Monday, December 7, 2009

ரகசியம்

மத்தியானம் தூங்கி எழுந்த பின் ஏற்படும் கால குழப்பம் மிகவும் சிக்கலானது. அதுவும் அப்படி எழுந்த பொழுதுகளில் மழை பெய்து நின்றிருந்தால் முடிந்தது கதை. அது மாலை தான் என்று யார் வந்து சொன்னாலும் மனம் நம்ப மறுக்கிறது. பிடிவாதமாய், அது காலை வேளை என்றே தோன்றி கொண்டு இருக்கிறது. அதுவும் இல்லாமல் இந்த இரண்டாவது மாடியில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த தனி அறையில் யாரும் வந்து இது சாயங்காலந்தான் என்று என்னிடம் நிரூபிக்க போவதில்லை.

நான் மெல்ல இரண்டு மாடிகளில் ஒவ்வொரு படிக்கட்டுகளாய் எண்ணி கொண்டு கீழே வந்து சேர்ந்தேன். ஒவ்வொரு முறை எண்ணும் போதும் படிக்கட்டின் கணக்கு சரியாகவே வருவதில்லை. என் அப்பா வேலைக்காக நேர்முக தேர்விற்கு செல்கையில், அந்த அதிகாரி நீ ஏறி வந்த படிக்கட்டுகள் எத்தனை என்று கேட்டாராம், தான் சமயோசிதமாக அதை எண்ணி கொண்டு வந்ததால் தான் தனக்கு இந்த வேலை கிடைத்தது என ஆரமித்து அவரது ஆட்டோ பயோக்ராப்பியை துவங்கி விடுவார்.

அன்று மட்டும் அவர் தவறாக சொல்லி இருந்தால், நான் இப்படி படிக்கட்டுகளை எண்ணி கொண்டு இருந்திருக்கவே தேவை இல்லை. அவர் வேலையை பார்த்து தான் பெண் கொடுத்தார்களாம், அந்த வேலை கிடைக்காமல் போய் இருந்தால் என் அப்பா திருமணம் செய்து கொண்ட பெண் எனக்கு அம்மாவாக வர வாய்ப்பில்லாமல் போய் இருந்திருக்கும். அதாவது அசோக் என்ற ஒருவன் இந்த உலகத்தில் பிறப்பதற்கான சாத்திய கூறுகளே இல்லை. அனால் அவர் சரியாக எண்ணி விட்டார் நான் பிறந்து விட்டேன். சமீப காலமாக தான் இது போல சிந்தனைகள் வந்து சேர்க்கிறது. எல்லாம் இந்த பூரணனுடன் பழக ஆரமித்த பிறகு தான்.

உங்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இருந்திருந்தால் அவனுக்கு நூறு ஆயுசு என்றிருப்பீர்கள். நான் சென்று சேர்வதற்கு முன் அவன் குமார் கடையில் அமர்ந்து ஒரு கிங்க்ஸ் சிகரெட் புகைத்து கொண்டிருந்தான். அவன் எக்காரணம் கொண்டு வில்ஸ் வாங்க மாட்டான், கேட்டால் அது தன் அப்பா புகைக்கும் பிராண்ட் எனவும், அவருக்கு நான் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை அது எனவும் சொல்லுவான். இன்னும் நான்கு அடிகளில் நான் அவனை அடைந்து விடுவேன், அதற்கு முன் அவனை பற்றி….

வேலை வெட்டி எதுவும் இல்லாமல் (என்னை போலவே), கிடைக்கின்ற புத்தகங்களை எல்லாம் படித்து கொண்டு, வாய்ப்பு கிடைத்தால் உலகத்தின் போக்கையே மாற்றி விடுவேன் என என்னும் ஒரு சாதாரண டிப்ளோமோ ஹோல்டர். எப்போதும் ஒரு வெளிர் மஞ்சள் நிற சால்வையை கழுத்தை சுற்றி அணிந்திருந்தான்.. அந்த நிறத்திற்கு சற்றும் பொருத்தம் இல்லாத ஒரு பச்சை கட்டம் போட்ட சட்டையும், தண்ணியை தன் வாழ் நாளில் சந்திக்காத, சந்திக்க போகாத ஒரு ஜீனும் அணிந்திருந்தான்.

