Tuesday, March 10, 2009

அசாருதினும் என் முதல் திருட்டு அனுபவமும்

5 ஆம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையியின் போது கரூரில் இருந்த அசாருதினின் தாத்தா தொலைபேசாமல் இருந்திருந்தாலோ இல்லை ஊருக்கு போக வேண்டும் என அவன் அப்பா முடிவு எடுக்காமல் இருந்திருந்தாலோ, நான் அந்த “தினத்தந்தி” பேப்பரை திருடி இருக்க வேண்டியதில்லை.


நானும் அசாருதினும் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு ஒன்றாக படித்தோம், அவனது அப்பாவும் என் அப்பாவும் colleague என்ற முறையிலே அவன் அறிமுகம் ஆனான். அதன் பின் சில முறை அவன் வீட்டிற்கு சென்று உள்ளேன். அவன் அம்மா எப்போதும் அழகாக சிரித்து கொண்டுதான் பேசுவார். நான் வகுப்பில் ஓரளவு நன்றாக படிப்பததாலும், நான் வரும் போது எல்லாம் அசாருதினும் என்னுடம் அமர்ந்து சில நேரம் படிப்பதாலும் அவர் என்னை அடிக்கடி வீட்டிற்க்கு வர சொல்லுவார். அவன் வீடு என் வீடு போல் அல்ல, வண்ண தொலைக்காட்சி, குளிர் சாதன பெட்டி எல்லாம் எனக்கு வெகு அன்னியம், அந்த வீட்டில் எனக்கு பரிட்சியம் அவனது அம்மாவின் அன்பும், அவனது ஒரு வயது தங்கையின் சிரிப்பும் மட்டுமே.பல நாள் அதற்காகவே அவன் வீட்டிற்கு செல்வேன்.


அசார் மிக அமைதியானவன், தேவை இல்லாமல் அதிகம் பேச மாட்டான், வகுப்பில் அவன் யாருடனும் சண்டையிட்டும் நான் பார்த்ததில்லை. “பெரியவன் ஆனா நான் டாக்டர் ஆவேன், பைய்லட் ஆவேன்” போன்ற எங்கள் பேச்சுகளிலும் அவன் கலந்து கொண்டதாய் எனக்கு நினைவு இல்லை.எப்போதும் தேர்வுக்கு முன் ஒவ்வொரு படத்திலும் முக்கியமான கேள்விகளை என்னிடம் குறித்து தர சொல்லுவான். நானும் வகுப்பில் ஆசிரியர் நடத்தும் போது சொன்னது, முந்தைய தேர்வுகளில் கேட்டது என சில கேள்விகளை குறித்து தருவேன். தேர்வு முடிந்த பின் நன்றி சொல்லுவான்.


5 ஆம் வகுப்பு தேர்விற்கு முன் அவன் வீட்டில் சென்று படித்து கொண்டிருந்தேன். அப்போதுதான் முதல் முதலாக, ராமாயன நாடகத்தில் ராமரையும் சீதாவையும் வண்ணத்தில் பார்த்தேன். அன்று இரவு நேரம் ஆகி விட்டதால், அவன் வீட்டிலேயே சாப்பிட சொன்னான். நானும் தட்டில் தோசையுடன் அமர்ந்து இருக்கையில், “ஊத்திக்கோடா பக்கத்திலே இறுக்குப்பார்” என்று அவன் சொன்ன போது தான் பார்த்தேன், இத்தனை நேரம் நான் ஊறுகாய் என நினைத்தது தான் தோசைக்கு ஊத்தி சாப்பிட வேண்டு என்று. அதன் பெயர் என்னடா என்றேன், Tomato Sauce என்றான். சாப்பிட முடியாமல் ஒன்று சாப்பிட்டு முடித்த பின், மீண்டும் அதில் சிக்கி கொள்ளாமல் பக்கத்தில் பச்சை நிறத்தில் இருந்த (புதினா சட்னி என நினைத்தேன்) கேட்டேன். இது என்னோட Favourite என்று எடுத்து கொடுத்தான் அரை தோசைக்கூட சாப்பிட முடியாமல் முழித்தேன், அதன் பெயர் “Chilly Sauce”.


அந்த தேர்வு முடிந்த ஓர் அதிகாலையில் தான், அவன் தாத்தா ஊருக்கு கிளம்பினான்.அவன் சென்ற கார் வளைவில் திரும்பையில் ஒரு லாரி மோதி முன் சீட்டில் அமர்ந்திருந்த அவன் அங்கேயே இறந்து போனான். ட்ரைவர் உட்பட அவன் அப்பா, அம்மா, அவனது ஒரு வயது தங்கை யாவரும் சின்ன காயங்களுடன் உயிர் பிழைத்தனர். அந்த செய்தி மறு நாள் “தினத்தந்தியில்” வந்திருந்தது, இரவு டீ கடையில் எல்லோரும் படித்து விட்டு போன பின் அந்த பேப்பரை பார்த்தேன். உருகுலைந்த அசாரின் படம் போட்டிருந்தது. பெயர் மட்டுமே நான் பார்த்த அசார். முகம் முற்றிலும் அடையாளம் தெரியவில்லை. அந்த படத்தை வீட்டில் அக்காவிடம் காட்டி “அது அசார் இல்லை தானே” என கேட்க அந்த தினத்தந்தி பேப்பரை திருடி வந்து விட்டேன்.


அந்த 5 ஆம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையியின் போது கரூரில் இருந்த அசாருதினின் தாத்தா தொலைபேசாமல் இருந்திருந்தாலோ இல்லை ஊருக்கு போக வேண்டும் என அவன் அப்பா முடிவு எடுக்காமல் இருந்திருந்தாலோ, நான் அந்த “தினத்தந்தி” பேப்பரை திருடி இருக்க வேண்டியதில்லை.

2 comments: