Tuesday, June 2, 2009

சுஜாதாவின் பாலமும், ஹிட்ச்க்காக்கின் கயிரும்

மரணம் என்பது ஒரு கலை, கவிதை போல், இசை போல் அதையும் அழகியலோடு செய்யலாம் என்ற கருத்து பல காலமாக இருந்து வருகிறது. இந்த கருத்து 1930ல் அமெரிக்காவில் பாபி ப்ராங்கின் என்பவரின் மரணத்திற்கு வழிவகுத்தது. அதை செய்தவர்கள் அவனது இரண்டு நண்பர்கள், அவர்கள் பிடிப்பட்ட போது அவர்கள் சொன்ன காரணம் இதுதான். கொலை செய்ய ஒரு காரணம் தேவை இல்லை. கொலையும் ஒரு கலை.


1950 களில் அமெரிக்காவில் வாழ்ந்த கவிதாயினி “சில்வியா பிலாத்தின்” புகழ்ப் பெற்ற கவிதை வரிகள் இவை,

“ Dying is an art, like everything else.

I do it exceptionally well.

I do it so it feels like hell.

I do it so it feels real.

I guess you could say I’ve a call “மரித்தல் என்பதும் ஒரு கலையே, அதை நான் மிக திறம்பட செய்வேன் என்ற சில்வியா 1963 ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டு தான் இறந்து போனார். வாழ்ந்துப் பார்க்கும் வாழ்கையையே எந்த கோட்ப்பாட்டிற்க்குள்ளும் அடைக்க முடியாதபோது, யாரும் அறியாத மரணத்தை எப்படி அடைப்பது என தெரியவில்லை. இரண்டு வெவ்வேறு கொலைகள் அதன் காரணங்கள் ஆகியவற்றை எடுத்து காட்டியது சுஜாதாவின் பாலமும் ஹிட்ச்க்காக்கின் கயிரும்.


சுஜாதாவின், “பாலம்” என்ற சிறுகதை உள்ளது. அதன் சுருக்கம் இதுதான். ஒரு ரயில்ப் பயணம் தொடங்குகிறது, முதல் வகுப்பில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பேராசிரியரும், ஒரு இளைஞனும் பயணம் செய்கிறார்கள். ஆரம்பம் முதலே பேராசிரியர் சற்று பதட்டம் கொண்டவராகவே காணப்படுகிறார். பயணம் செல்ல செல்ல அந்த இளைஞனிடம் உரையாடத் துவங்கும் பேராசிரியர், இதுநாள் வரை தான் மறைத்து வைத்திருந்த ஒரு விஷயத்தை அவனிடம் சொல்லப் ப்ரியப்படுவதாக சொல்கிறார். அவனும் ஆர்வமுடன் கேட்க, அவர் சொல்ல துவங்குகிறார்.


எல்லாக் கொலைகளுக்குப் பின்னாலும் அவசியம் ஒரு காரணம் இருக்க வேண்டியது இல்லை, அந்த இளைஞன் உன்னிப்பாக கவனிக்க துவங்க, அவர் தொடர்கிறார், இதே போல ஒரு ரயில் பயணத்தில் முன்னொரு நாள் அவர் செல்கையில் வண்டி ஓர் ரயில் நிலையத்தில் நிற்கிறது, அவர் எதோ ஓர் உந்துதலால் அங்கே இறங்க, ஒரு ரிக்ஷாக்காரன் அவரிடம் சைகை செய்து அவரை ஒரு சந்திற்கு கூட்டி செல்கிறான், விலை மாது இருக்கும் இடம் அது. அங்கு உள்ள ஒரு பெண் தன் குழந்தையை தூங்க வைத்து விட்டு அவரிடம் அறைக்குள் வர, அவளை தலையணை வைத்து கொன்று விட்டு, விறு விறுவென நடந்தே ரயில் நிலையம் வந்து வேறு ஒரு ரயிலில் ஏறி சென்று விடுகிறார்.

