Tuesday, June 30, 2009

என் ஜன்னல் வழியே-4

எங்கள் அப்பார்ட்மென்ட்டில் எங்கள் வீட்டின் பக்கத்து வீட்டில் ஏற்கனவே தங்கி இருந்தவர் கல்கத்தாவில் இருந்த தன் குடும்பத்தை அழைத்து வந்துள்ளார். அவரது அப்பா அம்மா சகிதம் அவரது ஒரு வயது குட்டி தேவதையையும் சேர்த்து ஐந்து பேர் இருக்கிறார்கள். ஒரு நாள் வீட்டிற்க்கு வாங்கள் என அழைத்தார். வழக்கம் போல கூச்சப் பட்டுக் கொண்டு செல்லவில்லை.


அறையில் நண்பனுக்கு பிறந்தநாள் என்று போன வாரம், கேக் கொடுப்பதற்காக சென்றோம். அவரும் அவர் மனைவியும் வீட்டில் இல்லை, அவரது அப்பா அம்மாவிடம் கொடுத்தோம், ஒரு வயது இனோ விளையாடி கொண்டிருந்தாள், அது அவளது செல்லப் பெயராம். அவளை போலவே மென்மையாக இருக்கிறது, இனோ என்றால் திரும்பி “க்ளக்” என சிரிக்கிறாள். பிறந்த நாள் கேக்கை வாங்கிய உடன், அவர்கள் வீட்டின் கதவோரம் வைத்திருந்த DVD பிளேயர் காணாமல் போனதாக சொன்னார்கள். அந்த சூழ்நிலைக்கு சற்றும் சம்மந்தமில்லாமல் இருந்தது. பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்கலாம், எங்கே வேலை செய்கிறீர்கள் என கேட்டு இருக்கலாம், தட்டை கழுவி கொடுத்து விட்டனர்.


ஆனால் எதிர்ப்பார்ப்பது போல் இருப்பதில்லை வாழ்கையும், மனிதர்களும். இதுவரை இப்படி ஏதும் இங்க நடந்ததில்லை, Association Secretaryயிடம் சொல்லலாம் என்று சொல்லி அவர்களிடம் விடை பெற்று வந்தோம், அவர்கள் எங்களை ஒரு விரோதப் பார்வை பார்ப்பது போலவே இருந்தது. “பாய் இனோ என்றேன், “க்ளக் என சிரித்தாள்” இனோ. அறைக்கு வந்த உடன் என் நண்பன் ஏன்டா, அந்த DVD பிளேயர திருடி தான் நம்ம கேக் வாங்கி இருப்போம்னு நினைச்சு இருப்பாங்களோ? என்றான்.


தமிழில் நகைச்சுவை கதைகள் எந்த அளவிற்கு எழுதப்பட்டுள்ளது என தெரியவில்லை. சுஜாதா “குதிரை”, “நயாகரா” போன்ற அட்டகாசமான கதைகள் எழுதி உள்ளார், தேவனின் சில கதைகள் சிறப்பானவை என கேள்வி பட்டிருக்கிறேன். படித்ததில்லை, யாரேனும் படித்தவர்கள் சொல்லலாம். “குதிரை” கதை, மழைக்கு ஒதுங்கிய ஒருவனை குதிரை கடித்து விட அவன் அதற்க்காக படும் அவஸ்தைகளை விவரிக்கும் கதை. மும்பை எக்ஸ்ப்ரஸ் படத்தில் இந்த கதையை காட்சிப் படுத்தி இருந்தார் கமல், கதையின் தாக்கம் இல்லை காட்சியில்.


அதே போல நயாகரா, One of the Best!. நேற்று கதையை படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்து கொண்டு இருந்தேன், நயாகரா பார்க்க சொல்லும் ஒரு தமிழ் தம்பதியர், இரண்டு கல்கத்தா நபர்களுடன் சிக்கி கொண்டு படும் கதை. அவசியம் படித்து பாருங்கள். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை அல்லது தரத்தை அதன் நகைச்சுவைத் தரத்தை வைத்தே அறிந்து கொள்ளலாம் என படித்திருக்கிறேன். தமிழில் இன்னும் பல நகைச்சுவைகள் கதைகள் வர வேண்டும்.




சமீபத்தில் பார்த்த ஹாலிவுட் திரைப்படம், குவென்ட்டின் டொரான்டினோவின் Death Proof. ஒரு தொடர்க் கொலைகாரனைப் பற்றிய படம் இது. ஒரு நெடுஞ்சாலையோர உணவு விடுதியில் சந்திக்கிறார்கள் மூன்று தோழிகள். அதில் ஒருத்திக்கு அன்று பிறந்த நாள். அவர்கள் கொண்டாட்டத்தில் அவர்களை அறியாமால் அவர்களை பின் தொடர்கிறான் ஒருவன். பின் அவர்களைத் தொடர்ந்து தன்னுடைய Death Proof காரில் சென்று அவர்களைக் கொல்கிறான். அது விபத்து என லாவகமாக தப்பித்து விட்டு, பின் அதையே வேறு ஒரு இடத்தில, வேறு மூன்று தோழிகளைக் கொள்ள முற்பட நடப்பது மற்றவை, ஒரு த்ரில்லர். அந்த விபத்து, கடைசி நிமிட கார் Chasing காட்சி மிக அழகாக படமாக்க பட்டுள்ளது. Chasing படம் விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம்.


ஒரு கவிதை:


அழுவாத..

அக்காவின் இரண்டு வயது சுகாஷினி

அழ ஆரம்பித்தாள்

அண்ணன் அடித்து விட்டான் என,

அக்கா ஒரு அடி போட்டப் பின்

முறைத்து பார்த்துவிட்டு

சுட்டி டி.வி பார்க்க திரும்பி கொண்டான்

எல்லோரும் அவரவர் வேலைக்கு திரும்ப,

ஐந்து நிமிடம் கடந்து

சுகாஷினி அண்ணன் பக்கத்தில் படுத்து கொண்டு,

“அடிக்காதனா பாப்பாக்கு வலிக்குது இல்ல,

அதான் அம்மா அடிச்சாங்க” என்று

அவன் கன்னத்தில்

முத்தமிட்டு கொண்டிருந்தாள்,

நான்

வெறுமனே பார்த்துகொண்டிருந்தேன்…

இந்த தொடரின் முந்தையப் பதிவுகள் 1 | 2 | 3 |

No comments:

Post a Comment