Wednesday, February 10, 2010

ஆதலினால்!

நீண்ட நாட்களுக்கு பின் எழுதும் பதிவு காதலர் தினத்தை ஒட்டி அமைந்ததை எண்ணி சந்தோசம். ஆறாம் வகுப்பு படிக்கையில் பக்கத்து பென்ச் பெண் எனக்கு மிட்டாய் கொடுத்ததில் இருந்து எனக்கும் காதலுக்கும் பழக்கம் இருக்கிறது. யாருக்கும் தராமல் எனக்கு மட்டும் அவள் தந்ததை எனது அதிர்ஷ்டம் என எண்ணினேன். என் நண்பன் பரணி, விருமாண்டி மாதிரி வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொண்டு அந்த மிட்டாய் கொடுக்கும் காட்சியை காதல் என எனக்கு விளக்கினான். ஆறாம் வயது அசட்டு குழந்தையை போல அவளிடம் போய் " நீ என்னை காதலிக்கிறாயா" என கேட்கவில்லை. சில பல மிட்டாய்கள் நஷ்டம் ஆனாலும் பரவா இல்லை என அவளிடம் பேசுவதை குறைத்து கொண்டேன். முப்பது வருஷத்துக்கு முன்ன கல்யாணம் ஆக வேண்டியவன் எல்லாம் இன்னும் கோலம் போடறான் ரேஞ்சுக்கு இப்போது தான் படிக்க வந்து உள்ளேன். ஒருவேளை அவளிடம் அப்போதே கேட்டு இருக்கலாமோ என இப்போது தோன்றுகிறது.

என்னுடைய ஊர் பற்றிய கட்டுரையை படித்தவர்களுக்கு எங்கள் ஊரின் காதல் நிலவரங்கள் பற்றி தெரிந்திருக்கும் ஆகையால் மேற்படி சமாசாரங்களில் ஈடுபடாமல் படிப்பே கதி என கழிந்தது பள்ளி வாழ்க்கை. எங்கள் வகுப்புக்கும் பக்கத்து வகுப்பிற்கும் இருந்த தடுப்பு அட்டையை எல்லோரும் பள்ளி விட்டு போன பின் தன காதலியை காணும் பொருட்டு ஒரு பெரிய ஓட்டை போட்ட சாகசங்களிலோ, இல்லை காதலி பிறந்த நாளைக்கு அவளுக்கு தெரியாமல் அவள் புத்தக பையில் புது பேனா, ரப்பர், ஸ்கெட்ச் ஆகியவற்றை வாங்கி போட்ட தாரள விஷயங்களிலோ சேராமல் வெறும் பார்வையாளனாகவே இருந்துள்ளேன்.

பள்ளி இறுதி ஆண்டுக்கு பின் வந்த விடுமுறையில், விகடன் பிரசுரத்தின் "காதல் படிக்கட்டுகள்" மற்றும் பாலகுமாரனின் "இனிது இனிது காதல் இனிது" ஆகியவற்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்ய வேண்டும் என கொள்கையோடு கல்லூரிக்கு போனேன். (அடடா இதுவல்லவா இலட்சியம்!). ஒரு ஜோதிகா ரேஞ்சுக்கு கிடைக்கும் என ஆரமித்த கற்பனை மெல்ல சிநேகா, த்ரிஷா அல்லது எதாவது சைடு ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்கு இறங்கி கடைசியில் வத்தலோ, தொத்தலோ, ஈயமோ பித்தாலையோக்கு வந்து நின்றது. அது முத்தி போய் முடிவாக " Why some guys stay as bachelors?" என்ற pdf யை ஊருக்கு எல்லாம் forward செய்யும் அளவுக்கு நிற்கிறது.

என் உயிரின் பாதி, my better half என ஏகப்பட்ட வசனங்களுடன் தங்கள் காதலியைப் பற்றி புலம்பிய அனேக நண்பர்கள் எனக்கு வாய்த்தது உண்டு. என்னை பற்றிய விவரங்களை என் நண்பர்களிடம் கேட்டு சரி பார்த்து கொள்ளவும். உணர்சிகளை புறம் தள்ளி, அது என்னப்பா காதல்? என்ற கேள்வி கல்லூரி வாழ்வில் தான் தொடங்கியது. சுஜாதாவும் எனது உயிரியல் சார்ந்த படிப்பும் துணை நின்றன. அதன் ஆரம்ப கணம் முதல் இறுதி வரை நடக்கும் பௌதிக காரணங்களை கண்டு கொள்ள முடிந்தது. மேல் விவரம் வேண்டுவோர் இந்த சுட்டியை காணவும்

காதலில் ஊறி திளைத்து கொண்டு இருந்த காதலர்களை வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. அவர்கள் முன் திரையில் பல் வேறு பெண்களின் புகைப்படங்கள் காட்டப்பட்டன, சரியாக அவர்களின் காதலி புகைப்படம் வந்த உடன் அவர்களின் உடலில் ஏற்பட்ட ரசாயன மாற்றங்களை பதிவு செய்து முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் என் சில கணங்களில் மட்டும், குறிப்பாக ஒருவரிடம் (சிலரிடம்?!) மட்டும் அப்படி தோன்றுகிறது என்பதை இன்னும் விளக்கவில்லை. அதற்கு தான் இரண்டாயிரம் வருடமாய் கவிதை, கதை எழுதி கொண்டு இருக்கிறோம். பாஸ், "எனக்கு எந்த பெண்ணை பார்த்தாலும் அந்த ரசாயன மாற்றம் வருதுன்னு நான் சந்தேக படறேன்" என்பவர்கள் தனியாக எனக்கு மெயில் அனுப்பவும். உங்களை எல்லாம் வேறு ஆராய்சிக்காக தேடி கொண்டு இருக்கிறார்கள்.

இத்தனையும் மீறி நான் போட்ட சட்டை கலரிலேயே அவளும் சுடிதார் அணிந்திருந்தாள், நான் தண்ணி குடித்து வைத்து விட்ட போன தம்லரிலேயே அவளும் தண்ணீர் குடித்தாள் என்று எத்தனை சல்லிசான விஷயம் கிடைத்தாலும் மொக்கை போட முடிந்தது காதலால் தான். காதலிக்காக படித்து ஐஐம் போக ஆசைப்பட்டவன், காதலனுக்கு பிடிக்காது என நண்பர்களுடன் பேசியதை நிறுத்தியவள், நான் சொல்லலைனா அவ அழுதிருப்பாடா என வித விதமான காதல்களை பார்த்து இருக்கிறேன்.

காதலிக்க ஒரு நெகிழ்ச்சி தன்மை தேவையாய் இருக்கிறது, எதிரே இருப்பவரின் ஆழ்மனதில் நாம் இருக்கிறோம் என ஊர்ஜிதமாக நம்ப வேண்டி இருக்கிறது. எல்லாரிடமும் எப்போதும் நம்மை வெளிகாட்டி விட முடிவதில்லை, தொடர்ந்து நமது பிம்பம் எதிர் இருப்பவரின் மனதில் ஏற்படுத்தும் சலனங்களை நாம் கவனித்த வண்ணமே இருக்கிறோம். ஒரு பலவீனமான கணத்தில் நம்மை வெளிபடுத்திவிட எதிரே இருப்பவரின் பிரதிபலிப்பு மிக முக்கியமாக போய் விடுகிறது. நமது வெளிபடுத்தலுக்கு தகுந்த அல்லது நமக்கு விருப்பமான பதில் கிடைக்க அது தொடர்ந்து வளர்ந்த வண்ணமே உள்ளது. அப்போதும் அந்த பதில்கள் நம்மை சாந்தபடுத்த சொல்லப்பட்டதா, உண்மையிலேயே அவள் அப்படித்தானா என எண்ண தொடங்குகிறோம். இந்த இரு புள்ளிகளும் இணையும் ஒரு கோட்டில் யாரேனும் முதலில் தங்கள் காதலை சொல்ல வேண்டி இருக்கிறது.

தம்மை வெளிப்படுத்தி அது நிராகரிக்கப்பட்ட வலி எப்போதும் நெஞ்சில் தங்கி விடுகிறது, பல நாள் கழித்து யாருடனாவது பேசுகையில் தீடிரென்று அது நினைவு வந்து தாழ்வுணர்ச்சி கொள்ள செய்கிறது.எம். எஸ் அவர்களின் வாழ்கையை பற்றி வெளியான நூலினை அறிமுகம் செய்யும் ஜெயமோகன், பெண்கள் தங்களின் சுயகவுரவத்தை விட்டு மன்றாடியபின் மறுக்கப்படும் நிலை குறித்து கூறுகையில்

"வெளிப்படையாக மன்றாடும் நிலை அவர்களின் சுயகௌரவத்தை குறைக்கிறது. கிட்டத்தட்ட வீம்புக்கு நிகரான சுயகௌரவம் பெண்களின் வலிமை. அதை இழந்துவிட்ட பெண் தன்னுடைய ஆளுமையே அவமானப்படுத்தப்பட்டதாகவே உணர்வாள். அவள் மனதின் மெல்லிய பகுதி ஒன்று அடிவாங்கி கன்றிவிடுகிறது. எம்.எஸ், கெ.பி.சுந்தராம்பாள் இருவரின் வாழ்க்கையிலும் இந்த கன்றிப்போதலை நாம் காணலாம் என்று இப்போது படுகிறது."

என்கிறார்.ஏற்கப்பட்டிருந்தால் அவை கொள்ளும் மாற்றம் என்ன என புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆனால் இத்தனையும் மீறி காதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் அடிப்படை பௌதிக காரணங்களை மீறி, மாபெரும் உணர்வெழுச்சிகளை அடக்கியபடி.

