Friday, September 25, 2009

என் பெயர் ராமசேஷன் - பிம்பங்களை களைந்தபடி

தூசு படாமல் வளர்ந்து முதன் முதலில் இளைஞனாக இந்த சமூக கட்டமைப்பில் நிறுத்தபடுகையில் தனது தனித்தன்மை பற்றிய கேள்வி வருகிறது. இந்த அமைப்பில் தன்னை பொருத்தி கொள்வது பற்றிய தன்னுணர்வு தலை தூக்க தொடங்குகிறது. தமது உயரத்திற்க்கோ, நடைக்கோ, பழக்கத்திற்கோ ஏற்றார் போல் இல்லாத இந்த அமைப்பைப் பற்றிய சலிப்பு உருவாகிறது. தனது பாதையை முடிவெடுப்பது பற்றிய கனவுகளும், அது தரும் நிச்சயமின்மையும் தொடர்ந்து பயமுறுத்த தொடங்குகிறது. இது வரை குழந்தை என சொல்லி வந்த வீட்டில், அவனை பற்றிய எதிர்ப்பார்ப்புகள் மாறுகின்றன.

இந்த நிச்சயமின்மை தரும் பதற்றம் சமூகத்தை பற்றிய கோபமாகவும், மேலான ஒரு நாட்டை பற்றிய கனவாகவும், ஒரு வகையில் காதலாகவும், சில சமயம் காமமாகவும் வெளிப்படுகிறது. ஏதோ ஒரு அலுவலகத்தில் தன்னை பொருத்தி கொண்டு திருமணம் செய்து கொள்ளுதல், வேறு தளத்திற்கு நகர்த்தி ஒரு தப்பித்தலை உருவாக்குகிறது. கழிந்து விட்ட அந்த இளமையும், அது தந்த வடுக்களும், அந்த போராட்டமும் மெல்ல மெல்ல தண்ணீரில் இறங்கும் கல்லை போல் மனதின் அடி ஆழத்திற்கு செல்கின்றன. தவிர்க்கப்பட்ட காதலும் அதன் நினைவுகளும் அடி நாக்கில் ஒட்டி கொள்ளும் காபியின் சுவை போல நம்மோடு ஒட்டி கொள்கிறது.

1980 களில் முதலில் உருவாக தொடங்கிய ஒரு விஷயம் Prolonged Adolescence . தமது முந்தைய தலைமுறையை விட ஒரு நீண்ட இளமை பருவத்தை கழிக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது. 18 வயதிலேயே திருமணம் என்ற நிலை மாறி, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் அதை 22-24 வரை உயர்த்தி இன்று 27-30 வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது . அப்படி எண்பதுகளில் வாழ நேர்ந்த இளைஞர்களை ராமசேஷன் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் சித்தரிக்கும் நாவல், ஆதவனின் “என் பெயர் ராமசேஷன்”.

1980 களில் வெளி வந்த காலம் முதல் தீவிரமான வாசிப்புக்கு உள்ளாகி வருகிறது “என் பெயர் ராமசேஷன்”. இந்த நாவல் இரண்டு பாகமாக பிரிக்கப் பட்டுள்ளது.. முதல் பாதியில் ராம்சேஷ் அவனுடைய அப்பா, அம்மா மற்றும் தங்கையின் அறிமுகம். அவன் கல்லூரியில் சேர்வது, அங்கு அவனுக்கு கிடைக்கும் இரண்டு நண்பர்கள் ராவ் மற்றும் மூர்த்தி. ராம்சேஷ்க்கும் ராவின் தங்கை மாலவிற்குமான காதல். நீண்ட நாள் பார்க்காதிருந்த பெரியாப்பவை சந்திப்பது ஆகியவை விவரிக்கப்படுகிறது. என்னளவில் மிகவும் கவர்ந்த இரண்டாம் பாதி, கலை, சினிமா, காதல் அதை ஒட்டி அணியப்படும் பிம்பங்கள் ஆகியவை ராமசேஷின் பார்வை மூலம் விளக்கப்படுகிறது.காதலைப் பற்றிய பார்வைகள் மூன்று வெவ்வேறு காதல்கள் மூலம் முன் வைக்கப்படுகிறது. ஒன்று ராம்சேஷ் மற்றும் அவனது வசதி படைத்த நண்பனான ராவின் தங்கை மாலாவிற்குமானது. இரண்டு வெவ்வேறு பொருளாதார பின்னணிகள் கொண்ட அவர்களது எண்ணங்களும், அது அவர்களுக்கு இடையேயான சம்பாஷனைகளுடே பிரதிபலிப்பதும் மிக நேர்த்தியாக விவரிக்கப்படுகிறது. ராம்சேஷின் தேவைகள் முடிந்த பின் அவளை பற்றி அவள் மேல் ஒரு சலிப்பு வருகையில், அவளை பற்றி சொல்கையில்,