ஆனால் மேலே கூறிய வாக்கியங்களில் சற்று கிண்டல் தொனி இருப்பதாக நான் சந்தேகபடுகிறேன். நான் சொன்ன அளவுக்கு அவன் வெறும் லட்சியவாதி இல்லை. பல சமயங்களில் மிக யதார்த்தமாக பேசுவான், கன்னிமாரா நூலகத்தின் ஆயுட் கால உறுப்பினர். எப்போதாவது பெயரே புரியாத பத்திரிக்கையில் தான் எழுதிய கவிதை வந்திருப்பதாக வந்து படித்து காட்டுவான். நான் மூன்றாவது பத்தியில் சொன்னது கூட அவன் எனக்கு விளக்கிய வண்ணத்து பூச்சி விளைவுகள் என்னும் தத்துவத்தின் சாயலை தான்.

நான் வருவதை பார்த்த உடன் அவன் முகத்தில் ஒரு சொல்ல முடியாத சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. இப்போதே அது சற்று பீதியை கலப்ப தொடங்கியது. ஏதேனும் ஒரு புத்தகத்தை படித்தது விட்டு வந்து அதை விளக்குகிறேன் பேர்வழி என்று அவன் செய்யும் அட்டகாசங்கள் அளவிட முடியாதவை. மேலும் சமீபமாக அறிவியல் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு வேறு. போன வாரம் கூட ஆராய்ச்சிக்காக இந்தியா வந்த ஒரு ஜெர்மன் நாடு பேராசிரியர் உடன் மெரீனாவில் இரவு இரண்டு மணி வரை பேசி கொண்டிருந்தான்.

டேய், எப்ப வந்தே? என்றேன்.

இப்போதான் ரெண்டு நிமிஷம் ஆச்சு, ஒரு அற்புதமான விஷயத்தை உன்கிட்ட சொல்லத்தான் வந்தேன். அதுக்கு முன்ன என்ன நிதானபடுத்திக்க தான் இந்த கிங்க்ஸ் என்றான். நான் காப்பியும் பிஸ்கட்டும் சாப்பிடும் வரை ஒன்றும் பேசவில்லை. அமைதியாக இருந்துவிட்டு. முடிந்த உடன் என்னை இழுக்காத குறையாக என் அறைக்கு கொண்டு சென்றான்.

அறையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது, மழை பெய்து ஓய்ந்திருந்தமையால் எப்போதும் இருக்கும் அளவு புழுக்கம் இல்லை. ஒருவர் முகம் ஒருவருக்கு தெரியும் அளவு மெழுகு வத்தியை வெளிச்சம் சிந்த வைத்து விட்டு அவனை கூர்ந்து கவனிக்க தொடங்கினேன்.

அசோக், நான் சொல்ல போவது, நீ சாதரணமாக கவனித்தவையாக இருக்கலாம். ஆனால் அதன் உள்ளே இயங்கும் விஷயங்கள் நம்மை மீறியது என்றான்.

பீடிகை வேண்டாம் சொல்லு என்றேன்.

இளம் வயதிலேயே இறந்து விட்ட சிலரின் பெயர்களை சொல்லு பார்க்கலாம்.

ஏன், இது என்ன விளையாட்டா? அவங்கள உன் மூலமா பேச வைக்க போறியா?. என் வீட்டு பக்கத்துல….

முட்டாள் மாதிரி பேசாதே அசோக், இது ஆவி விஷயம் இல்ல. இளம் வயதில் இறந்து போன சில பிரபலங்களை பற்றி கேட்கிறேன். நானே சொல்கிறேன் பார் என்று சொல்ல தொடங்கினான்.

இயற்கையில் ஒரு தேர்ந்தெடுப்பு விதி இருக்கிறது.

டார்வின் தியரி சொல்லும், இயற்கையின் தேர்ந்தெடுப்பு என்னும் விதிதானே?. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் “Natural Selection“ . என்றேன்

ஒருவகையில் ஆமாம், ஆனால் அவை மட்டும் அல்ல, அது வெறுமே பௌதிக காரணங்கள் படி, வலியது வெல்லும் என்னும் வரையறைக்குள் அடங்கி விடுகிறது. நான் சொல்வது அதை விட ஆழமானது.

எனக்கு புரியவில்லை என்றேன்.

சரி, நான் சொல்வதை கேள். பூமியின் பூவி இருப்பு விசை என்பது பூமி உருவானதில் இருந்து இருக்கிறது அல்லவா?. அதே போல, மரத்தில் இருந்து ஆப்பிள் விழுவது என்பதும் அவை உருவான காலம் தொட்டே நிகழ்வது தானே. ஆனால் ந்யுட்டன் என்னும் மனிதனை இயற்கை தேர்ந்தெடுக்கும் வரை அந்த புவியீர்ப்பு விதி யாருக்கும் பிடிபடாமலே இருந்தது என்கிறேன்.

சற்று புரிவது போல் இருக்கிறது.

மேலும், இந்த இயற்கையின் தேர்ந்தெடுப்பு விதியும் அதன் தொடர்பான நிகழ்வுகளும் நமது மேலோட்டமான பார்வைக்கு மிக எளிதில் தப்பி விடுகிறது. உலகம் முழுக்க சராசரி மனிதர்களையே படைத்து விட்டு, தீடிரென்று அவர்கள் மத்தியில் ஒரு பிரபஞ்ச ரகசியத்தை வெளிக்கொணரும் ஒரு அறிவியலாளனோ இல்லை இலக்கியவாதியோ இல்லை வேறு துறையில் ஒருவனோ நிறுத்தபடுகின்றான். உலகும் முழுக்க அவனை கொண்டாடுகிறது, ஆனால் அவனின் தேர்ந்தெடுப்பு பற்றிய கேள்விகள் நமக்கு வருவதே இல்லை.

அவர்கள் வளர்ந்த விதம், அவர்களின் கல்வி ஆகியவற்றை சுலபமாக மறந்து விட்டு பேசுகிறாய் நீ என்றேன். சொல்லப்போனால் உன் விதிக்கு தகுந்தார் போல் நீ நிகழ்வுகளை வளைக்க பார்க்கிறாய்.

நான் சொல்வதை கவனிக்காமல் அவன் மேலும் தொடர்ந்தான். ஆனால் அசோக், இதில் உள்ள மிக பெரிய முரணை நினைத்தால் நீ மிகவும் ஆச்சரியப்படுவாய். இந்த தேர்ந்தெடுப்பையும் மீறி சில குரல்கள் ஒலித்து கொண்டே தான் இருந்திருக்கிறது வரலாறு தோறும். ஆனால் அவை எல்லாம் அப்பத்தமாக முடித்து வைக்க பட்டிருக்கிறது என்பதை நினைவு வைத்து கொள்.

தான் தேர்ந்தெடுத்த மனிதர்களையே தொடர்ந்து வரலாறு பேசுகிறது, தானாக உருவாகி வந்த ஆளுமைகள் ஓர் எல்லை வரை வந்த பின் அபத்தமாக முடித்து வைக்கப்பட்டிருகிறது. வேண்டுமானால் யோசித்து பார், இயற்கையை அறிய முயன்ற கீட்ஸ் என்னும் கவி தனது இருபத்தி ஆறாவது வயதில் மறித்து போனான். மானுட இரக்கத்தை நோக்கி கை நீட்டிய ஆனி பிரான்க் தனது பதின் வயதுக்குள்ளாகவே கொல்லப்பட்டாள். இசையின் மூலம் கடவுளை காட்டிய மொசார்ட் தனது முப்பதாறாவது வயதில் இறந்து போனான்.

நான் மெல்ல ஆர்வமாகி கவனிக்க துவங்கினேன்.

ஏன், நீ இங்கே நமது நாட்டிலேயே எடுத்து கொள்ளேன். கணித விதிகளின் சூத்திரங்களோடு விளையாடிய ராமனுஜன், துறவி விவேகானந்தர், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஆதவன் என்னும் நீளும் பட்டியல் இப்போது கோபி கிருஷ்ணன், ஆத்மா நாம் வரை வந்துள்ளது.

இவர்களை எல்லாம் தேர்ந்தெடுப்பு விதிகளின் எதிர் குரல்கள் என்கிறாயா? என்றேன்.