எத்தனையோ மனிதர்களை சந்திக்கையில் சிலரின் தனித்தன்மை மட்டும் நம்மை கவர்ந்து விடுதல் விந்தை தான் இல்லையா?. நம்மை பிடிக்கிறது என்று சொன்னவர்களும் நமக்கு பிடித்தவர்களும் ஒன்றாகவே தோன்றுகின்றனர். “Love means never having to say you're sorry” ‘என்று Love Story படத்தில் ஒரு வசனம் வரும், “Love means never having to say you’re in love” என சொல்வது பொருத்தமாய் படுகிறது. நமது காதலயே நம்மால் புரியவைக்க முடியாதவர்களிடம் நாம் வார்த்தைகள் மூலம் என்ன சொல்லிவிட முடியும்? நமது தனித்தன்மை பற்றி நாமே சந்தேகிக்கும் சமயங்களில் நம்மிடம் காதலை சொன்னவர்களையோ இல்லை நமக்கு பிடித்தவர்களையோ நினைத்து கொள்வோம். காதலர் தினங்கள் ஒவ்வொன்றும் கடக்கையில் ஒவ்வொரு காதலியின் முகமும் மறந்து போக, கடைசியில் ஒருவேளை காதல் மட்டும் நமது மனதில் மிச்சம் இருக்க கூடும்.

10 comments:

  1. மதன்...அலுவலகத்தில் (சேனல் ஒன்னில்) இந்த கட்டுரை படித்தேன். அருமை. ஜெமோவும் சுஜாதாவும் கலந்த நடை

    ReplyDelete
  2. நன்றி வினய்!

    ReplyDelete
  3. எவ்வளவு ஜில்லுனு இருக்கு, உங்க நடைய படிக்க. வினய் சொல்றா மாதிரி ஜெமோ + சுஜாதா. ஒரு கட்டுரைய நீங்க எப்படி கன்ஸ்ட்ரக்ட் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு. அதாவது “making of..". பிரமாதம்.

    எனக்காக எழுதியற்கு நன்றிகள் :)

    சட்டுபுட்டுனு ஒரு ஆளப் பிடிங்க சார்!

    ReplyDelete
  4. tamizh font enkitta illa...nee ezhudhi irukiradhu romba nalla iruku.. naanum sila naal yositthu irukiren... kathalikkavum oru thagudhi venum- kadhalikkum capacity :)... rasayana mattrangal neraya peridam varalam... usual la varum.. adhalal athu kadhal alla... kadhalai purindhu kolla kadhal tholvi vendum endru thondrugiradhu :)
    kalyani

    ReplyDelete
  5. காதலில் தோல்வி அடைந்தவர்கள் காதலிக்காதவர்கள் மட்டும் தான் என ஒரு வாக்கியம் இருக்கிறது. நீ சொல்வது போல, காதலிக்க ஒரு தகுதி தேவையை இருக்கிறது, அது பலமா இல்லை பலவீனமா என்பதில் தான் குழப்பம். உண்மைதான், அதை பற்றி பேச அதை உண்மையில் உணர்ந்திருந்தாலே முடியும், பிரிவை தவிர வேறு எதுவும் அவ்வளவு மூர்க்கமாய் ஒரு விஷயத்தை புரியவைத்து விடுவதில்லை.

    Really glad to see your Comment!

    Try Google transliteration, it s very simple
    http://www.google.com/transliterate/

    P.S: Select tamil in left tab in google translit.

    ReplyDelete
  6. மதன் , மிக அருமையான கட்டுரை படைப்பு ! பாராட்டுக்கள் ! எனக்கு எழுத்தாளர் சுஜாதா தான் நினைவிற்கு வருகிறார் :-) . இன்னும் பல பதுவுகள் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  7. விக்னேஷ் அண்ணா,
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    சுஜாதா பாதிப்பு என்னால் தவிர்க்க முடியாதது, சுஜாதா, ஆதவன், அசோகமித்திரன், ஜெயமோகன் ஆகியோர் ஏதேனும் ஒரு விதத்தில் என்னிடம் வெளிப்பட்டு கொண்டே இருப்பார்கள் என்று படுகிறது...

    ReplyDelete
  8. Madhan,
    those wonderful college days are reminded of da.
    Love will always live in your heart.

    (not able to copy paste the tamil comments da)

    ReplyDelete
  9. Thks Machi!

    Yeah, those are really gr8 moments, we both talked continously for 8 hours illa? ;)

    Public Public! :P

    ReplyDelete
  10. @Aravindan,
    நீயும் நானும் நன்றி சொல்லிக்க ஆரமிச்சா பெரிய லிஸ்ட் இருக்கும் பாஸ்!

    Makinga ofaaa// - I am flattered!

    கட்டுரையின் ஆரம்பம் படிக்கறவங்கள உள்ள கொண்டு வர மாதிரி இருக்கறது, படிச்ச பிறகு மனசுல ஒண்ணுமே நிக்காம போக கூடாது போன்ற சின்ன விஷயங்கள சேர்த்து சேர்த்து தான் எழுதுறேன்.. அப்புறம் புத்தர் கட்டுரை மாதிரி சில கட்டுரைகள் படிக்கறதும் காரணம்னு நினைக்கிறன் ;)

    ReplyDelete