Thursday, March 25, 2010

அகிரா - இன்னும் நூறாண்டிரும்!

இந்த மாதம் 23 ஆம் தேதி, அகிரா குரசோவாவின் நூற்றாண்டு தினம். அதனை ஒட்டி எழுதப்பட்ட பதிவு.

“இந்த ஜோல்னா பையர்கள் அதிகம் புகழ்வதாலேயே நான் அகிராவை விட்டு விலகி இருந்தேன்” என சுஜாதா முதன் முதலில் கணையாழியின் கடைசி பக்கங்களில் குறிப்பிட்டிருந்தது முதல் எனக்கு அகிரா குரசோவாவின் பெயர் பரிச்சியம். பின்பு அவரது "ட்ரீம்ஸ்" படத்தை சிலாகித்து எழுதி இருந்தார். அதன் பின் அந்த பெயரை நான் அதிகம் நினைவில் வைத்து இருக்கவில்லை. மீண்டும் "பாய்ஸ்" திரைபடத்தில் " குரசோவா, கோடார்ட் படங்களாம் பார்த்து இருக்கீங்களா?"  என பரத் ஜெனிலியா முன் சீன் போட, கடைசியா நான் பார்த்த இங்க்லீஷ் படம் "ஷோலே" ங்க என அவரது மூக்கு உடைபடுகையில் மீண்டும் சுஜாதாவின் வசனம் மூலமாகவே கேள்விபட்டேன். எப்போதும் மிக சீரியசான விஷயங்களை கூட வசந்த் மூலமாகவோ, இல்லை மெல்லிய ஒரு நக்கல் கலந்து சொல்வது அவரது பாணி என்பதால் அப்படியே அந்த பெயரை குறித்து வைத்து கொண்டேன்.


அகிராவின் சிறந்த படங்கள் அனைத்தையும் நான் இன்னும் பார்த்து விட வில்லை, ஆனால் நான் பார்த்த அவரது படங்கள் எல்லாமே சிறப்பாக இருந்தது. வழக்கமாக மிகவும் பாராட்டப்படும் அவரது " செவென் சாமுராய்", " ரோஷோமான்", "ட்ரீம்ஸ்" படங்களை தவிர்த்து சில படங்களை பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறன். தான் வளர்ந்து வந்த மண்ணின் கலாச்சாரத்தையும், மாற்றங்களையும் தொடர்ந்து தம் ஆக்கங்கள் மூலம் பதிவு செய்தவர் குரசோவா. உதாரணமாக சாமுராய், அவரகளது வாழ்கை முறை, போர் முடிந்த வறட்சியான காலகட்டத்தில் அவர்கள் எதிகொள்ளும் சவால்கள், அத்தனையும் மீறி இறுதி வரை சாமுராய் யாகவே வாழ்ந்த அவர்களது வாழ்கை.

பின்னர் அதுவே, அமெரிக்க மண்ணில் வேர்கொண்ட கௌ பாய்ஸ் பற்றிய படங்களை எடுக்க தனக்கு ஊக்கம் அளித்தது என செர்ஜியோ லியோன் கூறியுள்ளார் (The Good, the Bad and the Ugly, Once upon a time in west, A fistful of dollars). குரசோவாவின் ஆரம்ப கால படங்களில் ஒன்றான "Stray Dogs" எனக்கு மிக விருப்பமான திரைப்படம். இரண்டாம் உலக போருக்கு பிந்தைய டோக்யோ நகரை மையமாய் வைத்து அமைக்கப்பட்ட ஒரு த்ரில்லர் இந்த திரைப்படம். "தன் இலக்கு மட்டுமே கண்ணில் படும் வேட்டை நாய்க்கு "என்னும் வரி மிக சரியாக பொருந்தும் திரைப்படம்.



இரண்டாம் உலக போருக்கு பின், கடத்தல், கொள்ளை, கொலை என நிழல் உலகம் வலுவாக வேருன்றி காவல்துறை மெல்ல மெல்ல செயலிழந்து போகும் நிலையில் தொடங்குகிறது இத்திரைப்படம். முராகாமி என்னும் துப்பறிவாளன் வெக்கை மிகுந்த ஒரு மதிய வேளையில், நெரிசல் மிக்க ஒரு பேருந்தில் செல்கையில் தன்னுடைய கைத்துப்பாக்கியை தொலைத்து விடுகிறான். அவனது அதிகாரி, ஒரு குறிப்பிட்ட கால கெடுவுக்குள் அதை கொண்டு வந்தால் நீ வேலைக்கு வரலாம் என அனுப்பி விடுகிறார்


தன் துப்பாக்கியை தேடி தொடங்குகிறது அவன் பயணம், துணைக்கு சற்று வயதான ஒரு காவலருடன். வழக்கமாக அந்த படுதியில் திருட்டு தொழில் செய்வோரிடம் (அப்பவேவா?) விசராணை தொடுங்குகிறது. எந்த வழியிலும் கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் சோர்ந்து இருக்கும் நேரத்தில், ஊரில் ஒரு கொலை நடக்கிறது. அதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தன்னுடையது என உணர்ந்து மிகுந்த துயரும் கோபமும் கொள்கிறான் அந்த துப்பறிவாளன். தொடர்ந்தாற்போல் இன்னும் சில கொலைகள் நிகழ்கின்றன. அந்த துப்பாக்கி மூலம் நிகழும் அனைத்து குற்றங்களுக்கும் தான்தான் காரணம் என எண்ணி மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறான்.அதன் பின் அந்த நண்பரின் துணையுடன் அந்த கொலைகாரனை கண்டு பிடிப்பது என நீள்கிறது கதை.


