ஒளியை நிழலாகவும் வெப்பத்தை தட்பமாகவும் மாற்றி கொண்டிருந்த ஒரு புளியமரம் வாழ்ந்து வீழ்ந்த கதை இது.தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகம் ஆகும் வாசகர்களுக்கு சிபாரிசு செய்யபட்டு வரும் நாவல்களில் இது முக்கியமானது. சுந்தர ராமசாமியின் இந்த நாவல் 1966 ஆண்டு வெளி வந்து, இன்று வரை தொடர்ந்து தீவிர வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளது. முடிந்த வரை சுந்தர ராமசாமி என்கின்ற ஆளுமையின் பிம்பத்தை தவிர்த்து இந்த நாவலை படித்தேன். திருப்தி !!!
தெளிவான கதை, ஒரு கிராமத்தின் ஓரத்தில் குளத்தருகே வருகிறது புளியமரம், ஒரு முறை அந்த பிரதேசசமூகம் (அரசன்) அவ்வழி போகையில் அந்த குளத்தை சீரமைக்க உததரவிடுகிறான். இதுவரை கதை இந்திய சுதந்திரத்திற்கு முன் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.அதன் பின் அந்த மரத்தை சுற்றிய இடம் மெல்ல வளர்ச்சி பெறுகிறது. "புளியமர ஜங்க்சன்" ஆகிறது.அந்த இடத்தில் கடை தெரு உருவாகி, அந்த கடை தெருவில் நடக்கும் வியாபார போட்டிகள் மூலம், புளியமரத்திற்கு ஆன்மீக மற்றும் அரசியல் அங்கீகாரம் குடுக்கப்பட்டு வழக்கம் போல் மனிதனின் இச்சைக்கு பலியாகிறது.
நாவலின் ஆரம்பமே, ஓர் கடந்த காலத்தை ஒரு பார்வையாளன் சொல்வது போலவே அமைந்துள்ளது. புளியமரத்தின் இளமை காலம், "ஆசான்" என்னும் பாத்திரத்தின் மூலம் சிதறிய நினைவுகள் மூலம் சொல்ல பட்டுள்ளது. பின் பாதியில் நடக்கும் விஷயங்கள் மிக தெளிவாக பதிவு செய்ய பட்டுள்ளது.ஆசிரியனின் கூற்றாக அங்கெங்கே வரும் சில வாக்கியங்கள் சிந்திக்க வைக்கிறது..
வயதானவர்கள் Parkல் சந்தித்து கொள்கையில் இப்படி வருகிறது..
" சமதர்ம சந்தோஷம் அளிப்பது கடவுளால் சாத்தியமில்லை என்றால் பாரபட்சம் காட்டாமல் துன்பபடுத்திவிட்டாலும் போதுமென்று அவர்களுக்கு தோன்றுகிறது"
அதே Parkல் நடுத்தர வயதானவர்களை பற்றி சொல்கையில்..
" முன்பக்க கொட்டை எழுத்துகளில் இடம் பிடித்து கொள்ளும் ஒடுகாலிகளின் பெருக்கம் மனைவியின் இருப்பை எதிர்பார்த்து வீடு திரும்புதல் விவேகமல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது" (செய்திதாள்கள் எந்த மாதிரி விஷயங்களை தொடர்ந்து முன் நிறுத்தி மனவிகாரங்களை அகாலபடுத்துகிறது என்ற நோக்கில் மட்டும்)
கதைகளை பற்றி சொல்கையில், " உலக வழக்கை கற்பனைக்குள் கொண்டு வகைப்படுத்துவது சத்தியமாற்ற காரியமாக இருக்க, கற்பனைக்குள் உலகை திணித்து திருப்தி தேடிகொள்வதே நாம் செய்ய கூடியதாய் உள்ளது" என்னும் வரிகள் அப்போது உருவாகி வந்த நவீனத்துவ சிந்தனைகளின் தொகுப்பு போல் தெரிகிறது.
" சொல்ல போனால் எல்லா பாதைகளும் கடலோரம் கிளைத்து மற்றொரு கடற் கரையில் கரைகின்றன" என்னும் வரி அதிக நேரம் சிந்திக்க வைத்தது.
நாவலின் வடிவம் மிக கட்சித்தமானது. உதிரி வரிகள், உதிரி காட்சிகள் என எங்கும் எனக்கு தென் படவில்லை. அதன் பின் படித்ததில் சுந்தர ராமசாமி அவர்களின் சிறப்பே அதுதான் என்று அறிந்தேன்.நாவல் முழுதுமே பல குறியீடுகள் பயன்படுத்த பட்டுள்ளது என்றே அறிகிறேன். சொல்ல போனால் மொத்த நாவலுமே.
வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் அழகாய் அமைதியை இருந்த இடத்தை தனக்கு சாதகமாய் ஆக்கி கொண்டு, பின் அங்குள்ள இயற்கையை சிதைக்கிறான்.அரசியலில் சிக்கியது சம்பந்தமே இல்லாமல் அழிகிறது.புளியமரத்தை ஒரு பெண்ணாய் உருவகித்தால், அதன் இளமை காலங்களில், அதன் அழகில் மயங்கி பலர் வருகின்றனர், பின் அதன் நடுத்தர வயதுகளில், அதனால் என்ன பொருளியல் லாபம் என கணகிடப்படுகிறது, பின் கடைசி காலங்களில் அது பட்டு போன பின் அதனால் ஒன்றும் ஆக போவதில்லை என்று உணர்கையில் முதியோர் இல்லங்களில் தள்ளுவது போல், புளிய மரம் வெட்டப்பட்டு விறகாகிறது.
முதியோர் இல்லத்தில் தன் காலங்களை கழித்தலும் கடைசி தீக்கு விறகாதல் போல்தானே?
No comments:
Post a Comment