Saturday, July 18, 2009

Travellers and Magicians - ஒரு நெடுஞ்சாலை கனவு பயணம்

மலை முகடுகள் மேகங்களை உரசிய படியே இருக்கிறது. உடைந்து போன மேக துண்டுகள் முயல்களை போல பள்ளத்தாக்குகளில் விழுந்து கிடக்கின்றது. சுருட்டி படுத்து கொண்ட மலை பாம்பின் முதுகை சுற்றிய கோடுகளாய் மலை பாதைகள் நீள்கின்றன. பாதைகளில் எப்போதாவது சிறு எறும்பென தோன்றிய வாகனங்கள் மெல்ல ஊர்ந்து நம்மை கடந்து செல்கின்றது. இவ்வளவு அழகான தேசமா என மனம் வியந்த வண்ணமே உள்ளது, பூட்டான், நமது சிக்கிம் மற்றும் கல்கத்தா மாநிலங்களை இரு புற எல்லையாகவும் இமயமலையின் அடிவாரத்தை இருப்பிடமாகவும் கொண்ட தேசம். அந்த தேசத்தின் நிலத்தை அழகாய் பதிவு செய்ததோடு ஒரு மிக அழகான கதையை கொண்ட திரைப்படம் Travellers and Magicians. Khyentse Norbu என்று புத்த பிட்சு இயக்கிய படம் இது. புத்த மடாலயத்தில் வாழும் சிறுவர்களின் கால் பந்தாட்டம் பார்க்கும் ஆசையை நுட்பமாய் வெளிப்படுத்தி பல விருதுகளை பெற்ற The Cup படத்திற்கு பின்னான இரண்டாவது படம் இது.முழுக்க முழுக்க பூட்டானிலேயே படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் இது, பூட்டானை உலக மக்களுக்கு அறிமுக படுத்துவதே எனது நோக்கம் என குறிப்பிடும் இயக்குனர், கனவு உலகத்திற்கு செல்ல வேண்டும் என எண்ணும் இரு வேறு மனிதர்களின் கதையை ஒரு பின்னலை போல் கொடுத்துள்ளார். டான்டுப் ஒரு தனித்த மலை கிராமத்தின் அரசாங்க அதிகாரி, அமெரிக்கா செல்லும் கனவோடு வாழ்பவன். அதற்கான ஏற்பாடுகளை செயதுவிட்டதாய் நண்பனிடம் இருந்து கடிதம் வர, திருவிழாவிற்கு செல்வதாய் பொய் சொல்லி தன் அதிகாரியிடம் விடுமுறை கேட்டு கொண்டு புறப்படுகிறான். திம்பு என்னும் பெருநகருக்கு செல்லும் ஒரே பேருந்தை பிடிக்க வருகையில், ஒரு கிராமத்து மூதாட்டி அவனிடம் சாப்பிட தந்த பாலாடை கட்டிகளை ஆற்றில் எறிந்துவிட்டு ஓடுகிறான். நமது ஊர்களைப் போலவே அந்த ஊரிலும் கிராமத்தின் அப்பட்டமான அன்பு தொனிக்கிறது. கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அவன் அரசாங்க அதிகாரி ஆதலால் அவனை தெரிந்திருக்கிறது.அவன் அங்கு வந்து பணி புரிவதை பெருமையோடு நினைத்து கொள்கின்றனர்.

பேருந்தை பிடிக்கமுடியாமல் தவற விட்டு காத்திருக்கிறான். அப்போது அவனை போலவே பெருநகருக்கும், திருவிழாவிற்கும் செல்ல விரும்பும் ஒரு முதியவர், ஒரு புத்த பிட்சு, ஒரு வயதானவர் அவரின் மகள் ஆகியோர் சேருகின்றனர். பேருந்தை தவற விட்டால் மீண்டும் அது மறுநாள் வரும் வரை வேறு வழி இல்லை, மெல்ல நடை பயணம் அல்லது ஏதேனும் வாகனங்களில் உதவி கேட்டு செல்லவேண்டிய நிலை. மெல்ல அவர்கள் நடக்க துவங்குகிறார்கள்.புத்த பிட்சு டான்டுபை நீ எங்கு செல்கிறாய் என கேட்கிறான், அதற்கு அவன் “என் கனவு தேசத்துக்கு” என்கிறான், அங்கு என்ன கிடைக்கும்? என்பதற்கு எல்லாம் கிடைக்கும் என்கிறான். ஆப்பிள் விற்கும் வயதான முதியவர் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அங்கு என்ன செய்வாய் என்று புத்த பிட்சுவின் கேள்விக்கு, தோட்டங்களில் ஆப்பிள் பறிப்பேன், உணவு விடுதியில் வேலை செய்வேன் என்கிறான். மகளோடு வந்த முதியவர், இங்கு அரசாங்க வேலையை விட்டு விட்டு அங்கு போய் ஆப்பிள் பறிக்க போகறீர்களா என்கிறார்.

