Sunday, September 12, 2010

நினைவில் துளிர்க்கும் சருகுகள்


மரண செய்திகள் ஓர் துர்க்கனவை போல் திடுமென வந்து விடுகின்றன. கிள்ளிப் பார்த்தோ. கன்னத்தில் தட்டியோ அந்த செய்திகளை அவ்வளவு சீக்கிரம் கடந்து விட முடிவதில்லை. "நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமை கொண்டது இவ்வுலகு" என்னும் கவிஞனின் ஏளனத்திற்கு பின்னால் மௌனமாய் ஓர் ஆற்றாமை வெளிப்பட்ட வண்ணமே உள்ளது. உறங்குவது போல சாக்காடு என்று மனம் சில சமயம் சமாதான படுத்திகொள்கிறது, உறங்கி விழிக்கும் இடம் எதுவென தெரியாத அந்த நிச்சயமின்மையை மறைத்தப்படி.. நீண்ட நாட்களாய் நினைவின் அடுக்குகளில் இருந்து மெல்ல நழுவிய ஒருவர், நள்ளிரவில் போர்வையை கிழித்து காதுக்குள் ஏறும் குளிரை போல மர்மமாக அறிமுகமாகிறார் மரணத்தின் மூலம். அதன் பின் அவர்களை சுற்றிய ஒவ்வொரு நினைவுகளும் மெல்ல மேல் எழுந்து வருகின்றது, பின்பு ஒருபோதும் பிரிக்க முடியாத நமது நினைவின் அந்தரங்கங்களுக்குள் நின்று கொள்கின்றனர்.

நான் படித்த மெட்ரிகுலேஷன் பள்ளி இருக்கும் ஊரில் உள்ள பெண்கள் உயர் நிலை பள்ளியில் தான் அவளும் படித்தாள். அவள் நன்றாக படிப்பவள் என்ற ஒற்றை வரி தான் அவளை பற்றிய அறிமுகம் எனக்கு. பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த கோடை விடுமுறையில் வீட்டு வாசலில் பாய் போட்டு தெருவிளக்கின் வெளிச்சத்தில் நூலக புத்தகம் ஒன்றை புரட்டி கொண்டிருக்கும் சமயங்களில், எப்போதாவது அவளது பாட்டியுடன் அவள் வீட்டு வாசலில் காண நேரிடும். பால் வாங்க போகையில் தென்பட்டாலோ, இல்லை மளிகை கடையில் பார்க்க நேர்ந்தாலோ ஒரு பரஸ்பர புன்னகை சிந்தியது நினைவில் இருக்கிறது.

தேர்வு முடிவுகள் வெளியான அன்று, முதலில் அவள் மதிப்பெண் தான் தெரிந்தது, 455/500 எடுத்து எங்கள் ஊரில் அதுவரை இல்லாத சாதனையை செய்திருந்தாள், மாவட்ட அளவிலும் ஏதேனும் ரேங்க் இருக்கும் என பேசி கொண்டார்கள். எல்லார் வீட்டிற்கும் இனிப்பு வழங்கினாள், நானும் எடுத்து கொண்டு "தேங்க்ஸ்" என்றேன். ஓரிரு மணி நேரம் கழித்து, எனது மதிப்பெண்களும் வந்து விட்டிருந்தது. அப்போதைய பள்ளி மனம், உடனே அவள் மதிப்பெண்ணுடன் சரிபார்க்க சொன்னது, என்னை விட ஒன்றரை சதம் அதிகம் எடுத்திருந்தாள். என்ன இருந்தாலும் நான் எடுத்தது 1100க்கு  என்று சமாதான படுத்தி கொண்டேன். இனிப்பு வழங்க அவள் வீட்டிற்கு சென்றேன், எடுத்து கொண்டு "கங்க்ராட்ஸ்" என்றாள்.