“அவளுடைய கேள்விகள் பலவற்றில் ‘என்னுடைய கீழ்மட்டத்துச் சூழலை‘ நாசூக்காகச் சீண்டுகிற பாவம் தொனிப்பதாக எனக்குத் தோன்றும் . அதாவது என் எல்லைகள் ராகம், தாளம், பல்லவிக்குள்ளும் சட்னி சாம்பாருக்குள்ளும் அடங்கிவிடுகிறவை. அவள் தொட்டிலில் கிடந்தபோதே சாச்சாச்சாவுக்குக் காலை உதைத்தவள், ஃப்ரூட் ஜெல்லியை நக்கினவள்… நான் இதேபோல, வேறு துறைகளில் அவளைவிட அதிகமாக எனக்கிருந்த பொது அறிவைப் பயன்படுத்தி அவளை மடக்க முயன்றால், அவள் உடனே தளுக்காக சம்பாஷணைத் தொனியை மாற்றி என்னை ஒரு dry professional type ஆக உணரச் செய்வாள். அப்பாவுடன் வெளியே போய்விட்டு வந்த குழந்தை தான் கண்ட அதிசயங்களை விவரிக்கும்போது அம்மா அதனிடம் காட்டுவது போன்ற ஒர் பாசாங்கு ஆர்வத்தையும் பரபரப்பையும் காட்டி, ‘என் கண்ணு!‘ என்று தட்டிக் கொடுப்பாள். குழந்தைத்தனமானவள், பக்குவம் பெறாதவள் என்று நான் அவளைச் சொன்னால் உடனே தாத்தா, ஹாஸ்ய உணர்ச்சியில்லாத ஜடம், என்று அவள் என்னைச் சொல்லுவாள். இதெல்லாம் எனக்குச் சலித்துப் போகத் தொடங்கியிருந்தது.”

மற்றொன்று மாலா உடனான காதல் முறிந்த பின், கல்லூரி தோழி பிரேமாவுடனான காதல். சற்று Intellectual ஆன அவளுடனான காதலில், அவர்கள் இருவரது Complex ம் மோதி கொள்ளும் இடங்களும், அவளை பற்றிய அவனது புரிதல்கள் உருவாக்கும் பிரச்சனைகளும் மிக விரிவாக பேசப்படுகிறது.

அடுத்து மிக முக்கியமான, மேலும் பேரு வாரியான காதல்களை பற்றிய கேலி ஆகியவை மூர்த்தி காதல் மூலம் விவரிக்கப்படுகிறது. மூர்த்தியின் காதலை பற்றி கூறுகையில்,

மூர்த்தி பாணி காதலுக்கு ரசிகர்கள் மிகவும் தேவைப்பட்டார்கள். நான் இன்று அவளை அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன், அவள் என்னைப் பார்த்து சிரித்தாள் அல்லது சிரிக்காமலிருந்தாள், நான் பார்த்த சினிமா போஸ்ட்டரையே அவளும் பார்த்தாள். இன்று அவள் மாட்சிங்காக ட்ரஸ் பண்ணிக்கொண்டிருந்தாள் என்கிற ரீதியில் அவன் பேசுவதை பிறரை கேட்க்கச் செய்வதன் மூலமாகவே அவன் ஒரு கதாநாயகனாக உணர்ந்தான்.