ஒரு விதத்தில் ஆமாம். ஒருவேளை அவர்கள் எதிர் குரல்களாக இருக்கலாம் இல்லை அவர்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டார்களோ அதில் இருந்து அவர்கள் விலகியதால் அவர்களுக்கு தரப்பட்ட தண்டனையாக கூட இருக்கலாம். அதாவது அவன் செய்ய வேண்டிய காரியங்களை மீறி அவன் செயல் பட துவங்கிய கணம், எங்கே தன் ரகசியங்கள் எல்லாம் உடனே வெளிப்பட்டு விடுமோ என இயற்கை நினைத்த கணம் அவர்கள் இருப்பு பூமியில் இருந்து மறைக்கப்பட்டது.

சரி, நீ சொல்வது படியே வைத்து கொண்டாலும் இதில் இருந்து என்ன நடந்து விடபோகிறது.

சராசரிகள் நோக்கி எனது கவனத்தை திருப்ப போகிறேன். இந்த தேர்ந்தெடுத்தல் விதியின் படி, வெற்றி பெற்றவர்களும் அதே சமயம் என் நோக்கில் தோல்வி அடைந்தவர்களும் கூட வரலாற்றில் எப்போதும் நினைக்க படுகின்றனர். ஐன்ஸ்டீன் புகழ் பெற்ற போதே, ராமானுஜனும் நிலை நிறுத்தப் பட்டது போல்.

என் ஆராய்ச்சி இப்படி புகழ் பெற்ற மனிதர்களின் வாழ்க்கையில் உள்ள ஒரு Pattern (வகைமாதிரி) உருவாக்குவது தான். அதற்காக நான் ஜெர்மன் செல்ல இருக்கிறேன், உனக்கு சொன்னேன் அல்லவே தாமஸ் அவர் அங்கே Date Mining துறையில் ஆராய்ச்சி செய்கிறார்.

இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றி பெற்றால், இதை வைத்து எந்த சராசரி மனிதனையும் ஒரு குறிப்பிட வகை மாதிரிக்குள் வாழ வைத்து இயற்கையின் தேர்ந்தெடுப்பு விதிக்குள் அவனை பொருத்தி விடுவேன். வரலாற்றில் இடம் பெற எத்தனை பெரும் பணக்கார்கள் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா?. கோவில் கட்டி, பொது நல சேவை செய்து…. பில்லியன் கணக்கில் பணம் புரள போகிறது. நான் சற்று அதிர்ச்சியாகி அவன் சொல்ல வந்ததை உள் வாங்கி கொள்ள முயன்று கொண்டிருந்தேன்.

நான் நாளை மாலை ஜெர்மன் கிளம்புகிறேன், இன்று இரவு தாமஸ் உடன் மெரினாவில் இது சமந்தமாக பேச வேண்டி உள்ளது என்று கிளம்பினான். கால குழப்பத்தோடு இவன் பேசி விட்டு போன குழப்பமும் சேர்ந்து கொள்ள இரவெல்லாம் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தேன்.

வழக்கம் போல காலை குமார் கடைக்கு சென்று காபி வாங்கி கொண்டு அமர்ந்தேன். எதிரில் இருப்பவர் வாய் விட்டு தந்தி படித்து கொண்டு இருந்தார்,

“நேற்று மெரீனா அருகே நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில், இருவர் உயிர் இழந்தனர். இதில் ஒருவர் ஜெர்மனை சார்ந்த தாமஸ் என அறியபடுகிறது. மற்றவரின் உடல் இன்னும் அடையாளம் காணபடவில்லை. அவருக்கு வயது இருபத்தைந்து இருக்கலாம் என கூறபடுகிறது. அவர் மஞ்சள் சால்வையும், பச்சை சட்டையும் அணிந்திருந்தார்…” என படித்து கொண்டே சென்றார். நான் அதிர்ச்சியில் முகம் எல்லாம் வேர்க்க அமர்ந்திருக்க, அவர் என் கையில் பேப்பரை கொடுத்து விட்டு,

‘எல்லாம் விதி தம்பி’ என சொல்லி சென்றார்.

முந்தைய சிறுகதைகள்  1 | 2 | 3 | 4 |