனித கனவுகளை விட அவனது குரூரம் வலிமையாக போர் தீவிரமடைகிறது. ஜெர்மன் போலாந்தை ஆக்ரமித்தப் பின் யூதர்கள் மீது அவர்கள் காழ்ப்புணர்ச்சி திரும்புகிறது. ஸ்பில்மானும் அவரது குடும்பத்தினரும் கெட்டோ என்னும் வதை முகாமிற்கு அழைத்து செல்ல படுகின்றனர். ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் திரைப்படம் நம்மை ஒரு பார்வையாளனாய் உணர செய்வதென்றால், பியானிஸ்ட் நம்மை அந்த கலைஞனோடு சேர்ந்து பதற்றம் கொள்ள செய்கிறது.

படம் முழுக்க ஒரு இசை கலைஞன் பார்வையில் நகர்வதினாலோ என்னவோ, அதிர்வுகள் மிக மென்மையாகவே உருவாக்கப் பட்டுள்ளது. முகாமிற்கு செல்லும் ஸ்பில்மான் அவரது குடும்பதினரிடம் இருந்து பிரிக்க படுகிறார். அவரை கொலை செல்ல அழைத்து செல்லப்படுகையில், வானொலியில் அவருடன் பணி புரிந்த யூதர் அல்லாத ஒருவரால் காப்பாற்றப்பட்டு ஒரு தனி வீட்டில் தங்க வைக்கப்படுகிறார்.அங்கே தங்க முடியாத நிலை ஏற்பட்ட உடன், இடிந்த கட்டடங்களில் வசிக்க துவங்குகிறார். அங்கே போதிய உணவு இல்லாமல் சோகையுற்று மஞ்சள் காமாலையால் பாதிக்கப் படுகிறார். இதனூடே வதை முகாம்களில் மனித வேட்டை எந்த மனிதமும் இல்லாமல் நடை பெறுகிறது. இடிந்த வீடுகளை பார்வையிடும் ஒரு ஜெர்மன் அதிகாரி ஸ்பில்மானை கண்டுபிடிக்கிறார். இவர் ஒரு பியானிஸ்ட் என தெரிந்த பின், இவரை வாசிக்க பணிக்கிறான். பியானோவை தொட்டே ஒரு வருடம் ஆன நிலையில், அதை மீண்டும் தொட்ட பரவசத்தில் ஒரு இசைக் கோர்வையாய் வாசிக்கிறார். இந்த இடத்தில் ஆட்ரியான் ப்ரோடியின் நடிப்பு அற்புதமானது.அதன் பின் அந்த ஜெர்மன் அதிகாரி, அவரை காப்பாற்றி தினம் உணவு தருகிறான். அதற்குள் ரஷ்ய படை அங்கே வர ஜெர்மன் அதிகாரிகள் சிறைபடுகின்றனர். ஸ்பில்மான் சோர்வுற்று பிணங்கள் சிதறி கிடக்கும் தெரு வழியாக தன் வீடு நோக்கி செல்கிறார். அவரை காப்பாற்றிய அந்த ஜெர்மன் அதிகாரி, ரஷ்ய படைகளால் பிடித்து செல்லப் பட, அவர் ஸ்பில்மானுக்கு தெரிந்த ஒருவர் மூலம் அவருக்கு செய்தி அனுப்புகிறார். ஆனால் ஸ்பில்மான் வருவதற்குள் அவர்கள் வேறு இடம் மாற்றப்படுகின்றனர்.

ஸ்பில்மான் அதன் பின் தன் அனுபவங்களை புத்தகமாய் எழுதி 2000 ஆம் ஆண்டு இறந்து போனார் என்னும் செய்தி திரையின் ஊடே நகர்கிறது. அவரை காப்பாற்றிய அந்த ஜெர்மன் அதிகாரி ரஷ்ய வதை முகாமில் 1952 ஆம் ஆண்டே கொல்லப்பட்டார் என்னும் செய்தியோடு.

மிகுந்த உக்கிரம் மிகுந்த ஜப்பான் தீவான இவோ ஜிமாவில் நடந்த போர், ஹிட்லரின் இறுதி நாட்கள், ஹிட்லருக்கு எதிராக நடந்த புரட்சிகள் ஆகியவை பின் வரும் பதிவுகளில்

தொடரும்….

இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |13 | 14 |

Wednesday, November 4, 2009

திருவான்மியூர்

பலகை வாரவாதி சாலையிலிருந்து இடப்புறம் திரும்பி கரடு முரடாக இருந்த கச்சாப் பாதையில் சிறிது வயல் வெளியும் நிறையவே கட்டாந்தரையாக இருந்த பிரதேசத்தில் அரை மைலுக்கும் மேல் நடந்தால் திருவான்மியூர் கோயிலின் மேற்கு கோபுரம் வரும். சம்பந்தர் பாடி புகழ் பெற்ற தளம் இது. மருந்தீஸ்வரர் உடன் உறையும் திரிபுர சுந்தரி கோவில் கொண்ட இடம். திருவான்மியூருக்கு வழி 1950களில் இப்படிதான் சொல்லப்பட்டது.பலகை வாராவதி என்பது இப்போது பாடாவதி ஆன பெயர், அது முத்துலட்சுமி சாலையாய் உருமாறி, கல்கி சாலை என அழைக்கப்பட்டு, எம். எஸ். சுப்புலக்ஷ்மி சாலை ஆகி பழைய மகாபலிபுரம் சாலை என அழைக்கப்பட்டது. எல்லா வளர்ச்சியும் அடைந்த பின் நம் வழக்கப்படி அதற்கு ராஜிவ் காந்தி சாலை என பெயிரடப்பட்டது.

“நம்ம காசுல போடுற ரோடுக்கு ஏன் தலைவர்கள் பேர வைக்கிறாங்க, இதுல சுங்க வரி வேற. இதுக்கு, கோயிலுக்கு லைட் வாங்கி போட்டுட்டு தன் பேர போட்டுகிறவங்க எவ்வளவோ மேல்” (உபயம்: என் ரூம் மேட்)

எல்லாரையும் போல எங்களுக்கும் முதலில் திருவான்மியூரில் தான் வீடு கிடைத்தது அல்லது நாங்கள் கடற்கரையை ஒட்டி தான் வீடு தேடினோம். எனக்கு முன்னாலேயே வந்து வீடு பிடித்து விட்ட என் நண்பன், நான் சென்னை வந்து இறங்கியபோது, OMRல டைடல் பார்க் வந்துடு, அப்படியே அங்க இருந்து ஜெயந்தி தியேட்டர் சிக்னலுக்கு வந்துட்டு ஒரு ஆட்டோ புடி, ஆட்டோகாரன் கிட்ட, Seaward Street அஜீத் வீட்டுக்கு போகனும்னு சொல்லு என்றான்.

ஆட்டோகாரனிடம் இதை அப்படியே ஒப்பித்தேன், “அஜீத் வீடா, எனக்கு சரத் குமார் வீடு தானே தெரியும் என்றான்” (கிட்டத்தட்ட பாலவாக்கம்). கண்டிப்பா அதற்காக சரத் குமார் வீட்டிற்கு பக்கத்தில் வீடு எடுக்க முடியாது. ஒருவாறு என் நண்பனிடம் தொலைபேசி, சுச்சி வீட்டை கடந்து, அஜீத் வீடு வழியாக, யேசுதாசின் சென்னை வீட்டை ஒட்டிய ஒரு சந்தில் இரண்டாவது மாடியில் ஒரு ஆச்பெஸ்டாஸ் கூரை போட்ட வீட்டில் தஞ்சம் புகுந்தேன். அந்த வீட்டை பற்றிய மேல் விபரம் வேண்டுபவர்கள் பார்வை சிறுகதையின் வர்ணனைகளை பார்க்கவும்.

அலுவலகத்தில் சேர்ந்த முதல் ஒரு வருடம் எனது வாசம் திருவான்மியூரில் தான். ஆனால் அங்கே ஒன்றும் வாசம் நன்றாக இருந்ததில்லை, எப்போதும் உப்பும் மீனும் கலந்த காற்று. கையில் முதன் முதலில் காசு சேர்ந்த சந்தோஷத்தில் அலைந்த நாட்கள் அவை. வந்த புதிது என்பதினால் வண்டி வாங்கி இருக்கவில்லை. திருவான்மியூர் கடற்கரையிலே பல மாலை கழிந்தது. ஐந்து நிமிடத்தில் எட்டி விட கூடிய தூரத்தில் கடல். தூக்கம் வராமல் புரளும் இரவுகளில் வெளியே வந்தால் கடல் அலைகள் ஓயாமல் புரளும் இசை கேட்கும்.

பல வீடுகளில் மொட்டை மாடிகளிலேயே எல்லோரும் படுத்திருந்தனர். கடல் காற்றினாலோ என்னவோ, கொசு அதிகம் இருக்கவில்லை. அந்த சிறிய அறையில் தூங்க இடம் இல்லாமல், வெளியே படுத்து கொண்டு தூங்கிய இரவுகளில் நீண்ட நாட்களுக்கு பின் நிலவை பார்த்து கொண்டே தூங்கியது நினைவு இருக்கிறது. கடலில் இருந்து நேரடி தொடர்பு என்பதால், நிலத்தடி தண்ணீருக்கு எப்போது ரோஷம் அதிகம். அவ்வளவு உப்பு ஆகாது, திருமணம் வரை தலை முடியை காக்கும் பொருட்டு இரண்டு மாடி கீழே இறங்கி அடி பம்பில் தண்ணீர் அடித்து கொண்டு வருவோம்.