அதே போல, ராம்சேஷும் ராவும் தன் அப்பாக்களை மனதில் வைத்து உரையாடும் இடமும், ராம்சேஷ் அவனது பெரியப்பாவை சந்திப்பது மற்றும் இவன் முன் அவன் பெரியப்பா தான் ஒரு நவநாகரீகமானவன் என காட்டி கொள்ள முயலும் இடங்களும் மிக முக்கியமானவை. ராம்சேஷுக்கு தனது அப்பாவை பற்றிய புரிதல் உருவாகும் இடம் மிக மென்மையாக விவரிக்கப்பட்டுள்ளது. நாவலின் ஆரம்பத்தில் அவரை பற்றிய ஒரு மெல்லிய வெறுப்பும், ஏளனமும் கொண்ட அவனது பார்வை, அவரை அவன் விடுதியில் சந்திக்கையிலும், பின் பூங்காவில் சந்திக்கையிலும் மெல்ல உரு மாறுகிறது. ஒரு வகையில் எதிர் காலத்தில் அவனது வாழ்க்கை முறைக்கான Templateஒ அவரது வாழ்க்கை என என்னும் படி படைக்கப்பட்டுள்ளது.

இந்த நாவலை போலவே, இளைஞன் என்று உணர்ந்திருந்தவன் மெல்ல ஒரு முதிர்ச்சிக்கு வந்து தன் நிலையினை உணர்ந்து கொள்ளுதல் பற்றிய சுஜாதாவின் “நிலா நிழல்” என்னும் நாவல் எனது விருப்பத்திற்கு உரியது. திருச்சியில் இருந்து கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு அப்பாவிடம் பொய் சொல்லி திரும்பும் ஒரு இளைஞனைப் பற்றியது “நிலா நிழல்”.

அலைக்கழிக்கப்படும் இளமையின் வண்ணங்களை ஒரு சேர சொல்லும் இந்த நாவல் ஒரு அழகிய சித்திரத்தை போன்றது.

நூல்: என் பெயர் ராமசேஷன்

பதிப்பகம்: உயிர்மை

விலை: ரூ 120

4 comments:

 1. எனக்கு மிகவும் பிடித்த நாவல். என் நண்பன் ஒருவனை மூர்த்தி என்று தான் கூப்பிடுவேன். நான் +௨ படிக்கும் போது படித்தது. இன்னும் மறக்கவில்லை. புத்தக கடைகளில் தேடும் போது கிடைக்கவில்லை. கிடைத்ததும் மீதும் படிக்கவேண்டும்.

  வேலன்.

  ReplyDelete
 2. Just stepped inside your blog through Google, Just finished reading this book. Your review is excellent. . உறவுகள் மறைமுகமாய் நம்மிடம் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பு, அது காட்டும் பாசாங்கு, அதனுள் இருக்கும் சுயநலம் என்று உறவுகள் பற்றி யாரும் தொட துணியாத உறவின் அந்த உள்புற கதவை மெல்ல திறந்து நம்மை எட்டிபாக்க வைக்கிறார்.

  ராமசேஷன் பண்ணும் சுய விமர்சினம் மூலம் ஒரு மனிதனின் பாசாங்கை அவனது செயலுக்கு பின்பு இருக்கும் Egotism , என்று எதையும் விட்டுவைக்காமல் ஒரு மனிதனின் உள் அறையில் சிறு தீபம் ஏற்றி நமக்கு காட்டுகிறார் ஆதவன்.

  ReplyDelete
 3. மீண்டும் மீண்டும் படிக்க கூடிய நாவல்களில் இதுவும் ஒன்று வேலன், அவசியம் படியுங்கள். கிழக்கு பதிப்பக தளத்தில் ஆன்லைனிலும் கிடைக்கிறது.

  https://www.nhm.in/

  ReplyDelete
 4. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிர்மல். மனித உறவுகளின் சிக்கல்களையும், பாசாங்குகளையும் பதிவு செய்ததில் ஆதவனின் பங்கு மகத்தானது.

  //ஒரு மனிதனின் உள் அறையில் சிறு தீபம் ஏற்றி நமக்கு காட்டுகிறார் ஆதவன்// -அற்புதம்!.

  காகித மலர்களில் தொடங்கி பல சிறுகதைகள் வரை அவர் நுட்பமாய் படம் பிடித்து காட்டும் மனித மனதின் பாவனைகளை பல முறை எண்ணி வியந்திருக்கிறேன். ஆதவன், என்றும் எனது பிரியத்துக்குரிய எழுத்தாளார் :)

  ReplyDelete