Wednesday, November 4, 2009

திருவான்மியூர்

பலகை வாரவாதி சாலையிலிருந்து இடப்புறம் திரும்பி கரடு முரடாக இருந்த கச்சாப் பாதையில் சிறிது வயல் வெளியும் நிறையவே கட்டாந்தரையாக இருந்த பிரதேசத்தில் அரை மைலுக்கும் மேல் நடந்தால் திருவான்மியூர் கோயிலின் மேற்கு கோபுரம் வரும். சம்பந்தர் பாடி புகழ் பெற்ற தளம் இது. மருந்தீஸ்வரர் உடன் உறையும் திரிபுர சுந்தரி கோவில் கொண்ட இடம். திருவான்மியூருக்கு வழி 1950களில் இப்படிதான் சொல்லப்பட்டது.பலகை வாராவதி என்பது இப்போது பாடாவதி ஆன பெயர், அது முத்துலட்சுமி சாலையாய் உருமாறி, கல்கி சாலை என அழைக்கப்பட்டு, எம். எஸ். சுப்புலக்ஷ்மி சாலை ஆகி பழைய மகாபலிபுரம் சாலை என அழைக்கப்பட்டது. எல்லா வளர்ச்சியும் அடைந்த பின் நம் வழக்கப்படி அதற்கு ராஜிவ் காந்தி சாலை என பெயிரடப்பட்டது.

“நம்ம காசுல போடுற ரோடுக்கு ஏன் தலைவர்கள் பேர வைக்கிறாங்க, இதுல சுங்க வரி வேற. இதுக்கு, கோயிலுக்கு லைட் வாங்கி போட்டுட்டு தன் பேர போட்டுகிறவங்க எவ்வளவோ மேல்” (உபயம்: என் ரூம் மேட்)

எல்லாரையும் போல எங்களுக்கும் முதலில் திருவான்மியூரில் தான் வீடு கிடைத்தது அல்லது நாங்கள் கடற்கரையை ஒட்டி தான் வீடு தேடினோம். எனக்கு முன்னாலேயே வந்து வீடு பிடித்து விட்ட என் நண்பன், நான் சென்னை வந்து இறங்கியபோது, OMRல டைடல் பார்க் வந்துடு, அப்படியே அங்க இருந்து ஜெயந்தி தியேட்டர் சிக்னலுக்கு வந்துட்டு ஒரு ஆட்டோ புடி, ஆட்டோகாரன் கிட்ட, Seaward Street அஜீத் வீட்டுக்கு போகனும்னு சொல்லு என்றான்.

ஆட்டோகாரனிடம் இதை அப்படியே ஒப்பித்தேன், “அஜீத் வீடா, எனக்கு சரத் குமார் வீடு தானே தெரியும் என்றான்” (கிட்டத்தட்ட பாலவாக்கம்). கண்டிப்பா அதற்காக சரத் குமார் வீட்டிற்கு பக்கத்தில் வீடு எடுக்க முடியாது. ஒருவாறு என் நண்பனிடம் தொலைபேசி, சுச்சி வீட்டை கடந்து, அஜீத் வீடு வழியாக, யேசுதாசின் சென்னை வீட்டை ஒட்டிய ஒரு சந்தில் இரண்டாவது மாடியில் ஒரு ஆச்பெஸ்டாஸ் கூரை போட்ட வீட்டில் தஞ்சம் புகுந்தேன். அந்த வீட்டை பற்றிய மேல் விபரம் வேண்டுபவர்கள் பார்வை சிறுகதையின் வர்ணனைகளை பார்க்கவும்.

அலுவலகத்தில் சேர்ந்த முதல் ஒரு வருடம் எனது வாசம் திருவான்மியூரில் தான். ஆனால் அங்கே ஒன்றும் வாசம் நன்றாக இருந்ததில்லை, எப்போதும் உப்பும் மீனும் கலந்த காற்று. கையில் முதன் முதலில் காசு சேர்ந்த சந்தோஷத்தில் அலைந்த நாட்கள் அவை. வந்த புதிது என்பதினால் வண்டி வாங்கி இருக்கவில்லை. திருவான்மியூர் கடற்கரையிலே பல மாலை கழிந்தது. ஐந்து நிமிடத்தில் எட்டி விட கூடிய தூரத்தில் கடல். தூக்கம் வராமல் புரளும் இரவுகளில் வெளியே வந்தால் கடல் அலைகள் ஓயாமல் புரளும் இசை கேட்கும்.

பல வீடுகளில் மொட்டை மாடிகளிலேயே எல்லோரும் படுத்திருந்தனர். கடல் காற்றினாலோ என்னவோ, கொசு அதிகம் இருக்கவில்லை. அந்த சிறிய அறையில் தூங்க இடம் இல்லாமல், வெளியே படுத்து கொண்டு தூங்கிய இரவுகளில் நீண்ட நாட்களுக்கு பின் நிலவை பார்த்து கொண்டே தூங்கியது நினைவு இருக்கிறது. கடலில் இருந்து நேரடி தொடர்பு என்பதால், நிலத்தடி தண்ணீருக்கு எப்போது ரோஷம் அதிகம். அவ்வளவு உப்பு ஆகாது, திருமணம் வரை தலை முடியை காக்கும் பொருட்டு இரண்டு மாடி கீழே இறங்கி அடி பம்பில் தண்ணீர் அடித்து கொண்டு வருவோம்.

நீண்ட நாட்களாக என்னிடம் எதையோ பேச துடிப்பது போல் பார்த்து கொண்டிருந்த அந்த பக்கத்து வீட்டு குட்டி பெண், ஒரு முறை நான் தண்ணீர் பிடிக்கையில் தான் வந்து என்னிடம் பேசியது. “அண்ணா, அந்த டாங்க்ள தண்ணீ இருக்கு, மாசம் இருபத்து ரூபா கொடுத்த அதுல இருந்த பிடிச்சுக்கலாம்” என்றாள்.

எதிர்கால கனவுகள் சுமந்த பேச்சுக்களை பல நாட்கள் அந்த மொட்டை மாடி சுவர்கள் தான் கேட்டு கொண்டிருந்தது. ஒரு வருடத்தில் வெளிநாடு, இரண்டு வருடத்தில் பதவி உயர்வு, ஊர்ல அப்பாவுக்கு ஒரு புது வண்டி என. அதற்கு முன்பு அந்த வீட்டில் இருந்தவர் அலுவலகம் மூலம் வெளிநாடு சென்று இருக்கிறார் என்பது கூடுதல் சந்தோஷம் அளித்தது. ஆனால் அதையே காரணம் காட்டி வீட்டு ஓனர், “ராசியான வீடு தம்பி என்று ஒரு வருடத்தில் இரண்டு முறை வாடகை உயர்த்தி விட்டார்”. இத்தனைக்கும் எனது அறை நண்பனின் மாமா முறை அவர்.

திருவான்மியூர் கடற்கரையில் இருந்து தெரிந்த பெசன்ட் நகர் கடற்கரையை ஒருமுறை நடந்தே கடந்தோம். சூரிய உதயம் பார்க்க அலாரம் வைத்து எழுந்தோம். டீ.வீ தொடர் நடிகர்கள் நடிகைகள், தொலைகாட்சியில் செய்தி வாசிபவர்கள், பயில்வான் ரங்கசாமி, காதல் சந்த்யா என பார்த்த அத்தனை விஷயங்களையும் பெருமையாய் ஊரில் சொல்லி கொண்டு திரிந்தோம். கையில் காசு பார்த்த சந்தோஷத்தில் புதிது புதிதாய் புத்தகம் வாங்க தொடங்கினேன்.

இப்படி எல்லாம் எழுதுவாங்களா என வியந்தது அந்த சிறிய வீட்டில் தான் தொடங்கியது, பிடித்த அத்தனை எழுத்துகளின் சொந்தகாரர்களையும் பார்த்து விடுவது என முடிவு எடுத்தும் அங்கேதான். சுஜாதா படித்து விட்டு அவரை சந்திக்கும் முன் அவரது எல்லா எழுத்துக்களையும் படிக்க வேண்டும் என அவரது புத்தகங்களை படித்து தள்ளினேன்.

மீண்டும் ஒருமுறை வாடகை ஏற்றப்பட்ட போது, மனம் தாங்காமல் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. இப்போதும் விருப்பமான அந்த கோவில், பெரும்பாலும் யாருமற்ற அந்த கடற்கரை தெருக்கள், கடைசி வரை சிரித்த படியே பரிமாறிய அந்த வேப்பமரத்தை ஒட்டிய பாட்டி மெஸ், RTO Bus Stop எல்லாம் அவ்வபோது நினைவு வருகிறது.

இப்போது யாரவது முதல்ல சென்னைல எங்கே இருந்தீங்க என்றால், திருவான்மியூர்!, தி.ஜா தெரியுமா அவர் அங்கதான் கடைசியா வாழ்ந்தாராம். அப்புறம் அந்த கோவில் 1500 வருஷம் பழைமையான கோவிலாம். சம்பந்தர் இந்த கோவில பத்தி பாடி இருக்கிறார். ரொம்ப நல்ல இடம் பார்த்துக்கோ என்றுதான் பேச துவங்குகிறேன்.

எப்போதாவது அந்த கடற்கரைக்கு செல்கையில், கனவுகளோடு திரியும் முகங்களை பார்க்க முடிகிறது. ELT Tag போட்டு கொண்டு சந்தோஷமாய் வருபவர்களோடு நான் பார்த்த எல்லா முகங்களும் வந்து வந்து போகிறது. அதனோடு ஓரமாக சுஜாதாவை கடைசி வரை சந்திக்கவே இல்லை என்ற எண்ணமும்.

3 comments:

  1. மிக அழகு நண்பரே, நானும் திருவான்மியூரில் திரிந்திருக்கிறேன். சம்பந்தர் பாடிய கோவிலும், கடற்கரையும் கண்டிருக்கிறேன்,

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மருந்தீஸ்வரர் ஆலயம் திருவான்மியூருக்கே தனி சிறப்பு. உள்ளே நுழைந்ததும் எதோ ஒரு 500 ஆண்டுகள் பின்னால் போனது போல!

    ReplyDelete