இதை அவனிடம் சொல்லிவிட்டு அது தவறு அல்ல, ஏன் என்றால் எனக்கு அந்த பெண் மீது எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லாத பட்சத்தில் நான் குற்றவாளி அல்ல என்கிறார். அந்த இளைஞ்ன் மேலும் சில கேள்விகள் கேட்க அவர் இப்படியே பதில் சொல்கிறார். அதற்கு அவன் எனக்கு கடைசி சமயத்தில் தான் வண்டியில் இடம் கிடைத்து ஏறினேன், அதுவும் வேறு ஒரு நபரின் பெயரில் உள்ள டிக்கட் இது. அதனால் நான் இந்த வண்டியில் பயணம் செய்வது யாருக்கும் தெரியாது, எனக்கு இப்போது ஒன்று தோன்றுகிறது என அவரை நோக்கி வர, ரயில் ஒரு பாலத்தின் மேல் தடக் தடக் என்ற சத்தத்துடன் செல்கிறது. இந்த கதையைப் படித்து விட்டு, உங்க வீட்டிற்கு வரட்டுமா என ஒருவர் சுஜாதாவிற்கு விகடன் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினாராம்.


ஹிட்ச்க்காக்கின் “Rope” திரைப்படம் மேலே குறிப்பிட்ட அந்த அமெரிக்க கொலை வழக்கை மையமாய் கொண்டது. பிராண்டன் மற்றும் அவனது நண்பன் பிலிப், அவர்களது நண்பனான டேவிடை கொல்வதுடன் தொடங்குகிறது இந்தப் படம். அவனை கொன்று ஒரு பெட்டியில் அடைத்து விட்டு, ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். விருந்திற்கு அவர்கள் அழைத்திருப்பது டேவிடின் அப்பா, சித்தி, அவனது காதலி மற்றும் அவர்கள் அனைவருக்கும் பள்ளியில் வகுப்பு எடுத்த ஆசிரியர். அவர்களை ஏன் அழைத்தாய் என பிலிப் கேட்க, அந்த சுவாரசியத்தையும் பதட்டத்தையும் அனுபவிக்க என்கிறான்.
அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வர துவங்குகிறார்கள், வந்தவர்கள் டேவிட் எங்கே என் கேட்க, வருவதாகத்தான் கூறினான் என் சொல்லி விருந்தை தொடங்குகிறார்கள். அப்போது பேச்சு மரணம் பற்றி திரும்புகிறது. ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வேண்டுமானால், அதற்கு எந்த விதத்திலும் வலு சேர்க்காத Inferior மனிதர்கள் கொள்ளப்படலாம் கொல்லப்படலாம் என்று பேசுகிறான் பிராண்டன். மிகுந்த கூர்மையானவறான அவனது ஆசிரியர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த அறையில் உள்ள மாற்றங்களை கவனிக்கிறார். அதன் பின் அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது முற்றிலும் ஹிட்ச்காகி பாணி.


படம் முழுதும் ஒரே அறையில் எடுக்கப் பட்டு உள்ளது. மேலும் படத்தில் Editing எதுவும் செய்யப் படவில்லை (சில இடங்களில் பிலிம் சுருள் தீர்ந்த போது மட்டும்). டெக்னிக்கலாக மிக சவாலான படமான இது ஹிட்ச்க்காக்கின் மேதமைக்கு சான்று.

2 comments:

  1. ரோப் திரைப்படம் உண்மையில் அக்காலத்திய சிறந்த முயற்சிகளுள் ஒன்று.. பாலம் கதை பற்றி தமிழ் வாசகர்களுக்கு புதிதாய் சொல்ல ஒன்றுமில்லை. சுஜாதாவின் கிரீடத்தை அலங்கரித்த மற்றொரு வைரம்.

    சில்வியாவின் கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. மிக்க நன்றி சென்ஷி, மிக சரி, சுஜாதாவின் ஆளுமை படிக்க படிக்க வியப்பை தந்த வண்ணமே உள்ளது.

    ReplyDelete