Wednesday, September 30, 2009

கோவேறு கழுதைகள் - இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்

விடுமுறை நாட்களை செலவில்லாமல் கழிக்க எப்போதும் கிராமத்து பாட்டி வீடே உகந்தது. இன்றும் மறக்க முடியாத சில நினைவுகள் கிராமம் சார்ந்தே உருவானது. கோடை கால விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்க்கு செல்கையில் எப்போதும் கூழ் ஆக்குவார்கள். இரவு உணவு ரசம், பொரியல் என்ற எந்த ஆடம்பரமும் இல்லாமல், வாணலியில் வதக்கிய கத்தரிக்காய் கார குழம்புடன் முடிந்த விட்ட நாட்கள் தான் அநேகம். அதுவும், எனக்கு விருப்பமென பாட்டி வாணலியிலேயே சிறிது சாதம் போட்டு பிசைந்து தந்தது இன்னும் நினைவிருக்கிறது.

இரவு ஏழு மணிக்கு இருட்ட தொடங்கிய பின் அன்றைய அலுப்பு தீர தூக்கம் தழுவுகையில், ” அம்மா வண்ணாத்தி வந்திருக்கேன்” என்ற குரல் கேட்கும். அந்த இருளில் பாட்டி மெல்ல அசைந்து அசைந்து கூழ் எடுத்து வீட்டு வாசல் நோக்கி செல்வது ஓவியம் போல் மனதில் தங்கி விட்டிருக்கிறது.

அதனால் தானோ என்னவோ, இமையம் அவர்களின் “கோவேறு கழுதைகள்” படிக்க ஆரமித்த இரண்டு பக்கங்களில் முழுக்க அந்த நாவலோடு கரைந்து விட முடிந்திருக்கிறது. ஆரோக்கியம் அந்த கிராமத்து துணிகளை எல்லாம் துவைக்கும் வண்ணாத்தி. கதை ஆரோக்கியம், அவளது கணவன் சவுரி, பிள்ளைகள் ஜோசப்,பீட்டர், மேரி மற்றும் மருமகள் சகயம் ஆகியோரை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மெல்ல மாற்றங்கள் காணும் ஒரு கிராமமும், வேர்களை விட்டு செல்ல துடிக்கும் புதிய தலைமுறையும் ஆரோக்கியத்தின் பார்வையில் விவரிக்கப்படுகிறது. நாவலில் முதல் பாகம் அவர்கள் தங்கள் தெய்வமான அந்தோனியாரை பார்க்க வெளி ஊருக்கு செல்வதுடன் தொடங்குகிறது. குடும்பத்துடன் ஊருக்கு செல்ல அவள் ஊரிலுள்ள மக்கள் அனைவரிடமும் சம்மதம் பெறும் காட்சிகள் தொட்டு செல்லப் பட்டுள்ளது. நேரடியாக எந்த அவலமும் சித்தரிக்கப் படாமலேயே, அந்த இடங்களில் இரந்து வாழ வேண்டிய ஆரோக்கியம் குடும்பத்தின் நிலை சொல்லப்பட்டு விடுகிறது.

இயல்பான சித்தரிப்புக்களும், யதார்த்தமான நிகழ்வுகளும் இணைந்து ஒரு அசல் வாழ்வு கண் முன் நிறுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, நாவலின் இரண்டாம் அத்தியாயத்தில், இறந்து போன ஒருவருக்கு சவுரி பாடை அமைக்கும் காட்சிகள் விளக்கப்படும் இடம். அதே போல் ஆரோக்கியம் மற்றும் மேரி இடையேயான உறவும், மேரி மேல் அவள் கொள்ளும் பாசமும் சொல்லப்படும் இடங்கள் அழகானவை. மேரி கோவித்து கொண்ட ஒரு கணத்தில் உவமை இப்படி வருகிறது, “நல்ல பாம்பாட்டம் மூஞ்சிய தூக்கி வக்சுக்கிறா?”

காலையில் வீடுகளுக்கு சென்று துணி எடுத்து வருதல், இரவு சட்டியை தூக்கி கொண்டு அங்கு சோறு வாங்க போதல் என நீள்கிறது அந்த வாழ்க்கை. முதன் முதலில் இந்த வாழ்க்கைக்கு உட்படுத்தபடுகையில், பீட்டர் ஆரோக்கியத்திடம்,

” ஏம்மா நாம்ப ராச்சோறு எடுக்காம இருக்கக் கூடாதா?” என்கிறான்.

ஊரில் உள்ள பசங்க எல்லாம் ராச்சோறு என கிண்டல் செய்வதை அவன் கூறும் இடமும், ” மத்தவுங்க ஊடுமாரி நமூட்ட்லியும் சோறாக்கு” என கூறும் இடமும் அழுத்தமானவை.பல சமயங்களில் ஆரோக்கியம் படும் ஆற்றாமையும் சோகமும் எளிய வார்த்தைகள் கொண்ட பாடல்களாய் உருபெறுகிறது. தன் மகன் அவன் மனைவியின் சொல் கேட்டு நகரத்திற்கு சென்ற பின், தன்னை காப்பாற்றுவான் என நம்பிய அவன் விட்டு சென்ற துயரை

பச்சக் கிளி வளர்த்தன் - அது

பறக்கையிலே தப்பவிட்டன்,

குஞ்சுக் கிளி வளர்த்தன் - அது

கூவையிலே தப்பவிட்டான்

என புலம்புகிறாள்.

அதே போல் நாவலில் ஆரோக்கியம் அந்த ஊரிடம் கொண்ட பற்றும், ஊர் மக்கள் மீது கொண்ட பாசமும் அசலானவை. மாலை நேரத்தில் வீடுகளில் அமர்ந்திருக்கும் ஊரார்களை வார்த்தைகள் மூலம் இணைத்து போகிறாள். ஊரிலுள்ள எல்லார் மேலும் அவளுக்கு இணக்கம் இருக்கிறது. கடைக்கு சென்று வீடு திரும்புகையில் எதிர்படுபவர்களிடம்,

” அட அந்தோனியார, இம்பூட்டு எலப்பாயிருக்கீங்களே, சொவமில்லியா?

“இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமீ”

“ உங்க பற வண்ணாத்தி சாமீ” என சொல்லியபடியே செல்கிறாள்.

மெல்ல மெல்ல அந்த ஊர் தன் நிலை மாறும் இடமும், அந்த மக்கள் படும் மாற்றங்களும் ஆரோக்கியத்தின் பாடல் வழி வெளிபடுகிறது.

வாவுக்கும் அஞ்சவில்ல

சாவுக்கும் அஞ்சவில்ல

சமாதிக்கும் அஞ்சவில்ல

சமாதிக்கும் அஞ்சவில்ல - பாயிம்

சனங்களுக்கு அஞ்சனனே!

தலித் ஆக்கங்களில் மிக முக்கியமான நாவலாக கருதப்படும் இந்த நாவல் 1984ல் வெளியானது. ஆங்கிலத்தில் “Beasts of Burden ” என்ற பெயரில் வெளியாகி பரவலான வாசக கவனத்தை பெற்றது. க்ரியா பதிப்பக வெளியீடான இந்த நாவல் தமிழ் நாவல்களில் மிக முக்கியமான யதார்த்தவாத நாவல்.

No comments:

Post a Comment