Saturday, May 23, 2009

Nuovo Cinema paradiso - சிதையும் கனவுகளும் சிலிர்ப்பூட்டும் நிதர்சனங்களும்

இத்தாலியின் புகழ்ப்பெற்ற இயக்குனரான Giuseppe Tornatore வின் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சினிமா பாராடிசோ. கேன்ஸ், ஆஸ்கார் உட்பட பல சர்வ தேச விருதுகளைப் பெற்றது இத்திரைப்படம். இத்தாலி மொழி படங்கள் சர்வ தேச அரங்கில் புகழ் பெற துவங்க இந்த திரைப்படம் மிக முக்கிய காரணம். சினிமாவின் மேல் தீரா காதல் கொண்ட ஒரு சிறுவனை தந்தையை போல் அரவணைக்கும் ஓர் உறவு, முதல் காதல், வளர்ந்த கிராமத்தைப் பிரிந்து நகரத்தை நோக்கி செல்லுதல் என மூன்று மெல்லிய உணர்வுகளை இணைத்து செல்லும் ஓர் அழகான படம் இது. எனியோ மோரிகோனின் இசை படத்தின் மிக பெரிய பலம்






தான் பிறந்து வளர்ந்த சிசிலி கிராமத்தை விட்டு வெகு தொலைவில் வாழும் அந்த நாட்டின் மிக புகழ்ப்பெற்ற இயக்குனரான சால்வடோருக்கு அவனது அம்மா தொலைபேசுவதாக தொடங்குகிறது. பின் சால்வடோரின் பார்வையில் படம் விரிகிறது. இரண்டாம் உலக போர் முடிந்த வருடங்களில் சிசிலியில் வாழ்ந்து வருகிறான் சால்வடோர், அவனது செல்லப் பெயர் டிட்டோ. அந்த ஊரின் பாதிரியாருக்கு உதவியை இருக்கும் டிட்டோ, பாதிரியார் திரை அரங்கிற்குள் செல்லும் போது மட்டும் தன்னை விட்டு செல்வதை உணர்ந்து, ஒருநாள் அவரை பின் தொடர்ந்து செல்கிறான். அப்போது அந்த பெரிய அரங்கில் அவர் மட்டும் தனியே அமர்ந்து அந்த ஊரில் மறு நாள் திரை இட இருக்கும் படத்தை தணிக்கை செய்வதை பார்க்கிறான். மறுநாள் திரை அரங்கிற்கு சென்று பார்கையில் பாதிரியார் படத்தின் காதல் மற்றும் முத்தக் காட்சிகளை நீக்கி இருப்பதை உணர்கிறான்.


அந்த நீக்கப்பட முத்த மற்றும் காதல் கட்சிகளை காண அவன் ஆப்ரேட்டர் அறைக்கு செல்கிறான், அங்கு வெட்டப்பட்டு கிடக்கும் பிலிம் சுருள்களில் அவை இருப்பதை பார்த்து ஆப்ரேட்டரான ஆல்பர்டோவிடம் அதை தான் எடுத்து கொள்ளட்டுமா என்கிறான். அதற்க்கு அவர் இந்த படத்தை திரும்ப அனுப்புகையில் அவைகளை ஒட்டி அனுப்ப வேண்டும் அதனால் தர முடியாது என சொல்லி அனுப்பி விடுகிறார்.




அந்த திரை அரங்கின் ஆப்ரேட்டரான ஆல்பர்டோ உடன் ஸ்நேகம் கொள்கிறான் டிட்டோ. முதலில் அவனை ஆப்ரேட்டர் அறைக்கு எல்லாம் வர கூடாது என தடுத்தாலும் அவனை ஏற்று கொள்கிறார் ஆல்பர்டோ. அவனுக்கு ஆப்ரேட்டரை இயக்கும் முறைகளை கற்று கொடுக்கிறார். அப்போதும் உன் வாழ்க்கை இந்த அறையுடன் முடிந்து விட கூடாது. இதன் மூலம் உனக்கு கிடைக்க போவது ஒன்றும் இல்லை என சொல்லியபடியே வளர்க்கிறார்.