நீண்ட நாட்களாக என்னிடம் எதையோ பேச துடிப்பது போல் பார்த்து கொண்டிருந்த அந்த பக்கத்து வீட்டு குட்டி பெண், ஒரு முறை நான் தண்ணீர் பிடிக்கையில் தான் வந்து என்னிடம் பேசியது. “அண்ணா, அந்த டாங்க்ள தண்ணீ இருக்கு, மாசம் இருபத்து ரூபா கொடுத்த அதுல இருந்த பிடிச்சுக்கலாம்” என்றாள்.

எதிர்கால கனவுகள் சுமந்த பேச்சுக்களை பல நாட்கள் அந்த மொட்டை மாடி சுவர்கள் தான் கேட்டு கொண்டிருந்தது. ஒரு வருடத்தில் வெளிநாடு, இரண்டு வருடத்தில் பதவி உயர்வு, ஊர்ல அப்பாவுக்கு ஒரு புது வண்டி என. அதற்கு முன்பு அந்த வீட்டில் இருந்தவர் அலுவலகம் மூலம் வெளிநாடு சென்று இருக்கிறார் என்பது கூடுதல் சந்தோஷம் அளித்தது. ஆனால் அதையே காரணம் காட்டி வீட்டு ஓனர், “ராசியான வீடு தம்பி என்று ஒரு வருடத்தில் இரண்டு முறை வாடகை உயர்த்தி விட்டார்”. இத்தனைக்கும் எனது அறை நண்பனின் மாமா முறை அவர்.

திருவான்மியூர் கடற்கரையில் இருந்து தெரிந்த பெசன்ட் நகர் கடற்கரையை ஒருமுறை நடந்தே கடந்தோம். சூரிய உதயம் பார்க்க அலாரம் வைத்து எழுந்தோம். டீ.வீ தொடர் நடிகர்கள் நடிகைகள், தொலைகாட்சியில் செய்தி வாசிபவர்கள், பயில்வான் ரங்கசாமி, காதல் சந்த்யா என பார்த்த அத்தனை விஷயங்களையும் பெருமையாய் ஊரில் சொல்லி கொண்டு திரிந்தோம். கையில் காசு பார்த்த சந்தோஷத்தில் புதிது புதிதாய் புத்தகம் வாங்க தொடங்கினேன்.

இப்படி எல்லாம் எழுதுவாங்களா என வியந்தது அந்த சிறிய வீட்டில் தான் தொடங்கியது, பிடித்த அத்தனை எழுத்துகளின் சொந்தகாரர்களையும் பார்த்து விடுவது என முடிவு எடுத்தும் அங்கேதான். சுஜாதா படித்து விட்டு அவரை சந்திக்கும் முன் அவரது எல்லா எழுத்துக்களையும் படிக்க வேண்டும் என அவரது புத்தகங்களை படித்து தள்ளினேன்.

மீண்டும் ஒருமுறை வாடகை ஏற்றப்பட்ட போது, மனம் தாங்காமல் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. இப்போதும் விருப்பமான அந்த கோவில், பெரும்பாலும் யாருமற்ற அந்த கடற்கரை தெருக்கள், கடைசி வரை சிரித்த படியே பரிமாறிய அந்த வேப்பமரத்தை ஒட்டிய பாட்டி மெஸ், RTO Bus Stop எல்லாம் அவ்வபோது நினைவு வருகிறது.

இப்போது யாரவது முதல்ல சென்னைல எங்கே இருந்தீங்க என்றால், திருவான்மியூர்!, தி.ஜா தெரியுமா அவர் அங்கதான் கடைசியா வாழ்ந்தாராம். அப்புறம் அந்த கோவில் 1500 வருஷம் பழைமையான கோவிலாம். சம்பந்தர் இந்த கோவில பத்தி பாடி இருக்கிறார். ரொம்ப நல்ல இடம் பார்த்துக்கோ என்றுதான் பேச துவங்குகிறேன்.

எப்போதாவது அந்த கடற்கரைக்கு செல்கையில், கனவுகளோடு திரியும் முகங்களை பார்க்க முடிகிறது. ELT Tag போட்டு கொண்டு சந்தோஷமாய் வருபவர்களோடு நான் பார்த்த எல்லா முகங்களும் வந்து வந்து போகிறது. அதனோடு ஓரமாக சுஜாதாவை கடைசி வரை சந்திக்கவே இல்லை என்ற எண்ணமும்.