Wednesday, July 1, 2009

A Short Film about killing - வலி தரும் இழப்புகள்

உலக சினிமா வேறு, சினிமா உலகம் வேறு என்றாராம் ஜெயகாந்தன். 100 வருடங்களை கடந்து விட்ட கலையின் தீவரத்தை உணராது செயல்பட்ட ஒரு சமூக கட்டமைப்பை நோக்கி சொல்லப்பட்ட ஒரு கலைஞனின் ஆதங்கம் இது. மானுட மனதின் ஆதார உணர்ச்சிகளைத் தொட்டு செல்லும் எந்த கலைப் படைப்பும் உலக முழுமைக்கும் உரியதே. சிரிப்பை, அழுகையை, கோபத்தை, காதலை திரையில் மொழிபெயர்ப்பதே உலக சினிமா. எங்கோ, யாருக்கோ அல்லது இங்கே நமக்கு என்கிற சுவர்களை உடைத்து ஒவ்வொரு இதயத்துக்கும் நம்பிக்கையை, அன்பை, ஒளியைப் பாய்ச்சுவதே படைப்பின் பெருங்கனவு என்று குறிப்பிடுகிறார் செழியன் தனது உலக சினிமா புத்தகத்தின் முன்னுரையில். கலையைக் கொண்டு தன் உள்ளொளியைக் காண முற்படுபவன் எங்கு இருந்தாலும் அவன் நம்மவன் என்று ஜே.ஜே சில குறிப்புகளில் சுந்தர ராமசாமி சொல்வது சினிமாவிற்கும் பொருத்தமாகவே படுகிறது.


சத்யஜித் ரே, மணிரத்தினம், அடூர், ரித்விக் காடக், ஆகியோரது படங்கள் இந்திய எல்லைகளைத் தாண்டி ரசிக்கபடுவதும். பெர்க்மன், பெலினி, கிசொலோவ்ச்கி, அல்மோத்வர், மஜித் மஜிதி, ஆந்த்ரா வாய்ஜே, போலன்ஸ்கி, கோடார்ட், ஹிட்ச்காக் படைப்புகள் உலகம் முழுமைக்கும் பொதுவானதும் இதையே உணர்த்துவதாக உள்ளது. எங்கோ பெயர் தெரியாத தேசத்தில் இருந்தும் அறத்தின் குரலாய் ஒலிக்கும் அத்தனை படைப்புக்களும் நமக்கு உரியதே.


போலாந்தில் வாழ்ந்த உலகின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர் Krzysztof Kieslowski. போலந்தில் உள்ள வார்சா என்னும் இடத்தில பிறந்து 80 மற்றும் 90 களில் திரைப்படங்களை இயக்கத் தொடங்கிய இவர் பைபிளில் உள்ள Ten Commandments என்னும் பத்து கட்டளைகளை மையமாக வைத்து பத்து ஒரு மணி நேர தொலைகாட்சி தொடரை (Decalogue) இயக்கி உலக புகழ் பெற்றார். அதில் உள்ள “Thou shall not commit adultery” மற்றும் “Thou shall not murder” என்னும் இரண்டு விஷயங்களை இன்றைய காலக் கட்டத்திற்குள் பொருத்தி எடுக்கப்பட்ட தொலைக்காட்சி தொடரை திரைப்படமாக வெளியிட்டார்.A Short Film about Love என்னும் திரைப்படம் பிறன்மனை விழையாமையையும் A Short Film about Killing என்பது கொல்லாமையையும் விவாதமாக முன்வைத்தவை. இந்த திரைப்படங்கள் எவையும் எந்த கருத்தையும் வலியுறுத்தும் விதமாக எடுக்கப் படாமல், பார்வையாளனிடம் சில கேள்விகளை உருவாக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ளது.