ஒரு நாள் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் ஆல்பர்டோ கண் பார்வை இழக்க, டிட்டோ அந்த திரை அரங்கின் ஆப்ரேட்டர் ஆகிறான். சுமார் பதினைத்து வருடங்கள் இப்படியே கழிகிறது. இதற்குள் அந்த அரங்கின் உரிமையாளரிடம் சொல்லி இரண்டு திரை அரங்குகளை அமைக்கிறான் டிட்டோ, ஆல்பர்டோ அவனது தோழன் போல, தந்தை போல் உடனே இருக்கிறார்.





அப்போது அந்த ஊருக்கு வரும் ஹெலன் என்னும் பெண் மீது காதல் வயப் படுகிறான் டிட்டோ. மிக மென்மையாய் நகர்ந்து வரும் அந்த காதல் அவரது தந்தை மூலம் சிதைக்கப்படுகிறது. பின் அவள் வேறு ஊருக்கு சென்று விட, டிட்டோவை அழைத்து நீ சிசிலியிலேயே இருந்தால் சரி அல்ல, அதனால் இந்த ஊரை விட்டு சென்று விடு எந்த காரணம் கொண்டும் நீ இந்த பூமிக்கு திரும்பாதே என சொல்லி அனுப்பி வைக்கிறார் ஆல்பர்டோ.


இப்போது அவர் இறந்து விட்டார் என்று அவன் அம்மா தொலைபெசியத்தை அடுத்து அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக 30 ஆண்டுகள் கழித்து சிசிலி வருகிறான் டிட்டோ என்னும் சால்வடோர். அங்கே அந்த திரை அரங்கம் இடிக்கப்பட்டிருக்கிறது, அவனது காதலி ஹெலன் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறாள், கல்லூரியில் படிக்கும் வயதில் அவளுக்கு ஒரு பெண் இருக்கிறாள்.


ஆல்பர்டோவின் இறுதி சடங்கு முடிந்த பின் அவரது வீட்டிற்கு செல்கிறான் டிட்டோ அங்கு ஆல்பர்டோவின் மனைவி, “ இந்த 30 ஆண்டுகளில் எப்போதும் அவர் உன்னைப் பற்றியே பேசி கொண்டிருந்தார், நீ மிக பெரிய இயக்குனராக வந்ததை எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டார்” என்கிறாள். ஆனால், உன்னை மீண்டும் இங்கு அழைக்கட்டுமா எனக் கேட்டதற்கு எப்போதும் வேண்டாம் என்றே சொல்லி வந்தார் என்கிறாள். மேலும் அவர் உனக்காக ஒரு பரிசு பொருள் வைத்து இருந்தார் என சொல்லி ஒரு பெட்டியை தருகிறாள்.


அந்த பெட்டியில் ஒரு மிக பெரிய பிலிம் சுருள் ஒன்று இருக்கிறது. அதை அவன் திரையிட்டு பார்க்க, அவன் சிறு வயது முதல் அங்கு வாழ்ந்த வருடங்களில் திரையில் பார்க்க முடியாமல் போன அத்தனை காதல் மற்றும் முத்த காட்சிகளின் தொகுப்பு இருக்கிறது. எனியோ மோரிகோனின் பின்னணி இசையுடன் சுமார் இருபது நிமிடங்கள் அந்த முத்த காட்சிகள் திரையில் ஓடுவதுடன் படம் நிறைவடைகிறது.


சுமார் மூன்று மணி நேரம் ஓடக் கூடிய இப்படம் எந்த இடத்திலும் சலிப்பு தட்டவே இல்லை. மிக நேர்த்தியான திரைகதை மற்றும் இசை. ஆல்பர்டோ உடனான டிட்டோவின் உறவும், டிட்டோ காதல் வயப்பட்டிருக்கையில் அவனுக்கு அவர் சொல்லும் ஒரு காதல் கதையும் மிக கவித்துவமானது. கடைசி 40 நிமிடங்களில் படத்தில் பேசப் படும் வார்த்தைகள் மிக சொற்பமானவை. பின்னணி இசையே அத்தனையும் சொல்லி செல்கிறது.


இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |

2 comments:

  1. அற்புதமான படைப்பு இது... பார்த்து அழுதது இன்னும் நினைவிலிருக்கிறது.
    அழகான விமரசனம்

    ReplyDelete
  2. நன்றி நண்பரே!
    எனியோ மோரிக்கொனின் சிறந்த இசை அமைப்புகளில் ஒன்று.

    ReplyDelete