Saturday, February 14, 2009

The Road Home - ஒரு காதல் பயணம்




காதலில் தோற்றவர்கள் காதலிக்காதவர்கள் மட்டுமே என்னும் வைரமுத்துவின் வாக்கியத்தோடு பார்த்தால் நம்மில் காதலில் தோற்றவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கும்.Biochemical Reaction, ஹார்மோன்களின் அலைவரிசை என அறிவியல் காதலை பிரித்து போட்டாலும் அதன் புதிர் இன்னும் நமக்கு வசீகரமாகவே உள்ளது. ஆதி மனிதனிடம் இருந்த பல ஆதார உணர்ச்சிகள் இன்றைய நோக்கில் வழக்கொழிந்து இருக்கிறது. ஆனால் காதல் மட்டும் ஒவ்வொரு காலத்திலும் வார்த்து எடுக்க பட்ட வண்ணமே உள்ளது. காதலை முடிந்த வரையில் அறிவியல் நோக்கில் பார்க்க முற்பட்டத்தையும் மீறி பல கணங்களில் சிலிர்பில் ஆழ்த்தியது "தி ரோட் ஹோம்" என்னும் சீன மொழி திரைப்படம். படம் பார்த்து முடித்த சில தினங்கள் வரை காதல் என்னை சுற்றி நுரைத்து பொங்கிய வண்ணமே இருந்தது. இதற்கு முன் "Roman Holiday" படம் பார்த்த போது இப்படி ஒரு சந்தோஷத்தை உணர்ந்து உள்ளேன்.


தன் தந்தை இறந்த செய்தி கேட்டு ஒரு மலை கிராமத்தில் வசிக்கும் தன் தாயை (Zhang Ziyi) சந்திக்க வரும் மகனின் பார்வையில் விரிகிறது இந்த படம். நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனையில் இறந்திருக்கும் தன் தந்தையை தங்கள் பழங்குடி பழகத்தின் படி நடந்தே தங்கள் கிராமத்திற்க்கு கொண்டு வர வேண்டும் என்னும் ஆசையில் அவருடைய தாய் பிடிவாதமாக இருக்கிறார்.இங்கிருந்து கதை அவரின் தாயும் தந்தையும் சந்தித்து கொண்ட 1958 ஆம் ஆண்டினை நோக்கி செல்கிறது.

தன் கிராமத்திற்க்கு ஆசிரியர் வேலைக்கு வரும் Zheng Hao வை பார்த்த உடன் காதல் கொள்கிறார் Zhang Ziyi. அந்த மலை கிராமத்தில் உள்ள அந்த சிறிய பள்ளிக்கு ஒரே ஒரு ஆசிரியரான அவர் பள்ளியை சீரமைக்க கிராம மக்களின் உதவியை நாடுகிறார். அதன் படி பள்ளியை கட்டி தர ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் உதவுவது எனவும். பெண்கள் அவர்களுக்கு தேவையான உணவினை வழங்குவது என்னவும் முடிவு செய்ய படுகிறது. அதன் படி Zhang Ziyi ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவினை செய்து கொண்டு செல்கிறார் தினமும் தான் செய்யும் உணவினை அவர் சாப்பிடுவார் என்ற நம்பிக்கையில் (இது ஏப்ரல் மாதத்தில் என்னும் தமிழ் படத்தில் சுடப்பட்டிருக்கும்).


பள்ளி கட்டி முடித்த பின் ஒரு நாள் அவரை தன் வீட்டிற்கு சாப்பிட அழைக்கிறாள் Zhang Ziyi, அவரும் சம்மதித்து நாளை வருவதாய் சொல்லி செல்ல அந்த சமையத்தில் எதிர்பாரதவிதமாய் அவர் வலது சாரி இயக்கத்தினை சார்ந்தவன் என்னும் முத்திரை குத்தப்பட்டு சீன அரசாங்கத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட, அவர் வீட்டிற்கு வராமலே செல்கிறார்.


அவருக்காக செய்த உணவினை கட்டி கொண்டு அவர் போகும் வழியில் அவரை தொடர்ந்து ஓடும் Zhang Ziyi , தான் போகும் வழி எல்லாம் கண்ணீரையும் காதலையும் உதிர்த்து கொண்டே செல்கிறார். அவரை காணாமல் மனம் உடைந்து உடல் நலிவு அடைகிறாள். அவள் நிலைமை மோசம் அடைவத்தை கண்டு அந்த கிராம மக்கள் மீண்டும் அவரை தங்கள் கிராமத்திற்கு அழைத்து வர அவர் இறுதி வரை அங்கிருந்து விலகாமல் அந்த கிராம மக்களுக்கு கல்வி கற்று கொடுத்து கொண்டு இருக்கிறார்.
கதை மீண்டும் நிகழ் உலகிற்கு வர, அவரது இறுதி ஊர்வலத்தில் பனியையும் பொருட்படுத்தாது அவரிடம் கல்வி கற்றவர்கள், ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள. அவர்கள் காதலை வளர்த்த அந்த மலை பாதையின் வழியாகவே அவரது இறுதி பயணம் நடை பெறுகிறது.


எந்த ஆர்ப்பாட்டமும் அழுகையும் இன்றி மிக நேர்த்தியாக சொல்லப்பட்ட இததிரைப்படத்தில் அவருக்காக தினம் அவர் பள்ளி செல்லும் வழியில் காத்திருக்கும் இடமும், அவரை முதல் முதலில் பார்த்த உடன் அவள் கொள்ளும் அழகும், அவர் இல்லாத போது பள்ளியை அவள் அழகு படுத்தும் இடமும், இறுதி காட்சியில் அவர் நிரந்தரமாய் இல்லை என உணர்ந்து அந்த பள்ளியில் அமர்ந்து அவரின் குரலை நினைத்து பார்க்கும் இடமும் கவித்துவ எழுச்சி கொண்டவை.


ஒரு நிறைவான வாழ்வை பார்த்த அனுபவம்!!


பின் குறிப்பு:
இந்த வாரம் சனி கிழமை மாலை 6 மணிக்கு மக்கள் தொலைகாட்சியில் ஈரானிய இயக்குநர் Majid Majidன் "Baran" திரைப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது.


இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 |

No comments:

Post a Comment