1988 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் மிக பெரிய அதிர்வுகளை உருவாக்கிய திரைப்படம் A Short Film about Killing. ஒரு எலி இறந்து கழிவு நீரில் மிதந்து கிடக்க அந்த நீர் மெல்ல சலசலக்கிறது, மனம் சிறு பதைபதைப்பை உணர தொடங்குகிறது. மெல்ல அதில் இருந்த நம் பார்வை மேலே நகர ஒரு பூனையின் கால்கள் அந்தரத்தில் நடக்க முயற்சித்து கொண்டு இருக்க, ஒரு பின்னணி இசையயுடன் நம் கண்கள் மேலே சொல்ல அந்த பூனை ஒரு கம்பியில் தூக்கில் இடப்பட்டு ஆடி கொண்டிருக்கிறது. இப்போது நமது பதைபதைப்பு பூனைக்கானதாகிறது., பின்னணியில் சிறுவர்கள் ஆரவாரமாக குதித்து ஓடும் குரல் கேட்க நமது அதிர்ச்சி அவர்களை பின்தொடர்வதுடன் தொடங்குகிறது இந்த படம்.மூன்று வெவ்வேறு பின்னணி கொண்ட நபர்களின் அன்றைய நிகழ்வுகள் முதல் 35 நிமிடங்களுக்கு தொகுக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த காட்சிகளில், கட்சிதமான வசனங்களில் அவர்களின் ஆளுமை முழுதாய் நம் மனதில் பதிந்து விடுகிறது. முதலில் ஜாசக், ஒரு இருவது வயது வாலிபன், எந்த நோக்கமும் இல்லாமல் தெருவில் நடந்து கொண்டு இருக்கிறான். ஒரு புகைப்பட கடைக்கு சென்று ஒரு பெண்ணின் புகைப்படத்தை புனரமைக்க சொல்லிவிட்டு மீண்டும் நடக்கிறான்.பாலத்தின் மேல் நடக்கையில் அங்கிருக்கும் ஒரு கல்லை கீழே தட்டி விட, அது கீழே சென்று கொண்டிருக்கும் வாகனத்தில் பட்டு அந்த கண்ணாடி உடைகிறது. அவன் ஒரு சந்தோஷத்துடன் அங்கிருந்து செல்கிறான். தேநீர் விடுதியில் தேநீர் அருந்துகையில் அங்கிருக்கும் இரண்டு பெண் குழந்தைகளைப் பார்த்து சிரிக்கிறான். அவன் எதிரில் ஒருவன் அவன் காதலியுடன் எதோ சந்தோஷமான விஷயத்தைப் பேசி கொண்டு இருக்கிறான்.


அங்கிருந்து வெளியில் வந்து ஒரு வாடகை வண்டியைப் பிடித்து கொண்டு செல்கிறான். இந்த கதையின் நடுவே அந்த வாடகை வண்டிக்காரன் காரை காலையில் கழுவி விட்டு அந்த தேநீர் விடுதிக்கு வருவதும் சொல்லப் படுகிறது. அதனோடு அந்த விடுதியில் காதலியுடன் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞனின் கதையும் சொல்லப் படுகிறது. சட்டப் படிப்பு படித்த அவனுக்கு அன்றுதான் வேலை கிடைத்திருக்கிறது.


காரில் செல்லும் ஜாசக். குறுக்கு வழியில் செல்ல சொல்கிறான். அந்த வழியில் யாரும் இல்லாத ஒரு இடத்தில் தன் கையில் வைத்திருந்த கயிற்றைக் கொண்டு முன் சீட்டில் உள்ள அந்த ஓட்டுனரின் கழுத்தை இறுக்குகிறான். சுமார் எட்டு நிமிடங்கள் ஓட கூடிய இந்த கொலை காட்சி சினிமாவின் மிக நீண்ட கொலை காட்சி.


அந்த கொலை நடந்த பின் அவன் அங்கிருந்து காரை ஒட்டிக் கொண்டு சென்று விடுகிறான். அடுத்த காட்சி ஒரு வருடத்திற்கு பின் நீதி மன்றத்தில் அவனுக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக அமைகிறது. அவனுக்காக வாதாடிய வக்கீல் அவன் தேநீர் விடுதியில் பார்த்த அந்த இளைஞன். அவனை காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்து மனம் வருந்துகிறான். நீதி மன்றம் கலைந்தப் பின் நீதிபதியை தனியே சந்தித்து, ஒருவேளை நான் சரியாக வாதாட வில்லையா எனக் கேட்கிறான். இல்லை நீ நன்றாகவே வாதாடினாய் ஆனால் அவன் செயத்ததற்கு இதுதான் தண்டனை என்கிறார். அவனக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு முன் அவன் அந்த வக்கீலிடம் பேசுகிறான், அந்த 10 நிமிடம் மிக உருக்கமான காட்சி.
அவனது இறுதி நடை அந்த மேடையை நோக்கி செல்கிறது, மெல்ல அந்த காட்சிகள் கவனப்படுத்த படுகிறது. அவன் செய்த கொலையை விட கனத்த ஒரு தூக்கு தண்டனை சட்டத்தின் துணையுடன் நிறைவேற்றப் படுகிறது. படம் முழுதும் ஒரு விதமான இறுக்கமான இசையே வழிகிறது, நம் மனதை கனக்கும் இசை. காட்சிகளும் ஒரு வகையான கருமை கொண்ட பின்னணியிலேயே படமாக்கப் பட்டு உள்ளது. இந்த படம் வெளியான பின் இதை வைத்து ஏற்பட்ட விவாதத்தின் முடிவில், போலாந்தில் தூக்கு தண்டனை ரத்து செய்யப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மரண தண்டனையைப் பற்றி இயக்குனரிடம் கேட்டதற்கு,

“It’s wrong no matter why you kill, no matter whom you kill and no matter who does the killing… Inflicting death is probably the highest form of violence imaginable; capital punishment is an infliction of death.”

என்றார்.

இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |

No comments:

Post a Comment