இந்த படத்தில் கவனத்திற்குரிய பல விஷயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. உதாரணமாக அந்த துப்பறிவாளனின் கதாபாத்திரம், முதல் காட்சியில் தன் துப்பாக்கி தொலைந்த உடன் அவன் முகத்தில் ஒரு இறுக்கம், ஒரு கூர்மை குடி ஏறிவிடுகிறது. அதன் பின் அவனை சுற்றி நடக்குமே எதையுமே அவன் மிகுந்த கூர்மையுடன் காண்கிறான். நேரம் செல்ல செல்ல, இரை தேடி அலையும் வேட்டை நாய் எனவே அலைகிறான். அவனது உடல் அசைவுகள் , அவனது மொழி அத்தனையும் நேர்த்தியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.


அதே போல அவனது நண்பராக வருபவரின் முதிர்ச்சியான நோக்கும், அவர் தனது வீட்டிற்கு அவனை அழைத்து சென்று உரையாடும் இடமும் ஆழமானவை. துப்பாக்கி தேடி கிடைக்காமல் மனம் உடைந்து ஒரு சேரிக்குள் இரவு வானத்தை பார்த்து அமர்ந்திருக்கிறான், அருகே அவனால் அன்று காலை விசாரணை செய்யப்பட்டவள் செல்கிறாள். அவனை கண்டதும் தன் கையில் வைத்திருக்கும் பழத்தை அவனிடம் தந்து சாப்பிட சொல்கிறாள். சிறு சிறு விஷங்களில் கூட கவனம் கொண்டு அழுத்தம் ஏற்படுத்தும் படம் இது. அதே போல, படம் முழுதும் வெயில் மிக முக்கியமான விஷயமாக கையாளபட்டிருகிறது. அது படத்தில் அத்தனை பேர் முகத்திலும் ஒரு கடுமையை, எரிச்சலை ஏற்படுத்தியே உள்ளது படம் முழுதும். பார்ப்பவரையும் பற்றிகொள்ளும் ஒரு மூர்க்கம்!


இதே போல,  அகிராவின் High and Low என்னும் படமும் எனக்கு விருப்பமான ஒன்று. குழந்தை கடத்தல் என தொடங்கி, அதன் மூலம் இரு வேறு வர்கங்களுக்கான போராட்டம், சுயநலம், நெருக்கடிகள் ஏற்படத்தும் சங்கடங்கள் என பல விஷயங்களை உள்ளடக்கிய திரைப்படம். வெறும் கருத்துகளாய் இல்லாமல் கதை போகும் போக்கில் சுவாரசியமாய் எடுத்து சென்ற விதத்தில் அகிராவின் சிறந்த படங்களில் ஒன்று இது என தயங்காமல் சொல்லலாம்



அகிரா குராசொவா என்றவுடன்  வன்முறை தொனிக்கும் பட காட்சிகளே எப்போதும் நம் நினைவில் எழும், ஆனால் அவரது . Stray dogs முதல் Seven Samurai, High and Low, Roshomon என எந்த படமும் முடிந்த பின் நம் மனதில் வன்முறையை விட்டு சென்றதில்லை. சக மனிதனை நேசித்த ஒரு மாபெரும் திரை சிற்பியின் நூற்றாண்டு விழா இந்த மார்ச் 23. எப்போதும் மனதின் உன்னதத்தை பேசிய படைப்புகள் காலம் தாண்டி நிற்கும் என்பதற்கு மீண்டும் மீண்டும் அகிரா நினைக்கபடுவதே சாட்சி.



6 comments:

  1. சுவாரஸ்யமான இடுகை.
    தரவிறக்கம் செய்ய முடிந்தால், நீங்கள் விமர்சனம் எழுதிய Stray dogs படம் பார்க்கிறேன்.

    நேரம் கிடைத்தால், பொறுமையிருந்தால் "யோஜிம்போ" பாருங்கள். ரொம்ப மெதுவாக போகக் கூடிய படமானாலும், அகிராவின் சிறந்த படைப்புகளில் ஒன்று.

    ReplyDelete
  2. மிகவும் நன்றி சுரேஷ்!

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஜோ..யோஜிம்போ வைத்திருக்கிறேன், பார்க்க வேண்டும், இந்த வாரம் பார்த்து விடுகிறேன், அந்த படத்தின் ஆங்கில உருவம் தான், A fistful of Dollars என்று நினைவு!

    ReplyDelete
  3. இந்தப் படமெல்லாம்
    எங்கே கிடைக்கும்?

    ReplyDelete
  4. @ Madumitha
    சென்னையில் என்றால் Burma Buzzarல் கிடைக்கும் (Near Chennai Beach Station).
    அல்லது இணையத்தில் மூலம் பதிவிறக்கம் செய்தும் பார்க்கலாம்.(Download BitComet software from net and use www.torrentz.com to download - But it's not allowed in some countries!)

    ReplyDelete
  5. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete