Tuesday, June 30, 2009

என் ஜன்னல் வழியே #3

தேர்தல் திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது. போய்டுவேன் போய்டுவேனு கம்யூனிஸ்ட் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டு இருந்ததாலோ இல்லை பொருளாதார பின்னடைவினால் பாதிக்கப்பட்டதாலோ என்னவோ ஒரு நிலையான ஆட்சிக்கு மக்கள் உத்தரவு கொடுத்து விட்டனர். காங்கிரஸ் மற்ற மாநிலங்களில் எப்படியோ, தமிழ்நாட்டில் அதன் முக்கிய தலைவர்கள் தோற்றது கண்டிபாக தற்செயல் அல்ல என தோன்றுகிறது. தொலைக்காட்சிகளில் மாற்றி மாற்றி பிரபலங்கள் வரிசையில் நின்று வக்களித்ததை தெரிவித்து கொண்டு இருந்தனர். எங்கள் ஊரில் பிரசித்தி பெற்ற டாக்டர் நான் வரிசையில் ஒரு மணி நேரம் நிற்கையில் நேராக உள்ளே சென்று வாக்களித்து விட்டு வந்து விட்டார். ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு வாக்களித்த பின் நடு விரலில் மையை இட்டு இருக்கிறார்கள். அவர்கள் வந்து டி.விக்கு போஸ் கொடுப்பார்கள் என யோசித்திருக்கலாம்.


ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நான் பல வருடமாய் கேள்விப் பட்ட நாவல். மிகுந்த எதிர்பார்ப்போடு படிக்கத் துவங்கி இருக்கிறேன். அவரது சில சிறுகதைகள் மிகவும் பிடித்திருந்தது, ஆனால் நாவல் இன்னும் என்னைக் கவரவில்லை. முழுதும் படித்து விட்டு, முடிந்தால் மீண்டும் ஒருமுறை படித்து விட்டு சொல்கிறேன்.


ஒரு இலக்கிய புத்தகத்தை படித்த பின் “இந்த புத்தகம் எனக்கு பிடிக்கவில்லை” என சொன்னால், சுந்தர ராமசாமி எத்தனை முறை படித்தாய் எனக் கேட்பாராம். எந்த புத்தகத்தையும் உடனே பிடிக்க வில்லை என சொல்லிவிடல் ஆகாது. இன்னும் சிறிது நாள் தள்ளி படித்து பார்க்கலாம். “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்னும் தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது, தேர்தல் சமயத்தில் இது இன்னும் பொருத்தமானதாக தோன்றுகிறது.


சமீபத்தில் பார்த்த ஹாலிவுட் படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது “Usual Suspects”. Pulp Fiction க்கு பின் வந்த நிழல் உலக திரைபடங்களில் இது மிக முக்கியமானது. ஒரு நகரத்தில் ஒரு திருட்டு நடக்கிறது, அதன் காரணமாக எப்போதும் போலிசின் சந்தேக லிஸ்டில் இருக்கும் ஐந்து பேர் கைது செய்யப் படுகிறார்கள். அதில் சிலர் திருட்டு தொழிலை விட்டு வேறு நல்ல நிலையில் இருப்பவர்கள். இருந்தாலும் இந்த குற்றம் அவர்களை ஒன்றிணைக்கிறது.
அதிலிருந்து விடுதலை ஆகும் அவர்கள், போலீசை பழிவாங்க இணைந்து ஒரு சின்ன திருட்டை போலிசிடமே நடத்தி கட்டுகின்றனர். பின் அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்ல, அங்கே அந்த ஐவரும் செய்ய வேண்டிய ஒரு மிக பெரிய, மிக அபாயகரமான Assignment காத்திருக்கிறது. அவர்கள் அதில் இருந்து தப்பிக்கவே முடியாதபடி வலை பின்னப் பட்டிருப்பதை உணர்கிறார்கள். கோபயாஷி என்னும் ஒரு வக்கீல் மூலம், கைசர் சூஸே என்னும் நிழல் உலக தாதா அவர்களை அந்த வேலையை செய்ய சொல்கிறான். அதன் பின் கதை மின்னல் வேகம் பிடிக்கிறது. மிக கட்சிதமான திரைகதை, யார் கைசர் சூஸே? என்பது வெளியில் தெரியாத வண்ணம் கதையை நகர்த்தி முடியும் அந்த இறுதி காட்சி கலக்கல். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.குட்டி கவிதை


வேகத்தடை


ரயில் நிலைய படிக்கட்டுகள்

எப்போதும் வேகமாகவே

கடந்து விடுகிறது…..

நிதானம்,

என்றாவது மழை நாளிலும்

இரும்பு கால்களை

மாட்டி கொண்டு

முன்னால்

ஏறிக் கொண்டிருந்த தோழியை

பார்த்த அன்று மட்டும்

கை கூடுகிறது

2 comments:

  1. அன்புள்ள மதன்,

    இன்றுதான் உங்கள் வலைப்பூவை பார்க்க நேர்ந்தது. மேலோட்டமாக உங்கள் அனைத்து பதிவுகளையும் சற்று வலம் வந்தேன். சுவாரசியமாக எழுதுகிறீர்கள். பின்பு நிதானமாக படித்துப் பார்க்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. மிகவும் நன்றி சுரேஷ். தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து கொண்டு வருபவன் நான். வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete