Tuesday, June 30, 2009

என் ஜன்னல் வழியே #3

தேர்தல் திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது. போய்டுவேன் போய்டுவேனு கம்யூனிஸ்ட் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டு இருந்ததாலோ இல்லை பொருளாதார பின்னடைவினால் பாதிக்கப்பட்டதாலோ என்னவோ ஒரு நிலையான ஆட்சிக்கு மக்கள் உத்தரவு கொடுத்து விட்டனர். காங்கிரஸ் மற்ற மாநிலங்களில் எப்படியோ, தமிழ்நாட்டில் அதன் முக்கிய தலைவர்கள் தோற்றது கண்டிபாக தற்செயல் அல்ல என தோன்றுகிறது. தொலைக்காட்சிகளில் மாற்றி மாற்றி பிரபலங்கள் வரிசையில் நின்று வக்களித்ததை தெரிவித்து கொண்டு இருந்தனர். எங்கள் ஊரில் பிரசித்தி பெற்ற டாக்டர் நான் வரிசையில் ஒரு மணி நேரம் நிற்கையில் நேராக உள்ளே சென்று வாக்களித்து விட்டு வந்து விட்டார். ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு வாக்களித்த பின் நடு விரலில் மையை இட்டு இருக்கிறார்கள். அவர்கள் வந்து டி.விக்கு போஸ் கொடுப்பார்கள் என யோசித்திருக்கலாம்.


ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நான் பல வருடமாய் கேள்விப் பட்ட நாவல். மிகுந்த எதிர்பார்ப்போடு படிக்கத் துவங்கி இருக்கிறேன். அவரது சில சிறுகதைகள் மிகவும் பிடித்திருந்தது, ஆனால் நாவல் இன்னும் என்னைக் கவரவில்லை. முழுதும் படித்து விட்டு, முடிந்தால் மீண்டும் ஒருமுறை படித்து விட்டு சொல்கிறேன்.


ஒரு இலக்கிய புத்தகத்தை படித்த பின் “இந்த புத்தகம் எனக்கு பிடிக்கவில்லை” என சொன்னால், சுந்தர ராமசாமி எத்தனை முறை படித்தாய் எனக் கேட்பாராம். எந்த புத்தகத்தையும் உடனே பிடிக்க வில்லை என சொல்லிவிடல் ஆகாது. இன்னும் சிறிது நாள் தள்ளி படித்து பார்க்கலாம். “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்னும் தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது, தேர்தல் சமயத்தில் இது இன்னும் பொருத்தமானதாக தோன்றுகிறது.


சமீபத்தில் பார்த்த ஹாலிவுட் படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது “Usual Suspects”. Pulp Fiction க்கு பின் வந்த நிழல் உலக திரைபடங்களில் இது மிக முக்கியமானது. ஒரு நகரத்தில் ஒரு திருட்டு நடக்கிறது, அதன் காரணமாக எப்போதும் போலிசின் சந்தேக லிஸ்டில் இருக்கும் ஐந்து பேர் கைது செய்யப் படுகிறார்கள். அதில் சிலர் திருட்டு தொழிலை விட்டு வேறு நல்ல நிலையில் இருப்பவர்கள். இருந்தாலும் இந்த குற்றம் அவர்களை ஒன்றிணைக்கிறது.




அதிலிருந்து விடுதலை ஆகும் அவர்கள், போலீசை பழிவாங்க இணைந்து ஒரு சின்ன திருட்டை போலிசிடமே நடத்தி கட்டுகின்றனர். பின் அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்ல, அங்கே அந்த ஐவரும் செய்ய வேண்டிய ஒரு மிக பெரிய, மிக அபாயகரமான Assignment காத்திருக்கிறது. அவர்கள் அதில் இருந்து தப்பிக்கவே முடியாதபடி வலை பின்னப் பட்டிருப்பதை உணர்கிறார்கள். கோபயாஷி என்னும் ஒரு வக்கீல் மூலம், கைசர் சூஸே என்னும் நிழல் உலக தாதா அவர்களை அந்த வேலையை செய்ய சொல்கிறான். அதன் பின் கதை மின்னல் வேகம் பிடிக்கிறது. மிக கட்சிதமான திரைகதை, யார் கைசர் சூஸே? என்பது வெளியில் தெரியாத வண்ணம் கதையை நகர்த்தி முடியும் அந்த இறுதி காட்சி கலக்கல். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.



குட்டி கவிதை


வேகத்தடை


ரயில் நிலைய படிக்கட்டுகள்

எப்போதும் வேகமாகவே

கடந்து விடுகிறது…..

நிதானம்,

என்றாவது மழை நாளிலும்

இரும்பு கால்களை

மாட்டி கொண்டு

முன்னால்

ஏறிக் கொண்டிருந்த தோழியை

பார்த்த அன்று மட்டும்

கை கூடுகிறது

என் ஜன்னல் வழியே-4

எங்கள் அப்பார்ட்மென்ட்டில் எங்கள் வீட்டின் பக்கத்து வீட்டில் ஏற்கனவே தங்கி இருந்தவர் கல்கத்தாவில் இருந்த தன் குடும்பத்தை அழைத்து வந்துள்ளார். அவரது அப்பா அம்மா சகிதம் அவரது ஒரு வயது குட்டி தேவதையையும் சேர்த்து ஐந்து பேர் இருக்கிறார்கள். ஒரு நாள் வீட்டிற்க்கு வாங்கள் என அழைத்தார். வழக்கம் போல கூச்சப் பட்டுக் கொண்டு செல்லவில்லை.


அறையில் நண்பனுக்கு பிறந்தநாள் என்று போன வாரம், கேக் கொடுப்பதற்காக சென்றோம். அவரும் அவர் மனைவியும் வீட்டில் இல்லை, அவரது அப்பா அம்மாவிடம் கொடுத்தோம், ஒரு வயது இனோ விளையாடி கொண்டிருந்தாள், அது அவளது செல்லப் பெயராம். அவளை போலவே மென்மையாக இருக்கிறது, இனோ என்றால் திரும்பி “க்ளக்” என சிரிக்கிறாள். பிறந்த நாள் கேக்கை வாங்கிய உடன், அவர்கள் வீட்டின் கதவோரம் வைத்திருந்த DVD பிளேயர் காணாமல் போனதாக சொன்னார்கள். அந்த சூழ்நிலைக்கு சற்றும் சம்மந்தமில்லாமல் இருந்தது. பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்கலாம், எங்கே வேலை செய்கிறீர்கள் என கேட்டு இருக்கலாம், தட்டை கழுவி கொடுத்து விட்டனர்.


ஆனால் எதிர்ப்பார்ப்பது போல் இருப்பதில்லை வாழ்கையும், மனிதர்களும். இதுவரை இப்படி ஏதும் இங்க நடந்ததில்லை, Association Secretaryயிடம் சொல்லலாம் என்று சொல்லி அவர்களிடம் விடை பெற்று வந்தோம், அவர்கள் எங்களை ஒரு விரோதப் பார்வை பார்ப்பது போலவே இருந்தது. “பாய் இனோ என்றேன், “க்ளக் என சிரித்தாள்” இனோ. அறைக்கு வந்த உடன் என் நண்பன் ஏன்டா, அந்த DVD பிளேயர திருடி தான் நம்ம கேக் வாங்கி இருப்போம்னு நினைச்சு இருப்பாங்களோ? என்றான்.


தமிழில் நகைச்சுவை கதைகள் எந்த அளவிற்கு எழுதப்பட்டுள்ளது என தெரியவில்லை. சுஜாதா “குதிரை”, “நயாகரா” போன்ற அட்டகாசமான கதைகள் எழுதி உள்ளார், தேவனின் சில கதைகள் சிறப்பானவை என கேள்வி பட்டிருக்கிறேன். படித்ததில்லை, யாரேனும் படித்தவர்கள் சொல்லலாம். “குதிரை” கதை, மழைக்கு ஒதுங்கிய ஒருவனை குதிரை கடித்து விட அவன் அதற்க்காக படும் அவஸ்தைகளை விவரிக்கும் கதை. மும்பை எக்ஸ்ப்ரஸ் படத்தில் இந்த கதையை காட்சிப் படுத்தி இருந்தார் கமல், கதையின் தாக்கம் இல்லை காட்சியில்.


அதே போல நயாகரா, One of the Best!. நேற்று கதையை படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்து கொண்டு இருந்தேன், நயாகரா பார்க்க சொல்லும் ஒரு தமிழ் தம்பதியர், இரண்டு கல்கத்தா நபர்களுடன் சிக்கி கொண்டு படும் கதை. அவசியம் படித்து பாருங்கள். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை அல்லது தரத்தை அதன் நகைச்சுவைத் தரத்தை வைத்தே அறிந்து கொள்ளலாம் என படித்திருக்கிறேன். தமிழில் இன்னும் பல நகைச்சுவைகள் கதைகள் வர வேண்டும்.




சமீபத்தில் பார்த்த ஹாலிவுட் திரைப்படம், குவென்ட்டின் டொரான்டினோவின் Death Proof. ஒரு தொடர்க் கொலைகாரனைப் பற்றிய படம் இது. ஒரு நெடுஞ்சாலையோர உணவு விடுதியில் சந்திக்கிறார்கள் மூன்று தோழிகள். அதில் ஒருத்திக்கு அன்று பிறந்த நாள். அவர்கள் கொண்டாட்டத்தில் அவர்களை அறியாமால் அவர்களை பின் தொடர்கிறான் ஒருவன். பின் அவர்களைத் தொடர்ந்து தன்னுடைய Death Proof காரில் சென்று அவர்களைக் கொல்கிறான். அது விபத்து என லாவகமாக தப்பித்து விட்டு, பின் அதையே வேறு ஒரு இடத்தில, வேறு மூன்று தோழிகளைக் கொள்ள முற்பட நடப்பது மற்றவை, ஒரு த்ரில்லர். அந்த விபத்து, கடைசி நிமிட கார் Chasing காட்சி மிக அழகாக படமாக்க பட்டுள்ளது. Chasing படம் விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம்.


ஒரு கவிதை:


அழுவாத..

அக்காவின் இரண்டு வயது சுகாஷினி

அழ ஆரம்பித்தாள்

அண்ணன் அடித்து விட்டான் என,

அக்கா ஒரு அடி போட்டப் பின்

முறைத்து பார்த்துவிட்டு

சுட்டி டி.வி பார்க்க திரும்பி கொண்டான்

எல்லோரும் அவரவர் வேலைக்கு திரும்ப,

ஐந்து நிமிடம் கடந்து

சுகாஷினி அண்ணன் பக்கத்தில் படுத்து கொண்டு,

“அடிக்காதனா பாப்பாக்கு வலிக்குது இல்ல,

அதான் அம்மா அடிச்சாங்க” என்று

அவன் கன்னத்தில்

முத்தமிட்டு கொண்டிருந்தாள்,

நான்

வெறுமனே பார்த்துகொண்டிருந்தேன்…

இந்த தொடரின் முந்தையப் பதிவுகள் 1 | 2 | 3 |