Thursday, February 25, 2010

பாலுவின் மூன்றாம் பிறை- இழப்பின் வலி

எட்டாம் வகுப்பு படிக்கையில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லை, எதிர் வீட்டு மாடியில் குடி இருந்த என் நண்பன் ராஜேஷ் வீட்டில் தான் எப்போதும் இருப்பேன். வார இறுதி இரவுகளில் திரைப்படம் ஒளிபரப்பானால் இரவு அவர்கள் வீட்டில் தங்க எனக்கு அனுமதி உண்டு. ராஜேஷின் அப்பா எப்போதும் இரவு வெகு நேரம் கழித்து தான் வீடு வருவார், அப்படி ஒரு வார இறுதியில் தான் நான் "மூன்றாம் பிறை" பார்க்க நேரிட்டது. நான், ராஜேஷ் அவனது அம்மா மூவரும் அந்த படம் பார்த்து கொண்டு இருந்தோம், சரியாக இறுதி காட்சியில் ரயில் புறப்படும் சமயம் ராஜேஷ் அப்பா வந்தார். அவரை கவனிக்காமல் நாங்கள் மூவரும் A Film by Balu Mahendra என வந்த அந்த தொலைக்காட்சி பெட்டியை வெறித்து பார்த்த வண்ணம் இருந்தோம்.

பார்த்து கிட்டே இருந்தா வந்துடுவாளா? எழுந்திருங்க படம் முடிஞ்சுடுச்சு என்றார் அவன் அப்பா. உறுதியாக அந்த படத்திற்கு அடுத்த பாகம் இருக்கும் என நம்பினேன். கமல் வண்டியிலே ஏறி, தெளிவா அவளுக்கு விளக்கி இருக்கலாம் இல்ல? கமல போய் ஸ்ரீதேவி வேணாம்னு சொல்லிடுமா? ஏன் படம் முடியும் பொது தொடரும் போடல? என பல கேள்விகள் கேட்டேன் அவரிடம். சிரித்து கொண்டே இன்னும் கொஞ்சம் பெரிய பையன் ஆனா உடனே பாரு என்றார்.
சமீபத்தில் பாலுவின் பேட்டியை பார்த்தேன். அதில் மூன்றாம் பிறையை பற்றி அனு அவரிடம் கேட்கையில்,

"Moondram Pirai is an autobiography. It's nothing else me and Shoba. A very very innocent beautiful girl, a child women coming in to the life of a matured Man and stays with him for some days and then leaves. This is Moondram Pirai"
என்றார்.



மீண்டும் மூன்றாம் பிறை பார்க்க துவங்கினேன். கடந்த ஒருவாராத்தில் நான்கு முறை. சில காட்சிகள் பல முறை. ரசிகனை மதித்து படம் எடுக்கும் படைப்பாளியில் முக்கியமானவர் பாலு மகேந்திரா என்பது புதிய விஷயம் இல்லை. ஆனால் எத்தனை விஷயங்களை தவற விட்டு இருக்கிறோம் என நினைத்து என்னை நானே தலையில் தட்டி கொண்டேன் பல இடத்தில்.
பாலுவின் அந்த பேட்டியை கீழ்காணும் சுட்டி மூலம் பார்க்கலாம்.



சீனு விஜியை விஜயாக சந்தித்தல்:

ஒரு சிறந்த கதையோ இல்லை கவிதையோ படைக்கப்பட்ட பின் வாசகனின் பாரவைக்கே விட்டு விடுதல் போலவே, இந்த முறை எனக்கே உரிய முறையில் கற்பனை செய்து கொண்டு இந்த படத்தை பார்த்தேன். முதலில் சீனு விஜியை ஒரு விலைமகளிர் விடுதியில் சந்திக்கிறான். அந்த மாதிரி இடத்திற்கு அவன் புதுசு, மெல்ல விஜியை நெருங்கும் அவன் அவளால் தாக்கப்பட அப்படியே உடைந்து அழுகிறான். இங்க எல்லாம் நான் வரவே மாட்டேனு சொன்னேன் என. மருட்சியுடன் அவனை காணும் விஜி, "ரொம்ப வலிக்குதா" என்கையில் தொடங்குகிறது ராஜாவின் பின்னணி. சீனு அந்த இடத்திற்கு வந்தது முதல் பின்னணியில், "தும்பி வா" அல்லது "சங்கத்தில் பாடாத கவிதையை" பாடலின் பின்னணி தான் இருக்கிறது. சரியாக சீனு உடைந்து விஜியை அந்த True Innocentஐ உணரும் இடம் தொடங்குகிறது ராஜாவின் மூன்றாம் பிறை பின்னணி.

சீனுவிற்கு விஜியை நெருங்க நேர்மையான காரணங்கள் எதுவும் இல்லை, ஆனால் அந்த குழந்தைதனத்தை கண்ட அந்த கணம் அவன் அதிர்ச்சி அடைகிறான். பெண்களை வெறும் உடல்களாகவே காணும் இடத்தில் சீனு விஜியை சந்திக்க வைத்தது, பாலுவின் பேட்டியை ஒப்பு நோக்கையில் தற்செயல் என படவில்லை. ஷோபாவை சினிமாவில் கண்டு எடுத்த பாலு, விஜியை முதலில் சந்தித்த இடமாய் விலைமகளிர் விடுதியை தேர்ந்தெடுத்தது வேறு ஒரு தளத்தில் இந்த காட்சிகளை நகர்த்துகிறது. மறுநாள் அவளை சந்தித்து, கோவில் இருக்குமே, புறாலாம் பறக்குமே என்னும் அந்த விஜியுடனே அவன் நெருக்கமாகிறான். அம்மா அவளை லக்ஷ்மி லக்ஷ்மி என கூப்பிடுவாள் என்கிறாள் விஜி (இறுதி காட்சிகளில் அவள் அம்மா அப்படிதான் கூப்பிடுகிறாள்). வெறும் பெரிய பெரிய ஆட்களாக வரும் அந்த இடத்தில், முதல் முதலில் அவளிடம் அவள் அம்மாவை பற்றி கேட்கும் கணத்தில் விஜியின் உலகம் சீனுவை முழுமையாக ஏற்று கொள்கிறது. அதற்கு எந்த விதமான தர்க்க நியாங்களும் தேவை இருக்கவில்லை, ஒரு குழந்தை எப்படி ஏற்றுகொள்ளுமோ அப்படி.

தனியாகவே வளர்ந்த சீனு, அவனது தேவைகளை மட்டுமே பார்த்து கொண்டவன். முதல் முதலில் அவளை ரயிலில் கூட்டி கொண்டு போகையில் அவள் வாங்கிய ஐஸ் க்ரீமிற்கு கூட பணம் தான் தான் கொடுக்க வேண்டும் என தெரியாமல் நிற்கிறான். அவன் நண்பன் சொல்ல பணம் எடுத்து கொடுக்கையில் தொடங்குகிறது அவளின் பிரவேசம் அவன் உலகுக்குள்.



விஜி இல்லாமல்:
விஜியை காணாமல் சீனு அவளை தேடும் காட்சி தமிழ் சினிமாவின் மிக நேர்த்தியான காட்சிகளில் ஒன்று. ராஜாவின் பின்னணியுடன் இசைந்து அந்த காட்சிகள் உருவாக்கும் தாக்கம் நேர்த்தியானது. அந்த காட்சியை இந்த சுட்டியில் காணலாம்.


அந்த காட்சியினை பற்றிய ஒரு அழகான பார்வையை அறிய இங்கு செல்லவும்.
சீனு தினம் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ளது தான் அந்த பிள்ளையார், ஆனால் தனியாகவே வளர்ந்து வரும் அவனுக்கு அதை பற்றிய எந்த விதமான அக்கறையும் இருந்ததில்லை. தன்னிடம் இருந்த எதோ ஒன்றை இழக்க போகிறோம் என உணரும் கணத்தில், விஜியை தேடுகையில் அந்த மரத்தடி பிள்ளையாரை சந்திக்கிறான், அப்போது கூட அதனிடம் என்ன கேட்பது என்றோ, எப்படி அழைப்பது என்றோ தெரியாமல் வெறுமே பார்க்கிறான். அத்தனை வலிகளையும் ஒரு சேர முகத்தில் கொண்டு வரும் அந்த காட்சி Simply கமல்.


சீனுவும் காமமும்

மிக மெல்லிய திரை போல படர்ந்திருக்கிறது சீனுவை காமம். ஆனால் எப்போதும் அதன் வசீகரத்துடன் ஆழத்தில்!. அவன் நண்பன் முதலில் விலை மகளிரை காண அழைக்கையில் அதிகம் எதிர்ப்பு காட்டாமல் கிளம்புகிறான். ஆனால் பின் வரும் காட்சிகளில் அவனது பள்ளி முதல்வரின் மனைவி அவன் மேலும் இச்சை கொள்கிறாள் எனத் தெரிந்தும் அவளை விட்டு விலகியே இருக்கிறான். அப்படி என்றால் அவன் நண்பனை சந்திபதற்கு முன்னும் ஊட்டியில் அவனுக்கு அந்த வழியில் செல்ல வாய்ப்பு இருந்திருக்கிறது. ஆனால் அவன் அதை விட்டு விலகியே இருக்கிறான், அப்படி என்றால் அவன் தேடியது என்ன?

விஜியை அழைத்து வந்து தன்னோடு வைத்திருப்பது அவன் வாழும் சமூகத்தின் பழிப்பிற்கு கொண்டு செல்லும் என அறிந்திருந்தும் அவன் அதை செய்கிறான். அதை பற்றி அந்த பாட்டி கேட்கையில், இவங்களா என் கூட வர போறாங்க? என்கிறான். அப்படி பயபடாதவன் தான், தன் முதலாளி அம்மாவிடம், "என் முதலாளிக்கு துரோகம் செய்ய முடியாது " என சொல்லி விலகுகிறான்.
உண்மையில் அவன் விரும்புவது வெறும் உடல்களை அல்ல, அவளிடம் இருந்து விலக அதுவே காரணம். ஒரு சமயம் விஜியை அந்த குழந்தைத்தனம் விலகியது போலவே கற்பனை செய்கிறான். அப்போது அவனுக்கு அதிர்ச்சியே வருகிறது. அந்த காட்சியினை இந்த இடத்தில் காணலாம்.


அந்த இறுதி காட்சி

வித விதமாக சிலாகிக்கப்பட்ட அந்த இறுதி காட்சி இங்கே.

எத்தனை விதமாக பாராட்டினாலும் தகும் காட்சி. நான் மீண்டும் மீண்டும் கேட்டு கொள்வது, அந்த சிறுவன் இறுதியில் சீனுவிடம் என்ன சார் அச்சு என்கிறான், என்ன சொல்வது என புரியாமல் " விஜி விஜி" என்கிறான். ஒரு கணம் அவளை வளர்ந்த பெண்ணாக கற்பனை செய்து பார்த்த அதிர்ச்சியை கண்ட அவன் மனம், இனி வாழ்நாள் முழுதும் அவனது விஜியை சந்திக்கவே முடியாது என்பதை எப்படி ஏற்றுகொள்ளும்?.


இதுவரை அவன் ஆழ்மனம் எந்த விதமான பாவனைகளும் இல்லமால் முழுமையாக சரணடைந்திருந்த ஒரு உயிர் அவனை விட்டு விலகுகையில், வளர வளர அவன் அடைந்த அத்தனை நாசுக்குகளையும், போலி பாவனைகளையும் அழித்துவிட்டு ஒரு குழந்தையை போல் அழவிட்டு செல்கிறது.

இனி சீனு அந்த மரத்தடி பிள்ளையாரிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை, ஒருவேளை அவன் அந்த பிள்ளையாரை சந்திக்க நேரிட்டாலும் அந்த சிறுவனிடம் அழுதது போல, "விஜி விஜி" என்று மட்டுமே சொல்வான் என நினைக்கிறன். அவன் பிரத்தனை அவ்வளவுதான்!


12 comments:

  1. மிகவும் நன்றி சுரேஷ் கண்ணன்!

    Glad to see your comments! :)

    ReplyDelete
  2. Madhan.. ithu pola oru nerthiyana thiraipadam patriya pathivai naan engum sameebathil padithathaai ninaivu illai! Miga nerthiyaaga gavanathudan varthaigal thervu seithu, koorthirukirureergal! :D

    Arumaiya ezhuthirukeenga!

    ReplyDelete
  3. மிகவும் நன்றி சுபா, சொல்லப்போனால் சில விஷயங்கள் விட்டு விட்டேனோ என எண்ணுகிறேன். படத்தின் நேர்த்தியை விளக்க முயன்றேன், அதுவே நன்றாக அமைந்து விட்டது. மீண்டும் ஒரு முறை இந்த படத்தை பாருங்கள். :)

    ReplyDelete
  4. இன்று தான் உங்களின் வலைப்பக்கம் வந்தேன் நண்பா, மிக சிறப்பான ஒன்று என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடமுடியாது தான் உங்களின் பதிவை. குறிப்பாக மூன்றாம்பிறை பற்றிய பதிவும் பார்வையும் மனதை தொட்டது. வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  5. உங்களுடைய பதிவின் மூலம் பாலுமகேந்திராவின் நேர்காணலை பார்த்தேன். நன்றாக இருந்தது. totally I enjoyed it...

    ReplyDelete
  6. @வேல் கண்ணன்
    வருகைக்கும் தங்களின் மனம் நிறைந்த பாராட்டுகளுக்கும் நன்றி நண்பரே. :)

    ReplyDelete
  7. நான் மிகவும் விரும்பி பார்த்த பேட்டிகளில் அதுவும் ஒன்று கிருஷ்ணா பிரபு.அவரது படங்களை போலவே அவரது பேச்சும் மிக மென்மையாக இருந்தது

    ReplyDelete
  8. madhan super madhan... ingayum super ah continue pannureenga... nalla post Madhan....

    ReplyDelete
  9. nice article..i read, hanks to you..
    vg.selvakumar@gmail.com

    ReplyDelete
  10. Thanks a lot Selvakumar, Glad you liked it :)

    ReplyDelete