அதன் பின் அவளது தாத்தா வெளி ஊரில் உள்ள 'நல்ல' பள்ளியில் சேர்த்து விட்டார். எப்போதாவது அவளது படிப்பை பற்றி அவளது தாத்தா என் அப்பாவுடன் பேசுவதை கேட்டு இருக்கிறேன். பின் ஒருநாள், விடுதியில் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறாள் என சொல்லி கொண்டு இருந்ததையும் கேட்டு கொண்டு இருந்தேன். அவருக்கு துணையாய் அப்பா மருத்தவமனைக்கு அலைந்த நாட்கள் நினைவிருக்கிறது. ஒருநாள் வந்து உடல் சற்று தேறி வருகிறது என்றார். அதன் பின், அவள் உடல் நலம் பற்றி அவ்வப்போது யார் மூலமாவது தெரிந்து கொள்வேன். ஆறு மாதம் கழித்து  ஒருநாள், "கிழவனுக்கு அறிவே இல்லை, அந்த பிள்ளைய இங்கேயே படிக்க வச்சு இருக்கலாம்" என்றார் அப்பா.

வழக்கம் போல் பாலிற்கு நின்று கொண்டிருந்த ஒரு அந்தி சாயும் நேரம் தான், அந்த மருத்துவமனை வாகனம் அவள் வீட்டின் முன் வந்து நின்றது. வாகனத்தை பார்த்த உடன் மனதிற்கு புரிந்த விட்ட அந்த விஷயத்தை நம்ப மறுத்து அங்கேயே சில கணம் நிலைத்திருந்தேன். முகம் மலர சிரித்து கொண்டே எனது வெற்றிக்கு "கங்க்ராட்ஸ்" சொன்னவளை கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் களங்கப்படுத்துவதை காண சகியாமல் வீட்டிற்குள்ளே கிடந்தேன். அதன் பின் என்றென்றும் தங்கிவிட்டாள் ஆழ்மனதில் ஒரு படிமமாய்.

தீயிலிட்ட காகிதத்தின் எழுத்துக்கள் கரைவது போல, மெல்ல மெல்ல கண் முன்னே வாழ்வு கரைந்து போய் விடுகிறது. எந்த வாக்கியம் எப்படி முடியும் என்றே அறியமுடிவதில்லை. "அண்டை மனிதரை அணுக பயம், அணுகிய மனிதரை இழக்க பயம்" என்னும் திரைப்பட வசனத்தை நான் அடிக்கடி நினைத்து கொள்வதுண்டு. மரணம் நிஜம் என அறிந்தும், வாழ்வின் சாரம் என்ன என்று குழம்பிய நாட்களில் எல்லாம் சட்டென என்னை மீட்டு தந்த ஸ்பரிசங்களையோ, புன்னகைகளையோ நினைத்து கொள்கிறேன். மரணத்தின் வாசலில் நின்று திரும்பிய தஸ்தோயவஸ்கி, மீண்டும் மீண்டும் எழுதியது மானுட பெருங்காதலையும் அதன் மகத்துவத்தையும் தானே!.





7 comments:

  1. அணுகிய மனிதரை இழக்க பயம்..

    இந்த பயம் தான் நம்மை நிறைய விஷயங்களை
    செய்ய வைக்கிறது.

    ReplyDelete
  2. இதுவும் கடந்து போகும் என்று இருந்துவிட முடியாது சில விசயங்கள். அதில் இதுவும் ஒன்று.


    நான் அதிர்ந்த விசயம் நேற்றைய பாடகி சுவர்ணலதாவின் மரணம்

    ReplyDelete
  3. உண்மை பாஸ், எனக்கும் மிகவும் பிடித்த பாடகி, "என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பெரும் என்னடி" என்ற பாடல் எனது all time fav!

    ReplyDelete
  4. madhan..Maranum nammul uruvaakum salanam veraedhum poal allaadhadhu.. idaipatta kaalatthil naanum maranatthai patri oru katturai ezhudhinen, innum veliyidavillai.

    ReplyDelete
  5. முதல் பத்தியும் கடைசி பத்தியும் அருமை. குறிப்பாக - >>நள்ளிரவில் போர்வையை கிழித்து காதுக்குள் ஏறும் குளிரை போல மர்மமாக அறிமுகமாகிறார் மரணத்தின் மூலம்>>


    பதிவு இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம் என்று தோன்றியது :)

    ReplyDelete
  6. நன்றி கேட்ஸ்!

    You could post yours too.

    நன்றி அரவிந்தன்,

    மிகவும் சுருக்கப்பட்டுவிட்டதாய் தான் எனக்கும் தோணியது.

    ReplyDelete