Wednesday, August 5, 2009

ஆதவன் - கண்ணாடியில் பிரதிபலிக்கும் முகம்

சாதரண சந்திப்புகளில் உரையாடல்களில், நம்மை முழுதும் வெளிப்படுத்தி கொள்ள முடிவதில்லை. நம்முடைய இருப்பையும் மீறி, எதிரே பேசுபவரின் சிரிப்பு, முக அசைவு, போலித்தனங்கள் நம்மை பதற்றம் செய்ய வைக்கின்றது. நடந்து முடிந்த பின் இதை இப்படி பேசியிருக்கலாமோ என்று எண்ண ஆரமிக்கிறோம். ஒருவரை பார்த்த உடன் பிடித்து போவதோ, இல்லை பிடிக்காமல் போவதோ நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. பிடித்தமான ஒருவர் பேசும் பேச்சுகளே கூட சில சமயம் ஓர் வெறுப்பை உருவாக்கி விடுகிறது.

நாம் தினசரி பழகும் மனிதர்களுடன் சூமூகமாகவே இருக்க ஆசைப் படுகிறோம். அதை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள அவர்களுக்கு தகுந்தார் போல் நாம் வளைந்தோ நமக்கு தகுந்தார் போல் அவர்களை வளைத்தோ அதன் மூலம் ஒரு சின்ன அடிமைத்தனத்தையோ இல்லை ஒரு அதிகாரத்தையோ உருவாக்கிகொள்கிறோம். நாம் தனித்து விடப்படும் சில பொழுதுகளில் பரஸ்பர சுயநலதிற்க்காக நாம் அணிந்திருந்த வேஷங்களை களைகையில் உருவாகும் வெறுமையை மறைக்க நம்மை பற்றிய ஒரு சுய பச்சாதாபத்தை உருவாக்கி கொண்டு மீண்டும் நம்மை சிறைப் படுத்தி கொள்கிறோம். இந்த பிம்பங்களை சுற்றியே பின்னப்பட்ட வாழ்வில் தன்னை பொருத்தி கொள்ள முடியாதவர்கள் தொடர்ந்து ஒரு நிச்சயமின்மையை உணரத் தொடங்குகிறார்கள். இவை யாவும் தொடர்ந்த நமது நடிப்பாலும் நாம் அணியும் பிம்பங்களாலும் விளைபவை.

அதனால் தானோ என்னவோ, என் எழுத்துக்கள் யாவுமே நுட்பமான, நேர்மையான சம்பாஷணை முயற்சிகளென்றுதான் சொல்லவேண்டும் என்னும் ஆதவனை மனதுக்கு மிக நெருக்கமானவராய் உணர முடிகிறது. தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான பங்களிப்பு ஆதவனுடையது, நகர்ப்புற மதியத்தர இளைஞர்களின் வாழ்வை இவர் அளவிற்கு பதிவு செய்தவர்கள் குறைவே. “காகித மலர்கள்”, ‘என் பெயர் ராமசேஷன்‘ ஆகிய இரு நாவல்களையும் (உயிர்மை பதிப்பகம்) ‘இரவுக்கு முன்பு வருவது மாலை” என்னும் சாகித்திய அகாடமி பரிசு பெற்ற குறுநாவல் தொகுப்பையும் எழுதி உள்ளார். இவரது மொத்த சிறுகதைகள் “ஆதவன் சிறுகதைகள்” என்னும் பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.



சென்னை புத்தக கண்காட்சி உயிர்மை அரங்கில் புத்தகங்களை பார்த்து கொண்டிருக்கையில் உள்ளிருந்து ஒரு பட்சி சொல்ல (Sub-Conscious?) “காகித மலர்கள்” நாவலை வாங்கினேன். பின் பக்க அட்டையில் இருந்த தடிமனான கண்ணாடி அணிந்த ஆதவனின் முகமும், நாவலைப் பற்றிய சிறு அறிமுகமும் பார்த்தவுடன் பிடித்து போனது. ஆதவனின் அந்த மெல்லிய சிரிப்பைப் போலவே அவர் எழுத்தும் வசீகரமானது.

நாவலில் விரிவாக பேசப்படும் விஷயங்களைப் பற்றி ஆதவன் சொல்கையில், “

வெவ்வேறு ‘வேடங்களின் கைதிகள். அரசியல் தலைவர்கள், mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள் ‘நடக்கிறபடி நடக்கட்டும், நமக்கேன் வம்பு?’ என்கிற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவுஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமாக, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு, சில ‘தியரி’ களை உச்சாடனம் செய்துகொண்டு, ‘உஞ்ச விருத்தி’ செய்கிற ஒரு பிராமண பிம்பத்தின் கைதிகள் பெண்கள், ஆணின் ‘அடிமை’, ‘மகிழ்வூட்டும் கருவி’ – அல்லது இந்தப் பிம்பங்களுக்கெதிராகப் ‘புரட்சி’ செய்கிறவள் – என்கிற பிம்பங்களின் கைதிகள். இளைஞர்கள், வயதையும், ‘வேடங்கள்’ அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurityன், ஒரு alienationன் கைதிகள். இத்தகைய பல கைதிகளையே காகித மலர்கள் அறிமுகம் செய்கிறது”.



டெல்லியை கதைகளமாய் கொண்ட நாவல் இது. பசுபதி டெல்லியில் மந்திரிக்கு நெருக்கமானவர், அவர் துறையில் ஒரு மிக பெரிய பொறுப்பில் இருக்கும் அரசாங்க அதிகாரி. அவரது மனைவி மிசஸ் பசுபதி, டெல்லியில் தமிழ் நாடகங்கள் நடித்து கொண்டு மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தன்னை நாகரீகமாய் காட்டி கொள்பவர். இவர்களது பிள்ளைகள், விசுவம், பத்ரி மற்றும் செல்லப்பா.


ஆதவன் சொல்வது போலவே, காகித மலர்கள், இந்த வெவ்வேறு பிம்பங்களை அறிமுகம் மட்டுமே செய்கிறது, அதை களைந்து எழுந்து வாருங்கள் போன்ற அறைகூவல் இல்லை, எதையும் உடைத்தெறியும் ஆவேசம் இல்லை, ஆனால் இந்நாவல் மெல்ல ஒரு மனமாற்றத்தை எதிர் பார்க்கிறது, நமது பிம்பங்களை பற்றிய உணர்வை உருவாக்கி செல்கிறது.

நாம் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பில் நாமே சிக்கி கொண்டிருக்கும் அவலத்தை முன் வைக்க, பல விதமான முரணான கதாபாத்திரங்கள் நாவல் முழுதும் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. உதாரணத்திற்கு, பசுபதி மிக வேகமாக மேல் மட்டத்திற்கு முன்னேறி விட்டவர், ஆனால் அவருடன் வேலைக்கு சேர்ந்து அவர் துறை தலைவராய் இருக்கும் அதே இடத்தில் ஒரு குமாஸ்தாவாக வேலை செய்பவர் ஒருவர். பசுபதியின் மகன் செல்லப்பா அந்த குமாஸ்தாவின் மகன் கணேசன், அவர்கள் இருவரும் நண்பர்கள், படிப்பது ஒரே கல்லூரியில்.

பசுபதியின் மனைவி தன் அம்மா, பாட்டி கடைப்பிடித்து வந்த ஒழுக்க நெறிகளை விடவும் முடியாமல், தன்னை நவநாகரீகமாய் காட்டி கொள்ளவும் பிரயத்தனப்படும் ஒரு பெண் பிம்பம். அவருக்கு முரணாக, அவரது மருமகள் விஸ்வத்தின் மனைவி பத்மினி. வயதையும், ‘வேடங்கள்’ அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurityயையும், ஒரு alienation யும் உணரும் இளைஞர்களாக விசுவமும் செல்லப்பாவும்.

ஆனால் ஒருவகையில் இரு எதிர் துருவங்களில் நிறுத்தி வைக்க படுகின்றனர். விசுவம் நன்றாக படித்து, அமெரிக்கா சென்று தனது சுற்று சூழல் சார்ந்த ஆய்விற்காக டெல்லி வருகிறான். செல்லப்பா மிக சாதரணமாணவன், அவனுடைய சின்ன சந்தோஷங்களில் வாழ்கிறான். அவர்கள் இருவரையும் நெருக்கமானவர்களாய் உணர செய்யும் பல இடங்களும் நாவலில் இழையோடுகிறது.

நேர்மையான சம்பாஷனைகள் என்று சொன்னதற்கு ஏற்ப, கதாபாத்திரங்களின் மன ஓட்டங்கள் மிக நுண்ணிப்போடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நனவோடை உத்தி மூலமே நாவலின் மிக அழகான திருப்பங்கள் விளக்கப்படுகிறது. விஸ்வத்திடமும் செல்லப்பாவிடமும் எளிதில் நம்மை அடையாளப்படுத்தி கொள்ள முடிகிறது. 1970 களில் வாழ்ந்த இளைஞர்களை பற்றிய சம்பாஷனைகள் யாவும் இன்றைய காலத்திற்கும் பொருந்தி வருகிறது. சூழ்நிலையியல் பற்றி விஸ்வம் சிந்திக்கும் விஷயங்களும் அதை முன் வைத்த அவனது உரையாடலும் ஆழ்ந்த வாசிப்புக்கு உரியவை. அதே போல விசுவம் - பத்மினிக்கு இடையே உருவாகி வரும் காதலும், திருமணமான பின் அவர்கள் ஒருவரை ஒருவர் தக்க வைத்து கொள்ள செய்யும் தவிப்புகளும் விளக்கப்படும் இடங்கள் நாவலில் மிக முக்கியமானவை.

விஸ்வம் பத்மினியிடம் மிக மென்மையான உணர்வுகளை வார்த்தைகள் சிதைப்பதை பற்றி சொல்கையில்,

இந்த வார்த்தைப்படுத்துதல் என் இயல்புகளையும் சரி அவை உன்மேல் நிகழ்த்தும் பாதிப்புகளையும் சரி, கொச்சைப்படுத்துவதாகும். அரூபமானவற்றுக்கு ரூபம் கொடுக்க என் இவ்வளவு அவசரப்படுகிறாய். என்கிறான்.

மேலும் பிம்பங்களை பற்றி சொல்கையில் நாம் வார்த்தை படுத்துதலை,

எதுவும் யாரும் தன்னுடைய ஆழங்களைத் தொட்டு விட அனுமதிக்க கூடாது. சொற்களை எண்ணங்களை வெளிப்படுத்தும் சாதனங்களாக அல்ல, எண்ணங்களை மறைக்கும் போர்வைகளாய் பயன்ப்படுத்தும் கலை

என்கிறான்.

செல்லப்பாவின் சித்திரம் புனையப்பட்ட விதம் நாவலில் முக்கியமானது, ஆதவனின் இயல்புகளை பெரிதும் சார்ந்து உருவாக்கப்பட்டவன் செல்லப்பா என்று அவரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சூழ்நிலையின் மென்மையான மாறுதல்களையும், அது தன் மேல் நிகழ்த்தும் மாற்றங்களை கூர்ந்து கவனித்த வண்ணமே இருக்கிறான் செல்லப்பா. மேலும் எப்போதும் எந்த முடிவும் எடுக்க தயங்கும் ஒரு ஸ்திரமில்லாதவனாகவே உள்ளான். ஒரு சாலையை கடப்பது, ரெஸ்ட்டாரன்டில் காப்பி அருந்துவது, திரைப்படம் காண செல்வது முதல் அத்தனை விஷயங்களிலும் அவனின் நிச்சயமின்மை வெளிப்பட்ட வண்ணம் உள்ளது. எழுதப்பட்ட காலம் தொட்டு இன்று வரை பரவலான வாசிப்புக்கு உட்பட்டு வரும் இந்த நாவல் தமிழின் சிறந்த இலக்கிய ஆக்கங்களில் ஒன்று. இந்த நாவலை படித்த பின்னே அவரது அத்தனை எழுத்துகளையும் படிக்கும் ஆர்வம் தோன்றியது.

அவர் சொல்வது போலவே,

ஒருவிதத்தில், இந்த நூல் ஒரு பிரஜையின் குரல். அந்தப் பிரஜை ஓர் எழுத்தாளன் என்பதால் அவனுடைய எண்ணங்கள் நாவல் வடிவம் பெற்றன. அவன் ஓர் இளைஞன் என்பதால் இந்நாவல் தனித்த ஒரு தொனியும் லயமும் கொண்டமைந்துள்ளது.

அந்த இளைஞன் நம் உள் இருக்கும் தன்னை அதிகம் வெளிக்காட்ட தயங்கும், தனக்கான தனித்தன்மையை தேடும் ஒருவன். தொடர்ந்து சூழும் போலிதனங்களில் சிக்காமல் ஒரு முழுமையின் தேடல் நோக்கி செல்லும் ஒருவன். அத்தகைய இளைஞர்கள் வாழும் தோறும் இந்த நாவல் நிலைத்து நிற்கும்.

No comments:

Post a Comment