திரைப்படங்களின் சிறந்த பின்னணி இசை என்பது, இயக்குநர் திரையில் காட்டும் காட்சியின் வீரியத்தை அதன் உச்சத்திற்கு செல்ல கூடியதாக இருக்க வேண்டும். பல சிறந்த காட்சிகள் பின்னணி இசையின் பலத்தினாலேயே நிலை பெற்று விடுகின்றது. நான் பார்த்த படங்களில், என்னை பின்னணி இசையில் மிகவும் கவர்ந்தவார்கள் spaghetti westerns எனப்படும் Sergio Leone ன் Cow Boy படங்களுக்கு இசை அமைத்து புகழ் பெற்ற இசை மேதை எனியோ மோரிகனும் (Ennio Morricone) , நமது இளையராஜாவும்.
எனியோ மோரிகன் இத்தாலி நாட்டை சேர்ந்தவர், இரண்டாம் உலக போர் சமயம் தன் இளமையை வறுமையில் கழித்த இவர் தொடர்ந்து இசை பயின்று சிறு சிறு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். 1960 ல் இவர் Sergio Leone உடன் இணைந்தது ஓர் முக்கியமான நிகழ்வு. இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவான சில முக்கியமான படங்கள், A Fistful of Dollars, For a Few Dollars More (1965), The Good, the Bad and the Ugly (1966), Once upon a time in west,Once upon a time in America (1968).இதை தவிரவும் The Battle of Algiers(1965), Malena, Cinema paradiso போன்ற மிக சிறந்த பல படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.
Once Upon a Time in West ல் ஒரு காட்சி - படத்தின் முதல் 15 நிமிடங்களுக்கு படத்தில் இரு வரி வசனம் மட்டுமே வருகிறது, மற்ற அத்தனை விஷயங்களையும் இசை பேசுகிறது. கௌ பாய் உடை அணிந்த ஓர் ஐந்து பேர் ஓர் வீட்டின் முன் வருகிறார்கள், அந்த வீட்டின் உரிமையாளன்(ஓர் கிழவன்) , ஏதாவது வேண்டுமா என்கிறான், ஐவரில் ஒருவன் கையை Beltல் உள்ள துப்பாக்கியை நோக்கி செலுத்துகிறான், மெல்ல ஒரு Guitar ஒலி கேட்கிறது. அந்த கிழவன் ஒன்றும் சொல்லாமல் ஓர் அறையில் சென்று ஒளிந்து கொள்கிறான், அந்த ஐவரும் ஆளுக்கு ஓர் மூலையில் அந்த வீட்டை சுற்றி நின்று கொள்கின்றனர், இதன் அத்தனைக்கும் நடுவில் மெல்ல கீச் கீச் என்று ஓர் ஒலி கேட்டு கொண்டே உள்ளது. அவர்கள் தன் இடம் நோக்கி சென்ற உடன், காமீரா அங்கே உள்ள ஓர் காற்றாடியை நோக்கி திரும்ப, அந்த கீச் ஒலி பெருகுகிறது. அங்கு நிற்க்கும் ஒருவனது கண் இங்கும் அங்கும் அலை பாய்கிறது, இசையும் சேர்ந்து அவனோடு. கண்ணின் அசைவுக்கு இசை வடிவம் கொடுத்தவர் இவராகத்தான் இருப்பார். அந்த 15 நிமிட காட்சி இயக்கமும் இசையும் ஓத்திசையும் ஓர் அதிசயம். பல காட்சிகளில், மோரிகனிடம் ஒரு காட்சியை சொல்லி விடுவாராம் Sergio Leone, அவர் இசை அமைத்த பின் அந்த இசைக்கு தகுந்தார் போல் காட்சி படம் பிடிக்க படுமாம்.
எனியோ மோரிகனின் பின்னணி இசை தனி குறுந்தகடுகளாக வந்து வசூலில் சாதனை படைத்து உள்ளது. இதுவரை அதிக விற்பனையான இசைதகடு இவர் உடையதே!!. இவர் பல படங்களில் அமைத்த பின்னணி இசையின் 2 மணி நேரத்திற்க்கும் அதிகமான இசை தொகுப்பு என்னிடம் உள்ளது. உறக்கம் வராத பின்னிரவு பொழுதுகளில் (12 மணியை தாண்டி) அந்த இசையை கேட்ட உடன், மெல்ல அது நம்மை கௌ பாய்களின் உலகத்திற்கே கொண்டு செல்வதை உணர்ந்திருக்கிறேன்.
அந்த இரவுகளில் எங்கோ ஓர் புதையலை நோக்கி என் மனம் செல்லும் சாகச பயணத்தின் துணையாக இவரது இசை வந்த வண்ணம் இருக்கும், அதில் வரும் துப்பாக்கி குண்டுகளின் சத்தமும், குதிரை குளம்பின் ஒலியும் மெல்ல துரத்தி கொண்டே வரும். மெல்ல அந்த புதையலை எடுக்க போகையில் தீடீரென்று ஓர் கனத்த மௌனம் நிலவும், இவரது இசையின் உச்சம் அவர் உருவாக்கும் அந்த மௌனத்தின் ஊடே உள்ளது.எங்கோ ஒளிந்திருந்து துப்பாகியுடன் இரு கண்கள் நம்மை காண்பது போல் அந்த மௌனம் நம்மை உறுத்த, மெல்ல அந்த இசை கண் விழிக்கும், மீண்டும் நம் துணை வந்து விட்டது என்று ஒரு சின்ன புன்னகையுடன் அந்த புதையலை எடுத்து கொண்டு விழிக்கையில் காலை மணி 4ஐ கடந்திருந்தது.
இவரது இசை பாடல்களும் பல உலக திரை படங்களில் இவர் அனுமதியுடன் பயன் படுத்த பட்டுள்ளது. எனது விருப்பமான இயக்குநர் Quentine Torantino இவரது தீவிர விசிறி, இந்த ஆண்டு வெளியாகும் இவரது படத்திற்க்கு எனியோ மோரிகனே இசை அமைத்து உள்ளார். அதை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.
பல படங்களுக்காக ஆஸ்கர் விருதிற்க்கு இவர் பரிந்துரை செய்ய பட்டிருந்தாலும் , சத்தியஜித் ரேவிற்க்கு கொடுக்க பட்டது போல், இந்த மேதைக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி ஆஸ்கர் பெருமை பட்டு கொண்டது. இவருக்கு அந்த விருது வழங்கபடுகையில் அரங்கமே எழுது நின்று வணங்க, விருதை இவர் Clint Eastwood கையில் இருந்து பெற்று கொண்டார். அப்போது இவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை, அப்போதும் இவர் கை எங்கோ காற்றை நோக்கி நீட்டிய வண்ணம் இருந்தது
பின் வரும் பதிவுகளில் இளையராஜாவின் பின்னணி இசையை பற்றி……
No comments:
Post a Comment