அவர்கள் ஒரு லாரியில் இடம் கிடைத்து செல்ல துவங்க, புத்த பிட்சு இது போல கனவு உலகத்துக்கு செல்ல வேண்டும் என நினைத்த ஒருவனின் கதையை சொல்கிறார். அந்த கதை பூட்டான் நாட்டார் கதை மரபில் மிக பிரசித்தமானது, அதில் வரும் இரு சகோதரர்களில் மூத்தவன் எப்போதும் தன்னுடைய கனவு உலகம் என்ற ஒன்றை அவன் தம்பியிடம் சொல்லி கொண்டே இருக்கிறான். அவனை மந்திரங்கள் கற்று கொள்ளும் வகுப்பிற்கு அவன் தந்தை அனுப்பி வைக்க, அவன் அதில் கவனம் இல்லாமல், அழகான பெண்கள் கொண்ட தன் கனவு உலகத்தை கற்பனை செய்த வண்ணமே இருக்கிறான். அவனுக்கு எப்போதும் மதிய உணவு எடுத்து வரும் தம்பி அன்று ஒரு குதிரையில் வர, இவன் அதை முயன்று பார்த்து காட்டில் தொலைந்து போகிறான். அங்கே நடு காட்டில் ஒரு குடிசையில் ஒரு கிழவனும் அவனது அழகான இளம் மனைவியும் வாழ்கின்றனர். அவள் மேல் காதல் கொள்ளும் அவன், அவளுடன் இணைந்து அந்த கிழவனை கொள்ள முயற்சித்து, பின் மனம் உடைந்து காட்டில் எங்கோ ஓடுகிறான். பின்னால் அவளின் கூக்குரல் கேட்பதாக ஒரு மர்மத்துடன் கதையை முடிக்கிறார் புத்த பிட்சு.

பிட்சு சொல்லும் அந்த கதை ஒரு கனவு உலகத்தில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி அமைப்பும், ஒளிப்பதிவும் இதுவரை நான் பார்த்த சிறந்த ஒன்று. சில இடங்களில் Illusionist படத்தை நினைவூட்டியது. பிட்சு சொல்லும் இந்த கதையில் வரும் காதல், கனவு உலகம், பொறாமை, காமம் ஆகியவை டான்டுவின் வாழ்க்கையோடு மெல்ல பிணைக்கப்பட்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி இசையும் உரையாடல்களும் மிக கட்சிதமானவை. படத்தின் இயக்குனர் ஒரு புத்த துறவி என்பதால் படம் பார்ப்பதும் ஒரு த்யானம் போலவே உள்ளது. இந்தியாவின் பாலிவுட்டின் தாகம் அதிகம் உள்ள பூட்டானில் இந்த படம் எப்படி உள்வாங்கி கொள்ளப் பட்டது என இயக்குனரிடம் கேட்டதற்கு,படத்தில் பாடல்களே இல்லையா என சிலர் கேட்டனராம்.படத்தின் காட்சிகளும் அதன் பின்னணி இசையும் மெல்ல இதை எழுதும் போதும் நினைவு வந்து கொண்டும் , காதில் ஒலித்து கொண்டும் இருக்கிறது. படத்தில் ஓரிடத்தில் ஒரு பெண்ணின் புன்னகையை பார்க்கிறான் டான்டு , அதற்க்கு புத்த பிட்சு, “அழகாக இருக்கிறது அல்லவா அவள் புன்னகை, தற்காலிகமாக இருப்பதனால் தான் அது அவ்வளவு அழகாக இருக்காதா என்ன? என்கிறார். ஆனால் படத்தின் காட்சிகள் நிரந்தரமாய் நம்முள் உறைந்து விடுகிறது.இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |13 |

No comments:

Post a Comment